Advertisement

எப்போதும் படுத்தவுடன் உறங்கும் பழக்கம் கொண்ட வெற்றிக்கு, ஸ்வாதியும் அவள் குடும்பமும் நாளை வருகிறார்கள் என்ற செய்தியை கேட்ட பின்னர், உறக்கம் ஏனோ எட்டாத கனியாகி தான் போனது.

மனம் ஏனோ, நினைக்கவே கூடாது என்று நினைத்த பழைய நினைவுகளை கண்முன்னே காட்ட, வெறுப்பும், கோவமும் அதையும் தாண்டி புரியாத ஒரு உணர்வும் சேர்ந்து வர, தன் கோவத்தை மொத்தமாக தலையணையில் கட்டியவனுக்கு, கண்ணும் கூட வேர்க்கவே செய்தது.

சுமார் இருபது வருடம் முன்பு, செல்வத்தில் அதிகம் வளர்த்த வெற்றியின் குடும்பம், ஒரு சாதாரண ஓட்டு வீடு ஒன்றில் தான் இருந்தது. ஊர் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, அந்த செல்வாக்கில் தொழிலில் வளர்ந்து வந்து கொண்டு கொண்டு இருந்த காலம் அது.

ஆதியின் தந்தைக்கு ஊர் தலைவர் நட்பு தேவை பட்டதால் வெற்றியின் தந்தையுடன் நட்பு பாராட்ட, ஆதி, வெற்றி இடையிலும் பேர் சொல்லும் ஒரு நட்பு உருவாகியே இருந்தது.

ஆறு வயது ஆன வெற்றி, அன்று ஊர் திருவிழா என்பதால் ஆதியுடன் விளையாடி, ஊர் சுற்றி வீடு வர மாலை ஏழு மணியை நெடுங்கி இருக்க, அவனுக்கென காத்திருந்தாள் அந்த சின்ன தேவதை.

வீட்டின் வாசலில் விருந்தினர் வருகையை உணர்த்தும் வகையில் பல செருப்புகளும், வீட்டின் உள் பலர் சிரித்து பேசும் சத்தமும் கேட்க, ஆர்வமாய் உள்ளே சென்றான் வெற்றி.

வந்தவனின் விழிகள் ஏனோ உறங்கும் ஸ்வாதியின் மேல் பட, சுற்றம் மறந்து அந்த பிஞ்சு குழந்தையை காண ஆவலாய் அவளை நெருங்கினான் வெற்றி.

“வாடா தம்பி. நம்ப சண்முகம் தாத்தா பேத்திடா. இன்னைக்கு தான் ஊருல இருந்து வந்து இருக்காங்க” என்றார் வெற்றியின் பாட்டி.

“ஏதோ ஒரு ஆர்வம் தட்டி எழுப்ப, கால்கள் அதுவாக நடை பழக, ஸ்வாதியை அடைந்த வெற்றி, உறங்கும் அவளை மெய் மறந்து போய் ரசித்து நிற்க, அவனின் கைகள் தானாய் அந்த பிஞ்சு பாதத்தை வருடி விட்ட அடுத்த நொடி தூக்கத்தில் சிணுங்கினாள் ஸ்வாதி.

ஏனோ தன்னுடைய தீண்டல் வலித்து விட்டது போல என்று எண்ணியவனின் எண்ணம் தவறு என்று உரைப்பது போல சிணுங்கிய அடுத்த நொடி முகம் மலரவும் செய்தாள் ஸ்வாதி. அந்த நொடியில் அவளை, இயல்பை விட அதிகம் பிடித்து போனது வெற்றிக்கு.

குட்டி குட்டி விரல்கள், உடலில் ஒட்ட வைத்தது போன்ற குட்டி தலையுடன், போர்வைக்குள் உடனே மறைந்து விடும் உடலும் கொண்டவளை கண்டவனுக்கு “எலி குட்டி” என்ற செல்ல பெயர் வைக்கவே தோணியது.

“அம்மா இந்த பாப்பா எலி குட்டி மாதிரி இருக்கா. இனி நான் இவள இப்டி தான் கூப்பிட போறேன்” என்றான் எதோ பெரிய பட்டம் அளித்த பெருமிதத்தில்.

“எலி குட்டியா’, எதுக்குடா இந்த பேர வெச்சி இருக்க. அவுங்க அப்பா அம்மா ஸ்வாதினு பேர் வெச்சுட்டாங்கடா” வெற்றியின் தாய்.

“அதெல்லாம் எனக்கு தெரியது. நான் எலி குட்டின்னு தான் கூப்பிடுவேன்” அடம்பிடித்தான் வெற்றி.

