Advertisement

அத்தியாயம் -8

தாலி கட்டும் நேரத்தில் யாரது என்று மண்டபத்தில் இருந்த அனைவரும் சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்க்க மாப்பிள்ளையின் அப்பா கோபல்தான் அங்கு கோபமாக நின்றிருந்தார்.அவர் அருகில் சென்ற குமார் “என்ன ஆச்சு சம்பந்தி” என்று பதற்றமாக கேட்க, மஞ்சுவும் கணவருடன் வந்தார்.

இருவரையும் பார்த்த கோபால் “நடந்த உண்மைய மறைச்சு, எங்க தலைல அசிங்கத்தை கட்டலாம்னு பாக்குறீங்களா” என்றார், அறுவருப்பாக முகத்தை வைத்து கொண்டு.முதலில் அவரை புரியாமல் பார்த்த குமார் பின் அவர் சொன்ன வார்த்தையின் வீரியத்தில் கோபமாகி “சம்மந்தி வார்த்தைய அளந்து பேசுங்க. என்ன பேசுறீங்க. நாங்க எதை மறைச்சோம்னு சொல்றீங்க”என்க,

கோபலின் அருகில் வந்த அவர் மனைவி ராணி குமாரை கேவலமாக பார்த்து “இன்னும் எதுக்கு நடிக்கறீங்க. எங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சுடுச்சு”என்றார் எள்ளலாக.அப்போதும் அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று குமாரும், மஞ்சுவும் விழித்து கொண்டு இருந்தனர்.

அப்போது தாய் தந்தை அருகில் வந்த பவி கோபமாக “என்ன புருஷனும் பொண்டாட்டியும் பொடி வச்சு பேசுறீங்க.எதா இருந்தாலும் நேரா சொல்லுங்க.நாங்க எதையும் மறைக்கல. அப்படி மறைக்கனுங்கற அவசியமும் இல்ல.நாங்க எதாவது மறைக்கற மாதிரி உங்களுக்கு தோணுச்சுன்னா என்னன்னு நீங்களே சொல்லுங்க” என்று கத்த , மகள் கையை பிடித்து அழுத்தி அவள் பேச்சை நிறுத்த சொன்னார் மஞ்சு.அவர் செய்கையை எகத்தாளமாக பார்த்த ராணி “நீ பேசற மாதிரி பேசு. நான் தடுக்கற மாதிரி தடுக்கறேன்னு பேசி வச்சுட்டு வந்தீங்களோ”என்க,

பவி அவரை உறுத்து விழித்து “நாங்க என்னத்தை மறச்சோம்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே”என்று கேட்டாள்.இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்து கொண்டிருந்தாள் சைந்தவி.

ராணி,“சொல்றேன்மா சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. நீங்களும் கேளுங்க இவங்க பொண்ணோட லட்சணத்தை” என்று அங்கிருந்த கூட்டத்தை பார்த்து சொன்னவர் “நாளு நாளைக்கு முன்னாடி எவன் கூடையோ போய் நைட்டு ஃபுல்லா இருந்துட்டு,காலைல கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம அவன் சட்டையோடயே வீட்டுக்கு வந்திருக்கா, இவங்க பொண்ணு. இந்த விஷயத்தை இவங்க யாருமே எங்ககிட்ட சொல்லல. இப்படி ஒழுக்கம்னா என்னன்னே தெரியாத ஒருத்திய, நைட்டு எவன்கூடவோ போயிட்டு வந்தவள எங்க தலைல கட்ட பாக்குறாங்க” என்று கேவலமாக பேச,

குமார் குடும்பம் முழுதும் அதிர்ந்து போனது.மகள் நல்லபடியாக வீட்டிற்கு வந்ததை எண்ணி மகிழ்ந்திருந்தவர்களுக்கு, இப்படி ஓர் அவபெயர் வரும் என்று நினைக்கவே இல்லை.முதலில் தன்னை சமாளித்து கொண்ட குமார், “உண்மை தெரியாம வார்த்தையைவிடாதீங்க சம்மந்தி”என்றார் கோபமாக.

ராதிகாவும், சூர்யாவும் சரியாக ராணி பேசி கொண்டிருக்கும்போதுதான் மண்டபத்தின் உள்ளே வந்தனர்.அவர் பேசிய அனைத்தும் அவர்கள் காதிலும் விழ, என்ன இப்படி பேசுகிறார்கள் என்று எண்ண துவங்கினர்.

