Advertisement

வெள்ளை பனி சாலையெங்கும் படர்ந்து, இலைமறை காயாய் பாதை தெரிய, விடியற் காலையோ, மழையோ என்பதும் கூட தெளிவாக புலப்படாத அந்த வேளையில்,

மனதில் ஏதேதோ எண்ணங்களுடன், அந்த சாலையின் அமைதியோடு நடை பழகி கொண்டு இருந்தான் சூர்யா. இந்த தனிமையும் அதன் இனிமையும் அவனை வெகுவாய் கவர, வழிமேல் விழி பதியாமல் சாலை ஓரங்களில் பூத்து குலுங்கும் வண்ணமலர்களை ரசித்த படி வந்தவன், எதன் மேலோ மோதிய படி, தடுமாறி நின்றவனுக்கு, பஞ்சோ, பூக்குவியலோ எதுவோ என்ற குழப்பத்தில் தலை நிமிர்ந்து பார்க்க.,

வெள்ளை பட்டுடுத்தி, பனியின் வெண்மைக்கு நிகரான நிறத்தில் மல்லி சரம் சூடி தேவதையாய் அவன் முன் வந்து நிற்கும் அவளை பார்க்க கண் இரண்டு போதாமல் சூர்யா திணறி நின்ற தருணம்,

அவளின் கை வளையல் மேல் இருந்த மொத்த கவனத்தையும் கழுத்து வளைவில் வந்து சிறைப்பட, கழுத்தை அலங்கரித்த படி கர்வமாய் அமர்ந்து இருந்த அந்த தங்க சங்கிலியை கண்டவனின் பார்வை மேலும் உன்னித்து,

அதன் கீழ் மறைந்து இருக்கும் அந்த பழைய காய வடுவை கவனித்தவன் யோசனையில் கிடந்த நிமிடம் காதை கிழிக்கும் வண்ணம் எங்கிருந்தோ ஒலித்தது அந்த ஒலி,

பதறி அடித்து எழுதவனுக்கு சுயநினைவு தட்ட,

“அடிச்சா. இதெல்லாம் கனவா. அவளோட முகத்தை பாக்குறதுக்குள்ள எந்த நந்தியோ உள்ள புகுந்து கெடுத்துடுச்சே” கடுகடுத்தவன் ஒலி வந்த திசை நோக்கி பார்க்க,

அவனின் கனவை கலைத்த சந்தோஷத்தில், கைபேசி திரையில் சிரித்தபடி இருக்கும் வெற்றியிடம் இருந்து தான் அழைப்பே வந்து இருந்தது.

“உண்மையிலேயே நந்தி தான் கூப்புடுது” சலித்து கொண்டவன் மணியை பார்க்க, அது காலை ஆறு என்று காண்பிக்க.

“இந்த நாயி காலைல பதினோரு மணிக்கு முன்னாடி எந்திரிக்காதே. இவ்வளவு சீக்கிரம் எப்படி கால் பண்ணுறான். ஒரு வேல இதுவும் கனவோ” எண்ணியவன் தன்னையே கிள்ளி சந்தேகம் தீர்த்து கொள்ள.

“ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ” வலிக்குது, அப்போ இந்த நாயி உண்மையிலேயே கூப்பிடுதா, என்னவா இருக்கும்?” யோசித்த படி அதை எடுத்து காதில் வைத்தது தான் தாமதம்,

“டேய். என்னடா இந்த ஆதி இப்டி பண்ணிட்டான். அதான் அவன் அஞ்சலியை கல்யாணம் பண்ணிகிட்டான்ல. எப்படிடா இப்போ ஸ்வாதியை கல்யாணம் பண்ணிக்க முடியும். அஞ்சலியை ஏமாத்தறதா ஆகாதாடா” என்றான் சூர்யா பேச வருவதை கூட கேட்காமல்.

“அட மல குரங்கே, இப்போ தான் இந்த விஷயமே உன் மரமண்டைக்கு உரைக்குதா. சரியா போச்சு. காதல்னு வந்தாலே இப்டி தான் போல” எண்ணியவனுக்கு ஏனோ நேற்று தன்னுடன் பேசிய அந்த பெண்ணின் குறுந்செய்தி நினைவிற்கு வர, புன்முறுவலிட்டவனை,

“டேய் பதில் சொல்லுடா. எவ்வளவு நேரமா கத்திக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு அமைதியா இருந்தா எப்படி” கடுப்பில் கத்தினான் வெற்றி.

