Advertisement

எதை எதையோ மனதில் போட்டு குழப்பியவன், செல்லும் பாதையின் தடம் புரியாமல் எங்கோ பயணித்து கொண்டு இருந்தான் வெற்றி.

குழம்பிய குட்டையாய் கிடக்கும் மனதை அமைதி படுத்த தெரியாமல், கிடந்தவன்,

“கோவிலுக்கு போவோம். அங்கேயாவது நமக்கு நிம்மதி கிடைக்குதான்னு பாப்போம்” என்று எண்ணியவன் அருகில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்குள் நுழைந்தான், அங்காவது நிம்மதி கிடைக்கும் என்று எண்ணி.

கண்ணை மூடி சில நொடிகள், மௌனத்தில் கழித்தவன், கண்களை திறக்க, மனதின் எண்ணம் நிறைவேறியதை போல, அவனின் நிம்மதி மொத்தமும்  இன்று சேலை கட்டி கொண்டு அவன் எதிரே நின்று கொண்டு இருந்தது.

மஞ்சள் சேலையில், நெற்றியை அலங்கரிக்கும் பொட்டும், தலையில் மல்லி சரமும் அணிந்தவள், கண்கள் மூடி பாபாவிடம் எதையோ வேண்டியவள் கண் திறந்த போது, வெற்றியை எதிரே கண்டாள் ஸ்வாதி.

எதிரே சேலையில் நிற்கும் அவளை பார்த்தவுடன் கண்கள் விரிந்து, மனம் மகிழ்ச்சியில் கூத்தாட, அதன் பிம்பமாய் மங்கி கிடைத்த அவனின் முகத்தில் பிரகாசம் ஒளிர, மனதின் காதல் விழியில் புலப்பட நின்றவனை கண்ட ஸ்வாதியின் முகமும் கூட ஒளிரவே செய்தது.

நேற்றைய நிகழ்வுகள் அடுத்த வினாடி கண் முன்னே ஓட, மலர்ந்த முகம் அடுத்த நொடி சுருங்கி விட,

“என்ன தான் ஆதிக்கு அஞ்சலியை பிடிச்சி இருந்தாலும். ஸ்வாதி ஆதியை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டா தானே. அப்படி இருக்கும் போது அவளை ரசிக்குற உரிமை எனக்கு இல்லையே” என்று எண்ணியவன் வாடினாலும், அதை முகத்தில் காட்டாமல் அதற்கு மேல் அவ்விடம் நிற்கவும் மனம் இல்லாமல், கோவிலை சுற்றும் சாக்கில் அவ்விடத்தை விட்டு அழகாய் நழுவி கொண்டான் வெற்றி.

திருமண செய்தி வந்ததில் இருந்து மாறுபட்டு கிடக்கும் வெற்றியின் போக்கை ஸ்வாதியால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆதியை அவளுக்கு பிடிக்கும் தான். இந்த திருமண செய்தி அவளுக்குமே அதிர்ச்சி தான் என்றாலும்,

“ஆதியை கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவங்களோட சேர்ந்து நாம தொழில் பண்ண ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதனால நாமலும் இந்த ஊருலயே வந்து மறுபடியும் செட்டில் ஆகிடலாம்”.

ஜாதி காரணம் காட்டி துரத்த பட்ட தன் சொந்த ஊரில் வந்து வாழ வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற தன் தந்தையின் ஏக்கத்தை பல நாளாக பார்த்தவளுக்கு, இம்முறை தன்னுடைய விருப்பு மறந்து, தந்தையின் ஆசையை நிறைவேற்றும் நிறைவு அதிகம் இருந்தால்,

ஒரு நொடி யோசிக்கவும் இல்லாமல் உடனே ஆதியை மணக்க ஒப்புக்கொண்டாள்.

ஆனால், ஆதியை மணக்க முடிவெடுத்தவள் நேற்றில் இருந்து ஒரு முறை கூட ஆதியை அழைத்து பேசவும் இல்லை, மனதளவில் அவனை நினைக்கவும் இல்லை.

