Advertisement

அத்தியாயம்-19

பனி படறும் இளங்காலை வேலை வாசலில் கோலம் போட வந்த மஞ்சு எதிரில் வந்து நின்றது ஒரு ஓலா கார். யார் அது என்றவர் பார்த்து கொண்டிருக்கும்போதே கதவை திறந்து இறங்கினாள் பவித்ரா. மகளை அந்த நேரத்தில் எதிர்பார்க்காதவர் “பவி….”என்று ஆச்சர்யமாக பார்க்க, அவளோ ஓய்ந்து போன தோற்றத்துடன் நின்றிருந்தாள்.
மஞ்சு, “ஹேய் பவி வரேன்னு சொல்லவே இல்ல.மூணு மாசம் ஆகும்னு சொன்ன ரெண்டு மாசத்துல வந்துட்ட. நேத்து பேசும்போது கூட வரேன்னு சொல்லவே இல்ல”என்று சந்தோஷ மிகுதியோடு பேச,

அவளோ எரிச்சலான குரலில் “என்னம்மா வாசல்ல நின்னே எல்லாத்துக்கும் நான் பதில் சொல்லனுமா. நகறுங்க நான் உள்ள போறேன். அப்புறம் உங்க கேள்விக்கு பதில் சொல்றேன்”என்று சொல்ல,

மஞ்சு மகளை ஆராய்ச்சியாக பார்த்தார். அவரின் பார்வை அவளுக்கு மேலும் எரிச்சல் மூட்ட “நகருங்க இப்படியே வழியில் நின்னுட்டு இருந்தா,நான் எப்படி உள்ள போவேன் தலை வலிக்குது” என்று கத்தியவாறு உள்ளே செல்ல மஞ்சு மகளை புரியாதவாறு பார்த்துக் கொண்டிருந்தார்.

வீட்டின் உள்ளே வந்த பவி. குமார் அருகில் தயங்கி,பின் தன் அறை நோக்கி வேகமாக நடக்க துவங்கிவிட்டாள்.

மகளின் நடவடிக்கை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த குமார் திரும்பி மனைவியை பார்க்க,அவரும் செல்லும் மகளைதான் யோசனையாக பார்த்து கொண்டு இருந்தார்.

கணவரிடமும் மகள் பேசாமல் செல்வதை பார்த்து புருவம் சுருக்கியவாறு உள்ளே வந்தவர் “அவ சரியில்லங்க. ஏதோ தப்பா இருக்கு. போன இடத்துல எதுவும் பிரச்சனையாகிடுச்சா”.என்று அவர் பயப்பட,

குமார், “ரொம்ப யோசிக்காத மஞ்சு, ட்ராவல் பண்ணுன டயர்டா இருக்கும். நம்ம பொண்ணுதானே அவளைபத்தி தெரியாதா?பாத்துக்கலாம்”,

மஞ்சு சரி என்பது போல் தலையசைத்தாலும்,அவர் மனதுக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது.அதே மன நிலையோடு காலை வேலைகளை கவனிக்க துவங்கினார்.

சைந்து கணவனின் அணைப்பில் நல்ல தூக்கத்தில் இருந்தாள்.அப்போது அவள் போன் சிணுங்கி எழுப்ப,காலைல யாரு என்று எழும்ப முயல முடியவில்லை. காரணம் ஆணவன் வலிய கரம் அவளை வளைத்து பிடித்திருந்தது.

“ஹப்பா தூக்கத்தில கூட எப்படி இறுக்கமா பிடிச்சுருக்காரு. உடும்பு பிடியால்ல இருக்கு. சரியான முரட்டு போலீஸ்கார்” என்று மனதுக்குள் சொல்லி கொண்டவள், தன் பலம் கொண்ட மட்டும் கையை எடுத்துவிட முனைய. அவன் கையை அவளால் அசைக்க கூட முடியவில்லை.

