Advertisement

தன் ஆசைத் தீர ஆதிக்கு உணவு பரிமாறுவதும், அவனின் தேவை அறிந்து அதற்கு முன்பே செயல் படுவதும் என்று சுழலாய் இயங்கி கொண்டு இருந்தாள் அஞ்சலி.

உணவு முடித்து, இருவருக்கும் தனிமை தர விரும்பிய சிவகாமி, வெண்பாவை அழைத்து கொண்டு கோவிலுக்கு புறப்பட,

செல்லும் வழியில் இறங்கி கொள்ளுங்கள் என்று அவர்களை தன்னுடன் அழைத்து கொண்டான் சூர்யா. சந்தானமும் எதோ வேலையாக வெளியில் சென்று இருந்ததால், இருவருக்குமே இது மனம் திறக்கும் ஒரு வாய்ப்பாகவே அமைந்து விட்டது.

உணவை முடித்தவள் அறையில் துணிகளை மடித்தபடி சில வேலைகளை பார்த்து கொண்டு இருந்தவளை ரகசியமாய் ரசித்து கொண்டு இருந்தான் அவளின் மணாளன்.

அஞ்சலியுடன் போன் பற்றி கேட்டு, தனக்கு ஏன் இதுவரை கைபேசி எண்ணை தரவில்லை என்று சண்டையிடவே அஞ்சலி இருக்கும் அறை நோக்கி வந்து இருந்தான் ஆதி.

வாசலுக்கு முதுகை காட்டியபடி அலமாரியில் எதையோ மும்முரமாக செய்து கொண்டு இருந்தால் அஞ்சலி.

இடை வரை வளர்ந்து நிற்கும் அவளின் கேசம் வாசலில் நிற்கும் அவனை வா என்று அழைக்க, கழுத்து வழி இறங்கி, முதுகில் வழிந்தோட ஆர்வமாய் காத்துக்கிடக்கும் வேர்வை துளிகள் ஆதிக்கு ஒழுங்கு காட்டி நகைக்க,

வியர்வை காரணமாக இடை வரை வளர்ந்த கேசத்தின் ஓரிரு துண்டுகள் மட்டும் அஞ்சலை இடை வழி பாய்ந்து அவளை இடையோடு அணைத்தபடி கிடக்க, காற்றிற்கேற்ப அசைந்தாடும் தோடும், தொட்டு கொள் என்பது போல் இலைமறையாய் ஒளிரும் இடையும்,

உன் சொத்து இவள் என்ன உரக்க உரைக்கும் மஞ்சள் நிற மணமும் மாறா தாலியும் ஆண்மகனை ஒன்றாய் சேர்த்து வாட்டி வதைக்க, சத்தம் இல்லாமல் பின்னால் சென்று அவளை அணைத்து தன் கட்டுக்குள் அவளை வைத்து கொள்ள துடிக்கும் கைகளை தடுத்தவன்,

முரண்டு பிடித்து நிமிடத்திற்கு இருமுறை கட்சி மாறும் மனதையும் ஒருநிலை படுத்தியவன், பெருமூச்சொன்றை வெளியேற்றியவன்,

இவ்வளவு நேரம் எல்லை அனைத்தும் உடைத்து அஞ்சலியை ரசித்து விட்டு, நல்லவன் போல கதவை தட்டினான் ஆதி.

அதன் சத்தத்தில், அலமாரியில் இருந்து தன் கவனத்தை அகற்றியவள், வாசல் வழி பார்க்க, தனக்காக தன் வாசல் வந்து நிற்கும் தன் கணவனை கண்டு கரைந்தே விட்டாள் கண்மணி.

“உள்ள வாங்க” என்றவள் குரலில் பதட்டம் அதிகமாகவே தெரிய தான் செய்தது. அதையும், அவள் அறியாது ரசித்தவன், அமைதியாய் வந்து அங்கு இருந்த கட்டிலில் அமர்ந்தும் கொண்டான்.

வாசல் வரை வந்தவனுக்கும் சரி, உள்ளே அழைத்தவளுக்கும் சரி, அடுத்து என்ன பேசுவது என்ற தடுமாற்றம் எட்டி பார்க்க, முதலில் பேச துவங்கினான் ஆதி.

