Advertisement

அத்தியாயம் -11

சைந்தவி அறையில் நகத்தை கடித்து கொண்டு அமர்ந்திருந்தாள். ‘என்னடி சைந்து இப்படி பண்ணி வச்சுருக்க. இப்போ அத்தைய எப்படி பார்க்க. கிளம்பி ஒரு மணி நேரம் ஆச்சு. மஞ்சு வேற போன் போட்டுட்டே இருக்கு. ஆண்டி முன்னாடி போய் இப்படி நின்னுருக்கியேடி. லூசு…. லூசு…..உன்னை அவர் லூசுன்னு சொன்னதுல தப்பே இல்லடி’என்று ஒரு மனம் புலம்ப, மற்றொரு மனமோ ‘ஏம்மா ராசாத்தி. அவங்க பொண்ணுதானே அவங்க பார்த்தது தப்புன்னா. ஒரு ஆம்பள முன்னாடி ஆர்வ கோளாறுல நெஞ்ச நிமிர்த்தி போலீஸ் சலியூட் அடிச்சியே அப்போ அவரு என்னென்ன பார்த்திருப்பாரு அவர் பார்த்தது தப்பு இல்லையா’என்று கேட்க, உடனே நிமிர்ந்து அமர்ந்தவள் ‘அவர் என் புருஷன் அதனால அது ஒன்னும் தப்பு இல்ல. நீ வாய மூடு’என்றவள் அறியவில்லை. பயம் மட்டுமே அவளை அவனிடம் இருந்து விளக்குகிறது என்றும்,ஆனால் அவள் மனம் அவனை கணவனாக ஏற்க துவங்கிவிட்டது என்றும்.(இதுதான் மஞ்ச கயிறு மேஜிக்கா)

வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள்,ராதிகா வந்து கதவைத் தட்டவும் தயங்கி தயங்கியே கதவை திறந்தாள்.அப்போதும் அவரைப் பார்க்க சங்கடப்பட்டு குனிந்து நின்றிருந்தவளின் தலையில் கை வைத்தவர் “என்னாச்சுடா? கிளம்பிட்டியா?மஞ்சு போன் போட்டுட்டே இருக்கா”என்று கேட்க,சைந்தவிக்கு சற்று நிம்மதியாக இருந்தது.காலையில் நடந்ததை பற்றி அவர் பேசாததால்.

ராதிகாவை மென் சிரிப்புடன் பார்த்தவள் “போகலாம் அத்தை” என்க.
“சரி வா போகலாம்”என்று இருவரும் மஞ்சு வீட்டிற்கு சென்றனர்.அங்கு சென்ற போது மஞ்சு, குமார் இருவரும் அவளை வரவேற்க அவளுக்கோ முணுக்கென்று கண்களில் நீர் கோர்த்தது. மன தாங்களுடன் “என்னம்மா என்னை போய் வரவேற்குறீங்க. நான் என்ன வெளியாளா”என்று கேட்க, அவரோ “இது எல்லாம் சாம்பிரதாயம்டா. வேற ஒன்னும் இல்ல.சரி சரி வா…இவ்ளோ நேரம் என்ன செஞ்ச”என்று பேச்சை மாற்றி அழைத்து சென்றார்.

தாயின் வார்த்தைகள் சைந்தவிக்கு ஏற்க கூடியதாக இல்லையென்றாலும் அமைதியாக இருந்தாள். இந்த சூழ்நிலை திருமணம் முடிந்து நம்ம வீட்டுக்கு போறோம் என்ற சந்தோஷத்தோடு வரும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உண்டாகும் காயம். பிறந்து வளர்ந்து அன்பாக பழகி உரிமையாக சுற்றி வந்த உறவுகளும், வீடும் இனி நீ வெளி ஆள் என்று சொல்லி விலக்கி நிறுத்தி வைக்கும் நேரம்.பெண்ணால் வெளியே சொல்லி ஆறுதல் தேட கூட ஆள் இல்லாமல் தடுமாறும் தருணம். அனைத்து பெண்களும் விரும்பவில்லை என்றாலும் அமைதியாக ஏற்கும் நிமிடம் அது.

