Advertisement

அத்தியாயம் -21

வெய்யோன் தன் பணியை செய்ய துவங்கும் அதிகாலை வேலை. அந்த மருத்துவமனையில் இருந்த அறையில் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு படுத்திருந்தனர் சைந்துவும், சூர்யாவும்.

சூரிய வெளிச்சம் ஜன்னல் வழியாக முகத்தில் அடிக்க, கண் விழித்த சைந்து புது இடத்தில் இருப்பதை கண்டு குழம்பி பின் நினைவு வந்தவளாக கணவனை திரும்பி பார்க்க, அவனோ குழந்தையாக உறங்கி கொண்டு இருந்தான்.

ஆணவன் முகம் நோக்கி குனிந்தவள் “சரியான கேடி போலிஸ்கார் நீங்க. ஒரு ஹாஸ்பிடல் ரூம தனியா வாடகை எடுத்து வச்சு படுக்கறது நீங்களாதான் இருக்கும்”என்று அவன் மீசையை திருகியவள், பின் எழுந்து அங்கிருந்த பாத் ரூமில் குளித்து அதே உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.

அப்போது அங்கு வந்த மாமியாரை செல்லமாக முறைத்தவள், அவர் வாடிய முகத்தை கண்டு ‘அடேங்கப்பா…. இது உலக மகா நடிப்பால்ல இருக்கு’ என்று நினைத்து கொண்டிருக்க, அவர்களுக்கான காலை உணவை எடுத்து கொண்டு மஞ்சுவும் அங்கு வந்து சேர்ந்தார்.

தாயின் ஓய்ந்த தோற்றமே அவரது மன கவலையை மகளுக்கு உணர்த்த ‘மஞ்சும்மா பாவம். ரொம்ப கவலைப்படறாங்க. இவங்ககிட்ட உண்மைய சொல்லலாம்னு பார்த்தா, அவரு வேண்டாங்கராறு. அவங்க கவலையா இருந்தாதான் மத்தவங்களுக்கு சந்தேகம் வராதுனு சொல்றாரு. என்ன பண்ணலாம்’ என்று யோசித்தவள் பின் தாயிடம் சென்று,

“அம்மா. அவரு ஆபத்து கட்டத்தை தாண்டிட்டதா டாக்டர் சொன்னாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல கண் விழிச்சுடுவாருன்னு கூட சொல்லிட்டு போனாரு. அதனால நான் வீட்டுக்கு போயிட்டு குளிச்சுட்டு, அவருக்கும் டிரஸ் எடுத்துட்டு வரேன்” என்று கூற,மஞ்சு அவளை முறைத்தார்.

“மாப்பிள்ளை உடம்பு முடியாம கிடைக்குறாரு. அவர் கண் விழிக்கும்போது நீ கூட இருக்கறது இல்லையா. என்ன சைந்து இது. வீட்டுக்கு போறேன்னு சொல்ற. ராதி இதை கேட்டா என்ன நினைப்பாங்க. அங்க படுத்திருக்கறது யாரோ நாலாவது மனுஷன் இல்ல. உன்ன தொட்டு தாலி கட்டுன புருஷன். அவரு கூடவே இருந்து பார்த்துகறதை விட்டுட்டு,நீபாட்டுக்கு போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்காத” என்றவர் கோபமாக சொல்ல,

அவர்கள் அருகில் சோகமாக வந்த ராதிகா “விடு மஞ்சு. சைந்து வீட்டுக்கு போகட்டும். பாவம் அவளும் எவ்ளோ நேரம் இங்க இருப்பா. போயிட்டு குளிச்சுட்டு வரட்டும். அதான் நாம ரெண்டு பேர் இருக்கமே” என்று சோகம் ததும்பும் குரலில் கூற,

‘அடே அப்பா……. நடிக்கற நடிப்புக்கு ஆஸ்கர் அவார்டே குடுக்கலாம் போல இருக்கே. என்ன இருந்தாலும் அத்த நீங்க ஒரு ஜீனியர்ஸ். என்ன ஒரு கவலை அந்த குரலில். ம்கூம்…. நானும்தானே அதை உண்மைன்னு நினைச்சு அந்த அழு அழுதேன்’ என்று நினைத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

அக்கா வீட்டிற்கு வருவதை மாடியில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பவியின் புருவம் யோசனையில் சுருங்கியது பின் அவள் முகத்தில் இருக்கும் தெளிவை வைத்தே, தான் நினைத்தது தான் சரி என்பதை புரிந்து கொண்டாள்.