“ம்ம்…..அடேய் மீசைக்காரா எடுறா கைய”என்று சொல்லிக்கொண்டே திரும்பியவள் அவன் அவளையே பார்த்து கொண்டு படுத்திருப்பதை பார்த்து வழிசலாக சிரித்து “கு.. குட் மார்னிங் போலிஸ்கார்”என்க,

அவளை முறைத்தவன் “ஓய் போலி டாக்டரே. மூஞ்சு முன்னாடி போலிஸ்கார், ஏங்கனு சொல்ல வேண்டியது. பின்னாடி அவன் இவன்னு சொல்றது. உனக்கு எவ்ளோ கொழுப்பு. இப்போ நீ என்னை மரியாதை இல்லாம பேசுனதுக்கு எதாவது தண்டனை குடுக்கணுமே. என்ன தண்டனை குடுக்கலாம்”என்று யோசித்தவனின் கன்னங்களை தாங்கியவள் அவன் பட்டை இதழ்களில் தன் மென் இதழை அழுத்தமாக பதித்து விலகி “ப்ளீஸ் போலிஸ்கார் ரொம்ப நேரமா போன் அடிக்குது”என்று கண்களை சுருக்கி கேட்டவளின் அழகில் மயங்கியவன் தன்னையும் அறியாமல் கைகளை தளர விட, துள்ளி குதித்து எழுந்தவள் வேகமாக சென்று போனை எடுக்க மஞ்சுதான் அழைத்திருந்தார்.

‘ஆத்தி மஞ்சுவா. இவ்ளோ நேரமா தூங்கிட்டு இருந்தியான்னு திட்டுமே என்ன பண்ணலாம் என்று யோசித்தவள் பின் தன் குரலை சரி செய்து கொண்டு அவசரத்தில் இருப்பது போல் “சொல்லுங்கம்மா. சீக்கிரம் தோசை கருகிடும். போன் அடிக்கவும் ஓடி வந்தேன்”என்க, சூர்யா அவளை ‘அடிப்பாவி என்பது போல் பார்த்தான்.

மஞ்சு அந்த பக்கம் பவி வந்த விஷயத்தை சொல்லி அவளை உடனே வீட்டிற்கு வர சொல்ல, அவளும் உடனே வருவதாக சொல்லி போனை வைத்தாள்.

“ஏங்க போலிஸ்கார். பவி வந்துட்டாலாம். நான் போய் பார்த்துட்டு வரேன்”என்று சொல்ல, அவனும் “ம்ம்ம்…. “என்றுவிட்டு வழக்கமான தன் உடற்பயிற்சி செய்ய கிளம்பிவிட்டான்.

சைந்து குளித்து முடித்து ராதிகாவிடம் சொல்லிவிட்டு தங்கையை காண ஓட, அவள் தங்கையோ அறை கதவை பூட்டி வைத்திருந்தாள். வெகு நேரம் கதவை தட்டி திறக்காததால் பதட்டமான சைந்து தாய்,தந்தையை அழைக்க அவர்கள் அழைத்தும் எந்த பதிலும் இல்லை.

சைந்து கணவனுக்கு அழைத்து அவனை வர சொல்ல,அவன் அங்கு வரும் போது மூவரும் கவலையோடு நின்றிருந்தனர். அவர்களிடம் “என்ன ஆச்சு” என்றவன் விசாரிக்க,

சைந்தவி நடந்த அனைத்தையும் சொன்னாள். “ரொம்ப நேரமா கூப்பிடறோம். பதிலே இல்லங்க. எனக்கு பயமா இருக்கு”என்று வருத்தம் தொய்ந்த குரலில் சொன்னாள்.

சூர்யா வேகமாக கதவில் மோதியவன்,அதை உடைத்து உள்ளே சென்று பார்க்க அங்கு பவி பெட்டில் சுருண்டு படுத்திருந்தாள்.

‘இவ்ளோ நேரம் கதவை தட்டுறோம். எப்படி தூங்கறா…ஆனா…இவ இப்படி தூங்கமாட்டாளே. சின்ன சத்தம் கேட்டா கூட எழுந்துப்பாளே’ என்று நினைத்த சைந்து தங்கை அருகில் சென்று அவளை எழுப்ப அப்போதுதான் அவள் மயங்கி இருப்பது அவர்களுக்கு புரிந்தது.

“அச்சோ அம்மா பவி மயக்கத்துல இருக்கா” என்றவள் தன் கணவனை பார்க்க, மனைவியின் கண் அசைவை புரிந்து கொண்டது போல் அவளது மெடிக்கல் பேகை எடுத்து வந்து கொடுத்தான். அவனை நன்றியாக பார்த்தவள் அதை வாங்கி தங்கையை செக் செய்து ஒரு ஊசியை போட்டாள்.

