Advertisement

அத்தியாயம் -27

சூர்யா அன்று வீட்டிற்கு வர தாமதமானது. சோர்வாக உள்ளே வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த மனைவியை கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் செல்ல, சைந்துவோ ‘இங்க ஒருத்தி குத்து கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கேன் இவர் கண்டுக்காம போகறாரு. பொண்டாட்டிங்கற பாசம் கொஞ்சமாவது இருக்கா.

எவனாவது பேச வந்தா மட்டும் குறுக்க வந்து நின்னு ஷீ இஸ் மைன்னு டையலாக் விட வேண்டியது. சரியான ரவுடி போலிஸ்கார்’ என்று தனக்குள் சொல்லி கொண்டவள் தானும் அவர்கள் அறைக்கு செல்ல, குளியலறையில் சத்தம் வந்தது

‘ம்ம்…அதெல்லாம் போலிஸ்கார் கரெக்ட்டா இருப்பாரு. வந்தவுடனே குளிச்சிட்டுதான் மறு வேலை பார்க்கறாரு’ என்று நினைத்தவள் கணவன் வர காத்திருக்க, குளித்து முடித்து வந்தவன் குழந்தை தூங்குவதை கண்டு அவள் நெற்றியில் மென் முத்தம் பதித்துவிட்டு வெளியில் சென்றுவிட அவனையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு கோபம் கோபமாக வந்தது.

வேகமாக அவன் பின்னோடு சென்றவள் “நில்லுங்க நான் உங்ககிட்ட பேசணும்”என்க,

மொட்டை மாடிக்கு செல்லும் படியில் ஏறிக்கொண்டே “நாம பேச நமக்குள்ள ஒன்னும் இல்ல. அதனால உன்கூட பேச எனக்கு விருப்பம் இல்லை” என்று சென்றுவிட,

அவன் பின்னோடு சென்றவள் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து “அது எப்படி நமக்குள்ள ஒன்னும் இல்லாம போகும். நாம கணவன் மனைவி. அது கொஞ்சமாவது உங்களுக்கு நியாப……” என்று சொல்லவந்தவள், சூர்யாவின் அனல் தெறிக்கும் பார்வை கண்டு வாயை மூடி கொண்டாள்.

“சொல்லு…. ஏன் நிப்பாட்டிட்ட சொல்லு…. ஹோ…. வார்த்தை வரலையோ? நான் வேணா சொல்லவா. நியாபகம் இருக்கானுதானே கேட்க வந்த,

உனக்கு அந்த நியாபகம் இருக்கா? சொல்லுடி. இருக்கா? நீயா ஒரு முடிவெடுத்து போவ, நீயா என்னை வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ண சொல்லுவ. நீயா வந்து அப்புறம் நார்மலா பேசுவ. நான் பேசணும் அப்படிதானே”என்று கேட்க, அவளோ “இல்ல…. உங்க காதலை….”

“வாயை மூடு. நான் காதலிச்சேன்னு உனக்கு தெரியுமா…. தெரியுமா சொல்லுடி” என்று அவள் தோள்களை பிடித்து உளுக்கியவன்

“ஒரு வருஷம்…ஒரு வருஷமா உன் தங்கச்சிதான் என் பின்னாடி சுத்தி வந்தா. நம்ம சுத்தி வர்றவங்க ஒரு நாள் வரலைனா ஒரு தேடல் வரும் அப்படிதான் பொண்ணு பார்க்க வர்றாங்கனு அம்மா சொன்ன உடனே பவியா இருக்குமோனு நினைச்சேன்.

அன்னைக்கு கொஞ்சம் டிஸ்டர்பா பீல் பண்ணுனேன். சரி ஓகே என்னைக்கா இருந்தாலும் ஒருத்தர கல்யாணம் செய்துக்க போறோம். அது என்னை விரும்பற பொண்ணா இருக்கட்டும்னுதான் அந்த முடிவெடுத்தேன்.

காதலா எதாவது ஒரு வார்த்தை அந்த கிரீட்டிங் கார்ட்ல பார்த்தியா? பவித்ரா கேட்ட கேள்விக்கு பதிலா எனக்கு சம்மதம்னு மட்டும்தான் எழுதி இருப்பேன். அதையும் நான் குடுக்க முன்னாடி நம்ம கல்யாணம் முடிஞ்சுது. அதுகப்புறம் நான் அதை மறந்தே போய்ட்டேன். ஏன் தெரியுமா. நம்ம வாழ்க்கைய எப்படி சரிப்பண்ண போறோங்கற யோசனைல. என்ன ஆனாலும் இந்த உறவு நாமே எதிர்பார்க்காம உருவான உறவுதான். ஆனா…. அதுக்கு நான் உண்மையா இருக்கணும்னு நினைச்சேன். இருந்தேன். நீ அப்படி இருந்தியா சொல்லு”

“இல்லங்க உங்க காதல் வாழ்க்கைல தேவையில்லாம நான் வந்துட்டேன்னு….”

