Advertisement

“எ….. எ…. என்னை மன்னிச்சுடுங்க” என்ற வார்த்தையோடு கண்களை மூட, குமார் பயந்து போனார். மனைவியை கட்டி கொண்டு அவர் அழ, பவிதான் துரிதமாக செயல்பட்ட்டாள். எப்படியும் சூர்யாக்கு அழைத்தால் அவன் எடுக்கமாட்டான் என்று தெரியும் ஆதலால் ராதிகாவிற்கு அழைத்து விஷயத்தை சொல்ல,

அடுத்த நிமிடம் அங்கு வந்து நின்றான் சூர்யா. மஞ்சுவை தூக்கியவன் “மாமா…. அத்தைக்கு ஒன்னும் ஆகாது தைரியமா வாங்க” என்று அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தான்.

மஞ்சுவை செக் செய்த டாக்டர் அவருக்கு உடனே ஆப்ரேசன் செய்ய வேண்டும் என்று சொல்ல, மயக்கத்தில் இருந்து விழித்தவர் முடியாது. நான் இந்த ஆப்ரேசன்க்கு சம்மதிக்கமாட்டேன் என்று அடம்பண்ண துவங்கினார். காரணம் கேட்டவர்களிடம் என் சின்ன பொண்ணு கல்யாணத்தை பார்க்கணும் இல்லை என் பெரிய பொண்ணை பார்க்கணும் அப்போதான் நான் ஆப்ரேசனுக்கு சம்மதிப்பேன் என்று பிடிவாதமாக சொல்ல சூர்யாவிற்கே நாக்கு தள்ளிதான் போனது.

காலையில் இருந்து சைந்து பல முறை போனை எடுத்து பார்த்துவிட்டாள். டிடெக்டிவிடம் இருந்து போன் வரும் என்று பல மணி நேர காத்திருப்பிற்கு பிறகு அவள் போனுக்கு அவள் எதிர்பார்த்த அழைப்பு வர ஆவலாக அதை எடுத்து பேசியவள் தலையில் இடி விழுவது போல் இருந்தது அந்த பக்கம் சொன்ன தகவல்.

“என்ன சொல்றீங்க நல்லா விசாரிச்சீங்களா மஞ்சுமாதான் ஹாஸ்பிடல அட்மிட் ஆகியிருக்காங்களா”என்று கேட்க, அவரும் “ஆம்” என்று சொல்லி வைத்துவிட சைந்துவிற்கு உலகே தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது. கண்களில் கண்ணீர் வடிய அமர்ந்திருந்தவள் மெர்சியின் குரலில் கலைந்தாள்.

சைந்து மகள் நிலவை தூக்கி கொண்டு உள்ளே வந்த மெர்சி, தோழி அழுது கொண்டிருப்பதை கண்டு பதறி அவளிடம் சென்று என்னவென்று விசாரிக்க, அவளை அணைத்து கொண்டு அழுத சைந்து மஞ்சுவை ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கும் விவரத்தை சொல்லி அழுதாள்பின் தான் உடனே சென்னை செல்ல வேண்டும் என்றும் அதற்கான வேலையை செய்ய சொல்லி கெஞ்சியவளை அணைத்து கொண்ட மெர்சி கண்ணிலும் கண்ணீர்.

“அழாத சைந்து எத்தனை முறை சொன்னேன். வீட்டுக்கு போன்பண்ணி பேசுனு பாரு இப்போ என்ன ஆகியிருக்குன்னு. நல்ல வேலை இன்னைக்கே தெரிஞ்சுது. நீ ஊருக்கு போக தேவையானதை எடுத்து வை. நான் போய் பாவாட்ட விஷயத்தை சொல்லி நீ கிளம்ப தேவையான விஷயங்களை பார்க்க சொல்றேன்”என்று வாசல் வரை சென்றவள்

“நீ என்னைவிட்டு போறது கவலைதான்.ஆனா திரும்பி இங்க வராம உன் குடும்பத்தோட சந்தோஷமா இருந்தினா சந்தோஷப்படற முதல் ஆள் நானாதான் இருப்பேன். தேவையில்லாத விஷயத்தை யோசிச்சு உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்காத” என்றுவிட்டு செல்ல, சைந்து செல்லும் தோழியையே விரக்தியாக பார்த்து கொண்டிருந்தாள்.

