Advertisement

மருதநாயகம் வீட்டை விட்டு புயல் வேகத்தில் கார் கிளம்பியது. காரணம் ஒன்பது மணிக்கு திண்டுக்கல் வருவதாக கூறி இருக்க, இப்போதே மணி எட்டை நெருங்க, இதில் வெற்றியை வேறு அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசரம் தான் சூர்யாவிற்கு அதிகம் இருந்தது.

அந்த ஊரின் பணக்கார குடும்பம் என்ற பட்டியலில் அடுத்து வருவது வெற்றியின் குடும்பம் தான்.

“பணம் வந்து விட்டால் ஜாதி மதம் எல்லாம் காற்றில் பறக்கும்” என்பது வெற்றியின் விஷயத்தில் உண்மை தான்.

ரகுநாத் கூறும் தன்னுடைய உயர் ஜாதியை, வெற்றியின் குடும்பம் சேராமல் இருந்தாலும், அவர்களிடத்தில் சேர்ந்த பணம் அவர்களின் ஜாதியை மறக்க வைத்து, பணக்கார ஜாதியாகி போக, இரு குடும்பமும் பணத்தால் அன்பு பாராட்டவே செய்தன.

அவனுக்கே உரிய அந்த பெரிய மைதானம் போன்ற அறையில், பெரிய கட்டிலில் ஒருவனாய் உருண்டு கொண்டு இருந்தான் வெற்றி. நேற்றே தங்களின் திட்டத்தை பற்றி வெற்றியிடம் விளக்கி தான் இருந்தான் சூர்யா.

நேற்றைய பொழுதில் “சரி, சரி” என்று தலையை ஆட்டியவன், இன்று காலை எழ வேண்டும் என்ற போது தான்,

“கண்டிப்பா இந்த டூருக்கு போகணுமா? பேசாம இழுத்துப் பொத்திக்கிட்டு தூங்குவோமா?” என்ற எண்ணம் வர,

யோசனையில் இருந்தாலும், படுக்கையில் இன்னும் உருண்டு கொண்டு தான் இருந்தான்.

வெற்றிக்கு, எப்போதும் காலை விடியல் பதினோரு மணி தான். இரவு எப்போது தூங்கினாலும் பதினோரு மணிக்கு முன் எழுந்த பழக்கமே இல்லை அவனுக்கு.

அவனின் குணம் அறிந்துதான் காலை ஆறு மணியில் இருந்து அவன் கை பேசிக்கு அழைத்து, அவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்தான் சூர்யா.

ஒலிக்கும் கைபேசி ஒலி கூட இனிய தாலாட்டாய் காதில் விழ, இன்னும் இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கினான் வெற்றி.

வெற்றி வீட்டின் வாசலில் காரை நிறுத்தி, அப்போதும் மனம் தளராத விக்ரமாதித்தனாய் வெற்றிக்குக் கிட்டத்தட்ட ஐம்பதாவது முறையாக சூர்யா அழைத்தும், பதில் வராமல் போகவே,

“சரியான கும்பகர்ணன் தம்பியா இருப்பான் போல, நேத்து அவ்வளவு வாய் பேசிட்டு இன்னைக்கு போன் கூட எடுக்காம தூங்குறான் பாரு. இவன…” என்று பல்லை கடித்தவனுக்கு, அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்பது நன்கு தெரியும்.

ரகுநாத் வீட்டிலாவது வீட்டின் பேரனாக உள்ளே செல்ல அனுமதி உண்டு, ஆனால், வெற்றி வீட்டில் அவர்கள் வீட்டு வாசில் நிற்கவும் கூட அனுமதி மறுக்கப்பட்டது சூர்யாவிற்கு.

காரணம் அதே கலப்பு திருமணம் பிரெச்சனை தான்..

சிறு வயதில் தன்னுடைய வீட்டு கிரகபிரவேஷத்திற்கு ஆதியையும், சூர்யாவையும் அழைத்து சென்றான் வெற்றி.

