Advertisement

அத்தியாயம் -7

“உடன் பிறப்பே….. உடன் பிறப்பே….. சைந்து….. அடியே சைத்தான்….” என்று குளியலறையில் இருந்து கத்தி கொண்டிருந்தாள் பவி. பெட்டில் அமர்ந்து படித்து கொண்டிருந்த சைந்து அவள் கத்தலில் கடுப்பாகி “என்னடி வேணும் உனக்கு எதுக்கு இந்த கத்து கத்துற”

“ஏன்டி எத்தனை தடவ கேட்கிறேன் அந்த பிங்க் கலர் டாப்ப கப்போர்ட்ல இருந்து எடுத்து குடுனு. என்னடி பண்ற” என்று கேட்க,

சைந்துவோ எரிச்சலாக “அதெல்லாம் முடியாது. போ…. சும்மா நொய் நொய்னு.நான் படிக்கறேன். என்னை டிஸ்டர்ப்பண்ணாம உனக்கு வேணுங்கறதை அப்படியே வந்து எடுத்துக்கோ”.

“எதே….. அப்படியேவா…. அடியே சைத்தான். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. வந்துருவேன். என்ன அங்க விளையாடிட்டு இருக்க புள்ளைங்க பயந்து போய்டும். அப்புறம் எல்லாரையும் ஒரே டைம்ல மசூதி கூட்டிட்டு போய் மந்திரிக்கணும் பரவால்லையா”என்றாள் கிண்டலாக,

திருமணத்திற்கு வந்த அனைவரின் வாரிசுகளும் அந்த அறையில்தான் ஒரு இடத்தில் அமர்ந்து பொம்மைகளுடன் விளையாடி கொண்டு இருந்தனர்.

தான் விளையாட்டு க்கு சொன்னதை தங்கை வேண்டுமென்றே செய்தாலும் செய்வாள் என்று பயந்து போனவள் “லூசு…. லூசு…சரியான அடாவடிடி நீ” என்று தலையில் அடித்து கொண்டு அவள் கப்போர்டை திறந்து தேடி அடியில் இருந்த டாப்பை பிடித்து இழுக்க, அதோடு சேர்ந்து ஒரு டைரியும் வித் லவ் என்ற கார்ட்டும் கீழே விழுந்தது.அதை ஆச்சர்யமாக பார்த்தவள் கையில் எடுத்து பிரிக்க போக, பவியின் அலறல் கேட்டது.“அடியே சைத்தான்….” என்று….

உடனே டைரியை தன் உடை இருக்கும் இடத்தில் மறைத்து வைத்தவள் “இ…இதோ…. வந்துட்டேன்…”என்று தங்கையிடம் டாப்பை கொண்டு போய் கொடுத்தவள் முகம் யோசனையில் இருந்தது.

பவி குளியலறையில் இருந்து வெளியில் வந்தவள் “அடியே சைத்தான் ஒரு டாப் எடுக்க எவ்ளோ நேரம்”என திட்டிவிட்டு, “நான் கீழ போய் எதாவது வேலை இருக்கான்னு பார்த்துட்டு வரேன்” என்று கீழே சென்றுவிட,

சைந்து அங்கிருந்த குழந்தைகளை தோட்டத்தில் போய் விளையாட சொல்லி அனுப்பிவிட்டு, தன் அறை கதவை தள்ளிட்டு வந்தவள் தங்கையின் டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.அதில் இருந்த விஷயங்கள் சைந்துவின் புருவத்தை உயர்த்த செய்தது.

ஆம், அதில் பவியின் முழு காதல் கதையும் இருந்தது. அவளது ஒவ்வொரு வார்த்தைகளும் அவனை எந்த அளவிற்கு அவள் விரும்புகிறாள் என்பதை காட்டியது.தங்கையின் காதலை கண்டு வியந்துதான் போனாள் சைந்தவி. ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல ஐந்து வருட காதல் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த போது தொடங்கினாலும், அவள் வேலைக்கு சென்றபின்தான் அவனிடம் தன் காதலை தெரிவித்திருக்கிறாள்.அந்த டைரியின் இறுதியில் ‘என்னவனின் பதிலுக்காக காத்திருக்கிறேன்…….’ என்று இருக்க, அந்த பையன் இன்னும் பதில் சொல்லல போலையே. நாம வேணா அவன்கிட்ட பேசி பார்ப்போமா என்று எண்ணும் போதே அவளை கேவலமாக பார்த்த அவள் மனசாட்சி ‘அவ லவ் பண்றதே உனக்கு இப்போதான் தெரியும். இதுல அவன் யாருனு நீ எப்போ கண்டுபிடிச்சு…. கஷ்டம்…கஷ்டம்…. பேசாம நீ அவகிட்டயே பேசி பாரு’என்று சொல்ல,

