Advertisement

நேற்றைய நாள் பொழுதும், ஆதிக்காக அஞ்சலி காத்து கிடந்தும் அவன் வராமல் போக, அதுவே அஞ்சலியை வாட்டவும் ஏங்கவும் வைத்தது.

“இன்று நிச்சயம் வந்து விடுவான்” என்று சூர்யா கூறிய போதும் கூட,

ஏதேதோ சொல்லி மனதை தேற்றியவளுக்கு, “இந்த ஒரு நாள் பிரிவே இத்துணை துன்பத்தை தருகிறதே. அவ்வளவு ப்ரியம் அவன் மேல் தனக்கு வந்து விட்டதா?” நினைத்தவளுக்கு சிலிர்க்கவே செய்தது அஞ்சலிக்கு.

இன்றும் காலை உணவை தவிர்த்து, ஆதிக்காக வாசலில் காத்திருந்தவளிடம் வந்தான் சூர்யா.

“அஞ்சலி, இதோ இத பிரிச்சி பாருடா. உனக்கு பிடிச்சி இருக்கான்னு சொல்லு. இல்லனா உனக்கு பிடிக்குற மாதிரி வாங்கிடலாம்” என்றவன் ஒரு சிறு பையை அவள் முன் நீட்ட,

“என்ன இது!!”, என்ற குழப்பத்தில் அந்த பையை திறந்து பார்த்தவளுக்கு, வண்ண காகிதம் சுற்றப் பட்ட டப்பா ஒன்று கையில் கொடுக்கப்பட,

அதை பிரித்தவளுக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்து, பின் மகிழ்ச்சியில் மின்னவும் செய்தது.

“இது எனக்கா அண்ணா?” என்றவள் சூர்யா வாங்கி தந்த அந்த புது கைபேசியை தன் விரலால் வருடிய படி.

“உனக்கு தான் அஞ்சலி. தாயம்மாள் பாட்டி கிட்ட பேச தேவைப்படுமேன்னு வாங்கிட்டு வந்தேன்டாமா. இந்த மாடல் உனக்கு புடிச்சி இருக்கா. இல்ல வேற எதுவும் பார்த்து வாங்கிக்குறியா?”

“இதுவே எனக்கு அதிகம் அண்ணா. நான் எங்க ஊருல இருந்த அப்போ ஒரு என்.ஜி.ஒ-ல சேர்ந்து வீடியோ வழியா ஆங்கிலம் சொல்லி தர சேவை செஞ்சிகிட்டு இருந்தேன் அண்ணா. ரெண்டு நாளா சொல்லி குடுக்க போக முடியலையேன்னு வருத்தமா இருந்தது. அதுக்கு ஏத்த மாதிரி நீங்களே போன் வாங்கி குடுத்து உதவி பண்ணிடீங்க” என்றாள் உற்சாகம் பொங்க.

“வீடியோ வழியா ஆங்கிலம் கத்துக்குறதா. இது புதுசா இருக்கே. இப்டி ஒன்னு இருக்கா என்ன?” ஆச்சர்யம் தான் சூர்யாவிற்கு.

இருக்கு அண்ணா, சுமார் இரண்டு வருஷமா நான் இதை பண்ணிக்கிட்டு இருக்கேன். அதாவது கடலோர மக்களுக்கு பள்ளிகளே அதிகம் இருக்காது. அவுங்களுக்கு ஆங்கிலம் கத்துக்க வாய்ப்பே இல்லாமல் போய்டும்.

அதனால பிற்காலத்துல வேலைக்காக தங்கள் ஊருல இருந்து வெளிய வரும் போது அவுங்க சந்திக்கிற முதல் பிரச்சனை ஆங்கிலம் தான். அதுக்கு உதவியா இருக்கதான் என்னோட நண்பர்கள் சிலர் சேர்ந்து இப்டி ஒரு திட்டம் ஆரம்பிச்சி இலவச ஆங்கிலம் சொல்லி கொடுக்குறோம்” விளக்கினாள் அஞ்சலி.

“இதுவும் நல்லா இருக்கே. இது எப்படி செயல்படுது. இத பத்தி இன்னும் சொல்லு கேப்போம்” ஆர்வமானான் சூர்யா.

