Advertisement

சகோதரிகள் இருவரும் திகைத்துப் போய் சத்தம் வந்த பக்கம் பார்க்க அங்கு அமைச்சர் கன்னத்தில் கை வைத்தவாறு எதிரில் இருந்தவனை எரித்து விடுவது போல் முறைத்து கொண்டிருக்க,அவனோ அசால்ட்டாக கையில் இருந்த காப்பை மேலே ஏற்றிவிட்டு “என்னய்யா… என்ன டிராமா பண்ணிட்டு இருக்க?உனக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் டைம். அதுக்குள்ள நீயே வெளியே வந்து எனக்கு எல்லாம் சரியாயிடுச்சு போலீஸோட விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நான் கொடுக்கிறேன்.அப்படினு சொல்ற…. சொல்லணும்”என்று அந்த வார்த்தையை அழுத்தி சொன்னவன் மேலும் “நான் சொல்றதை விட்டுட்டு நீ வேற எதாவது கோல்மால் வேலை பண்ணுன, ம்கூம்…. பண்ணனும்னு நீ நினைச்சா கூட, தப்பான பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்க உன்னை பத்தின எல்லா ஆதாரமும் எங்ககிட்ட இருக்கு.அதை எல்லாத்தையும் அப்படியே சோசியல் மீடியால விட்டுருவேன். அதுக்கு அப்புறம் உன்னோட அரசியல் வாழ்க்கை கோவிந்தாதான்.இந்த விசாரணை எல்லாம் சும்மா கண் துடைப்புக்குதான். நீதான் குற்றவாளினு கன்பார்ம் ஆகிடுச்சு. உடனே இதை வெளிய சொன்னா பிரச்சனை கிளம்பும் அதான் கொஞ்சம் டைம் குடுக்கலாம்னு பார்க்கறேன்.”என்று கோபமாக சொல்ல,அமைச்சரோ, உன்னை மாதிரி எத்தனை பேரை நான் பார்த்திருப்பேன். உன் வயசு என் அனுபவம்டா என்ற பார்வையோடு “முடியாதுன்னா என்னடா பண்ணுவ…”என்று அகங்காரமாக கேட்டார்.

அவர் பதிலை கேட்டு புருவத்தை தேய்த்து சிரித்தவன் “அடங்க மாட்ட போல”என்றவன் நொடி நேரத்தில் ரகுபதி அருகில் சென்று கையை மடக்கி அவன் மூக்கில் குத்த,ரத்தம் பொலபொலவென கொட்ட தொடங்கியது.

அறை வாயிலில் இருந்து இதை எல்லாம் கண்டு கொண்டிருந்த சைந்து “ஐயோ சண்டை….. போலீசு….”என்று அரண்ட கண்களுடன் பார்த்திருக்க,பவியோ கண்கள் மின்ன தன்னவனை அவன் செயலை ரசித்து கொண்டிருந்தாள்.

ரகுபதி,“டேய்….. நேத்து பேஞ்ச மழைல மொளச்ச காளான் நீ. என் மேலையே கை வச்சுட்டியா. இப்போ நான் வெளிய போய் நீ செஞ்ச வேலைய சொன்னா என்ன ஆகும் தெரியுமா.உங்க டிபார்ட்மென்ட்டே ஆட்டம் கண்டிடும். வெளிய மீடியாகாரங்க கண் கொத்தி பாம்பா எதாவது தீனி கிடைக்காதான்னு இந்த ஹாஸ்பிடலையே நாய் மாதிரி சுத்தி வந்துட்டு இருக்காங்க. அவங்களுக்கு ஏத்த எலும்பு துண்ட இப்போவே போட்டு உங்க டிபார்ட்மென்ட்ட கிலி கிலினு கிழிக்கறேன் பாரு. ஆளுங்கட்சி எம்எல் ஏ மேலையே கைவைக்குறியா தமிழ்நாட்டுல எல்லா இடத்துலயும் என் சாதிகாரங்க போராட்டம் பண்ணுவாங்கடா”என்று சொன்னவர் பெட்டைவிட்டு இறங்க,

எதிரில் இருந்தவனோ தன்னுடன் வந்த போலீஸ்காரர்களுக்கு சைகை காட்ட, அவர்களும் புரிந்தது என்பது போல் தலையசைத்து அறையைவிட்டு வெளியேற திரும்பினர்.

