Advertisement

அத்தியாயம்-6

சைந்தவி பயத்தில் ஓடி கொண்டிருக்கும் போது எதிரில் வந்தவன் மீது மோத, இருவரும் சேர்ந்து காட்டில் இருக்கும் பள்ளம் நோக்கி உருண்டனர்.

பள்ளத்தில் அவர்கள் உருளும் சமயம் அவளுக்கு அடி எதுவும்பட கூடாது என்று எண்ணிய சூர்யாவின் கரம் பெண்ணவளின் மென் இடையில் அழுந்த பதிந்து தன் உடலோடு இறுக்கி இருந்தது.ஒருவழியாக தன்னை நிலை செய்து மரத்தின் உதவியுடன் அவர்கள் உருள்வது நின்ற சமயம் ஏற்பட்ட அதிர்வில் சூர்யாவின் மேல் இருந்த சைந்துவின் இதழ்கள் அவன் இதழோடு அழுத்தமாக பதிந்து மீண்டது. நடந்த சம்பவத்தை கூட உணராத சைந்து அவனின் கழுத்தில் முகம் புதைத்து,சட்டையை இறுக்கமாக பிடித்து கண்களை மூடி “சார் ப்ளீஸ் காப்பாத்துங்க…. ப்ளீஸ் காப்பாத்துங்க….”என்ற வார்த்தையையே மீண்டும் மீண்டும் உச்சரித்து கொண்டிருந்தாள்.

சூர்யா சற்று முன் நடந்த நிகழ்வில் திகைத்து சிலையாகிதான் போனான். எதிர்பாராமல் நடந்த நிகழ்வு என்றாலும் அது அவனது முதல் முத்தம்.ஒரு நொடி உடல் சிலிர்த்து போனவன் காதில் அவள் சொன்ன வார்த்தைகள் விழ, சுய உணர்வு அடைந்தவன்.அவள் தோளை தட்டி “ஹலோ….நீங்க எழுந்தாதான்.நான் அவங்க யாரு என்னன்னு பார்க்க முடியும்”என்று சொல்ல, பட்டென்று கண் விழித்தவள் அப்போதுதான் உணர்ந்தாள் தான் இருக்கும் நிலையை உடனே “சாரி சார். நா…. நான் உங்களை கவனிக்கல.அ…. அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்ததுல தெரியாம….”என்று தடுமாறி கூறியபடி எழுந்தாள்.

சூர்யா, “பரவால்ல…. இப்போவாவது எழுந்தீங்களே” என்று நிமிர்ந்தவனின் கண்கள் சாசராக விரிந்தது. மின் விளக்குகள் ஏதும் இல்லாத அந்த நடுக்காட்டில் பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் சேலைஇல்லாமல் தன் முன் நின்றிருந்தவளின் அழகை கண்டு.“ஹோ…. சிட்…”என்று தலையில் அடித்து கொண்டவன் அவளுக்கு எதிர் புறமாக திரும்பி தன் சட்டையை கழட்டி “இதை போட்டுக்கோங்க” என்று கொடுக்க, அவளுக்கும் அப்போதுதான் தான் நின்றிருந்த நிலை நினைவு வர முகம் அவமானத்தில் சிவக்க கூனி குறுகி போனாள்.

“தேங்க் யூ….அண்ட் சாரி…நான்….”என்று ஏதோ சொல்ல வந்தவளின் வார்த்தை, அவனின் “இட்ஸ் ஓகே. ஐ கேன் அண்டர் ஸ்டாண்ட்…”என்ற வார்த்தையில் நின்று போனது.

சூர்யா கையில் இருந்த துப்பாக்கி அவர்கள் உருண்டதில் எங்கோ விழுந்திருக்க, இனி அவர்களை அடித்துதான் வீழ்த்த வேண்டும் என்று தனக்குள் முடிவெடுத்து கொண்டவன். அவர்கள் யார் என்ற விவரம் அறியும் பொருட்டு “அவங்க யார்? என்னன்னு உனக்கு எதாவது தெரியுமா?” என்று கேட்க, அவளோ மறுப்பாக தலையசைத்தாள்.

“என்ன காரணத்துக்காக கடத்துனாங்கன்னு தெரியுமா?”

“அது….. அவங்க பேசிக்கிட்ட விஷயத்தை வச்சு நானே தெரிஞ்சுக்கிட்டேன்”என்றவள், அவளை காட்டின் உள்ளே அவர்கள் இழுத்து வரும்போது நடந்த அனைத்தையும் சொல்ல, அவனோ “ம்ம்ம்….”என்று கேட்டு கொண்டானே தவிர வேறு எதுவும் பேசவில்லை.