ராணி மேலும் மஞ்சுவிடம் “என்ன எங்களுக்கு எப்படி உண்மை தெரிஞ்சுதுனு பாக்குறீங்களா. நல்லவங்களுக்கு உதவ நாலு பேர் இருப்பாங்க. அந்த நாலு பேர்ல ஒருத்தராலதான் இன்னைக்கு என் பையன் வாழ்க்கை தப்பிச்சுது”என்று சொல்ல,

குமாரோ “இல்ல சம்மந்தி நீங்கதப்பா புரிஞ்சுக்கீட்டீங்க”என்று சொல்லி , அன்று நடந்த அனைத்தையும் கூற, ராணியோ “இதையெல்லாம் நாங்க நம்பனுமா. கடத்திட்டு போனாங்களாம். ஒருத்தன் திடிர்னு எங்கிருந்தோ குதிச்சு வந்து அவளை காப்பாத்துனானாம். இது என்ன சினிமாவா ஹீரோ வர.எங்களை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது. இனி ஒரு முறை சம்மந்தின்னு எங்களை கூப்பிடாதீங்க. இதுக்கு மேல பேச ஒன்னும் இல்ல.இந்த கல்யாணம் நடக்காது. இப்படி ஒரு புள்ள எங்க குடும்பத்துக்கு வேண்டாம்”.

மஞ்சு, “ஐயோ….. அப்படி எல்லாம் சொல்லாதீங்க சம்மந்தியம்மா. நாங்கதான் நடந்த விஷயம் எல்லாத்தையும் சொல்லிட்டோமே. இப்படி மண்டபம் வரைக்கும் வந்து கல்யாணத்தை நிறுத்துனா என் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகும். கொஞ்சம் யோசிச்சு பாருங்க சம்மந்தியம்மா”என்று கெஞ்சி கொண்டிருக்க,

சூர்யாவோ அங்கு நடந்த அத்தனை சம்பாசனைகளையும் கேட்டு, புருவம் சுருக்கியவன் யோசனையோடு மேடை பக்கம் பார்வையை திருப்ப, அங்கிருந்தவளை கண்டு திகைத்து போனான்.

சூர்யா,‘ஹோ…..காட். இது அந்த பொண்ணுதானே. காட்டுல இருந்து நாம அனுப்பின பொண்ணு நம்ம காப்பாத்தின பொண்ண.அந்த பொண்ணு என் பக்கத்து வீடுதானா.இவ்வளவு நாள் இது தெரியாம இருந்திருக்கோமே’ என்று யோசித்தவன் பின் ‘சரி அந்த அம்மாட்ட நாமளே போய் பேசி. கல்யாணத்தை நிறுத்த வேண்டாம்னு சொல்லி அன்னைக்கு நான்தான் காப்பாத்துனேன்னு சொல்லிடலாம்’ என்று தனக்குள் யோசித்து முடிவெடுத்தவன் பேச செல்லும் முன், ராதிகா அவர்களிடம் கோபமாக பேச துவங்கினார்.

ராதிகா, “நிறுத்துங்க என்னங்க பேசுறீங்க.நாக்குல நரம்பு இல்லைங்கறதுக்காக எது வேணா பேசுவீங்களா.நாங்களே அந்த கடத்தல்காரங்ககிட்ட இருந்து புள்ள தப்பிச்சு வந்தது, தெய்வாதீனம்னு நினைச்சுட்டு இருக்கோம்.நீங்க என்னனா இவ்ளோ பேர் முன்னாடி அவளை பத்தி அசிங்கப்படுத்துறீங்க”என்க,

கோபால், “அந்த பொண்ணு எப்படி வந்தா எங்களுக்கு என்ன. இல்ல நீங்க எப்படி நினைச்சாதான் எங்களுக்கு என்ன. இந்த கல்யாணம் இனிமே நடக்காது.நைட் ஃபுல்லா எவன்கூடயும் இருந்துட்டு வந்தவ எங்க வீட்டு குலமகளா வேண்டவே வேண்டாம்”என்றவர் மேடையில் அமர்ந்திருந்த மகனை பார்த்து “டேய் ராஜ் எந்திருச்சு வா. இந்த பொண்ணு உனக்கு வேண்டாம். நாம போகலாம்”என்று சொல்ல,