“அவுங்க வீட்டு பொண்ண நீ எப்பிடிடா அப்படி எல்லாம் கூப்பிடலாம். அதெல்லாம் தப்பு” மறுப்பு வந்தது வெற்றியின் தாயிடம் இருந்து.

“அப்போ அவள நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு போய் நாமளே பாத்துக்கலாம். எனக்கு அந்த எலி குட்டி வேணும்” கண்ணில் நீர் சேர்ந்தது வெற்றிக்கு.

“நம்ப கூட்டிட்டு போக முடியாது. அவ பெரியவளா ஆகி கல்யாணம் ஆனா தான் இன்னொரு வீட்டுக்கு போவா. அதுவரைக்கும் அவ அவுங்க வீட்டு பொண்ணு” என்றார் வெற்றியின் தாய்.

எதையோ யோசித்தவன், “அப்போ நாமளே கல்யாணம் பண்ணி இப்போவே கூட்டிட்டு போய்டலாம். எலி குட்டிய கூட்டிட்டு போகலாம் வா” அழவே செய்தான் வெற்றி.

ஏனோ பார்த்த மாத்திரத்தில் ஸ்வாதி அவனை ஈர்த்து இருக்க, அன்று தன்னால் ஸ்வாதியை தன்னுடன் அழைத்து செல்ல முடியாத போதும் கூட, முடிந்தவரை அவள் அருகில் இருக்க முயற்சிதான் வெற்றி.

அவளை நடை பழக்குவது, அவளுக்கு உணவு ஊட்டுகிறேன் என்ற பெயரில் பாதியை அவளின் உடையில் சிந்தி, மீதியை அவளுக்கு ஊட்டி என்று ஆதியை கூட சில காலம் மறந்து போனான் வெற்றி.

அந்த இடைப்பட்ட சிறு காலத்தில் தான் ஆதியின் அன்னையின் தயவில், ஆதி, சூர்யாவின் நட்பும் மலர்ந்தது.

ஊரே சூர்யா குடும்பத்தையும் அவனையும் ஒதுக்கும் போது, பார்வதி தான்.

“சூர்யா நம்ப வீட்டு பையன் தான் ஆதி. உன் அத்தை பையன். அவன் கிட்ட நாமளே பேசாம இருக்கலாமா” என்று பல முறை அறிவுரை கொடுக்க, ஊர் பேச்சுக்களை விடுத்து சூர்யாவுடன் நட்பு பாராட்ட துவங்கினான் ஆதி.

“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே

அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” என்ற பாடல் வரிகள் ஏனோ ஆதி வாழ்வில் உண்மையாகி போனது.

இப்படியே இரண்டு ஆண்டுகள், ஆதி சூர்யாவின் நட்பு பலப்படவும், ஸ்வாதி வெற்றியின் நட்பு வளரவும் எடுத்து கொண்டு காலம் தன் போக்கில் நகர்ந்து செல்ல.

வெற்றி முடிந்த வரை ஸ்வாதியுடன் இருப்பதும், வகுப்பில் மட்டும் ஆதியுடன் இருப்பதுமாக வாழ்ந்து வந்த காலம் அது.

ஒரு நாள் பள்ளி முடிந்து மாலையில் விளையாடி கொண்டு இருக்கும் போது ஏதேதோ மழலை பேச்சுகளுக்கு இடையில்,

“டேய் வெத்தி, நாங்க அடுத்த வாரம் வேற ஊருக்கு போறோம். அங்க போய் ஜாலியா புது வீட்டுல இருப்போமே. அங்க நெறைய மரம் செடி எல்லாம் வெச்சி பெரிய வீடு இருக்கு. அங்க தான் நாங்க இருக்க போறோம்” மழலை ததும்ப பேசினாள் ஸ்வாதி.

“வேற ஊருக்கா!! அது எங்க இருக்கு?” வினவினான் வெற்றி.

“அதுவா. இங்க இருந்து நொம்ப தூடம் போணுமாம். அம்மா சொன்னாங்க” மண்ணில் விளையாடிய படி பேசினாள் ஸ்வாதி.

“திரும்ப இங்க எப்போ வருவா. என்னையும் கூட கூட்டிட்டு போறியா?” ஏக்கம் மிதம் மிஞ்சியது வெற்றி குரலில்.

“இனிமேல் நாங்க இங்க வரமாட்டோம்ப்பா. அது இல்லாம இனிமேல் உன்கூட எல்லாம் பேச மாட்டேன். ஆதி தான் நல்ல பையன். அவன் கூட பழகுனா தான் நான் நல்ல பொண்ணுன்னு அம்மா சொன்னாங்க” பிஞ்சு மனதில் நஞ்சும் கலந்தே இருந்தது.

