Advertisement

அத்தியாயம் -24

சைந்தவிக்கு மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது. சூர்யா போன் பேசுவதை கண்டு உடனே வேகமாக உள்ளே சென்றவள் தாயிடம் இருந்து குழந்தையை வாங்கி கொண்டு “ம்மா…அ…அ…அவர் வர்றாரு. நா…நான் போறேன்” என்று ஓட போக, அவள் கையை பிடித்து தடுத்த மஞ்சு “அம்மாவவிட்டு போகாதடா” என்று கெஞ்ச, அவளுக்கும் மலுக்கென்று கண்களில் நீர் கோர்த்தது.

“ம்மா…புரிஞ்சுக்கோங்க. இப்போ நான் போறேன். எதா இருந்தாலும் நாளைக்கு பேசலாம்”என்று அவசரமாக சொன்னவள் குழந்தையை தூக்கி கொண்டு வெளியில் எட்டி பார்த்தாள், சூர்யா திரும்பி நின்று போன் பேசி கொண்டிருந்தான்.

‘ஹப்பாடா…’ என்று பெரு மூச்சுவிட்டவள். ஓடிவிடலாம் என்று பார்க்க அந்த ஹாஸ்பிடல் வராண்டா பெரிதாக இருந்தது. அதில் நாம ஓடறதுக்குள்ள கண்டிப்பா அவர் பார்த்துடுவாரு என்ன பண்ணலாம் என்று யோசித்தவள் பின் பக்கத்து அறை கதவை திறந்து உள்ளே சென்றுவிட்டாள். அவள் நேரம் அங்கு யாரும் இல்லாமல் இருக்க, அப்படியே குழந்தையை வைத்து கொண்டு நின்றாள்.

சூர்யா தினமும் தன் வேலை முடிந்தவுடன் மஞ்சுவை பார்க்க வந்துவிடுவான். குமார் தன் மகள் தங்களை பிரிந்து செல்ல காரணம் சூர்யாதான் என்று நினைப்பதால், அவன் வரும் நேரம் எழுந்து வெளியே சென்றுவிடுவார். இன்றும் அப்படிதான் எழுந்து சென்றுவிட்டார்.

மஞ்சுவை பார்க்க அறையின் உள்ளே வந்த சூர்யாவிற்கு அன்று ஏனோ புத்துணர்வாக இருப்பது போல் தோன்றியது. ஏன் என்று புரியாமல் சென்றவன் மாமியாரின் முகத்தை பார்க்க அது பளிச்சென்று இருந்தது. அவர் முகத்தையே ஒரு நிமிடம் கண்கள் சுருங்க பார்த்தவனின் நாசி உணர்ந்தது தன்னவளின் வாசனையை.

மாமியாரின் அருகில் சென்று அமர்ந்தவன் “என்ன அத்த உங்க பொண்ணு போய்ட்டாளா?” என்று கேட்க, அவர் அவனை திகைத்து போய் பார்த்தார்.

“என்ன அப்படி பாக்குறீங்க. நாங்க ஒன்னா வாழ்ந்த நாள் கம்மியா இருக்கலாம். ஆனா அவளைப்பத்தி எல்லாமே எனக்கு தெரியும்.உங்க பொண்ணு விடற மூச்சு காத்த வச்சே அவளை கண்டுபிடிச்சுடுவேன். கண்ணாமூச்சி விளையாட்டு ஒரு முடிவுக்கு வந்துடுச்சு. உங்க பொண்ணு ஆரம்பிச்சு வச்சதை அவளே முடிச்சிட்டா. நீங்க சாப்டீங்களா. இல்லைனா சாப்பிட்டு, நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு உங்க பொண்ணு ஒரு டிராமாபண்ணுவா அதை பார்க்க தெம்பு வேணும்” என்றவன் கிளம்பிவிட்டான் .

மருமகனிடம் உண்மையை சொல்ல முடியவில்லையே என்று மஞ்சு செல்லும் அவன் முதுகையே பாவமாக பார்த்து கொண்டிருந்தார்.
வெளியே வந்த சூர்யா நேராக பக்கத்து அறை கதவை திறந்து உள்ளே நுழைய அங்கு குழந்தையை இறுக்கி அணைத்தவாறு நின்றிருந்தாள் சைந்து.

குழந்தையை கண்ட சூர்யாவிற்கு உள்ளம் அதிர்ந்து போனது. மனைவியை அடிபட்ட பார்வை பார்த்தவன் அடுத்த நிமிடம் குழந்தையை தன் கரங்களில் ஏந்தி இருந்தான். சைந்துவும் அவனை திகைத்து போய்தான் பார்த்து கொண்டிருந்தாள்.

குழந்தையை தூக்கி அதன் நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டவனின் கண்களில் தன் உத்திரத்தில் உதிர்த்த மலரை பிரிந்ததற்கான வலியின் தாக்கத்தால் ஒரு சொட்டு கண்ணீர் உருண்டு ஓடியது.

சைந்தவி குழந்தைக்கு தந்தையின் புகைப்படத்தை காட்டி இருந்ததால் அதுவும் “ப்பா…” என்று மழலை மொழியில் பேசியது.

கணவனின் கண்ணீரைக் கண்ட சைந்துவிற்கு மனம் பாரமாக ஏதோ பேச வந்தவளை, கை நீட்டி தடுத்தவன் ஒரே ஒரு கேள்வியை தான் கேட்டான்.அதற்கான பதிலாக அவளிடம் இருந்து அமைதியே கிடைத்தது. அவள் அமைதியை கண்டு கோபம் வரப்பெற்றவன் மீண்டும் பற்களை கடித்தவாறு அழுத்தமாக “ஏன்? “என்று கேட்க, அப்பொழுதும் அவள் அமைதியாகவே இருந்தாள்.