பின் அனைவரையும் வெளியே அழைத்து சென்றவள் “சரியா சாப்பிடல போலம்மா,அதோட ட்ராவல் வேற அதான் மயக்கம். வேற ஒன்னும் இல்ல. அவ நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். இப்போதைக்கு பால் எடுத்துட்டுவாங்க இந்த டேப்லெட்ட அதுல கலந்து கொடுப்போம்”என்று தாயிடம் சொன்னவள், “நீங்க கிளம்புங்க நான் இன்னைக்கு ஹாஸ்பிடல் போகல”என்று கணவனிடம் சொல்லிவிட்டு தந்தையை பார்த்து மென்மையாக சிரித்தவள் தங்கையின் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.

பவிக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்தாலும், சரியாக அவள் சாப்பிடாததை நினைத்து கவலைப்பட்ட மஞ்சு. அவள் எழுந்தவுடன் சாப்பிடட்டும் என்று சின்ன மகளுக்கு பிடித்த உணவாக சமைக்க துவங்கினார்.

தாயிடம் வெது வெதுப்பான சூடில் பாலை வாங்கி சென்ற சைந்து, தங்கையை தன் மேல் சாய்த்து கொண்டு பால் டம்ளரை வாயில் வைக்க, அவளும் இருந்த பசியில் வேகமாக குடித்துவிட்டாள். அவள் பால் குடித்த வேகத்தில் தங்கையின் பசியை உணர்ந்த சைந்துவிற்கு கண்கள் கலங்கியது. பின் அவளை பெட்டில் மெதுவாக படுக்க வைத்தவள். தங்கை கண் விழிக்கும் நேரத்திற்கு காத்திருக்க துவங்கினாள்.

பதினோறு மணிக்கு மேல் கண் விழித்த பவி தன் அருகில் சோகமே உருவாக அமர்ந்திருந்த அக்காவைதான் முதலில் பார்த்தாள். அவளை பார்த்தவுடன் அவ்வளவு நாட்கள் அடைத்து வைத்த மன பாரம் வெளியே வர அவளை அணைத்து கொண்டு கதறி அழ துவங்கினாள்.

தங்கை விழித்தவுடன் சரியாக சாப்பிடாமல் இருந்ததற்கு அவளை நன்றாக திட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சைந்தவிக்கு அவள் அழவும் பயமாகி போனது.

எப்போதும் தைரியமாக இருக்கும் தங்கை. அழுகை கோழைதனத்தின் பிரதி பிம்பம் என்று சொல்பவள் இன்று வேதனை தாங்காமல் அழவும், என்ன ஆனதோ என்ற பயம் அவள் மனதை கவ்வி கொண்டது.

“ஹேய் பவி என்னடா என்ன ஆச்சு? ஏன் அழற? உனக்கு அழறதே பிடிக்காதேடா? போன இடத்துல எதுவும் பிரச்சனையா? எதுவும் சொன்னாங்களா சொல்லுடா. சொன்னாதானே எனக்கு தெரியும்” என்று கேட்க,

எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அழுதே கரைந்தாள் பவி.

தங்கையின் அழுகை ஓய்ந்த தோற்றம் என அனைத்தும் சைந்தவிக்கு ஏதேதோ நினைக்க தோன்ற, தங்கையை பயத்துடன் பார்த்தவள் “ஹேய் சைந்து போன இடத்துல உ…உ…உன்னை…. யா…யாரும்……”என்று முழுதாக சொல்ல கூட முடியாமல் திணறியவளின் முகத்தை கண்டு பவிக்கு பக்கென்று இருந்தது.

வேகமாக கண்ணீரை துடைத்தவள் “ச்ச…ச்ச…இல்ல சைந்து. அது மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. உங்களை எல்லாம் பிரிஞ்சு இருந்தேன்ல. அதான் உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுன்னேன். இப்போ உன்னை பார்த்தவுடன் அது அழுகையா வந்திடுச்சு அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்ல” என்று சொன்னவளை நம்பாமல் பார்த்தாள் அக்கா.