அவனை மேலும் வம்பிழுக்கும் பொருட்டு, “நீ எதுக்குடா அதுக்கெல்லாம் கவலை படுற. ஏன் ரெண்டு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க கூடாதா. அது ஆதியோட பிரச்சனைடா. நீ எதுக்கு காலைலயே இப்டி கத்திக்கிட்டு இருக்க” படு சாதாரணமாய் கேட்டான் சூர்யா.

“என்னாது ரெண்டு பொண்டாட்டியா? என்னடா இவ்வளவு ஈசியா சொல்லுறே. அது எப்படிடா நடக்கும். அதெல்லாம் தப்புடா” என்றான் வெற்றி பதறி போய்.

அவனின் பதற்றத்தில் சிரித்தவன், “நீ எதுக்குடா பதறுற. அந்த பொண்ணுங்களுக்கு ஓகேனா உனக்கு என்ன?” என்றான் சூர்யா அடங்காமல்.

“என்னால இதை அனுமதிக்க முடியாதுடா. ஒழுங்கா ஆதியை அஞ்சலி பத்தி சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லுவோம்” என்றான் திடமாக.

“எதுக்கு அப்படி சொல்லணும். இன்னொன்னு யோசிச்சியா? கல்யாணம் முடிவான பொண்ணு ஸ்வாதி. திடீர்னு மாப்பிளை வேணாம்னு சொல்லி நின்னு போய்ட்டா அவளுக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் அது” மேலும் விவாதம் செய்தான் சூர்யா.

“அதுக்காக பிடிக்காத பையனை அவ கல்யாணம் பணிக்குறது தப்பு இல்லையா” என்றான் வெற்றி.

“ஆதியை பிடிக்கலைனு ஸ்வாதி சொன்னாளா. நீயே எதையாச்சு கற்பனை பணிக்கட்டு பேசாதடா” இதுவும் சூர்யா தான்.

“ஆமாடா, ஸ்வாதி வேற ஒருத்தர காதலிக்குறா. ஆதி மேல அவளுக்கு விருப்பமே இல்லை” உறுதியாய் பேசினான் வெற்றி.

“எது காதலிக்குறளா? உன் கிட்ட சொன்னாளா? சரி யாரை காதலிக்குறானு சொல்லு பாப்போம்” வெற்றி வாய் வழியே அவன் மனதில் அறிய விரும்பினான் சூர்யா.

“என்னை தான். வேற யார!” சட்டென வந்தது வெற்றி இடத்தில் இருந்து.

“என்னாது உன்னையா?” அதிர்ச்சியாவதை போல் நடித்தான் சூர்யா.

அப்போது தான் தான் உளறியதை உணர்ந்த உணர்ந்த வெற்றி சுதாரித்து,

“ஆங்.. என்னனு சொல்லலடா. நான் வேணும்னா கேட்டு சொல்லுறேன்னு சொன்னேன்” கேவலமாக சமாளித்தான் வெற்றி.

அதில் மேலும் சிரிப்பு வந்த சூர்யாவிற்கு, “ஓஹோ அப்படி சொல்லுறியா? அப்போ கேட்டு யாருன்னு சொல்லு. அப்போ பார்த்துக்கலாம்” என்றான் சூர்யா முடிவாக.

இதற்கு மேல் என்ன பேச முடியும்,

“இவன் கிட்ட போய் பேசுனேன் பாரு. ச்சா.. இதுக்கு ஆதி கிட்டயே பேசி இருக்கலாம். இன்னும் பயிற்சி வேண்டுமோ” சலித்து கொண்டவன் இணைப்பை அணைத்து விட்டு, கட்டிலில் புரண்ட படி தான் கிடந்தான்.