“போன் எப்போ வாங்கி குடுத்தான் சூர்யா?” என்றான் தனக்கு தேவையான தகவலை முதலில் அறிந்து கொள்ளும் பொருட்டு.

“ஹய்யயோ மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கிறானே. பேச்சு வார்த்தை ஆரம்பிக்குறதுக்குள்ள சண்ட வந்துடும் போலவே” பயத்தில் பதறியவள்,

“எனக்கு இதை பத்தி எதுவும் தெரியாது. இன்னைக்கு காலைல தான் சூர்யா அண்ணா வாங்கிட்டு வந்து குடுத்தாரு.

உங்களோட நம்பர் கூட அண்ணா கிட்டயே வாங்கிக்கலாம்னு தான் நெனச்சேன். நேர்ல உங்க கிட்டயே வாங்கிக்கலாம்னு தான் அமைதியா இருந்தேன்” முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு மன எண்ணங்கள் அனைத்தையும் வெளியே கொட்டினாள் அஞ்சலி.

“இப்டி குழந்த மாதிரி மூஞ்ச வெச்சிக்கிட்டு தாண்டி மனுஷன ஏமாத்தற” மனதில் வசை பாடியவன், உள்ளூர அவளை குழந்தை தனத்தை ரசிக்கவே செய்தான்.

“என் நம்பரை என் கிட்ட இருந்து தான் வாங்கணுன்னு வேற ஆசையோட இருந்தியா? இது தெரியாம உன் கிட்ட கொஞ்சம் கடுமையா நடந்துக்கிட்டேனோ” கண்ணில் குறும்பு மின்ன, இதழும் கூட வளைந்து அஞ்சலியை வம்பிழுத்த படி,

“தவளை தவளை. நானே போய் எல்லாத்தையும் ஒளறிட்டேனே” புலம்பியவளின் மனதின் நாணம் முகத்தில் ஒளிர, கன்னம் சிவந்து நிற்கும் அவளை ரசிக்க தவறவில்லை ஆதி.

அவளின் வெட்கம், ஏற்கனவே தடுமாறி கிடந்த ஆதி மனதை மேலும் கலங்க செய்ய,

“பாவி பாடாப்படுத்துறா பாரு” மீண்டும் கஷ்ட பட்டு மனதை திசை திருப்பியவன்,

“போன் குடு” என்றான் அஞ்சலியை பார்த்து.

“எதுக்கு?” என்பதை போல் கேள்வியாய் அவனை பார்க்க,

“நம்பர் வேணும்னு கேட்டல. நானே சேவ் பண்ணி கொடுக்குறேன்” என்றவனின் கட்டளைக்கு இணங்க கைபேசியை ஆதியிடம் கொடுத்தால் அஞ்சலி.

தன் எண்ணை அதில் பதித்தவன், “சோல்” என்ற பெயரில் அதை சேவ் செய்து, தன்னுடைய கைபேசியில் அதே பெயருடன் பதித்தும் கொண்டான்.

தன் கைபேசியில் பதிக்க பட்ட அவனின் பெயரை பார்த்தவளுக்கு மேலும் வெட்கம் பிடுங்கி திங்க, அவனை நேரே சந்திக்க இயலாதவள் நாணத்தில் தரையில் விழி பதித்து நின்றவளுக்கு எங்கிருந்தோ தோன்றியது அந்த கேள்வி,

அவளின் முக மாற்றத்தில் இருந்தே எதையோ உணர்ந்தவன்,

“என்ன ஆச்சு அஞ்சலி. ஏதாவது பிரச்னையா?” என்றான் திடமாக.

அதற்கும் அவளிடத்தில் மௌனமே பதிலாக வர, அதில் பதறியவன்.

“இங்க உனக்கு இருக்க பிடிக்கலையா அஞ்சலி. வேற யாராவது ஏதும் சொன்னார்களா? அத்தை ஏதும் சொன்னார்களா?” என்றான் பதட்டமாக.

அதில் பதறியவள், “ஹையோ அதெல்லாம் ஒன்னும் இல்லை. உங்க கிட்ட தான் ஒன்னு கேக்கணும். அது தான் எப்படி கேக்குறதுனு” தயங்குயவளை,

“என்ன கேக்கணும் தயங்காமல் கேளு” என்றான் ஆதி.