“பவி நீ என்கிட்ட எதாவது மறைக்கறியா”என்ற அக்காவை வலி நிறைத்த பார்வை பார்த்தவள் பின் உடனே தன்னை சமாளித்து ‘இல்லை’ என்று சொல்ல, அவளும் சரியென்றுவிட்டு அமைதியாகிவிட்டாள்.

மஞ்சு மகள்கள் இருவரையும் சாப்பிட அழைக்க பவி ரெஸ்ட் எடுத்தால் போதும் என்பதால் எழுந்து வந்தே அனைவருடனும் சாப்பிட்டாள். குமாரும் அன்று கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்க சாப்பிட்டுவிட்டு அவர் அருகில் சென்ற பவி தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ஆயிரம் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் கொடுக்காத நிம்மதி தந்தையின் தோளில் சாய்ந்து கொண்ட நொடி அவளுக்கு கிடைத்தது. மனதுள் இருக்கும் பல போராட்டங்களை மறைக்கும் விதமாக கண்களை மூடியவள் அப்படியே அமைதியாக இருந்தாள்.

அன்றைய நாள் மட்டும் இல்லாமல் அதன் பின்னான நாட்களில் பவியின் நடவடிக்கைகள் முழுவதுமாக மாறி போனது. கலகலப்பாக எப்போதும் சந்தோசமாக சுற்றி வந்தவள் மிகவும் அமைதியாகி போனாள்.

வீட்டைவிட்டு வெளியே வரவே மறுத்தாள். எப்போதும் அறையின் உள்ளேயே அடைந்து கிடந்தாள். அவளை பார்க்க வந்த கோபியிடம் கூட சரியாக பேசாமல் அமைதியாக அவன் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லி கொண்டு இருந்தாள்.

தைரியமான தன் அக்காவின் இந்த மாற்றம் கோபிக்கு மிகுந்த கவலையை கொடுத்தது. சைந்தவியிடம் அதை சொல்லி வருத்தப்பட்டவன் கலங்கிய கண்களுடன் சென்றுவிட்டான்.

தங்கை எப்போதும் ஏதோ நினைவில் தனக்குள்ளே முடங்கி இருப்பது போல் சைந்தவிக்கு தோன்ற எதனால் என்று யோசிக்க துவங்கினாள். அப்போதுதான் பவியின் டைரியில் இருந்த காதல் விஷயம் நினைவு வர, அவளிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டாள்.

பவியின் நிலை பற்றி மனைவி மூலம் தெரிந்து கொண்ட சூர்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.திடீரென்று என்ன ஆனது. ஒருவேலை….. என்று நினைத்தவனுக்கு அப்படி இருக்குமோ என்ற எண்ணம் எழ,’இல்ல இதை இப்படியே விட்டா சரி வராது. கண்டிப்பா நாம பவித்ரா கூட பேசணும்’ என்று தனக்குள் முடிவெடுத்து கொண்டான்.

பவி தான் அழைத்தால் எதாவது காரணம் சொல்லி வர மறுப்பாள் என்று நினைத்த சைந்து “அவருக்கும் எனக்கும் சண்டை. நீயே இதை கேளு பவி”என்றவள் பின் “இங்க பேச வேண்டாம். வா வெளிய போய் பேசலாம்”என்று தங்கை மறுத்தும் கேட்காமல் அவளை ஒரு ரெஸ்டாரண்ட்டிற்கு அழைத்து சென்றாள்.

உயர்தரமான அந்த ஹோட்டலில் மூவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். சைந்தவிதான் முதலில் அந்த அமைதியை கலைத்தாள்.

“பவி நான் உன்கிட்ட பேசணும். அதுக்குதான் உன்னை இங்க கூட்டி வந்தேன். பேசணும்னு சொன்னா நீ வரமாட்ட அதான் சண்டைனு பொய் சொல்லி இங்க உன்னை கூட்டி வந்தேன்”என்று சொல்ல.

பவி அக்காவை கோபமாக பார்த்தாள்.