‘ம்ம்ம்….. நீ சொல்றதும் சரிதான். இதைபத்தி அவகிட்ட பேசணும்.ஆனாலும் பயபுள்ள, காலேஜ் போக ஆரம்பிச்சதுல இருந்தே லவ்பண்ணியிருக்கா பாரேன்…. அந்த பையன் யாருனு வேற எங்கயும் எழுதல. கார்டுலயும் காக்கினு போட்டுருக்கா. ஒரு வேலை அந்த பையனோட செல்ல பேரா இருக்குமோ.இந்த விஷயத்தை ஏன் என்கிட்டகூட சொல்லாம இருக்கா.எப்படி அவகிட்ட கேட்குறது.இதை வேற தனியாதான் பேச முடியும் சொந்தகாரங்க எல்லாம் வந்துட்டு போயிட்டு இருக்காங்க’என்று எண்ணி கொண்டு இருந்தவளுக்கு பவியே வழி அமைத்து கொடுத்தாள்.

திருமணத்திற்கு மூன்று நாட்களே என்ற நிலையில் வேலை அதிகமாக இருந்தது.அவை அனைத்தையும் செய்து களைப்பான பவி அக்காவின் அருகில் பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு போய் நின்றாள்.அவளை சந்தேகமாக பார்த்த சைந்து “என்னடி பச்ச புள்ள லுக் விடுற.என்ன விஷயம்”.

பவி, “அது…அதுக்கா…. நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன். நீ ஓகே சொல்லணும் சரியா…”என்று அப்பாவியாக கேட்க, அவளை சந்தேகமாக பார்த்தவள் “ஓகே சொல்லணுமா. நீ கேட்கிற விதமே சரியில்லையே. என்னடி கேட்க போற”

“இப்படி எல்லாம் நீ பார்த்தனா நான் சொல்ல மாட்டேன். போ…”என்று முகம் திருப்பியவளை கண்டு தனக்குள் சிரித்து கொண்டவள் “சொல்லாட்டி போ…. எனக்கென்ன…”என்றுவிட்டு புக்கை எடுக்க, அதை பிடுங்கி அந்த பக்கம் வைத்த பவி “ஓகே சொல்லு உடன்பிறப்பே…. நீ என் செல்ல அக்காதானே…”என்று சொல்ல,

சைந்துவோ, “ம்கூம்…இது ஆகறத்துக்கு இல்ல.நீ பேசற டோனே சரி இல்லை. ஏதோ வில்லங்கமா கேட்கப் போறேன்னு மட்டும் எனக்கு தெரியுது அதனால நான் ஓகே சொல்ல மாட்டேன்” என்று திருப்பி கொண்டு போன அக்காவின் முன் வந்து நின்றவள் “ப்ளீஸ்….ப்ளீஸ்….ஓகே சொல்லுக்கா”என்று கெஞ்ச, தங்கையின் கெஞ்சல் கேட்டு மனம் இறங்கியவள் “சரி…”என்றுவிட, “ஹப்பாடா…என்று பெட்டில் நிம்மதியாக அமர்ந்தாள்.

சைந்து, “எதுக்குடி நான் ஓகே சொன்னேன் சொல்லுடி”,

“அது ஒன்னும் இல்ல உடன்பிறப்பே.பசங்க மட்டும்தான் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடனுமா என்ன.நாம எல்லாம் கொண்டாட கூடாதா? வா நாமளும் போயி பேச்சுலர் பார்ட்டி கொண்டாடலாம் ஹோட்டலுக்கு போறோம். ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரோம் ஓகே”என்று சொல்ல,சைந்து அவளை அரண்டு போய் பார்த்தாள்.

