Advertisement

அத்தியாயம் -9

மஞ்சு மகளை தரதரவென இழுத்துச் கொண்டு மணமகள் அறைக்குள் சென்று,தன் எதிரில் நிற்க வைக்க, மகளோ அவரை மிரட்சியாக பார்த்து கொண்டிருந்தாள்.

சைந்து,“ம்மா….. ப்ளீஸ். இவ்ளோ அவசரமா இந்த கல்யாணம் நடக்கணுமா. வேண்டாம்மா. எல்லாத்தையும் நிறுத்துங்க. என்னோட விருப்பம்தான் முக்கியம்னு சொன்னீங்கல்ல. ப்ளீஸ்மா. என்னை புரிஞ்சுக்கோங்க”என்று அழுத மகளை தானும் அணைத்து கொண்டு கண்ணீர் விட்டவர் “இங்க பாரு சைந்து அம்மா உனக்கு கெடுதல்பண்ணுவேன்னு நினைக்கிறியாடா.ஒரு பொண்ணுக்கு கல்யாணம் மேடை வரை வந்து நின்னா, ஊர் உலகத்துல என்னென்ன பேசுவாங்க தெரியுமா”.

சைந்து, “அம்மா அந்த ஊர் உலகம் ஒன்னும் கல்யாண வாழ்க்கையை வாழ போறது இல்லம்மா. இது என் வாழ்க்கை. நான் யாரை வேண்டான்னு சொன்னேனோ அவங்களையே என் வாழ்க்கைக்குள்ள கொண்டுவர நினைக்காதீங்கம்மா. ஊர் ஆயிரம் பேசும். அதுக்காக நாம வாழ முடியாதும்மா ப்ளீஸ்…”என்று அழ,

உடனே மகளை தன்னில் இருந்து பிரித்தவர் “சைந்து…. இன்னைக்கு இந்த கல்யாணம் நின்னுச்சுன்னா அத உன் அம்மாவால தாங்க முடியாது.” என்று சொல்ல,சைந்தவியோ “மா அதுக்காக அவரை……அ… அவர்….” என்று இழுக்க,

மஞ்சுவே பேச ஆரம்பித்தார் “ஆமா அவர் போலீஸ்தான்.ஆனா நல்லவர். எனக்கு அந்த பையனைப்பத்தி நல்லா தெரியும்.இப்ப நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சுதான் ஆகணும்” என்றார் அழுத்தமாக.

சைந்தவியும் அதே அழுத்தத்துடன் “முடியாதுமா….. “என்றுவிட்டு அவரிடம் இருந்து விலகி சென்று நிற்க,அவள் எதிரில் கோபமாக வந்து நின்றவர் “இப்ப நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலனா, உன் அம்மாவ நீ உயிரோட பார்க்க முடியாது”என்று சொல்ல,அந்த வார்த்தைகள் அனைத்தும் அப்போதுதான் அறையின் உள்ளே வந்த குமார், பவியின் காதுகளிலும் விழ, இருவருமே துடித்து போயினர்.

குமார்,”மஞ்சு…என்ன பேச்சு பேசற”என்று கோவமாக உள்ளே வர.

மஞ்சுவோ “வேற என்னை என்னங்க சொல்ல சொல்லுறீங்க.இதுக்கப்புறம் நம்ம பொண்ண யார் கல்யாணம் பண்ணிக்குவா.கல்யாணம் கடைசி நேரத்துல நின்னுடுச்சு. மாப்பிள்ளை வீட்லதான் நிறுத்துனாங்க,காரணம் இல்லாம நிறுத்துவாங்களா, பொண்ணு மேல எதாவது குறை இருக்கும்னு. எல்லாரும் கண்ணை மூடிட்டு என் பொண்ணைதானே குறை சொல்லுவாங்க”என்று கூற, குமாரோ “என்ன பேசற மஞ்சு பேசறவங்களுக்கு நாம பதில் சொல்லிக்கலாம். அதுக்காக சைந்து விருப்பம் இல்லாம இந்த கல்யாணம் நடக்கறது எனக்கு என்னமோ சரியாப்படல, அவசரத்துல எதாவது பண்ணிட்டு அவகாசத்துல உட்கார்ந்து அழற மாதிரி ஆகிட கூடாது நம்ம நிலைமை”என்று மனைவிக்கு பொறுமையாக எடுத்து சொன்னார்.

