Advertisement

அத்தியாயம்-5

குமார் வீடே விழா கோலம் பூண்டிருந்தது.அன்று சைந்தவியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரவிருந்தனர். மஞ்சு படபடப்புடன் இருந்தார். காலையிலேயே ராதிகாவை வீட்டிற்கு வர சொல்லி இருந்தார். பவி பூக்களை கொண்டு வீடு முழுதும் அலங்காரம் செய்து கொண்டு இருந்தாள். சைந்துவிற்கு மனம் அமைதியாக இருந்தது. எதிர்பார்ப்பும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை. ஏன் என்றுதான் அவளுக்கு புரியவில்லை.

சைந்து தன் அறையில் மருத்துவ புத்தகம் ஒன்றை எடுத்து படித்து கொண்டிருக்க, அவளிடம் வந்த பவி “ஹேய் உடன்பிறப்பே இன்னைக்கு உனக்குதான் பங்ஷன். நீதான் ஹீரோயின் குதூகலமா இருக்கறது இல்ல.இப்படி புக்க எடுத்து வச்சுட்டு உட்கார்ந்து இருக்க”என்று கேட்க, அவளோ “என்னை பார்க்கதானே வர்றாங்க.அதுக்கு எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம். அந்த புக்கை குடு”என்று வாங்கியவள் மீண்டும் படிக்க துவங்க, அவளை சந்தேகமாக பார்த்த பவி “சைந்து எல்லாம் ஓகேதானே உனக்கு இந்த மேரேஜ்ல……”என்று கேட்க வந்தவளை கண்டு சிரித்தவள் “என்ன ரிப்போர்ட்டர் மேடம் உங்க மூளை ஓவரா யோசிக்குது போல, அது தலையில் தட்டி அடக்குங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. எப்படியா இருந்தாலும் நான் மேரேஜ் பண்ணிக்கதானே போறேன். அது யாரா இருந்தா என்ன?”என்று கேட்ட அக்காவை யோசனையாக பார்த்தவள், சகோதரியின் முகத்தில் இருக்கும் அமைதியை கண்டு “சரி மாம்ஸ் வந்து இந்த லேடி ரோபோட்டை நார்மலா மாத்தட்டும்”என்று நினைத்து கொண்டு வெளியில் சென்றுவிட்டாள்.

பவி செல்வதை பார்த்த சைந்து ‘இவ எதுக்கு இப்போ குடுத்த காசுக்கு மேல நடிக்கறா. பார்க்கதானே வர்றாங்க. அவங்க வர்றாங்கங்கறதுக்காக நான் என்ன டான்சா ஆட முடியும்’என்று தோளை குலுக்கி கொண்டு கையில் இருந்த புக்கில் ஆழ்ந்து போனாள்.

ராதிகா தன் வீட்டில் வேலைகள் அனைத்தையும் வேக வேகமாக முடித்துவிட்டு மகனுக்காக காத்திருக்க துவங்கினார். சூர்யா எழுந்து வந்தவுடன் “வந்துட்டியா.லேட் பண்ணுவியோன்னு பயந்துட்டேன். காபி போட்டு பிளாஸ்க்ல வச்சுருக்கேன். இட்லி,சாம்பார், சட்னி டேபிள்ள வச்சுருக்கேன், போட்டு சாப்பிடு.மதியம் லஞ்ச்சும் பேக் பண்ணி வச்சுட்டேன் மறக்காம எடுத்துட்டு போ. சரியா நான் கிளம்பறேன்”என்ற தாயை ஆச்சர்யமாக பார்த்தவன்.

“என்னம்மா வெளியே எங்கயும் போறீங்களா.எதுக்கு இவ்ளோ அவசரம்”என்று கேட்க,அவரோ “ம்ம்…. ஆமப்பா. பக்கத்து வீட்டு பொண்ண பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க. அவங்க அம்மா கூட,மாட ஒத்தாசைக்கு வர சொன்னாங்க அதான் ரெடி ஆகிட்டேன். பார்த்துக்கோ. நான் கிளம்பறேன்”என்றுவிட்டு அவர் சென்றுவிட அதை கேட்ட சூர்யாதான் திகைத்து போனான்.

‘என்ன….. அவளை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்களா’என்று நினைத்தவன் மனம் ஏனோ வாடி போனது. இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டவன் ‘யாரு யாரை பார்க்க வந்தா எனக்கு என்ன’என்று நினைத்தவன் சாப்பிடமாலே தன் ஆபிஸ் நோக்கி சென்றுவிட்டான்.