பவிக்கு ஆரம்பத்தில் இருந்தே சூர்யாவிற்கு அடிபட்டதை நம்ப முடியவில்லை. ஏனென்றால் அவனது கண்கள் நாலா புறமும் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். அதை எத்தனை முறை ஓரமாக நின்று பார்த்திருக்கிறாள். அது மட்டும் இல்லாமல் கலவரத்தில் பிரச்சனை என்று வந்தாலே அவன் கையிலெடுக்கும் விஷயம் அந்த பெயிண்ட்தான். அவன் மேலதிகாரிகளுக்கு இந்த விஷயம் தெரிந்தாலும் ஆதாரம் இல்லாமல் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தனர். ஒரு சில முறை அவர்கள் மறைமுகமாக சூர்யாவை எச்சரிக்க அவனோ அதை எல்லாம் கண்டு கொள்வதாகவே இல்லை. அவனைபற்றிய சின்ன சின்ன விஷயங்களை கூட தெரிந்து வைத்திருந்தவளுக்கு இது தெரியாமல் இருக்குமா? அதனால்தான் அமைதியாக ஹாஸ்பிடல் போய்விட்டு வந்துவிட்டாள்.

சைந்துவிடம் பேசலாம் என்று நினைத்தவள் கீழே செல்ல, பின் ‘சரி எப்படியும் குளிக்கதான் வந்திருப்பா, குளிச்சு ரெடி ஆகட்டும் அப்புறம் போகலாம் என்று அங்கேயே அமர்ந்துவிட்டாள்.

வீட்டிற்கு வந்த சைந்து குளித்து முடித்துவிட்டு ‘பாவி மனுஷன் எவ்வளவு அழ வச்சிட்டாரு. ஊரே அவருக்கு அடிபட்டுருச்சுனு கலவரம் ஆகிட்டு இருக்கு, ஆனா அவரு கூலா வந்து கட்டி பிடிக்கிறாரு. சரியான மொரட்டு போலீஸ்கார்’ என்று செல்லமாக திட்டியவள் பின் ‘சரி அவருக்கும் டிரஸ் எடுத்துட்டு கிளம்பலாம்’ என்று, அவனுக்கு தேவையான உடைகளை எடுக்க அவன் கபோர்டை திறந்து மெல்லிய உடைகளாக தேட துவங்கினாள்.

ஒவ்வொரு செல்ப்பாக கலைத்து தேடியவள், ஒரு மெல்லிய டி ஷர்ட்டை கண்டுபிடித்து அதை இழுக்க, அந்த ஆடைக்கு அடியில் இருந்து ஒரு கிரீட்டிங் கார்டும்,மோதிரபெட்டியும் கீழே விழுந்தது. அதை ஆச்சரியமாக பார்த்தவள். ‘கிரீட்டிங் கார்டா. யாரோடதா இருக்கும். பார்க்க நல்லா அழகா இருக்கே’ என்று யோசித்தவள் பின் முகம் மலர ‘ஒருவேளை போலீஸ்கார் நமக்கு சர்ப்ரைஸா குடுக்க வாங்கி வச்சிருப்பாரோ’ என்று நினைத்து, அதை ஆர்வமாக திறந்து பார்க்க, அடுத்த நொடி அவள் தலையில் இடி இறங்கியது போல் அப்படியே உடைந்து போய் கீழே அமர்ந்துவிட்டாள்.

அவள் முகம் அளவில்லா வேதனையை வெளிப்படுத்த கண்கள் கண்ணீரை கொட்டி கொண்டு இருந்தது. ‘அவள் மனதுள் ஏன்…. எப்படி….. எதுக்காக இப்படி…’ என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ அவள் போன் அடிக்கும் சத்தம் கேட்க தன்னிலை அடைந்தவள். தான் பார்த்த விஷயம் பொய்யாக இருக்க வேண்டும் என்ற நப்பாசையோடு மீண்டும்….மீண்டும்…. அந்த கிரீட்டிங் கார்டை திறந்து பார்க்க அது அவளுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

சைந்து கையில் இரண்டு கிரீட்டிங் கார்ட் இருந்தது. ஒன்று பவி கையெழுத்துடன் அவளது ஐந்து வருட காதலை சொல்வது போல் உருகி அவனுக்கான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எழுதி இருந்தாள்.

