Advertisement

சைந்துவே தொடர்ந்து “கல்யாணம் ஆகிடுச்சுங்கறதுக்காக கடமையா என்னோட நீங்க வாழ வேண்டான்னுதான் போனேன் காதலர்களை பிரிச்சுட்டோமேங்கற குற்ற உணர்ச்சிலதான் போனேன். என் தங்கச்சியோட சந்தோஷம் அழிய நானே காரணம் ஆகிட்டேங்கறதால போனேன். எல்லாத்துக்கும் மேல நான் விரும்புனவர் மனசுல இன்னொரு பொண்ணு இருக்கானு தெரிஞ்சதுக்கப்புறம் என்னோட அவரை இழுத்து பிடிச்சு நிற்க வைக்கறது தப்புங்கறதால போனேன்”என்றவள் முகத்தை மூடி கதறி அழ துவங்கினாள்.

சைந்தவி அழுவதை விரக்தியாக பார்த்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்க, அழுது கொண்டிருந்த சைந்து கணவன் எதாவது சொல்லி சமாதானம் செய்ய வருவான் என்று நினைத்து கொண்டிருக்க அவனோ அவளைதான் இறுகிய முகத்தோடு பார்த்து கொண்டிருந்தான்.

ஒருவழியாக அழுது ஓய்ந்த சைந்து “நான் ஒரு முடிவு எடுத்திட்டேன். குழந்தையை இனி உங்ககிட்ட இருந்து பிரிக்கமாட்டேன். அதே போல இவ்ளோ நாள் அவளைப்பத்தி சொல்லாமல் இருந்தது என் தப்புதான் அதுக்காக என்னை மன்னிச்சுடுங்க. உங்க வாழ்க்கைல நான் கண்டிப்பா குறுக்க வரமாட்டேன். பாப்பா தூங்கட்டும் இடைல எழமாட்டா. நானா காலைல வந்து தூக்கிட்டு போறேன். இப்போ தூக்குனா எழுந்துப்பா” என்றவள் அறையில் இருந்து வெளியேறி பக்கத்து அறையில் அடைந்து கொண்டாள்.

மறுநாள் காலைதான் சைந்தவி வந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்தது. ராதிகாவிற்கு பேத்தியை பார்த்தவுடன் ஒரே சந்தோசம் அதே சமயம் இவள் பிறப்பை கூட தங்களிடம் சொல்ல முடியாத அளவு என்னதான் நடந்தது என்று குழம்பி மகனிடம் போய் நின்றார்.

சூர்யாவோ “ம்மா நான் பார்த்துக்கறேன். தேவையில்லாம கவலைப்படாத்தீங்க. உங்க மருமகளுக்கு என் ட்ரீட்மெண்ட் கொஞ்சம் தேவைப்படுது. வேற ஒன்னும் இல்லை. நடக்கறதை பொறுமையா வேடிக்கை மட்டும் பாருங்க” என்றுவிட, ராதிகா குழம்பிதான் போனார்.

சைந்து பவியுடன் பேசினாலும் ஒரு விலகல் இருப்பதை பவி உணரத்தான் செய்தாள். ஆனால், அது ஏன் என்றுதான் அவளுக்கு புரியவில்லை.

சைந்து தங்கள் பிரிவிற்கான காரணத்தை சூர்யாவிடம் மட்டும்தான் சொன்னாள். அவள் தாயிடமோ தந்தையிடமோ யாரிடமும் சொல்லவில்லை. அவர்களது காதலைப்பற்றி சொன்னால் பெற்றோர் தன் கணவனை தவறாக நினைத்துவிடுவார்களோ என்று அஞ்சியவள்,தன் பயமே காரணம் என்று சொல்லி அனைவரிடமும் அழுத்தமாக கூறி அந்த பேச்சை முடித்துவிட்டாள்.

காலையில் வேலைக்கு கிளம்பிய சூர்யாவை தடுத்த சைந்து, குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றாள்.

மஞ்சு அனைவரையும் ஒன்றாக பார்த்ததில் ஆச்சரியப்பட்டவர் “என்ன எல்லாரும் ஒண்ணா வந்து இருக்கீங்க” என்க,

சைந்து, “எல்லாம் ஒரு காரணமாதான்ம்மா. உங்க ஆசையை நிறைவேற்ற” என்று சொல்ல,

மஞ்சுவிற்கும் சூர்யாவிற்கும் அவளது எண்ணம் புரிந்தது. மஞ்சு பயத்துடன் சூர்யா முகத்தை பார்க்க, அவனோ கோபத்தில் தாடைகள் இறுக, கோபத்தில் கைகளை மடக்கி கொண்டு நின்றிருந்தான்.

