Advertisement

அத்தியாயம் -23

சைந்தவிக்கு சூர்யாவை பிரிந்து செல்வது உயிர்போகின்ற வலியை கொடுத்தது. ஆனால் திருமணம் முடிந்துவிட்டது என்பதற்காக கட்டாயத்தின் பேரில் அவன் தன்னுடன் வாழ்ந்திருக்கிறான் என்று நினைக்கும்போதே அவள் உடல் எல்லாம் தீப்பற்றி எரிவது போல் இருந்தது.

அதுமட்டும் இல்லாமல் தங்கையின் காதல் தன்னால்தான் பிரிந்தது என்ற குற்ற உணர்வில் இருந்தவள், தன்னால் அவர்கள் காதல் அழிய வேண்டாம் என்ற முடிவிற்கு வந்தவளாக பெங்களூரில் இருக்கும் அவள் தோழி மெர்சிக்கு அழைத்து பேசி அங்கு கிளம்பிவிட்டாள்.

மெர்சி கல்லூரி தோழி என்பதைவிட கிளாஸ்மெட் என்பதுதான் சரியாக இருக்கும். சைந்து யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. ஆனால் மெர்சிக்கு சைந்தவியை பிடிக்கும் என்பதால் அவளாக வந்து பேசுவாள் அதனால் ஏற்பட்ட பழக்கம் இன்று சைந்தவிக்கு குடும்பத்தை பிரிந்து செல்ல உதவியிருக்கிறது.

மன பாரத்துடன் பெங்களூர் வந்து இறங்கியவளை உற்சாகமாக வரவேற்றாள் மெர்சி. வெகுநாட்கள் கடந்து தோழியை பார்த்ததில் மகிழ்ந்தவள் வீட்டிற்கு செல்லும் வரை பேசி கொண்டே சென்றாள். பின்தான் சைந்துவின் அமைதியை கண்டு என்னவென்று விசாரிக்க, அவளோ “எனக்கு ஒரு வேலை வேணும். தங்க இடம் பார்க்கணும். இனி இங்க இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றுவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் அமர்ந்துவிட்டாள்.

தோழியின் முகத்தை ஆழ்ந்து பார்த்த மெர்சி என்ன பிரச்சனை என்று விசாரிக்க, சைந்துவோ கடுப்பாகி “இப்போ நான் இங்க இருக்கவா இல்லை வேற எங்கயும் போகவா”என்று கோபமாக கேட்க, பெரு மூச்சுவிட்ட மெர்சி “நீ எங்கயும் தனியா போக வேண்டாம். ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்” என்ற தோழியை சைந்து விசித்திரமாக பார்த்தாள்.

“ஆமா சைந்து என்னோட அக்கா ஜெர்மன்ல இருக்கா. அம்மா, அப்பா ரெண்டு பேரும் அங்கதான் இருக்காங்க. என்னையும் வர சொன்னாங்க. நான் வேலைக்கு போகணும்னு சொன்னதால அங்க இருக்க ஹாஸ்பிடல வேலை வாங்கி தரேன்னு பாவா சொல்லி இருக்காரு. சோ இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து அங்க போய் வேலைல ஜாயின் பண்ணலாம் ஓகேவா” என்ற தோழியை நன்றியுணர்வோடு பார்த்தாள் சைந்து.

பல சமயங்களில் கூடவே இருப்பவர்களை விட, நாமே எதிர்பார்க்காத நபர்களிடம் இருந்துதான் மிக பெரிய உதவி கிடைக்கும். அதுபோல்தான், சைந்து இந்த மெர்சியை கண்டுகொள்ளவே மாட்டாள். ஆனால் இன்று அவளுக்கான உதவி இவளிடம் இருந்துதான் கிடைத்திருக்கிறது.

சைந்து,“ரொம்ப தேங்க்ஸ்டி”

“பிரண்ட்ஸ்குள்ள எதுக்கு தேங்க்ஸ். என்ன நான் உன் பிரண்டுதானே” என்று கேட்டு சிரிக்க, அவளும் ஆம், என்று தலையசைத்து மென் நகை புரிந்தாள்.

அதன்பின்னான நாட்கள் வேகமாக செல்ல சைந்தவியும் மெர்சியும் ஜெர்மன் செல்வதற்கான அனைத்து வேலைகளும் நடந்தது. இடையில் சைந்து அடிக்கடி சோர்ந்து போவதை உணர்ந்த மெர்சி அவள் கைகளைப் பிடித்துப் பார்க்க அதிர்ந்து போனாள்.