“என்ன காதல் வாழ்க்கையா. எனக்கு தெரிஞ்சு நான் அனுபவிச்ச முதலும் கடைசியுமான காதல் வாழ்க்கை நம்ம கல்யாணம் முடிஞ்சு வாழ்ந்த அந்த மூணு மாசம்தான். என்னமோ நாங்க ஒன்னா பார்க், பீச்னு சுத்துன மாதிரி சொல்ற. நான் அப்படி உண்மையா பவித்ராவ காதலிச்சு இருந்தா. யார் சொல்லியிருந்தாலும் நம்ம கல்யாணம் நடந்திருக்காது.

யாரையும் கேட்காம அன்னைக்கு பக்கத்துல நின்னுட்டு இருந்த பவி கழுத்துல தாலி கட்டி, இவளைதான் நான் காதலிக்கறேன். இவளைதான் கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன்னு சொல்றதுக்கான தைரியம் எனக்கு இருக்கு. அப்புறம் ஏன் நான் அப்படி பண்ணுனேன்னு யோசிக்க மாட்டியா.

ஒரு வார்த்தை இதைப்பத்தி என்கிட்ட நீ பேசியிருந்தா, நான் எல்லாம் சொல்லியிருப்பனே. அதை கேட்கணும்னு கூட உனக்கு தோணலையா. அப்புறம் என்ன சொன்ன கடமைக்கு வாழ்ந்தேனா” என்று அவள் அருகில் நெருங்கி சென்றவன்.

“நான் உன்னை தொடும்போது அதில் இருந்த காதல் உனக்கு புரியவே இல்லையா. என்னோட ஒவ்வொரு தொடுதலும் என் அன்போட, காதலோட வெளிப்பாடுனு உனக்கு தெரியலையா. கடமையா வாழ்ந்தேன்னு சொல்ற. உன் உடம்புதான் முக்கியம்னு நான் நினைச்சிருந்தா கல்யாணம் ஆகியும் உன் விருப்பத்துக்காக விலகி நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்கமாட்டேன்.

அன்னைக்கு காட்டுல அரையும் குறையுமா என் மேல வந்து மோதுனியே அப்போவே எல்லாத்தையும்….. எல்லாத்தையும் முடிச்சுருப்பேன். காத்துட்டு கேனையன் மாதிரி இருந்திருக்கமாட்டேன்.

அப்புறம் என்ன சொன்ன காதலர்களை பிரிச்சுடோங்கற குற்ற உணர்ச்சில போயிட்டேன்னு சொன்னியே. உண்மையா நீ என்னை காதலிச்சிருந்தா குற்ற உணர்ச்சி உனக்கு வந்திருக்காது. இதுக்கு முன்னாடி எப்படியோ, ஆனா இனி என் புருஷன் எனக்கு மட்டும்தான்னு உரிமை உணர்வுதான் வந்திருக்கணும்.

தங்கச்சியோட சந்தோஷம் அழிச்சுட்டேன்னு போனேன்னு சொன்னியே, அப்போ உன் புருஷனான என் சந்தோஷத்துக்கு நீ குடுத்த முக்கியத்துவம் அவ்ளோதானா, நம்ம பொண்ணு சந்தோஷம் அது எங்க போச்சு அப்பான்னு என்கூட இருக்கும்போது அவளுக்கு வர்ற சந்தோஷம் உனக்கு முக்கியம் இல்லையா?

கடைசியா சொன்ன பாரு. நீ விரும்புனவன் மனசுல வேற ஒரு பொண்ணா…. நல்லா இருக்கு உன் நினைப்பு.

பவித்ராவ நான் லவ் பண்ணல. ஆனா அவளை கல்யாணம் செய்துகிட்டா நல்லா இருக்கும்னு நினைச்சேன் அப்படி நினைச்சிட்டேங்கறதாலேயே, நீ என் மனசுல வர்ற வரை உன்கிட்ட இருந்து விலகி இருந்தேன். இது எதையும் தெரிஞ்சுக்காம நீப்பாட்டுக்கு கிளம்பி போய்ட்ட.

இப்போ சொல்றேன் உனக்கு என் மேல சுத்தமா காதல் இல்லை. நீதான் என்கூட கடமைக்காக வாழ்ந்திருக்க, அதனாலதான் இன்னொருத்திக்கிட்ட ஈஸியா என்னை தூக்கி குடுக்க முடிவு பண்ணி போயிருக்க, உன் மனசுல உன் தங்கச்சி மட்டும்தான் இருக்கா. எனக்கான இடம் இல்லை. சோ இனி நீ கஷ்டப்பட்டு, கடமைக்காக என்கூட வாழ வேண்டாம்
உன் விருப்பம் போல….” என்றவன் மேலும் பேசும் முன் அவன் வாயில் தன் கையை வைத்து பேச வேண்டாம் என்பது போல் கண்ணீருடன் தலையசைத்தாள் சைந்து.

சூர்யாவிற்கு அவள் கண்ணீரை கண்டு மனம் வலித்தாலும், அவளால் உண்டான காயம் பச்சை புண்ணாக இருக்க, முகத்தை திருப்பி நின்று கொண்டான்.