முடியாத பயணம் நான் தொடர வேண்டும், உன் கரம் பிடித்து……
என் வாழ்க்கையின் அர்த்தமாக உனை கண்டேன், என் உயிராக, உணர்வாக மாறவும், என் வாழ்க்கை முழுதும் உன் தோள் சாய்ந்து வாழவும் உனக்கு சம்மதமா.……

பவி……..
என்று இருக்க, கண்ணீர் வடிய அதை படித்தவளுக்கு இதயத்தை யாரோ கசக்குவது போல வலி ஏற்பட, அந்த கார்டில் இருந்த இரண்டு பேப்பர் பொம்மைகளை பார்த்தாள். இது….. இது….. என்று யோசித்தவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது.

ஒரு நாள் சைந்து சோர்ந்து போய் தாமதமாக தந்தையுடன் வீட்டிற்கு வந்தாள். அன்று நின்று கொண்டே இரண்டு ஆப்ரேஷன் செய்ததில் முதுகு வலி ஏற்பட, எப்போடா படுப்போம் என்று ஆகி போனது அவளுக்கு.

அறைக்கு சென்று படுத்தவள் லைட் எரியவும் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்து பின் கடுப்பாகி எழுந்தவள் பவியை பார்க்க அவளோ மும்முரமாக பேப்பர் பொம்மை செய்து கொண்டிருந்தாள். அதில் கோபமானவள் அவளை திட்ட, அவளும் அக்காவுடன் மல்லுகட்ட என்று அன்று இருவருக்கும் பெரிய பஞ்சாயத்து ஆனது. பின் மஞ்சு வந்துதான் இருவரையும் சமாதானப்படுத்தினார். அதை இப்போது நினைவு கூர்ந்தாள் சைந்து.

பவி அன்று செய்த அந்த பேப்பர் பொம்மைதான் இது என்று தெளிந்தவளுக்கு அனைத்து உண்மைகளும் புரிந்து போனது. அத்தோடு இரண்டாவதாக இருந்த கார்டில்

வாழ்க்கை முழுதும் உன்னுடன் பயணிக்க நான் சம்மதிக்கிறேன்….
என் எண்ணத்தின் பிம்பமாக இருக்கும் உன்னை மணந்து கொள்ள விரும்புகிறேன்……..
-சூர்ய பிரகாஷ் –

என்று எழுதி இருந்ததை கண்டு “ஆஆஆஆ………” என்று கத்தியவள் கதறி அழ, துவங்கினாள்.

‘நான்….. நான்….. நானே என் தங்கச்சி காதலை கொன்னுட்டேன். அவங்க காதல்ல நான் குறுக்க வந்துட்டேன். அ…. அவரு….. பவிய விரும்பியிருக்காரு, கல்யாணத்தன்னைக்கு நடந்த பிரச்சனையால என்னை கல்யாணம் பண்ண வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்காரு.

ராதி…. ராதி….. அத்ததான் அவர்கிட்ட ஏதேதோ பேசி இந்த மேரேஜ்க்கு சம்மதிக்க வச்சிருக்கணும். ஆனா……அவரு நினைச்சிருந்தா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லியிருக்கலாம்ல, ஏன் சொல்லல……ஏன் இப்படி பண்ணுனீங்க போலிஸ்கார்…. ஏன்…? அப்படினா…. இப்போ என்கூட நீங்க எப்படி வாழறீங்க? கல்யாணம் முடிஞ்சுதுங்கற கடமைக்காகவா’ என்று நினைத்தவளின் முகம் அதீத வேதனையை வெளிப்படுத்தியது.

வேற வழி இல்லாம என்னோட அவர் வாழ்ந்தாரா என்று நினைக்கும்போதே அவள் உடல் கூசி போக, கூனி குறுகி போய் அமர்ந்தவள் கண்கள் கண்ணீரை வடித்து கொண்டே இருந்தது.

ஏதேதோ எண்ணங்கள் மனதில் தோன்ற தனக்குள் உலன்டு கொண்டு இருந்தவள் காதுகளுக்கு மீண்டும் போன் அடிக்கும் சத்தம் கேட்க, அதில் தன்னிலை அடைந்தவள் போனை பார்க்க பவி அழகாக சிரித்து கொண்டிருந்தாள் .

தங்கையின் முகத்தை பார்த்தவுடன் மேலும் அவளுக்கு அழுகை அதிகமாக ‘இந்த சிரிப்பு காணாம போக நான் காரணமாகிட்டேனே…’ என்று அழுதவளுக்கு, தன் திருமணம் முடிந்த பின் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக யோசிக்க துவங்கினாள்.