“நம்ப கல்யாணம் பத்தி உங்க அப்பாகிட்ட சொல்லிடீங்களா? அப்படி அவருக்கு தெரிஞ்சா பிரச்சனையாகுமா?” நேரே கேட்டாள் தன் கேள்வியை.

அவளின் இந்த கேள்வியும் கூட சந்தோசத்தை தான் தந்தது ஆதிக்கு,,

“தன் மேல் உரிமை கொள்கிறாள். தங்கள் உறவை மதிக்கிறாள்” என்ற புரிதலே நிறைவை தந்தது அவனுக்கு.

“அஞ்சலி இங்க வா. இப்டி உக்காரு” என்றவன் தனக்கு அருகில் அமரும் படி அவளை அழைக்க, முதலில் தயங்கியவள், பின் எதையோ நினைத்தவள் தயக்கம் அற்று ஆதி அருகில் அமர்ந்தும் கொண்டாள்.

தன் குடும்பத்தின் பெருமை முதல், சிவகாமியின் திருமணம், தன் தந்தையின் பண மோகம், அந்தஸ்து ஆசை என்று அனைத்தையும் முடிந்த வரை குறுக்கி கூறினான் ஆதி.

“இப்போ நான் நம்ப கல்யாண விஷயத்தை வீட்டுல சொன்னா எங்க அப்பா ஒத்துக்க மாட்டாரு. அதனால நானும் உனக்காக வீட்டை விட்டு வெளியே வரணும். அதில்லாம என் அம்மாவுக்கு தான் அதிக பாதிப்பு வரும். அவுங்க உடைஞ்சி போய்டுவாங்க.

சரியான நேரம் பார்த்து தான் என்னால இந்த விஷயத்தை வீட்டுல சொல்ல முடியும். அதனால எனக்கு கொஞ்சம் டைம் குடு” என்றவன் அவளின் பதிலை எதிர் பார்த்து அவள் முகம் பார்க்க.

“எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் எதுவும் தெரியாமல் இங்க இருக்குறது தான் ஒரு மாதிரி நெருடலா இருந்துது. அதனால தான் கேட்டேன். நீங்க நேரம் பார்த்து பொறுமையா சொல்லுங்க” என்றவள் வார்த்தையில் இப்போது குழப்பம் அகன்று , தெளிவு அழகாய் வெளிப்பட்டது.

அவளின் இந்த அணுகுமுறையில் பூரித்தவன், “தேங்க்ஸ் அஞ்சலி” என்றவன் அதோடு நில்லாமல் அஞ்சலியின் கைமேல் தன் கையை வைத்து, அதன் அழுத்தத்தில் தன் மன நிம்மதியை வெளிப்படுத்தி கொண்டு இருந்தான் ஆதி.

இந்த அழகிய தருணத்தை குலைக்கவே சூர்யா வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தது வெற்றி என்ற பெயர் கொண்ட ஒரு நந்தி.

புயல் வேகத்தில் காரை செலுத்தியவன் மனதில் அளவை விட அதிகமாக பொங்கும் கோவம் போங்க, எதையும் யோசிக்கும் திறன் அற்றவன், எங்கு செல்கிறோம் என்பதையும் மறந்து, சூர்யா இல்லம் தேடி வந்து இருந்தான் வெற்றி.

நுழைவு கதவை உடைக்கும் வேகம் கொண்டு உள்ளே வர, காதல் மாயையில் பறந்து கொண்டு இருந்த கிளிகள் இரண்டையும் அந்த ஓசை நிதர்சனத்தை உணர வைக்க, ஆதி கைக்குள் சிறை பட்டு கிடக்கும் தன் கைகளை விலக்கியவள்,

“என்ன சத்தம்? ஆண்ட்டி வந்துட்டாங்களோ?” என்றவள் அந்த அறையின் ஜன்னல் வழி எட்டி பார்க்க,

அதே சமயம் வீட்டின் வாசலில் ஒரு காரும், நேற்று இரவு அவள் கவனித்த அதே சாப்பாடு கடையும் அவ்விடம் இருப்பதை கவனித்தவளின் பார்வைக்கு அந்த கடையில் வேறு ஆட்கள் இருப்பதையும் உணரவே செய்தாள்.

