Advertisement

தனக்கு இத்தனை நாள் மெசேஜ் அனுப்பியது, காதலிப்பதாய் கூறியது, இறுதியாய் மருத்துமனையில் தனக்காக அழுதது அனைத்துமே வெண்பா தான் என்பதில் பல முரண்கள் இருக்கவே செய்தது சூர்யாவிற்கு

 

“இதை யார் கிட்ட கேக்குறது.. இதுவரைக்கும் வெண்பா கிட்ட எந்த மாற்றத்தையுமே பாக்கலியே.. ஒரு வேலை நாம தான் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கோமோ” எண்ணியவனுக்கு பதில் ஏனோ இறுதி வரை கிடைக்கவே இல்லை

 

மறுபுறம் வெற்றியோ, காற்றில் பறந்து கொண்டு இருந்தான்.. சூர்யா கூறிய போது கூட ஸ்வாதி தன்னை விரும்புகிறாள் என்பதை கொஞ்சம் நம்பாமல் தான் இருந்தான் வெற்றி

 

ஆனால் தனக்கு விபத்து நடந்ததில் இருந்து, தான் கண் விழித்ததில் இருந்து ஸ்வாதி முகத்தில் தெரியும் நிம்மதியும், அன்பும், காதலும், அவளுள் இருக்கும் காதலை சொல்லாமல் சொன்னது வெற்றிக்கு

 

ஆக்சிடென்ட் ஆன போது, வெற்றி, சூர்யாவை மருத்துவமனை சேர்த்த ரகுநாத், இருவருக்குமே ரத்த கசிவு அதிகம் ஏற்பட்டு இருப்பதால் இருவருக்குமே ரத்தம் தேவை படும், அதிலும் சூர்யாவிற்கு உடனடியாக தேவை படுவதால் நெருங்கிய உறவினரான ரகுநாத் சூர்யாவிற்கு ரத்தம் தர தயாராக,

 

மற்றவர்களுக்கு தகவல் சொல்ல நினைத்த ரகுநாத், அழைத்தது என்னவோ வெற்றியின் தந்தையை தான்.. மூன்று முறை அழைத்தும் பதில் இல்லாமல் போக, இறுதி முறையாக முயற்சித்தவரின் அழைப்பிற்கு பதில் கொடுத்தது என்னவோ ஸ்வாதி தான்

 

படபடத்து போய் விஷயத்தை கூறினார் ரகுநாத்.. அவர் என்னவோ சூர்யா, வெற்றி இருவருக்கும் விபத்து என்று தான் கூறி இருந்தார்.. ஆனால் ஸ்வாதியின் காதல் காதிற்கு ஏனோ வெற்றிக்கு விபத்து என்று மட்டும் கேட்டு இருக்க, பதறியவள் அடித்து பிடித்து வந்து சேர்ந்தாள் மருத்துவமனைக்கு

 

மற்ற படி வேறு யாருக்கும் தகவல்கள் கொடுக்க மறந்து இருந்தவள், தானே வெற்றிக்கு ரத்தம் கொடுப்பதாக முன் வர, நல்ல வேலையாக ஸ்வாதியின் ரத்தம் வெற்றியின் ரத்த இனத்திற்கு ஒத்து போக, ஸ்வாதியே வெற்றியை காப்பாற்றவும் செய்தாள்

 

ரத்தம் கொடுத்து, இருவரையும் ஓரளவிற்கு காப்பாற்றிய நிலையில் தான் விபத்தை குறித்து மற்ற அனைவருக்குமே தகவல் கூற பட்டது

 

வெற்றிக்கு மேல் காயங்கலும், சில உள் காயங்களும் மட்டுமே இருந்ததால், இரண்டு தினங்களில் அவனை வீட்டுற்கு அனுப்பி கவனித்து கொள்ளும் அளவிற்கு தேறி இருந்தான் வெற்றி

 

சூர்யா நிலைமை தான் கவலைக்கிடமாக இருந்தது, உயிரை காப்பாற்றி விட்ட நிலையில் கூட, அவனுக்கு நினைவு திரும்பாமல் மயக்கத்திலேயே இருக்கவும், இதே நிலை நீடித்தால் அவன் கோமா வரை செல்லவும் வாய்ப்பு உள்ளதாக கூறி விட்டனர் டாக்டர்கள்

 