ராதிகா வீட்டிற்குள் வர அவரை வரவேற்றாள் பவி.”என்ன ஆண்டி உங்க குழந்தையை ஸ்கூல்க்கு அனுப்பிட்டீங்களா”என்று கிண்டலாக கேட்க, அவள் குறும்பை புரிந்து கொண்ட ராதிகா “நான் என் புள்ளைய குழந்தை மாதிரி பாத்துக்கறதுல உனக்கு என்னம்மா காண்டு. அப்புறம் முக்கியமான விஷயம் என் பையன் என் கண்ட்ரோல்ல இருக்கான். அதே மாதிரி இந்த சிட்டியே என் மகன் கண்ட்ரோல்ல இருக்கு நியாபகம் வச்சுக்கோ. அவனை குழந்தைனு சொல்றியா வாலு”என்று சொல்ல, அவளோ “அது உங்களுக்கு நியாபகம் இருந்தா சரிதான். ஏன் ஆண்டி. உங்க பையனை மடில வச்சு நிலாகாட்டி ஊட்டாத குறையா எல்லாம் பண்றீங்களே. நாளைக்கு உங்க மருமக வந்து என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்னு சொன்னா. என்னபண்ணுவீங்க”என்று கேட்க, அவரோ கூலாக “அப்படி மட்டும் என் மருமக சொன்னா…. வாடி என் தங்கம் இருப்பத்து ஒன்பது வருஷமா இவனை மேச்சு எனக்கு டயர்டா இருக்கு. இதுக்கு மேல நீயே பார்த்துக்கோன்னு சொல்லிட்டு ஜாலியா சீரியல் பார்ப்பேன். ஆனா அவ வரணுமே….”என்று இழுக்க, சரியாக அதே நேரம் “நான் வந்துட்டேன்……”என்று அவர்களிடம் வந்து நின்றாள் சைந்தவி.

ராதிகா அவளை பார்த்து சிரித்து “என்னம்மா இன்னும் நீ குளிக்கலையா. தலை காயனும்ல” என்று அவள் நீள முடியை வருட, “ம்ம்ம்…. குளிக்கணும் ஆண்டி”என்றவள் மேலும் “பவி வம்பிலுக்கறாளா ஆண்டி”என்க,

பவி உதட்டை சுழித்து அக்காவிற்கு பழிப்பு காட்டிவிட்டு, ராதிகாவிடம் திரும்பி “ஏன் ஆண்டி. நீங்க சொல்றது எல்லாம் நம்பற மாதிரியா இருக்கு”என்றாள்

ராதிகா, “நம்பிக்கை அதானே எல்லாம்”என்று சொல்ல, சைந்துவோ “ஆஹா ஆண்டி பின்றீங்க போங்க”என்க, மூவரும் சிரிக்க துவங்கினர்.அப்போது மஞ்சு அங்கு வந்தவர் “என்னடி மாநாடு இங்க.சைந்து போய் குளி போ. பவி உன்னை கொஞ்சம் ஸ்வீட் வாங்கிட்டு வர சொன்னேன்தானே போ”என்று மகள்களை விரட்டிவிட்டு “ராதி எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. என்ன பண்றதுண்னே தெரியல. அவங்க வந்துட்டு போற வரை கூடவே இருங்க. நாம வீட்ல எதுவும் ரெடி பண்ணணுமா”

“மஞ்சு எதுக்கு இவ்ளோ பட படப்பு. பால் வாங்கி வச்சுருக்கல்ல. அது போதும். பவி ஸ்வீட் வாங்கிட்டு வரட்டும். கொஞ்சம் பஜ்ஜி போட்டுக்கலாம்”என்று சொல்ல,

“என்னம்மோ போ ராதி வீட்ல நடக்கற முதல் பங்ஷன் அதான் கொஞ்சம் பயமா இருக்கு”என்றவர் மேலும் சில விஷயங்களை பேச துவங்கிவிட்டார்.

ஆபிசில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் சூர்யா.தாய் சொன்ன தகவலை கேட்டு யாரோ யாரையோ பார்க்கிறார்கள் நமக்கு என்ன என்றவன் வந்துவிட்டாலும், ஏனோ அவன் மனம் அலைப்புறுதலுடனே இருந்தது. வேலை எதையும் செய்ய முடியாமல் திணறியவன் இறுதியில் தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்துவிட்டான்.

‘என்ன ஆச்சு எனக்கு’என்று தனக்குள் கேட்டு கொண்டவனுக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை. அங்கிருப்பதே மூச்சு முட்டுவது போல் தோன்ற எழுந்தவன், ரவுண்ட்ஸ் சென்று வருவதாக அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

தன் போக்கில் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றவன் ஒரு இடத்தில் வந்து நிற்க,அது ஒரு பேக்கரி. ‘சரி ஒரு டீ குடிப்போம்’என்று நினைத்தவன் ஆர்டர் செய்துவிட்டு வெளியிலேயே நிற்க,அப்போது ஒரு ஸ்கூட்டி அவனை இடிப்பது போல் வந்து நின்றது.