மஞ்சு, “என்ன பேசுறீங்க. பேசற எல்லார்கிட்டயும் நாம போய் விளக்கம் சொல்ல முடியுமா”என்று கேட்க, குமாருக்கு மனைவி சொல்வது புரிந்தது இருந்தாலும்….. என்று அவர் ஆழ் மனம் உறுத்த எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றார்.

மஞ்சு, “ஏன் அமைதியா இருக்கீங்க பதில் சொல்லுங்க. சரி அதுக்கு பதில் சொல்ல வேண்டாம். உங்களுக்கு தெரிஞ்சு இப்படி நின்னு போன கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம நல்லபடியா கல்யாணம் நடந்ததா நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? சொல்லுங்க. இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. நான் இப்போவே இந்த கல்யாணத்தை நிறுத்தறேன்”என்றவர் பிடிவாதமாக சொல்ல, குமாரிடம் அமைதியே பதிலாக வந்தது.

சைந்து இதயம் பட படவென அடித்து கொள்ள, இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று புரியாமல் நின்று கொண்டிருந்த சமயம் தங்கை கண்ணில் பட, அவள் சொன்னாவாவது தாய் கேட்பாரோ என்று அவளிடம் செல்ல, அவள் கையை தடுத்து பிடித்தார் மஞ்சு.

“சைந்து இப்ப எனக்கு இத தவிர வேற வழி தெரியல. சூர்யா நல்ல பையன், ராதியும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க.வேற எந்த பிரச்சனையும் இல்ல.நம்ம வீட்டு பக்கத்திலேயே இருப்ப.நீ பக்கத்துலயே எங்க கண்ணு முன்னாடி இருப்படா,கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுடா”என்றவர் கணவரிடம் “ஏங்க நீங்களாவது சொல்லுங்க. இந்த கல்யாணத்தை நிறுத்த அந்த பையன்கிட்ட இதுதான் குறைனு எதாவது ஒரு காரணம் சொல்லுங்க. நான் ஒத்துக்கறேன்” என்றார்.

குமாரோ மகள் விருப்பம் தான் தன் விருப்பம் என்று இருக்கும் தந்தை, எனவே எப்படியாவது மனைவியை சமாதானப்படுத்த எண்ணி “ஏன் மஞ்சு இப்படி பண்ற.பொண்ணு மனச புரிஞ்சுக்க ட்ரை பண்ணு.எதுக்கு இந்த பிடிவாதம்”என்று கேட்க, மஞ்சு கோபத்துடன் “நீங்க ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க. கல்யாண மேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னு போச்சுன்னா அந்த பொண்ணுக்கு எவ்வளவு அவ பேரு வரும்னு உங்களுக்கு தெரியுமா?ஒரு அம்மாவா அந்த அவமானம் என் பொண்ணுக்கு வர கூடாதுனு நான் நினைக்கறேன்”என்று பிடிவாதமாக நிற்க, சைந்தவிக்கு புரிந்து போனது. இனி யார் என்ன சொன்னாலும் தாய் தன் முடிவை மாற்றி கொள்ளமாட்டார் என்று,

பவி தன் காதலை விட முடியாது என்ற சுயநலம் இருந்தாலும்,அக்கா வாழ்க்கை என்று ஒரு மனம் யோசிக்க,மற்றொரு மனமோ அதான் அவளுக்கு விருப்பம் இல்லைல. போ போய் அம்மாட்ட பேசு’என்று சொல்ல,

