Advertisement

அத்தியாயம் 18..

 ராம் அறைக்கு சென்று பார்த்தான்.. சீதா கட்டிலில் கால் மடித்து இருந்து முகத்தில் கை வைத்துக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள் சீதா..

“ ஏய்..! லக்ஷ்மி ஏன்டா அழுற?.. இப்ப என்ன நடந்தது.. எதுவும் ஆகலயே..! அவனை உன்ன தொட விட்டுருவேனா?.. கொன்னுருப்பேன் அந்த நாயை.. ஆனா இப்படி ஒழுக்கம் கெட்ட பிள்ளையை பெத்தவங்களுக்கும் தண்டனை வேணும்.. அதுக்காக மட்டும்தான் அவனை உயிரோட விட்டு வச்சிட்டு வந்தேன்.. அவனை பார்க்கும் போதெல்லாம் பிள்ளையை இப்படி தப்பா வளர்த்ததுக்கு அவங்க நொந்து நொந்து கண்ணீர் வடிக்கணும்.. அதுதான் அவங்களுக்கு தண்டனை.. இனிமேல் அவனுக்கு கண் ஆப்ரேஷன் பண்ணி கூட கண் தெரிய வைக்கவே முடியாது..

இனி அவன் உயிர் இருந்தும் பொணத்துக்கு சமம் தான்.. இனி கை கால் செயல்படாது.. நாக்கை பிளேடால அறுத்து வச்சிருக்கேன்.. இனி பே பே தான்.. அவன் என்ன நினைக்கிறான் என்று பேசவும் முடியாது.. பார்க்கவும் முடியாது..எழுந்து அவன் தேவைகளை பூர்த்தி செய்யவும் முடியாது.. உதவிக்கு ஒரு ஆள் இருந்தாலும் அவங்களுக்கு அவனை சமாளிக்கிறது கஷ்டம் தான்.. கூடிய சீக்கிரம் இந்த வாழ்க்கையே வேணாம்னு அவனே மரணத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளணும்.. இதுதான் அவனுக்கு தண்டனை..

 நீ மூணு வருசமா ஒரு பாம்புக்கு பால் வார்த்து இருக்கடி.. அவனுக்கு எத்தனை பொண்ணுங்களோட தொடர்பு இருக்குன்னு அவனுக்கே தெரியாது.. பொண்ணுங்களை அவன் மயக்கம் அடைய வச்சு மிரட்டி தான் காரியத்தை சாதித்திருக்கிறான்.. அப்படியா பட்டவனுக்கு இந்த தண்டனை அதிகம்னு நினைக்கிறியா..” என்றான்..

“ அவனை என் கையால கொல்லணும் முத்து.. அவன் மட்டும் ஏர்போர்ட் பக்கத்துல இப்படி பிளான் பண்ணம வேற இடத்துக்கு என்னை கொண்டு போய் இருந்தால் அங்கேயே அவனை நானே உயிர் நாடியில மிதிச்சு கொலை பண்ணி இருப்பேன்.. இத்தனை வருஷமா கூடவே இருந்து என்னை பற்றி முழுசா தெரிஞ்சுகிட்டு என் வீக் பாயிண்ட் எதுன்னு பார்த்து அடிச்சிருக்கான்..

நான் எதுவும் கிரியேட் பண்ண கூடாதுன்னு அந்த இடத்தை சூஸ் பண்ணி இருக்கான்.. நம்பிக்கை துரோகி.. ஆனா உன்னையும் நான் நம்பினேன் நீயும் என்னை ஏமாத்திட்ட.. இது நடந்ததுக்கு முதல் காரணம் நீதான்.. ” என்றாள்..

“ என்னடி எப்ப பாரு நான்தான் காரணம்னு சொல்லிட்டே இருக்க.. இது சரி இல்லை சொல்லிட்டேன்..” என்றான்..