வீட்டிற்குள் வந்த சைந்தவி சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள்.அவள் அருகில் அமர்ந்த குமார் “ஏன்டா டல்லா இருக்க”என்று கேட்க, ஏதோ ஒரு உணர்வு மனதில் எழ கட்டுப்படுத்த முடியாதவள் அவர் தோளில் சாய்ந்து கொண்டாள், கண்கள் ஏனோ கண்ணீரை வெளிப்படுத்தியது.மகளின் மன நிலை புரிந்து கொண்டவர் போல் அவரும் அவள் தலையை அன்பாக கோதி கொடுக்க,இருவருக்கும் இடையில் அமைதியே நிலவியது. பல வார்த்தைகள் கொடுக்காத ஆறுதல் தந்தையின் தோளில் சாய்ந்தால் பெண்களுக்கு கிடைக்கிறது என்பது எவ்வளவு உண்மை.மனபாரம் குறைந்த உணர்வில் நிமிர்ந்து அமர்ந்தவள் அப்போதுதான் கவனித்தாள் தங்கை அங்கு இல்லாததை.

வீட்டை சுற்றி பார்வையை ஓட்டியவள் பின் தாயிடம் “எங்கம்மா பவிய காணோம்”என்று கேட்க,அவரோ “என்ன ஆச்சுனே தெரியல.காலைல எழுப்ப உங்க ரூம்க்கு போய் பார்க்கறேன் முகம் எல்லாம் அழுது அழுது வீங்கி போன மாதிரி இருந்தது.உடம்பு வேற சூடா இருந்தது. ஒருவழியா அவளை எழுப்பி பிரஸ் அப் ஆக வச்சு பால் குடிக்க குடுத்து மாத்திரை போட வச்சு படுக்க வைக்கறதுக்குள்ள நொந்து போய்ட்டேன்”என்றவர் சொன்னவுடன் வேகமாக எழுந்தவள் “என்னம்மா இப்ப சொல்றீங்க.காலைலயே சொல்லியிருந்தா, நான் சீக்கிரம் வந்து பார்த்துருப்பேன்ல” என்றவள் வேகமாக தங்கள் அறை நோக்கி சென்றாள்.

பவி அறையில் காய்ச்சலால் சுருண்டு படுத்திருந்தாள். அவள் அருகில் சென்று பார்த்த சைந்தவி “பவி என்ன ஆச்சு”என்று பதட்டமாக கேட்க,அக்காவை எதிர்பார்க்காதவள் தன் மன கவலையை மறைத்து சோம்பலாக சிரித்து “நீ எப்போ வந்த”என்று கேட்க,சைந்து அவளை முறைத்து “நான் வந்தது இருக்கட்டும் நீ…. உன் முகம் ஏன் இப்படி இருக்கு.என்ன ஆச்சு உனக்கு. முகம் எல்லாம் வீங்கி இருக்கு”என்று பாசமாக கேட்டவாறே அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தாள். காய்ச்சல் குறைந்தது போலவே தெரியவில்லை.

“என்ன பவி. எதாவது பேசு. ஏன் உனக்கு இந்த திடீர் காய்ச்சல்”என்று பேசி கொண்டே, தன் கபோர்ட்டில் இருந்து காய்ச்சல் மாத்திரையை எடுத்தவள் அவளுக்கு கொடுத்து முழுங்க வைத்தவளின் பாசம் கண்டு பவிக்கு தொண்டை அடைத்தது. அவளை தாவி அணைத்து கொண்டவள் “மிஸ் யூ சைந்து”என்றாள் அக்காவின் கேள்விக்கு பதில் அளிப்பது போல்.

