பொன் அந்தி சாயும் நேரம். வெய்யோன் தன் பணியை முடித்து வீடு சென்றுவிட, நிலவு மகள் வான ஊர்வலத்தை துவங்கும் இரவு நேரம்.சைந்தவி வீட்டில் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் சூர்யா வீட்டிற்கு இருவரும் வந்திருந்தனர்.
சூர்யா தன் அறையில் சென்று அடைந்து கொள்ள, சைந்தவி அமைதியாக மற்றொரு அறையில் அமர்ந்திருந்தாள்.அவள் அருகில் வந்த ராதிகா “என்ன சைந்து ரொம்ப அமைதியா இருக்க”என்று கேட்க, அவளோ ‘ஒன்றும் இல்லை’ என்று தலையசைத்தாள். அப்போது அங்கு வந்த மஞ்சுவிடம் இருந்த பால் சொம்பை கண்டு அவள் அரண்டு விழிக்க, மஞ்சுவோ “என்னடா….”என்று பாசமாக கேட்டார். சைந்து அவருக்கு பதில் அழிக்க விரும்பாதது போல் அமைதியாக இருந்தாள்.
மகளின் கோபத்தை புரிந்து கொண்டவர் முகம் சுருங்கி போனார். இருந்தாலும் ராதிகா முன்பு எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்து,மகளிடம் நாளை பேச வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டார். பின் ராதிகாவிடம் “வீட்ல எல்லாம் அப்படியே கிடக்கும். எல்லாரும் சாப்பிட்டாங்களா, வந்தவங்க என்ன பண்றாங்க எதுவும் தெரியல ராதி. நான் அங்க போய் பார்க்கறேன். கிளம்பட்டுமா”என்று கேட்க, அவரும் சரியென்றார்.
மஞ்சு மகள் தலையில் கைவைத்து “நான் கிளம்பட்டுமாடா”என்று கேட்க, சைந்துவிற்கு பக்கென்று இருந்தது. ‘கிளம்ப போறாங்களா. அப்போ நான்….. இனி இதுதான் என் வீடா. நான் இங்கதான் இருக்கணுமா’ என்று பயந்தவள் கண்கள் கலங்கியது. கூடவே அவள் மனம் உண்மையை புரிந்து கொண்டதில் வாடியது.
மஞ்சு மகள் கண்ணீரை கண்டு கலங்கி போனவர் “என்னடா? என்ன ஆச்சு? எதுக்கு அழற?” என்க, அவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியவள் பின் “நீங்க எங்கம்மா போறீங்க. இங்கயே என்கூட இருங்க. இல்லை என்னையும் கூட்டி போங்க” என்று அழ, ராதிகாவிற்கு புரிந்து போனது.அவரும் இது போல் ஒரு சூழ்நிலையை கடந்து வந்தவர்தானே.தாய் மகளுக்கு தனிமை கொடுக்க எண்ணி “மஞ்சு நீங்க பேசிட்டு இருங்க, நான் மாத்திரை போட மறந்துட்டேன். போட்டுட்டு வரேன்”என்றுவிட்டு அவர் அறைக்கு சென்றுவிட்டார்.
மஞ்சு, “என்ன சைந்து இது சின்ன பிள்ளையாட்டம்.எதுக்கு அழற. அம்மா என்ன நாலு மணி நேரம், அஞ்சு மணி நேரம் ட்ராவல் பண்ற ஊருக்கா போறேன்.இந்தா பக்கத்துல இருக்குது வீடு.ஒரு காம்பவுண்ட் தாண்டுனா அடுத்த வீடு.இங்கதானே இருக்கேன்.பாரு ராதி நம்ம ரெண்டு பேரும் பேசணுங்கிறதுக்காக விட்டுட்டு போயிருக்காங்க.இது மாதிரி ஒரு மாமியார் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்.தேவையில்லாம கண்டதை நினைச்சு கஷ்டப்படாத சரியா”என்று மகள் கண்ணீரை மஞ்சு துடைத்து விட,அவளும் சிறு பிள்ளை போல் தலையை சம்மதமாக ஆட்டினாள்.