“ பின்ன நீ காரணம் இல்லையா?.. காலைல நான் உன்கிட்ட சொல்லிட்டு போனேன் தானே..! ராஜ் ஹோட்டலல்ல இன்னைக்கு ஈவ்னிங் கல்யாண பார்ட்டி கொடுக்குறேன்னு.. அப்போ நீ என்ன செஞ்சிருக்கணும் கல்யாண பார்ட்டி தனிய கொடுக்கக் கூடாது அவளுக்கு துணையா புருஷன் நாமளும் போயி அங்க இருக்கணும்னு நினைச்சு வந்திருக்கனுமா?.. இல்லையா?.. நீ அங்க வந்து இருந்தா நான் அந்த நாயை அழைச்சிட்டு போக சொல்லி இருப்பேனா?.. நீயும் நானும் மட்டும் வீட்டுக்கு வந்து இருக்கலாம்.. எனக்கு இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்காது.. அப்ப இது நடக்க யார் காரணம் நீதானே?..” என்றாள்..

“ ஏய் என்னடி.. ஏதோ கல்யாணம் முடிச்சதுல இருந்து ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்து அப்புறம் நேத்து சண்டை புடிச்ச மாதிரியும் அந்த சண்டை காரணம் காட்டி நான் உன்னை அழைச்சிட்டு போக வராத மாதிரியும் பேசுற?.. யோசிச்சு பாரு நான் இங்க வந்ததுல இருந்து உன்னை காலேஜ் அழைச்சிட்டு தான் போனேன்.. ஆனா நீ ஒவ்வொரு முறையுமே என்னை திட்டி திட்டி அனுப்பி இன்ஸல் பண்ணுவ.. சரி அது கூட பரவாயில்லை என்று பொறுத்துக்கிட்டேன்.. ஆனா என்னை பார்த்து நீ வானு ஒரு வார்த்தை கூப்பிட்டியா?.. இல்லையே யாரோ ரோட்ல போறவங்க கிட்ட தகவல் சொல்ற மாதிரி சொன்ன.. சரி நான் தலையாட்டிக்கிட்டு கேட்டுட்டு இருந்தேன்.. நீ வான்னு சொல்லி நான் வராம போயிருந்தா தான் தப்பு.. நீ நினைச்ச மாதிரி நான் வந்து அங்க அவளவு ஆட்களுக்கு முன்ன உன்கிட்ட திட்டுவாங்கி அசிங்கப்பட்டு திரும்பி வருவதற்கு எதுக்கு வம்புன்னு பேசாமல் இருந்துட்டேன்..” என்றான்..

“ ஓஹோ அப்படியா?.. நடிக்காதடா.. முன்ன மாதிரி நான் இப்போ உன்னை அதிகம் திட்டிகிட்டே இருக்கேனா?. இல்லையே.. நேத்து நைட்டு நான் உன்னை கட்டி பிடிச்சிட்டு தூங்கினதை பார்த்ததுக்கு அப்புறமும் உனக்கு அப்படி தோணுதா?..பதில் சொல்லுடா?..” என்றாள்.. அவளுக்கு போகப் போக அவனை பிடித்ததை அவனிடம் நேரடியாக தெரியப்படுத்த முடியாமல் இருந்தாள்..

காரணம் தயக்கம்.. தற்போது ஒரு சில செயல்கள் மூலம் அதை தெரியப்படுத்தினாள்.. ஆனால் அவன் அதை புரிந்து கொள்ளாமல் தன்னை இப்படி ஒரு இக்கட்டில் சிக்க வைத்து விட்டானே.. என்கிற கோபம் அதிகமாக அவளிடம் இருந்தது..

“ ஏய் என்னடி சொல்ற?.. அப்போ நைட் நீ தெரிஞ்சுதான் கை கால் போட்டியா?.. அப்போ நான் உனக்கு முத்தம் கொடுத்ததும் தெரிஞ்சு இருக்குமே அதை நீ சொல்லவே இல்ல..” என்றான்..

“ ஆமா அதுதான் இப்ப ரொம்ப முக்கியம்.. போடா.. நீ அங்க வராம இருந்ததை நான் எப்பவுமே மன்னிக்கவே மாட்டேன்.. என்னால நடந்ததை மறக்கவே முடியல..” என்றாள்..

 “ அடியேய் பொண்டாட்டி.. ஆமா யாருடி சொன்னது.. நான் அங்க வரலைன்னு.. நீங்க புக் பண்ணி இருந்த அந்த பகுதிக்கு அடுத்த பகுதியில் தான் நான் இருந்தேன்.. நீங்க பேசியது. நீங்க ஆர்டர் பண்ணி சாப்பாடு சாப்பிட்டதுனு அங்க என்ன நடந்தது என்று நான் கண்ணால பார்க்கலையே தவிர அனைத்தையும் காதால் கேட்டுட்டு தான் இருந்தேன்..” என்றான் ராம்..