மஞ்சுவிடம் தயக்கமாக சென்றவள் “அம்மா.. நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.ஆனா அக்கா விருப்பம்….” என்று இழுக்க,அவள் பேச்சை கைநீட்டி தடுத்தவர் “இப்ப, இன்னைக்கு இந்த கல்யாணம் நடக்கணும்.நடந்தே ஆகணும்”என்று அழுத்தமாக சொன்னவர் “என்னை சமாதானப்படுத்துவதை விட்டுட்டு போய் உன் அக்காகிட்ட பேசு”என்றுவிட்டு திரும்பி நின்று கொள்ள,சைந்தவியோ என்ன செய்வது என்று புரியாமல் கைகளை பிசைந்து பின் பெரு மூச்சுடன் “சரிம்மா நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கறேன்”என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.

அக்காவின் வார்த்தைகளை கேட்ட நிமிடம் பவி கண்கள் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரை உதிர்த்தது.தன் துக்கத்தை வெளியே சொல்லி ஆறுதல்கூட அடைய முடியாமல் திணறியவள் இதயத்தை யாரோ கசக்கி பிழிந்ததை போல் வலி ஏற்பட, கத்தி அழ தோன்றிய உணர்வை, வாயில் கை வைத்து அடக்கி கொண்டவள் மனம் காதல் வலியில் கதற துவங்கியது.

பவி அழுவதை பார்த்த சைந்து, தங்கை தனக்காகதான் அழுகிறாள் என்று நினைத்து கொண்டு, அவளை ஆறுதலாக அணைக்க, இதற்கு மேல் இங்கு இருந்தால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாது என்று எண்ணியவள் சைந்துவை தன்னிடம் இருந்து விலக்கி “ஒன்னும்…இல்லக்கா…க…கவலைப்படாத…. நானும் கா….. ம்கூம்…. சூர்யா சாரபத்தி கேள்விபட்டிருக்கேன். ரொ… ரொம்ப…ரொம்ப…. நல்லவர்.சி.. சின்ன புள்ள மாதிரி யோசிச்சுட்டு நல்ல வாழ்க்கையை விட்டுறாத”என்றவள் பின் “நான் போய் எண்ட்ரன்ஸ்ல இருக்க பேர அழிச்சுட்டு வரேன்”என்றுவிட்டு வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறி, கைகளை கொண்டு வாயை மூடி மொட்டை மாடி நோக்கி ஓடினாள்.

அதே நேரம் மணமகன் அறையில் சூர்யா தாயை முறைத்து கொண்டு நின்றிருந்தான். “என்ன சூர்யா அம்மா மேல ஏதாவது கோபமா”என்றவர் கேட்க,தாயை கோபமாக பார்த்தவன் “என்கிட்ட ஒரு வார்த்தைகூட கேட்கலையேம்மா”என்று சொல்ல, அவரோ மகனை விக்கித்து போய் பார்த்தார்.