பவிக்கு காய்ச்சல் வந்தது. அவள் அழுதது. அவரை டைவர்ஸ் பண்ணிட்டு வேறு ஒருவரை மணந்து கொள்ள சொன்னது. இரவு தாமதமாக வந்தது. எப்போதும் குடும்பத்துடன் இருப்பதை விரும்புபவள் முதல் முறை அனைவரையும்விட்டு காஷ்மிர் சென்றது. என அனைத்து புள்ளிகளும் வந்து நிற்கும் இடம் அவனவனாக இருந்தது.

பவி அக்காவின் மனதை அறிய சொன்ன வார்த்தைகள் இப்போது அவளுக்கு எதிராக திரும்பி, சைந்துவினுள் போராட்டத்தை அதிகமாக்கியது.

ஒ…. ஒரு வேலை அ….. அவ…. அவரை மறக்கதான் தனியா காஷ்மீர் போய் இருப்பாளோ என்று நினைத்தவளுக்கு நெஞ்சு கூடு காலியானா உணர்வு. பவி நான் உன் சந்தோஷத்தை அழிச்சுட்டேனாடா’ என்று கேட்டுக்கொண்டவளுக்கு, பல விஷயங்கள் புரிய துவங்கியது.

‘சோ….. அவரை மறக்கதான் பவி காஷ்மிர் போயிருக்கா, ஆனா…அஞ்சு வருஷ காதல் ஈஸியா மறக்க முடியாம திணறி இங்க வந்துட்டா. இப்போவும் யார்கிட்டயும் முன்ன மாதிரி பேசாம, சிரிக்காமா தனியா உயிர்ப்பில்லாம வாழ ஆரம்பிச்சுட்டா. அதுக்கு காரணம் அவளோட அஞ்சு வருஷ காதல். அவளோட இந்த நிலமைக்கு நான்தான் காரணம் ’ என்று யோசித்தவள் மனம் அனலில் இட்ட புழுவாய் துடித்தது. அதே நேரம் காலிங்பெல் சத்தம் தொடர்ந்து கேட்க, திகைத்து போனாள்.

யார் வந்திருக்கா? ஏன் இப்படி பெல் அடிக்கறாங்க? என்று யோசித்தவாறு வேகமாக சென்று கதவை திறக்க அங்கு பவிதான் பதட்டமாக நின்று கொண்டிருந்தாள்.

“ஹேய் சைந்து என்ன ஆச்சு? ஏன் போன் போட்டா எடுக்கல. நான் எவ்ளோ……” என்றவள் அப்போதுதான் அக்காவை நன்றாக பார்த்தாள். அவளது அழுத விழிகளை கண்டு பயந்து போனவள் “அழுதியா சைந்து. அவருக்கு ஒன்னும் ஆகாது. எப்போவும் அவர் தெளிவா இருப்பாரு. இப்போ நடந்தது கூட மே பி அவரோட பிளானா இருக்கலாம். அழாத” என்று கூற,

தங்கையை எந்த உணர்வும் இல்லாமல் பார்த்தாள் சைந்தவி. பவிதான் அக்காவின் வாடிய முகத்தை கண்டு துடித்து போய் .

“நிஜமாதான் சொல்றேன் சைந்து. ஓரளவுக்கு மேல கலவரம் கண்ட்ரோல்க்கு வரலைன்னா, அவர் இந்த பிளானைதான் எக்சிகியூட் பண்ணுவாரு. நான் எத்தனை வருஷமா அவரை பார்க்கிறேன்” என்று தன்னை மறந்து சொன்னவள் பின் நாக்கை கடித்து கொண்டு சைந்துவை பார்க்க ,

அவளும் தங்கையை சந்தேகமாகதான் பார்த்து கொண்டிருந்தாள். அக்காவின் பார்வையை உணர்ந்து தடுமாறிய பவி “இல்ல….. இல்ல…. சைந்து…அ…. அ…. அது வந்து நான் ரிப்போர்ட்டர்ல அதான் எல்லா ஹையர் ஆபிசர்பத்தி தெரிஞ்சு வச்சுருக்கேன். சரி அதைவிடு அவருக்கு ஒன்னும் இல்லைதானே அப்புறம் ஏன் அழற” என்று அக்காவின் அழுகையை தாங்காத தங்கையாக கேட்க,

சைந்துவிற்கோ அவள் சூர்யாவின் நலனை சுற்றி வளைத்து கேட்கிறாள் என்று தான் எண்ண தோணியது. மஞ்சள் காமலை காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் என்பது போல், பவி எது செய்தாலும் சூர்யாவை முன்னிருத்தி யோசிக்க துவங்கினாள் சைந்து.

Advertisement