மஞ்சு, “சரிடா. இந்தா பாலை எடுத்துட்டு உள்ள போ.மாப்பிள்ளை உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாரு”என்று சொல்ல சைந்துவின் முகம் மீண்டும் கலவரமாக மாறியது.அதை புரிந்து கொண்ட மஞ்சு “சைந்து என்னடா ஏன் இப்படி முழிக்கற.இப்பவே எல்லாம் நடக்கணும்னு,நான் சொல்லலடா,நீங்க ரெண்டு பேரும் நல்லா பேசி பழகுங்க, ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கோங்க, அப்புறம் நடக்கறது எல்லாம் தன்னால நடக்கும்.அதுக்கு முதல்ல உன்னோட தேவையில்லாத பயத்தை மூட்டை கட்டி ஓரமா எடுத்து வைக்கனும்.மாப்பிள்ளை ஒன்னும் பேய் இல்ல, அவர் கூட நல்லா பேசு.நீ ஒன்னும் சின்ன புள்ள இல்ல, புரிஞ்சுக்குவன்னு நினைக்கறேன்.இதுக்கு மேல நான் சொல்ல ஒன்னும் இல்ல”என்க,
சைந்தவி புரிந்தது என்னும் விதமாக தலையசைத்தாள். “சரிடா இப்ப நான் கிளம்பட்டுமா. அப்பா மாத்திரை போட்டாரா என்னன்னு தெரியல”என்று சொல்ல, அவளும் பெரு மூச்சுடன் “சரி……”என்றிருந்தாள்.
ராதிகா அப்போது அங்கு வந்தார்.“என்ன அம்மாவும் பொண்ணும் பேசிட்டீங்களா”என்று கேட்க, இருவரும் சிரித்துக்கொண்டே ‘ஆமாம்’என்பது போல் தலையசைத்தனர்.
“என்னடா புது இடத்துக்கு வந்த மாதிரி அழுதுட்டு இருக்க.நீ என்ன குழந்தையா?”என்க, சைந்தவி மென்மையாக சிரித்து வைத்தாள்.
இருவரும் சைந்தவியை சூர்யா அறைக்கு போக சொல்ல, அவளும் பல யோசனைகளோடு அறைக்குள் சென்றாள்.அவள் உள்ளே சென்ற போது அலங்காரம் எதுவும் இல்லாத அவனது படுக்கையே வரவேற்றது. அது ஏனோ அவள் மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.மனம் முழுதும் கவலை சூழ்ந்திருக்க இவனிடம் தனியாக பேச வேண்டுமா என்ற பயமும் சேர்ந்து கொள்ள அவளுக்கு கண்கள் தூக்கத்தில் சுழன்றது.
ஆம், சைந்து கவலையாக இருந்தால் அவளுக்கு தூக்கம் அளவுக்கு அதிகமாக வரும் கண்கள் தூக்கத்துக்கு கெஞ்ச,இவன்கிட்ட பேசலாம்னு பார்த்தா நமக்கு தூக்கம் இப்படி வருதே. இவர் எங்க போனாரு என்று எட்டி பார்த்தாள்.அவனோ பால்கனியில் நின்று யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.
ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாதவள் ‘சரி அவர் பேசிட்டு வரட்டும், நாம தூங்கலாம்’என்றவள் படுத்தவுடன் தூங்கிவிட்டாள்.
சூர்யா பேசிவிட்டு வந்து சைந்து தூங்குவதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தவன் ‘என்ன இவ இப்படி தூங்கறா,நாம பேசலாம்னு நினைச்சோமே’என்று யோசித்தவன் பின் சரி காலைல பேசிக்கலாம் என்ற முடிவோடு அங்கிருந்த சோபாவில் படுத்தான். மனம் ஏதேதோ யோசனையில் இருக்க ஆணவனின் பார்வை பாவையவள் முகத்தில் பதிய அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான்.
இரவு விளக்கு வெளிச்சத்தில் தேவதையாக உறங்கியவளை பார்த்தவன் மனதில் ‘நீ என் மனைவி.இது எப்போவும் மாறாது.என் வாழ்க்கை முழுமைக்கும் இனி நீதான்…. நீமட்டும்தான்…. ஆனா… எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு. தங்கச்சிக்கு ப்ரொபோஸ்பண்ண எல்லாம் தயார்பண்ணிட்டு, அக்காவை கல்யாணம் செய்துக்கிட்ட ஒரே ஆள் நானாதான் இருப்பேன். அவ என் வாழ்க்கைல வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அதுக்கு பேர் காதல்னு நானே நினைச்சுக்கிட்டேன்.அந்த நினைப்பே என் மனைவியான உனக்கு துரோகம் பண்ணிட்ட போல, ஒரு எண்ணம் எனக்குள்ள இருக்கு. அதனால நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கவும், என் மனசை நான் புரிஞ்சுக்கவும் எனக்கு கொஞ்சம் டைம் வேணும். அதுவரை உன்னை பார்க்கவும், ரசிக்கவும், காதலிக்கவும் கத்துக்கறேன்’என்று தனக்குள் பேசிக்கொண்டவன் அப்படியே தூங்க ஆரம்பித்தான்.