மனம் முழுவதும் வெற்றியின் பாரா  முகம் நிறைந்து இருக்கும் போது வேறு எண்ணம் தோன்றுமோ மங்கை மனதில். அப்படி இருக்க இன்று எதிர் எதிரே சந்தித்தும் முகம் காட்டி பேச தயங்கும் வெற்றியை கண்டதும் மனம் வலித்தது ஸ்வாதிக்கு.

“என்ன தான் இவனுக்கு பிரச்சனை. எதுக்கு இப்டி முகத்தை திருப்பிகிட்டு போறான். இன்னைக்கு இவனை விடுறது இல்லை. ரெண்டில் ஒன்னு தெரிஞ்சே ஆகணும் எனக்கு” முடிவெடுத்தவள், கோவத்தில் வெற்றியின் பின்னாலேயே செல்ல, அவனோ இவள் வருகை உணர்ந்தும் எதையும் அறியாதவன் போல் தன் வேலையே முக்கியம் என்று கோவிலை வலம் வந்த படி இருந்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவனை அங்கிருக்கும் அரச மரத்திற்கு அருகில் இழுத்து சென்றவள்,

“என்ன தான் பிரச்சனை உனக்கு? எதுக்கு என் கிட்ட பேச மாட்டேங்குற?” எகிறினாள் எடுத்த எடுப்பில்.

“நான் எங்க பேசாம இருந்தேன். நீ சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்த, அதான் அப்பறம் பேசிக்காலம்னு கோவிலை சுத்திக்கிட்டு இருக்கேன். என்னோட வேண்டுதலை ஒழுங்கா பண்ண விடு” என்றவன் மீண்டும் கோவிலை சுற்ற துவங்கினான்.

அதில் மேலும் கடுப்பானவள், வரும் கோவத்தை அடக்கி கொண்டு,

“அப்படி யாருக்கு இவ்வளவு மும்முரமா வேண்டிக்கிட்டு இருக்கீங்க? ரொம்ப முக்கியமான ஆளோ!!” கேட்டாள் ஸ்வாதி.

“முக்கியமான ஆளுன்னு ஒரே வார்த்தைல முடிச்சிட முடியாது. என்னோட சர்வமும் அவுங்க தான். சாமி முன்னாடி எனக்காக  கை கூப்பி நின்னாலும் என்னோட முதல் பிராத்தனை அவுங்களுக்கு தான இருக்கும். அந்த அளவுக்கு முக்கியமானவங்க” என்றவன் தன் சுற்றலை மட்டும் நிறுத்தவே இல்லை.

“அவ்வளவு முக்கியமா! அப்போ உன்னோட தங்கச்சி வெண்பாவை தானே சொல்லுறே” என்றாள், வெற்றிக்கு வெண்பா மேல் இருக்கும் பாசம் அனைத்தையும் உணர்ந்து, கண்கூடாக பார்த்தவளாக.

“ஹா ஹா.. பிறப்பால் வந்த முக்கியமான உறவு வெண்பா. இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கூடவே வரணும்னு நெனைக்குற உறவு தான் அவ” புதிராக முடித்தான் வெற்றி.

“அவளா? யார் அந்த அவ?” ஒற்றை புருவம் உயர்த்தி கேள்வியாய் நின்றாள் ஸ்வாதி.

“ஹய்யையோ பேச்சு வார்த்தைல உளறிட்டோமே. இப்போ எப்படி சமளிக்குறது” யோசித்து கொண்டு இருந்தவனை விடாமல் நச்சரித்து கொண்டு இருந்தாள் ஸ்வாதி.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வெற்றி, “ஆமாம் நான் காதலிக்கிற பொண்ணு பத்தி தான் சொல்லுறேன். இப்போ என்ன அதுக்கு. அதை பத்தி தெரிஞ்சி நீ என்ன பண்ண போறே” என்றான் கோவத்தில்.

