Advertisement

அத்தியாயம் -25

வருண் கிருஷ்ணாவை கண்டு அனைவரும் அப்படியே திகைத்து நின்றிருக்க சூர்யாதான் முதலில் பேச்சை துவங்கினான்.

“என்ன மிஸ்டர் வருண் கிருஷ்ணா கடைசில கண்டுபிடிச்சிட்டீங்க போல”,என்று நக்கலாக கேட்க,

“உங்க பாதுகாப்பு வளையத்துல இருந்து தகவல் வெளிய வந்துடுமா என்ன? எல்லா விஷயமும் நீங்க தெரிஞ்சுகிட்டதாலதான் என்னால கண்டுபிடிக்க முடிஞ்சது” என்றவன் ‘எல்லாம்’ என்ற வார்த்தையை அழுத்தி சொல்ல, சூர்யாவோ தோள்களை குலுக்கியவன் வேறு எதுவும் சொல்லாமல் நின்றிருந்தான்.

கணவனின் பின் நின்றிருந்த சைந்தவியை கண்ட வருண் கிருஷ்ணா “என்னங்க நீங்க பொசுக்குன்னு என்னை பார்த்து பூச்சாண்டின்னு சொல்லிட்டீங்க” என்க,

மற்றவர்களை விட அவனது பிஏவிற்குதான் பக்கென்று சிரிப்பு வந்தது. வருண் உடனே திரும்பி அவனை முறைக்க அவனோ என்ன சொல்வது என்று விழித்து, பின் இல்ல பாஸ் நான் சிரிக்க எல்லாம் இல்ல. தும்மல்…. தும்மல் வந்துச்சு” என்று சொல்ல,

வருணோ மூக்குல மிளகாய் பொடி போட்டா சரியா போயிடும், வீட்டுக்கு போன உடனே அந்த டிரீட்மென்ட் கொடுக்கறேன். இப்போ அமைதியா நில்லு”என்றவன் சைந்தவி அருகில் செல்ல போக,அவன் முன் நகர்ந்து நின்ற சூர்யா “இப்படியே சொல்லுங்க அவ ரொம்ப பயந்த சுபாவம்”என்றான்.

வருண் சைந்துவை எட்டி பார்க்க, அவளோ கணவனின் உடையை இறுக்கி பிடித்தவாரு திரு திருவென விழித்தவாறு நின்றிருந்தாள்.

சூர்யாவை புருவம் தூக்கி பார்த்தவன் “உங்க வைப்ப நான் ஒன்னும் பண்ணலங்க. ஒரு விஷயம் கேட்கணும் அவ்வளவுதான்”.

“பரவால்ல இப்படியே கேளுங்க” என்ற சூர்யா நகறாமல் அப்படியே நின்றிருக்க.

சைந்துவை எட்டி பார்த்தவன் “இரும்பு கேட்டவிட காஸ்ட்லி கேட்தான்” என்றுவிட்டு “நான் வர்றதுக்கு முன்னாடி கட்டுங்க கட்டுங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க.எங்க தாலி கொடுங்க நான் கட்டறேன்”என்று சொல்ல,

பவித்ரா கோபமாக “என்ன பேசுறீங்க” என்று கேட்க,

வருணோ கூலாக “என் உயிரை காப்பாத்துன பொண்ண பொண்டாட்டி ஆக்க தாலி கேட்கிறேன்” என்றவன் பதிலில் அனைவரும் உறைந்து போய் நின்றிருந்தனர்.

பவியோ எகத்தாளமான குரலில் “என்ன சார் நன்றி கடனா” என்க,
அவனோ “இல்லை…. தப்பை சரிபண்றேன்” என்று கூற,

பவியின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது. உடனே தன்னை சமாளிக்க முடியாமல் திணறியவள் தடுமாறிய குரலில் என்ன தப்பு அதெல்லாம் ஒன்னும் இல்ல. தேவையில்லாம எதுக்கு பேசறீங்க. முதல்ல இங்க இருந்து கிளம்புங்க”என்று சொல்ல,

வருணோ “முடியாது உன்னை என் பொண்டாட்டியா அழைச்சுட்டுதான் போவேன்” என்க

அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. குமார்தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார். “என்ன சார் நீங்க. அவதான் உங்கள கட்டிக்க விருப்பம் இல்லைனு சொல்றால்ல அப்புறம் என்ன. எங்களுக்கு எங்க பொண்ணு விருப்பம்தான் முக்கியம்” என்க,

சூர்யா நர நரவென பற்களை கடித்து சைந்து புறம் திரும்பி “உன் அப்பாவ ஒழுங்கா வாய மூட சொல்லு. உண்மை எதுன்னு தெரியாம சும்மா என் பொண்ணு…என் பொண்ணுன்னு ஓவரா நெஞ்ச நக்கிட்டு இருக்காரு” என்று சொல்ல,

“என்ன உண்மை” என்றாள் சைந்து அப்பாவியாக, அவளை மேலும் கீழும் பார்த்தவன் “ம்ம்…. கல்யாணத்துக்கு அப்புறம் நாம பண்ண விஷயம், அவங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே காஷ்மீர்ல குதூகலமா முடிஞ்சுருச்சு” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல,

“எதே……” என்று நெஞ்சில் கை வைத்து கொண்டாள் சைந்து. அவள் திடீரென கத்தவும் அனைவரும் அவளை பார்க்க, அவளோ பேயடைந்தது போல் நின்றிருந்தாள். அதை கண்டு அவள் மேல் கோபம் இருந்தாலும் சூர்யாவிற்கு சிரிப்புதான் வந்தது .