தங்கை தன் பிரிவை நினைத்து அழுதிருப்பாளோ அதனால் வந்த காய்ச்சலோ இது என்று நினைத்த சைந்து தானும் அவளை அணைத்து “என்ன பவி. நான் இங்க பக்கத்து வீட்லதானே இருக்கேன். எதுக்கு என்னை மிஸ்பண்ண போற”என்றவள் அவளை விலக்கி அமரவைத்து “ஆமா நீ அவ்வளவு பாசமான புள்ள இல்லையே. என்ன விஷயம். இந்த திடீர் பாச மழைக்கு என்ன காரணம்”என்று கேலி போல் கேட்க, அக்காவின் எண்ணத்தை புரிந்து கொண்டது போல் பவியும் “இல்ல உடன்பிறப்பே உன்னை உண்மையாவே மிஸ் பண்ணுனேன். பஞ்சு மாதிரி பொது பொதுனு இருக்க உன் மேல கால் போட்டு தூங்க முடியாம,உன்னோட குறட்டை சத்தம் இல்லாம……”என்றவள் சொல்லும்போதே அவள் காதை பிடித்த சைந்து “ஹேய் நான் எப்போடி குறட்டைவிட்டேன்”என்று கேட்க,

பவியோ வலிக்காத காதை பிடித்து கொண்டு “அம்மா……தாயே……மஞ்சும்மா….. இங்க பாரு. உன் பொண்ணு என்னை கொடுமபடுத்தறா”என்று கத்த, கீழே இருந்தே மஞ்சு “அங்க என்ன சத்தம். வந்தவுடனே ஆரம்பிச்சுட்டீங்களா. இப்போ நான் அங்க வந்தேன் அவ்வளவுதான்”என்று கத்த, இருவரும் கப்சிப் ஆகினர்.

தாயின் சத்தத்தில் அமைதியான இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர். பின் சற்று நேரம் பேசி கொண்டிருந்தனர் அப்பொழுதுதான் சைந்துவிற்கு தங்கையின் டைரியை பற்றிய நினைவு வர, அதை கேட்க எண்ணி அவள் முகத்தை பார்க்க அவள் முகமோ சோர்ந்து போயிருந்தது.

சைந்து, ‘சரி இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கட்டும்.நாளைக்கு அவ சரியானதும் கேட்டுக்கலாம்’ என்று முடிவெடுத்தவள். “பவி மாத்திரை போட்டது தூக்கம் வரும்.நல்லா தூங்கு வேர்க்கட்டும். வேர்த்தாலே காய்ச்சல் போயிடும்”என்றவள் போர்வையை பவி தலை வரை போர்த்திவிட்டு பேனை ஆப் செய்தவள்,அறை கதவை மூடிவிட்டு சென்று விட்டாள்.அவள் வெளியில் செல்லும் வரை அமைதியாக இருந்த பவியின் முகம் சென்ற பின் வேதனையில் கசங்கியது.

“என் காதல என்னால மறக்க முடியுமானு தெரியல சைந்து. அஞ்சு வருஷம் ஆசை ஆசையா கட்டிய கோட்டை. கண் முன்னாடி தூள் தூளா போயிடுச்சி.என்னையவே அறியாம சுயநலமா யோசிச்சு உனக்கு துரோகம் பண்ணிடுவனோன்னு பயமா இருக்கு’என்று நினைத்தவள் கண்கள் கண்ணீரை பொழிய ஆரம்பித்தது.அழுது அழுது மாத்திரையின் வீரியத்தில் அப்படியே உறங்கியும் போனாள்.

இரண்டு மணி நேரம் கழித்து பவியை பார்க்க சென்றாள் சைந்து. அவள்அசந்து தூங்கி கொண்டு இருந்தாள்.அத்தோடு நன்கு வேர்த்திருந்தது அதை கவனித்தவள் தங்கையின் உடல் சூட்டை செக் செய்ய அதுவும் குறைந்து இருந்தது. அப்போதுதான் நிம்மதி ஆனவள் அவள் விழிப்பதற்காக காத்திருக்க துவங்கினாள். ஒரு புக்கை எடுத்து வைத்து படிக்க ஆரம்பித்தவள் நேரம் செல்வதையே கவனிக்கவில்லை.

மதிய நேரம் சைந்து வீட்டிற்கு வந்தான் சூர்யா.அவனை ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர் மஞ்சுவும் குமாரும். ராதிகாவும், மகனைப் பார்த்து மென்மையாக சிரித்து வைக்க.அவன் கண்களோ அவனவளைதான் தேடியது. அவன் கண்கள் யாரையோ தேடுவதை உணர்ந்த மஞ்சு ராதிகாவை பார்க்க அவரும் மஞ்சுவைதான் பார்த்தார் ஆச்சர்யமாக.

