Advertisement

சூரியன் தன் வெப்பம் அனைத்தையும் குறைத்து கொண்டு, நிலவை வரவேற்க, குளுமையை பரவ விட்டு இருந்த அந்த அழகிய அந்தி மாலை பொழுதில்,

” அஞ்சலி, அஞ்சலி ” வீடு மொத்தம் அலசிய படி வந்தான் வெற்றி.

“அண்ணா நான் கிச்சன்ல இருக்கேன்” குரல் கொடுத்தவள், சர்க்கரை பொங்கலையும், சுண்டலையும் தனி தனி பாத்திரத்தில் போட்ட படி தன் வேளையில் மும்முரமாக இருந்தாள்.

சமையல் அறை வந்தவன்,

“உன் போன் எங்கம்மா. உன் புருஷன் உனக்கு போன் பண்ணி நீ எடுக்கலையாம். அதுக்குன்னு தூங்கிகிட்டு இருக்குற என்னை எழுப்பி, உன்னை பேச வெக்க சொல்லி ஒரே தொல்லை பண்ணி என்னை இங்க அனுப்பி வெச்சி இருக்கான்” புலம்பிய படி வந்தான் வெற்றி.

“அவருக்கு வேற வேலை இல்ல அண்ணா. நீங்க விடுங்க. நான் பேசிக்குறேன். கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு பேசுறேன்” என்றவள் அப்போதும் தன் வேளையில் தான் மும்முரமாக இருந்தாள்.

இன்றோடு அஞ்சலி ஆதியின் மனைவியாகி ஒரு வாரம் ஆகிறது. அவர்களின் உறவிலும் கூட முன்பு இருந்த தூரம் குறைந்து, நெருங்கியே இருந்தனர்.

வெற்றிக்கும் ஸ்வாதிக்கும் இடையே இருந்த தூரமும் கூட கொஞ்சம் குறைந்து, வெறுப்புகள் நீங்கி, சின்ன சின்ன செல்ல சண்டைகள் போட்டு கொண்டு அவர்களின் உறவும் இனிதே பயணித்த படி தான் இருந்தது.

சண்டையிடும் சண்டை கோழிகளை பார்க்கும் அனைவருக்குமே, டாம் அன்ட் ஜெர்ரி என்ற எண்ணமே வர, இருவரின் மன எண்ணங்கள் இவரின் கண்ணிற்குமே தெரியவில்லை. இதுவே பின்னாளில் இருவருக்கும் பிரச்சனையாக மாற போகிறது என்பதை இருவருமே யூகிக்க வில்லை.

அஞ்சலி பிறகு பேசுகிறேன் என்று மறுத்துவிட, அதில் பதறிய வெற்றி,

“அம்மா தாயே. இப்போவே போய் அவன் கிட்ட பேசு. இல்லாட்டி அவன் என்னை கொன்னுடுவான். இப்போ இப்போவே” என்றவன் அவளை துரத்தாத குறையாக அனுப்பி வைத்தான்.

அறை வந்து கைபேசியை எடுத்து பார்க்க, அதில் பதினைந்து அழைப்புகள் அதுவும் ஆதியுடையது மட்டுமே இருந்தது.

“இவருக்கு இதே வேலையா போச்சு. ஒரு தடவை கால் பண்ணி எடுக்கலைனா விடலாம்ல. இத்தனை தடவையா கூப்பிடுறது” சலித்து கொண்டவள், அவனுக்கு திரும்ப அழைக்க, அதற்காகவே காத்திருந்தவன் போல் உடனே எடுத்தான் ஆதி.

“என்னடி பண்ணிக்கிட்டு இருக்க? வெற்றி வந்துட்டான்னா?” எடுத்தவுடன் கேட்டான் ஆதி.

“உங்களுக்கு அறிவு இருக்கா. போன் எடுக்கலான இப்டி தான் அலப்பறை பண்ணுவீங்களா? கொஞ்சம் பொறுமையா இருக்க தெரியாதா?” கேள்வியாய் பதிலளித்தாள் அஞ்சலி.

“அப்படி தான் பண்ணுவேன். வெற்றி வந்தனா இல்லையா?அத சொல்லு மொதல்ல” .

