Advertisement

அத்தியாயம் 15..

 காதல் மனைவியை விஐபி சுவிஸ் நாட்டுக்கு ஹனிமூன் அழைத்து சென்றான்..

இருவருக்கும் இடையே திருமணம் பேசிய நாட்களில் இருந்து ஹனிமூன் செல்வதை பற்றி திட்டமிட்டு அவளிடம் பாஸ்போர்ட் மற்றும் வீசா எடுப்பதற்குரிய ஆவணங்களை வாங்கி அதற்கு உரிய முறையில் விண்ணப்பித்து இரண்டையும் பெற்றுக்கொண்டான்..

  சென்னை மாநகரத்தை தாண்டி எங்கும் சென்று இருக்காதவள் வெளிநாடு சென்று கணவனுடன் வீதியில் கைகோர்த்து சந்தோஷமாக ஒவ்வொரு இடத்தையும் ரசித்து ரசித்து சுற்றிப் பார்த்தாள்..

அவள் இந்த பூமியில் வாழும் காலம் எவ்வளவோ அது அவனுக்கும் தெரியாது.. இன்று அவள் முகத்தில் தன்னை கரம் பிடித்ததால் இருக்கும் சந்தோசத்தால் வந்த புன்னகை அவள் வாழும் காலம் வரை வாடாமல் அந்த புன்னகை நிரந்தரமாக இருக்க வேண்டும். என நினைத்துக் கொண்டான்..

 சேர்ந்தார் போல் ஒரு நிமிடம் கண்மணி அவள் கண்ணால் ஒரு பொருளை ரசித்துப் பார்த்தாலே அந்த பொருள் அடுத்த நிமிடம் அவள் கையில் இருக்கும்..

 அவளுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டான்..

 அழகிய மாலை பொழுது.. அந்த ரம்யமான பொழுதை அவர்கள் காதலால் இன்னும் அழகாக்கினார்கள்..

“ என்ன தங்கமே ரொம்ப அமைதியா வாரிங்க.. என்னடாப்பா அப்படி அவ்வளவு சிந்தனை.. என்ன இந்த சுவிஸ் நாட்டையே விலை பேசலாம் என்ற எண்ணமா?.. அம்மணியின் சித்தமே அடியேனின் பாக்கியம்.. நீங்க சொல்ற பேச்சுக்கு மறு பேச்சே இல்லை.. சொல்லுடா என்ன இவ்வளவு யோசனை?.. ” என்றான்..

“ ஒன்னும் இல்லங்க.. இப்படி உங்களை கல்யாணம் பண்ணி இவ்ளோ பெரிய நாட்டுக்கு நான் ஹனிமூன் வந்து சுத்தி பார்ப்பேன்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கவில்லை.. நினைக்காதது நடக்கும் போது வரும் சந்தோஷத்தை எனக்கு வெளிக்காட்டிக்க தெரியல.. சாதாரணமான என் வாழ்க்கைக்கு இந்த உயரமான வாழ்க்கை அதிகமோன்னு எனக்கு தோணும்.. ஆனா நான் உங்க மேல வச்ச காதல் சாதாரணமானது இல்லை.. இதே மாதிரி இந்த விஐபி ஒரு சாதாரண குடும்பத்துல அதாவது எங்களை மாதிரி ஒரு வறுமை பட்ட குடும்பத்துல பிறந்த ஒரு திறமையான சிங்கரா இருந்தாலும் இதே அளவு என்னோட காதல் இருக்கும்.. உங்க குரலில் பாடல் கேட்டால் எவ்வளவு பெரிய கவலை சோகமா இருந்தாலும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.. இந்தக் குரலில் இருந்த மயக்கம் நான் நினைக்கும்போதெல்லாம் நேர்ல பாட வச்சி கேக்கணும்னு தீவிரம் வந்தது அந்த தீவிரம் காதலா மாறியது.. ஆனாலும் உங்ககிட்ட தெரியப்படுத்தி உங்க பக்க காதலை வாங்கணும்னு நான் நினைத்ததில்லை.. கண்மூடி திறக்கிறதுக்குள்ள எல்லாமே வேகமா நடந்ததுவிட்டது.. அதைப்பற்றி தான் யோசிச்சிட்டு இருக்கேன்.. எப்படி என் வாழ்க்கைல இந்த மேஜிக் நடந்தது என்று.. ” கூறி கணவனை மையலாக பார்த்து அவன் தலையை கோதிவிட்டாள்..