சூர்யா வீட்டிற்குள் வந்தவுடன் யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருக்க, அப்போது அவன் மனம் மனைவியானவள் மட்டுமே இங்கு நமக்கு தெரிந்தவள். இவள் எங்க போனாள் என்றே பார்வையை சுழற்றினான்.அதை கவனித்துதான் பெண்கள் இருவரும் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தனர்.

மருமகனை வெகுநேரம் காத்திருக்க வைக்காத மஞ்சு மகளை அழைக்க அவளோ எப்போதும் போல் “இதோ வந்துட்டேன்……”என்று வடிவேலு பாணியில் கத்திக் கொண்டே வந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த சூர்யாவை பார்த்து வாயை மூடிக்கொண்டு,’ஐயையோ போலீஸ்கார்….’என்று மனதில் அலறி ‘அப்படியே உள்ள ஓடிடலாமா’என்று சூர்யாவையும் அவள் அறை கதவையும் மாறி மாறி பயத்துடன் பார்த்து கொண்டிருக்க,மஞ்சுவோ, “மாப்பிள்ளை வந்துட்டாரு. இங்க வா. அவர்கூட வந்து உட்காரு. பாவம் அவரு தனியா இருக்காருல்ல”என்றார்

சைந்து, ‘எதே போலிஸ்கார்கூட உட்காரணுமா. நீங்க இவ்ளோ பேர் இருக்கீங்க அப்புறம் என்ன தனியா இருக்காரு. போம்மா என்னால எல்லாம் அந்த மனுஷன் பக்கத்துல உட்கார முடியாது’ என்று மனதில்தான் புலம்பி கொண்டே வந்தவள் அவன் அருகில் அமராமல் தந்தையிடம் சென்று அமர்ந்து கொண்டாள்.

சூர்யா எதிரில் தந்தையுடன் அமர்ந்திருக்கும் மனைவியை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன் பின் தன் பார்வையை வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். குமார்தான் எதாவது பேச வேண்டும் என்று பேசி கொண்டு இருந்தார்.அவருடன் பேச பேச சூர்யாவின் பார்வை சைந்து மீது படிந்து மீண்டது.

கணவனின் பார்வையில் நெளிந்தவள் ஓரளவுக்கு மேல் பொறுக்க முடியாமல் “ப்பா…நான் போய் பவிய பார்க்கறேன்”என்றுவிட்டு ஓட, சூர்யா கடுப்பானான் இருந்தாலும் வெளியில் எதையும் காட்டி கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

மஞ்சு சாப்பிட எல்லாம் தயார் செய்துவிட்டு சகோதரிகள் இருவரையும் அழைக்க, பவி காய்ச்சல் சரியானதால் அக்காவுடன் கீழே சென்றாள். சூர்யாவையும் சாப்பிட அழைத்தவர் மாப்பிள்ளை விருந்திற்கு பல உணவு வகைகளை தயார் செய்திருந்தார்.

ஆறு பேர் அமரக்கூடிய அந்த உணவு மேசையில் சூர்யா ஒரு பக்கம் அமர,குமார் எதிரில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார்.பவியும் சாப்பிட வர, அவளை ஒரு நிமிடம் பார்த்த சூர்யா எதுவும் பேசாமல் அமைதியாக திரும்பிக் கொண்டான். அவனது அந்த செயலில் அவள் மனம் ஏனோ காயம் பட்டுதான் போனது.’ஈஸியா என்னை விலக்கிட்டீங்க இல்ல’ என்று நினைத்து கொண்டவள் அப்படியே நின்றிருக்க, சைந்தவியை சூர்யா அருகில் அமருமாறு கண்காட்டினார் மஞ்சு. அதையெல்லம் கண்டு கொள்ளாதவள் தந்தையின் அருகில் செல்ல போக, பவி சூர்யா அருகில் அமர செல்ல, அவனை கடந்து செல்ல போன சைந்து கையை மற்றவர் அறியாமல் பிடித்தவன் தன் அருகில் இருந்த சேரில் இழுத்து அமர வைத்தான்.