சென்னையில் மஞ்சுவிடம் யாரும் பேசவில்லை. அவரும் என்ன ஆனாலும் சரி நான் சொன்னது நடக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். அவரும் மகளை கவனித்து கொண்டுதானே இருக்கிறார். காஷ்மீர் சென்றுவந்ததில் எதிலும் பிடிப்பு இல்லாமல் என்னவோ போல் இருக்கும் மகள் கடைசி வரை திருமணம் முடியாமலே இருந்துவிடுவாளோ என்ற பயம் அவருக்கு அதனாலேயே தன் உடல்நிலையை காரணம் வைத்து இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

மெர்சி குடும்பத்திடம் விடைபெற்று சென்னை கிளம்பிவிட்டாள் சைந்து.

அதேநேரம் சென்னையின் மற்றொரு இடத்தில் உற்சாகமாக ஓடி வந்து நின்றான் அவன். தன் எதிரில் வந்து நின்றவனை என்னவென்பது போல் பார்த்தது அந்த உருவம்.

“பாஸ் அவங்க எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிச்சுட்டேன். இதே சென்னைலதான் குடும்பமா இருக்காங்க” என்று மேலும் சில தகவலை சொல்ல, அதை கேட்டு அந்த உருவத்தின் கண்கள் இடுங்கின.

“சரி நாம நாளைக்கே அவங்களை போய் பார்க்கலாம். அதுக்கான ஏற்பாட்டபண்ணு. முக்கியமான விஷயம். இது வெளிய யாருக்கும் தெரியக்கூடாது. ரொம்ப சீக்ரெட். கவனமா இரு” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டது அந்த உருவம்.

“ஹப்பாடா ரெண்டு வருஷ தேடல் ஒரு முடிவுக்கு வந்துச்சு. தப்பிச்சேன்டா சாமி. பக்கத்துல ஆள வச்சுட்டு எங்கெங்கயோ தேடி அலைஞ்சிருக்கேன். இன்னைக்கு போய் நல்லா தூங்கணும். இவங்ககிட்ட செக்கரற்றியா இருக்கறதுக்கு நாலு பன்னி மேய்க்கலாம் போல” என்று புலம்ப,

“நான் வேணா வாங்கி தரவா” என்ற குரல் அவன் பின்பக்கம் இருந்து கேட்க, அவனோ அடித்து பிடித்து ஓடிவிட்டான்.

சைந்து மகளோடு சென்னையில் வந்து இறங்கிவிட்டாள். நேராக ஒரு ஹோட்டலுக்கு சென்று குழந்தையை குளிக்க வைத்து, அவளுக்கு தேவையானதை கொடுத்துவிட்டு தானும் கிளம்பியவள், தாயை பார்க்க ஹாஸ்பிடல் கிளம்பிவிட்டாள் குழந்தையோடு.

நேராக சென்று தாயை பார்த்து பேசிவிட்டு, அவர் நலனை தெரிந்து கொண்டு உடனே மீண்டும் ஜெர்மன் கிளம்ப வேண்டும் என்பதுதான் அவள் எண்ணம். மேலும் பவி திருமணத்தை ஏன் இன்னும் தள்ளி போடுகிறார்கள் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பினாள். டிடெக்டிவ் மூலமாக மற்ற விஷயங்கள் தெரிந்தாலும் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் தெரியவில்லை. ஆகவே அதையும் தெரிந்து கொள்ளலாம் என்ற முடிவுடன் சென்றாள்.

ஹாஸ்பிடல் வந்தவள் மஞ்சு இருக்கும் அறை எண் கேட்டு செல்ல, உள்ளே குமார்தான் இருந்தார். தந்தையை பார்த்தவுடன் கண் கலங்க மகளை தூக்கி குமாரை காட்டியவள் “நிலாக்குட்டி அங்க பாரு தாத்தா பாரு” என்று குழந்தையிடம் கட்டியவள், பின் இப்போது உள்ளே சென்றால் தந்தை தன்னை விடமாட்டார் என்று நினைத்தவள் அவர் வெளியே செல்லும் நேரத்திற்காக காத்திருக்க துவங்கினாள்.

சற்று நேரம் கடந்து குமார் போன் பேசி கொண்டே வெளியே வந்தார். அவர் செல்லும் வரை பார்த்து கொண்டு இருந்தவள் அவர் தலை மறைந்தவுடன் தாயின் அறைக்குள் சென்றாள்.

மஞ்சு அவ்வளவு நேரமும் உறங்குவது போல் கண் மூடி இருந்தவர், கணவர் வெளியே சென்றவுடன் கண்ணீருடன் கண்களை திறந்தார்.’இத்தனை வருஷம் ஒன்னா வாழ்ந்தும் என்னை நீங்க புரிஞ்சுக்கவே இல்லலங்க. இப்படி எல்லாம் நடக்கும்னு நான் மட்டும் எதிர்பார்த்தனா. ஏதோ வேண்டாத நேரம் நம்மை ஆட்டி படைக்குது. சின்னவ வாய திறக்க வைக்கதான் நான் இவ்ளோ பாடு படறேன். எப்போதான் அவ வாய திறந்து பேசுவான்னு காத்துருக்கேன்’ என்று தனக்குள் பேசி கொண்டு இருந்தவர் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்ப அங்கு சைந்து நின்று கொண்டிருந்தாள்.

மஞ்சு அந்த நேரத்தில் மகளை எதிர்பார்க்காததால் முதலில் திகைத்து போனவர் அடுத்த நிமிடம் “சைந்து……” என்று கைகளை நீட்டி அழுகையோடு அழைக்க, அவளும் “ம்மா….” என்று கதறி கொண்டு அவரை அணைத்து கொண்டாள்.

மகள் தன்னை அணைக்க வரும் சமயம்தான் அவள் கையில் இருந்த குழந்தையை கவனித்தார் மஞ்சு.

“சைந்தும்மா…. இ…இ…. இது….”

“உங்க பேத்திதான்ம்மா. இங்க இருந்து போன பிறகுதான் எனக்கு விஷயமே தெரிஞ்சு” என்று நடந்த அனைத்தையும் சொன்னவள் தயக்கத்துடன் “அ…அவர்…. எப்படிம்மா இருக்காரு” என்று கேட்க,

மகளின் முகத்தை அழுத்தமாக பார்த்த மஞ்சு “நீ என்ன பண்ணி வச்சுருக்கன்னு உனக்கு தெரியுதா சைந்து தெரிஞ்சுதான் நீ பண்றியா?” என்று கேட்க, அவளோ பதில் இல்லாமல் அமைதியாக நின்றாள்.

பின் பேச்சை மாற்றும் விதமாக “அதை விடுங்க. நீங்க ஏன் ஆப்ரேசனுக்கு சம்மதிக்கமாட்டிக்கிறீங்க. நீங்க எங்களுக்கு வேணும்மா ப்ளீஸ் எனக்காக ஓகே சொல்லுங்க” என்று அழ,

மஞ்சுவோ “சரி நான் ஆப்ரேசனுக்கு சம்மதிக்கறேன். ஆனா இனி நீ எங்கயும் போக கூடாது. எங்க கூடதான் இருக்கணும். இதுக்கு நீ சம்மதிச்சா. நானும் நீ சொல்ற விஷயத்தை கேட்கறேன்” என்றவர், பேத்தியை வாங்கி கொஞ்ச துவங்கிவிட்டார்.

சைந்து தாய்க்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திணறி கொண்டிருந்த நேரம் அவள் இதயம் பட படவென அடிக்க துவங்கியது. இருக்குமோ…இருக்குமோ….. என்றவள் மனம் அடித்து கொள்ள வேகமாக கதவை திறந்து பார்க்க காக்கி உடையில் அவளவன்தான் வந்து கொண்டிருந்தான்.

இரண்டு நீண்ட வருடங்கள் கடந்து கணவனை கண்டவள் அவனையே இமைக்காது பார்த்து கொண்டிருந்தாள். அப்போது அவனுக்கு ஏதோ போன் வர அதை எடுத்து பார்த்து கொண்டே வந்தவனை கண்டு அதிர்ந்தவள் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தாள்.

சூர்யா சைந்துவை சந்திப்பானா…குழந்தை விஷயம் தெரிந்தவுடன் அவனது எதிர்வினை எப்படி இருக்கும் அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.

அணைப்பாள்…..

Advertisement