Advertisement

ஸ்வாதியின் அந்த புரியா நடவடிக்கை சூர்யாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், அவர்களுக்குள் இருக்கும் அந்த சொல்லப்படாத அன்பு அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை.

“நேத்து வரைக்கும் சின்ன பிள்ளைங்க மாதிரி ரெண்டு பேரும் விளையாடிகிட்டு தானேடா இருந்தீங்க. கல்யாணம்னு சொன்னதும் தான் ரெண்டு பேரோட காதல் வெளிய வருதா. இருக்கட்டும் இருக்கட்டும். எத்தனை நாளைக்கு தான் நீங்களும் நடிக்குறீங்கன்னு நானும் பாக்குறேன்” முடிவெடுத்தவனுக்கு அஞ்சலியை நினைக்கும் போது தான் கவலையாக இருந்தது.

“பிறந்ததுல இருந்து கஷ்டத்தை மட்டுமே பார்த்த பொண்ணு கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்குதேன்னு நேத்து கூட தாயம்மாள் சந்தோச பட்டாங்க. அதுக்குள்ள அதை கெடுக்குற மாதிரியே நடந்துடுச்சே” வருந்தியவன்,

“சரியோ தப்போ, அஞ்சலி என்னை அண்ணாவா ஏத்துக்கிட்டா. இனி அவ வாழ்க்கைல வர எல்லா பிரச்னைக்குமே நான் அவ கூட இருப்பேன். பிரச்சனை ஆதியா இருந்தா கூட நான் அஞ்சலிக்கு சாதகமாக தான் இருப்பேன்” உறுதி பூண்டவன், சில நொடிகள் மௌனத்தில் கழிக்க,

எதர்ச்சியாக அவனின் பார்வை கருவறையில் உறையும் கடவுளின் மேல் பட,

“யார் சந்தோசமா இருந்தாலும் உங்களுக்கு பிடிக்காதுல. உங்களையும் நம்புறாங்க பாருங்க. அவுங்கள சொல்லணும்” என்றவனுக்கு கடவுளின் மேல் இல்லாத அந்த நம்பிக்கை, மேலும் குறையவே செய்தது.

வெற்றியை தேடி சென்ற ஸ்வாதியின் கண் பார்வைக்கு அகப்படாமல் எங்கோ அமர்ந்து இருந்தான் வெற்றி. எப்படியோ அரைமணி நேர தேடலுக்கு பிறகு கோவிலில் பின் புறம் இருக்கும் அந்த ஆலமரம் அருகே அமர்ந்து இருந்தவன், கைபேசியில் எதையோ பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தவனின் முகத்திலோ எத்தனை வாட்டம். அவனை நெருங்கியவள்,

“இங்க என்ன பண்ணுற. உன்னை எங்க எல்லாம் தேடுறது. சொல்லாம கொள்ளாம இங்க வந்து என்ன பார்த்துட்டு இருக்க” என்றவள், அவன் கைபேசியை எட்டி பார்க்க முயற்சிக்க, அதற்குள் சுதாரித்தவன் கைபேசியை அணைத்து வைத்து கொண்டான்.

“நீ எதுக்கு என்னை தேடுன. உன்னோட கல்யாணத்தை அறிவிச்சி இருகாங்க நீ என்னடானா இங்க வந்து இருக்க ” என்றவன் கேள்வியாய் அவளை பார்க்க,

“இதில் எனக்கு சம்மதம் இல்லை என்று ஏதாவது ஒரு இடத்தில் சொல்லி விட மாட்டாளா” என்ற ஏக்கம் மிகுதியாகவே இருந்த போதும், இறுதியில் அவனுக்கு கிடைத்தது என்னமோ ஏமாற்றம் மட்டுமே.

“அது இருக்கட்டும், நீ இங்க உக்காந்து போன்ல அப்படி என்ன பார்த்துட்டு இருக்க. எனக்கும் காட்டு” என்றாள் எதோ அது தான் முக்கியம் போல.

“இப்போ அது உனக்கு தேவை இல்லாத விஷயம். நீ போய் உன் நிச்சயத்துக்கு தயாராகு” என்றவன் அதற்கு மேல் அவ்விடம் நின்றால், நின்றே விடுவேன் என்ற இதயத்தின் மிரட்டலுக்கு இணங்க அங்கிருந்து சென்றும் விட்டான்.