அது அன்றி, காரின் அடியில் சூர்யாவின் கால் மாட்டிக்கொண்டு நசுங்கிய நிலையில் இருக்க, எலும்பு முறிவும் கூட நேர்ந்து இருந்தது

 

வேறு வழி இன்றி, அதற்கான அறுவை சிகிச்சை செய்து, ப்ளேட் ஒன்றும் பொறுத்த பட்டு இருந்தால், அடுத்த ஒரு மாதத்திற்கு படுக்கையில் தான் கிடக்க வேண்டும் என்ற நிலையும் ஏற்பட்டது

 

கோமா வரை செல்லாமல் சூர்யா தேறி இருந்ததை அறிந்த வெற்றி அவனை சென்று பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்க, அவனை அடங்கியதும் ஸ்வாதி தான்

 

ஏனோ அவளின் ஒற்றை சொல்லிற்கு பெட்டி பாம்பாய் அடங்கி போனான் சூர்யா

 

இருக்காதா பின்னே, வெற்றியின் தாயை விட அதிக நேரம் அவனுடன் இருந்து அவனை கவனித்து கொள்வது ஸ்வாதி தானே.. கையில் எந்த அடியும் இல்லாமல் போன போதும் கூட, உடை மாற்றுவதில் இருந்து உணவு ஊட்டுவது வரை அதிகமாக வெற்றிக்கு செய்தது ஸ்வாதி தான்

 

அதிலும் ஒரு நாள், இரவு உறக்கம் தாமதமாக வந்து வெற்றி உறங்கி கொண்டு இருக்கும் போது, ஏதோ ஜன்னல் அருகே சத்தம் வருவதை போல் உணர்ந்தான் வெற்றி..முதலில் அதை பெரிதாக கண்டு கொள்ளாதவன், சத்தம் அதிகமா வரவே கண்விழித்து பார்க்க, அவ்விடம் ஏதோ நிழலாட கண்டவன், பதறி தான் போனான்

 

“என்னடா நம்ப ரூம் ஜன்னல் கிட்ட பேய் வந்து இருக்கோ.. ஆனா தலைவர் சொல்ற மாதிரி மல்லி பூ வாசனை இல்லை, கொலுசு சத்தம் கேக்கல, நரி கூட ஊளை விடலையே.. அப்போ அந்த நிழல் யாரோடது” யோசித்தவனுக்கு பலமாக ஜன்னல் தட்டும் சத்தம் கேட்க

 

“ஹையோ தட்டுதே தட்டுதே, பலமா ஜன்னலை தட்டுதே.. அப்பா அய்யனாரப்பா உன் பிள்ளையை காப்பாத்துப்பா” திகிலுடன் ஜன்னலை நெருங்கியவன் ஜன்னலை திறக்க அவ்விடம்,

 

தலைவரை வெள்ளை துணியை போர்த்தி இருந்தவள், பதுங்கி பதுங்கி ஜன்னல் அருகே நின்று கொண்டு, ஜன்னல் திறந்த அடுத்த நொடி, வெற்றியையும் தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தாள் ஸ்வாதி

 

வெள்ளை போர்வைக்குள் இருப்பது யார் என்பதை உணராமல், உண்மையில் பேய் தான் போல என்று எண்ணிய வெற்றி, அலற.. அவனை கஷ்ட பட்டு வாய்பொத்தி அடக்கியவள், அவனை மேலும் கத்த விடாமல் அவன் வாயை பொதியவள்,

 

“கத்தாதே, நான் தான்… இவ்ளோ பெரிய பையனா வளந்து இருக்க.. இப்டி அலறுரீயே.. இதுல பெரிய வீரன்னு மட்டும் வாய் பேசு” என்றவள் படு சாதாரணமாக வந்து அங்கு இருக்கும் சோபாவில் அமர்ந்தும் கொண்டாள்

 

“ஏய்ய்ய் இப்போ எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்த.. யாராவது பார்த்தா என்ன நினைப்பாக? மொதல்ல எதுக்கு வந்தன்னு சொல்லு?” என்றான் வெற்றி பதட்டமாக

 

“யாரும் பாக்க கூடாதுனு தான் ஜன்னல் வழியா வந்தேன்.. ஆமா நைட் போட வேண்டிய மாத்திரையை போட்டுட்டியா? அதை கேக்க தான் வந்தேன்.. கால் பண்ணேன் நீ எடுக்கல.. அதான் ஒரு தடவை வந்து பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றாள் அப்போதும் அலட்டி கொள்ளாமல்