மஞ்சுதான் பொறுமையாக கேட்டார் “என்ன நடந்தது மாப்பிள்ளை. கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்”என்க.

சூர்யாவும் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தான்.

“சரி நீங்களே சொல்லுங்க. இப்போ நாம என்ன முடிவு எடுக்கலாம்” என்று வருண், பவி இருவரையும் பார்த்து கொண்டே கேட்க,

சூர்யாவோ சாதாரணமாக “இருவருக்கும் கல்யாணம் செய்து வைங்க” என்றான்.

குமார் “அது எப்படி…” என்று குதித்து கொண்டு வர, சூர்யா திரும்பி சைந்துவை ஒரு பார்வை பார்க்க, அவளோ “இந்த அப்பா வேற நிலைமை புரியாம” என்று அவர் அருகில் சென்று “ப்பா கொஞ்சம் அமைதியா இருங்க. பவிக்கு அவரை பிடிக்கும். ரெண்டு பேருக்கும் சண்டை அதனால அப்படி சொல்றா” என்று அவரை அடக்கியவள், ‘உண்மையை சொல்லாம இருக்க நீ எதாவது கதை ரெடிபண்ணி வச்சுருப்பியே அதை சொல்லுப்பா. என்னால இதுக்கு மேல சமாளிக்க முடியாது’ என்பதைப் போல் கணவனை பார்க்க அவனும் பேச ஆரம்பித்தான்.

ஆம், சூர்யாவிற்கு அனைத்தும் தெரிந்துவிட்டதுதான். மனைவி இல்லை என்றாலும் அவர்கள் குடும்பத்தை எப்போதும் தன் பாதுகாப்பு வளையத்திற்குள்தான் வைத்திருந்தான்.

பவி அடிக்கடி தன்னிடம் பேச வருவதை எண்ணி யோசனையாக இருந்தவனுக்கு ஒரு போன் கால் வந்தது.

அண்டர் கிரவுண்ட் ரவுடிகளில் ஒருவன்தான் அழைத்திருந்தான். பல சமாளிக்க முடியாத பிரச்சனைகளில் அவர்களை பயன்படுத்தி கொள்வான். குற்றவாளி தண்டிக்க முடியாத பெரிய இடமாக இருந்தால் இவர்களை வைத்து அவர்களை போட்டு தள்ளிவிட்டு, கேஸ் இல்லாமல் பார்த்து கொள்வான்.அதனாலே அவர்களுடனான அவன் பழக்கம் தொடர்கிறது.

போனை அட்டன் செய்து என்ன என்று விசாரித்தவனிடம் எதிரில் இருந்தவன் பவியின் போட்டோவை கொடுத்து அவளைப்பற்றி விசாரிக்க சொன்னதாக சொல்ல, சூர்யா புருவம் சுருக்கி யோசித்துவிட்டு பின் “அவளைப் பற்றிய எந்த விஷயங்களையும் யாருக்கும் தெரியா கூடாது” என்று கூற, அவனும் “ஓகே பாஸ்” என்றுவிட்டு போனை கட் செய்தான்.

பவி பேச வருவது, இப்போது அவளை ஆட்கள் தேடுவது என அனைத்தையும் யோசித்தவனுக்கு எங்கயோ இடிக்க பவியைப்பற்றிய அனைத்து விஷயங்களையும் யோசித்தான்.

பவி காஷ்மீர் செல்லும்போதும் யாருடனும் பிரச்சனை இல்லை. அங்கிருந்து வந்த பிறகும் யாருடனும் பிரச்சனை இல்லை. அப்போ அங்க போன இடத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்று நினைத்தவன், தன் நண்பனுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி நன்றாக விசாரிக்க சொன்னான்.

அவனும் நண்பனுக்காக அலைந்து திரிந்து திரட்டிய விஷயங்களை சூர்யாவை அழைத்து சொல்ல, அவனுக்கு கோபம் அதிகமானது “லூசு பயலே உன்ன நம்பி பொண்ணை அனுப்புனா. இதுதான் நீ பாத்துக்கற லட்சணமா” என்று பச்சை பச்சையாக திட்டி வைத்துவிட்டான். பின்தான் பவியைபற்றிய விஷயங்கள் வருணுக்கு கிடைக்குமாறு செய்தான். எல்லாம் சூர்யாவின் அனுமதியோடுதான் நடந்தது.