பவி தன் அறையில் அழுது அழுது ஓய்ந்தவள், அப்படியே சாப்பிடாமல் தூங்கிவிட்டாள். ஆனால் அவள் மனம் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக முடிவெடுத்திருந்தது. அது இனி சூர்ய பிரகாஷ் அவள் வாழ்வில் இல்லை என்பதுதான்.
நேரமும் காலமும் யாருக்கும் காத்திருக்காது என்பது போல் காலை பொழுதும் அழகாக விடிந்தது. வழக்கம் போல் சீக்கிரமாக சூர்யாவிற்கு விழிப்பு வந்துவிட,சோபாவில் படுத்ததால் உடலில் ஏற்பட்ட வலியில் முகத்தை சுருக்கி கொண்டு எழுந்தவன்,கை, கால்களை நன்கு அசைத்து உடற்பயிற்சிபோல் செய்தவனின் பார்வை பெட்டில் இருந்தவளின் மேல் படிய மூச்சடைத்து போனான்.
சைந்தவி இரவு புடவையோடு படுத்திருக்க, நடு இரவில் நிம்மதியாக தூங்கவிடாமல் தொல்லையாக அங்கும் இங்கும் இழுக்கும் புடவையை கழட்டி வீசிவிட்டு எதா இருந்தாலும் காலைல பார்த்துக்கலாம் என்ற எண்ணத்தோடு மீண்டும் படுத்து தூங்கிவிட்டாள்.
சூர்யா இப்போது புடவை இல்லாமல் படுத்திருக்கும் அவன் மனையாளை கண்டுதான் திகைத்து போய் “ஹோ….. காட்….” என்று திகைத்து முகத்தை திருப்பி கொண்டான்.‘இவ என்ன எப்போ பாரு என் முன்னாடி இப்படியே இருக்கா. போர்வையை மேல வரை போர்த்தியாவது படுத்திருக்காளா பாரு. எழுந்த உடனே முதல்ல இனி சேரி கட்டாதன்னு இவகிட்ட சொல்லணும்’என்று முணு முணுத்தவன் முதல்ல இங்க இருந்து வெளிய போகலாம் என்று நினைத்தவன், அறையைவிட்டு வெளியில் சென்று தன் வீட்டை சுற்றி ஓடி, காலை நேர உடற்பயிற்சிகள் அனைத்தும் செய்து வேர்த்து விறு விறுத்து வீட்டின் உள்ளே வர, ராதிகா அவனுக்காக காத்திருந்தார்.
“எழுந்துட்டியா கண்ணா. சைந்து எங்க”என்றவர் கேட்க, அவனோ அவரை புரியாமல் பார்த்து “சைந்துவா…. யாருமா அது” என்றான்.அவரோ அவனை கோபமாக பார்த்து “ஏன்டா பொண்டாட்டி பேர் கூடவா இன்னும் நீ தெரிஞ்சுக்கல”என்று கேட்க,அவனுக்கு அப்பொழுதுதான் அவள் பெயரே தெரிந்தது. இருந்தாலும் தாயிடம் அதை காட்டிக்கொள்ளாமல் “ம்ம்….. அவ என்கிட்ட நைட் வேற பேரு சொன்னா. நீங்க வேற பேர் சொல்றீங்க” என்று தாயின் ஓட்டை வாயைபற்றி தெரிந்தவன் அவரிடமே போட்டு வாங்க, அவன் நினைத்தது போலவே அவன் தாயும் சிரிப்புடன் “ஆமா கண்ணா அவ பேரு சைந்தவி. நாங்க அதை சுருக்கி சைந்துனு கூப்பிடுவோம். அதே பழக்கத்துல இப்போ உன்கிட்டயும் அப்படி கேட்டுட்டேன். சரி அதை விடு அவ எழுந்துட்டாளா” என்றவர் கேட்க, அவனோ “இப்போதான்ம்மா நான் வெளிய இருந்து உள்ள வரேன். ரூம்க்கு போய் பார்த்தாதான் எனக்கு தெரியும்”என்றவன் அறை நோக்கி செல்ல, அவரும் “சரிப்பா. இன்னைக்கு மறு வீடு அழைக்க மஞ்சு வருவாங்க. சீக்கிரம் அவளை குளிச்சு ரெடி ஆக சொல்லு”என்றார்.