உடன் இருந்த மற்றவர்களுக்கு அவளது எண்ணம் புரியாததால் விழித்துக் கொண்டு நின்றிருந்தனர். அப்போது சைந்து தன் ஹேண்ட் பேக்கில் இருந்து மாங்கல்யத்தை எடுத்தவள் கலங்கிய கண்ணீரை அடக்கியவாறு நேராக சூர்யாவிடம் சென்று “என்னால உங்க கூட பயந்து பயந்து வாழ முடியாது. உங்களுக்கு ஏத்த பொண்ணு பவிதான். ஆரம்பத்தில் இருந்தே இது சரி வராதுன்னு சொன்னேன். ஆனா யாரும் கேட்கல. சரி வாழ்ந்து பார்ப்போமேன்னுதான் அமைதியா இருந்தேன்.

கோவிலுக்கு கூட என்னால நிம்மதியா போக முடியல. நீ…நீங்க வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வர வரை பயந்துட்டேதான் இருப்பேன். என்னால சுத்தமா முடியல. என்னால வீணா போன உங்க வாழ்க்கையை நானே சரி பண்றேன். இதை பவி கழுத்துல கட்டுங்க” என்று இரவு முழுதும் பேச ஒத்திகை பார்த்த வார்த்தைகளை திக்காமல் திணறாமல் கூறிவிட்டாள்தான் ஆனால் இறுதி வார்த்தைகளை கூறும் போது அவளையும் அறியாமல் கண்கள் கண்ணீரை வெளிப்படுத்தியது.

பவியோ கோபமாக அக்காவின் அருகில் வந்தவள் “சைந்து என்ன லூசு மாதிரி உளறிட்டு இருக்க. உனக்கு அடி எதுவும்பட்டு பழசை மறந்துட்டியா. அவர் உன் புருஷன். அவர் கூட போய் என்னை…” என்று கோபமாக சொல்ல, அவளை ஓரமாக இழுத்து சென்ற சைந்து.

“உன்னோட காக்கி எனக்கு வேணாம். ஒழுங்கா அவரை கல்யாணம் செய்துட்டு சந்தோஷமா இருக்க வழிய பாரு. நானும் கல்யாணம் ஆனதுல இருந்து பார்த்துட்டுதான் இருக்கேன். எப்போவும் சோகமா சுத்தி வந்துட்டு இருக்க. அவரை மறக்கதானே எங்களை எல்லாம்விட்டுட்டு காஷ்மீர் போன. எனக்கு எல்லாம் தெரியும். அன்னைக்கு கூட உன் லவ்வர் யாருனு சொல்லு நான் பேசறேன்னு சொன்னேன் அதுக்கு நீ என்ன சொன்ன” என்ற சகோதரியை புரியாமல் பார்த்த பவி கடுப்பான குரலில் “அதையும் நீயே சொல்லு” என்க,

அவளோ “யாரா இருந்தாலும் பேசுவியானு கேட்டல்ல. அதான் பேசிட்டேன் கல்யாணத்துக்கு ஒத்துக்கோ”என்ற அக்காவை சொல்ல முடியா தவிப்புடன் பார்த்த பவி.
“ப்ளீஸ் சைந்து புரிஞ்சுக்கோ. நான்தான் அவர் பின்னாடி சுத்துனேன். அவர் என்னை கண்டுக்கவே இல்லை. அதுமட்டும் இல்லாம என்னோட சோகத்துக்கு காரணம் நீ நினைக்கற மாதிரி இல்ல. புரிஞ்சுக்கோ” என்றவளை பிடிவாதமாக பார்த்த சைந்து.

“இல்ல நீ எனக்காக பொய் சொல்ற. வாயை மூடிட்டு வா. எல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்றவள் தங்கை கையை பிடித்து இழுத்து கொண்டு வர, குமார், ராதிகா, மஞ்சு என்று யார் சொன்னாலும் கேட்காமல் இருப்பவளை கண்டு சூர்யாவிற்கு கோபத்தில் காதுக்கள் சிவக்க துவங்கியது.

ஒரு கட்டத்துக்கு மேல் கடுப்பான சைந்து “இப்போ நீங்க இந்த தாலியை பவி கழுத்துல கட்டல என் கையை கட்பண்ணிக்குவேன்” என்று சொல்ல, அப்போதும் சூர்யா அசையவில்லை.

குமார்தான் பதறி கத்த துவங்கினார். சைந்து வேணாண்டா சொன்னா கேளு” என்க, அவள் பார்வையோ கணவன் மீதே இருந்தது.

கல்லூழி மங்கன் கொஞ்சமாவது அசையரானா பாரு. அப்படியே நிக்கறான். உண்மையா கட் பண்ணனுமா. ஹையோ இரத்தம் வருமே’ என்று மனதுக்குள் புலம்பினாலும் வெளியே எதையும் காட்டி கொள்ளாமல் நின்றிருக்க, அப்போது,

“என்கிட்ட குடுங்க நான் கட்டறேன்” என்றவாறு வந்து நின்றது அந்த உருவம்.