 அவள் தலைக்கோதிய கையை எடுத்து அதில் முத்தம் பதித்துவிட்டு.. “ அடடே..! என் தங்கத்தின் குட்டி மூளையில இவ்வளவு விஷயம் ஓடுதா என்ன?.. வாழ்க்கையே ஒரு மேஜிக் தானே.. யார் யாரிடம் வந்து சேரனும் என்று எழுதி இருக்கோ அதுதான் நடக்கும்.. அப்படி அந்த எழுத்து மட்டும் இல்லன்னா எவ்வளவுதான் உயிருக்கு உயிரா காதலிச்சாலும் அந்த காதல் கடைசி வரை சேராது.. காதலர்கள் பிரிவதற்கு இது தான் காரணம்..

 அதுதான் கணவன் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லுவாங்க.. அப்படிதாண்டி எனக்கு நீ அமைஞ்சிருக்க.. உனக்கு நான் அமைந்திருக்கேன்.. இதுல சந்தேகப்பட என்ன இருக்கு.. நம்ம ஜோடி சேரனும்னு எழுதி இருக்கு. அதுதான் அந்த கடவுள் உன்னை என் கண்ணுல காட்டி இருக்கார்.. பார்த்ததுமே உன்னை எனக்கு பிடிச்சிருச்சு.. நீதான் என்று தெரியாமலே நீ அனுப்பிய விஷஸ் எனக்கு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்தது.. அப்புறம் தான் உன்னை தேட ஆரம்பிச்சேன்.. எங்க அம்மா மூலம் உன்னை கண்டுபிடிச்சேன்.. இதுதான் மேட்டர் அவ்வளவு தான் சிம்பிள்.. நமக்கு பாப்பா வரும் வரைக்கும் மாதம் ஒரு முறை நம்ம வேற வேற நாடுகளுக்கு ஹனிமூன் போகணும்.. உனக்கு தெரியாததை தெரியப்படுத்தி உனக்கு எல்லாத்தையும் சுத்திக் காட்டணும்.. அப்படி அவுட்டிங் வர உனக்கு சம்மதமா?. தங்கம்.. ” என்று கேட்டுக்கொண்டே அங்கே இருந்த ஒரு ரெஸ்டாரண்டில் காபி குடிப்பதற்கு இருவரும் போய் ஒரு மேசையில் அமர்ந்தார்கள்..

“ என் விஐபி சாரோட வர எனக்கு கசக்குமா என்ன?.. கட்டாயம் வருவேன்..” என்றாள் சந்தோசமாக..

“ நீ என்னடா சாப்பிடுற?.. இந்த ரெஸ்டாரன்ட் காபி ரொம்ப வித்தியாசமான டேஸ்டா இருக்கு.. ட்ரை பண்ணி பாக்குறியா?.. ”

“ ம்ம் பண்ணலாமே.. அப்போ நீங்க..” என்றாள்..

“ எனக்கும் அதே காபி தான்.. நாம வந்து ரெண்டு நாள் ஆச்சு.. இன்னும் சரியா வீட்டுல பேசல.. இங்க காபி குடிச்சிட்டு நேர ஹோட்டல் போயிடலாம்.. போய் அம்மா அத்தை எல்லாரோடையும் பேசலாம் சரியா?..” என்றான்..