அப்போது சூர்யா காது படவே, “உன் ஜாதி என்ன! எங்கள் ஜாதி என்ன! வெற்றி கூப்பிட்டா வந்துவிடுவதா. உன் ஜாதி ஆட்கள் எங்கள் வீட்டிற்குள் வர கூடாதுன்னு உனக்கு தெரியாதா?” என்று நேரடியாகவே வெற்றியின் தந்தை கூறி இருக்க. தன்மானம் அதிகம் கொண்ட சூர்யா இன்று வரை அந்த வீட்டில் கால் கூட வைக்க வில்லை.

ஆனால் இன்று நேரம் வேறு ஆவதால் “என்ன செய்வது” என்ற டென்ஷன் சூர்யாவிடம் அதிகமாவே இருந்தது. இது அனைத்தும் ஆதிக்கும் தெரியும். ஆதலால்,

“நீ இருடா.. நான் உள்ள போய் அந்த கொரங்கு என்ன பண்ணுதுனு பார்த்துட்டு வரேன், சொன்ன நேரத்துக்கு நாம திண்டுக்கல் போய்டலாம். டென்ஷன் ஆகாம இரு” என்றவன் உடனே காரை விட்டு இறங்கி வீட்டின் உள்ளே சென்று விட்டான்.

காரில் அமர்ந்து இருந்தவன், “சரி பாட்டாவது கேட்போம்” என்று அவனுக்கு எப்போதும் பிடிக்கும் இளையராஜா ஹிட்ஸ்ஸில் இருந்து பாட்டை ஓட விட்டான்.

எனோ, தனக்கு தன்னவர்களால் காட்ட படும் ஒதுக்கமும், தள்ளி நிற்க வைக்கும் அவர்களின் குணமும் காயத்தை ஏற்படுத்தினாலும், என்றும், எதிலும் துணை நிற்கும் தன் நண்பர்களும், எப்போது கேட்டாலும் மனதின் காயத்தை குணப்படுத்தும் இளையராஜா பாடல்களுமே அவனுக்கு பெரும் ஆறுதலாக அமைந்து போனது.

எதோ ஒரு பாட்டு என்று அவன் போட, “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி பூத்திருந்தது பூத்திருந்தது பூவிழி நோகுதடி” என்ற பாடல் ஒளிக்க,

“ஹையோ இதுகளும் சதி பண்ணுதே” என்றவன் ஸ்டேரிங்கில் தலை வைத்து பாடலை ரசித்த படி இருக்க, அரை மணி நேரம் கழித்து வந்தான் ஆதி, அதுவும் தனியாக.

“என்னடா நீ மட்டும் வர, அவன் எங்க? இப்போவே எட்டரை ஆகுது, சீக்கிரம் வர சொல்லுடா அவனை” என்றவன் காரை கிளப்ப எத்தனிக்க, அதைத் தடுத்த ஆதி,

“பொறுப்பா! அவன் இப்போ தான் எழுந்து குளிக்கவே அனுப்பி இருக்கேன்” என்றான் சூர்யா பக்கத்தில் அமர்ந்த படி.

அவன் கூறியதில் அதிர்ந்தவன்,

“என்னாது இப்போதான் குளிக்க போனானா? இவ்வளவு நேரம் என்னடா பண்ணீங்க?” என்றான் அதிர்ச்சியோ, கடுப்போ, இரண்டும் கலந்த குரலில்.

“என்ன பண்ணானோ, அவன எழுப்பவே அரைமணி நேரம் ஆச்சு. இதுல அவன் இல்லடா. நீங்க போங்க. எனக்கு தூக்கம் தான் முக்கியம்னு ஒளர ஆரம்பிச்சிட்டான். அதான் லேட்” என்றான் பொறுமையாக விளக்கிய படி.

ஆனால் சூர்யாவிற்கு தான் இருந்த அத்துணை பொறுமையும் காற்றில் பறந்து இருந்தது,

“டேய் அவன் குளிக்க நாளு நாள் ஆகுமேடா. பாத்ரூம் குள்ள போனா தூங்குற மாதிரி அவ்வளவு நேரம் பண்ணுவானேடா. ஹையோ!” அவன் புலம்பி கொண்டு இருக்க, ஆதிக்கு சிரிப்பு தான் வந்தது.

