Advertisement

அத்தியாயம் -26

ஆக்சிட

ண்ட் ஆன இடத்தில் இருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு கால் செய்துவிட வருண் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டான்.

ரகு தகவல் கேட்டு ஓடி வந்தவன், வருணுக்கான சிகிச்சை அளிக்கும்போது கூடவே நின்று பார்த்து கொண்டான்.

மரணத்தோடு போராடி இரண்டு நாட்கள் சுயநினைவு இல்லாமல் இருந்தவன் மூன்றாம் நாள் கண் விழித்தான். அவனை செக் செய்த டாக்டர்கள் அடி பலமாக இருப்பதால் கண்டிப்பாக ஒரு வருடம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டுமென்றுவிட்டனர்.

ஓரளவு சரியான உடன் வருணை சென்னை அழைத்து வந்துவிட்டான் ரகு. டாப் ஆக்டர் ஆக்சிடண்ட் என்று எல்லா சேனலும் அவன் பெயரை போட்டு தாங்கள் காசை சம்பாரித்து கொண்டனர். படுக்கையில் ஆறு மாதம் இருந்தவன் ரகுவிடம் “என்னை கடத்த சொன்னது யாருனு கண்டுபிடிச்சியா ரகு? “என்க,

அவனோ சிறு தயக்கத்துடன் “உங்க சித்தப்பாதான் சொத்து ஆசையில் அப்படி செய்ய சொல்லியிருக்கார் சார்”

ரகு சொல்வதைக் கேட்டு வருணின் முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏற்கனவே நான் இதை எதிர்பார்த்தேன் என்பது போல், அமர்ந்திருந்தவன் பின் “அவரை துபாய்ல இருக்க நம்ம எண்ணெய் ஃபேக்டரில ஏதோ பிரச்சனை? அதை சரி பண்ணனும்னு சொல்லி அனுப்பிரு. திரும்ப அவர் இங்க வர்றதுக்கு குறைஞ்சது பத்து வருஷமாவது ஆகணும். அங்க இருக்க நம்ம ஆளுங்க கிட்ட சொல்லிரு.

சித்தி தங்கச்சி எல்லாரையும் இங்க நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரு. இப்போ நீ போகலாம் வேற எதுவும் ஒண்ணுன்னா உனக்கு கால் பண்றேன்”என்றவன் அப்படியே படுத்து கண்களை மூடினான்.

வருண் கண்கள் மூடியிருந்தாலும் அவனை நிம்மதியாக உறங்க விடாமல் பெண்ணின் சிணுங்கல்களும், “அமுல் பேபி என்ன விடுடா” என்ற நடுங்கிய குரலும், காதுகளில் திரும்பத் திரும்ப ஒலிக்க காது மடல்கள் சிவக்க எழுந்து அமர்ந்தான்.

‘யாருடி நீ? எங்க இருக்க?ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்ற.

ஒரு வருஷமா உன்னோட நினைப்பு மட்டும்தான் என்கிட்ட இருக்கு. நீ யாரு? என்னன்னு எதுவும் தெரியல. எங்க இருக்க. சீக்கிரம் என் கண்ணு முன்னாடி வாடி. உனக்காகதான் போராடி வந்துருக்கேன். இது உனக்கான உயிர். சீக்கிரம் என் முன்னாடி வந்துரு பப்ளி” என்று தனக்குள்ளேயே முணகியவனுக்கு அவளை எப்படி கண்டுபிடிப்பது என்பது பெருத்த யோசனையாக இருந்தது.

எப்படி…. எப்படி…என்று யோசித்தவனுக்கு டக்கென்று அந்த நினைவு வர, உடனே போனை எடுத்து ரகுவிற்கு அழைத்தான்.

ரகு அந்த பக்கம் போனை எடுத்தவுடன்,“ரகு அன்னைக்கு நான் என்னோட ரூம்ல இல்லாம,வேற ரூம்ல இருக்கேங்கற விஷயம் உனக்கு எப்படி தெரியும்”

ரகு, “அதுவா சார் ஒரு பொண்ணு வந்து சொன்னது சார்”.

