Advertisement

மனம் மயக்கும் மல்லிகை மனமும், சிணுங்கும் கால் கொலுசின் ஒலியும், தோளை மறைக்கும் கூந்தலும், ஓர பார்வையில் ரசித்தவனின் பார்வை,

அவளின் இடை கடந்து கழுத்தை அடைந்து மங்கிய நிலவொளியாய் ஒளிரும் அவளின் பூமுகம், தெளிவாகத் தெரியாத போதும் கூட, அது அவன் மனதில் ஒரு நிம்மதியையும், அமைதியையும் கொடுக்க, அதில் லயித்து இருந்தவனின் கனவைக் கலைக்கவே அழைத்தான் அந்தப் பாழாய் போனவன்.

கண் விழித்ததுமே, ‘தான் கண்டது அனைத்துமே கனவு’ என்று உணர்ந்தவனின் மனதில் அமைதியும், நிம்மதியும் இப்போதும் நிலைக் கொண்டே தான் இருந்தது.

அலறிக் கொண்டு இருக்கும் அலைபேசியின் பக்கம் கவனத்தைத் திரும்பியவன், அழைப்பது யார் என்பதையும் அறிந்தே இருந்தான் அவன்.

சிறு சலிப்புடன் அந்த அழைப்பை ஏற்க,

“டேய் என்னோட அந்த ப்ளூ ஷர்ட் உன்கிட்டயா இருக்கு… என்னோட இயர் போட் கூட காணோமேடா… எங்க இருக்குனே தெரியலையே” எடுத்த எடுப்பில் விஷயத்தைக் கூறாமல் புலம்ப ஆரம்பித்தான் சூர்யா.

“டேய்.. பிபி வந்த பன்னிக்குட்டி மாதிரி கதறாம என்ன ஆச்சுன்னு பொறுமையா சொல்லு” என்றான் இவன் தூக்கம் வழியும் குரலில்.

“இன்னும் என்னடா சொல்லணும்… ஷர்ட்டும், போடும் காணோடா” என்றான் அதே படபடப்புடன். அதோடு நில்லாமல்,

“போட் இல்லாம நான் எப்படி பாட்டு கேப்பேன்.. என்னோட ஒரு கையே உடைஞ்ச மாதிரி ஆகிடுச்சே” நிறுத்தாமல் புலம்பியவனை,

“அடேய் நீ தானேடா நேத்து வெற்றி கிட்ட குடுத்து சார்ஜ் போட்டு வெக்க சொன்னே… காலங்காத்தால போன் பண்ணி ஏன்டா இப்டி உயிர எடுக்குறே” என்றான் சலித்த படி.

“அப்படியா.. நானா குடுத்தேன்…அப்போ சரி” என்றான் படு கூலாக.

“அடச்சி போன வெய்” என்று வைக்க போனவனை,

“அடேய் நீ இன்னும் எழுந்துகலயா? டைம் ஆகுதுடா” என்றான் சூர்யா.

அப்போது தான் அவர்களின் திட்டம் அவனுக்கு நினைவிற்கு வர,

“மறந்துட்டேன்டா.. இதோ எழுந்துக்குறேன்” என்றவன் சற்றும் அசையாமல் தான் படுக்கையில் கிடந்தான்.

“என்னாது மறந்துட்டியா? நைட் எவ்ளோ சொல்லி அனுப்புனேனேடா… உங்களை எல்லாம் வெச்சிக்கிட்டு….” என்றும் சூர்யா பேசும் போதே அதைக் காதிலும் வாங்காமல் அழைப்பைத் துண்டித்தான் அவன்.

அப்போது தான் நேற்று அவர்களுக்குள் போட்ட திட்டம் அனைத்தும் நினைவிற்கு வந்தது அவனுக்கு. மணியைப் பார்த்தவன் அது நான்கைக் காட்ட, ஆறு மணிபோல் கிளம்ப வேண்டுமே என்ற எண்ணத்தோடு கட்டிலில் எழுந்து அமர்ந்தான்.