ராதிகா, “என்னப்பா சொல்ற. உன்கிட்ட கேட்கணுமா? ஓ……நான் என்னோட விருப்பம்தான் உன் விருப்பம்னு நினைச்சேன். அப்படி இல்லையாப்பா”என்று உடைந்து போன குரலில் கேட்க, தாய் வருத்தப்படுவதை கண்டு பொறுக்காதவன், “அப்படி இல்லம்மா. எனக்கு…. இ….இப்போதைக்கு மேரேஜ் பண்ணிக்கற ஐடியா இல்ல. திடிர்னு நீங்க இப்படி சொல்லவும்…..”என்ற மகனை கண்டு அப்போதுதான் நிம்மதியாக உணர்ந்தவர் “சைந்தவி நல்ல பொண்ணுபா.எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்.ஆரம்பத்தில இருந்தே அந்த பொண்ண உனக்கு முடிக்கணும்னுதான் எனக்கு ஆசை. ஆனா….. இடைல பல தடங்கல்கள், அப்புறம் சந்தர்ப்ப சூழ்நிலையால தடைபட்டுச்சு. இப்போ எல்லாம் சரியா போச்சு.இந்த கல்யாணம் நடந்துச்சுன்னா, என்னைவிட சந்தோஷப்படுறவங்க யாரும் இருக்க முடியாது”என்றவர் மகனின் தெளிவில்லாத முகத்தை பார்த்து, அவன் அருகில் சென்று கன்னத்தில் கை வைத்தவர் “கண்ணா ஒரு அம்மாவா,நான் இது வரை உன்கிட்ட எதுவும் கேட்டது இல்லை.இப்ப கேட்கிறேன்.எனக்காக ஒரு விஷயம் நீ பண்ணனும் நினைச்சேனா,அந்த பொண்ண கல்யாணம்பண்ணு”என்ற தாயின் வார்த்தையை மீறவும் முடியாமல், தன்னுள் இருப்பது காதல்தானா என்று, தான் முழுமையாக புரிந்து கொள்வதற்கு முன்பே அந்த உறவுக்கு முடிவுக்கு வந்ததை எண்ணி வருந்தியவன் முடியை கைகளால் கோதி சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறி கொண்டு இருந்தான். அவன் கண் முன்னால் காக்கி என்று கள்ளமில்லா சிரிப்புடன் பவி வந்து நிற்க, கண்களை இறுக மூடியவன் தாய்க்கு என்ன பதில் செல்வது என்று யோசனையாக பார்க்க, அவரோ மகனைதான் கண்ணில் ஆர்வம் மின்ன பார்த்து கொண்டிருந்தார்.

இருந்தாலும் கடைசி முயற்சியாக தாயிடம் பேசலாம் என்று நினைத்தவன் “ம்மா….. இப்போ இந்த கல்யாணம் வேண்டாம்மா. புரிஞ்சுக்கோங்க” என்று கெஞ்சலாக கேட்க, அவனை அழுத்தமாக பார்த்தவர் “சரிப்பா. அப்புறம் உன் இஷ்டம். ஆனா இனி அந்த வீட்டுக்கு நான் வர மாட்டேன்”என்று சொல்லி அறையைவிட்டு வெளியேற போக, அவரை போக விடாமல் முன்னால் வந்து நின்றவன் “என்னம்மா. இந்த கல்யாணத்துக்கும் நீங்க நம்ம வீட்டுக்கு வராததுக்கும் என்ன சம்மந்தம்”என்று பொறுமையின்றி கேட்டான்.

ராதிகா, “ஆமாப்பா. நீங்க பெரிய மனுஷன் ஆகிட்டீங்க. எல்லா முடிவும் நீங்க தனியா எடுக்கற அளவு ஆகி போச்சு. இனி அந்த வீட்ல எனக்கு என்ன வேலை. ஏதோ பெருசா சொல்லிட்டேன் என் விருப்பம்தான் என் பையன் விருப்பம்னு. அது எல்லாம் உன்னை எங்க பாதிக்க போகுது. நீ உன் விருப்பபடி பண்ணு. நான் என்னுடைய புருஷன் வாழ்ந்த ஊருக்கே போறேன்”என்று வெளியே செல்ல, “சரிம்மா. நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கறேன்” என்றிருந்தான் மனமே இல்லாமல்,தாயை சமாளிக்க.

இருவருடைய பெற்றோரும் சின்னவர்கள் சம்மதம் கிடைத்தவுடன் கலந்து பேசி , அன்றே அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தனர்.மீண்டும் அந்த மண்டபம் கலகலப்பாக மாறியது.

தாயிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்ற சூர்யா திரும்பி வரும்போது கையில் ஒரு கவருடன் வந்தான்.என்னவென்று கேட்ட தாயிடன் அதை கொடுத்தவன் “அந்த பொண்ண இந்த சேரி கட்டிட்டு வர சொல்லுங்க”என்றுவிட்டு தான் தயாராக சென்றுவிட்டான்.