சைந்து அவனை திகைத்து போய் பார்க்க, அவனோ கண்களாலேயே ‘இடத்தைவிட்டு எழுந்த அவ்வளவுதான்’என்பது போல் மிரட்ட, மிரண்டு விழித்தவள் ‘ஹைய்யோ அப்பா பக்கத்துல உட்கார்ந்து நிம்மதியா சாப்பிடலாம்னு நினைச்சா இந்த போலிஸ்கார் இப்படி இழுத்து உட்கார வச்சுட்டாரே. இன்னைக்கு நான் சாப்பிட்ட மாதிரிதான்’என்று மனதுக்குள் புலம்பினாள்.

சூர்யா செயலை மற்றவர்கள் கவனிக்கவில்லை என்றாலும் பவி பார்த்து கொண்டுதான் இருந்தாள். தான் அவன் அருகில் அமர செல்வதை கவனித்துதான் சைந்தவியை அவன் அருகில் இழுத்து உட்கார வைத்தான் என்பதை புரிந்து கொண்ட பவி பெரு மூச்சுடன் தந்தையின் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.

அனைவரும் சாப்பிட ஆரம்பிக்க மஞ்சு சூர்யாவை விழுந்து விழுந்து கவனித்தார்.அவனுக்கோ அது சங்கடத்தை ஏற்படுத்தியது. அவரை சாதாரணமாக இருக்க சொல்லி சொன்னவன் “ப்ளீஸ் ஆண்டி நார்மலா என்னை இருக்கவிடுங்க” என்க, அவரும் அதன்பின் அமைதியானார்.

சைந்து கடமையே என்று அமர்ந்து உணவை கொரித்து கொண்டு இருக்க, அவளை பார்த்து அவனுக்கு கடுப்பானது.பக்கத்துல உட்கார சொன்னா, உங்க அப்பாக்கிட்டயா போற என்று நினைத்தவன் அவள் கையை கிள்ள கையை நீட்ட, அதே நேரம் சைந்து பொரியல் எடுக்க கையை தூக்க, அவன் கை அவள் இடையில் அழுத்தமாக கிள்ளியது.

“ஹக்……. “என்ற துள்ளலுடன் விக்கித்து போன சைந்து அப்படியே சிலையாகி போக, சூர்யாவும் எதிர்பாராத அந்த நிகழ்வில் திகைத்துதான் போனான். இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டவன் தட்டில் முகத்தை புதைத்து கொண்டான்.

மஞ்சு கடைசியாக சாப்பிட பழங்களை நறுக்கி எடுத்து வந்தவர் மகள் அப்படியே அமர்ந்திருப்பதை கண்டு “என்னடி ஏன் அப்படியே சிலையாட்டம் இருக்க. சாப்பிடு”என்க, அப்போதுதான் தன்னிலை அடைந்தவள் வேகமாக திரும்பி கணவனை பார்க்க அவனோ சாப்பிடுவதில் மும்முறமாக இருந்தான்.

தலையை சொரிந்தவள் ‘இப்போ இங்க நடந்த சம்பவம் உண்மையா.. இல்ல என் கனவா…. கனவா இருந்தா வலிக்காதே…..’என்று வலித்த இடையை தேய்த்தவள். ‘இந்த போலிஸ்கார் என்ன ஒன்னும் நடக்காதது போல சாப்பிடறாரு. சரியான கள்ளனா இருப்பாரு போல’என்று நினைத்தவள் முகத்தை அஷ்டகோணலாக மாற்றி சாப்பிட ஆரம்பித்தாள்.

சூர்யா விரைவாக சாப்பிட்டு முடித்தவன் உடனே கிளம்பிவிட, சைந்தவிக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது. அதன்பின் சகோதரிகள் இருவரும் உட்கார்ந்து பேச நேரம் சென்றதே தெரியவில்லை.

மாலை நேரம் ராதிகா, சைந்தவி இருவரும் மஞ்சு, குமாரிடம் விடைபெற்று அவர்கள் வீட்டிற்கு கிளம்பினர்.வீட்டிற்கு வந்தவுடன் ராதிகா சைந்துவை விளக்கு ஏற்ற சொல்ல, விளக்கேற்றி சாமி கும்பிட்டவள் அதன்பின் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து போனை நோண்ட ஆரம்பித்தாள்.