தாய் சொல்வதை கேட்டு தன் நடையை நிறுத்திய சூர்யா “ம்மா… என்ன விளையாடறீங்களா. என்னால எங்கயும் போக முடியாது. டெல்லி மீட்டிங் சம்மந்தமான பைல நான் இன்னைக்கு மீட்டிங்ல சம்மிட் பண்ணனும். நான் எங்கயும் வர முடியாது”என்றான்.
ராதிகா அவனை இடுப்பில் கை வைத்து முறைத்தவர் “ஏன்டா உனக்கே இது ஓவரா தெரியல. இந்த காம்பவுண்ட் தாண்டி அடுத்த வீடு உன் மாமியார் வீடு. இங்க வர உன்னால முடியும்னா அங்கேயும் வர முடியும். உனக்கு வேலை இருக்கும்னு நான் சொல்லிட்டேன். அதுக்கு அவங்க மதிய சாப்பிட வந்துட்டா போதும்னு சொல்லிட்டாங்க.அதனால ஓவரா பண்ணாம வந்து சேரு”என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் புகுந்து கொள்ள, அவனோ “ம்மா…” என்று பற்களை கடித்தான். அவரோ “மணியை பாரு ராசா….. அப்புறம் கத்திக்கலாம்…”என்க, மணியை பார்த்தவன் நேரமாவதை உணர்ந்து தன் அறை நோக்கி ஓடினான்.
வேகமாக உள்ளே வந்தவன் அங்கு சைந்து இன்னும் எழாமல் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து ‘இவ லேடி கும்பகர்ணியா இருப்பா போல’ என்று நினைத்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான் .
சூர்யா குளித்து முடித்து யூனிஃபார்ம் அணிந்து தயாரான பின்பும் அவள் எழாமல் இருக்க, இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது. கீழே சென்றால் தாய் இவளைதான் முதலில் கேட்பார்.அதற்கு இவளை எழுப்பி கீழே அனுப்பினாள்தான் சரி என்று நினைத்தவன், மனைவி இருக்கும் நிலையை யோசித்து அவள் அருகில் செல்லாமல் ‘அம்மா என்னமோ பேரு சொன்னாங்களே,என்ன அது……ம்ம்ம்ம்….. நியாபகம் வந்துருச்சு.சைந்து….’என்று அவள் பெயரை நினைவு கூர்ந்தவன் தொலைவில் நின்றே “சைந்து…..சைந்து….”என்று அழைக்க,அவளோ காது கேளாதவள் போல் நன்றாக உறங்கி கொண்டே இருந்தாள்.நேரம் வேறு சென்று கொண்டே இருக்க,கடுப்பானவன் அவள் நிலையை எல்லாம் கண்டு கொள்ளாமல் அருகில் சென்று தோளை பிடித்து உளுக்கி “சைந்து……”என்று கத்த, அதில் உறக்கம் பாதி கலைந்தவள் “என்னடி பாவி……”என்று கண்களை தேய்த்து விழிக்க,அவள் அருகில் நெருங்கி நின்றிருந்த சூர்யாவை கண்டு அதிர்ந்து “ஆ……” என்று கத்தினாள்.
சைந்தவி கத்தலில் அரண்டு போன சூர்யா அவளிடம் இருந்து விலகி சோபா அருகில் போய் நின்று கொள்ள, அப்போதுதான் அவன் யூனிஃபார்மை கவனித்தவள் கண்ணில் கலவரத்துடன் வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து போலீஸ் போல் சல்யூட் அடித்தவள் “கு…. கு….குட்மார்னிங் போலீஸ்கார்” என்று சொல்ல,அவளைவிசித்திரமாக பார்த்தவன் பார்வை பின் ரசனை பார்வையாக மாறியது.