“ சரிங்க.. ஆனால் எனக்கு அதுக்கு லஞ்சம் வேணும்.. ”

“ என்னது லஞ்சமா?. நீங்க ரொம்ப மோசமான மனைவியா இருக்கீங்க போல?.. லஞ்சம் எல்லாம் கொடுத்து எனக்கு பழக்கமில்லை. என்ன பண்ணலாம்.. நீயே சொல்லு..”

“ அப்படி என்ன நான் பெருசா கேட்டுட்ட போறேன்.. எல்லாம் என்னைக் கவர்ந்த உங்க குரல்ல ஒரு பாட்டு கேக்கணும்.. அவ்வளவு தான் சிம்பிள்… ” என்றாள்..

“ ஓஹோ.. இவ்வளவுதானா?.. நானும் என்னவோ ஏதோன்னு நினைச்சுட்டேன்..” என்றான். முகத்தில் குறும்பு புன்னகை தாண்டவம் ஆடியது..

“ நினைப்பீங்க சாரோட நினைப்பெல்லாம் எப்பவுமே அங்க தான் போகுது..” என்றாள்..

“ அப்புறம் என்னடி.. கோவில் தரிசனத்துக்கா வந்திருக்கோம்.. பய பக்தியா இருக்க.. ஹனிமூன் வந்தால் நினைப்பு எல்லாம் அங்க மட்டும் தான் இருக்கும்.. நினைப்பு அங்க இல்லாட்டி தான் பிழை.. ” என்றான்..

“ ஏங்க நான் ஒன்னு கேட்கணும் கோவிக்க மாட்டிங்களே..”

“ கோவமா? எனக்கா? அதுவும் உன் மேலயா?.. வாய்பே இல்லை ராணி.. என்னன்னு கேளுடா..” என்றான்..

“ இங்கே இருந்து ஊருக்கு போனதும் முன்ன மாதிரி நான் பொட்டிக் போகலாமா?.. உங்க மதிப்புக்கும் மரியாதைக்கும் பெருமைக்கும் நான் இந்த வேலை செய்வது உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்க.. உங்க பேருக்கு எந்த ஒரு அவச்சொல்லையும் தேடித்தர எனக்கு விருப்பம் இல்லை.. நீங்க என்ன சொல்றீங்க?.. உங்க முடிவு தான் பைனல்..” என்றாள்..

“ அடியே..! என் செல்ல பொண்டாட்டி.. இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி கல்யாணம் நடந்ததால் நீ காலங்காலமா ஆசையா பிடிச்சு செய்து வந்த உன்னோட சுய தொழிலை எனக்காக ஏன் நீ விடனும்?.. கல்யாணம் முடிஞ்சதும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கணும் என்று ஏன் சொல்றாங்க?.. பிள்ளைகளுக்கு தாய் தகப்பனிடம் சொல்ல முடியாத சில விஷயங்கள் இருக்கும்.. ஆனால் கணவன் மனைவியிடையில் சொல்ல முடியாது என்ற விஷயம் இருக்க வாய்ப்பு குறைவு.. அதாவது திருமணத்துக்கு பின் நடக்கிற விஷயம்.. பாஸ்ட் இஸ் பாஸ்ட் தான்.. மனைவிக்கு ஒரு விஷயம் படிச்சிருக்கு அதை செய்யணும் என்றால் கணவனிடம் அதை சொல்லணும்.. மனைவிக்கு ஒரு விஷயம் சரியா இருக்கிறது கணவனுக்கு தவறா படலாம்.. அதில் இருக்கிற பாதகங்கள் தெரியாம இருக்கலாம்.. கணவன் கண்ணோட்டத்துல பாதங்களை கொஞ்சம் அலசி செய்யலாமா கூடாதா என்று பேசி முடிவெடுக்க வசதியா இருக்கு.. பாதகம் அதிகமா இருக்குன்னா செய்யாம இருக்கிறது நல்லது.. சாதகம் அதிகம்னா கணவனே சந்தோசமா தன் மனைவியை ஊக்கப்படுத்துவான்.. அதுக்குத்தான் அப்படி பெரியவங்க சொல்றதே தவிர கணவனுக்கு பிடிக்காதது செய்யக்கூடாது.. அடிமையா வாழனும்னு அர்த்தமில்லை..