இரண்டொரு நிமிடம் அவ்விடம் நின்று யோசிப்பவளை கண்ட ஆதி, அவள் அருகில் வந்து நின்று கொண்டு,

“என்ன யோசனை? யார் வந்து இருக்கா?” என்றவன் ஜன்னல் வழி பார்த்தவனுக்கு அவ்விடம் நிற்கும் கார் தெரிய, அதை அடையாளம் கண்டவன், எதையோ கூற வாயெடுக்க,

“சூர்யா எங்கடா இருக்க? வீட்ல யாராவது இருக்கீங்களா?” கத்திய படி அங்கு இருந்த சோபாவில் பொத் என்று விழுந்தவன், தலையில் கை வைத்த படி படுத்து கொண்டான் வெற்றி.

வந்தவனின் குரலில் இருந்த கடுப்பில் இருந்தே ஏதோ சரி இல்லை என்பதை புரிந்து கொண்ட ஆதி,

“வெற்றி வந்து இருக்கான். வா கீழ போகலாம்” என்றவன் அஞ்சலியை அழைத்து கொண்டு கீழ் இறங்குபவனின் கண்ணில் ஷூவுடன் சோபாவில் படுத்து கிடக்கும் வெற்றி படவும், அவனை நெருங்கியவன், அவன் தோள் தொட்டு அவனை உலுக்க,

கண் விழித்தவன் முன் நின்ற ஆதியை கண்டு படு கோவத்தில் இருந்தான் வெற்றி.

“அட மல கொரங்கே. உன்னால தான்டா எனக்கு இந்த நிலைமை. நான் பாட்டுக்கு சிவனேன்னு என் வீட்டுல இருந்தேன். என்ன அந்த ஸ்வாதி பிசாசு கிட்ட மாட்டி விட்டு இப்போ பாரு டவுசர் கிழிஞ்சி நான் சுத்துறது தான் மிச்சம்” எடுத்த மாத்திரத்திலேயே புலம்பினான் வெற்றி.

“என்னடா ஆச்சு? வந்ததும் வராததுமா எதுக்கு இப்டி கத்துறே” எதிரே இருக்கும் சோபாவில் அமர்ந்த படி வினவினான் ஆதி.

“என்ன நடந்ததுவா? குட்டி சாத்தான் ஸ்வாதி கிட்ட என்னை மட்டும் மாட்டி விட்டுட்டு போய்ட்டியே. அவளுக்கு எவ்வளவு கொழுப்பு தெரியுமா? என்றவன் தானும் எழுந்து அமர, அதே நேரம் வெற்றிக்கு தண்ணீர் கொண்டு வந்தாள் அஞ்சலி.

அவளை பார்த்ததும் சற்று அமைதியானவனை பார்த்து, “யார் அந்த ஸ்வாதி? அவுங்க வர்ரதா சொன்னீங்களே. வந்துட்டாங்களா?” வினவினாள் அஞ்சலி.

“வெற்றியோட எலி குட்டி தான் ஸ்வாதி. சின்ன வயசுல அவளை விட்டு ஒரு நிமிஷம் கூட தள்ளி இருக்க மாட்டான். அவ்வளவு பாசம்” என்றவனின் குரலில் நையாண்டி மிகுந்தே இருந்தது.

“டேய் தேவை இல்லாம என்னை கொலைகாரன் ஆக்காத. தங்கச்சி உன் புருஷனை அமைதியா இருக்க சொல்லு. அப்புறம் நான் பொல்லாதவன் ஆகிடுவேன்” என்றவன் கோவத்தில் கொதித்து கொண்டு இருந்தான்.

“சரி விடுடா. இவ்ளோ கோவ படுற அளவுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லுடா”.

“அதுவா.. ” என்றவன் அவனுக்கு நேர்ந்த அநீதியை ஒவ்வொன்றாக அடுக்க ஆரம்பித்தான்.

ஊரை விட்டு வேறு இடம் பெயர்ந்ததால், இப்போது திருவிழா காண வந்த தேவராஜ் எங்கே தங்குவது என்ற கேள்வி வந்த போது, ரகுநாத் இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள விரும்பியவர், தன் வீட்டில் அவர்களை தாங்க வைக்க முயற்சிக்க, முட்டுக்கட்டையாக நின்றார் மருதநாயகம்.