காட்டில் அந்த கடத்தல்காரர்களை தேடி சூர்யா கண்கள் நாலா புறமும் சுழன்று கொண்டிருக்க அப்போது ஒரு குரல் கொடூரமாக கேட்டது. ஆழ்ந்த அமைதியாக இருந்த காட்டிற்குள் கேட்ட அந்த குரலில் சைந்து நடுங்கி போனாள். அதனால் அவளையும் அறியாமல் சூர்யாவை நெருங்கி அவன் கையை இறுக்கமாக பிடித்து கொண்டாள். அவள் கையின் சில்லிப்பும்,அதில் இருக்கும் நடுக்கமுமே அவளது பயத்தை அவனுக்கு உணர்த்த தன் எதிரில் நின்றிருந்தவர்களை வேட்டையாடும் பார்வை பார்த்தான்.

“ஹேய் யாருடா நீ…”என்றொருவன் கேட்க, மற்றவனோ “மச்சி உனக்கு தெரியல இவன்தான் ஹீரோ. நம்மகிட்ட இருந்து ஹீரோயின காப்பாத்தி கூட்டிட்டு போய் நாம செய்ய நினைச்சதை அவன் லவ்ங்கற பேர்ல செய்வான்”.

“டேய் அதுக்கு அவன் உசுரோட இங்க இருந்து போனாதானே இங்கயே இவன் கதையை முடிச்சுட்டு, அப்புறம் அந்த மயில்கிட்ட போகலாம்”என்றவன் சூர்யாவை தாக்க போக,கோபத்தில் இருந்த அவனும் கண்மண் தெரியாமல் அவர்களை அடிக்க ஆரம்பித்தான். நால்வரும் ஒன்றாக வந்து தாக்கியும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அடி வெளுத்து எடுத்து விட்டான் சூர்யா.அந்த நால்வரின் உடலில் உயிர் மட்டும்தான் இருக்கிறது என்ற நிலையில் அவர்களைவிட்டவன் தன் வண்டி இருக்கும் இடம் நோக்கி நடந்தான்.

ஆணவன் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் பின்னாடியே ஓடிய சைந்து ஒரு நிலைமைக்கு மேல் முடியாமல் ஓய்ந்து போனாள்.

சைந்து, “சா…. சார் கொஞ்சம் மெதுவா போங்க. என்னால நடக்க முடியல. இன்னும் எவ்ளோ தூரம் நாம போகணும்”என்று கேட்க, அவனோ நெற்றியை தேய்த்து கொண்டே “தெரியல……”என்றான். அதை கேட்டு திகைத்தவள் “வாட்….”என்று கத்த, அவனோ “ஆமாம்……”என்னும்விதமாக தலையாட்டி. “இருட்டிடுச்சு. ரொம்ப லேட் ஆகிடுச்சு.டைம் எப்படியும் பண்ணிரண்டுக்கு மேல இருக்கும்.இருட்டுல பாதை சரியா தெரியல.எந்த பக்கம் போறோம். எங்க இருக்கோம். காட்டுக்கு வெளிய போறோமா இல்லை இன்னும் உள்ள போறோமானு தெரியல. டவர் வேற சுத்தமா கிடைக்கல”என்று போனை எடுத்து பார்த்தவன் சலிப்பாக சொல்ல, சைந்து தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

“அ…. அ…. அப்போ எப்படி சார் நாம வீட்டுக்கு போறது”

“ம்ம்…. வேற வழியில்லை காலை வரைக்கும் நாம வெயிட்பண்ணிதான் ஆகணும்”என்றுவிட, சைந்து கண் முன் மஞ்சு பத்திரகாளியாக விழி உருட்டி கொண்டு நின்றிருந்தார்.

“ஆத்தி……ஏற்கனவே மஞ்சும்மா நம்ம மேல கோவத்துல இருக்காங்க. இதுல நைட் புல்லா வீட்டுக்கு போகல, எனக்கு பாலுதான்”என்று அரண்டவள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு “சார்……மறுபடியும் ட்ரை பண்ணலாமே. கொஞ்ச தூரம் நடந்து மெயின் ரோடு வந்துச்சுன்னா நல்லதுதானே….”என்று அப்பாவியாக கேட்க, அவனோ எரிச்சலில் கத்த துவங்கினான்.

“எனக்கு மட்டும் நைட் முழுக்க இந்த கொசு கடில, காட்டுல இருக்கணும்னு வேண்டுதல் பாரு. இது எந்த இடம்னே தெரியல. அப்புறம் எப்படி நாம போக முடியும்”.

அவன் சொல்வதை புரிந்து கொண்டவள் ‘அந்த மனுஷன் சொல்றதும் சரிதான். டேய் கிரிகாலா காலைல மஞ்சுவ எதிர் கொள்ள உடம்ப இரும்பாக்கிக்கோடா…. இரும்பாக்கிக்கோ”என்று புலம்பி கொண்டு இருந்தாள்.