ஏனோ வெற்றியின் இந்த ஒதுக்கம் வருந்தவே செய்தாலும், வெற்றியின் பால் தனக்கு இருக்கும் அந்த அன்பை இன்றும் கூட உணர முடியவில்லை அவளால். அது அல்லாமல் ஆதியுடன் தனக்கு திருமணம் என்பதையே எதோ கடமை போல் கருதியவளுக்கு, வேறு எந்த உணர்வும் இப்போதைக்கு தலை தூக்கவே இல்லை.

என்றும் தன்னை வம்பிழுத்து அழ வைக்கும் வெற்றி, இன்று இனிமையாய் தன்னுடன் பேச, அதனை முழுமையாய் அனுபவிக்கவும் கூட முடியவில்லை ஸ்வாதியால்.

மறுபுறம், கண்ணில் நீருடன் செல்லும் பாதை அறியாது எங்கோ ஓடி கொண்டு இருந்தவளை நிலைப்படுத்திய ஆதி.

“என் கூட வா” என்றவன் அந்த இருள் சூழ்ந்த வேளையில், அஞ்சலி கை பற்றியவன், காரில் எங்கோ அழைத்து சென்றான்.

இருள் சூழ்ந்த வேளையில்,  அந்த காரின் ஒளியில் அது எதோ ஒரு கட்டிடத்தின் முன் வந்து நின்று இருக்கிறது என்பது மட்டும் நன்கு புரிந்தது அஞ்சலிக்கு. அது சூர்யாவின் இல்லம் என்பதை புரிந்து கொள்ளவும் அதிக நேரம் எடுத்து கொள்ளவில்லை அவள்.

கார் நிற்கும் முன்பே, அதில் இருந்து குதித்தவள், நொடியும் தாமதிக்காமல் வீட்டிற்குள் ஓடியவளை தடுக்க முயற்சித்தவன், உள்ளே சென்று பேசி கொள்ளலாம் என்று எண்ணியவன் தானும் விறுவிறுவென காரை விட்டு இறங்கியவன், தன்னால் முடிந்த வேகத்தை நடையில் கட்டியவன், அஞ்சலியின் அறையை அடைய அதிக நேரம் எடுத்து கொள்ளவில்லை.

ஜன்னல் அருகே நின்று கொண்டு இருந்தவள், மனத்திலோ எத்தனை போராட்டமும், குமுறலும். கண்ணில் தேங்கி நிற்கும் கண்ணீரை வழிய விடாமல் தடுக்க அவள் பட்ட பாடுகள் அவளுக்கு மட்டுமே வெளிச்சம்.

சில பல வினாடிகள், அவ்விடத்தை விசும்பல் சத்தமே ஆக்கிரமித்து கிடக்க ஒரு கட்டத்திற்கு மேல் அவளின் விசும்பலை ஏற்று கொள்ளமுடியாத ஆதி,

“அஞ்சலி ஒரு தடவை என்னை பாரேன். நான் சொல்லுறத ஒரே ஒரு முறை மட்டும் கேளு. என்னை பாரு அஞ்சலி. இந்த பக்கம் திரும்பேன்” என்றவனின் கெஞ்சலுக்கு தான் அஞ்சலியிடம் இருந்து எந்த பதிலும் வரவே இல்லை.

ஜன்னல் வழி வாசலை வெறித்தவளை நெருங்கியவன், அவள் தோள் தொட்டு தன்னை பார்க்கும் படி நிற்க வைத்தும் கூட, அவளோ விழியை நிலத்தில் பதித்தவள் உன்னை பார்க்கவே மாட்டேன் என்று வாட்டி கொண்டு இருந்தாள் ஆதியை.

“ஏதாவது பேசு அஞ்சலி.  உன்னோட இந்த மௌனமும், இந்த கண்ணீரும் என் தைரியத்தை எல்லாம் உடைக்குது. என்னை திட்டணும்னா திட்டு. ஆனா நான் சொல்ல வரதை ஒரே ஒரு தடவை கேளு” என்றான் இம்முறையும் பொறுமையாக.

அவன் விழி நோக்கியவள்,

“என்னை என்னோட ஊருக்கே அனுப்பி வெச்சிடுறீங்களா? நான் இதுக்கு மேல இங்க இருந்தா உங்களுக்கு தான் தேவை இல்லாத சிரமம். என்னை அனுப்பி வெக்க முடியுமா? ” என்றாள் அழுது கலங்கிய கண்களுடன்.