சைந்து, “ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. நான் பண்ணுனது எல்லாம் தப்புதான் என்னை மன்னிச்சுடுங்க. நான் உங்ககிட்ட பேசியிருக்கணும். ஆனா…. அப்போ ஏதேதோ நினைச்சு உங்களை பிரிஞ்சு போய்ட்டேன். இப்போ என்னோட தப்பை திருத்திக்க வாய்ப்பு தர கூடாதா. ஏன் இப்படி யாரோ போல, பேசாம விலகி விலகி போறீங்க”.

“இல்லை சைந்தவி தேவி நமக்குள்ள செட் ஆகாது. என் பொண்ணு என்கூட இருக்கட்டும். நீங்க விருப்பப்பட்டது போல்…” என்றவன் வார்த்தை அவள் இதழால் சிறை செய்யப்பட்டது.

மனையாளின் இதழ் அணைப்பில் கிறங்கியவன் மனம் ‘டேய் மயங்காதடா…கொஞ்சம் நாள் கோபமாவே மெயின்டெயின் பண்ணு இல்லைனா அவ மறுபடியும் இது மாதிரி எதாவது யோசிச்சு போய்டுவா”என்றொரு மனம் சொல்ல, மற்றொரு மனமோ நல்லாதான் இருக்கு. அவளா வந்துதானே குடுக்கறா இஷ்டப்படற வரைக்கும் குடுக்கட்டும்’ என்று சொல்ல, அமைதியாக நின்றிருந்தான்.

கணவனிடம் இருந்து விலகிய சைந்து அவன் முகம் பார்க்க, அவனோ கோபம் போல் முகத்தை திருப்பி கொண்டு “இப்போ எதுக்குடி கிஸ் பண்ணுன” என்க,

சைந்துவோ ‘அட பாவி இவ்ளோ நேரம் நல்லா என்ஜாய் பண்ணிட்டு, இப்போ முறுக்கிட்டு நிற்கரதை பாரு. சரியான கேடி போலிஸ்கார்’ என்று மனதில் நினைத்தாலும் வெளியே “என்ன போலிஸ்கார் ஓவரா போறீங்க. அறியா புள்ள, தெரியாம….” என்றவள் சொல்லும்போது சூர்யா அவளை முறைக்க,

“சரி…. சரி…தெரிஞ்சுதான் தெரியாம பண்ணிட்டேன். இப்போதான் எல்லாம் சரியாகிடுச்சே.என்னை மன்னிக்க கூடாதா”.

“இல்ல. இனி நமக்குள்ள…..”

“என்ன போலிஸ்கார். திரும்ப திரும்ப இப்படியே பேசுனா எப்படி. நான்தான் மன்னிப்பு கேட்கறேன்ல”

“மன்னிப்பு எல்லா பிரச்சனைக்கும் தீர்வாகும்னு எனக்கு தோணல”

“மன்னிச்சு பார்த்தாதானே தீர்வவாகுமா ஆகாதானு தெரியும் போலிஸ்கார்” என்று அப்பாவியாக சொல்ல, அவனோ “அப்படி தெரிஞ்சுக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல” என்றவன் தன் அறை நோக்கி சென்றுவிட்டான்.

செல்லும் கணவனின் முதுகையே இதழ் பிதுக்கி பார்த்தவள், தலையில் கை வைத்து கொண்டு “ஹையோ போலிஸ்கார் செம்ம கடுப்புல இருக்காரு போல, எப்படி சமாளிக்கனு தெரியலையே” என்று புலம்பியவாறு சென்றவள் தனக்கு முதுகு காட்டி படுத்திருக்கும் கணவனை பெரு மூச்சுடன் பார்த்துவிட்டு தானும் குழந்தையை அணைத்தவாறு படுத்து கொண்டாள்.

பவித்ரா திருமண வேலைகள் ஒரு பக்கம் நடக்க, மஞ்சு ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்தது.

வருண் தினமும் பவியுடன் போன் பேசியே அவள் தயக்கத்தை உடைத்தான்.

அன்று திருமண புடவை எடுக்க அனைவரும் சென்றனர். வருண் தாய், தந்தை இருவரும் அவனது சிறு வயதிலேயே இறந்துவிட்டதால்,சித்தி சித்தப்பா கவனிப்பில்தான் வளர்ந்தான். சித்தப்பா அவனை கண்டுகொள்வதில்லை ஆனால் சித்தி அவர் மகள் இருவரும் பாசமாக இருப்பர்.

திருமணம் வேண்டாம் என்ற மகன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லவும் குலதெய்வ கோவிலுக்கு விளக்கு போட அவர் சென்று விட, தங்கை சாத்விகாவை அழைத்து வந்திருந்தான் வருண்.

பவி சாத்விகா இருவரும் பார்த்தவுடனே நன்றாக பேசி பழகிவிட்டனர்.பவி முகத்தில் இருக்கும் புன்னகையை வைத்தே வருண் அவளை சரி செய்துவிட்டான் என்று நிம்மதியானாள் சைந்து.

Advertisement