 அதுவே உன்னோட விஷயத்தை எடுத்தால் ஆடை அலங்கார வடிவமைப்பு உனக்கு ரொம்ப பிடிச்சு நீ பண்ணுற வேலை.. அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க நினைக்க கூடாது.. இந்த வேலையோட சாதக பாதகங்களை நல்லா அலசி ஆராய்ந்து தான் முன்கூட்டியே நீங்க இதை ஆரம்பித்திருப்பீங்க.. வெற்றிகாரமா ஓடிக்கிட்டு இருக்கிறதை ஏன் இடையில் நிறுத்தணும் தேவையே இல்லை..

இன்னொரு முக்கியமான விஷயம்.. தேடிக்கிட்டு இருந்த உன்னை என் கண்ணுல காட்டினது இந்த பொட்டிக் தான்.. அதுதான் என்னோட லவ் ஸ்டார்ட் ஆகினா இடம்.. அப்படி பார்க்க போனா என்னோட தாஜ்மஹால் அதுதான்.. எனக்கு ரொம்ப ஸ்பெஷலான இடமும் கூட.. நீ தினமும் அங்க போகணும் நானே உன்ன பிக்கப் பண்ணி டிராப் பண்ணுவேன்..

ஆனால் ஒரு கண்டிஷன்.. பாப்பா வரும் வரைக்கும் நீ பொட்டிக் போகலாம்.. அப்புறம் உன் ஹெல்த் ரொம்ப பாத்துக்கணும்.. நீ வீட்ல இருந்து பண்ணக்கூடிய வேலைகளை வரவழைத்து பண்ணிக்கோ.. அதுக்கு நான் எந்த தடையும் போட மாட்டேன்.. ஆனால் நல்லா ரெஸ்ட் எடுக்கணும்..

 உனக்கு ஒரு விஷயம் பிடிச்சிருக்கு அது சரியா இருக்கும் பட்சத்துல நீ எனக்கா அதை விடனும் என்பது அவசியமில்லை..” என்று கூறி அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டிவிட்டு இருவரும் காபி குடித்ததும் பில் செட்டில் பண்ணிவிட்டு அங்கிருந்து அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலை நோக்கி சென்றார்கள்..

 அறைக்குச் சென்று குளித்து சுத்தமாகிய பின் தாய் மீராவுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தான் விஐபி..

 ராமின் ஊருக்கு சென்றவர்கள் மீராவும் யசோதாவும் துர்கா வீட்டில் தங்கினார்கள்..

அவர்கள் அங்கே வந்ததும் துர்காவின் பாட்டி துர்கா மற்றுஅவள் கணவன் இருவரையும் சேர்த்து வைத்து ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்து விட்டு உள்ளே அழைத்து சென்றார்..

 துர்காவின் குழந்தை பருவத்திற்கு பின் அந்த வீட்டில் வரும் அடுத்த முதல் குழந்தை..

பெரியவர்கள் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் அடியாது..

 அனைத்து சந்தோஷமான விஷயத்துக்கும் சேர்த்து ஊருக்கே விருந்து வைப்பதற்காக விஐபி கண்மணி ஜோடி மற்றும் சீதா ராம் ஜோடியின் வரவிற்காக காத்திருந்தார்கள்..

 யசோதாவிற்கு 30 வருடத்திற்கு பின் இந்த இரண்டு நாட்களாக சொந்த ஊர் காற்றை சுவாசிப்பதே அவ்வளவு ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது..