“ஹோ…. அந்த பொண்ண மறுபடியும் பார்த்தா உனக்கு அடையாளம் தெரியுமா”

“இல்ல சார். நான் அந்த பொண்ணு முகத்தை பார்க்கல, துப்பட்டாவால முகம் முழுதும் மூடி இருந்துச்சு. கண்ண மட்டும் தான் பார்த்தேன். அந்த பொண்ணு சொன்ன உடனே உங்கள காணாங்கிற பதட்டத்துல இருந்ததால உடனே உங்கள பார்க்க ஓடி வந்துட்டேன் சார். அந்த பொண்ணுக்கு நன்றி கூட சொல்லல” என்று வருத்தமாக சொல்ல,

வருணோ கடுப்பாகி “பாவம் பண்ணிட்டடா…. பாவம் பண்ணிட்ட. ஏன்டா வெண்ண. நான் என்ன உன் லவ்வரா பிரிவு துயர் தாங்காம ஓடி வந்துருக்க. ஒரு பொண்ணு என்ன பத்தின டீடெயில்ஸ் சொல்லியிருக்கு. அந்த பொண்ணுகிட்ட யாரு என்னனு விசாரிகாம பார்க்கல, தெரியலன்னு சொல்லிட்டுயிருக்க”

“இல்ல சார் உங்கள காணோம்னு பதட்டத்தில் இருந்தேன். அந்த பொண்ணு சொன்ன உடனே ஓடி வந்துட்டேன் சார்”

“ ஆமா. என்ன பார்க்க எதுக்கு அப்படி ஓடி வந்த?அந்த பொண்ணோட டீடைல்ஸ் வாங்கிட்டு வரணுங்கற அறிவு கூட உனக்கு இல்லையா? உன்னால பாரு இப்ப எவ்ளோ பிரச்சனை ஆகிப்போச்சுன்னு” என்று சொல்ல,

ரகுக்கு ஒன்றும் புரியவில்லை, “என்ன சார் பிரச்சினையாச்சு” என்க,

வருணோ “என்ன பிரச்சனைனு சொன்னாதான் அடுத்த வார்த்தை பேசுவியா. நீ பண்ண வேலையால…ச்ச…என்ன ரகு” என்ற வருணின் எரிச்சல் குரலால், ரகுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.

‘அய்யய்யோ அந்த பொண்ணு சாரோட பொருள் எதும் திருடிட்டு போய்டுச்சோ. இப்போ என்ன பண்றது’ என்று பயந்தவன், அதை அவனிடமே கேட்டான்.

வருணுக்கு எப்போதும் ரகுவை அலற விடுவது ரொம்ப பிடிக்கும். அவனை பயமுறுத்தி வேலை வாங்கினால்தான் அவனுக்கு நிம்மதியாக இருக்கும். இப்போதும் அதே போல் அவனை பயமுறுத்தி “முதல்ல அந்த பொண்ண கண்டுபிடி” என்றான்.

ரகுவோ “சார் அந்த பொண்ணு மூஞ்சி கூட நான் பார்க்கலையே”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. அந்த பொண்ண நீ கண்டுபிடிக்கணும். கண்டுபிடிச்சே ஆகணும். இல்ல உனக்கு வேலை இல்லை” என்றுவிட்டு போனை கட் பண்ணியவன் “ஹேய் பப்ளி பயலுக்கு அடில நெருப்பு வச்சிருக்கேன். கண்டிப்பா உன்னை சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவான். உன்னோட அமுல் பேபிக்காக வெயிட்பண்ணு சீக்கிரமா உன் முன்னாடி வரேன்” என்றுவிட்டு அவள் நினைவுகளோடு தூங்கி போனான்.

ரகு பவி போட்டோ கிடைக்காமல் நாயாக அழைந்து திரிந்தான். அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் இருக்கும் தெருவில் ஒரு மருந்து கடையில் சிசிடிவி இருப்பதை கண்டுபிடித்தவன், அவர் காலில் விழாத குறையாக கெஞ்சி அந்த சிசிடிவி செக் செய்து ஒருவழியாக பவி போட்டோவை எடுத்தவன் மேலும் அவளை கண்டுபிடிக்க தெரு தெருவாக அழைந்து கடைசியில் சூர்யா உதவியுடன் கண்டுபிடித்து இதோ இப்பொழுது பவியின் முன் வந்து நிற்கிறான் வருண் கிருஷ்ணா.

இருவரும் தங்களுக்குள் மூழ்கி இருக்க, ரகு வேகமாக தும்மி அவர்களை நிகழ் உலகிற்கு அழைத்து வந்தான்.

மஞ்சு சூர்யாவையும், வருணையும் மாறி மாறி பார்த்தவர் இறுதியாக “சரி மாப்பிள்ளை என் பொண்ணு மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டாலே அதுவே போதும்.நான் இந்த ஆப்ரேசன் பண்ணிக்கறேன்” என்று சொல்ல,

சூர்யா பவியை அழுத்தமாக பார்த்து “சொல்லுங்க பவி உங்க அம்மா கேட்கறாங்க. கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லுங்க” என்று சொல்ல,

பவி முகமோ குழம்பி போய் இருந்தது. ‘நடந்த விஷயங்களுக்கு யாரையும் குறை சொல்ல முடியாது. அதற்காக இந்த திருமணம் சரியான முடிவாக இருக்குமா’ என்று.