“வந்துட்டாரு. இப்போ தான் விஷயத்தை சொல்லி உடனே பேச சொல்லி சொன்னாரு. அவர் பாவம் இல்லையா!! அவரை எதுக்கு தொந்தரவு பண்ணுறீங்க?” சலித்து கொண்டாள் அஞ்சலி.

“ரொம்ப தான் உன் அண்ணன் மேல பாசம் பொங்குது. அதை கொஞ்சம் எனக்காகவும் பொங்க சொல்லுடி. புருஷன் ஒருத்தன் இருக்கான்ற நெனப்பே இல்லாம போயிடுச்சி உனக்கு” மிரட்டுவதாக எண்ணி கொஞ்சி கொண்டு இருந்தான் ஆதி.

அவனின் வார்த்தைகளில் வெட்கம் எட்டி பார்க்க, பதில் அளிக்க முடியாமல் மௌனத்தில் தன் வெட்கத்தை மறைக்க நினைத்தவளை எளிதாக புரிந்து கொண்டவன்,

“அஞ்சலி. வெக்க படுறியா? ஹையோ இத பாக்க நான் நேர்ல இல்லாம போய்ட்டேன். நீ என்ன பண்ணுற நான் நேர்ல இருக்கும் போது நீ வெக்க படுவியாம். அதை நான் பார்த்து ரசிப்பேனாம்” என்றவனின் பேச்சில் மேலும் சிவக்கும் கன்னங்களை துடைத்தவள்,

“இப்போ எதுக்கு இத்தனை கால். அதை சொல்லுங்க” என்றாள் பேச்சை மாற்றும் பொருட்டு.

“எத்தனை மணிக்கு கிளம்புற. யாரோட வரன்னு கேக்க தான் போன் பண்ணேன்” என்றான் ஆதி.

“நான் வரலன்னு நேத்தே சொன்னேன்ல. இன்னைக்கு மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா எப்படி” சலிப்பு தான் அவளுக்கு.

“வந்தே ஆகணும்னு நானும் நேத்து சொன்னேன்ல. அதனால நேத்து வாங்கி குடுத்த புடவையை கட்டிக்கிட்டு வந்துடு. இதுக்கு மேல வாதம் பண்ணாதே” முடிவாய் சொன்னான் ஆதி.

“நான் எப்படி உங்க வீட்டு விஷேஷத்துக்கு வர முடியும். அங்க உங்க குடும்பம் மொத்தமும் இருப்பங்களே. எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் வரலப்பா” கெஞ்சி கொண்டு இருந்தாள் அஞ்சலி.

“இப்டி தள்ளியே இருந்தா எப்போ சேருறது. நீ வர. வரணும். அவ்வளவு தான்” என்றவன் அதோடு இணைப்பையும் துண்டித்து விட்டான்.

“சரியான பிடிவாதக்காரன். ச்சா” சலித்து கொண்டவள், நேற்று ஆதி வாங்கி குடுத்த சேலையை உடுத்தி கொள்ளவும் முடிவெடுத்தாள்.

மஞ்சள் பட்டில் அவள் இறங்கி வர, அதை எதிர்பாராத வெற்றி,

“யாரோ வரமாட்டேன்னு சொன்னாங்க. நாங்க சொல்லுற அப்போ எல்லாம் கேக்காம. இப்போ புருஷன் சொன்னதும் அவன் வாங்கி குடுத்த சேலைய கட்டிட்டு எல்லாருக்கும் முன்னாடி ரெடி ஆகி வந்து நிக்குறாங்க” வம்பிழுத்தவன் முதுகில் ஒன்று வைத்த சூர்யா.

“அந்த பொண்ணே பாவம். தயங்கி தயங்கி வரதுக்கு ஒத்துக்கிட்டா. இதுல நீ வேற எதுக்கு கலாய்க்குற” என்றவன் சில பல சாமான்களை வண்டியில் வைத்து விட்டு, கோவிலை நோக்கி புறப்பட்டனர் அனைவருமே.

அந்தி மாலை வேளையில் மக்களின் கூட்டம் கோவிலை நோக்கி படையெடுத்த படி இருக்க, நேரம் செல்லச் செல்ல கூட்டம் கோவிலின் வெளியிலும், கருவறை அருகியேயும் அதிகரித்த படியே தான் இருந்தது.