 மீராவும் யசோதாவும் யமுனாவின் உதவியோடு அந்த ஊரில் வாய்க்கால் வரப்பு.. கோவில் என இயற்கை அழகோடு ஒன்றி போய் சுத்தி பார்த்தார்கள்..

 இருவரும் ஆளுக்கு ஒரு வீட்டில் தனித்தனியாக தனிமையை உணர்ந்து இருந்தவர்கள் இன்று ஒரே வீட்டில் ஒன்றாக பழைய கதைகள் எல்லாம் சுவாரசியமாக பேசிக்கொண்டு இளமை காலத்திற்கு திரும்பியது போல் சந்தோஷமாக இருந்தார்கள்..

 யமுனாவுக்கு அவர்களையும் அவர்களுக்கு யமுனாவையும் மிகவும் பிடித்து விட்டது..

 மீரா யமுனாக்கு தாயாகவே மாறிவிட்டார்..

 யமுனாவும் இத்தனை வருடங்களாக தாய் இல்லாத ஏக்கத்தை அவர்களோடு இணைந்து சந்தோசமாக அனுபவித்து தீர்த்துக் கொண்டாள்..

 தோழிகள் இருவருக்கும் 10 வயது குறைந்தது போல் இளமையாகவும் மனதில் சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியோடும் அந்த ஊரில் வளம் வந்தார்கள்..

 கிராமத்து மக்கள், கிராமத்து இயற்கை சூழ்நிலை, இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்கள், இப்படி இயற்கையோடு ஒன்றாக ஒன்றி அந்த சென்னை மாநகரத்து வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு எடுக்கும் அளவுக்கு வந்து விட்டார்கள்..

 அன்றைய நாளும் உற்சாகமாக ஊர் சுற்றி திரிந்து விட்டு களைப்பாக மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து குளித்து சுத்தமாகிவிட்டு டீயும் பச்சியும் சாப்பிட்டுவிட்டு அனைவரும் ஒன்றாக கூடத்தில் இருந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்..

 அப்போதுதான் விஐபி தாய்க்கு அழைப்பு விடுத்தான்..

அருகே இருந்த மேசையில் மீரா மற்றும் யசோதா இருவரின் கைபேசியும் ஒன்றாக இருந்தது..

 அனைவரும் ஒன்று கூடி பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில் கைபேசி தொல்லை பேசியாக மாறிவிடக்கூடாது என்று முன் ஜாக்கிரதியாக அங்கே வைத்திருந்தார்கள்..

 அந்த வீட்டிலும் துர்காவை தவிர யாரிடமும் கைப்பேசி இல்லை..

 வீட்டில் ராம் இல்லாததால் துர்கா வீட்டில் இருந்து தான் கணேசன் மற்றும் யமுனா இருவரும் மூன்று வேளை உணவு உண்ணுவார்கள்..

 அதனால் இரவு உணவிற்காக இருவரும் துர்கா வீட்டிற்கு வந்திருந்தார்கள்..

 மீராவின் கைபேசி அழைப்பதை பார்த்து யமுனா எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்..

 கைபேசியை வாங்கியவர் திரையில் விஐபி மற்றும் கண்மணி கல்யாண புகைப்படம் அழகாக ஒளிர்ந்தது..

 ஒரு முறை அதை ஆசையாக பார்த்துவிட்டு அழைப்பை ஏற்று காதில் வைத்தார்..

“ ஹலோ மை சன் ஹவ் ஆர் யூ?. ”

“ என்ன அம்மா முகத்துல 1000 ஃவால்ஸ் பல்பு எரியுது.. ஐ அம் பைன்.. நீங்க எப்படி இருக்கீங்க எல்லாரும் எப்படி இருகாங்க?..”

 கைபேசியின் பின் கேமராவை மாற்றி அனைவரையும் வீடியோ காள் மூலம் அவர்களுக்கு காட்டினார்..

எல்லாரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தான்.. அனைவருடனும் அவன் நலம் விசாரித்து பேசினான்.. அவனுடன் அவர்கள் பேசினார்கள்..