அவளின் வார்த்தையில் முகம் சிவந்தாலும், அவளின் நிலை உணர்ந்தவன்,

“இப்போ எதுக்கும்மா இப்டி எல்லாம் பேசுறே. இது எதுவுமே எனக்கு தெரியாது. அவரு கூட்டத்தில  அப்படி ஒரு அறிவிப்பு தருவருன்னு நான் எதிர் பாக்கவே இல்லை” என்றவனை மேலும் தொடர விடாமல் தடுத்தவள்,

“நீங்க அதிகம் குழப்பிக்க வேணாம். எதையும் யோசிக்காம கட்டுன இந்த திடீர் தாலி ஒரு போதும் உங்களோட வாழ்க்கைக்கு தடையாய் அமையாது. உங்க பேரையும், உங்களோட இருந்த இந்த ஒரு வர நினைவுகளையும் வெச்சிக்கிட்டு நான் வாழ்ந்துடுவேன். என்னை பத்தி நீங்க கவலை படவேணாம்” என்றவளை மேலும் பேச விடாமல் தடுக்க நினைத்தவன்,

“மறுபடியும் இதையே பேசாத அஞ்சலி. உன்னை அப்படியே விட்டுட்டு போக உன்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரல. வாழ்க்கை மொத்தமும் உன் மடியிலேயே கழிக்க தான் நான் ஆசைபடுறேன். இன்னொரு தடவை இதே போல பேசாத” என்றான் கிட்டத்தட்ட மிரட்டும் தோணியில்.

“அது இல்ல.. அது வந்து… ” எதையோ பேச வந்தவளை தன் ஒற்றை கை உயர்த்தி அமைதியாக்கியவன்.,

“எனக்கு உன்னோட நிலைமை புரியுது அஞ்சலி. இப்டி ஒரு சூழல்ல இவ்வளவு பொறுமையா யாருமே இருக்க மாட்டாங்க. ஆனா எனக்கும் கொஞ்சம் டைம் குடு. எங்க அப்பா சொன்ன மாதிரி ஸ்வாதியை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்கு ஒரே ஒரு மனைவி அது நீ மட்டும் தான். கொஞ்சம் நம்பிக்கையும், அவகாசமும் எனக்கு குடு. எதுவும் தப்பா போகாது. தைரியமா இரு” என்றான் அஞ்சலியின் கையை தன் கைக்குள் வைத்து  உறுதியாய் கூறிய படி.

ஏனோ அவன் வார்த்தையில் துவண்டு கிடந்த மனதிற்கு சிறு நம்பிக்கை ஒளி விட்டு எரிய, அமைதியானவள்,

“அப்பாவை எப்படி சமாளிக்க போறீங்க? அவருக்கு ஜாதி நம்பிக்கை அதிகம் போல இருக்கே. அவரை எப்படி சமாளிக்க போறோம்” என்றவள் முகமும் கூட வாடியே இருந்தது, ஆனால் இதுவரை இருந்த கலக்கம் துளியும் இல்லை.

அதிலும், உன் அப்பா என்று பிரிக்காமல், அப்பா என்று அவளும் அவருக்கு தரும் மரியாதையும், அன்பும் ஆதியை மெய்சிலிக்கவே வைத்தது.

பதிலேதும் தராமல் எதையோ யோசித்த படி இருக்கும் ஆதியை, தோள் தொட்டு உலுக்கி,

“என்ன பண்ண போறோம். பதிலே சொல்லாம இருந்தா எப்படி?” என்றாள் லேசாக கடுகடுத்த படி.

ஏனோ வருத்தம் நீங்கி, முகத்தில் மறைந்து ஒளிரும் அந்த சிறு கோவத்தை பார்க்க பார்க்க ரசிக்கவே செய்தான் ஆதி. அதே பாசத்தில் அவளை தன் மார்போடு அணைத்தவன்,

“எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்குறேன். அப்பாவை சமாளிக்குறது என்னோட பொறுப்பு. இதே மாதிரி நீ எப்பவும் என் மேல நம்பிக்கை மட்டும் வெச்சி இருந்தாலே போதும்” என்றவன் மேலும் அவளை தன் நெஞ்சோடு இறுக்க, அந்த நிமிடத்தை தன்னுள் நிறைத்து கொண்டவள்,

“ஹ்ம்ம்ம்” என்று மட்டும் பதிலளித்தவள், மேலும் அந்த நிமிடத்தில் கரையவே செய்தாள்.