“என்ன உடன்பிறப்பே உன் சேவிங்ஸ் எல்லாம் கரைச்சிடுவேன்னு பயமா…. ஏன் இப்படி பாக்குற”என்று பவி நக்கலாக கேட்க,

சைந்துவோ “அடியே என் சேவிங்ஸ கரைக்கறது ஒரு ஓரத்துல இருக்கட்டும்.அதற்கு முன்னாடி இன்னொரு பெரிய கேட் இருக்கே அதை எப்படி கிராஸ்பண்ணி போறதுன்னு யோசிச்சியா…”

பவி, “என்ன கேட்டு…”

“மஞ்சுமா…மஞ்சுமாதான்டி அந்த கேட்டு. அவங்க எப்படி என்னை வெளிய விடுவாங்க. நேத்து நடந்த சம்பவத்துக்கு அப்புறமும் என்னை வெளியவிடுவாங்கன்னு நீ நினைக்கற” என்றாள் சந்தேகமாக,

“அதைப்பத்தி கவலைப்படாத செல்லா குட்டி. நான் பார்த்துக்கறேன். இன்னைக்கு உன் பைசாவ காலி ஆக்கல நான் பவி இல்ல….”என்று சபதம் போட்டு, மேலும் “ஈவினிங் போறோம் நைட் டின்னர் முடிச்சுட்டு வர்றோம்”என்றுவிட்டு செல்ல, சைந்துவும் ‘இதுதான் சரியான நேரம். தங்கையை தனியாக பிடித்து பேச என்று நினைத்து, மாலை அவளிடம் எப்படி பேசி விஷயத்தை வாங்குவது என்று யோசிக்கலானாள்.

மாலை நான்கு மணி போல் தாயிடம் சென்ற பவி சைந்தவிக்கு பேசியல் செய்ய வேண்டும் என்றும் தானே அவளை பியூட்டிபார்லர் அழைத்து சென்று வருவதாக கூற, முதலில் மறுத்த மஞ்சு, தாங்கள் காரில் சென்று வருவதாகவும், கோபிகாவும் உடன் வருவதாகவும் சொல்ல, சீக்கிரம் வர வேண்டும் என்ற நிபந்தனையோடு அவர்களை அனுப்பி வைத்தார்.

இருவரும் நேராக பியூட்டிபார்லர் சென்று,பேசியல் செய்துவிட்டு, ஹோட்டல் கிளம்பும் சமயம் அவர்களோடு வந்து இணைந்து கொண்டாள் கோபிகா.மூவரும் சேர்ந்து பேமஸான ஹோட்டலுக்கு சென்றனர்.

கோபிகாவும் டின்னர்க்கு வருவாள் என்று எதிர்பார்க்காத சைந்து,தனிமையில் தங்கையிடம் தான் பேச நினைத்ததை பேச முடியாமல், இனி திருமணம் முடிந்த பின்தான் பேச முடியும் என்று ஏமாற்றமாக நினைத்து தனக்குள் உலண்டு கொண்டு இருக்க, மற்ற இருவரும் என்ன ஆர்டர் செய்யலாம் என்று மெனு கார்டை புரட்டிக்கொண்டு இருந்தனர்.

அவர்கள் இருந்த டேபிளின் அருகில் வந்த வெயிட்டர் “மேடம் வாட்டர்”என்று கேட்க, யோசனையில் இருந்த சைந்துவின் கரங்கள் தன்னிச்சையாக டேபிளில் இருந்த தண்ணீர் டம்ளரை எடுத்து அவனிடம் நீட்டியது.அதை வாங்கிய வெயிட்டர் அவளை புரியாமல் பார்த்து “மேடம் நான் உங்களுக்கு வாட்டர் வேணுமானு கேட்டேன்”

சைந்து, “எனக்கு வேண்டாம். நீங்கதான் என்கிட்ட வாட்டர் கேட்டீங்க. அதான் குடுத்துட்டேன்ல குடிங்க”என்று சொல்ல,தலையை சொரிந்தவன் “மேடம் நான் உங்களுக்கு வாட்டர் வேணுமானு கேட்டேன்” என்று மீண்டும் சொல்ல, அவளோ “அதான் சார் சொல்றேன். எனக்கு வேண்டாம்.நீங்க கேட்டீங்கல்ல குடிங்க”என்றாள்.