 கண்மணியும் அனைவரையும் நலம் விசாரித்து பேசினாள்..

 மீண்டும் விஐபி தாயிடம் பேசினான்..

“ என்னம்மா ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல?..”

“ ஹேப்பின்னு வார்த்தையால சொல்லி முடிக்க முடியாது கண்ணா..

 ரொம்ப ரொம்ப ஹாயா,ஜாலியா ஃபன் பண்ணிட்டு இருக்கோம்.. உங்க அப்பாவோட ஊர் இல்லையா கண்ணா.. அப்பாவோட பழைய விஷயங்கள் பேசி நினைவுகளோட சந்தோசமா இருக்கோம்.. நீங்க கட்டாயம் வருவீங்க தானே கண்ணா?.. ”

“ யா கண்டிப்பா ஹனிமூன் முடிஞ்சு நாட்டுக்கு வந்ததும் அடுத்த பிளைட் பிடிச்சி அங்கதான் வருவோம்.. நோ அப்ஜக்ஷன்.. ஆமா ராம் சீதா எப்ப வருவாங்க?.. ”

“ சீதா ஈவினிங் தான் போன் பண்ணினா?.. நாளையோட எக்ஸாம் முடியுதாமே, ஒரு 2 டேஸ்ல வருவதா சொன்னா.. ” என்றார்..

“ சரி மா.. ராம் தான் பாவம். தனிய யாருமே இல்லாம சீதா கைல சிக்கிட்டான்.. என்ன பாடுபடுறானோ..!” என்று மீராவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே யசோதா வந்தார்..

விஐ பி பேசியது அவர் காதிலும் விழுந்தது..

மீராவின் கையில் இருந்து கைபேசியை வாங்கி அதற்கு யசோதாவே அவனுக்கு பதில் சொன்னார்..

“ விஜய் அதெல்லாம் மாப்பிள்ளை சமத்தா என் பொண்ண சமாளிச்சிட்டுவார்.. ஆள் பாக்க தான் அமைதி. ஆனா இப்ப எல்லாம் சீதா அவர்கிட்ட அதிகமா உதாசீனப்படுத்தி பேசுறது குறைவு.. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆனா எனக்குத் தெரியாமல் இரண்டு பேருக்கு இடையில தனிப்பட்ட முறையில் சண்டை வருதோ தெரியாது.. ஆனா நீ வேணும்னா பார் விஜய்.. ராமும் சீதாவும் பேர் பொருத்தத்திற்கு ஏற்ற மாதிரி பொருத்தமான ஜோடியா உதாரணமா வாழ்ந்து காட்டுவாங்க.. மாப்பிள்ளை அப்படி வாழ வச்சுடுவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீங்க ரொம்ப கவனமா எல்லாத்தையும் சுத்தி பாத்துட்டு வாங்க.. கண்மணிக்கு புது இடம் கண்மணியை ரொம்ப கவனமா பார்த்துக்கோ..” என்று யசோதா கூறினார்..

“ சரிங்க அத்தை.. சீதா வாழ்க்கை சந்தோஷமா இருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம் அத்தை.. மாமா இடத்தில் இருந்து சீதாவோட வாழ்க்கையை நல்லபடியா அமைச்சு கொடுத்து அதை சீர்படுத்துவது என்னோட பொறுப்பு தானே.. அவங்க சந்தோஷமா இருந்தால் அதுவே போதும்..

ஆமாம் நீங்க ரெண்டு பேரும் அந்த ஊருக்கு போனதும் ரொம்ப ஜாலியா லைப் என்ஜாய் பண்றீங்க போல?.. உங்களை இப்படி பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அத்தை.. நீங்க கொஞ்ச நாளைக்கு அங்கேயே இருந்து சீதாவையும் ராமையும் சந்தோசமா வாழ வச்சிட்டு நீங்களும் சந்தோசமா இருந்துட்டு தோணும்போது இங்க வந்தா போதும்.. சரியா?..” என்றான்..