“அதாவது, இது ஒரு மூணு மாச ப்ரோக்ராம். ஒரு நாளைக்கு இருபது நிமிடம் செலவு பண்ணா போதும். சொல்லி குடுக்க விரும்பும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு குழந்தைன்னு பிரிச்சிடுவாங்க. அவுங்க வயசுக்கு ஏத்த மாதிரி அவுங்களுக்கு என்ன சொல்லி தரணும் என்பதும் கூட நமக்கு முன்னாடியே சொல்லிடுவாங்க.

நமக்கு குடுக்கப்பட்ட அந்த மூணு மாசத்துல நம்மளோட அந்த இலக்கை அடைந்து, குடுக்கப்பட்ட படத்தை பிள்ளைக்கு சொல்லி குடுக்கணும். அவ்ளோதான் அண்ணா” மிக எளிமையாய் கூறி முடித்தாள் அவள்.

“இது புதுசா இருக்குடாமா. இதுல சேருறதுக்கு பணம் எதுவும் கட்டணுமா? சொல்லி குடுக்குற ஆளுங்களை எப்படி தேர்ந்தெடுப்பாங்க. அதுக்கு பரிட்சை எதுவும் வெக்குறாங்களா?” வந்தது சூர்யாவின் அடுத்த கேள்வி.

“ஆர்வம் இருக்க தன்னார்வலர்கள் அவுங்களே முன் வந்து இதில் சேரலாம் அண்ணா. குழந்தைங்க கிட்டயும் எந்த காசும் வாங்குறது இல்லை. நமக்கு தெரிஞ்சதை மத்தவங்களுக்கு சொல்லி கொடுக்குறது தானே கல்வியின் நோக்கம். இது மொத்தமும் இலவசம் தான் அண்ணா” முடித்தாள் அஞ்சலி.

“இது மொத்தமும் ரொம்பவே நல்லா இருக்குடாமா. நானும் நேரம் கிடைக்கும் போது இதுல சேர்ந்துக்குறேன். என்னோட மத்த நண்பர்களுக்கும் இதை பத்தி சொல்லி சேர சொல்லுறேன்” என்றவன் அடுத்த வேலையை பார்க்க வீட்டிற்கும் சென்று விட.

அஞ்சலியோ, தன் புது போனை மொத்தமாக அலசி ஆராய்ந்து கொண்டு, தேவையானதை எல்லாம் அதில் ஏற்றி விட்டு, தாயம்மாளுக்கும் அழைத்து தன் புது எண்ணையும் அளித்து விட்டு,

சூர்யா, சிவகாமி, வெண்பா என்று அணைவரின் எண்ணையும் வாங்கி அதில் சேவ் செய்து கொண்டவளுக்கு,

ஆதியின் எண்ணை தான் முதலில் சேவ் செய்ய விருப்பம். ஆனால் அதை சூர்யாவிடம் இருந்து வாங்க விருப்பம் இல்லாதவள்,

“ஆதி வரட்டும். அவனிடமே எண்ணை வாங்கிக்கலாம். அப்போதான் நம்மளோட நம்பரை குடுக்க வசதியா இருக்கும்” இப்டி ஒரு திட்டத்தை வேறு மனதில் பின்னியவள், ஆவலாய் ஆதிக்காக காத்திருந்தாள்.

இன்று அவளை அதிகம் காக்க வைக்காமல், நேரத்தை விட முன்பே வந்து விட்டான் ஆதி.

வாசலில் இருக்கும் தோட்டத்திற்கு நீர்பாய்ச்சிக்கறேன் என்று சென்றவள், தனக்காக ஒரு மர நிழலை தேர்வு செய்து, சூர்யா அளித்த கைபேசியில் மும்முரமாக எதையோ அலசி கொண்டு இருந்தாள் அஞ்சலி.

வாசலிலேயே, அஞ்சலியை கவனித்தவன்,

“வீட்டுக்கு வெளிய உக்காந்து என்ன பண்ணுறா இவ? அதுவும் இவ்வளவு தீவிரமா எத பார்த்துகிட்டு இருக்கா?” யோசனையோடு அவளை நெருங்க.

தன் மேல் எதோ நிழலாட உணர்ந்தவள், யார் என்றும் கூட பார்க்காமல், கைபேசியில் மொத்த கவனத்தையும் செலுத்தியவள்,

“அண்ணா, டாம் அன்ட் ஜெர்ரி இந்த போன்ல எப்படி பாக்குறது. எதுல போய் பாக்கணும். நான் எங்க ஊருல இருந்த அப்போ ஒரு நாள் தவறாமல் பார்ப்பேன்” சலித்திக்கொண்டு பேசியவள் அப்போதும் வந்து நிற்பது யார் என்பதை கவனிக்கவே இல்லை.