அவன் கூறிய வார்த்தைகள் சில நொடிகள் கழித்தே ஸ்வாதியின் மூளைக்கு உரைக்க, “என்ன காதலிக்குற பொண்ணா? பொய் சொல்லாத. இத்தனை நாளா என் கிட்ட சொல்லவே இல்ல” சந்தேகமாய் கேட்டவளை பார்த்து நக்கலாய் சிரித்தவன்,

“உன் கிட்ட நான் எதுக்கு சொல்லணும். நீ மட்டும் உன்னோட கல்யாணம் பத்தி என்கிட்ட சொன்னியா?” என்றான் நேரடியாக.

அதில் முகம் சுருங்கியவள், “அதுவும் நியாயம் தான். ஆனாலும் அவன் காதலிக்கிற பொண்ணு யாருன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்” என்று எண்ணியவள் வெற்றியை விடுவதாய் இல்லை.

“சும்மா பேச்சுக்கு இப்படி எல்லாம் சொல்லாத. நீ அப்படி யாரையும் காதலிக்கல. எனக்கு தெரியும். பொய் சொன்னா புள்ள பொறுக்காது, தெரியும்ல” என்றாள் விளையாட்டாய் நகைத்த படி.

“அப்போ எனக்கு கண்டிப்பா டஜன் கணக்குல பொறக்கும். கவலையே இல்ல” என்றவன் அப்போதும் அவள் கையில் அகப்படாமல் தான் இருந்தான்.

“நான் உன்னை நம்ப மாட்டேன். அந்த  பொண்ணோட பேர் சொல்லு பாப்போம். போட்டோவும் வேணும்” என்றவள் அவனை பிடித்து ஒரு இடத்தில் நிற்க வைத்த பின்னரே கேட்டாள்.

“இதோ பார் உனக்கு புருவ்ப் பண்ணனும்னு எனக்கு அவசியம் இல்ல. இருந்தாலும் சின்ன வயசுல இருந்து ஃபிரண்ட் பழகுனதால சொல்லுறேன். ஆனா இதை யார் கிட்டயும் சொல்லிடாத” என்றவன் ஆர்வமாய் இருக்கும் ஸ்வாதியின் முகத்தை கண்டு மேலும் தொடர்ந்தான்.

“அவளோட பேர் ஜெர்ரி. நான் அவளை அப்படி தான் கூப்பிடுவேன். நம்ப ஊர் தான். இதுக்கு மேல இப்போதைக்கு என்னால சொல்ல முடியாது”, என்றவன் அமைதியாய் ஒரு இடத்தில் அமர்ந்தும் கொண்டான்.

“வெற்றி ஒருத்தியை காதலிக்கிறான்”,  என்பதை சற்றும் எதிர்பாராத ஸ்வாதிக்கு ஏனோ இது சந்தோஷத்தை தராமல் வருத்தத்தையும் வாட்டத்தையுமே தந்தது. அதன் காரணத்தை அப்போது யோசிக்க விரும்பாதவள்,

எதோ எங்கோ வலிக்கும் மனதின்  வலியையும் பொருட்படுத்தாமல், வீட்டிற்கு கிளம்ப எத்தனித்த வெற்றியை தடுத்தவள்,

“வெற்றி நீ வீட்டுக்கு தானே போற. என்னையும் கூட கூட்டிகிட்டு போ. நானும் வரேன்” என்றவள் அவனின் பதிலுக்கும் காத்திராமல் ஒய்யாரமாய் காரில் சென்று அமர்ந்து கொண்டாள்.

வழி மொத்தமும் ஸ்வாதிக்கு அந்த பெண்ணின் நினைவு தான். ஜெர்ரினு சொன்னானே. ஒரு வேல கிறிஸ்டியன் பொண்ணா இருக்குமோ. இல்லை வேற நாட்டு பொண்ணா இருக்குமோ.

“ச்சி ச்சி.. இவனுக்கு உள்ளூர்லயே எந்த பொண்ணும் திரும்பி பாக்காது இதுல வெளிநாட்டு பொண்ணு தான் ஒரு குறைச்சல் இவனுக்கு.