கட்டிலில் அமர்ந்த படியே, மனம் இன்றி வானைப் பிரியும் நிலவும் அதை தடுக்கும் நட்சத்திரமும் மின்னி கொண்டு இருக்க.. கார் மேகமும் கூட நிலவைப் பிரிய மனம் இல்லாமல் கருத்து போய் தன் சோகத்தை வெளிக்காட்ட, இவர்களின் சோகத்தைக் கண்ட சூரியனுமே கூட சில வினாடிகள் தாமதித்து உதிக்க அனுமதி கொடுத்து காத்துநிற்க, நிலவு பிரியா விடை பெற்று கொண்டு இருந்த அதிகாலை நேரம்.

அப்போது தான் எழுந்ததால் மேல் சட்டை இல்லாமல், கலைந்த கேசத்துடன், தூக்கம் கண்ணில் ததும்பி கொண்டு இருக்க, வேறு வழி இன்றி படுக்கையை விட்டு எழுந்தவன். குளியறைக்குள் புகுந்து கொண்டான் ஆதித்யன்…

ஆதித்யன், ரகுராம் பார்வதி தம்பதியரின் ஒரே புதல்வன். விழுப்புரம், தஞ்சாவூர் இரண்டையும் ஒட்டி இருக்கும் மருவூரை சேர்ந்தவர்கள்.

பல காலத்திற்கு முன்பு ஜமீன்தார் ஆட்சிகள் அனைத்தும் முற்று பெற்று நிலங்களை ஊர் மக்களுக்கு பகிர்ந்து தரும் படி அரசு ஆணையிட்ட நேரத்தில், அக்கம் பக்கம் இருக்கும் ஜமீன்தார்களில் முதல் ஆளாக மருதூர் ஜாமீன் மருதப்பாண்டி தான், தானே முன் வந்து தன் நிலங்களை எல்லாம் பிரித்து வழங்கினார்.

அதனால் அவரின் பெயரைக் கொண்டே மருதூர் என்று ஆவ்வூருக்கு மக்கள் பெயர் வைத்து விட. பின்னாளில் இந்த பெயரினாலேயே ஜாதி கலவரங்கள் துவங்கவே அரசு இதில் தலையிட்டு மருதூர் என்றதை பற்றி மருவூர் என்று ஏடுகளில் பதித்தது.

மருதப்பாண்டியின் மகன், மருதநாயகமும் கூட கொடுக்கும் பழக்கம் உடையவரே தவிர, பறிக்கும் பழக்கம் முற்றிலும் இல்லை அவர் இடத்தில். நிலங்கள் பிரித்து வழங்க பட்டதால்.. அவர்களுக்கு இருந்த மீதம் சொத்திலும் கூட வளர்ச்சியே கண்டு இருக்க.. இன்று மருவூரின் பெயர் சொல்லும் பணக்கார குடும்பங்களில் அவர்களும் ஒன்றாகி போயினர்.

மருதநாயகம் மகன் தான் ரகுராம். இந்த வம்சத்தில் தப்பி தவறுதலாக பிறந்த ஒரே வாரிசு இவர் தான். தான் பார்க்கும் அத்துணை பொருளையும் பணம் ஆகும் நோக்குடனே இருப்பவர் அவர். அவரின் நினைவு மொத்தமும் பணத்திலேயே இருந்து விட குடும்பமும், பாசமும் அவரை விட்டு தூரம் ஆயின.

அதனால் தனக்கு பிறந்த ஒரே வாரிசான ஆதித்யனைக் கூட அவர் பாசம் கொடுத்து வளர்க்காமல் அதிகாரம் செய்தே பழகி இருக்க, பின்னாளில் அதுவே தந்தைக்கும் மகனிற்கும் இடையே மிக பெரிய விரிசலை ஏற்படுத்த காரணமாகி போனது.

ஆதித்யன் மொத்தம் தன் தாத்தா மருதநாயகம் போல், ‘இருக்கும் வரை தானே வாழ்வு, அதில் பகிர்ந்து மற்றவருடன் சேர்ந்து வாழ விரும்புபவன்’.

அவனின் தாய் பார்வதி ஒரு அப்பாவி. குணமற்ற கணவனிடம் மாட்டிக்கொண்டு தவித்தாலும் முகத்தில் என்றும் ஒரு கவலை கோடு கூட தெரியாத அளவிற்கு குடும்பம் நடத்தும் கெட்டிக்காரி.