பவியோ, “ என்ன சைந்து”

சைந்து, “ஒன்னும் இல்லடி. அவர்தான் என்கிட்ட வந்து தண்ணி கேட்டார் கொடுத்தேன்”என்று சொல்ல, பவியோ வெயிட்டரின் பக்கம் தன் பார்வையை திருப்பினாள்.

“இல்ல மேடம் நான் அவங்களுக்கு வாட்டர் வேணுமான்னு கேட்டேன்”என்றவர் சொன்னதையே சொல்ல, சைந்துவும் “ஆமா சார்.நான் உங்ககிட்ட வாட்டர் கேட்கவே இல்லையே.நீங்களாதானே என்கிட்ட வந்து மேடம் வாட்டர்னு கேட்டீங்க”என்று மறுபடியும் சொல்ல,கடுப்பான பவி “இப்ப எனக்கு தான் வாட்டர் வேணும் குடுங்க”என்று சொல்லி அதை வாங்கினாள்.

சைந்து, “ஏன் சார் அவகிட்ட குடுத்தீங்க. உங்களுக்கு வாட்டர் வேண்டாமா”என்றாள் அப்பாவியாக,

‘தண்ணி வேணுமான்னு கேட்டது ஒரு குத்தமா இப்படி ரவுண்டு கட்டறாங்க என்று தனக்குள் புலம்பி கொண்டார் அந்த வெள்ளந்தி வெயிட்டர் ‘இனி யாருகிட்டயாவது சார், மேம் வாட்டர்னு நான் கேட்டால் என்னை ஏன்னு கேளுங்கடா’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, “மேடம் ஆர்டர் ப்ளீஸ்” என்றான் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல்.

பவியும், கோபியும் அவன் எப்போது இதை கேட்பான் என்று காத்து கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு பிடித்த உணவு லிஸ்டை சொல்ல, கேட்டு கொண்டிருந்த சைந்துவின் முகம் பீதியாக மாறியது.இருவரும் மாற்றி மாற்றி நடப்பது, நீந்துவது,ஊர்வது என்று அனைத்தையும் ஆர்டர் செய்தனர்.

சைந்து, “ஏன்டி இந்த ஜென்மத்துக்கு இனிமே நீங்க சாப்பிடவே மாட்டிங்களா. இன்னையோட உலகம் அழிய போகுதுனு உங்ககிட்ட யாரவது சொன்னாங்களா.எதுக்குடி இவ்ளோ ஆர்டர் பண்ணறீங்க என்று பாவம் போல் கேட்க, பவியோ “வளற்ர பிள்ளை சாப்பிடுறதை பார்த்து கண்ணு வைக்காத. என்னோட பர்ச காலி பண்ணும்போது உனக்கு நல்லா இருந்துச்சா? பழிக்கு பழி…”என்றவள் மேலும் தன் ஆர்டரை தொடர,சைந்து கன்னத்தில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

இருவரின் ஆர்டர் கேட்ட வெயிட்டர் சைந்துவின் புறம் திரும்பி “மேடம் உங்களுக்கு….” என்று கேட்க,அவள் ஆர்டர் செய்யும் முன் முந்திக்கொண்ட பவி “அவளுக்கு ரெண்டு இட்லி கொண்டு வாங்க போதும்”என்று கூற,தங்கையை உக்கிரமாக முறைத்தாள் சைந்தவி. அதையெல்லாம் கண்டு கொள்ளாதவள் கோபிகாவுடன் சாதாரணமாக பேச ஆரம்பித்துவிட்டாள்.

சைந்து தங்கையிடம் பேச நினைத்த விஷயம் கடைசி வரை பேச முடியாமலே போனது. மூவரும் சந்தோசமாக டின்னரை முடித்தவர்கள் பின் வீட்டிற்கு சென்று அன்றைய அலைச்சலில் சீக்கிரம் உறங்கி போயினர்.