இருக்காதா பின்னே, இந்த ஊரின் மக்களின் மனதில் தனக்கென ஒரு மரியாதையை ஏற்படுத்தி வைத்து இருக்கும் மருதநாயகம் வீட்டினரின் சொந்த செலவில் நடத்த படும் ஊர் திருவிழா அது.

அதற்காக வரும் படி கட்டாயப்படுத்தி தான் ஆதி அஞ்சலியுடன் இத்துணை நேரம் மல்லுக்கட்டி கொண்டு இருந்தான். நேரத்தை விட முன்பே கோவில் வந்து சேர்ந்த ஆதிக்கு தான் இருப்பு கொள்ள வில்லை.

தான் ஆசையாக வாங்கி கொடுத்த அந்த சேலையில் தன் மனையாளை காண ஆவலாக காத்திருந்தவனின் பொறுமையை அதிகம் சோதிக்காமல், சூர்யா குடும்பத்துடன் வந்து சேர்ந்தாள் அஞ்சலி.

பச்சையும் நீலமும் கலந்த அந்த பச்சை நிற சட்டையில், அதன் நிறத்தை பொருந்தும் வண்ணம் கரை கொண்ட வேஷ்டியில் கம்பீரமாய் சுழன்று கொண்டு இருந்தான் ஆதி, பார்வையை மட்டும் நிமிடத்திற்கு ஒரு முறை வாசலில் செலுத்திய படி.

அவனின் சட்டை நிறத்திற்கு ஒத்துப்போகும் பச்சை நிற சேலையில், கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் தாலி அவளை மிளிர்விக்க, அத்துடன் ஒரு சிறு செயினும், நெற்றியை ஒளிரும் பொட்டும் , வகுடை அலங்கரித்து நிற்கும் குங்குமத்தையும் அணிந்தவள், கோவில் படியில் தோன்றினாள் ஆதியின் மனையாள்.

ராயல் நீல சட்டையில் பின்னே வந்தான் சூர்யா, தாய் சிவகாமி மற்றும் சந்தானத்துடன்.

சூர்யா குடும்பத்தின் வருகை ரகுநாத்திற்கு பிடிக்காத போதிலும், தட்ட முடியாத தந்தை பேச்சும், பேச்சை கேட்காத பிள்ளையும் இருப்பதால் எதையும் செய்ய இயலாதவர் அமைதி காக்கவே செய்தார்.

இதில் சூர்யா இந்த ஊரிலேயே பெரிய பதவியில் மாற்றலாகி பணி புரிவதால், ஊர் மக்கள் கூட இவருக்கு சாதகமாக பேச மாட்டார்கள் என்பதை உணர்ந்தவர்,

வாழ்வில் முதல் முறை, தான் பெரிதாக நினைத்த ஜாதியையும், பணத்தையும் விட படிப்பே அதிக மரியாதை பெறுவதை மனதார உணர்ந்தார் ரகுநாத். ஆனாலும் அவருக்குள் இருக்குள் இருக்கும் ஈகோ அதை வெளிப்படையாக ஒப்பு கொள்ளாமல் தடுக்க, காலமும் கூட அவரின் இந்த திடத்தை உடைத்தே காட்டுவேன் என்று உறுதியாய் தான் இருந்தது.

“எங்களுக்குள் எப்போதும் ஒத்து போகாது. நாங்கள் ஒன்றாக ஒரு இடத்தில் இருந்தாள் அங்கு சண்டை தான் வரும்” என்று வாய் கிழிய பேசும் வெற்றி ஸ்வாதியும் கூட கிட்டத்தட்ட ஒரே நிற சாயல் இருக்கும் உடையில் தான் வந்து இருந்தனர்.

வந்ததில் இருந்து இமைக்கவும் மறந்து, செல்லும் இடம் எங்கும் பின் தொடரும் ஆதியின் பார்வையை கவனிக்காமல் இல்லை அஞ்சலி, அது அன்றி ஆதியின் குடும்பம் இருக்கும் இடத்தில் அமைதி காக்க எண்ணியவள் ஆதியை திரும்பியும் கூட பார்க்கவே இல்லை.