சற்று நேரம் தன்னை மறந்து நின்றவன் பின் பிடரியை கோதி கண்கள் அலைப்புற திரும்பி கொண்டான்.சைந்துவோ ‘இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த போலிஸ்கார் மூஞ்ச திருப்பறார். குட் மார்னிங் சொன்னது ஒரு குத்தமா’ என்று நினைத்து கொண்டு நிற்க,
தொண்டையை செருமிய சூர்யா “இன்னும் எவ்ளோ நேரம் இதே போஸ்ல நிற்க போற’என்று கேட்க, அவளோ புரியாமல் ‘என்ன போஸ் குட் மார்னிங்தானே சொன்னோம்…’என்று மண்டையை சொரிந்து கொண்டே திரும்பியவள் எதிரில் இருந்த கண்ணாடியில் தான் இருக்கும் நிலையை பார்த்து பதறி போய் பெட்டில் கிடந்த போர்வையை எடுத்து தன்னை சுற்றிக்கொண்டவள் பயத்துடன் யார் நீங்க?.நான் எப்படி இங்க வந்தேன்? என்னை கடத்திட்டீங்களா? என்னை என்ன பண்ணுனீங்க? என்னோட சேரி எங்க? என்று பல கேள்வி கேட்க, அவனோ அவளை முறைத்து கொண்டு நின்றிருந்தான்.
அவன் முறைப்பை கண்டவள் மனதில் ஜெர்க் ஆகி ‘என்ன தப்பு பண்ணிட்டு இப்படி முறைச்சுகிட்டு நிக்கிறான்.ஆமா இவன் எதுக்கு நம்மள கடத்த போறான்’என்றவள் மூளையை கசக்கி யோசிக்க துவங்கும் சமயம் காதில் கதவு தட்டும் சத்தம் கேட்டது.கூடவே “கண்ணா…….” என்ற ராதிகாவின் குரல் கேட்க, அப்போதுதான் அவளுக்கு நேற்று திருமணம் ஆனதே நினைவு வந்தது.
‘அட கடவுளே இந்த போலீஸ்கார் நம்ம புருஷனாச்சே.இது நியாபகம் இல்லாம தூக்க கலக்கத்துல கண்டதை உளறிட்டேனே. இப்போ என்ன சொல்ல’என்றவள் யோசிக்கும்போதே கதவு மீண்டும் தட்டப்பட‘ஆஹா இவன்கிட்ட இருந்து தப்பிக்க ஒளி வந்துவிட்டது, வழி வந்துவிட்டது’ என்று நினைத்தவள் வேகமாக கதவை திறக்க சென்றாள்.
சூர்யா அவள் எண்ணத்தை புரிந்து கொண்டவன் ‘இப்படியே சென்று அவள் கதவை திறந்தால் தாய் தன்னைப்பற்றி என்ன நினைப்பார் என்று பயந்தவன் அவள் பின்னோடு சென்று கையை இழுக்க போக, அவன் கெட்ட நேரம் போர்வை அவன் கையோடு வந்தது.அதே நேரம் அவள் கதவவும் திறக்கப்பட. மகன் கையில் போர்வையுடன் நிற்பதையும், மருமகள் நிற்கும் நிலையையும் பார்த்து அதிர்ந்து போன ராதிகா என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க, சைந்தவியோ அவர் முன் அப்படி நிற்க முடியாமல் தடுமாறி பின் தன்னவன்தானே என்ற எண்ணம் தோன்றியதோ என்னவோ சூர்யா பின்னால் போய் நின்று தன்னை மறைத்து கொண்டாள்.
ராதிகா சங்கடமாக நிற்க,மூவருக்குமே அந்த சூழ்நிலையை எப்படி கையால்வது என்று தெரியாமல் விழித்தனர். முதலில் தன்னை சமாளித்து கொண்ட சூர்யா “என்னம்மா எதுக்கு கதவு தட்டுனீங்க”என்று சாதாரணம் போல் கேட்க, அவரோ “இல்லப்பா….. சைந்து சத்தம்….. ம்கூம்…. ஒன்னும் இல்ல. டைம் ஆச்சு உன்னை சாப்பிட காணோமேனு கூப்பிட வந்தேன்”என்றவர் உளற,அவனோ “நீங்க போங்கம்மா நான் வரேன்” என்றான்.அவரும் விட்டால் போதும் என்று ஓடிவிட்டார். அவரும்தான் என்ன செய்வார். மகன் மருமகளை திட்டிவிட்டானோ, எதுவும் சொல்லிவிட்டானோ அதனால்தான் அவள் கத்துகிறாளோ என்று பதறி ஓடி வந்தவர் அவர்கள் நின்றிருந்த நிலையை கண்டு வாயடைத்துதான் போனார்.