ஆதியின் சிரிப்பில் மேலும் கடுப்பானான், “ஏன் சார் குளிக்காம வரமாட்டானா அவனுக்கு என்ன பொண்ணு பக்காவா போறோம். சீவி சிங்காரிச்சி வரதுக்கு” என்றான் கடுப்பில்.

“நானும் அதான்டா சொன்னேன். அதுக்கு அந்த நாயி சொல்லுறான். இன்னைக்கு கீர்த்திகையாம். அதனால அவரு குளிக்காம பூஜ பண்ணாம வரமாட்டானாம்” என்றான் ஆதி சலித்த படி

“போச்சு! நீங்க எல்லாம் மனுஷங்கனு நம்பி உங்கள கூட கூட்டிட்டு போக நெனச்சேன் பாரு. என்ன தாண்டா செருப்பாலேயே அடிச்சிக்கணும்” என்றான் சூர்யா தலையில் கைவைத்த படி.

“என்னடா முன்னவே சொல்லி இருந்தா செருப்பு போட்டுட்டு வந்து இருப்பேன்ல. இப்போ சொல்லுறே. ஷூ தான் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்குரிய மச்சான்” என்றான் ஆதி படு சீரியஸ்ஸாக.

அதில் அவனைப் பார்த்து முறைத்தவன், “குளிக்கவே நாளு நாள் ஆகும். இதுல பூஜைனு போய் உக்காந்தா” நினைக்கும் போதே காதில் புகை தள்ளியது சூர்யாவிற்கு.

வெற்றிக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அதுவும் முருகன் என்றால் போதும். எப்பாடு பட்டாவது கோவிலுக்கு சென்று பூஜை ஒன்றை செய்து விடுவான்.

அதுவும் அவனின் தங்கை வெண்பாவிற்கு ஒரு முறை அம்மை போட்டு இருக்க. வீட்டில் அனைவரும் அம்மனுக்கு அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று வேண்டி கொள்ள,

வெற்றி மட்டும் தன் வேண்டுதலை முருகனிடம் வைத்தான். வேண்டியபடியே அடுத்த மூன்றவது நாளே வெண்பா குணமாகி விட., முருகன், வெற்றி மனதிலும், வாழ்விலும் நிரந்தரமாக தங்கி விட்டார் .

மறுபுறம் சூரியாவிற்கோ, கடவுள் நம்பிக்கை சுத்தமாக கிடையாது. கோவிலுக்கு போவது கூட நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறுபவன்.

பிறப்பில் இருந்து அறிவு எட்டும் காலம் வரை கோவிலுக்கு சென்று வந்தவன் தான். ஆனால் ஜாதி மத வேற்றுமையால் தன் தாயும் தந்தையும் படும் அவதியும், கஷ்டத்தையும் பார்த்தவனுக்கு,

“சிலையை கும்பிட்டு எதுவும் ஆக போவது இல்லை. தன்னுடைய பிரெச்சனைகளுக்கு தானே முழு காரணம். இதற்கு இடையில் கல்லை நம்புவது ஏன்? ” என்பதே அவனின் கேள்வியாகி போனது.

அடுத்து ஆதியோ, முற்போக்கு சிந்தனை உள்ள அதிமேதாவி. அவனின் நம்பிக்கை வெற்றி, சூர்யாவின் நம்பிக்கைக்கு இடையிலானது,

கடவுள் உண்டு என்றும் கூற மாட்டான், இல்லை என்றும் உரைக்க மாட்டான். அதாவது,

கடவுள் உண்டு. அவர் ஒன்றே. ஆனால் மதங்கள் பொய். அது மனிதன் உருவாக்கியது. அதை நான் நம்ப மாட்டேன் என்பவன் கோவிலுக்கு செல்வதும், சர்ச் செல்வதும், பள்ளிவாசல் செல்வதும் ஒன்றே என்று கருதுபவன்.

இதுவும் கூட மருதநாயகத்தின் கற்பித்தலில் வந்த தெளிவு தான். ஆனால் ஏனோ இந்த தெளிவு ரகுநாத்திற்கு கற்பிக்க தவறி இருந்தார் அவர்.