அவர்கள் அனைவரும் வெளியே வர போகிறார்கள் என்பதை உணர்ந்த பவி டக்கென்று சைந்துவை இழுத்து கொண்டு பக்கத்து அறையில் புகுந்து கொண்டாள். அனைவரும் சென்றுவிட்டார்கள் என்பதை சூ சத்தத்தை வைத்து கணித்தவள் மீண்டும் அமைச்சர் இருந்த அறைக்கு வெளியில் செல்ல, அவள் கையை பிடித்து தடுத்தாள் சைந்தவி.

அக்காவின் எண்ணம் புரிந்தவள் “இது என்னோட வேலை. நான் போய்தான் ஆகணும்”என்று அழுத்தமாக சொல்ல, அவளை கவலையாக பார்த்த சைந்து தலை குனிந்தவாறு நானும் வர்றேன்னுதான் சொல்ல வந்தேன்” என்க, அவளை நம்பாத பார்வை பார்த்த பவி “சரி வா…”என்று சத்தமில்லாமல் வந்து அறையின் உள்ளே நடப்பதை வேடிக்கை பார்க்க துவங்கினர்.

உள்ளே இருந்த அந்த ஆண்மகனோ “நீ என்ன எழும்ப தூக்கி போடறது. நான் போடறேன் பாரு. எங்ககிட்ட இருக்கற ஆதாரம் இல்லாம வேற எதுவும் தப்பு பன்றியான்னு எங்களுக்கு தெரிஞ்சே ஆகணும்”என்று சொல்லி அமைச்சரை கோபம் தீரும் வரை அடி வெளுத்தவன். “தடயமே இல்லாம உன்னை எப்படி இப்போ ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போறேன்னு பாரு” என்று ரகுபதியின் சட்டையை பிடித்து இழுத்து கொண்டு வெளியில் வர, திடீரென்று அவன் வெளியே வரவும் பயந்து போன சைந்து தங்கையின் பின்னே ஒழிந்து கொண்டாள், பவியோ அந்த காக்கி உடையில் இருந்தவனை ரசனையாக பார்த்தாள்.

வெளியில் வந்தவனின் நடை பவியை கண்டு ஒரு நொடி தயங்கி பின் வேகமெடுத்தது.அவன் சென்றபின் தங்கையின் பின்புறம் இருந்து வெளியில் வந்த சைந்துவின் கண்கள் அவன் நேம் பேஜில் பெயரை பார்த்திருக்க “சூரிய பிரகாஷ்……” என்ற பெயரை அவள் இதழ்கள் தானாக உச்சரித்தது. கூடவே ‘அடே அப்பா பேருக்கு ஏத்த மாதிரி சூடாதான் இருக்காரு. சரி யாரு எப்படி இருந்தா நமக்கென்ன”என்று நினைத்தவள் தங்கையிடம் “யாருடி இது கொஞ்சம் கூட பயம் இல்லாம. அமைச்சரை இப்படி அடிச்சு துவைச்சு கூட்டிட்டு போறாரு”என்று கேட்க,அதை எல்லாம் பவி எங்கு கவனித்தாள் போகும் தன்னவனைதான் பார்த்து கொண்டிருந்தாள்.

ஹாஸ்பிடல் நடை பாதைக்கு அந்த பக்கம் மீடியாகாரர்கள் அனைவரும் குழுமி இருக்க, ஹாஸ்பிடல் வாயிலுக்கும் மீடியாகாரர்களுக்கும் இடையில் போலீஸ் வண்டிகள் வரிசையாக வேகமாக குப்பைகளை கிளப்பி கொண்டு வந்து நின்றது.நொடி நேரத்தில் ரகுபதியை இழுத்து வண்டியினுள் தள்ளியவன் நிமிடம் தாமதிக்காமல் வண்டியை எடுக்க சொல்ல, அங்கிருந்த குப்பைகளை மீண்டும் கிளப்பிவிட்டவாறு அனைத்து வண்டிகளும் கிளம்பியது. கிளம்பிய புழுதியில் கண்களை கசக்கி இருமியவாறு கையில் கேமரா, மைக்குடன் நின்றிருந்தவர்கள் ‘என்ன நடந்தது என்று புரியாமல் நின்றிருந்தனர்.