சூர்யா அந்த வார்த்தையில் கடுப்பானான்.அன்னைக்கு என்ன நடந்ததுனே தெரியாம ஏன் இந்த பொண்ண அசிங்கப்படுத்தராங்க, அது சரி எங்க எந்த தப்பு நடந்தாலும் பொண்ணை கை காட்டுற சமூகத்துலதானே நாம இருக்கோம். இப்படி ஒரு குடும்பத்துக்கு கல்யாணம் செய்து போனா அந்த பொண்ணு அங்க சந்தோசமா வாழ வாய்ப்பே இல்ல. இந்த கல்யாணம் நிக்கறதே நல்லதுதான் என்று நினைத்து கொண்டடிருக்க,ராஜின் குரல் கேட்டது.

ராஜூ தந்தையை அழுத்தமாக பார்த்து “இல்லப்பா. என்னால வர முடியாது. ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை குடுத்து மண மேடை வரைக்கும் கூட்டி வந்துட்டு போனா, அது நம்பிக்கை துரோகம்ப்பா.அவங்கதான் நடந்த விஷயம் எல்லாம் சொல்லிட்டாங்கல்ல, அப்புறமும் ஏன் இப்படி பழைய பஞ்சாங்கமா இருக்கீங்க.நான் சைந்தவிய நம்பறேன். யாரோ பண்ணுன தப்புக்கு பொண்ணுங்கற ஒரு காரணத்துக்காக நாம அவளை தண்டிக்க கூடாதுப்பா” என்க,

திருமணம் முடிவான இத்தனை நாட்களில் போனில்கூட பேசாதவன் தன் மேல் கொண்ட நம்பிக்கையை கண்டு வியந்து போனாள் சைந்தவி. சூர்யாவும் பரவால்ல மாப்பிள்ளையாவது புரிஞ்சுக்கிட்டானே என்று எண்ணி கொண்டான்.

ராணி, “வாய மூடு ராஜ். அப்பாகிட்ட இப்படிதான் பேசுறதா. நீ சின்ன பையன் உனக்கு ஒன்னும் தெரியாது. அப்பா சொல்றதை கேளு. முதல்ல மேடைல இருந்து எழுந்திரு”என்றார் .

ராஜ், “சின்ன பையன்கிட்ட எதுக்கு பிசினஸ் பார்த்துக்கனு சொல்லி கொடுத்தீங்க, சின்ன பையனுக்கு எதுக்கு கல்யாணம் செய்யணும்னு நினைச்சீங்க”என்று அவனும் எதிர்வாதம் செய்ய, மகனின் கேள்வியில் ராணி வாயடைத்துதான் போனார்.

கோபால், “ராஜ் போதும். உன்னோட விதண்டாவாதத்தை நிறுத்திட்டு வா போகலாம். என்னை வீணா கோபப்படுத்தாதே. இப்படி ஒரு கேவலமான பொண்ணு வேண்டாம்” என்று சொல்ல, சூர்யாவின் முகம் கோபத்தில் இறுக ஆரம்பித்தது. இருந்தாலும் தன்னால்தான் இந்த திருமணத்தில் இவ்வளவு பிரச்சனை. எப்படியாவது பேசி இதை சரி செய்ய வேண்டும் என்று எண்ணியவன் கண்கள் மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்து கொண்டு இருந்தான்.

ராஜின் பெற்றோர் பேசுவதை ஓரளவுக்கு மேல் கேட்க முடியாது கோபமாக எழுந்த சைந்தவி தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி தூக்கி வீசிவிட்டு.ராஜின் புறம் திரும்பி “நீங்க என் மேல வச்சிருந்த நம்பிக்கைக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க,இதுதான் சமயம்னு என் மேல சேர வாரி இறைக்காம, எனக்காக உங்க அப்பா, அம்மாவையே எதிர்த்து பேசனதுக்கும் நன்றி.இதுக்காக நான் உங்களுக்கு நன்றிகடன்கூடபட்டுருக்கேன்.ஆனா இந்த கல்யாணம் நடக்காது. எனக்கு இந்த மேரேஜ் வேண்டாம். இப்போ நான் உங்கள கல்யாணம் செய்துகிட்டாலும்,நாளைக்கு உங்க வீட்ல என்னால நிம்மதியா வாழ முடியுமாங்கறது சந்தேகம்தான்.உங்க வீட்ல எனக்கான நிம்மதி கிடைக்காதுங்கற விஷயம், நல்ல வேலையா எனக்கு இப்பவே தெரிஞ்சிருச்சு.