 

“என்னாது, மாத்திரை போட்டேனா இல்லையான்னு பாக்க வந்தியா? உனக்கு என்ன பைத்தியமா.. அதுக்காக ஜன்னல் ஏறி குதிச்சி வருவியா..ஏதாச்சும் ஆகி இருந்தா என்ன பண்ணி இருப்ப..ஆள் வளந்து இருக்கியே தவிர அறிவு இருக்கா பாரு” அவன் போக்கில் வசை பாடி கொண்டு இருந்தான் வெற்றி

 

அதை எதையுமே காதில் வாங்கத்தவள்,

 

“மாத்திரை போட்டியா இல்லையா? அதை மொதல்ல சொல்லு” என்றால் ஓயாரமாய் அமர்ந்து கொண்டு

 

“போட்டுட்டேன்.. போட்டுட்டு தான் தூங்க போனேன்” என்றான் வெற்றி.

 

“அப்போ ஓகே.. நல்லா படுத்து தூங்கு . நான் காலைல வந்து பாக்குறேன்” என்றவள் வந்த ஜன்னல் வழியே சென்றும் விட்டாள்

 

“ஆஆஆஆ” என்று அவளையே பார்த்து கொண்டு இருந்தவன்,

 

“இவ்வளவு ரிஸ்க் எடுத்து வந்தது ஒரு மாத்திரை போட்டேனா இல்லையானு கேக்க தானா? அடிப்பாவி.. அவ்வளவு காதலாடி உனக்கு என் மேல.. ஓவரா பாசத்தை கொட்டுறாளே” உள்ளுக்குள் நெகிழ்ந்தான் வெற்றி

 

அடுத்த ஒரு மாதம் வரை வெற்றி, சூர்யாவின் உடல் ஓரளவிற்கு தேறியே இருந்தது..

 

வெற்றி கிட்டத்தட்ட முழுமையாக தேறி இருந்தும் அவனுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும் அனுமதி மறுக்கப்பட்டே இருந்தது.. அதுவும் ஸ்வாதியின் வேலை தான்

 

“மறுபடியும் வெளியில போய் எதாவது ஆக போகுது.. ஏற்கனவே வெற்றிக்கு நேரம் வேற சரி இல்லை.. இந்த நேரத்தில் அவன் வீட்ல இருக்கறது தான் நல்லது “என்று வேறு கூறி வெற்றியை வீட்டிலேயே அடைந்து வைத்தாள் ஸ்வாதி

 

ஆனால் இந்த ஒரு மாதமும், தானும் வெளியில் எங்கும் செல்லாமல், வெற்றியின் அக்கம் பக்கமே சுழன்று கொண்டு இருந்தால் ஸ்வாதி.. நாளுக்கு நாள் வெற்றி மீது இருக்கும் காதலை அதிகமாவே அவள் வெளிப்படுத்தி கொண்டு இருக்க, அதை முழுமையாய் அனுபவித்து கொண்டு இருந்த வெற்றியும் கூட தன் மனதை ஸ்வாதியிடம் விளக்க முயற்சிக்கவே இல்லை

 

மறுபுறம், சூர்யாவிற்கோ காலின் அறுவை சிகிச்சை கொஞ்சம் தேறி இருக்க, லேசாக நடை பழகவும் துவங்கி இருந்தான் சூர்யா.. அதுவும் ஏதோ ஒன்றை பற்றி மெது மெதுவாக பயிற்சி மேற்கொண்டவன், இப்போது தனியாக சில அடிகள் மட்டும் எடுத்து வைக்கும் அளவிற்கு குணமாகி இருந்தான்

 

ஆனால் இந்த ஒரு மாதம் வரை கூட, தனக்கு மெசேஜ் அனுப்பும் பெண் வெண்பா தானா இல்லையா என்பதை உறுதி படுத்த இயலாமலே போனது சூர்யாவிற்கு

 

வெண்பா முக்கால்வாசி நேரம் தன் வீட்டில் வெற்றியுடன் கழிக்க, தன் இல்லம் வரும் நேரம் கூட தான் தூங்கும் நேரம் பார்த்து வருவதால், அவளை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை சூர்யாவிற்கு.. பலநாள் இதே யோசனையில் இருந்தவன், அதை தெளிவு படுத்தி கொள்ள முடிவெடுத்தவன்,

 