அங்கும் இங்கும் சுற்றும் அஞ்சலியை கவனித்த ரகுநாத்திற்கு பொறி தட்ட,

“யார் இந்த பொண்ணு. இத்தன நாளா நம்ப ஊர்ல நான் பார்த்தே இல்லையே. யார் வீட்டுக்குமா வந்து இருக்க” கண்டிப்புடன் ஒலித்தது அவரின் குரல்.

அந்த குரலில் கம்பீரத்தில் தடுமாறியவள் என்ன கூறுவது என்பது புரியாமல் திணற, அதை உணர்த்த ஆதி,

“ஏம்மா பயப்படுற. யார் வீட்டுக்கு வந்து இருக்கானு தைரியமா சொல்லு” என்றவனின் பேச்சு எதை நோக்கியது என்பதும் கூட புரியவில்லை அவ்விடம் இருக்கும் யாருக்குமே.

ஆதி எதையோ கூற வருகிறான் என்பதை மட்டும் உணர்ந்த சூர்யா, சமாளிக்கும் விதமாக,

“ஆமாம்டா, நீ சொல்லுறது சரி தான். ஆனா அவளே சொன்னா நம்ப மாட்டாங்க. நீயே சொல்லி எல்லாருக்கும் புரிய வை” ஆதி பக்கமே திருப்பி விட்டு காத்திருந்தான் சூர்யா.

“என்ன சூர்யா, உன்னோட சொந்தகார பொண்ணுன்னு சொன்னா இங்க யார் என்ன சொல்ல போறா? நான் தானே ஸ்கூல்ல பாடம் சொல்லி குடுக்க ஆள் வேணும்னு கேட்டதுக்கு, இந்த பொண்ணை சேர்த்துக்க சொல்லி சொன்னியே. அதை சொல்லுறதுல என்ன இருக்கு” என்றான் ஆதி ஏதோ அனைத்தும் உண்மை போல.

இப்போது தான் ஆதி கூற வரும் விஷயம் புரிய வர, அதற்கு சாதகமாய் தலையசைத்து சமாளித்து கொண்டு இருந்தான் சூர்யா, ஆனால் நண்பர்கள் இருவரும் செய்யும் இந்த சமாளிப்பு சுத்தமாக அஞ்சலிக்கு புரியாமல், அமைதி காக்கவே செய்தாள்.

“சரி சரி. என்னவோ பண்ணுங்க” என்றவர், அனைவரின் உலகையுமே புரட்டி போட, தான் தீட்டி வைத்து இருக்கும் திட்டத்தை செயலாக்க படு ஆர்வமாய் சரியான நேரத்திற்காக காத்திருந்தார்.

அதற்குள் அவ்விடம் வந்த மருதநாயகம்,

“இங்க என்ன பண்ணுறீங்க? பூஜை ஆரம்பிக்க போகுது சீக்கிரம் வாங்க. அம்மா சிவகாமி மாப்பிளையை கூப்பிட்டுகிட்டு நீயும் வாம்மா” என்றவரின் பேச்சுக்கு இணங்க ஆதி குடும்பம், வெற்றி, ஸ்வாதி குடும்பங்கள் அனைவரும் உள்ளே நுழைய.

சூர்யாவின் குடும்பம் உள்ளே வர எத்தனித்த போது, அதை கவனித்த ரகுநாத், அவசரமாக அவர்களை நெருங்கி,

“அப்பாக்கு தான் அறிவு இல்ல. உனக்குமா இல்ல. நாங்க சாமி கும்பிட்டுட்டு போன பின்னாடி நீங்க உள்ள வாங்க” என்றார் சிவகாமிக்கு மட்டும் கேட்கும் குரலில், கூறியவர் எதுவும் அறியாதவர் போல் மருதநாயகம் அருகில் சென்று நின்று கொள்ள, வாசலில் யோசனையுடன் நிற்கும் சிவகாமியை கவனித்த ஆதி,

“உள்ள வாங்க அத்தை. என்ன யோசிக்குறீங்க” என்றான்.