“அப்போ இனி என் கிட்ட பேச மாட்டியா?” என்றான் குட்டி வெற்றி திடமாக.

“மாட்டேன் போ. ஆதி தான் குட் பாய். அவனை தான் எனக்கு டொம்ப பிடிக்கும்” என்றாள் அதற்கு மேல் விரிக்க முடியாது என்ற அளவிற்கு கைகளை காற்றில் விரித்து.

அவள் வார்த்தையில் அர்த்தமும் வீரியமும் குறைவு தான் என்றாலும், அது குட்டி வெற்றி மனதை பாதிக்கவே செய்தது.

“தன்னை வேண்டாம் என்று கூறி விட்டாலே” என்ற கோவம் வந்த மனதிற்கு, அன்றிற்கு பிறகு ஸ்வாதியிடம் பேசவும் இல்லை, அவள் இந்த ஊரை விட்டு போகும் போது வழி அனுப்பவும் வரவில்லை.

உடம்பு சரி இல்லை, வயிறு வலி என்று காரணம் தேடினானே தவிர, கோவத்தை விடுத்து கடைசியாய் ஸ்வாதி முகத்தை பார்க்கவும் விரும்பவில்லை குட்டி வெற்றி.

சிறு வயது காயத்திற்கு ஆழம் அதிகம் என்று கூறுவது போல், இன்று அதனின் வடு வெற்றி மனதில் ஆழ பதிந்து இருக்கவே செய்தது.

ஆனால் இவை அனைத்திலும் ஆதி மேல் வெற்றிக்கு சிறு கோவம் கூட வந்தது இல்லை.

“அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை. அவளின் முதல் விருப்பம் நானில்லை” என்பது தான் அவனின் கோவமே தவிர, அதை தவிர்த்து, ஸ்வாதியின் விருப்பம் யார் என்பதை அறிந்து கொள்ள கூட அவன் விரும்பவில்லை.

இத்துணை நாள் தன்னிடம் மட்டுமே பேசியவள், திடீரென ஆதியை பிடிக்கும் என்று கூறும் அந்த முரணை சிறு வயதில் புரிந்து கொள்ளாமல் தவறிழைத்து விட்டாள் என்றால், வளர்ந்தும் கூட அதை உணர மறுத்து இருந்தது அந்த முட்டாளின் மனம்.

மறுபுறம், தன்னிடம் மட்டுமே இருந்த பொருள் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட வேதனை ஸ்வாதிக்கு. அதனால் அவன் மேல் கோவமாக இருந்தவள், இரு முறை ஊர் திருவிழாவிற்கு வந்து வெற்றி இல்லத்தில் தங்கிய போதும் கூட,

இருவரும் சண்டையிடுவதும், மோதி கொள்வதுமாக இருவருக்குள் இருக்கும் பாசம் வளர்ந்து கொண்டே போக, வெற்றி அவனின் எலி குட்டியை சீண்டுவதும், செல்ல சண்டைகள் இடுவதும் என்று அவனின் குறும்பை வளர்த்து கொண்டே தான் இருந்தான்.

அது அனைத்தும் ஸ்வாதிக்கு கோவமும், எரிச்சலும், அழுகையையுமே தந்து இருக்க, முடிந்த வரை வெற்றியை தவிர்த்தாள் அவள்.

காலத்தின் சதியால், திசை மாறிய இரு ஆடுகள் சந்திக்கும் அந்த பொன்னான நாலும் வந்தது.

காலை பதினோரு மணிக்கு எழும் பழக்கம் கொண்ட வெற்றி, இன்று உறக்கம் அற்ற அந்த நீண்ட இரவை கடந்தவன், காலை எட்டு மணிக்கு வர போகும் ரயிலுக்கு ஆறு மணிக்கே ரகுநாத்துடன் ஆஜர் ஆகி இருந்தான்.

ரகுநாத் வருவதால் ஆதி கழண்டு கொண்டு, தன் மனைவியை பார்க்க சென்று விட, வெற்றி காத்திருந்தான் ஸ்வாதிக்காக.

“நான் அப்போவே சொன்னேன். எட்டு மணிக்கு தான் ட்ரெயின் வருன்னு. தேவை இல்லாம எதுக்குடா என்னை இங்க கூட்டிட்டு வந்த. உன்னால அந்த மெட்டல் கம்பெனியோட மீட்டிங் வேற அட்டென்ட் பண்ண முடியல” வழி நெடுக புலம்பியவர் மேல் கோவம் வந்தாலும்,

“இவரை எல்லாம் எப்படி தான் வீட்ல வெச்சிக்குறாங்களோ தெரில. பேசாம ஒரு ஜூல கொண்டு போய் விட்டுட்டா கூட நிம்மதியா இருக்கும்” வாய்க்குள்ளேயே புலம்பியவன், மறந்தும் கூட வாய்ச்சொல்லை உதிர்க்க வில்லை வெற்றி.