என்றும் கடவுள் அருகே கூட செல்ல விரும்பாத சூர்யா, இன்று ஏனோ அவனின் காலடியில் கிடக்கும் ஒற்றை ரோஜா மலரை கையில் எடுத்தவன், மனம் முழுதும் ஒரே கேள்வி தான்

 

உண்மையில் அந்த பெண் வெண்பா தானா என்பதே அது.. தன் சந்தேகத்தை தீர்த்து கொள்ள ரோஜாவின் இதழ்களை ஒவ்வொன்றாய் பிரித்து கீழே போட்டவன்,

 

“வெண்பா தான்.. வெண்பா இல்லை.. வெண்பா தான்.. வெண்பா இல்லை” என்று இதழ்களின் முடிவு அவரை அதையே செய்து கொண்டு இருக்க, இறுதியில் அந்த மலரும் கூட அது வெண்பா என்றே உறுதி செய்தது

 

அதனாலேயே அடுத்து வரும் தினங்கள் அனைத்துமே வெண்பாவை கவனிக்க ஆரம்பித்தான் சூர்யா.. அவன் உறங்கும் நேரம் வந்து அவன் அருகே அமர்ந்து கண் கொட்டாமல் அவனையே பார்த்து விட்டு, கண் விழிக்கும் நேரம் அவ்விடம் விட்டு மாயமாகி விடுவாள் வெண்பா

 

தப்பி தவறி கூட நேருக்கு நேர் சந்திக்கும் நிலைமை வந்தால் கூட, சூர்யா என்ற ஒருவன் அவ்விடம் இல்லாததை போலவே நடந்து கொள்வாள் அவள்

 

அவன் வந்தால் விலகி போவது, அவனின் கண்ணை சந்திக்காமல் பதுங்குவது,அவள் தன்னை தவிர்க்கிறாள் என்பது வெளிப்படையாக தெரிந்த அவனுக்கு, ஏனோ அவளிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் மேலும் மேலும் அவனுள் ஓங்க,

 

அது இத்தனை நாள் அவனுள் மறைத்து வைத்து இருந்த, வெண்பா பால் தனக்கு இருக்கும் அன்பை வெளிக்கொணரவே செய்தது

 

மறுபுறம் வெண்பாவோ, சூர்யா உயிருக்கு விலையாய் தன் உயிரினும் மேலான பத்து வருட காதலை விட்டவள், சூர்யா முன் மட்டும் எப்போதும் வெளிவர துடிக்கும் தன் காதலை மறந்தும் கூட வெளிக்காட்டி கொள்ளலாம் விலகி சென்றே தப்பித்து கொண்டு இருந்தாள் பேதை

 

வேண்டும் வேண்டும் என்று துடிக்கும் இவனின் இதயமும், விலகி விலகி நிற்க்கும் அவளின் வைராக்கியமும் எந்த புள்ளியில் சந்திக்க போகிறதோ, அன்று ஏதோ ஒருவருக்கு தோல்வியும், இருவரின் காதலுக்கு வெற்றியும் கிட்டவே போகிறது

 

வெற்றி, சூர்யா உடல் தேறும் அந்த இடைவெளியை சரியாக பயன் படுத்த நினைத்த ஆதி,

 

“அஞ்சலி, நீ சமையலுக்கு உதவி பன்றேன்னு சொல்லிட்டு எங்க வீட்டுக்கு அடிக்கடிக்கு வந்துட்டு போ.. அப்போதான் எங்க வீட்ல நம்ப விஷயத்தை சொல்லும் போது கொஞ்சம் ஈஸியா இருக்கும்” என்றவனின் பேச்சை தட்ட முடியாத போதிலும்

 

திருமண விஷயம் தெரிந்து, முறையாய் ஆதி வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்பதே அஞ்சலியின் விருப்பம்.. அதை ஆதியிடம் கூறிய போது

 

“நம்ப கல்யாணத்துல எதுவுமே முறையா நடக்கல.. உன் சம்மதம் கேட்டு நான் தாலி கட்டல.. மனைவின்னு ஊர் மொத்தமும் அறிமுகமும் கூட பண்ணல.. அப்படி இருக்கும் போது இது மட்டும் முறையா நடக்கும்னு எதிர் பாக்காத அஞ்சலி.. நாம தான் கொஞ்சம் வலஞ்சி குடுத்து போகணும்” பேசியே அவளை சமாதானம் செய்ய, இன்று மூன்றாவது நாளாக சமையல் உதவி செய்ய வந்து இருந்தாள் அஞ்சலி