மனைவியின் அமைதி அவனுள் எரிமலையாய் தகிக்க, அந்த அறையின் கண்ணாடி கதவை ஓங்கி அடித்தவன் “இப்போ சொல்ல போறியா இல்லையா” என்று கர்ஜிக்க,

சூர்யா கையில் வடிந்த குருதியை கண்டு அதிர்ந்து போனவள், அவன் கோப குரலை கேட்டு பயந்து தான் போனாள், தன் சேலையை கிழித்து அவன் கைகளில் கட்டு போட வந்தவளை தடுத்தவன் “நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல” என்றவனுக்கு அவள் கண்ணீரே பதிலாக கிடைக்க, இனி இங்கு இருந்தால் அவளை காயப்படுத்தி விடுவோம் என்று பயந்த சூர்யா விடுவிடுவென வெளியே செல்ல துவங்கினான்.

சைந்தவி அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக அவன் பின்னோடு சென்றாள்.

சூர்யா காரை திறக்க சைந்தவியும் வேகமாக ஏறி அமர்ந்து கொண்டாள். வீட்டை நோக்கி அவர்கள் பயணம் துவங்கியது. சூர்யா மனதை போலவே அன்றைய வானிலையும் காற்றும் மழையுமாக சுழன்று அடித்து கொண்டிருந்தது. ஆனால் காரின் உள்ளே ஆழ்ந்த அமைதி நிலவியது.

வீட்டிற்கு வந்த பின் சூர்யா குழந்தையை தூக்கி கொண்டு தன் அறைக்குள் புகுந்துகொள்ள, சைந்தவி ஹாலிலேயே அமர்ந்திருந்தாள்.

வெகு நேரம் சூர்யாவின் அறை கதவையே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்த சைந்து பின் ஒரு முடிவெடுத்தவளாக குழந்தையை அழைத்து வர, கணவன் அறைக்குள் சென்றாள்.

அங்கு சூர்யா குழந்தையை மார்பில் படுக்க வைத்து தட்டி கொடுத்துக் கொண்டிருக்க, குழந்தை சுகமாக உறங்கியிருந்தது. அதை பார்க்க பார்க்க அவளுள் பல எண்ணங்கள் உலா வர, தானும் கணவனின் அணைப்பில் இருக்க வேண்டும் என்ற ஆசை எழும்பியது.அங்கு செல்ல அவர்களை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தவள் முகத்தில் நிதர்சனம் உறைக்க கண் கலங்க அவர்களையே பார்த்து கொண்டிருந்தாள்.

வாசலில் நிழலாடுவதை உணர்ந்த சூர்யா திரும்பி பார்க்க அங்கு சைந்துதான் கைகளை பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

“நீ இன்னும் போகல. போயிருப்பன்னு நினைச்சேன்” என்றவன் வார்த்தை அவள் மனதை சரியாக தாக்க கலங்கி தேங்கி இருந்த கண்ணீர் இமையை தாண்டி கொட்ட துவங்கியது. அதில் எரிச்சலானவன்,

“இப்போ எதுக்கு இங்க நின்னு டிராமா போட்டுட்டு இருக்க. முதல்ல இங்க இருந்து போ”

“போ…போ…. போறேங்க. ஆ…ஆனா குழந்தை…”

“ஹோ….. இப்போவும் நீ குழந்தைக்காகதான் வந்திருக்க. எனக்காக வரல அப்படிதானே. உனக்கு நானே வேண்டான்னு சொல்லும்போது என்னால உருவான குழந்தை மட்டும் எதுக்கு. என் குழந்தை என்னோடதான் இருக்கும். நீ எங்க வேணா போயிக்க. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றவனின் ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதை தாக்க “ஏங்க இப்படி எல்லாம் பேசறீங்க. நீங்க சந்தோசமா இருக்க….” என்று ஏதோ பேச வந்தவளின் வார்த்தை அங்கிருந்த பூ ஜாடி உடையும் சத்தத்தில் நின்றது.

“எதுடி என் சந்தோஷம். கல்யாணம் செய்து மூணு மாசத்துல விட்டுட்டு போறதா, இல்ல எனக்கு ஒரு குழந்தை இருக்குன்னே தெரியாம இவ்ளோ நாள் வாழ்ந்துட்டு இருக்கனே அதுவா.. எது என் சந்தோஷம். சொல்லுடி சொல்லு” என்று குழந்தை எழுந்துவிட கூடாது என்று மெதுவாக வார்த்தைகளை கடித்து துப்பியவனை ஆழ்ந்து பார்த்தவள் ஒரே வார்த்தையை பதிலாக சொன்னாள் அது “பவித்ரா”.

சூர்யாவிற்கு அந்த பெயரை கேட்டு ஒன்றும் தோன்றவில்லை. அதனாலேயே “என்ன பவித்ரா. அவளுக்கு என்ன” என்றவனை தவிப்பாக பார்த்தாள் சைந்து.

பின் அவர்களது கபோர்டை சென்று திறந்தவள், அங்கிருந்த கிரீட்டிங் கார்டை எடுத்து அவன் முன் வைத்துவிட்டு, “இதுக்காகதான் போனேன்” என்றவள் சொல்ல, இப்போது திகைத்து நிற்பது சூர்யா முறை ஆனது.

Advertisement