அஞ்சலி தன்னை பார்ப்பாள் என்று எண்ணியவனின் காத்திருப்பு நீண்டு கொண்டே போக, பொறுமை இழந்தவன்.

“ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்” தொண்டையை லேசாக செருமினான் ஆதி. அதற்கும் தலை தூக்கி பார்க்காமல் கைபேசியில் மூழ்கி கிடந்தவள்,

“வெண்பாவை எங்க அண்ணா காணோம். வரேன்னு சொன்னாலே. எப்போ வருவா?” கேட்டாள் அடுத்த கேள்வியை.

“வெண்பாவா. அவளை பத்தி அஞ்சலிக்கு எப்படி தெரியும். ரெண்டு பேரும் எப்போ சந்திச்சாங்க. நான் கூட தான் வரேன்னு சொல்லி இருந்தேன். என்ன தேடுறாளா பாரு.

அது சரி எல்லாரும் நம்மள மாதிரி பாசக்கரங்களா இருப்பங்ன்னு நம்புனது நம்ப முட்டாள் தனம் தான்” தலையில் அடித்து கொள்ளாத குறையாக, மனதில் புலம்பியவனுக்கு, தன்னுடைய மனதும் அஞ்சலியை தேடுகிறது என்பது இந்த நொடி வரை விளங்காமல் தான் இருந்தது.

பொறுமை இழந்தவன், தன்னை அவள் தேடவில்லை என்று எண்ணியவன், அஞ்சலி மேல் தன் பார்வையை கூர்மையாக்க,

அவனின் அந்த பார்வை அஞ்சலியை வருடவும், தன் முதுகை எதோ ஒன்று துளைப்பது போன்றும், தன் பெண்மையை எதோ வருடுவது போலவும் அவள் உணர,

கவனம் மொத்தம் கைபேசியில் வைத்து கொண்டு, விழியை மட்டும் உயர்த்தினாள் மங்கை.

எதிரே அவளையே விழுங்குவதை போல் பார்த்து கொண்டு நிற்கும் அவனை பார்த்ததும், முதலில் அதிர்த்தவள், பின் செய்வதறியாது எழுந்து நிற்க, அதன் விளைவாய் கையில் இருந்த கைபேசியும் அவளை விட்டு கீழே நழுவி விழ போக, பதறி போய் அதை பிடிக்க நினைத்தவள் கைகளை காற்றில் நீட்ட, அதே நேரம் அவள் கைப்பேசியையும், அதை தழுவி இருக்கும் அஞ்சலியின் கையையும் இருக பற்றியது முரட்டு கைகள் இரண்டும்.

கைபேசியை தவறவிட்ட அதிர்ச்சியில் அஞ்சலி இருக்க. அதற்குள் தன் கைகள் மொத்தம் ஆதி கைக்குள் சிறைப்பட்டு கிடப்பதை உணர்த்தவளுக்கு முதல் முறை வெட்கம் எட்டி பார்க்கவே செய்தது.

அவர்களின் முதல் தொடுகை இருவருக்குள்ளும் பல மாற்றத்தை ஏற்படுத்தி, நாணத்தில் முகம் சிவக்க நின்றவள், தனக்கு மிக அருகே நிற்கும் அஞ்சலியை பார்வையால் வருடவும் தவறவில்லை.

அப்போதும் கூட கைபேசியை இறுக்கமாக பற்றி இருந்த அஞ்சலியை பார்க்கையில் கோவம் தான் வந்தது ஆதிக்கு.

“நான் ஒருத்தன் நேத்து முழுக்க இவளை பார்கலேயேன்னு இங்க வந்தா, இவ என்னடானா போனிலேயே மூழ்கி போய் நம்மள யார்னு கேப்பா போலவே. ஆமா யார் இவளுக்கு இதை வாங்கி குடுத்தது” யோசனையுடன் அஞ்சலி கையில் கிடக்கும் அந்த அலைபேசியை உற்று கவனித்தவனின் ஆராய்ச்சி பார்வை புரிந்து கொண்ட அஞ்சலி.

“அ..அ..அது சூர்யா அண்ணா தான் வாங்கி… ” என்றவள் தடுமாற.