அடுத்து இரண்டு மணிநேரம் ஆதி அஞ்சலியுடன் கழித்து விட்டு, சிவகாமியிடன் வந்த ஆதி,

“அத்தை இப்பவும் என்னோட மனைவியை தான் இங்க விட்டுட்டு போறேன். எங்க அப்பா கோவில்ல பண்ண ட்ராமா எல்லாம் நடக்காது. அதுவரைக்கும் அஞ்சலியை கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க” என்றான் பேச்சு திடமாய்.

“இது நீ , உன் அப்பா , அஞ்சலி சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்ல ஆதி. ஸ்வாதியும் மறைமுகமா இதுக்குள்ள வந்துட்டா. அவளும் கஷ்ட பட கூடாது, அஞ்சலியும் இதுல வருந்த கூடாது. எது பண்ணாலும் யோசிச்சி கவனமா பண்ணு” என்றார் சிவகாமி.

‘சரி’ என்றவன், இரவு எட்டு மணி போல அவ்விடம் விட்டு கிளம்பினாலும், அன்றைய நாள் பொழுதின் நிகழ்வுகள் அனைத்துமே சூர்யாவை குழப்பி கொண்டு தான் இருந்தது.

வெற்றியின் வாட்டத்தை காண முடியாத ஸ்வாதியும், அஞ்சலியின் கலக்கத்தை ஏற்று கொள்ள முடியாத ஆதியும் இவர்கள் நால்வரின் காதலும், அதனால் நடக்க இருக்கும் சண்டைகளையும் நினைத்தவனுக்கு மனதில் பயம் எட்டி பார்க்கவே செய்தது.

“மொதல்ல வெற்றியும், ஸ்வாதியும் அவுங்க மனசுல இருக்குறத உணரணும். அதுக்கு அப்றம் சொல்லணும். இந்த கல்யாணம் நிக்கணும். அஞ்சலி , ஆதி விஷயம் வீட்டுக்கு தெரியணும். இதெல்லாம் எப்படி நடக்க போகுதுன்னே தெரியலையே” குழம்பிய குட்டையாய் கிடந்த சூர்யாவை மேலும் குழப்ப வந்து சேர்ந்தது அடுத்த குறுஞ்செய்தி.

“ரொம்ப குழம்ப வேண்டாம். எல்லாம் நல்லதாவே நடக்கும். எதையும் யோசிக்காம அமைதியா தூங்குங்க” என்றது அது.

அதை படித்தவனுக்கு, கோவம் வர,

“ஏய், யார் இது?  பேரை சொல்லுடா. நான் யார்னு தெரியாம என் கிட்ட விளையாடிகிட்டு இருக்க. உன்னை கண்டுபிடுச்சேனா உன்னை அங்கேயே சுட்டு தள்ளிடுவேன்” என்றான் கோவமாக.

அதற்கு கண்ணில் நீரை வைத்து சிரிக்கும் பொம்மை பதிலாக வர, அதற்கும் எதையோ பதில் அளிக்க போனவனை தடுக்கும் வகையில் வந்தது அடுத்த செய்தி.

“முதல் விஷயம், நான் டா இல்லை டி. ரொம்ப காலமா உங்களோட நேர்மையை விரும்பி, உங்களையும் காதலிச்சிக்கிட்டு இருக்கும் உங்களோட காதலி.

இரண்டாவது, எனக்கு உங்களை பத்தி எல்லாமே தெரியும். இருந்தும் நீங்க மட்டும் தான் வேணும்னு நான் உறுதியா இருக்கேன்” என்றது அந்த செய்தி.

“என்ன விளையாடுறியா? மொதல்ல ஒரு டாக்டரை போய் பாரு. எதோ ஒரு ஊர்ல உக்காந்துகிட்டு என்னை முழுசா தெரியும்னு சொல்லிறியா? யாரை ஏமாத்த பாக்குறே” என்றது சூர்யாவின் செய்தி.