“ டேய்.. என்னடா சொல்லுற?.. நீ அங்க இருந்தியா?.. அப்ப ஏன் என்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போக என் பக்கத்துல வரல நீ..” என்றாள்.. அவன் வந்தும் தன்னை கண்டு கொள்ளாமல் சென்றதால் தான் இப்படி நடந்து விட்டதோ என்று தான் நினைத்தாள்..

“ நான் ஏன் அங்க வந்தேன்.. ஏன் உன் பக்கத்துல வரல.. இப்படி உன்னோட எல்லா கேள்விக்கும் நான் தொடர்ந்து பதில் சொல்றேன்..” என்றான்..

“ எனக்கு எதுவும் தெரிஞ்சுக்க மூட் இல்ல.. இப்ப தெரிஞ்சுக்கவும் வேணாம்.. நான் உடனடியாக ஊருக்கு போகணும்.. அம்மா, மாமா, யமுனா, அத்தை எல்லாரையும் பார்த்து அவங்களோட பேசினால் மட்டும் தான் என்னால அதுல இருந்து வெளியே வர முடியும்.. இப்போதைக்கு எனக்கு இந்த சென்னை வேணாம்.. வா கிளம்பு உடனே ஊருக்கு போகலாம்..” என்றாள்..

அவள் மனம் கொஞ்சம் ஆறுதல் அடைய இந்த சென்னையில் இருந்து வெளியேறி அந்த இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வேண்டுமென ஆசைப்பட்டாள்..

“ சரிடா காலையில் போகலாம்.. ஆனா இங்க நடந்தது வேற யாருக்கும் தெரியக்கூடாது.. நம்ம இரண்டு பேரோட போகட்டும்.. நான் கொஞ்சம் உன்கிட்ட பேசணும்டி.. மிர்ச்சி இப்ப நான் ஒன்னு கேக்குறேன் நீ அதுக்கு பதில் சொல்லு.. இப்ப அந்த கரண் பற்றிய உண்மை எல்லாம் அதாவது அவன் யார் என்று உனக்கு தெரிஞ்சிட்டு தானே..”

“ என்னடா முட்டாள் தனமாக கேள்வி கேக்குற?.. அவனால ரொம்ப கஷ்டப்பட்டு நொந்து நூலாகி வந்து இருக்கேன்.. அந்த துரோகி பேர் கூட இனி என் காதில் கேட்கக்கூடாது..” என்று கூறி விட்டு அவன் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்தாள்..

“ அப்படியா?.. சரி இப்ப இதை படி..” என்று கூறி அவள் கையில் ஒரு பேப்பரை கொடுத்தான்..

 அதில் இருந்தவை இதுதான்..

‘ நான் சீதாராமன்.. சீதாலக்ஷ்மியின் கணவன் முத்துராமன்..

 லக்ஷ்மி நான் சொல்ல வர்றது என்னன்னா.. உன் தோழன் என்னும் பெயரில் இருக்கும் அந்த கரண் பச்ச பொம்பளை பொறுக்கி..

 இன்னைக்கு தான் நான் அவனை முதல் முதல் பார்த்தேன்.. ஆனா அவன் யாரு அவன் எப்படிப்பட்டவன் என்று புரிஞ்சுகிட்டேன்.. அவனோட பார்வையும் சரி உன்கிட்ட நடந்துக்கிற முறையும் சரி கொஞ்சமும் சரியில்ல.. நீ அவன் கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கிறது உனக்கு நல்லது..

 இவன் என்னடா நேற்று திடீர்னு தாலி கட்டிட்டு இன்னைக்கு என் பிரண்ட பத்தி தப்பா பேசுரான்னு நீ நெனச்சு எனக்கு திட்டணுமா இருந்தாலும் கீழ என் நம்பர் கொடுத்து இருக்கேன் அதுக்கு அழைத்து திட்டிக்கோ..