நேரம் செல்ல செல்ல சைந்துவிற்கு சுற்றி இருந்த காரிருள் பயத்தை ஏற்படுத்த அதை எதிரில் இருந்தவனிடம் காட்ட விரும்பாமல், “சார் எதாவது பேசலாமே எனக்கு தூக்கம் தூக்கமா வருது”என்று மாற்றி சொல்ல,

அதிகம் பேசாத சூர்யாவோ அவள் பேச்சில் கடுப்பாகி “ஆமாம் இங்க என்ன பட்டிமன்றமா நடக்குது பேச, தூக்கம் வந்தா தூங்கு”

சைந்து, “ஏன் சார் நீங்க பட்டிமன்றத்துலதான் பேசுவீங்களா. பட்டி இல்லாத மன்றத்துல பேசமாட்டிங்களா”என்று கேட்க, அவனோ அவளை உக்கிரமாக் முறைத்தான். அந்தோ பரிதாபம் இருட்டில் சைந்துவிற்கு அது தெரியாமல் போக, “என்ன சார் அமைதியாகிட்டீங்க. பேசிட்டு இருந்தா டைம் போறது தெரியாது சார்,அதோட எனக்கு பயமும் தெரியாது.இருட்டுனா எனக்கு பயம் சார்….”என்று பாவம் போல் சொல்ல, சூர்யாவோ என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

“ம்கூம்…. இந்த மனுஷன்கிட்ட பேசறதுக்கு மரத்துகிட்ட பேசலாம் போல,முழிச்சிருந்தாதானே பயம் வரும்.பேசாம கண்ண மூடி தூங்கிடலாம்.டேய் கைப்புள்ள இன்னும் ஏன் முழிச்சுட்டு இருக்க தூங்கு……”என்று மரத்தில் சாய்ந்து தூங்கிவிட்டாள்.இதற்கு முன் பார்த்தே இறாத ஆடவனை எப்படி நம்பி அவனுடன் ஒரு இரவை கவலை இல்லாமல் தூக்கத்தில் களிக்கிறாள் என்பது அவளுக்கே புரியாத புதிர்தான்.

சூர்யாவோ அவ்வளவு நேரம் பேசி கொண்டு இருந்தவள் திடீரென்று அமைதியாகவும் அவளை திரும்பி பார்க்க, அவளோ மரத்தின் மேல் சாய்ந்து தூங்க ஆரம்பித்திருந்தாள்.’என்ன இவப்பாட்டுக்கு தூங்க ஆரம்பிச்சுட்டா. நடு காட்டுல இருக்கோம்னு கொஞ்சமாவது பயம் இருக்கா.எதாவது காட்டு மிருகம் வந்து தாக்கினா என்ன பண்ணுவா.ச்ச….. இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே என்று முணு முணுத்து கொண்டு இரவு முழுவதும் தூங்காமல் அவளுக்கு காவலாக விழித்து கொண்டு அமர்ந்திருந்தான்.

வீட்டில் சைந்தவியை காணாமல் அனைவரும் கவலையில் இருந்தனர். குமார் ஹாஸ்பிடலில் சென்று விசாரிக்க, அவள் ஏழு மணி போலவே கிளம்பிவிட்டாள் என்ற தகவல் வர, மொத்த குடும்பமும் இடிந்து போனது.

பவி அக்காவின் தோழிகள் வீட்டிற்கு சென்று விசாரிக்க, அனைவரும் தெரியவில்லை என்றே சொல்ல,அவளை நினைத்து பயப்பட துவங்கினாள். இரவு பதினோரு மணி வரை சைந்தவியை தேடியவளின் கண்கள் குலமாக ‘எங்க சைந்து போன?”என்று புலம்ப ஆரம்பித்தாள்.

பவி அழுவதை பார்த்த கோபி “அக்கா வேணும்னா சூர்யா சார்கிட்ட ஹெல்ப் கேட்கலாமே”என்று சொல்ல,வலிந்த கண்ணீரை துடைத்தவள் முகம் விகசிக்க அவனுக்கு போனில் அழைக்க அதுவோ ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்’என்று சொல்லியது. மீண்டும் மீண்டும் அழைக்க அதே பதில் வர பவிக்கு முகம் வாட துவங்கியது. இதற்கு மேல் என்ன செய்வது என்று புரியாமல் சோர்ந்து வீட்டிற்கு வர மஞ்சு, குமார், ராதிகா என அனைவரும் ஆளுக்கு ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர்.மஞ்சு ஓயாமல் அழுது கொண்டே இருந்தார்.

பவி வருவதை பார்த்து வேகமாக அவள் அருகில் சென்றவர் மகளைப்பற்றி எதாவது தகவல் கிடைத்ததா என்று கேட்க, அவளோ இல்லை என்று மறுப்பாக தலையசைத்தாள். மஞ்சு அப்படியே மடங்கி அமர்ந்து அழுதார்.அந்த வீடே ஆழ்ந்த அமைதியை தத்தெடுத்து இருந்தது.

Advertisement