அத்தி பூத்தார் போல் ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சரை சும்மா விட மனமில்லாமல் கட்டம் கட்டி தூக்கியிருந்தான் சூரிய பிரகாஷ்.ஆறடி உயரம். உயரத்திற்கு ஏற்ற கட்டான உடல். தினமும் உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய தேகம்.கழுகைவிட கூர்மையான கண்கள். இருபத்து ஒன்பது வயதே ஆன கட்டிளம் காளை.எதற்கும் அஞ்சாதவன். நேர்மையாக இருப்பவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்பவன்.நேர்மை இல்லாதவர்களை நூல் அளவு கூட மதிக்க மாட்டான்.சென்னையின் டெபுடி கமிஷனர்.

வண்டிகள் அனைத்தும் கிளம்பியவுடன் வந்த கான்ஸ்டபிள் மகாலிங்கத்திடம் ரிப்போர்ட்டர் ஒருவர் “என்ன சார் திடிர்னு இவ்வளவு வண்டி யார் வந்தது. ஏன் எங்களுக்கு பேட்டி குடுக்காமையே போய்ட்டாங்க”என்க,

மகாலிங்கம், “கமிஷனர் சார்தான் தலைவர பார்த்துட்டு போறாரு.அவரு நல்லா ஆன பின்னாடி விசாரணை வச்சுக்கலாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு. தலைவர் உடல் நலத்துலதுயும் இப்போ நல்லா முன்னேற்றம் இருக்குனு டாக்டர் சொல்றாங்க. டிரீட்மென்ட் போயிட்டு இருக்கு. அவரு சீக்கிரம் குணமடைஞ்சு எழுந்து நடக்கணும்னு வேண்டிக்கோங்க” என்று சொல்லிவிட்டு மீண்டும் மருத்துவமனை உள்ளே சென்றுவிட்டார்.

மீடியாகாரர்களும் உள்ளே போக முடியாததால் மகா லிங்கம் சொன்ன தகவலை எழுதி கொண்டு இடத்தை காலி செய்தனர். இவையனைத்தையும் வாயில் கை வைத்தவாறு பார்த்து கொண்டிருந்தாள் சைந்தவி.

பவியோ ‘என்ன இருந்தாலும் நம்ம காக்கி ஸ்ட்ரைட் பார்வர்ட்தான். செம்மடா. எப்படி மின்னல் வேகத்துல செயல்படுற’என்று தனக்குள் பேசி கொண்டிருக்க அவள் தோளை பிடித்து உளுக்கினாள் சைந்து.

பவி, “ஆஆஆஆ……”ஹேய் சைத்தான் ஏன்டி இப்படி போட்டு உளுக்கற”என்று கேட்க, அவளை இடுப்பில் கை வைத்து முறைத்த சைந்து “எனக்கு இது தேவைதான். லூசு மாதிரி நீயே தனியா சிரிச்சுட்டு இருக்கன்னு வந்து என்னன்னு கேட்டேன் பாரு எனக்கு இது தேவைதான்”என்ற சகோதரியை சமாளிக்கும் பொருட்டு “ஈஈஈ….”என்று சிரித்தவள் “ஒன்னும் இல்ல உடன்பிறப்பே இன்னைக்கு ஒன்னும் தேறுர மாதிரி நியூஸ் கிடைக்கல, அதனால ஆபிஸ் போகலாமா இல்ல வீட்டுக்கே போகலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்”என்றாள்.