மெர்சி, “சைந்து….. நீ…. நீ கன்சீவா இருக்க” என்க,

தோழிக்கு வலி நிறைந்த சிரிப்பை உதிர்த்தவள் “ம்ம்…. சந்தேகப்பட்டேன். அப்புறம் ஹாஸ்பிடல் போகலாம்னு பார்த்தேன். விசாக்கு சுத்திட்டு இருந்ததுல டைம் இல்லாம போச்சு. சரி அப்புறம் பார்த்துத்துக்கலாம்னு விட்டுட்டேன். இப்போ கன்பார்ம் ஆகிடுச்சு. ஜெர்மன் போய் பார்த்துக்கலாம்.இப்போ வா பேக் பண்ற வேலைய பார்க்கலாம்”என்று சாதாரணம் போல் கூற மெர்சி அவளை திகைத்து போய் பார்த்து கொண்டிருந்தாள்.

தோழியிடம் சாதாரணம் போல் பேசினாலும் அறைக்குள் சென்றவுடன் கதறி அழ துவங்கினாள்.

“ஏன்…. ஏன்….எனக்கு மட்டும்ஏன்…இப்படி நடக்குது. நான் அப்படி பெருசா என்ன எதிர்பார்த்தேன்.. எல்லாரும் வாழற மாதிரி அமைதியான ஒரு வாழ்க்கையைதானே. ஆனா…. இவ்ளோ பெரிய தண்டனை ஏன்? சொந்தங்கள்கிட்ட இருந்து விலகி ஓடுற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணினேன்.

இந்த குழந்தை எங்களோட குழந்தை. இந்த சந்தோஷமான விஷயத்தை புருஷன்கிட்டயும், குடும்பத்துகிட்டயும் சொல்லி மகிழ்ச்சி அடைய முடியாத துரதிஷ்டவாதியா ஆகிட்டேனே ஏன்? அந்த அளவுக்கு நான் என்ன பாவம் பண்ணுனேன்” என்று அழுது புலம்பி ஓய்ந்து போய் அப்படியே உறங்கிவிட்டாள்.

அடுத்த நாள் காலை வெகுநேரம் உறங்கியவள் மெர்சி வந்து எழுப்பவும்தான் எழுந்தாள். அதன்பின் பிளைட்க்கு கிளம்ப என அவர்கள் நேரம் ஓட, ஒருவழியாக இந்தியாவைவிட்டு, உயிர் கொடுத்த உறவை பிரிந்து, உயிரானவனிடமிருந்து பிரிந்து ஜெர்மன் கிளம்பிவிட்டாள்.

இன்று க்ரஷில் இருக்கும் பெண் சூர்யாவைப்பற்றி பேசவும் அவன் நினைவு அவளை அதிகமாக அலைக்கழிக்க நடந்த விஷயங்களை தனக்குள் நினைத்து பார்த்து கொண்டே, வீடு வந்து சேர்ந்தாள்.

மெர்சி வீட்டின் பக்கத்து பிளாட்டிலேயே சைந்துவிற்கு வீடு கிடைத்துவிட ஒரு குடும்பமாக இரு தோழிகளும் வாழ்ந்து வருகின்றனர். வீட்டிற்கு வந்த சைந்து குழந்தையை குளிக்க வைத்து, உடை. மாற்றி பாலை குடிக்க கொடுத்துவிட்டு, தானும் ரெப்பிரஸ் ஆகி ‘ஹப்பாடா’ என்று அமர்ந்தவள் மனம் என்றும் இல்லாமல் அன்று படபடப்பாக இருந்தது.

இரவு உணவை தயார் செய்யலாம் என்று சென்ற சைந்துவிற்கு குழப்பமாகவே இருந்தது.’ஏன் இப்படி இருக்கு? ஏன்?’ என்று நினைத்தவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லாமல் தள்ளாட வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதும் ஒன்றோ அதனால்தான் இப்படி இருக்கிறதோ என்று நினைத்தவள் பயந்துதான் போனாள்.

உடனே தன் போனை எடுத்தவள் இந்தியாவிற்கு கால் செய்தாள். அடிக்கடி குடும்பத்தில் உள்ளவர்களைபற்றி தெரிந்து கொண்டால், அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எழும் என்பதற்காகவே ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தாள். அதேபோல்தான் இன்றும் தனக்குத் தெரிந்த ஒரு டிடெக்டிவ் ஏஜென்சிக்கு கால் செய்து தன் குடும்பத்தைப்பற்றி சொன்னவள் அவர்களின் தற்போதைய நிலையைப்பற்றி சொல்லுமாறு கூறிவிட்டு போனை கட் செய்தாள்.