மருமகளின் அருகில் வந்த ராதிகா “சைந்து எப்போ ஹாஸ்பிடல் போகணும். எத்தனை நாள் லீவ் போட்டுருக்க”என்று கேட்க,

சைந்து, “அம்மா பத்து நாள் லீவ் போட சொன்னங்க அத்த. ஆனா நான் ஒரு வாரம்தான் சொல்லியிருக்கேன்”என்று தயக்கமாக அவரை பார்க்க, அவரோ “இதுல என்னமா இருக்கு. அவனும் வேலைக்கு போய்ட்டான். திடீர்னு லீவும் கிடைக்காது. உனக்கு பிரச்சனை இல்லைனா, நாளைக்கு கூட நீ ஹாஸ்பிடல் போக ஆரம்பிக்கலாம். அப்புறம் அவனுக்கு லீவ் கிடைக்கும்போது நீயும் லீவ் போட்டுட்டு ரெண்டு பேரும் ஒன்னா வெளிய போயிட்டு வாங்க. அடுத்த வாரத்துல ஒரு நாள் எங்க சொந்தகாரங்க எல்லாரையும் கூப்பிட்டு ஒரு விருந்து வச்சிடலாம் அப்போ லீவ் போட்டுக்கடா”என்றார்.

சைந்து, “எதே….. போலிஸ்கார்கூட நான் தனியா போகணுமா. அதெல்லாம் முடியாது. ஏன் அத்தை உங்களுக்கு இந்த கொலை வெறி”என்று கேட்க, அவளை சந்தேகமாக பார்த்தவர் “ஏன்டா? அவன் உன்னை மிரட்டுனானா. எதா இருந்தாலும் என்கிட்டே சொல்லுடா. பயப்படாத. நான் அவனை பேசிக்கறேன்”என்றார் கவலையாக.

சைந்துவோ அவரை அசால்ட்டாக பார்த்தவள் “யாரு என்னை அவரு மிரட்டுவாரா. நாங்க எல்லாம் யாரு.எங்களை மிரட்ட எல்லாம் இன்னொரு ஆள் வானத்துல இருந்து குதிச்சாதான் உண்டு. தெரியுமா? என்னை பத்தி ஹாஸ்பிடல வந்து கேட்டு பாருங்க டாக்டர்லயே நான் ஒரு ரவுடியான டாக்டராக்கும்”என்று அளந்துவிட, அவளை நக்கலாக பார்த்தவர் “வா கண்ணா. எப்போ வந்த.ஏன் அங்கயே நிக்கற உள்ள வா”என்றார் அவள் பின் பக்கம் இருந்த வாசலை பார்த்தவாறு.

பயத்தில் முகம் வெளுக்க வேகமாக பதறி எழுந்த சைந்து “குட் ஈவினிங் போலிஸ்கார்”என்று என்ன பேசுவது என்று தெரியாமல் காலை போலவே சைந்தவி சலியூட் அடிக்க, அதை கண்டு ராதிகாவிற்கு சிரிப்பு வந்தது.

சைந்து திரும்பி பார்த்தவள் அங்கு யாரும் இல்லாமல் இருப்பதை பார்த்து அத்தையை முறைக்க, அவரோ கிண்டலாக “என்னம்மா யாருக்கும் பயப்பட மாட்டேன்னு சொன்ன”என்று கேட்க, அவரை போலியாக முறைத்தவள் பின் வழிசலான சிரிப்புடன் “ஈஈஈ….. அது அத்த…. உங்க பையனை பார்த்து எல்லாம் எனக்கு பயம் இல்ல. போலீசை பார்த்தாதான் பயம்”

ராதி, “அப்போ என் பையன் மேல உனக்கு பயம் இல்ல”

சைந்து, “ச்ச…. ச்ச…. பயமா எனக்கா….. நெவர்”என்று திரும்பியவள் “ஆஆஆஆ……”என்று திறந்த வாயை மூடாமல் அப்படியே நிற்க, வாசல் கதவில் சாய்ந்து நின்று அவளைதான் பார்த்து கொண்டிருந்தான் சூர்யா.

அணைப்பாள்…….

Advertisement