சைந்து, “எதே….. ஒரு நியூஸ்சும் கிடைக்கலையா. என்னடி சொல்ற. அந்த போலீஸ்க்கார் அவரை அடிச்சு இழுத்துட்டு போனதை பார்த்ததானே அதை எழுது”

“அது எல்லாம் எழுத முடியாது. அவரு என்ன நியாயவானா, தப்பு செஞ்ச ஆளுதானே அதுக்கு அவர் பண்ணுனது சரிதான். இப்போ இங்க நடக்கறதும் அரசியல்தான்”என்று சொல்ல, சைந்தவியோ ஒன்றும் புரியாமல் பெக்க பெக்கவென்று விழித்தாள்.

பவி, “என்ன புரியலையா. இப்போ மீடியாவ பொறுத்த வரை அமைச்சர் டிரீட்மென்ட்ல இருக்காரு. ஆனா உண்மையா விசாரணைக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. இனி உண்மை வர வரை ரகுபதி சட்னிதான். வெளியே தெரியாம என்ன மாஸா அர்ரெஸ்ட் பண்ணுனாரு பாத்தியா. நீ என்னடான்னா போலீஸ் வேண்டாங்கற. நான் எல்லாம் போலீசைதான் கல்யாணம் பண்ணுவேன்”என்று தன் மன விருப்பத்தை கண்கள் கனவில் மிதக்க சொன்னாள்.

சைந்து, தங்கை சொன்ன விஷயத்தை கேட்டு ஆடி போனவள் “என்னடி இப்படி பண்றாங்க. அவங்க மேலிடத்துல கேள்வி கேட்க மாட்டாங்களா. மீடியாக்கு தெரிஞ்சுது அவ்ளோதான் தீவிரவாதிக்கு பயப்படற மாதிரி மீடியாக்கு பயப்பட வேண்டி இருக்கு”என்று புலம்பியவள் தங்கை இறுதியாக சொன்ன வார்த்தையை விளையாட்டாக எடுத்து கொண்டு “அடியே….என்ன?நான் வேண்டான்னு சொன்னா…நீ வேணும்னு சொல்லுவியா?அது எல்லாம் முடியாது. அடிதடியா அராத்தா சுத்தி வர்ற உனக்கு கண்டிப்பா ஒரு அப்பாவி அப்புராணி டாக்டர்தான் புருஷனா வருவான். பிடி என் சாபத்தை”என்று சொல்ல, அக்காவின் பேச்சில் கோபமானவள் “ஸ்டாப் சைந்து. என் வாழ்க்கைல யாரை கல்யாணம் செய்துக்கணும்னு நான்தான் முடிவெடுப்பேன். இன்னொரு டைம் இது மாதிரி பேசாத”என்றுவிட்டு உடை மாற்ற சென்றுவிட்டாள்.

சகோதரியின் கோப முகத்தை பார்த்து அதிர்ந்து போன சைந்து ‘என்ன ஆச்சு இவளுக்கு. நான் சும்மா விளையாட்டுக்குதானே சொன்னேன். அதுக்கு எதுக்கு இப்படி கோபப்படுறா. சம்திங் ராங். பயபுள்ள என்னமோ மறைக்குது என்னன்னு கண்டுபிடிப்போம்’என்று யோசித்து கொண்டே தன் அறைக்கு வர, அதற்குள் பவி உடை மாற்றி இருந்தாள்.

எதிரில் வந்த அக்காவை கண்டுகொள்ளாமல் செல்ல போனவள் கையை பிடித்த சைந்து “என்ன பவி கோபமா…நான் சும்மா விளையாட்டுக்கு……”

பவி, “விளையாட்டுகுன்னா நீ என்ன வேணா பேசுவியா” என்று கோபமாக கேட்டவள் பின் ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமாளித்து கொண்டு “சரி நான் கிளம்பறேன்” என்றுவிட்டு அவள் ஆபிஸ் நோக்கி சென்றுவிட்டாள்.

சைந்துதான் தங்கையின் கோபம் புரியாமல் விழித்து கொண்டு இருந்தாள். பாவம் அவள் எப்படி அறிவாள் அவள் சாபம் பலிக்க அவளே காரணமாவாள் என்று.

அணைக்கும்…….

Advertisement