“என் மகளை அதே ஜாதி பாத்து தானேடா இனமும் தள்ளி வெச்சி இருக்க. பாவம் என் மக. அவ பொறந்து வளந்த இந்த வீட்டுக்கு கூட வர முடியாத படி பண்ணிட்டல. அப்படி இருக்கும் போது நீ சொல்லுற அதே ஜாதியை சேர்ந்தவங்க தானே தேவராஜும். அவன் மட்டும் எப்படி இங்க தங்கலாம். என் வீடு ஒன்னும் சத்திரம் இல்ல. நான் இதுக்கு எல்லாம் சம்மதிக்க மாட்டேன்” என்றவர் தன் முடிவில் திடமாக நின்று விட, வாழ்க்கையில் முதல்முறை ரகுநாத் தன் முடிவை மாற்றி கொண்டார், இப்போதும் தன் சுயநலத்திற்காக.

மருதநாயகம் மறுத்து விடவே, வேறு வழி இன்றி வெற்றி இல்லத்தில் தேவராஜ் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்ய பட்டு இருந்தது. நான்கு நாட்கள் டூர் சென்றதால் இந்த விஷயம் வெற்றிக்கு தெரியாமல் போய் விட,

இன்று காலை தான் அனைத்தையும் அறிந்தவன்,

“எலி குட்டி கூட ரொம்ப நாள் கழிச்சி ஒன்னா இருக்க போறோம்” என்ற ஆவலில் அவளுக்கென காத்துக்கிடக்க, நவீன உடையில் வந்தவளை கண்டவனுக்கு ஏனோ அத்தனை ஆவலும் மண்ணாய் போக,

“இவங்க தங்க வேற இடத்துல ஏற்பாடு பண்ணலாமா அப்பா? நம்ப வீட்ல அவுங்க தங்க கஷ்டமா இருக்கும்ல. அவுங்களோட பழைய வீட்ட சுத்தம் பண்ண சொல்லவா?” தன் தந்தையிடம் வினவினான் வெற்றி.

அதற்கும் மறுப்பே பதிலாக வர, அமைதியாய் ஒரு இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான் வெற்றி.

தானே முன் வந்து போனால் போகட்டும் என்று ஸ்வாதி பேச்சை துவங்க, அதற்கு வெற்றியின் பதிலும் அவனின் முக பாவனைகளும் ஸ்வாதியை கடுகடுக்கவே செய்தது.

அமைதியை இருந்த சிங்கத்தை உசிப்பி விட்டது போல் அவள் கிடக்க, அதை எதுவும் அறியாத வெற்றி ஏனோ அவன் போக்கில் இருந்தான்.

வீட்டின் வாசலில் கார் நிற்க, ரகுநாத்துடன் பேசிய படி தேவராஜ் வீட்டிற்குள் சென்று விட,

“பாரு வீட்டுக்கு சொந்த காரன் நானு. என்ன கார் ஓட்ட விட்டுட்டு, இவங்க ரெண்டு பேரும் ராஜா மாதிரி போறத. எல்லாம் என் நேரம்” புலம்பியவன் டிக்கியை திறக்க பின்னால் செல்ல,

“நீயே எல்லாத்தையும் உள்ள கொண்டு வந்துடு. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. அதனால என்னால எல்லாம் தூக்க முடியாது” என்றாள் ஸ்வாதி ஒரே அடியாக வெற்றி பின்னால் வந்து நின்ற படி.

“நானும் தூக்க மாட்டேன். வேலை காரங்க கிட்ட சொல்லி உன்னோட ரூம்க்கு கொண்டு வர சொல்றேன். நீ போ” என்றான் வெள்ளந்தியாக.

“என்ன நீ தூக்க மாட்டியா? அதோ அந்த ப்ளூ பாக்ஸ் ரொம்ப முக்கியமா பொருள் எல்லாம் இருக்கு. அதை நீ தான் தூக்கிட்டு வரணும்” என்றவள் இரண்டடி முன்னால் எடுத்து வைக்க,

வெற்றி வீட்டின் வேலையாட்களை அழைத்து, அனைத்தையும் உள்ளே தூக்கி செல்ல சொன்னவன், மறந்தும் கூட எதையும் தொடவும் இல்லை தூக்கவும் இல்லை.