இத்துணை வேறுபாடும், காயங்களும், வேற்றுமைகளும் அவர்களுக்குள் இருந்தாலும் அவர்கள் இத்துணை காலம் ஒன்றாய் இருப்பது அவர்களின் நட்பு என்ற ஒற்றை அன்பு பிணைப்பால் தான்.

காரில் இருக்கும் இவர்களின் காத்திருப்பு முடிவிற்கு வருவதாக தெரியவில்லை. ஒன்பது மணிக்கு திண்டுக்கல் செல்வதாக இருந்த சூரியா, வெற்றி வீட்டு வாசலிலேயே ஒன்பதரை மணி வரை தேவுடு காத்துக் கொண்டு இருந்தான்.

அவனுக்கு வேலை டென்ஷன் என்றால், ஆதிக்கு காத்திருப்பது சுத்தமாக பிடிக்காது. போன போக்கில் வேலையை முடித்து விட்டு திரும்ப வேண்டும் என்ற பழக்கம் உடையவன் அவன்.

இவர்கள் இருவரின் திட்டுகளுக்கு எல்லாம் சொந்தக்காரன் இறுதியாய் இவர்கள் முன் காட்சி அளிக்கவே செய்தான்.

வெள்ளை வெட்டி சட்டையில், நெற்றியில் திருநீறும், சந்தனமும் என்று வந்த வெற்றி மேல் பக்தி வாடை அதிகமாகவே வீசியது.

வந்தவன் தன் பையைக் காரில் வைத்து விட்டு, பின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டு,

“என்னடா. யாருக்காக வெயிட் பண்றீங்க. சீக்கிரம் கிளம்புங்க. சூர்யா உனக்கு எதோ வேலை இருக்குனு சொன்னேல” என்றான், தன் வெள்ளை சட்டையில் கண்ணுக்கே தெரியாத அளவு பட்டு இருந்த சந்தனத்தை துடைத்தபடி,

அவனின் பேச்சில் கடுப்பான சூர்யா எதோ பேச வாய் எடுக்க, அவனிடம் தடுத்த ஆதி,

“வேணாம். நீங்க பேச ஆரம்பிச்சா நாளைக்கு தான் திண்டுக்கல் போய் சேருவோம். ஒழுங்கா கார் எடு” என்று கூறியவன்,

வெற்றியைப் பார்க்க, அவன் அப்போதும் சட்டையில் தான் கவனமாக இருந்தான்.

“இவன டூர் போக வர சொன்னா. நல்லா தெய்வ தரிசனம் ப்ரோக்ராம் பண்றவன் மாதிரி வந்து இருக்கான் பாரு” என்று மனதில் கரித்து கொட்டினாலும் வெளியில் ஒரு வார்த்தையையும் சொல்ல வில்லை அவன்.

அப்டி எதாவது எக்கு தப்பாக வெற்றியையும், அவனின் இறை நம்பிக்கையையும் பேசி விட்டால் அவ்வளவு தான். வெற்றி, ஆதியைக் கொன்றே விடுவான் என்பதை அறிந்தவன் அமைதியாய் பாதையில் விழி பதிக்க.

“நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
நிலவு தூங்கினாலும்
நினைவு தூங்கிடாது
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்” என்ற படி கானம் அவன் காதில் விழுந்து கொண்டு இருக்க,

பூர்வ ஜென்ம பந்தத்தை நோக்கிய அவனின் இந்த பயணத்தை அறியாமலேயே, அவனும் பயணித்து கொண்டு தான் இருந்தான் நம் நாயகன் ஆதி.

மழை பெய்து அப்போது தான் பூமி குளிர்ந்து மகிழ்ந்து இருந்த நேரம். வானம் கூட தன் மொத்த பாரத்தையும் மழையாய் இறக்கி வைத்து, பூமிக்காக தன்னிடம் கோவம் கொண்ட கருமேகத்திடம் இருந்து பிழைத்தோம் தப்பித்தோம் என்று இளைப்பாறிய அந்த கணப் பொழுதில்,

குளிர் காற்றை சற்றும் பொருட்படுத்தாமல், காற்றை கிழித்து கொண்டு சீறி பாய்ந்து கொண்டு இருந்தது அந்த மூவரை தாங்கிய அந்த கார்.