“வா ராஜா வா.. நீயே உன் வாயால எல்லாத்தயும் சொல்லுற வரைக்கும் உன்னை விடுறதா இல்லை” மனதுக்குள் சொல்லி சிரித்தவன்,

“இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவோம்” நினைத்தவன் ஒரு முறை அந்த அதிசய பெண்ணிடம் இருந்து தகவல் வந்து உள்ளதா இல்லையா என்பதையும் பார்க்க மறக்கவில்லை.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து, மெசேஜ் ஒலி வர, துக்கத்தில் இருந்து அலண்டு புரண்டு எழுந்தவனின் கைகள் தானாய் கைபேசியை அடைய, வந்து இருந்த செய்தி பூவாய் மலர செய்தது சூர்யாவை.

“குட் மார்னிங் மாம்ஸ்” என்று இரண்டு புன்னைகைக்கும் பொம்மையுடன்.

அதை பார்த்தவுடன் புன்னகைத்தவன், என்ன பதில் அளிப்பது என்று யோசித்து நின்ற நேரம் வந்து விழுந்தது அடுத்த மெசேஜ்.

“என் மெசேஜுக்கு ரொம்ப நேரமா காத்துகிட்டு இருக்கீங்க போல” என்றவளின் செய்திக்கு ஆர்வமாக பதிலளிக்க சென்றவன், எதையோ யோசித்து, பின் எதையுமே அனுப்பாமல் வெளியும் வந்து விட்டான்.

“இப்டி எல்லாம் நிஜ வாழ்க்கைல நடக்குமா என்ன? இப்போ இருக்க இந்த நாட்டாமை பிரச்சனை, ஆதி அஞ்சலி கல்யாண பிரச்சனைல இது நமக்கு தேவையா?” யோசித்தவன், அதன் பிறகு இந்த மெசேஜ் பெண்ணிற்கு எந்த பதிலும் அனுப்ப கூடாது என்று முடிவெடுத்தவனுக்கு, தானே இதை மீற போகிறோம் என்பது அப்போது தெரியவில்லை.

வெகு நேரமாக மனம் தளராமல் அஞ்சலியை அழைத்து கொண்டு இருந்தான் ஆதி. ஆயிரம் தான் சமாதானம் செய்து இருந்தாலும், இப்போது இத்துணை முறை அழைத்தும் அஞ்சலி எடுக்காமல் இருப்பது அவனுள் லேசான பயத்தை உருவாக்கவே செய்தது.

“ஒரு வேலை என் மேல இன்னும் கோவமா இருக்காளோ? நேத்து அவ்வளவு பேசி சரி பண்ணி வெச்சிட்டு வந்தோமே. இப்போ மறுபடியும் மொதல்ல இருந்தா” யோசித்தவனுக்கு இதயத்தின் படபடப்பு அதிகரிக்க, எதையும் யோசிக்காமல் அடுத்து சிவகாமியை அழைத்து இருந்தான் ஆதி.

“சொல்லு ஆதி, என்ன ஆச்சு? இவ்வளவு காலைலயே கால் பண்ணி இருக்க?” என்றார் சிவகாமி.

“காலைல இருந்து அஞ்சலிக்கு கால் ட்ரை பண்றேன். அவ எடுக்கவே இல்ல. அதன் கொஞ்சம் பயம் வந்துடுச்சி. அவ எங்க இருக்கா அத்தை?” என்றான் நேரடியாக.

“தோட்டத்துல பூ பறிச்சிட்டு, துணி எல்லாம் துவைச்சு காய போடுறேனு போனா ஆதி. அதன் கொஞ்சம் நேரம் ஆகுது. இப்போவே கொண்டு போய் கொடுக்கவா? இல்ல அவ வந்த அப்புறம் உனக்கு கால் பண்ண சொல்லவா?”

“வேலைய முடிச்சிட்டே கூப்பிட சொல்லுங்க அத்தை. அவளை வெளிய கூட்டிட்டு போகலாம்னு இருந்தேன். அதுக்கு தான் அவளுக்கு கால் பண்ணேன்” என்றான் ஆதி.