“நாங்க இங்கயே நிக்குறோம் ஆதி..
உள்ள நெறைய நேர் இருகாங்க. நாங்களும் உள்ள வந்தா கூட்டமாகிடும். நீங்க சாமி கும்பிட்டுட்டு வாங்க. நாங்க அதுக்கு அப்பறம் வரோம்” என்றவர் அதோடு நின்றும் விட்டார்.

இத்துணை நாள் ரகுநாத்தை பற்றி செவிவழியே கேட்டிருக்க, இன்று தானே சுயமாக அவரின் குணத்தை கண்ட அஞ்சலி விக்கித்து தான் நின்றாள்.

“இவரை எப்படி சமாளிச்சு, எப்படி எங்க கல்யாண விஷயத்தை சொல்ல போறோம்னு தெரியலையே” முதல் முறை இந்த பயம் அஞ்சலியையும் உலுக்கவே செய்தது.

பூஜைகள் அனைத்தும் முடிந்து, அன்னதானம் வழங்க பட்டு இருக்க, கவனமாக ஆதியையும், சூர்யாவையும் மட்டுமே அன்னதானம் வழங்க வைத்தார் மருதநாயகம். இதில் பார்ப்போர் அனைவரிடத்திலும், சூர்யாவும் ஆதி போல் தனக்கு பேரன் தான் என்பதை அழுத்த பதிய வைக்க தவறவில்லை அவர்.

அன்னதானம் வழங்கி கொண்டு இருந்த நேரம் இரண்டு மூன்றும் முறை ஒலித்தது மெசேஜ் டோன், சூர்யா கைபேசியில். முதலில் அதை அலட்சியமாக விட்டவன், அடுத்து இரண்டு முறையும் அதே ஓசை ஒளிக்க, வேலை சம்மந்தமாக ஏதேனும் தகவலாக இருக்குமோ என்று எண்ணியவன், உடனே எடுத்து பார்க்க,

“ராயல் ப்ளூ சட்டையில அசுத்துறீங்க ஹீரோ சார்” என்று இருந்தது முதல் மெசேஜ்.

“ஹலோ” என்றது இரண்டாவது மெசேஜ்.

“அன்னதானம் குடுக்கும் போது வேற எந்த பொண்ணையும் ஏறெடுத்தும் பாக்காதீங்க. எனக்கு பிடிக்காது” என்றது மூன்றாவது மெசேஜ்.

அத்துடன் கண்ணில் இதயத்தை காட்டும் பொம்மை நான்காவது மெசேஜாகவும், மனதார சிரிக்கும் பொம்மை ஐந்தாவது மெசேஜாகவும் வந்து இருந்தது.

“யார்டா அது. நமக்கு இப்டி எல்லாம் மெசேஜ் பண்ணுறாங்க” எரிச்சல் அடைந்தவன், உற்று கவனிக்க, ஒரு வாரத்திற்கு முன்பு ‘ஐ லவ் யூ’ என்று மெசேஜ் வந்த அதே எண்ணில் இருந்து தான் இந்த தகவலும் வந்து இருந்தது.

அத்துடன், அந்த எண்ணை கவனிக்க, அது எதோ வெளிநாட்டு எண் போல இருக்க.

“யாரோ நம்ப கிட்ட விளையாடுறாங்க போல. நமக்கு போய் இப்டி மெசேஜ் பண்ண யாருக்கு தைரியம் இருக்க போகுது” அலட்சியமாக எடுத்து கொண்டவன். அடுத்து தன் வேளையில் மும்முரமானான்.

மறுபுறம், புதிதாய் தாவணி கட்டி இருந்ததால், ஸ்வாதிக்கு நடப்பதில் படு சிரமம் ஏற்பட, அதை வைத்தே அவளை வம்பிழுத்து கொண்டு இருந்தான் வெற்றி.

“பொண்ணுங்க போடுற மாதிரி டிரஸ் எல்லாம் உன்னை யார் போட சொன்னது. நீ எப்பயும் பசங்க போடுற சட்டை பான்ட் தானே போடுவ. உன்ன தாவணில பார்க்குற பசங்க உன்னை பொண்ணுன்னு தப்பா நெனச்சிடா என்ன பண்ணுறது” விடமாட்டேன் என்று வம்பிழுத்தவன் அன்னதானம் வாங்க சென்று விட்டான்.