“திண்டுக்கல் உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற பலகை இன்முகத்தோடு அவர்களை வரவேற்க. அதையும் கவனிக்காமல் கண் இமைக்கும் நேரத்தில் திண்டுக்கல் உள்ளே சீறி பாய்ந்தான் சூர்யா.

சூர்யாவோ சரியான நேரத்தில் தன்னுடைய உயர் அதிகாரியை சந்தித்து, “தான் வந்து விட்டேன்” என்று கூற வேண்டிய அவசரத்தில் இருக்க,

வெற்றியோ, “இன்னைக்கு கிருத்திகை. பக்கத்துல முருகன் கோவில் இருந்தா நல்லா இருக்குமே” என்று எண்ணியவன்,

“சூர்யா, உனக்கு வேலை முடிஞ்சா உடனே மதுரைல திருப்பரங்குன்றம் கோவிலுக்கு போய்ட்டு வரலாமா. இன்னைக்கு கிருத்திகை. கண்டிப்பா ஒரு முருகர் கோவிலுக்கு போகணும். நான் திருப்பரங்குன்றம் போனது இல்லை. போலாமா?” என்றான், சூர்யாவின் அவசரத்தை புரியாமல்.

அதில் கடுப்பாகி சூர்யா வெற்றியை முறைக்க, இடையிட்ட ஆதி.

“நீ கண்டுக்காதேடா. நான் பார்த்துக்குறேன்” என்றவன் வெற்றி பக்கம் திரும்பி பார்க்க,

அவனோ தன் ஐபாட்டில் எதையோ பார்த்து கொண்டு இருந்தான்.

“டேய் அவன் மொதல்ல அவனோட ஆஃபீஸ்ர பார்த்து பேசட்டும். அதுக்கு அப்புறம் நம்ப என்ன பண்ணலாம்னு யோசிப்போம்” என்றவனின் பேச்சு வெற்றி காதை துளி கூட எட்டவில்லை என்பது ஆதிக்கே தெரியும்.

ஏன் என்றால், வெற்றி தான் எதையோ மும்முரமாக தேடி கொண்டு இருந்தானே. அவனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்யும் பழக்கம் இல்லை. இத்தனைக்கும் பேசி கொண்டு வண்டி ஓட்ட சொன்னால் கூட, அதிலேயே சிரமப்படும் ஆள் அவன்.

“உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நாட்டாமை பண்றதே எனக்கு வேலையா போச்சுடா” தலையில் அடித்து கொள்ளாத குறையாக எண்ணிய ஆதி, மறுபடியும் வழியில் விழி பதிக்க.

அந்த பாதை ஓரம் இருக்கும் மரங்கள் அவனிடம் எதோ கூற வருவது போலவும், மகிழ்ச்சியில் மொத்தமாக அசைந்து குதூகலிக்க, அதை பார்த்து கொண்டே வந்த ஆதிக்கு மனதில் ஒரு இனம் புரியா பரவசமும், அமைதியும் குடி கொள்ள,

அது இன்னதென்று புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை அவன். அந்த நிமிடங்களை தன்னுள் லயித்து, ரசித்து கொண்டே வந்தான் அவன்.

அடுத்த சில நொடிகளில் கார் ஒரு மாந்தோப்பிற்கு முன் சென்று நிற்க, கார் நின்ற அடுத்த நொடி அவசரமாக அதை விட்டு இறங்கினான் சூர்யா.

“மாந்தோப்பு கிட்ட எதுக்குடா நிறுத்துறான். ஒரு வேலை ரகசியமா காதலி எதாவது வெச்சி இருப்பானோ” என்றான் வெற்றி, தன் கண்ணில் இருக்கும் அந்த கருப்பு கூலரை கழட்டி அவ்விடத்தை ஆராய்ந்த படி,

“அட நீ வேற ஏண்டா. நம்ப பையன் அதுக்கு எல்லாம் சரி பட்டு வரமாட்டான். இரு பாப்போம் என்ன பண்ரான்னு” என்ற ஆதி சூர்யாவைத் தொடர, வெற்றியும் அவனுடன் சென்றான்.