“சரி அஞ்சலி வந்தா கூப்பிட சொல்லுறேன் ஆதி” என்றவருக்கு ஏனோ மனது நிறைந்தே இருந்தது. நேற்றைய திடீர் திருமண அறிவிப்பினால் அதிர்ந்து இருந்த சிவகாமிக்கு, அஞ்சலியின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயமே அதிகம் இருந்தது. இன்று ஆதி அவள்மேல் காட்டும் அக்கறையே ஆதியின் நிலைப்பாட்டை தெளிவாய் விளக்கிட, ஆதியே ஒரு முடிவை எடுக்கட்டும் என்ற படி அவரும் அமைதியானார்.

காரின் சாதாரண வேகம் கூட இல்லாமல், அருகில் செல்லும் சைக்கிள் கூட தங்களை தாண்டி செல்வதை உணர்ந்த அஞ்சலி, லேசாக தலை திருப்பி பார்க்க, பாதையை விடுத்து, பார்வையை அஞ்சலி மேல் பதித்தவன், ஆமையை விட மெதுவாக சென்று கொண்டு இருந்தான்.

“கார்ல வேகமா போனா தெய்வ குத்தம் ஆகிடும்னு யாராவது சொன்னார்களா? சைக்கிள் காரன் எல்லாம் நம்மளை ஓவர் டேக் பண்ணி போறான். ஸ்பீடா போங்க” என்றாள் லேசாக சிணுங்கிய படி.

“என் மேல கோவமா அஞ்சலி? நேத்து நடந்ததை இன்னும் நீ மறக்கலயா?” பாவமாக முகத்தை வைத்து கேட்டான் ஆதி.

“கோவம் எல்லாம் இல்லங்க. இதெல்லாம் எப்படி தாண்டி வர போறோம்ன்ற பயம். எல்லாம் நல்ல படியா முடியணும்ன்ற ஆசை. அவ்வளவு தான். நம்ப முன்னாடி இருக்குறது ரொம்ப பெரிய பிரச்சனை. அதை எப்படி சமாளிக்க போறோம்னு தெரியல” என்றாள் கலங்கிய படி.

“நாம சேர்ந்தே இருந்தா எல்லாத்தையும் தாண்டி வந்துடலாம் அஞ்சலி. கொஞ்சம் பொறுமையும் நெறைய நம்பிக்கையும் வேணும் அவ்வளவு தான். அது நம்ப ரெண்டு பேருக்குமே நெறைய இருக்குனு எனக்கு தெரியும். பயப்படாத அஞ்சலி” என்றான் அவளின் ஒரு கையை இதமாய் வருடி, அழுத்தமாய் நம்பிக்கையை விதைத்த படி.

“ஆமா, நாம எங்க போறோம்? யாராவது நம்மளை ஒன்னா பார்த்துட்டா தேவை இல்லாமல் பிரச்சனை தானே வரும்” என்றாள் அஞ்சலி.

அதற்கு எதையோ பதிலளிக்க முயன்றவனின் பார்வைக்கு, தூரத்தில் ஏதோ பரிச்சயமான கார் ஒன்று நிற்க,

“இது யாரோட கார்? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே” அவன் யோசிக்கும் போதே, அதில் இருந்து வெற்றி இறங்க,

“அட வெற்றி. இவன் இங்க என்ன பண்றான்” ஆதி யோசித்து கூட முடிக்கும் முன்பே, வெற்றியுடன் சேர்ந்து இறங்கினாள் ஸ்வாதி.

“இவங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணுறாங்க? எலியும் பூனையும் ஒண்ணா இருக்க கூடாதே. ஏதோ சரி இல்லையே” யோசித்து கொண்டு இருந்தவனிடம்,

“வெற்றி அண்ணா அங்க நிக்குறாரு பாருங்க. வாங்க அவர் கிட்ட போய் பேசலாம்” உற்சாகத்தில் குதித்தாள் அஞ்சலி.

“அங்க வெற்றி மட்டுமா இருக்கான்? ஸ்வாதியும் இருக்கா. இப்போ அவுங்கள நாம போய் கண்டிப்பா பார்த்தே ஆகணுமா” நக்கலாய் கேட்டான் ஆதி.

அதுவும் சரி தான் என்று அஞ்சலி அமைதியாகி விட, ஏனோ வெற்றியையும் ஸ்வாதியையும் ஒன்றாய் பார்த்ததில் ஏதோ பொறி தட்டியது ஆதிக்கு.

Advertisement