“நீங்க இப்போ வேணா உங்க அப்பாவை எதிர்த்து என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்.ஆனா அதுக்கு பிறகு….. நடக்கற விஷயங்கள் எதுவும் நம்ம ரெண்டு பேருக்குமே சந்தோஷத்தை குடுக்காது. எனக்காக அம்மாகிட்ட பேசவும், அவங்களுக்காக என்கிட்ட பேசவும் நீங்க தடுமாறனும், கால போக்கில் அந்த தடுமாற்றமே கோபமா மாறும். அது நம்மோட நிம்மதியான வாழ்க்கையை பாதிக்கும்.

குடும்பம்னா என்ன?நீங்களும், நானும் மட்டும் இருக்கறதா இல்ல.உங்க அம்மா அப்பா எல்லாரும் அதில் அடக்கம். நான் எல்லாரும் விரும்பற சந்தோஷமான அமைதியான வாழ்க்கையை விரும்பறவ.அது உங்களை கல்யாணம் செய்துகிட்டா கண்டிப்பா எனக்கு கிடைக்காது. சோ….. சாரி டு சே திஸ்.நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க விரும்பல”என்று சொல்லி கைகளைகட்டி கொண்டு பிடிவாதமாக நின்றுவிட்டாள்.

சூர்யா அவளின் தெளிவான, தைரியமான முடிவை கண்டு வியந்து ‘பரவால்ல நாம நினைச்ச அளவுக்கு பயந்த பொண்ணு இல்லை போல’ என்று நினைத்து கொண்டான்.

சைந்தவியின் பேச்சை கேட்டு கொதிப்பான ராணி தன் மகனை ஒரு பெண் நிராகரிப்பதா என்று ஆங்காரமாகி வார்த்தைகளை நெருப்பு துண்டுகளாக கொட்ட துவங்கினார்.

ராணி, “என் மகனை நீ என்னடி வேணான்னு சொல்றது.ஊர் மேஞ்சிட்டு வந்துட்டு உத்தமி மாதிரி பேசுற”என்று சொல்ல, சைந்தவி அந்த வார்த்தையின் வீரியத்தில் துடித்து போனாள். கண்களில் அடிபட்ட வலியுடன் அழ கூடாது என்று பிடிவாதமாக நின்றிருந்த அக்காவின் முகத்தை பார்த்த பவி, அவளை சமாதானப்படுத்த செல்ல, அப்போது ‘பளார்…’என்ற அரை சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.

ராதிகாதான் ராணியை ஓங்கி அறைந்திருந்தார்.அவரின் செயலை எதிர்பார்க்காத மஞ்சு கூட, தோழியை விழி விரித்து பார்க்க,ராதிகா அவரை கவனிக்கும் நிலையில் எல்லாம் இல்லை. “வாய மூடுடி.ஒரு பொண்ண பத்தி பேசுறோம்ங்கற எண்ணம் கொஞ்சமாவது உனக்கு இருக்கா. பொண்ணுக்கு பொண்ணுதான் எதிரின்னு எவ்வளவு சரியா சொல்லி இருக்காங்க.அது என்ன நாக்கா தேள் கொடுக்க.இப்படி பேசிகிட்டு இருக்க” என்று கோபமாக பேச,

மனைவியை யாரோ ஒரு பெண் அடிக்கவும் கோபமான கோபால் குமாரை பார்த்து “என்னங்க இது. ஆள் வச்சு அடிக்கறீங்களா.டேய் ராஜ் என்னடா இன்னும் அங்க உட்கார்ந்து இருக்க. உன் அம்மாவை அடிச்சுருக்காங்க. என்ன ஏதுன்னு கேட்கமாட்டியா”என்றுவிட்டு ராதிகா புறம் திரும்பி “உனக்கு எவ்ளோ தைரியம் இருந்திருந்தா என் பொண்டாட்டி மேலையே கை வச்சிருப்ப”என்று சொல்லி ராதிகாவை அடிக்க கையை ஓங்க, அதை தடுத்து பிடித்து முறுக்கியது ஒரு இரும்பு கரம்.