‘யாரது’என்று கோபமாக நிமிர்ந்தவன் முன் முகம் முழுதும் சிரிப்புடன் நின்றிருந்தாள் பவி. அவளை பார்த்தவுடன் அவன் மனம் ஏனோ அமைதியடைந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவளை முறைத்து கொண்டே நின்றிருந்தான்.

பவி, “என்ன காக்கி வேலை பாக்காம ஊர் சுத்திக்கிட்டு இருக்கீங்க”என்றவளை அவன் கோபமாக பார்க்க,அவளோ “கூல்….கூல்…. காக்கி. நீங்க என்ன என் முறை மாமன் மாதிரி முறைச்சுட்டே இருக்கீங்க.சரி நான் வந்த விஷயத்தை சொல்றேன்.இந்த பக்கமா ஒரு வேலையா வந்தேன்.உங்களை இங்க பார்க்கவும் செம்ம ஷாக் “என்னை பார்க்கதானே வந்தீங்க. என்னை பாலோபண்றீங்களா. சும்மா சொல்லுங்க. நான் கோபப்பட மாட்டேன்”என்று அவனிடன் ரகசியம் போல் சொன்னவளை, ‘நீ என்ன லூசா’ என்பது போல் பார்த்தான் அவன்.

“ம்ம்….. புரியுது. புரியுது. வந்த விஷயத்தை சொல்லுங்கறீங்க கரெக்ட்டா.சரி சொல்றேன்.உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிட்டு போலாம்னு வந்திருக்கேன்”என்றவள் சொல்ல,

முக்கியமான விஷயமா ஒருவேலை அவளை பொண்ணு பார்க்க வருவதைதான் சொல்ல வருகிறாளோ என்று பவியையே யோசனையாக பார்க்க, அவளோ சந்தோஷமாக “என்னோட லைன் கிளியர் ஆகிடுச்சு காக்கி.என்ன புரியலையா?இன்னைக்கு என் அக்காவை பொண்ணு பார்க்க வர்றாங்க.எப்படியும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடும். அப்புறம் நெக்ஸ்ட் நம்ப மேரேஜ்தான். சரி சொல்லு எப்போ எனக்கு ஓகே சொல்ல போற”அவனைப் பார்த்து கண்ணடித்து கேட்க,

சூர்யாவிற்கு அப்போதுதான் அவ்வளவு நேரம் மனதில் இருந்த இறுக்கம் தளர்ந்த உணர்வு. அதை அவன் முகமும் வெளிப்படுத்தியது. அவனை சந்தேகமாக பார்த்த பவி “என்ன காக்கி முகம் டால் அடிக்குது. சீக்கிரமே எனக்கு ஓகே சொல்ல போறியா?” என்று சந்தோஷமாக கேட்க, அவனோ மனதில் எழுந்த உற்சாகத்தை காட்டாமல் “போடி……”என்றுவிட்டு சென்றுவிட,பவிதான் ‘ங்கே…..’என்று விழித்து கொண்டு இருந்தாள்.

‘என்ன காக்கி எப்போவும் நாம என்ன சொன்னாலும் அமைதியா போவான். இன்னைக்கு என்னைய போடின்னு சொல்லிட்டு இவன் போறான். என்னாச்சு இவனுக்கு’என்று யோசித்தவள் போன் அடிக்க எடுத்து காதில் வைத்தவள் அந்த பக்கம் மஞ்சு கலர் கலராக திட்டுவதை கேட்டு, காதை குடைந்து கொண்டு “நோ….. மஞ்சும்மா…. நோ….. இன்னும் பத்து நிமிஷத்துல வீட்ல இருப்பேன்”என்றுவிட்டு போனை வைத்தவள் ‘ப்பா….. கூவமே கொப்பலிக்கும் போல, இவங்க பேச்சுக்கு’என்று புலம்பியவாறே வீட்டை நோக்கி சென்றாள்.

ஜீப்பில் சென்று கொண்டிருந்த சூர்யா மனதில் ‘இவ அக்காவைதான் பொண்ணு பார்க்க வரதா அம்மா சொல்லியிருப்பாங்க போல, நான்கூட…. ச்ச….’என்று நினைத்தவன் மனதில் ஏனோ இனம் புரியாத நிம்மதி பரவியது. பின் தனக்குள் சிரித்துக் கொண்டு ‘சீக்கிரமா அவகிட்ட காதலை சொல்லணும்’என்று முடிவெடுத்து கொண்டான்.

Advertisement