“கொஞ்ச நேரம் பவி. ப்ளீஸ்.நீயும் எவ்ளோ நாள் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருப்ப. உனக்கு என்னதான் ஆச்சு. ஒருவேலை உன்னோட அந்த அஞ்சு வருஷ காதலனை நினைச்சுதான் நீ கவலையா இருக்கியா”என்று கேட்க, அவளோ அக்காவை அதிர்ந்து போய் பார்த்தாள்.

“என்ன பார்க்கற கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் உன்னோட லவ் விஷயம் எனக்கு தெரியும். அதைப்பத்தி பேசலாம்னு நினைச்சேன். ஆனா சொந்தகாரங்க எல்லாம் இருந்தாங்க. சரி பிரீயா…. அப்புறம் பேசலாம்னு நினைச்சேன். முடியல. இப்போதான் அதுக்கான நேரம் வந்துருக்கு சொல்லு யார் அது? என்கிட்ட கூட சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல? நாம ரெண்டு பேரும் பிரண்டு மாதிரி இருக்கோம்னு நினைச்சேன் ஆனா அப்படி இல்லன்னு நீ சொல்லாம சொல்லிட்ட”என்று வருத்தமாக சொல்ல,

பவிக்கு மனம் பாரமாகி போனது. “ம்ம்ம்….. இனி அதைப்பத்தி பேச ஒன்னும் இல்ல சைந்து”என்று உணர்ச்சியற்ற குரலில் சொல்ல,அவளோ தங்கையை புரியாமல் பார்த்தாள்.

“என்ன பவி சொல்ற. ஏன் பேச வேண்டாம்னு சொல்ற. அது யாரா இருந்தாலும் பரவால்ல சொல்லு நானும் அவரும் பேசி உங்களை சேர்த்து வைக்கறோம் ”

“யாரா இருந்தாலுமா….”என்று அக்காவை அர்த்தம் பொதிய ஒரு பார்வை பார்த்தவள், பின் பெரு மூச்சுடன் “தேவையில்லை சைந்து அ…அ…ம்கூம்…அவர் என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டாரு. இனி அதைப்பத்தி பேசாத”என்று உண்மையை சொன்னால் அக்கா வருந்துவாள் என்று இப்படி சொன்னாள் கண்களில் சோகம் இழையோட, உடனே சைந்து பவியை திகைத்து போய் பார்த்தாள்.

“அப்போ உன்னோட இந்த மாற்றத்துக்கான காரணம் இதுதானா”என்று கேட்க, பவியோ அக்காவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

சைந்து மனம் நொந்து போனாள்.’ச்ச…. இவ யாரை லவ் பண்ணி இருப்பா’என்று யோசித்தவளுக்கு எந்த பதிலும் கிடைக்காமல் போக, அவளிடமே கேட்டாள்.

“பவி அவரு உன்னை பிடிக்கலன்னு சொன்னா உடனே விலகி வந்துடுவியா. இவ்ளோதான் உன்னோட அஞ்சு வருஷ காதலா. அவர் பின்னாடியே போய், எனக்கு நீங்க ஓகே சொல்லாம நான் விடமாட்டேன்னு லவ் டார்ச்சர் பண்ண வேண்டாம். என்னடி இது சின்ன பிள்ள மாதிரி. அவர் யாரு எனக்கு தெரிஞ்சவரா. அவரை நான் பார்த்திருக்கேனா. சொல்லுடி”

“இல்ல சைந்து. இனி அவரை பற்றி பேசறது என்ன? நினைக்கறது கூட தப்பு. அந்த பேச்சை விடு. மேலும் என்னை கஷ்டப்படுத்தாத ப்ளீஸ்” என்று கெஞ்ச, தங்கையின் கண்ணில் இருந்த வேதனையை கண்டு மனதுள் துடித்து போனாள் சைந்து.

எந்த கவலையும் இல்லாம, சந்தோசமா, தைரியமா இருக்கவளுக்கு எவ்ளோ பெரிய, இழப்பு. இல்ல பவி இந்த வேதனை உனக்கு வேண்டாம். நான் கண்டிப்பா உன்னோட காதலன் யாருன்னு கண்டுபிடிப்பேன். உன்னோட உண்மையான காதல அவருக்கு புரிய வச்சு, உன் சந்தோஷத்தை உனக்கு மீட்டு கொடுப்பேன். இந்த விஷயத்துல என்ன பிரச்சனை வந்தாலும் அதை நான் சமாளிப்பேன். இப்படி அறைக்குள்ளேயே முடங்கி போன பவிய என்னால பார்க்க முடியல.