அவர்களுக்கு எதுவும் பிரச்சனை என்றால் நாளை நமக்கு தெரிந்துவிடும், என்று நினைத்து கொண்டு, மகளை கவனிக்க துவங்கினாள்.அன்றைய நாள் அப்படியே செல்ல மனதில் ஏற்பட்ட படபடப்புடனே படுத்துவிட்டாள்.

சென்னையில் மஞ்சு பவியிடம் போராடிக் கொண்டிருந்தார். பவி எத்தனையோ முறை சூர்யாவிடம் பேச முயற்சிக்க, அவனோ தான் அவளுடன் பேசினால் தேவையில்லாத ஆசையை அல்லது நம்பிக்கையை அவளுக்கு வளர்ப்பது போல் ஆகிவிடும் என்பதற்காகவே விலகி சென்றான்.

மஞ்சு பவியிடம் பேசிப் பேசி சலித்துப் போனவர், இன்று ஒரு முடிவு தெரிந்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அவளுக்காக காத்திருந்தார்.பவி ஆபீசிலிருந்து வீட்டிற்கு வந்த உடனேயே மஞ்சு ஆரம்பித்துவிட்டார். பவியோ என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

ஓரளவுக்கு கடுப்பான மஞ்சு “இப்ப நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னா என்னை உயிரோடயே பாக்க முடியாது” என்று கோபமாக சொல்ல,

“போதும் மஞ்சு நிறுத்து”என்று கோபமாக கத்தினார் குமார்.

இத்தனை வருடங்கள் இல்லாமல் முதன்முறையாக அவர் கோபமாக பேசுவதை கண்டு பவி, மஞ்சு இருவருமே அதிர்ந்துதான் போயினர்.

வேகமாக மஞ்சுவின் அருகில் சென்ற குமார் “இப்படி பிடிவாதம் பிடிச்சு பிடிச்சுதான் ஒரு பொண்ணோட வாழ்க்கைய ஒன்னும் இல்லாம ஆக்குன. இப்போ இவ வாழ்க்கையும் அப்படி ஆக்கணும்னு நினைக்கறியா. உனக்கு என்ன அவ்ளோ பிடிவாதம். நீ நினைச்சதுதான் நடக்கணும்னு. அவ நம்ம பொண்ணு அவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்க, நீ முயற்சிக்கவேமாட்டியா. அன்னைக்கே என் பொண்ணு அவளோ அழுதா…இப்போ பேசுன மாதிரி கல்யாணத்தன்னைக்கு நான் பேசியிருந்தா என் பொண்ணு என் கூடவே இருந்திருப்பா. ம்கூம்……”என்று பெரு மூச்சுவிட்டவர் மேலும் “உன் பிடிவாதத்துக்கு என் பொண்ணு ஆளு இல்லை. அவ விருப்பம் இல்லைனா விடு. சும்மா எல்லாரையும் பயம் காட்டிட்டு இருக்காத” என்று கோபமாக கத்த, மஞ்சு அவரை விக்கித்து போய் பார்த்தார்.

“என்னங்க சொல்லறீங்க”.

“ஆமா சொல்றாங்க. சுரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு.பச்ச புள்ளடி அவ. என்னால பயந்து பயந்து வாழ முடியாதுமா. இந்த கல்யாணம் வேண்டாம்னு தல பாடா அடிச்சுக்கிட்டா கேட்டியா. உன் பிடிவாதம் முக்கியம் நீ நினைச்சது நடக்கணும்னு எல்லாம் பண்ணுன. கடைசில என்ன ஆச்சு பாரு.

அவ உன்கிட்ட என்ன கேட்டா அமைதியான வாழ்க்கை எனக்கு போதுமான்னுதானே கேட்டா. ஒரு அம்மாவா உன்னால அதை கொடுக்க முடிஞ்சுதா. அவ போய்ட்டா ஆனா இவளை……”என்றவர் இழுக்கும்போதே மஞ்சு நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்தார்.

“அம்மா……”என்று பவி அலற, “மஞ்சு….” என்று கத்தி கொண்டே அவரை தாங்கி பிடித்தார் குமார்.

Advertisement