மருதநாயகத்திற்கு ஒரு மகளும் கூட உண்டு. அதாவது ரகுநாத்திற்கு ஒரு தங்கையும் உண்டு.

பெயர் சிவகாமி, சிவமே மயமாகி பொறுமையும் வீரமும் கொண்டு இருக்க வேண்டும் என்றே இந்த பெயரை வைத்து இருக்க.,

பெயருக்கு ஏற்றார் போல் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் அவருக்கு.. பெண்கள் தங்கள் முடுவுகளை தானே எடுக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்து வளர்க்கப் பட்ட அவருக்கு, திருமண வயது வந்த பிறகு அந்த முடிவையும் அவரே எடுத்து,

குணத்தில் சிறந்து, ஜாதியில் மட்டும் குறைவாக இருப்பதாக கூற பட்ட சந்தானம் என்றவரை அவர் மணக்க முடிவு செய்ய,

மருதநாயகமும் கூட சில யோசனைகளுக்கு பின் ஒப்பு கொண்டு விட்டார். ஆனால் ரகுநாத் தான் தனக்கு கீழ் வேலை செய்யும் ஒருவன் தனக்கு மாப்பிள்ளை ஆவதா என்ற கோவத்தில் இந்த திருமணத்தை எதிர்க்க,

அதை எதையும் பொருட்படுத்தாமல் மருதநாயகம் திருமணம் நடத்தி வைத்தார். ஆனால் ஊர் மக்களும் இதை எதிர்ப்பார்கள் என்று தெரியாமல் போய் விட பல வருட ஊர் வழக்கம் என்ற பெயரில் சந்தனத்தையும், சிவகாமியையும் ஊரை விட்டே ஒதுக்கியும் வைத்தனர்.

அவர்களின் தவபுதல்வன் தான் சூர்யா. ஆதியின் ஆருயிர் நம்பன். ஜாதி காட்டி அவனின் பிள்ளை பருவம் மொத்தமும் காயமும் வடுகளாகவே நிறைந்து இருக்க.. இவற்றை போக்க படிப்பு மட்டுமே ஆயுதம் என்று உணர்ந்தவன், படிப்பில் கவனம் செலுத்த துவங்க, அதன் விளைவாக ஏசிபியாக அவனுக்கு வேலையும் கிடைத்து,

அவனின் திறமைக்காக அவனை அவனின் சொந்த ஊரிற்கே மாற்றமும் செய்து, இன்று தன் சொந்த ஊரிலேயே வாழ்ந்து வருகிறான்.

இப்போது சில காலமாக தான், அதுவும் ஆதி தலையிடவே, சூர்யாவும் அவனின் குடும்பமும் ஊருக்குள் அனுமதிக்க படவும், கோவிலுக்குள் வர, போகவும் முடிந்தது.

ஆனாலும் ரகுனாத்திற்கு இதில் துளியும் விருப்பம் இல்லாமல் போனாலும், “தன் மகனை எதிர்த்து பேசினால் மட்டும் அவன் கேட்கவா போகிறான்” என்று வேறு வழி இன்றி அமைதி காக்கவே செய்தார்.

குளித்து முடித்தவன் தன் அறையில் தயாராகி கொண்டு இருக்க… அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் பையில் அடுக்கி வைக்கவே மணி ஏழைக் கடந்தது.

மணி ஏழைக் கடந்தும் கூட சூர்யா அலாரம் போல அழைக்கவில்லையே என்று அவன் நினைத்தும் கூட முடிக்கும் முன்பே அவனின் வீட்டு வாசலில் வந்து இறங்கினான் சூர்யா.

“வந்துட்டான் ஏழரை” என்று முனு முனுத்த படி புன்னைகையுடன் தலையைச் சீவி கொண்டு இருந்தான் ஆதி.

சூர்யா உள்ளே நுழைய, அங்கே அரக்க பரக்க சூடு சூடு இட்லியை தன் வாய்க்குள்ள அவசரமாக போட்டு கொண்டு இருந்தார் ரகுநாத்.