ஆமா அந்த பொண்ணு இவன் கிட்ட எத பார்த்து ஏமாந்து இருக்கும். பையன் நல்ல பையன் தான். எந்த தப்பான பழக்கமும் இல்ல. பொண்ணுங்கள மதிச்சு, எல்லாருக்கும் மரியாதை குடுக்கிற ஆளுதான். ஒரு வேலை இதை பாத்து மயங்கி இருக்குமோ.

மத்தபடி இவன் ஓவர் அழகு எல்லாம் இல்ல. கருப்பா இருந்தாலும் கலையா இருக்கான். சிரிச்சா செம்ம கியூட்டா இருக்கான். வேற எதுவும் இவன் கிட்ட சொல்லிக்குறா மாதிரி இல்லையே” யோசித்து கொண்டு வந்தவளின் மனது அவளுக்கே கண்ணாடி திரையாகி போனது. பாவம் பேதை தான் அதை எதையும் அறியாமல், காணாத ஒரு பெண்ணை நினைத்து உள்ளுக்குள் கருகி கொண்டு இருந்தாள்.

மறுபுறம் வெற்றிக்கோ அதில் படு ஆனந்தம்,

“ஏய் எலிக்குட்டி. ஒன்னும் இல்ல ஒன்னுக்கு இல்லன்னு சொல்லிட்டு இப்போ நான் ஒரு பொண்ணை காதலிக்குறேனு சொன்னதும் எலி மூஞ்சி எப்படி சுருங்கி போச்சு பாரு. வருவடி நீயே என்கிட்ட வந்து உன் காதலை சொல்லுவ பாரு” மனதுக்குள் எண்ணியவனுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

அதே மகிழ்ச்சியில் தான் சாலை ஓரம் இருந்த ஐஸ் வண்டி அருகே வண்டியை நிறுத்தியவன், ஸ்வாதியுடன் இறங்கி தங்கள் இருவருக்கும் ஐஸ்கிரீம் வாங்கி எப்போதும் பாதி உண்டு மீதியை மற்றவருக்கு கொடுக்கும் அவர்களின் வழக்கத்தை தொலைவில் இருந்தபடி பார்த்து கொண்டு இருந்தான் ஆதி.

அஞ்சலியுடன் வெளியே செல்லலாம் என்று எண்ணியவன், அதே ஐஸ் வண்டியை கண்டதும் காரை ஓரம் கட்ட, அப்போது அவ்விடம் வந்த வெற்றி, ஸ்வாதியை கவனித்து கொண்டு இருந்தவன், அவர்கள் அவ்விடம் விட்டு கிளம்பும் வரை தூரத்தில் காத்திருந்து விட்டு பின்னரே தன் காரை செலுத்தினான் ஆதி.

அன்றைய நாள் முழுவதும் அஞ்சலியுடன் செலவழித்த ஆதிக்கு ஏனோ நாளின் இருபத்திநான்கு மணி நேரம் போதவே இல்லை. சூர்யா வீட்டின் வாசலை வந்து அடைந்த பின்னும் கூட காரை விட்டு இறங்க மனமே இல்லை அஞ்சலிக்கு. ஆதிக்கும் அதே நிலை தான். அஞ்சலியை போக சொல்ல மனம் விழையவே இல்லை.

அஞ்சலியை இப்படியே தன் வீட்டிற்கு அழைத்து சென்று, இன்றைய மன நிம்மதியும் சந்தோஷமும் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று எண்ணியவனுக்கு,

இவை அனைத்தும் அத்துணை எளிதில் நடந்து முடியும் காரியம் இல்லை என்பதும் நன்கு தெரியும்.

காரை விட்டு இறங்கிய அஞ்சலிக்கு ஏனோ பிரியா விடை அளித்து கிளம்பினான் ஆதி. அதன் விளைவாய் இருவருக்கும் இடையே காதல் அழகாய் ஒளிர்ந்து, இருவரையும் அழகாக்க, பிரிவின் வலியும் கூட சுகமாய் காட்டும், ஆதி அஞ்சலியின் காதலை மாடியில் இருந்து கவனித்து கொண்டு இருந்தான் சூர்யா.