ராதிகா,”என்ன பாக்குற அவன் என் பையன். டெபுட்டி கமிஷனர்.உங்களை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் அவன் டிரீட்மென்ட்தான் சரியா இருக்கும்”என்றார் நக்கலாக.

கோபால் கையில் ஏற்பட்ட வலியில் கத்த, உடனே தந்தையின் அருகில் ஓடிய ராஜ் “அவரை விடுங்க”என்று சூர்யாவை பார்த்து அமைதியாக சொல்ல, கையைவிட்டவன் “இந்த குடும்பத்துல நீ ஒருத்தன்தான் நியாயமா பேசுன. அதனால விடறேன்.இல்லை ஸ்டேஷன் கூட்டிட்டு போய் முட்டிக்கு முட்டி தட்டி இருப்பேன்”என்றான் சாதாரணம் போல்,

ராதிகா கோபாலை நக்கலாக பார்த்து சிரிக்க அவரை முறைத்து “என்ன ஓவரா பண்ற.உனக்கும் ஒரு பையன் இருக்கான்ல.அவனுக்கு இந்த மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வைப்பியா?”என்று கேட்க, ராதிகாவின் மனம் யோசனையில் ஆழ்ந்தது.

சூர்யாவோ ‘பாவம் பார்த்து விட்டதே தப்பு. இவனை…..’என்று பல்லை கடித்து, கையில் இருந்த காப்பை மேலே ஏற்றி
அவரை அடிக்க செல்ல,மகனின் கை பிடித்து தடுத்த ராதிகா கோபாலை அழுத்தமாக பார்த்து “பண்ணி வைப்பேன் கண்டிப்பா என் பையனுக்கு அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வைப்பேன்.ஏன்னா அவளை எனக்கு ஏழு வருஷமா தெரியும்.அவளபத்தியும் அவளோட குணத்தைபத்தியும் எனக்கு நல்லாவே தெரியும்.அவ வைரம். கண்ணாடியா நினைச்சு நீங்க தூக்கி போட்டுடீங்க.ஆனா எனக்கு அந்த வைரத்தை எப்படி வச்சுக்கணும்னு நல்லாவே தெரியும்.அப்புறம்…… எனக்கு தோணாத விஷயத்தை எடுத்து கொடுத்ததுக்கு நன்றி“ என்றவர் மஞ்சுவின் புறம் திரும்பி “மஞ்சு உன் பொண்ண என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறியா? இப்போவே, இங்கயே” என்று கேட்க.

சூர்யா தாயை அதிர்ந்து போய் பார்த்தான்.அவர்கள் பேசியதை கேட்டு அப்போதுதான் சூர்யாவை கவனித்த சைந்துவின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.’இ…இவரா…. இவர் ராதி ஆண்டி பையனா’என்று யோசிக்க,பவியோ மூச்செடுக்கவும் மறந்து இமை சிமிட்டாது சூர்யாவை பார்த்தாள்.

மூவர் மனதிலும் ஒவ்வொரு எண்ணம் ஓட, இனி தங்களுக்கு திருமணம் நடக்காது என்று புரிந்து கொண்ட ராஜ் சைந்துவை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக மண்டபத்தைவிட்டு வெளியேறினான். மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் வெளியில் அவர்களோடு சென்றுவிட்டனர்.

மஞ்சு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கையை பிசைய்ந்தவாறு நின்றவர் பின் ராதிகாவின் பின் நின்றிருந்த சூர்யாவையும் அவன் முகத்தில் இருந்த அதிர்ச்சியையும் கவனித்து “ராதி நீ முதல்ல உன் மகன்கிட்ட பேசு”என்றார் தயக்கமாக.

ராதிகா உடனே பெருமையாக “அவன் என் பேச்சை மீறி எதுவும் பண்ண மாட்டான். நான் சொல்றதுதான் அவன் கேட்பான்.அவனைப்பத்தி கவலைப்படாம நீ உன் விருப்பத்தை சொல்லு”என்று கேட்க,பவி கண்ணில் வடிந்த கண்ணீருடன் சூர்யாவையே பார்த்து கொண்டு இருந்தாள்.