ராதிகா கையில் கவருடன் வருவதை பார்த்த மஞ்சு புரியாமல் பார்க்க,அவரோ புன்னகையுடன் “இது என் மருமகளுக்கான முகூர்த்தப்புடவை. என் மகன்தான் அவசரமா போய் வாங்கிட்டு வந்தான்.இதை கட்டிட்டு வர சொல்லுங்கன்னு சொன்னான். இந்தாம்மா சைந்து இந்த புடவையை கட்டிட்டு வா”என்று முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் சொல்ல, தயக்கத்துடன் வாங்கி கொண்டாள் சைந்தவி.

சூர்யா பட்டு வேஷ்டி சட்டையில் தயாராகி மேடையில் வந்து அமர, சற்று நேரத்தில் சைந்தவியும் பிங்க் நிற பட்டில் சிலையாக வந்து அமர்ந்தாள். மங்கள வாத்தியங்கள் மீண்டும் இசைக்கப்பட, மாடியில் தனிமையில் அழுது கொண்டிருந்த பவியின் காதிலும் அந்த சத்தங்கள் கேட்டது.

“ஆஆஆஆ..,……”என்று அவ்வளவு நேரம் சத்தம் இல்லாமல் அழுதவள்,அடக்கமாட்டாமல் கத்த, அந்த சத்தம் மங்கள வாத்தியங்கள் சத்தத்தில் அடங்கி போனது.ஒருவரை தவிர. ஆம், கோபி பவியை தேடி கொண்டிருக்க, அவளது கத்தல் சத்தம் கேட்டு அங்கு சென்றான்.

மாடியில் காதல் தந்த வலியை தாங்க முடியாமல், சுருண்டு படுத்து அழுது கொண்டிருந்தாள் பவித்ரா.

“அக்கா……”என்று அழைத்தவன் பவி அருகில் செல்ல, உடனே எழுந்து அமர்ந்தவள் கண்ணீரை துடைத்து கொண்டு “ஒன்னும் இல்லடா சும்மா வேடிக்கை பார்க்க வந்தேன்.காத்து பயங்கரமா அடிக்கறதுல தூசு விழுந்துடுச்சு”என்று போலியாக புன்னகைக்க,

“என்கிட்டயே பொய் சொல்ற பாத்தியாக்கா. துக்கத்தை உனக்குள்ளேயே வச்சுக்காதக்கா…”என்று மேலும் பேச வந்தவனை சிரிப்புடன் பார்த்த பவி “என்னடா பெரிய மனுஷன் மாதிரி பேசுற. தேவையில்லாம யோசிக்காம வா கீழ போலாம். கல்யாணம் முடிஞ்சர போகுது. சைந்து என்னை காணோம்னு தேடுவா. நான் அங்க போறேன். நீ டைனிங் ரூம்க்கு போய் எனக்கும் உனக்கும் குலாப் ஜாமுன் நிறைய எடுத்து வை காலியாகிட போகுது”என்று சொல்லி செல்ல,

“அக்கா……”என்றழைத்தான் கோபி. என்ன என்று திரும்பியவளிடம் “முகத்தை நல்லா கழிவிட்டு போக்கா. அழுதது நல்லா தெரியுது. அப்புறம் இனி ஒரு தடவை இப்படி போலியா என்கிட்ட சிரிக்காத”என்று தொண்டையடைக்க சொல்லிவிட்டு கீழே சென்றுவிட்டான்.

பவி செல்லும் அவனையே வேதனையுடன் பார்த்தவள் பின் கீழே சென்று அழுது சிவந்திருந்த முகத்தில் நீர் அடித்து நன்றாக கழுவிவிட்டு, மேக்கப் போட்டு ஓரளவு அழுதது தெரியாத அளவு செய்தவள். மண மேடையின் அருகில் நின்று கண்களில் வலியுடன் திருமணத்தை பார்க்க துவங்கினாள்.