உன்னோட அஞ்சு வருஷ காதல் ஜெயிக்க, என்னால ஆன எல்லா முயற்சியும் செய்வேன்’ என்று தனக்குள் நினைத்து கொண்டவள் சாப்பிட துவங்கினாள். அதன் பின் பெரும் அமைதியே அங்கு நிலவியது.

பவி சரியாக சாப்பிடாமல் கொரித்து கொண்டிருக்க, அவளை வேதனையாக பார்த்த சைந்து கண்டிப்பாக அவள் காதலனை கண்டுபிடித்து அவளுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் உறுதி ஆனது.

சாப்பிட்டு முடித்த சைந்து கை கழுவ எழுந்து செல்ல, அவள் சென்ற மறு நிமிடம் பவி எதிரில் வந்து அமர்ந்தான் சூர்யா.

பவி அவனை ஆச்சர்யமாக பார்க்க, அவனோ அவளை அழுத்தமாக பார்த்தவன் “நீ ரொம்ப தைரியமான பொண்ணு. வாழ்க்கைய அதன் போக்கில் ஏத்துப்பன்னு நினைச்சேன். ஆனா….. இவ்ளோ கோழையா இருப்பன்னு எதிர்பார்க்கல. எனக்கு தெரிஞ்ச வரை நீ என்னை காதலிக்கவே இல்ல. நாம பண்ண நினைச்ச வேலைய இன்னொரு ஆள் பன்னுன்னா அவங்களை பார்த்து இம்ப்ரஸ் ஆவோம். அதுதான் நம்ம விஷயத்திலும் நடந்திருக்கு. பிராக்டிகலா யோசிச்சு தெளிவான முடிவெடு. முடிஞ்ச விஷத்தை யாராலயும் மாத்த முடியாது”என்று சொல்ல,

பவி அவனை ஆழ்ந்து பார்த்தவள் “ஏன் நான் கவலைப்படறது உங்களுக்கு வருத்தமா இருக்கா “

“கண்டிப்பா இல்லை. நான் உனக்கு நம்பிக்கை குடுத்து ஏமாத்தல. ஆரம்பத்துல இருந்தே நமக்கு செட் ஆகதுனுதான் நான் விலகி போனேன். நீதான் பிடிவாதமா என் பின்னாடி சுத்திட்டு இருந்த. இப்போ நான் உன்கிட்ட பேசுனத்துக்கு காரணம் என் மனைவி. அவ உன்னை நினைச்சு ரொம்ப கவலைப்படறா, அவ கவலையான முகம், சோர்ந்த தோற்றம் எனக்கு கவலைய குடுக்குது. அவளுக்காக மட்டும்தான் முதலும் கடைசியுமா உன்கிட்ட எல்லாத்தையும் தெளிவா பேசிடலாம்னு நினைச்சேன். பேசிட்டேன். ஒரு இன்பேக்சுவேஷன்க்கு முக்கியத்துவம் குடுக்கறதை நிப்பாட்டிட்டு உன்னோட கேரியர்ல கான்சென்ட்ரேட் பண்ண பாரு. நான் கிளம்பறேன். என் வைப் வந்துடுவா”என்றவன் அடுத்த நிமிடம் அங்கிருந்து வேகமாக சென்றான்.

சற்று நேரம் கடந்து யோசனையுடன் வந்தாள் சைந்து.அக்காவை பார்த்தவுடன் கலங்கிய விழிகளை சரி செய்து கொண்டவள் “போலாமா சைந்து” என்று கேட்க அவள் சரியென்றவுடன் இருவரும் வீட்டை நோக்கி கிளம்பினர்.

வீட்டிற்கு செல்லும் சைந்து மனதில் பல யோசனைகள் ஓட, பவியும் தனக்குள் மூழ்கி இருக்க இருவரும் மற்றவரை கவனித்து பார்க்க மறந்தனர்.

சைந்து பவியின் காதலனை கண்டுபிடிப்பாளா, கண்டுபிடித்தால் அவளது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.

அணைப்பாள்……

Advertisement