முகத்தில் பெரிய கண்ணாடி, தலையில் தொப்பி முகம் முழுதும் தாடி என வந்து நின்றவனை கண்டு சைந்து பயந்துதான் போனாள். அதில் அவளையும் மறந்து கையில் இருந்த கத்தி கீழே விழ, வேகமாக சூர்யா பின்னால் போய் நின்று கொண்டவள் “அம்மா பூச்சாண்டி….” என்று அழற, சூர்யாவோ அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு எதிரில் இருந்தவனிடம் “ஹாய்…” என்று சாம்பிரதாயமாக கையை நீட்ட, அவனும் “ஹலோ…” என்றவாறு கையை நீட்டினான்.

ஆனால் அந்த உருவத்துடன் வந்தவனோ “எதே பூச்சாண்டியா…. சரியா போச்சு போங்க. அவரு பூச்சாண்டி இல்ல. ராட்சஷன் அவரு சொன்ன வேலைய செய்யலனா அப்படிதான் மாறுவாரு” என்று தனக்குள் பேசி கொண்டான்.

குடும்பத்தில் இருந்த அனைவரும் யாரென்று புரியாமல் விழித்து கொண்டிருக்க, பவி அருகில் போனவன் “என்ன பப்ளி உன்னை கண்டுபிடிச்சிட்டேனா” என்று சொல்ல, பவியின் கண்கள் சாசர் போல் விரிந்தது.

ராதிகா வேகமாக அவர்கள் அருகில் வந்தவள் “யாருப்பா நீ. சம்மந்தமே இல்லாம வந்து நின்னுட்டு மிட்டாய் குடுங்கன்னு சொல்ற மாதிரி தாலிய குடுங்க நான் கட்டறேன்னு சொல்ற, வயசு புள்ளைக்கிட்ட இப்படி பக்கத்துல நின்னு பேசற தள்ளி நில்லுப்பா முதல்ல” என்று அதட்ட,அவனும் சற்று விலகி நின்றான்.

“ம்ம்…அந்த பயம் இருக்கட்டும். என் பையன்ன யாரு நினைச்ச, இந்த சிட்டி கமிஷனராக்கும். ஆள பாரு தாடியும் மீசையுமா. விலகி நில்லுப்பா குழந்தை பயந்துக்க போகுது” என்று கையில் இருந்த பேத்தியை காட்டி சொல்ல,

சுட்டி குழந்தையோ, நான் போலீஸ்காரன் புள்ளடா என்பது போல் அவன் தாடியை பிடித்து இழுக்க அது கையோடு வந்தது. அதை கண்டு அனைவரும் திகைத்து போய் நிற்க, அந்த உருவமே தான் போட்டிருந்த கண்ணாடி, தொப்பி என்று அனைத்தையும் கலைத்து புன்னகை முகமாக நின்றது. அவனை கண்டு மொத்த குடும்பமும் நீங்களா என்பது போல் விழிக்க, சைந்து பார்வை முழுதும் அந்த உருவத்திடம் இருக்க வேகமாக கையை கிள்ளி பார்க்க வலியே இல்லை .

‘என்ன வலிக்கவே இல்ல’ என்று மீண்டும் இம்முறை வேகமாக கிள்ள, அவள் இடையில் வலி ஏற்பட்டது.

‘என்னடா இது அதிசயம் கைல கிள்ளுனா இடுப்புல வலிக்குது’ என்று யோசித்தவாறு திரும்ப, சூர்யாதான் அவளை உக்கிரமாக முறைத்து கொண்டு இருந்தான்.

‘இப்போ எதுக்கு போலிஸ்கார் நம்ம இப்படி பாக்குறாரு’ என்று நினைத்தவளுக்கு அப்போதுதான் தெரிந்தது. தான் அவன் கையை பிடித்து கிள்ளுவதும், அவன் அவள் இடையில் கிள்ளுவதும். உடனே அவன் கையை தட்டிவிட்டவள் முகம் சிவந்து போக,

“எல்லாரும் இருக்காங்க என்ன வேலை பாக்குறீங்க” என்று அதட்ட, அவனோ “நீ முதல்ல கையை எடு” என்று அந்நிய குரலில் கூற, அவளோ யோசனையான முகத்துடன் அவனிடம் இருந்து விலகி நின்றாள்.

மொத்த குடும்பமும் வந்த புது நபரை பார்த்து கொண்டிருந்ததால் இவர்களை யாரும் கவனிக்கவில்லை.

பிறகு அவர்களும்தான் என்ன செய்வார்கள் அங்கு வந்து நிற்பது டாப் ஆக்டர் வருண் கிருஷ்ணாவாச்சே.

ஆக்டருக்கும், பவிக்கும் என்ன சம்மந்தம். இவன் ஏன் பவியை கண்டுபிடிக்க வேண்டும். இவர்களுக்குள் என்ன உறவு….. சைந்து, சூர்யா வாழ்க்கையில் அடுத்து……என்ன நடக்க போகிறது. அனைத்தையும் அடுத்தடுத்த எபிகளில் பார்க்கலாம்.

அணைப்பாள்……

Advertisement