“அங்கிள், ட்ரெயின் சீக்கிரமா வரதா கேள்வி பட்டேன். அதனால தான் உங்களையும் கூட்டிட்டு வந்தேன்” சமாளித்தவனுக்கு, அதற்கு மேல் ரகுநாத்தின் பேச்சை கேட்கும் பொறுமை இல்லாததால் ரயில்நிலையத்தில் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டவன்,

கைபேசியில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து இருக்கும், சிறு வயது புகைப்படத்தில் அவனும் ஸ்வாதியும் மட்டும் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் வெற்றி. அதிலும் ஒன்றில்,

மயில் நீல பட்டு பாவாடையில், துள்ளி திரியும் மான் போல் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருக்கும் அவனின் எலி குட்டியை அடம் பிடித்து புகைப்படத்தில் பதித்து வைத்து இருந்தான் வெற்றி. அதனின் நகலை இன்று தன் கைபேசியில் நிறைத்து வைத்தவன், ஸ்வதிக்காக காத்திருக்க, மணி எட்டை நெருங்குவதே எதோ யுகம் போல் தான் இருந்தது வெற்றிக்கு.

மறுபுறம் ரகுநாத்தோ, “வெற்றிக்கு இருக்கும் ஆர்வமும் பொறுப்பும் கூட ஆதிக்கு இல்லாமல் போய்டுச்சே. கூட வந்து இருந்தா பேச பழகன்னு ஸ்வாதி கூட நல்ல உறவு வந்து இருக்கும். அதை வெச்சி நாமலும் நம்ம யோசிச்ச படி பண்ண உதவியா இருந்து இருக்கும். ஆனா நமக்கு பொறந்தது தான் நம்ப பேச்சையே கேக்காதே” சலித்து கொண்டவர், வேறு எதுவும் செய்ய இயலாது என்பது அவரும் தெரிந்ததே.

இருவரின் காத்திருப்பும் முடிவுக்கு வர, பட்டு பாவாடையில் இருக்கும் அவனின் எலி குட்டியை எதிர் பார்த்து இருந்த வெற்றிக்கு, அதிர்ச்சி தரும் வகையில் வந்து இறங்கினாள் நவநாகரீக ஸ்வாதி.

இடுப்பும், தொப்புளும் தெரியும் குட்டி சட்டை, இடையும் தொடையும் ஒட்டி பிடித்தார் போல் ஜீன்ஸ், எண்ணெயை பல காலமாக பார்க்காமல், விரித்து விட பட்ட கூந்தலும், முன் பகுதி முடியை தூக்கி நிறுத்தும் கருப்பு கண் கண்ணாடியும், தோடற்ற காதும், பொட்டற்ற நெற்றியுடன் வெற்றியின் எதிர் பார்ப்பிற்கு நேர் எதிராக வந்து இறங்கினாள் அவனின் எலி குட்டி.

அவளை பார்த்த மாத்திரத்திலேயே வெறுத்து போனது வெற்றிக்கு. அத்துடன் அங்கு நிற்காமல் காரின் அருகில் சென்று அவன் நின்று கொள்ள,

“பாரு பட்டணம் போய் எப்படி மாறிட்டான்னு. ச்சி பெரியவங்க முன்னாடி எப்படி ஒரு டிரஸ் போட்டுட்டு வந்து இருக்கா பாரு. இவளுக்காக ஆறு மணிக்கே தூக்கத்தை விட்டுட்டு வந்தேன் பாரு என்னை சொல்லணும். போன தடவை வந்த அப்போ கூட ஒழுங்கா தானே வந்தா. இப்போ மட்டும் என்னவாம்” கோவத்தில் காரை தாக்க, அதன் விளைவாய் வெற்றியின் கை காயம் பட்டது தான் மிச்சம்.

ஸ்வாதியின் தந்தை, தேவராஜை கண்டதும் படு ஆனந்தம் ரகுநாத்திற்கு. இருக்காதா என்ன. இந்த ஊரை விட்டு வெளியே சென்று பல கோடிகள் சொத்துக்களுக்கு அதிபதியாக திரும்பும் அவரையும் அவரின் சொத்துக்களையும் வளைத்து போடுவதிலேயே ரகுநாத்தின் முழு கவனம் இருந்தது.