“மர மண்டை. இது எல்லாம் எப்படி தான் இவ்ளோ பெருசா வளந்துதோ தெரியல. முக்கியமான பொருள்னு சொல்றேனே!!! என்ன எதுன்னு கேக்கணும்னு தோணுதா பாரு. இவனை எல்லாம்….” பல்லை கடித்தவள்.

“இதுக்கு எல்லாம் இனி நீ அனுபவிப்ப ராஜா” தீர்மானித்தவள், விறுவிறுவென உள்ளே ஓடியும் விட்டாள்.

இதை எதையும் அறியாதவன் வெள்ளந்தியாய் உள்ளே செல்ல, வெற்றியாகவே காத்திருந்த அவனின் தாய் வள்ளி சுடச்சுட பால் ஒரு டம்ளரில் ஊற்றி கொண்டு வந்து கொடுக்க, அதற்காகவே காத்திருந்தவன் போல் அதை வாங்கி கொண்டவன், பாலில் முழு கவனம் செலுத்தி நின்று கொண்டே பாலை குடித்து கொண்டு இருந்தான்.

“பெரிய மகாராஜா, எதிரிங்க கூட சண்டை போட்டுட்டு களைப்பா வந்து இருக்காரு. இவருக்கு வந்த உடனே பால் வேற குடுக்குறாங்க. இத்தனை வருஷம் கழிச்சி பாக்குறோமேன்னு சின்னதா ஒரு சிரிப்பு கூட இல்ல இவனுக்கு பால் ஒரு கேடா. சிடு மூஞ்சி” கையில் ஜூஸ் ஒன்றை வைத்து கொண்டு மனதுக்குள் வசை பாடி கொண்டு இருந்தாள் ஸ்வாதி.

முன்பே தன் செயலை முடித்தவள், கையில் இருக்கும் ஜூஸ் மீது கவனம் கொண்டவளாய்,

“இங்க வந்து சோபால உக்காந்து குடி வெற்றி. எதுக்கு நின்னுகிட்டு அவ்ளோ அவசரமா குடிக்குறே” என்றாள் நல்ல பிள்ளை போல்.

வெற்றிக்கும் அவளின் பேச்சில் இருக்கும் குறும்பு புரியாமல் நடை பயின்றவன், அருகில் இருக்கும் சோபாவில் அமர்ந்து கொள்ள, அப்போதும் கூட எதையும் வித்யாசமாக உணர வில்லை வெற்றி.

குடித்த டம்ளரை திரும்ப தர செல்ல எத்தனித்த போது தான், தான் சிக்கி இருக்கும் சூழ்ச்சியே அவனுக்கு புரிந்தது

“யார் இந்த வேலையை பண்ணி இருப்பா?” யோசித்தாவனின் பார்வை ஸ்வாதி பக்கம் செல்ல, வன்ம புன்னகை புரிந்தவள், எதுவும் அறியாதது போல் முகத்தை வைத்து கொண்டு மற்றவரோடு கலந்து பேசி கொண்டு இருந்தாள்.

சிறு வயதில் ஒரு முறை, உடன் பயிலும் மாணவன் ஒருவன் ஸ்வாதியை கீழே தள்ளிவிட்டான் என்ற சிறு தவறுக்காக, கெட்டியாக ஒட்டும் பசையை அவன் அமரும் இடத்தில் வைத்து விட்டு, அன்று அந்த பையன் பசை காரணமாக டவுசர் கிழிந்து வீடு சென்றான்.

இந்த அதி புத்திசாலித்தனமான யோசனையை ஈடேற்றி ஸ்வாதிக்கு உதவியது சாட்சாத் வெற்றி தான்.

தன் வினை தன்னை சுடும் என்பதை போல் அன்று எவனுக்கோ அவன் போட்ட திட்டம் இன்று அவனுக்கே பாதகமாய் வந்து முடிந்து விட்டது.