“ அது எங்கப்பா விஜய் நடக்கும். இப்ப நம்ம எல்லாரும் இங்க வந்துட்டோம்.. நீயும் வான்னு கட்டாயப்படுத்தியதால் எக்ஸாம் முடிய இங்க வருவதற்கு சம்மதிச்சிருக்கா.. படிப்பு முடிய இன்னும் அடுத்து மூணு மாதம் இருக்கு.. இங்க வந்ததும் ரெண்டு நாள் சேர்ந்த மாதிரி சீதா இங்கே தங்கினாலே பெரிய அதிசயம்.. அப்படி இருக்கும் போது எப்படி படிப்ப முடிஞ்சதுக்கு அப்புறம் சீதாவை இங்க இந்த குடும்பத்துக்கு மருமகளா வாழ வைக்க போறேனோ தெரியல.. ” என்றார்..

 மகள் வாழ்க்கையைப் பற்றிய கவலை யசோதா முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது..

“ என்ன அத்தை இப்படி திடீர்னு சோகமா இருக்கீங்க.. நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்.. மூணு மாசம் வரைக்கும் தான் சீதா மனம் மாறுவதற்கு டைம்.. அப்புறம் எல்லாரும் சேர்ந்து சீதாவை அங்கு அனுப்பினால் இரண்டு பேரும் பேசி பழகி சந்தோசமா அவங்க வாழ்க்கை வாழ ஆரம்பிச்சுடுவாங்கன்னு நம்புவோம்.. நல்லதே நடக்கும்.. சரி அத்தை அம்மா கிட்ட குடுங்க..” என்றான்..

 மீராவின் கைக்கு அலைபேசி வந்ததும் விஐபி கண்மணியிடம் அலைபேசியை கொடுத்தான்..

“ ஹலோ கண்மணி.. சந்தோஷமா இருக்கியாம்மா?.. அவனை சும்மா மட்டும் விட்டுடாத.. உனக்கு என்ன எல்லாம் பிடிக்குமோ எல்லாத்தையும் கேட்டு வாங்கி அவன் பர்சை காலி பண்ணி கூட்டிட்டு வந்துடு.. அது போதும்.. அங்க எல்லாம் புடிச்சிருக்கா?..” என்றார் மீரா..

“ நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் அத்தை.. இங்கே எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் எதுவும் கேட்காமலே அவர் எல்லாம் வாங்கி தருவார்.. நீங்க எல்லாரும் சாப்பிட்டீங்களா அத்தை?..” என்றாள்..

“ இன்னும் இல்லம்மா.. எல்லாரும் கூடி இருந்து பேசிக் கொண்டிருந்தோம்.. நேரம் போனதே தெரியல.. இனித்தான் எல்லாருக்கும் சாப்பிடனும்.. அம்மா கிட்ட பேசினியா?.. ” என்றார்..

“ அம்மா கிட்டயும் பேசினேன் அத்தை.. சீக்கிரம் போய் சாப்பிடுங்க.. மாத்திரை போடணும் இல்ல.. மறந்துடாதிங்க அத்தை.. சரி நான் வைக்கவா?..” என்று மாமியாரின் உடல் நலையை கருத்தில் கொண்டு பேசிவிட்டு வைத்தாள்..

 அலைபேசி துண்டிக்கப்பட்டதும்..

 விஐபி இருவருக்கும் தேவையான உணவை அறைக்கு எடுத்து வரும்படி அறையில் இருந்த தொலைபேசி மூலம் அழைத்து கூறிவிட்டு வைத்தான்..

 பத்து நிமிடத்தில் அவர்கள் கேட்ட உணவு வந்ததும் கண்மணி இருவருக்கும் தேவையான உணவை தட்டில் எடுத்து வைத்து கொடுக்கவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக்கொண்டே சாப்பிட்டார்கள்..