 நீ இதை நம்பி ஒதுங்கி இருந்தா உனக்கு எந்த செய்தாரமும் இல்லை.. நான் பொய் சொல்றேன் பொறாமைல பேசுறேன்னு நெனச்சு நீ இதை முக்கியமா எடுத்துக்காம விட்டா சேதாரம் வந்ததுக்கு அப்புறம் யோசிச்சு கவலைப்பட்டு அழுது பிரயோசனம் இல்லை..

 இப்ப நான் ஊருக்கு போக வேண்டிய கட்டாயம்.. அதனால போறேன்.. நீ தான் உன்னை பாதுகாத்துக் கொள்ளணும்..

 இப்படிக்கு

 முத்துராம்….’ என்று அந்த கடிதத்தில் ராம் கல்யாணத்தின் பின் சென்னைக்கு வந்த முதல் நாள் காலேஜுக்கு அழைத்து சென்று விட்டு வந்து இந்த கடிதத்தை எழுதி அவள் கண் படும்படி அந்த மேசையில் வைத்து விட்டு ஊருக்கு சென்றான்..

 சீதாவிற்கு கரணை பற்றி உண்மையை உணர்த்துவதற்காக காலமே அவள் கண்ணில் இருந்து அந்த கடிதத்தை மறைத்து வைத்திருந்தது..

 அவள் அந்த கடிதத்தை படித்து பார்த்ததும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

“ என்னடி அப்படி பார்க்கிற?. கடிதத்தை படிச்சிட்டு முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்ல.. சரி நான் இப்ப கேட்கிறேன் பதில் சொல்லு.. இந்த கடிதம் ஒருவேளை அன்னைக்கு உன் கையில கிடைச்சிருந்தா நீ என்ன பண்ணி இருப்ப?..” என்று கேட்டான் ராம்..

 அவளால் இதை நம்ப முடியவில்லை.. ஆனால் இன்று நடந்ததை பார்த்தால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..

 மூன்று வருடமாக நண்பன் எனும் பெயரில் அவளுடன் சுற்றிக் கொண்டிருந்தவனை பற்றி அவளுக்கு எதுவும் தெரியவில்லை.. அவனை மட்டும் ஒரே ஆண் நண்பனாக ஏற்று முழுதாக நல்லவன் என்று நம்பி பழகினாள்..

 ஆனால் ஒரே பார்வையில் தன் கணவன் துரோகியை கண்டுபிடித்து விட்டான்..

 இன்று அவனால் அனுபவப்பட்டதால் உண்மை தெரிந்தது..

இல்லையென்றால் முத்து சொன்னது போல் இந்த கடிதம் அன்றே கிடைத்திருந்தால் இதை எடுத்து படித்துவிட்டு உடனடியாக அவன் கைபேசிக்கு அழைத்து வாய்க்கு வந்தபடி திட்டி சண்டை போட்டிருப்பாள்.. அது மட்டும் உறுதியாக அவளுக்கு தெரிந்தது..

“ இதுல நீங்க சொல்லி இருக்கிற மாதிரி படிச்சிட்டு உங்களை நம்பாமல் திட்டி சண்டை பிடிச்சிருப்பேன்..” என்றாள்..

 “ அதுதான் இந்த கடிதம் உன்கிட்ட கிடைக்காம அந்த மேசைக்கு கீழே போய் இருந்திருக்கு.. இவ்ளோ நாளும் இந்த அறையை சுத்தம் பண்ணியவங்க இந்த மேசைக்கு கீழே எல்லாம் சுத்தம் பண்ணலன்னு இதுல இருந்தே தெரியுது.. நானும் நெனச்சேன்.. என்ன இவ அந்த கடிதத்தை படிக்கலையோ.. கடிதம் அவளுக்கு தெரியாமல் எங்கேயோ தவறி போயிருச்சோன்னு நினைத்தேன்.. ஆனா நேத்து தான் நான் அறைய சுத்தம் பண்ணும் போது இந்த மேசைக்கு கீழே இருந்த கடிதம் வெளியே வந்துச்சு.. அப்பதான் நீ கடிதத்தை படிக்காததுக்கு காரணம் என்னன்னு தெரிந்தது..” என்றான்..