விஷயம் உணர்ந்தவன், இடத்தை விட்டு எழவும் முடியாமல், வேறு யாரிடமும் சொல்லவும் முடியாமல் தவித்து கொண்டு இருக்க, அதில் ஆனந்தமாய் ஆண்மகனை அழுக விட்டு குளிர் காய்ந்து கொண்டு இருந்தாள் ஸ்வாதி.

ஏதேதோ பேசியவர்களை, எதையோ சொல்லி உணவு அருந்த அனுப்பி வைத்து விட்டு, ஹாலில் யாரும் இல்லாத சமயம் பார்த்து கஷ்ட பட்டு அந்த பசையில் இருந்து எழ முயற்சிக்க,

“டர்” என்ற சத்தத்தோடு அவனுடைய பான்டும் கிழிந்து விட, அத்துடன் சேர்த்து “கொல்” என்ற சிரிப்பு சத்தமும் கேட்க, அது யாருடையது என்பதை புரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்து கொள்ளவில்லை வெற்றி.

எப்போதும் இனிமையை தரும் ஸ்வாதியின் சிரிப்பு சத்தம் இம்முறை வெறுப்பையும் கோபத்தையும் அவனுக்கு தந்து விட, கோவத்தில் கொதித்து இருந்தவன் முன், தானாக வந்து சிக்கினாள் ஸ்வாதி.

தன் அறையில் உடை மாற்றி கொண்டு இருந்தவன் அறை வாசலுகே வந்தவளின் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்தவன், கோவத்தின் உச்சியில் இருந்ததால் எதுவும் பேசாமல் அமைதி காக்க, பேச்சையும் அவளே ஆரம்பித்தும் வைத்தாள்.

“எப்படி இருந்தது நம்ப டிரீட்மென்ட். நான் உன் கிட்ட பேசுன அப்போ யாரோ மாதிரி முகத்தை திருப்பி கிட்டு போனல. அதுக்கு தான் இந்த பனிஷ்மென்ட். இனிமேல் என் கிட்ட பழைய படி நல்லா பேசணும் புரியுதா?” என்றவள் ஒற்றை விரல் உயர்த்தி, கண் சிமிட்டி மிரட்டி கொண்டு இருக்க, அது ஏனோ எரியும் தீயில் பெட்ரோலாக தான் வேலை செய்தது.

“ஏய் என்ன திமிரா உனக்கு. நீ பெரிய இளவரசி பாரு. நீ பேசுனதும் நான் பல்ல இளிச்சிகிட்டு வந்து பேசணுமா? என்னை பிடிக்காதுன்னு ஊற விட்டு போன ஆளு தானே நீயு. இப்போ என்ன புதுசா இந்த திடீர் பாசம். பட்டணத்து காரங்களை நம்ப கூடாதுன்னு என்க அப்புச்சி சொல்லும். உன்ன பார்த்தா அது உண்மைன்னு தோணுது” என்றவன் அவளை மேலிருந்து கீழ் ஒரு முறை பார்த்தவன்.

“இது என்னடி டிரஸ். இத தான் நீ பட்டணம் போய் காத்துகிட்டு வந்தியா? அங்க நீ எப்படி வேணும்னாலும் இரு. ஊர் திருவிழாவுக்கு வரோமே கொஞ்சம் ஒழுங்கா டிரஸ் பன்னிட்டு இருக்கணும்னு அறிவில்லையா உனக்கு. இதுல மகாராணி கிட்ட ஒழுங்கா பேசலன்னு வேற கோவ படுறே. இதோ பார் நீ இங்க இருக்க போற கொஞ்ச நான் தயவு செஞ்சி என் கண் முன்னாடி வராத” என்றவன் கையெடுத்து இரு கும்பிடு போட்டவன், அவள் முகமும் பார்க்காமல், அவளின் பதிலுக்கும் காத்திருக்காமல் அங்கிருந்து அதே கோபத்துடன் சென்றும் விட்டான்.

நடந்ததை வெற்றி கூறி முடிக்க, இதற்கு சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் ஆதியும் அஞ்சலையும் நின்று கிடக்க,

பாவமான முகத்துடன் வெற்றி ஆதியை பார்க்க, அடக்கி வைத்து இருந்து சிரிப்பு மொத்தம் கொல்லென வெளியே சிதறியது.