ஒற்றை புருவத்தை தூக்கி முறைப்பை பதிலாக தந்தான் ஆதி.

அதில் பதறியவள்,

“நான் கேக்கல. அவரே தான் வாங்கிட்டு வந்தாரு. நிஜமா” என்றாள் இரு கையை தலையில் வைத்து சத்தியம் செய்தவளின், மறுகை கைபேசியை பற்றியே இருந்தது.

குழந்தை போல் தன் முன் நிற்கும் தன் மனைவியின் முகத்திலேயே தன் விழியை பதித்து , அவளை ரசித்து நிற்க, இளங்காலை தென்றல் இருவரையும் தழுவி செல்ல, அது சுமந்து வந்த சிறு தூசி அஞ்சலியின் விழியன் ஆக பட்டு அவளை உறுத்தி கிடக்க, பதறிய படி தன் மனையாள் துயர் நீக்க விரைந்தான் ஆதி.

அஞ்சலி எதிர் பாரா நேரத்தில் அவளை நெருங்கியவன், கண்களை கசக்கும் அவளின் கையை அகற்றியவன், அவளை மேலும் நெருங்கி, தன் மூச்சு காற்று படும் அளவு அருகில் நின்றவனின் கவனம் மொத்தமும் அந்த தூசியை அகற்றுவதிலேயே தான் இருந்தது.

திடீரென கிடைத்த ஆதியின் ஸ்பரிசமும், அவனின் சூடான மூச்சு காற்றும் பெண்மையின் மென்மைகளை சிலிர்ப்பிக்க, இதுவரை அவள் அறியா உணர்வு அவளை தட்டி எழுப்ப, அவனிடம் இருந்து விலக அவள் முயற்சிக்க, ஆதியோ.

“அசையாம இரு. கண்ணுல இருக்க தூசியை எடுக்குறேன். இப்டி ஆடுனா கண்ணு குத்திட போகுது” என்றவனின் முழு கவனமும் அவள் கண் மேல் கிடக்க, அஞ்சலி அசையாமல் தடுக்க அவள் இடை மேல் ஒரு கை வைத்து அவளை தன் வச படுத்தியவன்,

அவனின் இந்த தொடுகையில் சிலிர்த்தே விட்டாள் அஞ்சலி. சாவகாசமாக தூசியை எடுத்தவன், அப்போதும் அவளை விட்டு விலகாமல்,

இதோ பாரு காத்துல வந்த சின்ன குச்சி மாதிரி ஒன்னு கண்ணுல மாட்டிக்குச்சி. இதை எடுக்காமல் விட்டு இருந்தா என்ன ஆகுறது” எதையோ பெரிதாக சாதித்ததை போல காட்டினான் ஆதி, அப்போதும் அவள் இடை தழுவும் அவனின் கையையும், அவள் பெண்மையை தழுவும் அவனின் நெருக்கத்தையும் உணராமல்.

இதற்கு மேல் இந்த இன்ப அவஸ்த்தையை பொறுக்க முடியாதவள், தன் இடை தழுவி ஒய்யாரமாய் கிடக்கும் ஆதியின் கையை பற்றியவள், அதை விளக்கி விட்டு, தானும் இரண்டடி தள்ளி நின்று கொண்டாள்.

ஆதியை விட்டு விலகிய பின்னர் தான் ஏனோ சுவாசமே சீரான நிம்மதி அவளுள்,

ஆதியும் கூட ஒரு ஆர்வத்தில் அஞ்சலியை நெருங்கி நின்று கொண்டு இருந்ததை உணர்ந்தவன் முகத்தில் வெட்கமும் கூட ஒளிரவே செய்தது.

அதே சமயம் வீட்டின் நுழைவை திறந்து கொண்டு வந்தவரை காண இருவருமே திரும்ப, அவ்விடம் வந்து சேர்ந்தாள் வெண்பா.