“ சரி என் மேலையும் தவறு இருக்கு.. அந்த நேரம் உங்களை எனக்கு பிடிக்காது.. அதை விட நான் அந்த துரோகி மேல நம்பிக்கை வைத்திருந்தேன்.. அப்ப அப்படி பண்ணி இருப்பேன் சரிதான்.. ஆனா உங்களுக்கு அவனை பற்றி முன்கூட்டியே தெரிஞ்சி இருந்தும் இன்னைக்கு நீங்க ஹோட்டலுக்கு வந்திருந்தும் ஏன் என்கிட்ட அப்பவே சொல்லி இதை தடுக்கல.. அதுக்கும் ஏதாவது காரணம் இருக்கா?..” என்றாள்..

“ காரணம் ரொம்ப அதிகமாவே இருக்கு.. அங்கேயே அவனை ரெண்டு மிதி போட்டு அவன் வாயாலேயே உண்மையை வரவழைச்சு இருப்பேன்.. அவன் உன் முன்னாடி மாட்டிக்கொள்ள கூடாதுன்னு உண்மையைச் சொல்லாமல் பொய் சொன்னால்.. ஆதாரம் இல்லாம நீ என்னை நம்புவியா?.. இல்லதானே.. அதனால தான் அவன் எந்த அளவுக்கு போறானோ போகட்டும்னு விட்டுட்டு அவனை பின் தொடர்ந்து வந்தேன்..” என்றான்..

“ என்னது பின் தொடர்ந்து வந்தியா?.. நீ வர கொஞ்சம் லேட் ஆகி இருந்தாலும் என் வாழ்க்கையே அவனால நாசமா போயிருக்கும்..” என்றாள்.. அவள் வாழ்க்கை நிலை என்னவென்று நினைத்து கண்கள் கலங்கியது..

“ அடியேய்.. அப்படி போக நான் விட்டுடுவேனாடி.. அன்னைக்கு ஊர்ல அந்த அபத்து நேரத்துல முத்து வா, முத்து வான்னு நான் யாருன்னே தெரியாம என்னை அழைத்த நேரம் உன்கிட்ட இருந்த நம்பிக்கை இப்ப கட்டின புருஷனா இருக்கும்போது என் மேல நம்பிக்கை இல்லையா என்ன?.. ஆதாரம் கடிதம் மட்டும் இல்ல.. இந்த போன்ல இருக்கிறதையும் பார்.. பார்த்துட்டு மொத்தமாக கேட்க வேண்டிய கேள்விகளை கேளு..” என்று கூறிவிட்டு அவன் கைபேசியில் இருந்த சில காணொளிகளை அவள் முன்பு போட்டு காட்டினான்…

 அதில் இருந்ததும் இதுதான்..

‘ டேய் மச்சான் நேத்து திடீர்னு சீதாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சுடா.. நாம இத்தனை வருஷம் அவளை அனுபவிக்க காத்திருந்தது வேஸ்ட்டா போய்டுமோ..’ என்றான் தீபன்..

 என்றும் இல்லாமல் திடீரென்று அவள் ஊருக்கு செல்வதாக கூறியதும் மதுரையில் இருக்கும் அவன் நண்பர்களை வைத்து அவளை பின் தொடர்ந்தான்..

 அப்படித்தான் அந்த ஊரில் திடீரென்று சீதாவுக்கு திருமணம் நடந்ததை கரண் தெரிந்து கொண்டான்..

 திருமணம் முடிந்து விட்டது என்று அலைபேசியில் அழைத்து நண்பன் கூறியதும் அதை தீபன் கரணிடம் கூறினான்..

 அடுத்த நாள் சீதாவை காலேஜில் முதல் முதலாக இறக்கி விட வந்த ராமை பார்த்துவிட்டு கரண் அன்று மாலை தீபனை சந்தித்து ராமை பற்றி கூறி வயிறு குலுங்க சிரித்தான்..