தங்கை அருகில் சென்ற சைந்து “என்ன பவி இன்னும் யோசனை. உங்களுக்குள்ள என்ன விஷயமா இருந்தாலும் உட்கார்ந்து பேசுங்க. பேசினா சரியாகாத பிரச்சனை எதுவும் இல்லை. இப்போதைக்கு அம்மாட்ட சம்மதம்னு சொல்லு. அப்புறம் ரெண்டு பேரும் பொறுமையா பேசுங்க” என்று சொல்லி திரும்ப, சூர்யா அவளை நக்கலாக பார்த்தான். அந்த பார்வையே சொன்னது ‘நீ அதுமாதிரி உட்கார்ந்து பேசுனியா’ என்று.

உடனே முகம் வாட தலை குனிந்த சைந்து கண்கள் கலங்கி போனது. ‘அப்போ நாம தப்பு பண்ணிட்டமோ. சின்ன விஷத்தை நாமதான் பெருசு பண்ணிட்டமோ ஆனா….’ என்று நினைத்தவள் எண்ண ஓட்டத்தை தடுக்கும் பொருட்டு பவி திருமணத்துக்கு சம்மதம் சொன்னாள்.

அதன்பின் சற்று நேரம் சாதாரணமாக பேசி கொண்டிருந்தனர்.வருண் தான் கிளம்புவதாக சொல்ல, பவி அவனுடன் பேச வேண்டுமென்று வர, அவளை ஊன்றி பார்த்தவன் பின் “சரி வா “ என்று ஒரு ரெஸ்டாரண்ட்க்கு அழைத்து சென்றான்.

இருவர் மட்டும் இருக்கும் அந்த அறையில் ஏசியின் சத்தம் மட்டும் கேட்டு கொண்டு இருந்தது.

பவி எப்படி ஆரம்பிப்பது என்று அழைப்புறும் விழிகளுடன் அமர்ந்திருந்தாள். அவளின் தவிப்பை கன்னத்தில் கை வைத்து ரசித்து கொண்டிருந்தான் வருண்.

தனக்குள் ஒரு முடிவெடுத்தவள் பின் ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமாளித்து கொண்டு பேச துவங்கினாள் “பாருங்க மிஸ்டர் வருண்”.

“எங்க…எங்க பார்க்க” என்றவன் குரலில் கடுப்பானவள் “மிஸ்டர் வருண் நான் பேசறது நம்ம வாழ்க்கையை பத்தி , இதுல என்ன விளையாட்டு”.

“நம்ம வாழ்க்கைக்கு என்ன? சம்பவம் சம்பவம்னு சொல்லுவாங்க அது சிறப்பா முடிஞ்சுருச்சு” என்றவன் சற்று யோசித்துவிட்டு “சிறப்பாதானே முடிஞ்சுது” என்று கேட்க, பல்லை கடித்தவள்.

“யோவ்…நான் என்ன பேசறேன். நீ என்ன பேசற”.

“என்னம்மா புருஷன பொசுக்குன்னு யோவ்னு சொல்லிட்ட, பரவால்ல நீதானே சொன்ன. இப்போ என்ன நம்ம வாழ்க்கைக்கு உன்னை மாதிரி ஹாட்டா….. “ என்றவன் சொல்ல, அவள் முறைக்க,

“ஹாட்டானா…. நீ நினைக்கற மாதிரி இல்லமா கோபமா ஒரு பையன் , என்னை மாதிரி கூலா ஒன்னு…இல்ல…. ரெண்டு…. இல்ல…மூணு…. ம்ம்…. மூணு போதும் மூணு பொண்ணு. அளவான குடும்பம் தித்திக்கும் உலகம் இவ்ளோதான் நம்ம வாழ்க்கை” என்று சிரிப்புடன் சொல்ல,

எதிரில் இருந்தவனை ஆழ்ந்து பார்த்தவள் “ஏன்?” என்று கேட்க,

“ஏன்னா…. நான் உங்ககிட்ட என் கற்பை இழந்துட்டேன் லதா…. இழந்துட்டேன்…. இந்த அபலைய…. ஓ…. அபலை பெண் பாலா, அபலன கை விடமா கல்யாணம் செய்து கொள்ளுங்கள் லதா செய்து கொள்ளுங்கள்….” என்று பழைய பட பாணியில் பேச,

முகத்தை சுழித்த பவி “அட பைத்தியம்ப்பா….” என்று முடிவெடுத்தவளாக வெளியில் செல்ல முனைய, அவள் கையை பிடித்து தடுத்தவன் “ஓகே ஜோக்ஸ் அபார்ட்…எனக்கு உன்னை பிடிச்சுருக்கு.

Advertisement