ரகுநாத் கருதும் தன்னுடைய உயர் ஜாதியை அல்லாத வேற்று ஜாதியை சேர்ந்தவர் இந்த தேவராஜ் குடும்பம் என்பது குறிப்பிட தக்கது. இருந்தும் பணத்தில் சரிசமாக இருந்து விட, கட்டி தழுவி அவரை வரவேற்றார் ரகுநாத்.

சூர்யாவின் தந்தையும் ஊரை அடித்து உலையில் போட்டு சொத்துக்கள் சேர்த்து இருந்தால், தன் தங்கையையும் தன்னுடன் சேர்த்து உறவு பாராட்டி இருப்பாரோ என்னவோ. அதுவும் காலத்திற்கே வெளிச்சம்.

மரியாதைக்கு தேவராஜை ஓரிரு வார்த்தை நலம் விசாரித்த வெற்றி, மறந்தும் கூட ஸ்வாதி பக்கம் திரும்பவே இல்லை.

அது அவளுக்கு எதோ நெருடலை உருவாக்க, காரின் பின்னால் அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளை ஏற்றி கொண்டு இருந்த வெற்றியின் அருகில் சென்றவள் அமைதியாய் நிற்க,

அதை உணராதவன் தனக்கு மிக அருகில் நிற்கும் ஸ்வாதியை கண்டு அதிர்ந்தே விட்டான். அதுவும் கூட சில நொடிகள் தான்.

அதிர்ந்த அந்த பார்வையில் ஆராய்ச்சி குடி கொள்ள, தலை முதல் கால் வரை அவளை விழியால் துளாவியவன்,

“பரவால்ல, கிட்ட வெச்சி பாக்கும் போது என்னோட எலி குட்டி சூப்பரா தான் இருக்கா. ஆமாம் இப்போ எதுக்கு இப்டி வந்து நிக்குறா. ஏதாச்சும் பொருள் மிஸ் ஆகி இருக்குமோ” என்றவனின் பார்வை, எல்லை மீறி அவனுக்கு அனுமதி மறுக்க பட்ட இடங்களில் எல்லாம் அவளின் வளைவு நெளிவுகளை கண்களால் அளந்தவன் அவள் பேசியதை கூட உணராமல் தன் ஆராய்ச்சியை செவ்வனே செய்து கொண்டு இருந்தான் வெற்றி.

“ஓய்ய்ய்.. வெற்றி.. என்ன ஆச்சு?” என்றவள் அவன் தோள் தொட்டு உலுக்க, ஆறு மணி முதல் அவன் காத்திருந்ததற்கான பலன் லேசாக கிடைத்தது அவனுக்கு.

“ஆங்ங்ங்.. ஒன்னும் இல்லையே” என்பதை போல் தலை ஆட்டியவனை,

“அப்போ பதில் கூட சொல்லாம என்ன யோசிக்குறே” என்றாள் அவள்.

“என்ன பதில்?” காதில் விழுந்து இருந்தால் தானே பதில் வரும்.

“எப்படி இருக்கனு கேட்டேன்” என்றாள் திருத்தமாக.

“ஹாண்ண்ன்.. நல்லா இருக்கேன்” என்றவன் இதற்குள் மேல் அவளின் விழியை நேராக நோக்கும் தைரியம் அற்றவன், விழி தாழ்த்தி, செல்ல எத்தனிக்க.

“நான் எப்படி இருக்கேனு கேக்க மாட்டியா?” என்றாள் அவளாக.

“அதான் பார்த்தாலே தெரியுதே. ரொம்ப நல்லா இருக்கான்னு” என்றவன் அடுத்து அவளை பேச விடாமல்,

“வண்டியில ஏறு, நேரம் ஆகுது. வீட்டுக்கு போகணும்” என்றவன் அவளின் பதிலுக்கும் காத்திருக்காமல் காரில் ஏறி அமர்ந்தும் கொண்டான்.

“பாரு திமிர. இத்தனை வருஷம் ஆச்சு இன்னும் இந்த திமிரு மட்டும் மாறல. இவனை எல்லாம்…” பல்லை கடித்தவள், போனால் போகட்டும் என்று பணிவாக பேசினாள் வெற்றியிடத்தில்.

அந்த மரமண்டைக்கோ அது புரியாமல் போக, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி போல அவளிடம் சிக்கி சின்னாபின்னம் ஆக போகுறான் என்பதும் தெரியாமல், வழி மேல் விழி பதித்தவன் வண்டியை செலுத்த, காலமும் தன் சூழலை இனிதே துவங்கவும் செய்தது.

Advertisement