‘ டேய்.. அவன் ஒரு காட்டான் டா.. சீதா அவனை தன் ஹஸ்பண்ட் என்று கூட எங்களிடம் அறிமுகப்படுத்தவில்லை.. அப்படி இருக்கும்போது அவ எப்படி அவனோட சேர்ந்து வாழப்போறா?.. அது நடக்கவே நடக்காது.. நமக்கு தான்டா சீதா எப்பவுமே ஃபர்ஸ்ட் கிடைப்பா அது எப்பவுமே தப்பாது.. அவளுக்கு நாம தான் ஃபர்ஸ்ட் ஆனா நமக்கு அவ எத்தனையாவதோ கணக்கே இல்ல.. இந்த மூணு வருஷமா அவளை யாரும் பார்க்காத நேரம் ரசிச்சு பார்க்கிறதும்.. அவளுக்கு முன்னுக்கு நல்லவன் மாதிரி நடிக்கிறதும் எவ்வளவு பெரிய கஷ்டமா இருக்கு.. நான் அனுபவிக்கிற இந்த கஷ்டத்துக்கும் சேர்த்து வைத்து அவளை சும்மா அப்படி அனுபவிக்கணும்.. ” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றான்..

அந்த வீடியோ முடிந்து விட்டது..

 அடுத்த வீடியோ விஐபி யின் திருமணத்திற்கு அடுத்த நாள் பதிவாகி இருந்தது..

“ டேய் மச்சான்.. சீதாவுக்கு கல்யாணம் நடந்தது யாருக்குமே தெரியக்கூடாது அதற்கு முதல் நாம அவளை அனுபவிக்கணும் என்று நினைத்தேன்.. ஆனால் இந்த மீடியாகாரன் மொத்த பேருக்கும் தெரிய வைத்துவிட்டான்.. இனி எங்க கூட சுத்திகிட்டு திரியுற கொஞ்ச லூசு கூட்டங்கள் அவளுக்கு அட்வைஸ் பண்ணி அவளோட மனசு மாத்தியே அவனோட சேர்ந்து வாழ வச்சிடுவாங்க.. இதுக்காகவா அவ தாலி வெளியே தெரியவும் தாலி தெரியாமல் இருக்க ஃபுல் நெக் வச்ச டிரஸ் உனக்கு நல்லா இருக்குன்னு சொல்லி அவளை தினமும் அதையே போட வச்சேன்.. இதுக்கு ஒரே வழி தான் இருக்கு..

முன்ன பிளான் பண்ணின மாதிரி காலேஜ் ஃபுல்லா முடிஞ்சு லாஸ்ட் டேய் அன்னைக்கு நாம அவளை மயக்க மருந்து கொடுத்து தூக்கிட்டு போயி ரேப் பண்ண நினைத்ததை கூடிய சீக்கிரம் பண்ண பிளான் பண்ணணும்.. நாளைக்கு காலேஜ் வருவா.. நாளைக்கு செட்டாகாது.. இன்னும் ரெண்டு நாளில எங்களுக்கு லாஸ்ட் எக்ஸாம் முடியும்.. அன்னைக்கு எல்லாருக்கும் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு பார்ட்டி கொடுக்கிறதா சொல்லி இருக்கா.. நாம முன்னாடி போட்ட அதே பிளானை அன்னைக்கு பண்ணினா எல்லாம் ஓகே ஆகும்.. சரி மயக்க மருந்து கைவசம் இருக்காடா?..” என்றான் கரண்..

“ இருக்குடா மச்சி.. நாளைக்கு அந்த தையல் கிளாசுக்கு போயிட்டு டெய்லி ஆறு மணிக்கு வருமே அந்த பொண்ணுக்கு வச்சிருக்கமே டா..” என்றான் தீபன்..

“ அட..! யார்ரா இவன் அந்த பொண்ணுக்கு எப்பவுமே கொடுத்து சம்பவம் பண்ணலாம்.. ஆனால் இவளுக்கு பார்ட்டி கொடுக்கிற அன்னைக்கு கட்டாயம் கொடுத்து பண்ணியே ஆகணும்.. அந்த சந்தர்ப்பத்தை விட்டால் அவள் எக்ஸாம் முடிஞ்சு ஊருக்கு போறதா பிளான் பண்ணி இருக்காங்க.. அங்க போய் என்ன வேணும்னாலும் நடக்கலாம்.. சீதா பிரஸ் பீஸா நமக்கு வேணும்னு காத்திருந்தது இன்னும் ரெண்டு நாளில் நாம் திட்டமிட்டபடி நடந்தே ஆகணும்.. அதுக்கு எல்லாம் ரெடி பண்ணிவை.. சீதா மயக்க மருந்து கலந்த ஜூஸ் குடிச்சதும் பத்து நிமிஷத்துல மயங்கிடுவா அதுக்கு முதல் நான் அவளை யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி கார்ல ஏத்திட்டு வந்துடுறேன்.. என்ன நம்ம பிளான் நல்லபடியா நடக்கும் சரி நீ இப்ப போயிட்டு வா..” என்று கூறி இருவரும் பிரிந்து சென்றதும் அந்த வீடியோ முடிந்தது..