தாய் சென்றவுடன் மீண்டும் கதவை மூடியவன் “போய் சீக்கிரம் அந்த சேரிய கட்டு” என்று சொல்ல,வேகமாக சென்று ஏனோ தானோவென்று உடலில் சுற்றி கொண்டவள் பயத்துடன் “திரும்பலாம் போலிஸ்கார்”என்று சொல்ல, “ம்ம்ம்……”என்று அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் “நீ லூசா…. இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா….”என்று கேட்க, முதலில் புரியாமல் விழித்தவள் பின் கோபமாக “நான் டாக்டரா பிராக்டிஸ்ல இருக்கேன் போலிஸ்கார். பார்த்து பேசுங்க” என்று மூக்கு நுனி சிவக்க பேசியவளை புருவம் உயர்த்தி பார்த்தவன் “நீ டாக்டரா”என்க, அவளும் “ஆமாம்” என்று தலையசைத்தாள்.
ஒரு டாக்டரா இருந்துட்டு ஒரு விஷயத்தை யோசிச்சு பண்ணனும்னு கூட உனக்கு தெரியாதா”என்க, அவளோ “ஆமா பூதம் மாதிரி காக்கி சட்டைல நின்னா நான் எங்க யோசிக்க’என்று மனதில் பேசி கொண்டவள் வெளியில் “சாரி நான் ஏதோ பயத்துல….”என்று இழுத்தவளை பார்த்து உக்கிரமாக முறைத்தவன் “என்னை பார்த்தா உனக்கு என்ன கடத்தல்காரன் மாதிரி இல்ல ரேபிஸ்ட் மாதிரி தெரியுதா. அன்னைக்கு நைட் முழுக்க என்கூடதானே இருந்த. என்னோட நிழல் உன் மேலபட்டுதா. இப்போ எதுக்கு இவ்ளோ சீன் போடற”என்று காட்டமாக கேட்க, அவளோ வாய்குள்ளேயே ‘காக்கி சட்டை போட்ட பூச்சாண்டி’ என்று முணு முணுத்தாள்.
சூர்யா, “எதா இருந்தாலும் சத்தமா சொல்லு”என்க, அவளோ “இல்ல போலிஸ்கார் அன்னைக்கு நீங்க இந்த காக்கி டிரஸ்ல இல்ல. அதனால பயம் இல்ல. இன்னைக்கு இந்த டிரஸ்ல இருக்கவும் பயம் வந்துடுச்சு”என்று சொல்ல, அவனோ அவளை புரியாமல் பார்த்து “என்ன ட்ரெஸ்……” என்றவன் யோசிக்கும்போதே போன் மணி அடிக்க எடுத்து பார்த்தவன் தலையில் அடித்து கொண்டு “சரி எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பறேன். மதியம் லஞ்ச்க்கு வரேன் அம்மாட்ட சொல்லிடு”என்றவன் “ஹலோ….. ஹான் நான் வந்துட்டே இருக்கேன்”என்று பேசியவாறு சென்றுவிட்டான்.
சைந்தவி, ‘என்ன நம்ம பேசிட்டு இருக்கும்போதே போய்ட்டாரு சரி வேலை இருக்குன்னாரே போய் பார்க்கட்டும் நாம போய் குளிப்போம். வெளிய போய் ராதி ஆண்ட்டிய எப்படி பேஸ் பண்றதுனு வேற தெரியல.என்னடி சைந்து இப்படி போய் அவங்க முன்னாடி நின்னுருக்க என்று புலம்பியவள் போன் அடிக்க அதை எடுத்து காதில் வைத்தாள் மஞ்சு அந்த பக்கம் “இன்னும் நீ எழலையா” என்று ஹை பிச்சில் கத்த, “இ….. இ….இதோ எந்திரிச்சுட்டேன். குளிக்க போய்ட்டேன்ம” என்று குளிக்கயலறைக்கு ஓடினாள்.