“காலைலயே ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சிடீங்களா? அத உங்க ரூம்ல பண்ணலாம்ல. இப்டி தோட்டத்துல நின்னுகிட்டு என்ன மாதிரி வயசு பொண்ணுங்க மனச கலைக்காதீங்க” என்றவள் ஆதியின் அருகில் வந்து நிற்க, அவனோ,

“ஓ… மேடமுக்கு அந்த ஆசை எல்லாம் வந்துடுச்சா. ஒரு மாப்பிளையை பார்த்துட வேண்டியது தான்” என்றவன் அவள் காதை பிடித்து திருக முயற்சிக்க,

“ஹையோ அண்ணா. இது என்னோட காது. விடுங்க. நான் அப்புறம் அண்ணி கிட்ட கம்பளைண்ட் பண்ணிடுவேன்” என்றவள் ஆதியிடம் இருந்து ஓடி, அஞ்சலியை அணைத்த படி நின்று கொள்ள,

“அண்ணி இந்த அண்ணன் ரொம்ப பேட். நீங்க இவர் கிட்ட பேசாதீங்க” குழந்தை போல் அஞ்சலியிடம் சென்று விட்டாள் வெண்பா. போன வினாடி வரை பெரிய பெண்ணாக பேசிவிட்டு, இப்போது குழந்தை போல் பேசும் அவளை பார்க்கவே வியப்பாக இருந்தது ஆதிக்கு.

வெண்பாவின் நிமிடத்தில் மாறும் அந்த குறும்பு தனத்தை ரசித்தவன், அவளுடன் தானும் சேர்ந்து கொண்டு அவளின் காதை திருகுவதை போல் லேசாக பற்றியவன்,

“அண்ணி கிட்ட போய் ஒளிஞ்சிகிட்டா உன்னை விட்டுடுவேனா. உண்மையை சொல்லு. நாங்க தான் மாப்பிளை பாக்கணுமா இல்லை நீயே யாரையாச்சும் பார்த்து வெச்சி இருக்கியா?” என்றான் குறும்பாக.

இதுவரை அமைதியாக தேவைக்கும் மட்டும் பேசி, திடமான முடிவெடுக்கும் ஆதியின் குணத்தை பார்த்த அஞ்சலிக்கு, ஒரு சேர அவன் இத்துணை வார்த்தைகளை பேசியதை பார்த்த வியப்பாக தான் இருந்தது. கண் இமைக்காமல் அவனையே அவள் பார்த்து நிற்க,

அதை ஓரத்தில் கவனித்தவன், அவள் அசந்த நேரம் அவளை பார்த்து கண்ணடித்து விட்டு மர்ம புன்னகையுடன் மீண்டும் வெண்பாவுடன் பேச்சில் இணைந்து கொண்டான் அந்த கள்வன்.

எதிர்பாரத நேரத்தில் அவனின் இச்செயல் புதிதாய் மலர்ந்த மலராய் பூத்தவள், முகம் சூடேறி, கன்னங்கள் அனைத்தும் சிவந்து, மங்கையவளின் விழியும் கூட ஆணவனின் கதிர்வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், நிலத்தை நோக்கி நாணத்துடன் நின்று கொண்டு இருந்தாள் அஞ்சலி.

“ஆமாம் எங்க கல்யாணத்தை பத்தி உனக்கு யார் சொன்னது?” வினவினான் ஆதி வெண்பாவிடம்.

“வெற்றி அண்ணா தான் சொல்லுச்சு. அதுவும் தூக்கத்துல ஒளறிடிச்சி. நான் அப்டியே போட்டு வாங்குனேன் அவனும் சொல்லிட்டான்” எதையோ சாதித்தது போல பெருமிதத்தில் சிரித்தாள் வெண்பா.

“பார்த்தியாடா அந்த கொரங்க. யார் கிட்டயும் சொல்லாதேன்னு சொல்லி அனுப்பினா. அடுத்த நாளே உளறி கொட்டி இருக்குறத. அவனை வெச்சிக்கிட்டு ரொம்ப கஷ்டம்டா” ஆதியின் வரவை பார்த்ததும் அங்கு வந்து சேர்ந்தான் சூர்யா.

“அவன் இப்டி எல்லாம் சொதப்புவான்னு தெரியும்டா. சரியான ஓட்ட வாயி” தலையில் அடித்து கொண்டான் ஆதி.

“ஆமா நீங்க ரெண்டு பெரும் ஸ்வாதி குடும்பத்தை கூட்டிட்டு வரதா சொன்னீங்க. போகலையா? நேரம் ஆகுதே” என்றான் சூர்யா கைக்கடிகாரத்தை பார்த்த படி.

“ரெண்டு பேரும் போறதா தான் இருந்தோம்டா. காலைல உன்னோட மாமா வந்து அவரும் கூட வரேன்னு சொன்னாரு. வர போற மூணு பேரை கூப்பிட எதுக்கு இத்தனை பேர் போகணும்னு நான் வரலைன்னு சொல்லிட்டு இங்க வந்துட்டேன்” என்றான் ஆதி சாதாரணமாய்.