 

அவள் வருகிறாள் என்றதை அறிந்த பார்வதி,

 

“ஆதி, அஞ்சலி வரதுக்குள்ள இந்த வெண்டைக்காய் எல்லாம் நறுக்கி வெச்சிட சொல்லி வேலைக்கார பொண்ணு கிட்ட சொல்லிடுப்பா.. அப்போதான் அஞ்சலி வந்ததும் சமைக்க ஆரம்பிக்க சரியா இருக்கும்.. நான் இதோ கோவிலுக்கு போய்ட்டு சூர்யா, வெற்றி பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்துடுறேன்” என்றவர் சென்றும் விட,

 

வேலைக்காரியிடம் கூறுவதை விட, “தானே இந்த வெண்டைக்காயை ஏன் நறுக்கி என் மனைவியை இம்ப்ரெஸ் பண்ண கூடாது” என்ற விபரீத எண்ணம் தோன்ற, அதை செயல் படுத்தவும் செய்தான் ஆதி

 

அப்போது தான் தோட்டத்தில் இருந்து வந்த பிரெஷ் வெண்டைக்காய்களை கண்டவன், உடனே கத்தி எடுத்து கொண்டு அவைகளை வெட்ட அமர, அந்த நேரம் பார்த்து அவ்வழி வந்த மருதநாயகம்,

 

“பேராண்டி, வெண்டைக்காயை கழுவுனியா இல்லையா? கழுவாம வெட்டுனா, உங்க அம்மா வந்தா திட்ட போறா” என்று வேறு கேட்டு விட

 

“ஹையோ தாத்தா, ஒரு ஆர்வத்துல வாஷ் பண்ணாமல் வெட்ட ஆரம்பிச்சிட்டேனே.. இப்போ என்ன பண்ணட்டும்.. ஏற்கனவே பாதியை வெட்டிட்டேன்” என்றான் ஆதி யோசனையுடன்

 

“பரவால்ல ஆதி, முன்னாடி கழுவுலனா என்ன? வெட்டி வெச்சி இருக்க இதை தண்ணியில போட்டு ஒரு அலசு அலசி எடுத்துடு” என்ற மருதயநாயகத்தின் அறிவுரை படி, வெட்டிய அத்துணை வெண்டைக்காயயும் தண்ணீரில் போட்டு அலசி கொண்டு இருந்தான் ஆதி

 

நீரில் இருந்து அதை எடுக்கும் போது தான், தான் எவ்வளவு பெரிய முட்டாள் தனத்தை செய்து இருக்கிறோம் என்பதையே உணர்ந்தனர் இருவருமே

 

நீரை விட்டு வெளியே எடுக்க, அது குழைந்து காய்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஒட்டி கொண்டு இருந்தன..

 

அதே சமயம் வீட்டிற்கும் வந்த அஞ்சலி பதறி போய்,

 

“யார் வெண்டைக்காயை வெட்டிட்டு தண்ணியில போட சொன்னது.. அறிவில்லையா உங்களுக்கு.. இந்த வேலையெல்லாம் யார் உங்களை செய்ய சொன்னது” அவள் ஒரு புறம் பொரிந்து தள்ளி கொண்டு இருந்தாள்

 

“ஏதோ பெருசா தப்பு பண்ணிட்டோம் போலயே” ஆதி முழித்து கொண்டே மருதநாயகத்தை பார்க்க, அவரோ தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பதை போல அவ்விடம் விட்டு நழுவி கொண்டார்

 

“இவனை வெச்சிக்கிட்டு எப்படி மாமா கிட்ட பேசி, சம்மதம் வாங்க போறும்ன்னு தெரியலையே” தலையில் கைவைத்த படி யோசித்து கொண்டு இருந்தவள் மனதோ தன் கணவன் தனக்கு உதவ விரும்புகிறான் என்ற எண்ணத்தில் தான் எத்தனை நிறைவு

 

மூன்று ஜோடிகளும் தங்கள் காதல் வானில் சிறகடிக்க எத்தனித்து பல வண்ண கனவுகளை காண ஆயுத்தம் ஆனா நேரம், காலன் சரியே அவ்விடம் வந்து மர்மமாய் சிரித்து கொண்டு இருந்தான்.

Advertisement