அடுத்த நாள் எப்படி சென்றது என்றே தெரியாத அளவிற்கு வேகமாக சென்றுவிட, நிச்சயதார்த்த நாளும் அழகாக விடிந்தது.காலையிலேயே தலை குளித்து கையில் மெஹந்தி வைத்து அதை காய வைத்து கொண்டிருந்த சைந்துவின் அருகில் வந்த பவி “ஏன்டி நாங்கல்லாம் வேர்க்க விறுவிறுக்க வேலை செய்றோமே. ஒரு ஜூஸ் போட்டு கொடுப்போம். கொறிக்க எதாவது எடுத்து கொடுப்போம்னு இல்லாம அப்படியே ஹாயா உட்கார்ந்து இருக்கியே உனக்கே இது நல்லா இருக்கா”என்று கேட்க,

சைந்துவோ கூலாக “நான் கல்யாண பொண்ணு வேலை எல்லாம் செய்யக்கூடாது. போடி போ போய் நீ வேலை செய்”என்றவள் எழுந்து தன் அறைக்கு செல்ல அவள் போவதை கடுப்பாக பார்த்த பவி “ஓவரா பண்ணாதடி. எனக்கும் ஒரு காலம் வரும். நானும் அப்போ இதே மாதிரி ஹாயா இருப்பேன்”என்றவள் சொல்ல, சைந்து அவளை கண்டுகொள்ளவே இல்லை.

மாலை ஐந்து மணி போல் பெண் வீட்டில் இருந்து அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பிவிட்டனர்.ராதிகா மகனை பலமுறை அழைத்தும் அவன் பதில் அழிக்காமல் போக,கோபமானவர் ‘லூசு பயலே எங்க தான் இருக்கிற. ஒரு போன்பண்ணுனா எடுக்குறியா. உனக்கெல்லாம் எதுக்கு போன்னு. வீட்டுக்கு வந்த உடனே அதை எடுத்து லாரிக்கு கீழ வைக்கறேன்’என்று கத்தியவர் பின் ‘நான் பக்கத்து வீட்டு பொண்ணு நிச்சயத்துக்கு வந்துட்டேன். நைட் எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துட்டீனா,உன்கிட்ட இருக்க சாவிய வச்சு உள்ள போய் குளிச்சு கிளம்பிட்டு மண்டபத்துக்கு வா. இல்லைனா படுத்து தூங்கி எழுந்துட்டு காலைல வந்துரு கண்டிப்பா காலை கல்யாணத்துக்கு நீ வந்துருக்கணும். இல்ல என்னால வர முடியாது. முக்கியமான வேலை வந்துருச்சுனு சொன்ன உனக்கு ஒரு வாரத்துக்கு வீட்டு சாப்பாடு கட்டு’என்று வாட்ஸப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியவர் மஞ்சுவுடன் மண்டபத்திற்கு கிளம்பினார்.

மண்டபத்தில் அழகு நிலைய பெண்கள் காத்திருக்க அவர்களிடம் சைந்துவை ஒப்படைத்த மஞ்சுவும் குமாரும் வருபவர்களை வரவேற்க சென்றுவிட்டனர். பவியும் தன் தோழிகளுடன் அரட்டை அடிக்க சென்று விட சைந்தவி தனியாக இருந்தாள்.

சைந்துவிற்கு அலங்காரம் செய்து முடிக்க ஏழு மணி ஆகியது.தங்க நிற லெகங்காவில் சைந்தவி தங்க பதுமையாக ஜொலித்தாள். ஆனால் மனம் மட்டும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. அவள் தோழிகளின் திருமணத்திற்கு சென்ற போது எல்லாம் அவர்கள் சொன்ன பட படப்பு,ஆர்வம் எதுவும் ஏன் நமக்கு தோணல, ஒருவேலை லவ்வாலஜில நான் ரொம்ப புவர் ஸ்டுடென்டோ என்று யோசித்தவள் முன் வெள்ளி நிற லெஹங்காவில் வெள்ளி நிலாவாக மின்னி கொண்டிருந்தாள் பவித்ரா.

சைந்தவியோ தங்கையை கவனிக்காமல் தன் யோசனையில் மூழ்கியிருக்க, அவள் கையை பிடித்து கிள்ளிய பவி “என்ன உடன்பிறப்பே ட்ரீம்க்கு போயாச்சா…. மாம்ஸ் அங்க உனக்காக வெயிட்டிங் வா. மீதி கனவ ரெண்டு பேரும் சேர்ந்து காணுங்க”என்று சொல்லி அழைத்து போனாள்.