அதற்கும் ஒரு வாய்விட்டு சிரிக்கும் அடுத்த பொம்மை வர, அதை தொடர்ந்து,

“உங்கள ரொம்ப திறமையான போலிஸ்ன்னு நெனச்சா. நீங்க சிரிப்பு போலீஸா இருக்கீங்க. வாட்ஸாப்ல வேற ஒரு நம்பர் வெச்சி யார் கூட வேணா பேசலாம்ன்னு உங்களுக்கு தெரியாதா. வெளிநாட்டு நம்பர் வந்தா, வெளிநாட்டு காரி உங்களுக்கு மெசேஜ் பண்ணுறான்னு ஆகிடுமா”.

உள்ளூருலயே ஒரு பொண்ணும் உங்களை திரும்பி பாக்கல. இதுல வெளிநாட்டுக்காரி கேக்குதோ” நக்கலாக வந்தது அந்த  செய்தி.

“ஏய்ய்ய்.. என்ன ஓவரா பேசுற.. வாயை ஒடச்சிடுவேன். பொண்ணா இருக்குறதால பொறுமையா பேசிட்டு இருக்கேன்” எகிறியவன்,  எப்போதும் அனைவரையும் சந்தேகத்துடன் பார்க்கும் போலீஸ் மூளை, ஏனோ தனக்கு தகவல் அனுப்புவது ஒரு பெண் தான் என்பதை உடனே நம்பியும் விட்டது.

“சரி சரி. அதை எல்லாம் நேரல பாத்துகாலம். நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுங்க” என்று வந்தது அடுத்த செய்தி.

“என்னாது கல்யாணமா!!” வாயை பிளந்தான் சூர்யா.

“ஆமாம், நம்ப கல்யாணம் தான். எப்படியோ உங்க ஃபிரண்ட் ஆதித்தனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, அடுத்து வெற்றிக்கு கூட கல்யாணம் ஆக போகுது.

இதுக்கு அப்பறம் ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணுற அளவுக்கு உங்களுக்கு திறமை இல்லை. அதனால போனா போகுதுனு உங்களுக்கு வாழ்க்கை தரலாம்னு நான் முடிவு பண்ணி இருக்கேன்.

வெற்றி கல்யாணத்தோட சேர்த்து நாமலும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” நேரடியாக கேட்டது அந்த குறுந்செய்தி.

இம்முறையும் அதிர்ந்தவன்,

“ஏய்ய்ய் என்ன நீ விட்டா பேசிட்டே போறே. என் கையில சிக்குன உன்ன என்ன பண்ணுவேன்னே தெரியாது” மிரட்டுகிறேன் என்ற பெயரில் எதையோ செய்து கொண்டு இருந்தான் சூர்யா.

“மொதல்ல தாலி கட்டுங்க. அதுக்கு அப்புறம் என்ன செய்யலாம்னு ரெண்டு பெரும் யோசிப்போம். தாலி கூட ரெடி. மாப்பிளை தான் முரண்டு பிடிக்குறாரு” என்றது அடுத்த செய்தி.

“இவள..” பல்லை கடித்தவன்,

“உனக்கு அவ்வளவு தான் மரியாதை. இதுக்கு அப்பறம் எனக்கு மெசேஜ் பண்ண. அவ்வளவு தான்” என்றான் சூர்யா.

“சரி சரி. டென்ஷன் ஆகாதீங்க மாம்ஸ். இப்போ நீங்க சூடா இருக்கீங்க. நல்ல பிள்ளையா இப்போ படுத்து தூங்குங்க. நாளைக்கு காலைல நாம எங்க கல்யாணம் பண்ணிக்கலாம்னு பொறுமையா பேசலாம்” என்றது அடுத்த செய்தி.

“என்னாது கல்யாணமா?” டைப் செய்யும் போதே,

“குட் நைட் மாம்ஸ்” என்று ஆப்லைன் சென்று விட்டது அந்த எண்.

“யாருடா இது. புயல் வேகத்துல வந்தா. என்னென்னமோ பேசுனா. இப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு தூங்க சொல்லுறா. கலி காலம்டா சாமி. இருக்க பிரச்சனைல இது வேறயா” தலையில் கைவைத்தபடி அமர்ந்தவனுக்கு, தூக்கம் துளியும் வராமல், படுக்கையில் புரண்ட படி கிடந்தான் சூர்யா.

Advertisement