 சாப்பிட்டதும் தட்டுகளை எடுத்து கழுவி வைத்துவிட்டு விஐபி பல்கனியில் இருந்தான்.. அவன் அருகே போய் கண்மணி நின்றாள்..

 மனைவியை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு வானத்தில் இருந்த நட்சத்திரங்களை பார்த்து பேசிக்கொண்டே இருவரும் அங்கிருந்து ஊஞ்சலில் இருந்தார்கள்..

 மனைவி ஆசைப்பட்டு கேட்டதால் ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம் ’ எனும் குணா திரைப்படத்தின் பாடலை மனைவிக்காக காதலோடு உருகி பாடினான் விஐபி…

 கணவனின் காந்த குரலில் அவளுக்காக முதல் முதலாக பாடிய பாட்டை ரசித்து அதில் ஒன்றி போய் கேட்டுக் கொண்டே அவன் தோளில் சாய்ந்து இருந்தாள் கண்மணி..

 அரை மணி நேரம் அப்படியே அந்த ஏகாந்த பொழுதை ரசித்தார்கள்.. அதன் பின் அப்படியே கைகளில் மனைவியை ஏந்தி கொண்டு அறைக்கு வந்து மெத்தையில் அமர்ந்தான் விஐபி..

 முதல் இரவு அன்று அவர்கள் இருவரும் கூடியது..

 அதன் பின் மறுவீட்டு அழைப்பின் போதும் சரி இங்கு வந்த இரண்டு நாளும் சரி அவளை தொல்லை செய்யவில்லை..

 இங்கே வந்தும் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது..

 இன்று ஏனோ அவன் மனைவி அவனுக்கு வேண்டும் என்று தோன்றவும் அவளிடம் சம்மதம் கேட்பதற்காக அவள் பாதங்களில் முத்தமிட்டான்..

 கணவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டு மனைவியும் தாம்பத்திய மொழியில் சம்மதம் கொடுத்தாள்..

 மனைவியின் சம்மதம் கிடைத்ததும் பாதங்களை பிடித்து அமத்தி கொண்டே முத்தமிட்டு அப்படியே முன்னேறினான்..

 பாதத்தில் ஆரம்பித்த முத்தம் இதழில் வந்து முடிந்தது..

 இருவருக்கும் இடையே இடைவெளிகள் குறைந்து போர்வை ஆடையாகி அவர்களின் அழகிய சங்கமத்திற்கு சாட்சியாக சிருங்கார சினுங்கல்கள் சங்கீதமாக ஒலித்தது..

 கூடல் முடிந்ததும் அவளை அவன் தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்து உறங்க வைத்தான்..

 அவள் உறங்கியதும் அவன் கண்ணில் கண்ணீர் வழிந்தது..

 அவளுக்கு இருக்கும் இந்த சாபக்கேடு பற்றி தெரிந்ததும் அதை நினைத்து அவன் மனம் கலங்கியது..

அவன் எதிரிக்கு கூட இப்படி ஒரு கொடுமை வரக்கூடாது என்று இறைவனிடம் பிரார்த்தித்தான் விஐபி..

 என்னதான் பணத்திலும் சரி பதவியிலும் சரி வசதி வாய்ப்போடு இருந்தாலும் சிலவற்றை மாற்ற முடியாது..

 அதில் மரணமும் ஒன்று.. யாரின் மரணம் எப்போது என்று யார் கையிலும் இல்லை..

அது இயற்கையோடு ஒன்றியது இயற்கை விதியை மாற்ற முடியாது..

 ஆனால் விஐபி மனைவியின் மேல் வைத்திருக்கும் காதலால் மாற்ற முயற்சி செய்வான்..

 அந்த முயற்சி வெற்றி பெறுமா?.. இல்லை தோல்வி அடையுமா?.. என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

Advertisement