சூர்யா முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் ஐயர் சொன்ன மந்திரங்களை கடமையே கண்ணாக சொல்லி கொண்டிருந்தான். சைந்து அலைப்புறும் மனதுடன் அமர்ந்திருக்க,பவி தன் காதல் தன் முன்னாலேயே தவிடு பொடி ஆவதை தடுக்க முடியாத சூழ்நிலையில் வேதனையுடன் நின்றிருந்தாள்.

சூர்யா தன்னை ஒரு முறையாவது பார்ப்பானா, தன்னிடம் எதாவது சொல்ல நினைப்பானா என்று அவனையே ஏக்கமாக பவி பார்க்க, அவனோ அவள் இருந்த திசை பக்கம் கூட திரும்பவில்லை.உடனே ஒரு கசந்த புன்னகையை சிந்தியவள் ‘இனி அவர் எதுக்கு என்னை பார்க்கணும். முதல்லயே பார்க்க மாட்டாரு. நான்தான் பின்னாடியே சுத்துவேன்” என்று நினைத்தவளின் முகம் கசங்கி போனது.

சூர்யா ஐயர் சொன்ன அனைத்தையும் செய்தவன் முன் மங்கள நாண் நீட்டப்பட, அதையே ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன் பின் கண்களை மூடி ‘இவள்தான் என் மனைவி,என்னுடைய வாழ்க்கையின் இறுதி நாட்கள் வரை என்னுடன் வர போகிறவள். என் வாழ்க்கையில் இனி இவள் கரம் பிடித்துதான் செல்ல போகிறேன். இவள் மட்டும்தான் என் வாழ்க்கை’ என்று தனக்குள் சொல்லி கொண்டு மங்கள நாணை எடுத்து சைந்தவி கழுத்தில் கட்ட, அவன் கரங்களில் பட்டு தெரித்தது அவள் கண்ணீர்.

தாலி கட்டி முடித்த பின் அவள் கரம் மீது தன் கரத்தை வைத்த சூர்யா, கண்களை மூடி திறந்து அவளுக்கு ஆறுதல் அளிக்க, முதலில் அவனை திகைப்பாக பார்த்தவள் பின் அவன் கண்ணசைவை புரிந்து கொண்டாள். அந்த நிமிடம் ஏனோ சைந்து மனம் அமைதியானது.

அதன் பின்னான திருமண சடங்குகள் அனைத்தையும் முடித்து வீட்டிற்கு கிளம்பினர்.

சைந்தவியாக வீட்டைவிட்டு சென்றவள், சைந்தவி சூர்யபிரகாஷாக மாறி சூர்யா வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள்.அங்கு பூஜையறைக்கு சென்று விளக்கு ஏற்றி, பால், பழம் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் அமர்ந்துவிட்டு மஞ்சுவின் வீட்டிற்கு சென்றனர்.

பெண் வாழ்க்கை இதுதான் திருமணம் முடிந்த அடுத்த நிமிடம் பிறந்து வளர்ந்த வீடு அம்மா வீடாக மாறி போகிறது.

மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்க வீட்டின் மூத்த பெண்கள் பவியை தேடி பிடித்து இழுத்து வர, என்ன எதற்கு என்று புரியாமல் வந்தவள் முன் நின்றிருந்தவர்களை கண்டு அதிர்ந்து. இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்க என்று புரியாமல் முழிக்க, மஞ்சு மகள் கையில் ஆரத்தி தட்டை கொடுத்தார்.அதன் பின்னும் அப்படியே நின்றிருந்தவளின் கரத்தை பிடித்து மற்ற பெண்கள் சுற்ற இவளோ சாவி கொடுத்த பொம்மையாக அவர்கள் செய்வதை அப்படியே செய்தாள்.

சூர்யாவிற்கும் அந்த நிமிடம் சங்கடமாக இருக்க, பார்வையை திருப்பி கொண்டு நின்றிருந்தான். ஒரு வழியாக மணமக்கள் உள்ளே சென்று பால் பழம் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்க துவங்கினர்.

இனி இவர்கள் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.

அணைப்பாள்……

Advertisement