கையில் மேக் பூக்கோடு எதையோ பார்த்து கொண்டு இருந்தார் மருதநாயகம்.. அந்த கருவியைப் பயன் படுத்த சொல்லி கொடுத்து, அதை அவருக்கு வாங்கி கொடுத்தவனும் சட்சாத் நம் சூர்யா தான்.. தாத்தா தாத்தா என்று பாசம் அதிகம் அவனுக்கு அவர்மேல்… முக்கியமாக அவரின் முன்னோக்கு கொள்கையின் மீதும், அவரின் அனுபவ பார்வை மீதும்.

எப்படியும் ரகுநாத் தன்னிடம் பேச மாட்டார் என்பதை அறிந்தவன், நேரே தன் தாத்தாவிடம் சென்றவன்,

“என்ன தாத்தா காலைலயே என்ன ஐ பாட் வெச்சிக்கிட்டு நோண்டிகிட்டு இருக்கீங்க?” என்றான் அவர் அமர்ந்து இருக்கும் நாற்காலியில் கீழ் அவரின் அருகில் அமர்ந்த படி.

“ஒன்னும் இல்லடா… எதோ பப்ஜினு ஒரு கேம் வந்து இருக்காம்.. எதோ சுடுற கேமாம். அதை விளையாட டவுன்லோட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றார் படு சாதாரணமாக.

“எது பப்ஜியா… அது வேற மாதிரி கேம் தாத்தா… அதெல்லாம் உங்களுக்கு விளையாட வராது” என்றவனை பார்த்தவர்,

“அது சுடுற கேம் தானே… அதுல என்னடா பிரமாதம்… நான்லாம் அந்த காலத்துலயே மிலிட்டரி போக செலக்ட் ஆனவன். உங்க பாட்டி தான் போக விடாம கட்டி போடுட்டா… அதான் இப்போ சுட்டு தள்ள போறேன்” என்றார் வீரமாக.

“சரி தான்.. இனி இவரை கைல பிடிக்க முடியாது” என்று உணர்ந்த சூர்யா, மருதநாயகம் காதுகளை நெடுங்கி,

“இந்த மும்பை மெயில் எங்க போக இவ்வளவு பரபரப்பா சாப்டுகிட்டு இருக்காரு… எந்த ட்ரெயின் மிஸ் ஆக போகுதாம்” என்றான் ரகுநாதனைப் பார்த்து,

அவர் அரக்க பரக்க சாப்பிடுவதைக் கண்ட மருதநாயகத்திற்கு கூட சிரிப்பு வர.. அமைதியாய் இருவரும் சிரிப்பதைப் பார்த்தே விட்டார் ரகுநாத்.

“என்ன சிரிப்பு ரெண்டு பேருக்கும்?” என்றார், இனிமையற்ற கோவ குரலில்.

“அது நாங்க இளவட்டம் ஆயிரம் பேசி சிரிப்போம்… உனக்கு எதுக்குயா அதெல்லாம்” என்றார் மருதநாயகம் ஒரேயடியாக.

அதில் சூர்யாவிற்கு கூட ஜெர்க் ஆனது உண்மை தான். ஆனால் காட்டி கொள்ள முடியாதவன் தன்னுள் மட்டும் சிரித்துக் கொண்டு இருந்தான்.

“தலை எழுத்து” என்று கருதிய ரகுநாத்,

“உங்க பேரனுக்கு பொண்ணு ஒன்னு பார்த்து இருக்கேன். நல்ல வசதியான குடும்பம். நமக்கும் பழக்கப்பட்ட குடும்பம் தான். அந்த பொண்ணக் கட்டிக்கிட்டா ரெண்டு சொத்தும் ஒன்னு சேரும். அவன் கிட்ட பேசுங்க இத பத்தி” என்றார் உத்தரவாய்.

ஆதி மனம் புரிந்த மருதநாயகமும், சூர்யாவும் அதற்கு என்ன பதில் கூறுவது என்பது புரியாமல் இருக்க, அவர்களைக் காப்பாற்றவே வந்தது போல் வந்தார் பார்வதி.

“ஒரு வாரம் எங்கயோ சுத்தி பாக்க போறாங்கல. போய்ட்டு வரட்டும். அதுக்கு அப்புறம் பொறுமையா பேசிக்கலாம்.. இப்போ பேசுனாலும் பதில் சொல்ல மாட்டான் ஆதி” என்றார் அவர்.