மணமேடையில் மாப்பிள்ளை ராஜ்குமார் தங்க நிற கோர்ட்டில் நின்றிருக்க, சைந்தவி அவன் அருகில் நிற்க வைக்கப்பட்டாள்.அவள் மேடை ஏறிய சற்று நேரத்தில் நிறைய பேர் போட்டோ எடுக்க வர, அவர்களிடம் பேசவே இருவருக்கும் சரியாக இருந்தது. இடையில் எதாவது கேப் கிடைக்கும்போது ராஜ் எதாவது பேசினாள், அதற்கு ஆம், இல்லை என்று மட்டுமே பதில் சொல்ல, ஓரளவுக்கு மேல் அவனும் பேசுவதை நிறுத்திவிட்டான்.

பவி டிஜேவிடம் பாடல் போட சொல்லி ஆட, அவளுடன் சேர்ந்து கோபிகாவும் ஆட, மற்ற சிறு குழந்தைகள் தனக்கு தெரிந்த படி ஆட அந்த மண்டபமே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியாக இருந்தது.

வீட்டிற்கு வந்த சூர்யா வீடு பூட்டி இருப்பதை பார்த்து தாய்க்கு அழைக்க போனை எடுக்க, அவரிடம் இருந்து ஏகப்பட்ட தவறிய அழைப்புகள் அத்துடன் அவர் அனுப்பிய மெசேஜ்ஜூம் இருக்க, அப்போதுதான் அதை கவனித்தவன் அதை ஓபன் செய்து கேட்க, தாயின் வார்த்தைகள் அவனுள் சிரிப்பைதான் உருவாக்கியது.

“ம்ம்…. ஆத்தா கோபமா இருக்காங்க போலயே. சரி காலைல கல்யாணத்துக்கு போய் அவங்களை சமாதானப்படுத்தலாம், கூடவே அந்த அடாவடியையும் பார்க்கலாம், அவ அக்காதானே அங்கதான் இருப்பா என்று நினைத்தவன் தன்னிடம் இருந்த சாவியை வைத்து வீட்டிற்குள் சென்று லக்கேஜை ஓபன் செய்தான். அதில் பிங்க் நிற இதய வடிவிலான ஒரு வாழ்த்து அட்டையும் கூடவே இரண்டு இதயங்கள் இணைந்து இருப்பது போன்ற மோதிரத்தையும் எடுத்து பார்த்தவன் ‘எப்போ ஓகே சொல்ல போறன்னு கேட்டுட்டே இருப்பல்லடி ரவுடி, சொல்றேன் உன் அக்கா கல்யாணம் முடிஞ்ச உடனே சொல்றேன். நான் உன்னை காதலிக்கறனான்னு தெரியல. ஆனா நீ என் லைப்ல வந்தா நல்லா இருக்கும்னு தோணுது. கூடிய சீக்கிரம் இது ரெண்டையும் உன்கிட்ட சேர்கிறேன்’என்று எதிரில் அவள் இருப்பது போல் பேசிவன் பின் அதை பத்திரமாக கப்போர்டில் வைத்து பூட்டிவிட்டு காலை திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று குளித்து உறங்க துவங்கினான்.

அவளுக்காக வாங்கிய இரண்டையும் அவனால் எப்போதுமே அவளிடம் தர முடியாது என்பது தெரிந்தால், அதனாலேயே அவன் வாழ்வில் பெரும் புயல் வீச போகிறது என்பதையெல்லாம் அறிந்தால் என்ன செய்வானோ……..

திருமண நாள் அந்த மண்டபமே அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருக்க, பட்டு புடவை சர சரக்க சிலர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க, சிலர் உட்கார்ந்து ஊர் வம்பு பேசி கொண்டிருந்தனர். அப்போது ஐயர் மாப்பிள்ளையை வர சொல்லுங்க என்று சொல்லி,அவர் செய்ய வேண்டிய சடங்குகளை செய்துவிட்டு பெண்ணை அழைக்க, பச்சை பட்டுடுத்தி தேவதையாய் குனிந்த தலை நிமிராமல் வந்த மகளின் அழகை கண்டு பெற்றோர் இருவரும் பூரித்து போயினர்.

திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்து மாப்பிள்ளை பெண்ணிற்கு மங்கள நாணை கட்ட போன சமயம் “நிறுத்துங்க……இந்த கல்யாணம் நடக்காது……”என்றது ஒரு கர்ஜனையான குரல்.

அணைப்பாள்……

Advertisement