தோப்பைச் சுற்றி போடப் பட்டு இருந்த அந்த இரும்பு கம்பி வேலியில், ஒரு இடத்தில் மட்டும் மரக் கட்டையைக் கொண்டு கதவு போல் ஒன்று இருக்க, அதை நெருங்கவும், உள் இருந்து ஒருவன் அவர்களைக் கவனித்து அவர்களிடம் வரவும் சரியாக இருந்தது.

“தம்பி நீங்க எல்லாம் யாரு? எங்க வந்தீங்க?” என்றார் அந்த பெரியவர்.

“சேகர் சாரை பாக்கணும். நான் ஏசிபி. வேலை விஷயமா அவர் வர சொல்லி இருந்தாரு” என்றான் சூர்யா தன் ஐடி கார்டை காண்பித்த படி.

“ஓ! காமிஸ்னர் ஐயாவை பார்க்க வந்தீங்களா. சரி தான். உள்ள வாங்க. நீங்க வரீங்கனு ஐயா சொன்னாரு” என்றவர் அந்தக் கட்டை கதவை திறந்து விட.

உள்ளே மூவரும் செல்ல, சூர்யா திரும்பி.

“நீங்க இங்க வெயிட் பண்ணுங்கடா. கொஞ்சம் அபீசியல். நான் போய் பேசிட்டு வந்துடுறேன்” என்றவன் அந்த பெரியவர் பின்னால் செல்ல,

அந்த இடத்தை வேடிக்கைப் பார்த்த படி இருந்தான் ஆதி. ஏதோ அந்த சூழல் அவனை ஈர்க்கவே செய்தது.

மாங்கனிகளையும் காய்களையும் தாங்கிய படி மாமரங்கள் இருக்க, அதன் கீழே அவைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச குழியும் தோண்ட பட்டு. சற்று முன் பெய்த மழையால் அந்த குழியில் ஈர பதமும் கொஞ்சம் இருக்கவே செய்தது.

தரை எங்கும் புல் முளைத்து, பச்சை விரிப்பை விரித்தது போல் இருக்க. அதில் கால் வைத்தால் புல்லிற்கு வலிக்குமோ என்று கூட தோன்றியது ஆதிக்கு.

தூரத்தில் ஒரு நீள குழாய் ஒன்று அமைக்க பட்டு இருக்க. அதில் கொஞ்சம் தூரம் தாண்டி பூ செடிகளும், வாழை, பப்பாளி போன்ற மரங்களும் பூமியைப் பிளந்து வளர்ந்து நின்று கொண்டு இருந்தது.

தோட்டமும், வயலும் என்று வாழும் ஆதிக்கு இந்த சூழல் மிகவும் பிடித்து போக, தன்னை மறந்து அவன் ரசித்துக் கொண்டு இருந்த வேளையில்.

“ஆதி. என்னடா இங்க சிக்னல் வரவே மாட்டேங்குது. இதுக்குள்ள வந்ததில் இருந்து சிக்னல் போயிடுச்சி. நான் அந்த ஓரம் போய் ட்ரை பண்றேன்” என்ற வெற்றி அடுத்த விறுவிறு நடையில் தோட்டத்தின் மறு புறத்தை அடைந்து இருந்தான்.

“டேய்ய்.. இப்டி சொல்லாம கொள்ளாம எங்கயும் போக கூடாதுடா. தப்பா நெனச்சிக்க போறாங்க…” என்றவன், தன் பேச்சுக்கள் எதுவும் வெற்றியை அடையாது என்று புரிந்து, அவன் பின் அவனைத் தொடர,

ஆதியின் கால் தடத்திற்கு ஏற்ப கொலுசு சத்தமும் சேர்ந்து இசைக்க, கீழிருந்த சறுகில் அவன் கால் வைக்க, உடன் சேர்ந்து ஒலித்தது அந்த கொலுசு ஒலி.