அதிலும் நியாயம் இருப்பது போல் ரகுனாத்திற்கு பட,

“எங்க போறாங்களாம்?” என்றார் பொதுவாக.

கேள்வி என்னவோ சூர்யாவிற்கு தான்.. அது அங்கு இருக்கும் அனைவர்க்கும் தெரியும். ஆனால் அவனிடம் நேராக எப்போதும் பேசியது இல்லை ரகுநாத்.

என்றாவது ஒரு நாள் அவர் தன்னிடம் பேசுவார்… மாமா என்று அவர் தோள் சேர்ந்து அவரை அணைத்து கொள்ள சூர்யாவிற்கு ஆசை தான். ஆனால் அதற்கான சாத்திய கூறுகள் தான் கண் கெட்டும் தூரம் வரை தென்படவே இல்லை.

கேள்வி தனக்கு தான் என்று உணர்ந்தவன், “திண்டுக்கல் பக்கத்துல ஒரு ஊருக்கு போறோம் மாமா… ஒரு கேஸ் விஷயமா போக வேண்டி இருக்கு. ஆதியும், வெற்றியும் கூட வரதா சொன்னதால மூனு பெரும் போறோம்” என்றான் கிட்டத்தட்ட சுவற்றிக்கு பதில் அளிப்பது போல.

இவனின் பதிலுக்கு ரகுநாதிடம் இருந்தும் கூட பதில் எதுவும் வராமல் போக. அதை முன்பே அறிந்தவன், தன் நண்பனை தேடி அவனின் அறைக்கே சென்றான் சூர்யா.

அறையில், அழகாய் இருக்கும் கேசத்தை மேலும் சீவிக் கொண்டு இருந்தான் ஆதி. உயிரைக் கொடுக்க சொன்னாலும் கூட கொடுத்து விடுவான். ஆனால் தலையின் ஒரு பகுதி முடி உதிர்ந்தாலும் மானஸ்தன் உயிரை விட்டு விட்டுவான்.

சிறு வயதில் இருந்தே ஆதிக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மொட்டை தான். விவரம் அறியாத வயதில் போட்ட மொட்டையோடு சரி. அதன் பின் அவன் தன் முடியில் யாரையும் கை வைக்கவே விட்டது இல்லை.

அவனுக்கு பதிலாக பார்வதி இரண்டு முறை மொட்டை அடுத்தது தான் மிச்சம்.

உள்ளே வந்தவன், “டேய் போதும்டா… ஆறு மணிக்கு கிளம்பனும்னு சொன்னேன். இப்போவே மணி எட்டு ஆக போகுது. இன்னும் அந்த வெற்றி பண்டாரம் என்ன பண்றான்னு தெரியல… போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறான். வாடா போகலாம்” என கிட்டத்தட்ட கெஞ்சிக்கொண்டே நிற்கும் அந்த ஏசிபியை பார்க்க ஆதிக்கே சிரிப்பு தான் வந்தது.

“சரிடா சரிடா… ரொம்ப சலிச்சிக்காத… வா போவோம்” என்ற படி இருவரும் கிளம்பி கீழே செல்ல.

ரகுநாத் அப்போது அவ்விடம் இல்லை. கிளம்பி விட்டார் போல.. இருந்து இருந்தால் மகனுக்கும் தந்தைக்கும் மூன்றாவது உலக போறே நடந்து இருக்கும்.

அது தெரிந்து தான் பார்வதி ரகுநாதை சீக்கிரம் கிளப்பி அனுப்பியும் வைத்து இருந்தார்.

இந்த முரண்பாடாக வாழும் மகன் தந்தையின் உறவில் இருக்கும் விரிசல், மேலும் உடையாமல் இருக்க, அதை காக்கும் பாலமாகவே இருக்கிறார் பார்வதி.

அனைவரிடமும் கூறிக் கொண்டு இருவரும் புறப்படும் சென்று விட,

பார்வதியின் மனதில் மட்டும் ஏனோ என்றும் இல்லாமல் இன்று, ஆதியின் திருமண கனவு தான் அதிகம் தோன்றி இருந்தது.

Advertisement