உண்மையை சொன்னால் நன்றாக இருக்காது என்று இப்பொழுது மாமியாரிடம் அப்படியே மாற்றி சொல்ல துவங்கினான்.

“ம்ம்…ஆமாம் அத்தை பவியும் வருண் கிருஷ்ணாவும் காதலிச்சிட்டு இருந்தாங்க. பவி காஷ்மீர் போகவும்தான் அவரும் அங்க போயிருக்காரு. போன இடத்தில் ரெண்டு பேருக்கும் சண்டை வந்து பிரிஞ்சுட்டாங்க. அவர் எவ்ளோ டைம் மன்னிப்பு கேட்டாலும் உங்க பொண்ணு இறங்கி வர மாட்டிக்கிறா. அதான் உங்களை பார்த்து பேச வந்திருக்கிறார்” என்று கோர்வையாக அடித்துவிட சைந்து மட்டும் அல்லாமல் பவி, வருண் அவனது அப்பாவி பிஏ ரகு என அனைவரும் அவனை வாயை பிளந்து “ஆஆ……” வென பார்த்து கொண்டிருந்தனர்.

சைந்து, ‘என்னடா புதுசு புதுசா கத விடுறீங்க. போலிஸ்கார் பேசாம கதை எழுத போய் இருக்கலாம். என்னென்ன கதைவிடறான் பாருங்க கம்பி கட்டுற கதை எல்லாம் விடறான்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

சூர்யா பவியை பார்த்து “நடந்தது எதுவா இருந்தாலும் நடந்து முடிஞ்சதாகவே இருக்கட்டும். நடக்க போறது நல்லதா இருக்கட்டும். இப்ப உன் அம்மா ஆசையை நிறைவேத்தறதுல, எந்த தயக்கமும் இருக்காதுன்னு நினைக்கிறேன்” என்று அவளை கூர்ந்து பார்த்தவாறு சொல்ல அவளும் அமைதியாகி விட்டாள்.

வருண், “என்ன பப்ளி…. ச்சி….பவி என்னை மேரேஜ் பண்ணிக்க உனக்கு சம்மதமா” என்று கண்ணடித்து கேட்க, அவளோ அவனை முறைத்தாள்.

இருவர் நினைவும் அவர்கள் சந்தித்து கொண்ட நாட்களுக்கு பயணமானது.

காஷ்மீர் குளிரில் பல தகவல்களை திரட்டி தன் ஆபிஸ்க்கு அனுப்பி வைத்த பவிக்கு வெளியில் எங்காவது சென்றுவரலாம் என்று தோன்ற, குளிருக்கு இதமான உடைகளை அணிந்து கொண்டு நடக்க துவங்கினாள்.

நடந்து கொண்டிருந்தவள் கண்களுக்கு ஒரு டிஸ்க்கோதே கிளப் பட, ஏனோ உள்ளே சென்று பார்க்க சொல்லி அவள் உள் மனம் உந்த, உள்ளே நுழைந்துவிட்டாள். அங்கு அவ்வளவு குளிரிலும் அரை குறை ஆடையுடன் பெண்கள் நடனம் ஆடி கொண்டிருக்க, டிஜே பாடல்கள் காதை செவிடாக்க, புகை மூட்டமாக இருந்த இடத்தை பார்த்து முகத்தை சுழித்தாள். இனி இங்கு இருக்க வேண்டாம் என்று நினைத்தவள் வெளியே செல்ல போக, அப்போதுதான் கவனித்தாள் அங்கு சிலர் போதை மருந்துகளை உபயோகிப்பதை. உடனே அவளது ரிப்போர்ட்டர் மூளை விழித்து கொள்ள, ஓரமாக அமர்ந்தவள் தனக்கான ஜூசை ஆர்டர் செய்துவிட்டு சுற்றி நடப்பதை கவனிக்க துவங்கினாள்.

சுற்றி பார்த்து கொண்டிருந்தவள் அவளையே வேட்டையாடும் பார்வை பார்த்து கொண்டிருந்த இரண்டு ஜோடி கழுகு கண்களை கவனிக்க மறந்தாள்.

பவிக்கு ஜூஸ் கொண்டு சென்ற வெயிட்டரை நிறுத்திய அந்த கண்களுக்கு சொந்தக்கார குடிமகன்கள் அவள் ஜூஸில் மயக்க மருந்தை கலந்து , கொடுக்க சொன்னவர்கள் மேலும் அந்த வெயிட்டர் கையில் நான்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திணித்தனர்.

பவி நாலா புறமும் கண்களை சூழலவிட்டவாறு தனக்கு வந்த ஜூசை அரை டம்ளர் குடித்துவிட்டு ஒரு மாதிரி இருப்பதை உணர்ந்தாள். உடனே ஏதோ தவறாக நடக்க போவதாக உணர்ந்தவள் முதலில் ரெஸ்ட் ரூம் சென்று முகத்தை அடித்து கழுவிவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிடலாம் என்று சென்றாள்.

Advertisement