ராதிகா, “சொல்லு மஞ்சு.உன் பொண்ண என் பையனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்க சம்மதிக்கிறியா”என்று கேட்க, அவரோ சற்று நேரம் யோசித்தவர் தயங்கி கணவரை பார்க்க அவரோ இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் அப்படியே நின்றிருந்தார்.

ராதிகா,”மஞ்சு அவங்க சொன்னாங்கங்கறதுக்காக இல்லை. எனக்கு ஆரம்பத்துல இருந்தே சைந்தவியை ரொம்ப பிடிக்கும்.சூர்யாவுக்கு அவளை கேக்கலாம்னு கூட நான் யோசிச்சேன். இதை எப்படி உன்கிட்ட கேட்கறதுனு நான் தயங்கிட்டு இருந்த நேரம்,அவ போலீஸ் மாப்பிள்ளை வேண்டாம்னு சொன்னதா நீ சொன்ன, அதான் நானே என்னை தேத்திகிட்டு அவ விருப்பம்னு விட்டுட்டேன்.ஆனா இப்போ இந்த கல்யாணம் நின்னது. அந்த ஆளு பேசுனது எல்லாம் வச்சு பார்க்கும்போது என் பையனுக்குதான் உன் பொண்ணுன்னு எழுதி இருக்கு போல,அந்த கடவுள் போட்ட முடிச்ச யாரால மாத்த முடியும்.யோசிச்சு சொல்லு”என்றார்.

பவி தாய் என்ன சொல்ல போகிறாரோ என்ற பயத்துடன், தாளம் தப்பி துடிக்கும் இதயத்தை கை வைத்து அழுத்தியவாறு பார்த்துக் கொண்டிருக்க சூர்யாவும் அவர் பதிலுக்காக காத்திருக்க, சைந்தவியோ தாய் சம்மதம் சொல்ல கூடாது என்ற எண்ணத்தோடு வேகமாக அவர் அருகில் சென்று நின்றாள்.

இளையவர் மூவரின் எண்ணமும் மஞ்சுவின் பதில் இதுவாகதான் இருக்க வேண்டும் என்று பார்த்து கொண்டிருக்க, அவரோ மகளையும், சூர்யாவையும், கணவனையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார்.

ராதிகா, “மஞ்சு உன் பொண்ண நான் என் பொண்ணு மாதிரி பார்த்துப்பேன். சம்மதம் சொல்லு”என்று அவர் கைபிடித்து சொல்ல, ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்ட மஞ்சு “சரி ராதி இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்”என்றார்.

மஞ்சு தன் சம்மதம் சொன்ன அடுத்த நிமிடம், “அம்மா……மஞ்சு….. “ என்று சைந்துவும், குமாரும் கத்தியிருந்தனர், எனில் பவியோ தலையில் இடி விழுந்ததை போல் இருக்கும் இடம் மறந்து தொப்பென்று கீழே அப்படியே அமர்ந்துவிட்டாள்.

சூர்யா அவர் பதிலில் கோபமானவன் தாயிடம் வேகமாக வந்து “ம்மா…நான் உங்ககிட்ட பேசணும்”என்று மெதுவாக சொல்ல, சரி என்னும் விதமாக தலையசைத்தவர் மஞ்சுவிடம் “உன் சம்மதம் கிடைச்சது எனக்கு சந்தோஷம்தான் மஞ்சு. ஆனா அண்ணாகிட்டயும் சைந்துகிட்டயும் தனியா போய் பேசிட்டு வந்து சொல்லு. நீ எந்த பதில் சொன்னாலும் எனக்கு ஓகேதான். அது எனக்கு பிடிச்ச பதிலா இருந்தா நாம உறவுகாரங்களா மாறுவோம், இல்லைனா பிரண்டாவே இருக்கலாம்.சரியா”என்றுவிட்டு மண மகன் அறை நோக்கி சூர்யாவை இழுத்து சென்றார்.

மஞ்சுவும் சைந்தவியை இழுத்து கொண்டு மண மகள் அறை நோக்கி சென்றார்.

காதல் நெஞ்சங்கள் காயம்படுமா…. இல்லை காதலை இழக்குமா அடுத்தடுத்த எபியில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement