Advertisement

அத்தியாயம் -22

இரண்டு வருடம் கடந்து……

“பவி சொல்றதை கேட்கவே கூடாதுங்கற முடிவுல இருக்கியா. இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கறதா உத்தேசம். ஏற்கனவே ஒருத்தி எங்களை விட்டு போய்ட்டா. நீயாவது கண்ணு முன்னாடி குடும்பம், குழந்தைனு இருடி. அதை பார்த்து எங்க மீதி வாழ்க்கைய ஓட்டிக்கிறோம்” என்று மஞ்சு கோபமாக ஆரம்பித்து கண்ணீருடன் முடிக்க, பவியோ அழுத்தமாக நின்றிருந்தாள்.

“பவி சொன்னா கேளுடா. இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ” என்க, பவியின் முகம் யோசனையாக மாறியது. இரண்டு வருடமாக இதே வார்த்தையை கேட்டு கேட்டு அவளுக்கே கடுப்பாகி போனது. இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தவள் சூர்யாவிடம் பேச நினைத்தாள்.

ஆம், சைந்து அவர்களை பிரிந்து முழுதாக இரண்டு வருடம் சென்றுவிட்டது. அவளை காணாமல் பதறி போய் தேடியவர்கள் கைகளில் அவள் எழுதிய கடிதம் சிக்கியது.

மஞ்சு மகள் எழுதிய கடிதத்தை படித்தவர் தலையில் அடித்து கொண்டு அழ துவங்கினார். அனைவரும் அவர்கள் வீட்டில் இருக்க மஞ்சு அந்த கடிதத்தை படித்துவிட்டு அழுவதை புரியாமல் பார்த்திருந்தனர்.

“நானே என் பொண்ணு வாழ்க்கைய அழிச்சுட்டனே. கல்யாணத்தன்னைக்கு அவ்வளவு சொன்னா, பாவி கேட்டேனா. இப்படி ஆகி போச்சே” என்று அழுது கொண்டிருக்க, சூர்யாவிற்கு பக்கென்று இருந்தது. மேரேஜ் அன்னைக்கு சொன்னாளா என்ன சொல்லியிருப்பா என்று புரியாமல் விழித்தான்.

உடனே அந்த கடிதத்தை வாங்கி பிரித்து படிக்க, அவன் கண்களில் இருந்தும் ஒரு சொட்டு கண்ணீர் உருண்டு ஓடியது.ராதி மகன் கண்ணீரை அதிர்ச்சியாக பார்த்தார்.

எப்போதும் தைரியமாக நின்று, பெரிய பெரிய விஷங்களை கூட சாதாரணமாக எதிர் கொள்ளும் தன் மகனின் கண்ணீரை முதல் முறை காண்கிறார். மஞ்சுவை போல் அவர் மனதும் தவறு செய்துவிட்டோமோ என்றுதான் எண்ணியது.

சூர்யா உடனே இமை சிமிட்டி, முகத்தை அழுந்த துடைத்து தன்னை சமன் செய்து கொண்டவன் முகம் இறுக. அங்கிருந்த டேபிளில் கடிதத்தை வைத்துவிட்டு விறு விறுவென வெளியே சென்றுவிட்டான்.

பவி அவ்வளவு நேரமும் சூர்யாவைதான் பார்த்து கொண்டு இருந்தாள். அவனது சோர்ந்த முகமும் எதையோ தொலைத்தது போன்ற தோற்றமும் கடைசியாக சிந்திய கண்ணீரும் மனைவி மீதான அவனது காதலை அவளுக்கு கூற, அவனையே இமை சிமிட்டாது பார்த்து கொண்டிருந்தாள். இந்த கண்ணீர்…இந்த காதல் தனக்கானதாக இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் அவளுள் எழுந்தது. செல்லும் அவன் முதுகையே வெறித்து கொண்டிருந்தவள் மனதில் என்ன நினைத்தாளோ பின் கண்ணில் வடிந்த நீரை துடைத்துவிட்டு அந்த கடிதத்தை எடுத்து படிக்க துவங்கினாள்.

கடிதம் படிக்க படிக்க அவளுள் சொல்ல முடியாத உணர்வுகள் எழுந்தது. கைகள் நடுங்க அதை கீழே விட்டவள் அப்படியே அங்கிருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தாள்.

அப்படி சைந்து என்னதான் எழுதி இருந்தாள் என்றால்,
அன்புள்ள அம்மாக்கு என்னை மன்னிச்சுடுங்க. நான் போறேன். என்னால அவர் கூட பயந்து பயந்து வாழ முடியாது. இதுக்காகதான் மேரேஜ் அன்னைக்கு அவ்ளோ சொன்னேன். நீங்க கேட்கவே இல்ல. சுதந்திரமா தைரியமா என்னால வெளிய போக முடியல, யாரு எப்போ என்ன கொல்ல வருவாங்களோனு பயமா இருக்கு. அவர் வேலைக்கு கிளம்பும்போது நல்லபடியா வீட்டுக்கு வந்துடுவாரான்னு பயமா இருக்கு. இந்த பயத்துலயே நான் மூச்சடச்சு செத்துடுவேன் போல, என்னால முடியல, அதனாலதான் இந்த முடிவை எடுத்தேன். அவருக்கு சரியான ஜோடி நம்ம பவிதான் அவளோட தைரியம் எனக்கு கொஞ்சம்கூட இல்ல. எனக்காக எதாவது பண்ணணும்னு நினைச்சிங்கன்னா பவிய அவருக்கு கல்யாணம் செய்து வச்சுடுங்க. இதோட வெள்ள பேப்பர்ல சைன்பண்ணி வச்சுருக்கேன். டைவர்ஸ்க்கு அதை யூஸ் பண்ணிக்கோங்க. ப்ளீஸ்மா. நமக்கு உதவி செய்யதான் அவர் அன்னைக்கு இந்த மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டாரு. அப்படிப்பட்டவரோட வாழ்க்கை என்னால அழிஞ்சதா இருக்க வேண்டாம். பவிக்கும் அவருக்கும் சந்தோஷமா கல்யாணம் செய்து வைங்க. எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை’ என்று எழுதி இருந்தது.

இதை எழுதி கடைசியாக கையெழுத்து போடும் இடத்தில் கூட சைந்தவி சூர்யபிரகாஷ் என்று எழுதி இருந்தாள். அதை கண்டுதான் சூர்யா கண்கள் கலங்கியது. மேலே இருந்த விஷயங்களை படித்தவர்களுக்கு கீழே அவள் போட்டிருந்த கையெழுத்து பதியவே இல்லை. பவியும் கூட அன்றிருந்த மனநிலையில் அதை கவனிக்கவில்லை.

தன் அறைக்கு சென்ற சூர்யாவிற்கு கோபம் கோபமாக வந்தது. ஏன்? ஏன்? என்ற கேள்வி மட்டும் அவனுள் வண்டாக குடைய, என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளி உடைத்தான். வெறிப்பிடித்தவன் போல் வானத்தை நோக்கி கத்தியவன் ‘ஏன்டி இப்படி பண்ணுன. எந்த பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல, நாம சரி பண்ணியிருக்கலாமே. என்னை ஈஸியா இன்னொருத்திக்கு குடுக்க உன்னால முடியுமாடி’ என்று உடைந்து போய் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் முகம் இறுகியே இருந்தது.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ அவன் போன் சத்தத்தில் தன்னிலை அடைந்தவன், போனை பார்க்க சிலை கடத்தல் சம்மந்தமாக அவனுடன் வேலை செய்யும் ஒரு நபர்தான் அழைத்திருந்தார். உடனே அதை அட்டன் செய்து பேசினான்.

போன் பேசி முடித்து பெட்டில் அமர்ந்தவன் முகத்தில் அவ்வளவு நேரம் இருந்த குழப்பம் விலகி, ஒரு தெளிவு வந்தது. உடனே அவன் போலீஸ் மூளை அந்த கடிதத்தை தன்னுள் ஓட்டி பார்த்தது, பின் இறுதியாக அந்த பேரில் அவன் கவனம் நிலைக்க, பேர்ல கூட உன்னை தனியாவிடாம கூடவே இருக்கறவன் நானு. நீ என்னவிட்டு போறியா. கண்டிப்பா இந்த விலகல் உனக்கான பாடத்தை சொல்லி குடுக்கும். உன்னால என்னைவிட்டு இருக்க முடியாதுங்கற பாடத்தை. பொறுமையா கத்துட்டு வா. அதுக்கு முன்னாடி உன்னை கண்டுபிடிச்சுட்டேன்னா, நானே கத்துதரேன். இந்த சூர்ய பிரகாஷ குறைச்சலா எடை போட்டுட்டீங்க மிசஸ் சூர்ய பிரகாஷ்’ என்று தனக்குள் சொல்லி கொண்டவன் கண்கள் அந்த அறையை அலசியது.

‘ம்ம்…. அந்த போலி டாக்டர் நமக்கும் எதாவது கிறுக்கி வச்சுருக்குமே எங்க அது’ என்று கண்களால் அலசியவனுக்கு,நான் இங்கே இருக்கிறேன் என்பது போல் அசைந்து சத்தம் கொடுத்தது அவள் எழுதிய கடிதம். வேகமாக அதை எடுத்து பார்த்தவன் இதழில் இகழ்ச்சி புன்னகை எட்டி பார்த்தது. உனக்கான நேரம் ஆரம்பிக்குது பொண்டாட்டி’ என்றவன் முற்றிலும் வேறாகி போனான்.

அப்படி அதில் என்ன இருந்தது என்றால் ‘சாரி ‘ என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே. மேலும் அதில் இருந்த கண்ணீர் துளிகள் அவள் சொல்லாத பல விஷயங்களை அவனுக்கு சொல்ல,

‘அப்படி என்ன நடந்ததுன்னு இப்படி ஒரு முடிவை எடுத்தடி. எனக்கு நீ கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்’ என்று கோபமாக நினைத்து கொண்டான்.

முன்பு போல் அவன் முகத்தில் இருக்கும் சிரிப்பு காணாமல் போக, தனக்குள் இறுகி போனான் தாயுடனும் சரியாக பேசுவது இல்லை. வேலை வேலை என்று எப்போதும் வெளியவே சுற்ற ஆரம்பித்தான். யாரையும் பக்கத்தில் வரவிடாமல் நெருப்பாக காய்ந்தான். அந்த கடிதத்தை படித்த பவி சூர்யாவிடம் பேச எண்ண அவனோ சிக்காமல் இருந்தான்.

பவி பல முறை முயன்று தோற்று பின் அவன் ஆபிசிலேயே சென்று பேச முற்பட, அவனோ “அபிசியலா பேசறதா இருந்தா மட்டும் பேசுங்க மிஸ் பவித்ரா. பர்ஸ்னலா பேசறதுக்கு நமக்குள்ள எதுவும் இல்ல. அதுமட்டும் இல்லாம மூணாவது மனுஷங்ககிட்ட என்னோட பர்சனல ஷேர் பண்ண எனக்கு விருப்பம் இல்லை” என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லிவிட்டான்.

சைந்து எழுதி வைத்துவிட்டு போனதால் பவி தனக்குள் எந்த ஆசையும் வளர்த்து கொள்ள கூடாது என்றுதான் அப்படி பேசினான். ஆனால் அந்த வார்த்தைகள் கொடுத்த வலியால் பவி கலங்கிய கண்களுடன் அவனுடன் பேச வந்ததை பேசாமலே கிளம்பிவிட்டாள்.

நாட்கள் இப்படியே செல்ல ஒரு வருடம் கடந்தது. அப்போது மஞ்சு பவியிடம் சூர்யாவை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்க, அவளோ அமைதியாவே இருந்தாள். அவர் கேட்பதற்கு பதிலே சொல்லவில்லை.

மஞ்சு இந்த விஷத்தை ராதிகாவிடம் சொல்ல, அவரோ “அவங்க விருப்பம்தான் முக்கியம் மஞ்சு நம்ம ஆசைக்கு பண்ணி வச்ச கல்யாணம் எந்த நிலமைல இருக்குனுதான் கண் கூட பார்க்கறமே. பொறுமையா யோசிச்சு முடிவெடுப்போம்” என்றுவிட, மஞ்சுவிற்கும் அது சரி என்றுதான் தோணியது. அதன்படி அமைதியாகதான் இருந்தார். ஆனால் சில நாட்களாக அவருக்கு நெஞ்சில் ஏற்படும் வலியால், பயந்தவர் மகள் திருமணத்தை பார்க்க வேண்டும் பிறகுதான் எதுவும் என்று வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அமைதியாகவே இருந்துவிட்டார்.

Advertisement