கோவத்தில் முகம் சிவக்க. வேக பெருமூச்சுடன் வெற்றியை முறைத்த படி நின்று இருந்தவள்,

“இவனை எல்லாம் யார் தான் கோவிலுக்குள்ள விட்டங்களோ. நல்லா குற்றாலத்துல இருக்க வேண்டியது எல்லாம் கோவிலுக்குள்ள வந்துட்டு என் உயிரை வாங்குதுங்க. இவனை ” பல்லை கடித்தவள், கையில் வெண்பொங்கலை வாங்கி கொண்டு வரும் வெற்றியை கண்டவள் எதோ தெரியாமல் செய்வது போல, அவனுக்கு எதிரே சென்று அவன் மேல் மோதி, கையில் இருக்கும் பொங்கலை தட்டி விட்டது மட்டும் இல்லாமல்,

“வாய் பேசுனா மட்டும் பத்தாது. பாதை பாத்து நடக்கவும் செய்யணும். இல்லாட்டி இப்டி தான் ஆகும்” ஒழுங்கு காட்டியபடி ஸ்வாதி கூற, அதற்கு எதையோ கோவமாக கூற வந்த வெற்றியை தடித்தது, மைக்கில் ஒலித்து கொண்டு இருந்த அந்த குரல்.

அந்த கோவில் மண்டபத்தின் மேல் ஏறி நின்ற ரகுநாத்,

“இங்க கூடி இருக்க எல்லாரும் ஒரு நிமிடம் இங்க வாங்க. உங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்ல ஆசை படுறேன்” என்றவர் முகத்திலோ எத்துணை ஆனந்தம்.

அவரின் இந்த அறிவிப்பு அனைவரையும் திடுக்க வைத்தாலும், எதோ வில்லங்கத்தை இழுக்க போகிறார் என்பதை புரிந்து கொண்டனர் மருதநாயகமும், ஆதியும்.

கொஞ்சம் திகிலும், என்ன கூறிவிடுவாரோ என்ற எண்ணத்துடன் அனைவரும் மண்டபம் நெருங்க, தேவராஜை மேடைக்கு வரும் படி அழைத்த ரகுநாத்.

“உங்க எல்லாருக்கும் தேவராஜை நல்லாவே தெரியும். நம்ப ஊர் காரர் தான். பட்டணத்துக்கு போய் ரொம்ப பெரிய தொழில் அதிபரா உயர்ந்து இருக்காரு. அவரும் நானும் சேர்ந்து நம்ப ஊருல சக்கரை ஆலை ஒன்னு கட்ட போறோம். அதனால நம்ப ஊருல உற்பத்தி ஆகுற கரும்புகளுக்கு நாமளே விலையையும் நிர்ணயம் பண்ணுறதோட மட்டும் இல்லாமல். லாபமும் பாக்க முடியும்” என்றார் சபை நடுவே.

“யார் லாபம் பார்ப்பாங்க. இவரும் அவரோட ப்ரண்ட்டும் லாபம் பாக்க, நம்ப ஊர் விவசாயிகள் நஷ்டம் ஆகணுமா. எப்படி எல்லாம் ஏமாத்துறாரு பாரு” பொறிந்து கொண்டு இருந்தான் ஆதி.

அதற்கு மேலும் தொடர்ந்தார் ரகுநாத்,

“இந்த சந்தோஷத்தோட சேர்த்து இன்னொரு நற்செய்தியும் சொல்ல போறேன்” என்றவர் அடுத்து ஆதியை மேடைக்கு அழைத்தார், பின் ஸ்வாதியையும்.

இதில் ஒன்றும் புரியாமல் ஆதி முழிக்க, “கூப்புடுறார்ல போ ஆதி. மத்ததை அப்பறம் பேசிக்கலாம்” என்று மருதநாயகமும் கூற, தயக்கத்துடனே மேடை ஏறினான் ஆதி.

“இதோ என்னோட பையன் ஆதிக்கும், தேவராஜ் பொண்ணு ஸ்வாதிக்கும் கூடிய விரைவில் திருமணம் செய்ய நாங்க முடிவு செஞ்சி இருக்கோம். அதற்கான நிச்சயம தார்த்த விழாவும் கூடிய விரைவில் அறிவிக்க படும்” என்றார் படு சாதாரணமாக நான்கு இதயத்தில் இடியை ஒரு சேர இறக்கிய படி.