 அடுத்த வீடியோ இன்று காலை 11 மணி அளவில் நடந்தது..

 அதில் தீபன் அந்த ராஜ் ஹோட்டலில் ஒரு சர்வரை அழைத்து “ யோவ் நல்லா பாத்துக்கோ.. இன்னைக்கு இந்த பொண்ணு தான்.. லாஸ்ட்டா அந்த பொண்ணு குடிக்கிற ஆப்பிள் ஜூஸ்ல இந்த மயக்க மருந்தை கலந்திடு..” என்று கூறி சீதாவின் புகைப்படத்தை காட்டி அவனுக்கு ஒரு கட்டு பணத்தையும் கொடுத்தான் தீபன்..

அந்த சர்வர் யாருக்கும் தெரியாமல் அந்த பணத்தை எடுத்து பாக்கேட்டில் வைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்..

 அத்தோடு அந்த வீடியோவும் முடிந்து இருந்தது..

 தொடர்ந்து அந்த மூன்று வீடியோவையும் பார்த்ததும் அவளால் தாங்க முடியவில்லை..

 சீதாவை அப்படியே இழுத்து அவன் தோளில் சாய்த்து கொண்டு முதுகை தட்டி கொடுத்து “ அழாதடி அதுதான் எதுவும் நடக்கலையே.. இனியும் அவனால எதுவுமே பண்ண முடியாத அளவுக்கு அவனை கொண்டு வந்துட்டேன்.. இதுதான் உனக்கு அவனுக செய்ய இருந்த துரோகம்.. அதைத்தான் போட்டு காட்டி இருக்கேன்.. முதல் வீடியோ அந்த தீபனுக்கு தெரியாம அவன் போன்ல இருந்து சுட்டது.. இரண்டாவது வீடியோ அவர்கள் மேல எனக்கு சந்தேகம் வந்ததுமே இன்னைக்கு என்னை கொண்டு வந்து இறக்கி விட்டாரே அந்த ஆட்டோக்கார அண்ணன் கமல்.. அவர்கிட்ட சொல்லி இருந்தேன்.. அவர் தான் அந்த வழியா ஆட்டோவில் வரும்போது அவனுக பேசிட்டு இருந்ததை பார்த்து ஒளிஞ்சி இருந்து வீடியோவை எடுத்து எனக்கு அனுப்பி விட்டார்..

அடுத்த வீடியோ நானே இன்னைக்கு எடுத்தேன்..” என்றான்..

 மனைவியை கை வளைவில் வைத்து ஆறுதல் படுத்திக் கொண்டு அனைத்தையும் கூறினான் ராம்.

 அவன் செயல் அவளுக்கு கோபம் வரவும் அணைத்து இருந்த கையை விளக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்து அவனை முறைத்து பார்த்தாள்..

‘ ஐயையோ முறைக்கிறளே.. இப்ப என்ன பூதம் வரப்போகுதோ தெரியல… ’ என்று நினைத்து அவள் முகத்தையே பார்த்திருந்தான் ராம்..

“ டேய்.. கடிதத்தை நான் படிச்சாலும் நம்பி இருக்க மாட்டேன் சரி.. ஹோட்டல்ல அப்பவே வச்சு சொல்லியிருந்தாலும் அதுக்கு அந்த தெரு நாய் இல்லன்னு மறுத்து பேசி இருப்பான் அதுவும் சரி.. இவ்வளவு தெளிவா அந்த பொறுக்கி நாயோட திட்டத்தை வீடியோவை எடுத்து வச்சிருக்கீங்க.. முன்கூட்டியே என்கிட்ட காட்டி இருந்தால் நான் கொஞ்சம் அலர்ட்டா இருந்து இருப்பேன் தானே.. வீடியோவை என்கிட்ட ஏன் காட்டல?..” என்று கேட்டாள்.. அவள் கண்ணில் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாய் என்னும் கேள்வியும் தொக்கி நின்றது..

Advertisement