“அண்ணிய பாக்காம இருக்க முடியல அதனால இருக்க வேலைய விட்டுட்டு இங்க வந்து இருக்கானு சொல்லு அண்ணா. எதுக்கு கதை எல்லாம் சொல்லுறே” முன்னெச்சரிக்கையாக அஞ்சலி அருகில் நின்று கொண்டு வாயடித்தாள் வெண்பா.

“ஏய்ய்ய் வாயாடி. இங்க வாயேன்” என்றான் ஆதி எதோ பாசமாக அழைப்பது போல்.

“மாட்டேன். வந்த அடிப்ப. நான் வரமாட்டேன் போ” என்றவள்.

“அண்ணி நீங்க வாங்க நாம உள்ள போகலாம்” என்றவள் அஞ்சலியையும் தன்னுடன் இழுத்து சென்று விட.

“அடிப்பாவி. இவள பாக்க, இருக்க வேலையெல்லாம்விட்டுட்டு இங்க வந்தா இவ நம்மள கண்டுக்காம வெண்பா கூட கைகோர்த்துக்கிட்டு போறாளே. இதுல போன் வாங்குனத கூட சொல்லல. நம்பர் கொடுக்கணும்னு அறிவு இருக்கா பாரு. திருடி திருடி” மனதில் அஞ்சலியை வசை பாடினாலும் கோவம் என்னவோ வரவே இல்லை ஆதிக்கு.

ஆதி இரண்டடி எடுத்து வைத்த பின்னும் கூட அசையாமல் அதே இடத்தில் நின்று எதையோ யோசித்து கொண்டு இருக்கும் சூர்யாவை கவனித்தவன்,

“என்னடா திடீர்னு எதையோ யோசிச்சிட்டு இருக்க. என்ன ஆச்சு?”

“நீ பாட்டுக்கு வெற்றியை அங்க விட்டுட்டு வந்துட்ட. வெற்றிக்கும் ஸ்வாதிக்கும் ஏழாம் பொருத்தம்னு உனக்கே தெரியும்ல. அங்க அதுங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்களோ தெரியலையே” யோசனையில் இருந்தான் சூர்யா.

“நீ சொல்லுறதும் உண்மை தான்டா. சும்மாவே ரெண்டும் எலியும் பூனையா அடிச்சிப்பாங்க. அதான் உன் மாமா அங்க இருக்காருல அவர் பார்த்துப்பாரு விடு” என்றவன் வீட்டிற்குள் செல்ல முற்பட்ட,

“எனக்கு மாமன்றத விட உனக்கு அவரு அப்பாடா. நீ அவர அப்பான்னு எப்போ கூப்பிட போறே. இதுல அஞ்சலியை பத்தி எப்படி சொல்ல போறே. இது எல்லாம் எப்படி சரி ஆக போகுதுன்னே எனக்கு புரியலடா” உண்மையான வருத்தத்தில் பேசினான் சூர்யா.

எப்போதும் போல் இம்முறையும் மௌனமே ஆதியிடம் இருந்து பதிலாக வர, அதை எதிர் பார்த்த சூர்யாவோ.,

“அப்பாக்கும் புள்ளைக்கும் நடுவுல இருக்க பணி போர் எப்போதான் முடிய போகுதோ தெரியல” என்றவன் சலித்து கொண்டாலும், அதற்கு மேல் அவனால் எதுவும் செய்ய முடியாது என்பது சூர்யா அறிந்த ஒன்றே.

யோசனையுடன் இருந்தவனை அழைத்த ஆதி,

 “என்னடா யோசிக்குறே? நீ யோசிச்சி இங்க எதுவும் மாற போறது இல்ல. வா உள்ள போவோம்” என்க.

“ஸ்வாதி பேர் கேட்ட நமக்கே இப்டி இருக்கே. அவ கிட்ட மாட்டிகிட்டு அங்க அவன் என்ன பாடுபடுறானோன்னு நெனச்சி பார்த்தேன்” முடிக்கும் முன்பே இருவருக்கும் சிரிப்பு வர, சத்தமாக இருவரும் சிரித்து மகிழ, அங்கு வெறுப்பில் வெந்து கொண்டு இருந்தான் வெற்றி.

Advertisement