மேடையில் இருந்த ஆதிக்கு இந்த செய்தி அதிர்வை ஏற்படுத்த, அடுத்த நொடி அவனின் பார்வை தேடியது அஞ்சலியை தான்.

கண்ணில் வழியும் நீரையும் உணராமல் ஆதியை விட பல மடங்கு அதிர்ந்து, விக்கித்து போய் நின்று கொண்டு இருந்தாள் அஞ்சலி.

மறுபுறம் எதையுமே எதிர் பார்க்காத ஸ்வாதிக்கு இந்த செய்தி எந்த வித உணர்வையும் தூண்டாமல், சமநிலையில் நின்றவள் பார்வைக்கு, முகம்வாடி, சோர்ந்த மனதுடன் அவ்விடம் விட்டு செல்லும் வெற்றி பட, அப்போது பதறியவள்,

“இவனுக்கு என்ன ஆச்சு. இவன் எங்க போறான்” என்று தோன்ற, கால்கள் தானாகவே வெற்றியின் பின்னால் செல்ல,

அஞ்சலியும் கூட இதற்கு மேல் இவ்விடம் நின்றால், பலவீனம் ஆகி விடுவோமோ என்று எண்ணியவள் யாரும் அறியாமல் அவ்விடம் விட்டு நகர,

கண்ணீருடன் செல்லும் தன் மனைவியை தேற்ற பதறி கொண்டு அஞ்சலி பின்னால் சென்றான் ஆதி.

ஆனால் அவ்விடம் இருக்கும் மற்றவருக்கோ, ஆதியும், ஸ்வாதியும் இந்த திருமண செய்தியில் மகிழ்ந்து ஒன்றாக செல்வது போலவே தோன்ற, பல நாள் யோசித்து தீட்டிய திட்டம் வெற்றி பெற்ற களிப்பு ரகுநாத்தின் முகத்தில் அப்பட்டமாக ஒளிரவே செய்தது.

ஆனால் இவை அனைத்துமே சூர்யாவின் பார்வையில் இருந்து தப்பவே இல்லை. மிக சரியான நேரத்தில் கட்சிதமாக அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்தது அவனின் போலீஸ் மூளை.

சூர்யா அருகில் வந்த ஸ்வாதிக்கு, பேருக்காவது வாழ்த்துக்கள் கூற எத்தனித்தவனிடம்,

“சூர்யா, வெற்றி எங்க. நான் மேல ஏறுற வரைக்கும் இங்க தானே இருந்தான். இப்போ ஆளவே காணோம். நீ பத்தியா அவனை” என்றாள் சூர்யாவே திடுக்கிடும் வகையில், அத்துடன் நில்லாமல் வெற்றியை தேடி செல்லவும் செய்தாள் ஸ்வாதி.

“ஆதி அஞ்சலி பின்னாடி போறான்னா அதுல ஒரு நியாயம் இருக்கு. அஞ்சலியை கல்யாணம் பண்ண பஞ்சாயத்தே இன்னும் முடியல, அதுக்குள்ள மாமா இப்டி சொன்னது ரெண்டு பேருக்கும் கஷ்டமா இருந்து. அதனால சமாதானம் பண்ண ஆதி போறான்”.

“ஆனா, வெற்றி எப்படி போனா ஸ்வாதிக்கு என்ன. அவன் எங்க இருந்தா இவளுக்கு எதுக்கு அக்கறை. கல்யாண செய்தி கேட்ட பொண்ணு ஒன்னு சந்தோச படனும். இல்ல வருத்த படனும். இவ முகத்துல ரெண்டுமே இல்லையே. மாறா வெற்றி இங்க இல்லனு தானே கவலை படுறா. தப்பாச்சே”……..

நெற்றி சுருங்கி சூர்யா யோசித்து கொண்டு இருக்க, அவனின் கவலை புரிந்து, அவனை பாவமாக பார்த்து கொண்டு இருந்தது விழிகள் இரண்டு.

Advertisement