என்னவாக இருக்கும் என்றவன் அக்கம் பக்கம் திரும்பி பார்க்க. சந்தேகத்தின் உச்சியில் தன் காலில் கொலுசு இருக்கிறதா என்றும் கூட பார்த்தான் அவன்.

சரி பார்ப்போம் என்றவன் மேலும் இரண்டொரு அடி எடுத்து வைக்க, அதற்கு முன் வெற்றியும், சூர்யாவும் கண் கெட்டும் தூரத்தில் தான் இருக்கிறார்களா என்பதை உறுதி படுத்தி கொள்ள தவறவில்லை ஆதி.

எதையோ யோசித்த படி அவன் நிற்க, அவனின் தலையில் “நங்” என்று வந்து விழுந்தது ஒரு மாங்காய்.

“ஸ்ஸ்ஸ்ஸ்” என்று தலையைத் தேய்த்த படி, மேலே பார்க்க, கொஞ்சம் பயந்து தான் போனான் அவன்.

இரு கிளையிலும் காலை ஊன்றி, ஒரு கையால் மேல் கிளையை பற்றி கொண்டு, ஒரு கையால் மாங்காய்களை பறித்து அதை தன் முந்தானையில் போட்டு கொண்டு இருந்தாள் பெண் அவள்.

அவளைக் கண்டவன் ஒரு நிமிடம் அசந்தே விட, மரத்தில் ஏறி இருந்த அவளோ, எதையும் யோசிக்காமல் மாங்காய்கள் கொண்ட தன் முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு, ஒரு குதியில் கீழே வந்தாள்.

மேல் இருந்து குதிப்பவளைப் பார்த்த ஆதிக்கே, ‘அடி பட்டு விடுமோ’ என்ற பதட்டம் ஏற்பட,

‘அவளோ இதெல்லாம் ஒரு விஷயமா’ என்பதைப் போல குதித்து நின்றாள்.

“என்ன ஊருக்கு புதுசா. கமிஷனர் வீட்டுக்கு வந்து இருக்கீங்களா?” என்றாள் ஆதியைப் பார்த்து கேள்வியாய், தன் இடையில் தஞ்சம் புகுந்து இருந்த மாங்காய்களில் கவனமாய்.

பதில் கூற முடியாமல் ஆதியோ, அவளை ஆராய்ந்த படி தான் இருந்தான்.

ஏதோ கதை சொல்லும் விழியும், குறும்பு மின்னும் பார்வையும், சஞ்சலமற்ற அவளின் சிரிப்பும், கண்களைக் காக்கும் வேலியாய் மை தீட்டிய மான் விழியும், அந்த மென்மையான வெட்பத்தில் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் அவளின் இடையும், இடுப்பில் ஏறி தஞ்சம் பதுங்கி இறங்கவே மாட்டேன் என்று ஒய்யாரமாய் இருக்கும் படவடை நுனியும், அவளை பார்க்க சொல்லி தூண்டியது ஆதியை.

தன் கேள்விக்கு பதில் வரும் முன், யாரின் வருகையாலோ அசையும் சருகுகளின் ஓசையில், ஆதியிடம் இரண்டொரு மாங்காய்களை அவனின் கையில் திணித்து விட்டு, “யார் கிட்டயும் சொல்லிடாத” என்ற படி அடுத்த நொடி அவ்விடம் விட்டு மறைந்து விட்டாள் அவள்.

“எத சொல்ல கூடாது. எனக்கு தெரிஞ்சா தானே நான் சொல்லுறதுக்கு. அடிச்சி கூட கேப்பாங்க அப்போவும் சொல்லிடாதனு சொல்லிட்டு போறாளே” என்று எண்ணியவனுக்கு சிரிப்பு வர.

புன்னகைத்த படி, கையில் இரண்டு மாங்காய்களுடன் நின்று இருந்தவனை நெருங்கிய சூர்யா,

“ஏதுடா மாங்காய்? நீயே பறிச்சியா?” என்ற படி அவன் கையில் இருந்து இரு மாங்காயை எடுத்த படி சூர்யா கேட்க.

“இது நம்ப தோட்டத்து மாங்காய் தான் தம்பி, நல்ல ருசியா இருக்கும். நிங்களேவா பறிச்சீங்க?” வியந்த படி கேட்டார் அந்த பெரியவர்.

அவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திகைத்த ஆதி, சுதாரித்து,

“ஆங்…இல்லை.. இங்க கீழ கிடந்தது. அதான் பாக்க நல்லா இருக்கேனு உங்க கிட்ட குடுக்க எடுத்துக்கிட்டு இருந்தேன்” என்றான் மனம் முழுதும் அவளை நினைத்த படி.

“அதுக்கு எதுக்கு தம்பி நீங்க சிரம படுறீங்க. இந்த ஊருல திருட்டு பசங்க ஜாஸ்தி. அதுங்க மரத்துல ஏறி பறிக்கும் போது நான் பிடிச்சிட்டா, கைல பறிச்ச மாங்காயை அப்படியே போட்டுட்டு ஓடிடுவாங்க. அதான் இப்டி கீழ கிடக்கு” என்றார் உண்மையான விளக்கத்தோடு.

அப்போது தான் ஆதிக்கு புரிந்தது, அவள் திருட்டு மாங்காய் திருட வந்த திருடி என்று.

“திருட்டு கழுதை” என்றவன் வாய் விட்டே கூறி விட. வந்தவள் திருடியது மாங்காயை மட்டும் இல்லை. தன் மனதையும் தான் என்று அப்போது அறிய தவறி இருந்தான் ஆதி.

“இருங்க தம்பி. இன்னும் கொஞ்சம் காய், பழம் எல்லாம் போட்டு தாரேன்” என்ற பெரியவர் கூறிய படி ஒரு பையில் அனைத்தையும் போட்டு கொடுக்க,

“அண்ணே இந்த மடக்கான்பட்டி எங்க இருக்கு?” என்றான் சூர்யா.

“இந்தா இந்த ரோட்டுல நேரா அரைமணி நேரம் போனா அந்த ஊர் தான். எதுக்கு தம்பி அந்த ஊரை பத்தி கேக்குறீங்க?” என்றார் அவர்.

“அங்க கொஞ்சம் வேலை இருக்கு. அதுக்கு தான். நாங்க அங்க தான் தங்குறதா இருக்கோம்” என்றான் சூர்யா.

“பார்த்து தம்பி. சரியான காட்டுமிராண்டிக இருக்க ஊர் அது. வாரத்துக்கு ஒருக்கா ஜாதி சண்டை வந்து வெட்டிக்கிட்டு சாவனுங்க. ஜாக்குரதையா இருங்க” எச்சரிக்க தவறவில்லை அவர்.

தனக்குத் தகுந்த கேஸை தான் கமிஷனர் கொடுத்து இருக்கிறார் என்பதில் பெருமிதம் கொண்ட சூர்யா, அந்த பெரியவரிடம் கூறிக் கொண்டு விடை பெற்றும் கொண்டான்.

வெற்றியையும் இழுத்து கொண்டு, மடக்கான்பட்டி நோக்கி பயணித்த சூர்யா மனதில் தனக்கு கொடுக்க பட்ட வேலையைப் பற்றிய எண்ணமும்,

வெற்றிக்கோ நெட்ஒர்க் சரியாக இல்லை என்ற கவலையயும். ஒரு வாரம் இந்த இடத்தில் எப்படி தங்க போகிறோம் என்ற வருத்தமும்,

ஆதியோ, கனவாய் கண்ட பெண்ணவளின் நினைவில் முழ்கியும். அவள் நிஜம் தானா. இல்லை கனவா. இல்லை காற்றா” என்ற படி தனக்குள்ளேயே கவிதையில் குழம்பி, நிஜம் என்றால் அவளை அடுத்து எப்போது காண்போமோ என்ற எண்ணத்தில் அவனும்,

மூன்று வெவ்வேறு மனநிலையில் பயணித்துக் கொண்டு இருந்தனர் நண்பர்கள் மூவரும்.

மூவரின் உலகையுமே மொத்தமாக மற்ற போகும் “மடக்கான்பட்டி கிராமம்” என்ற பெயர் பலகை அவர்களை இன்முகத்தோடு வரவேற்க தவறவில்லை.

Advertisement