இத்தனை நாள் காதல் என்ற வார்த்தையே பல வலிகளையும் வேதனைகளையும் மட்டுமே சுமந்து வந்ததை பார்த்து இருந்த சூர்யாவிற்கு, இன்று ஆதி அஞ்சலி இடையே மலர்ந்து கிடக்கும் இந்த காதல் ஒரு புது கோணத்தையே அவனுக்கு காட்டியது.

காதலித்த ஒரே காரணத்திற்காக, ஊரிடம் இருந்து தள்ளி, உறவுகளிடம் இருந்து விலகி எதோ அந்நிய பட்டு வாழ்ந்து வரும் தன் தாய் தந்தையை கண்டு வந்தவனுக்கு, ஏனோ காதல் என்ற வார்த்தையையே பிழையாக தான் பட்டது.

அப்படி இருந்தவன் மனதில், இவர்களின் காதல் ஒரு புது நம்பிக்கையை உருவாக்கி இருக்க,

“நம்ப கூட காதலிச்சா நல்லா இருக்கும்ல” என்ற எண்ணம் ஏனோ லேசாக எட்டி பார்க்கவே செய்தது. ஏனோ இந்த எண்ணம் தோன்றிய பின், தனக்கு மெசேஜ் அனுப்பும் அந்த பெண்ணின் நினைவு வர,

“என்ன காலைல கொஞ்ச நேரம் தான் பேசுனா? அதுக்கு அப்புறம் எந்த மெசேஜும் வரல. என்னவா இருக்கும்” என்று எண்ணியவன் அவளின் நினைவில் இருக்க, அது பொறுக்காத நிதர்சனம் அவனை தட்டி நிஜத்திற்கு கொண்டு வந்தது.

“மறுபடியும் காதல் என்ற பெயரில் தன் தாய் அனுபவித்த அத்துணை துயரத்தையும் தன்னால் வேறு ஒரு பெண் அனுபவிக்க வேண்டுமா. அதுவும் யார் என்று கூட தெரியாதா அந்த பெண்ணிற்கு ஒரு மோசமாக எதிர் காலத்தை தன் கைகளாலேயே தரவேண்டுமா” என்ற எண்ண சுழற்சி அவனுள் ஓட, திருமணமே தனக்கு தேவை இல்லை.

“இனி அந்த பொண்ணு கிட்ட இருந்து எந்த மெசேஜ் வந்தாலும் அதுக்கு பதில் சொல்ல வேணாம். இல்லனா இனி எனக்கு மெசேஜ் அனுப்பாதனு தெளிவா சொல்லிடனும்” முடிவெடுத்தவன் முகத்தில் ஏனோ சொல்ல தெரியாத வாட்டம் இருக்கவே செய்தது.

வேண்டாம் என்று விலக முடிவெடுத்தவனுக்கு, ஏனோ விலக மனமே வரவில்லை.

“ஒரே நாள் பேச்சில், அதுவும்  பத்து நிமிட பேச்சில் எப்படி அவளிடம் ஈர்க்கப்பட்டான் என்பது புரியவே இல்லை சூர்யாவிற்கு.

பிறப்பில் இருந்தே ஒதுக்கும் உறவுகளும், நிராகரிக்கும் சமூகத்தையும் கண்டே வளர்ந்தவனுக்கு பாசம் அன்பு என்ற  அனைத்துமே தாய் , தந்தை, தாத்தா, ஆதி என்ற ஒரு சில உறவுகளிடம் இருந்து மட்டுமே கிடைத்து வந்து இருக்க,

இன்று புதிதாய் முகம் கூட பார்க்காத ஒருத்தியின் இத்துணை அன்பான பேச்சும் நடவடிக்கையும் போலீஸை உலுக்கவே செய்தது. அதனால் தான் என்னமோ, இத்துணை நாள் யார் புறமும் சாயாத சூர்யாவின் மனதும் கூட தடுமாற துவங்கி இருந்தது.

இனி இவை எதையும் வேண்டாம் என்று திடமாக இருந்தவன் அந்த பெண் யார் என்பதை தெரிந்த பின்னும் அதே திடத்தை காப்பானா? இல்லை தளருமா? அவனின் மனம்.

Advertisement