“மச்சா, பேண்ட் மட்டும் தானே கிழிஞ்சிது. வேற ஒன்னும் சேதாரம் அகலையே” என்றவன் விழுந்து விழுந்து சிரிக்க.

ஆதி மனம் விட்டு இப்டி சிரிப்பதை முதல் முறை பார்க்கும் அஞ்சலிக்கு,

“இவன் இப்டி வெளிப்படையா சிரிக்கவும் கூட செய்வானா. சும்மாவே அழகா இருப்பான். இப்டி சிரிக்கும் போது இன்னும் கியூட்டா தான் இருக்கான்” எண்ணியவள் அவன் அறியாமல் அவனை தன்னுள் நிறைத்து கொண்டு இருக்க,

ஆதியின் சிரிப்பை பார்த்த வெற்றி மேலும் கடுப்பாகி,

“போதும்டா, ரொம்ப சிரிக்காத. நான் என் துயரத்தை சொல்லிக்கிட்டு இருக்கேன். புருஷனும் பொண்டாட்டியும் சிரிச்சி கிட்டு இருக்கீங்க” என்றவனின் வார்த்தையில் இரு புறாக்களின் கண்ணும் நேர்கோட்டில் சந்தித்து கிட்ட வேளை,

“என்னடா ஆச்சு? வெற்றி எருமை இங்க என்னடா பண்ணுறான். இவன் எப்போ வந்தான்?” கேள்விகளுடன் உள்ளே நுழைந்தான் சூர்யா, வெண்பா, சிவகாமியுடன்.

“போச்சுடா, சிரிக்க ஆள் பத்தலனு இவனும் வந்துட்டான். இனி எவனும் நம்ப பேச்சை கேக்க மாட்டாங்க. ஹையோ..” என்றவன் தலையில் கைவைத்த படி அமர்ந்து இருக்க,

நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சூர்யாவிற்கு ஒப்புவித்தான் ஆதி. அனைத்தையும் கேட்டவன், தானும் சிரித்து கொண்டு வெற்றியை வெறுப்பேத்த,

“சொன்ன மாதிரியே பண்ணுறாங்க பாரு. எனக்குன்னு மட்டும் எங்க இருந்து தான் வருவாங்கனே தெரியாது. அந்த குட்டி பிசாசு என் உயிர எடுக்குறது பத்தாதுன்னு இவனுங்க வேற” மைண்ட் வாய்ஸ் என்று சத்தமாக பேசி கொண்டு இருந்தான் வெற்றி.

“என்னடா எலி குட்டியா இருந்தவ இப்போ பிசாசு குட்டியா மாறிட்டாளா. சின்ன வயசுல சாருக்கு எங்களை எல்லாம் கண்ணுக்கே தெரியாது. எலி குட்டி கூடயே சுத்திட்டு இப்போ என்னடா இப்டி புலம்புர” அக்கறையாக பேசுவதை போல் வம்பிழுக்கும் நண்பர்களிடம் என்ன கூற முடியும், வேறு வழியின்றி அமைதி காத்தான் வெற்றி.

“வேணும்னா நானும் ஆதியும் ஸ்வாதி கிட்ட இத பத்தி பேசவாடா. இனிமேல் உன்ன பத்திரமா பாத்துக்க சொல்லி சொல்லுறோம்” என்றான் சூர்யா மேலும் குறும்பாக.

“போதும்டா போதும். நீங்க இதுவரைக்கும் பண்ணதே போதும். இதுக்கு மேல என்னால முடியாது” என்றவன் மயங்கி விழுவது போல் பாவனை செய்ய, மற்றவர்கள் கேலி கிண்டல் என்று வீடே சிரிப்பில் மிதந்து கொண்டு இருந்தது.

மறுபுறம், வெற்றியின் இந்த ரூபத்தை எதிர் பார்க்காத ஸ்வாதி,

“தயவு செஞ்சி என் கண் முன்னாடி வராத” என்று வெற்றி கூறிய வார்த்தைகள் அவள் காதில் ரீங்காரமிட்டு கிடக்க, கண்ணில் கசியும் அந்த துளி நீரையும் அறியாமல் தான் இருந்தாள் பேதை.

Advertisement