அணங்கும் அலக்கண் பூதமும்

அத்தியாயம் – 1

சென்னை வாழ் மக்களை  சித்திரை மாதம் வெயில் கண்ணைக் கூசவைத்துக் கொண்டிருக்க, விடிந்து வெகுநேரம் ஆகியும் கவலை எதுவும் இன்றி மின்விசிறி அடியில் கை கால்களை மெத்தையில் பரப்பியபடி, வாயை லேசாகப் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

வெளியில் சமையல் அறையில் அம்மா செய்யும் பொங்கலின் வாசம் உள்ளே வந்து எழுப்பிவிடக்கூடாது என்று கதவைச் சாற்றிக்கொண்டு, எந்த ஒரு கவலையும் இன்றி உறங்கியவளை, இடுப்பில் கை வைத்து நின்றபடி முறைத்துக் கொண்டு இருந்தாள் திவ்யா

கைக்கடிகாரத்தில் நேரத்தைத் திருப்பிப் பார்த்து விட்டு , “இவள!….” என்று முணங்கியபடி கையில் பிடித்திருந்த பையைப் பத்திரமாக அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு, அதன் பத்திரத்தை உறுதிப்படுத்திவிட்டு, திரும்பி கட்டில் அருகே வந்தவள்

“அடியே! செல்லம், எந்திரிடி! உன்னை எத்தனை மணிக்கு டி ரெடியா இருக்கச் சொன்னேன் பக்கி! பக்கி! உன்னால எனக்கும் நேரம் ஆச்சி!…” என்று அவளைப் போட்டு உலுக்கவும், தூங்கிக் கொண்டிருந்தவள் உலுக்கிய திவ்யாவின் கையைப் பிடித்து இழுத்து அவள் மீது ஏறிப் படுத்துக்கொண்டாள். அதில்

“ஆ!…. செல்லம்!…..அடியே!…. பன்னிக்குட்டி எழுந்திரி டி!” என்று அலறிய படி அவளைப் போட்டு அடித்தும் நகராமல்,

அவள் மீதே திவ்யா கூறியது போலப் பன்னிக்குட்டி போல்தான் தூங்கிக் கொண்டிருந்தாள், அவளின் உயிர்த் தோழி செல்லம் என்று அழைக்கப்படும் செல்ல குமாரி.

திவ்யா மீது படுத்திருந்தவளை நகர்த்த முயன்றும் அவள் அசையாமல் இருக்கவும், அவளின் எடை தாங்காது.

“ஆண்டி!…. ஆண்டி!…. என்னைக் காப்பாத்துங்க!…” என்று கத்தியவளின் குரலைக் கேட்டு, இலக்கியா, செல்லத்தின் அம்மா பதறிக்கொண்டு கையில் கரண்டியுடன் வந்தவர்

“எனக்கு அப்போவே தெரியும் இந்தக் கழுதை இந்த வேலைதான் பாக்கும்னு..” என்று வந்தவர் செல்லத்தை உருட்டிவிட்டு திவ்யாவை தூக்கிவிட்டார்.

செல்லமோ மீண்டும் உருண்டுகொண்டு தூக்கத்தை   தொடரவும்  கையில் வைத்திருந்த கரண்டியில் ஒன்று போட்டவர், “சொரணகெட்ட எருமை, தூங்குனா கும்பகர்ண தங்கச்சி மாதிரி தூங்க வேண்டியது”

என்று புலம்பியபடி திரைச்சீலையைத் திறந்துவிட்டு லைட்டைப் போட்டுவிடவும், அதன் வெளிச்சத்தில்  கண்களைச் சுருக்கிச் சிணுங்கியவள்,

“அம்மா…..லைட் ஆஃப் பண்ணு ம்மா” என்று மீண்டும்  உருண்டு படுத்தவளை முறைத்துவிட்டு, அவள் முதுகில் பட் என்று அடித்ததில் அலறிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள் செல்லம்.

எழுந்து அமர்ந்தவளை முறைத்தபடி, “இத்தனை நேரம் நான் அத்தனை அடி அடிக்கிறேன், அப்போ அசையாம, இப்போ லைட் போட்டதும் எழுந்திரிக்கிறதப் பாரு” என்று திவ்யா எண்ணியபடி இருக்க,

“இப்படியே லைட் போட்டாதான் முழிப்பன்னு இருக்கியே டி, உன்னை எந்த நேரத்துல தான் நான் பெத்தனோ” என்று புலம்பியபடி இலக்கியா சென்றுவிட,

எழுந்து அமர்ந்த செல்லம் கண்களைக் கசக்கிக்கொண்டு உடலை நெளித்தபடி அங்கிருந்த திவ்யாவை அப்போதுதான் பார்த்தவளாக,

“ஹே! திவ்வி… எப்போ டி வந்த” என்றவளின் தலையில் நங் என்று ஒன்று வைத்தவள்,

“நான் இங்கு வந்து நீ என் மேல உருண்டது ன்னு உனக்கு எதுவுமே தெரியலயா டி”

என்று கேட்டபடி அவள் கட்டிலில் அமரவும், தலையைத் தேய்த்துவிட்டபடி செல்லம், “அச்சோ! இன்னைக்கு உன் மேல உருண்டுட்டேனா, சாரி டி!” என்று கண்களை சுருக்கி சொன்னவளை,

“அது என்னடி பழக்கம், உன்னை தூக்கத்திலிருந்து எழுப்ப வரவங்க மேல உருளுற பழக்கம்” என்றவள் கேள்விக்கு, “ஈ…” என்று பல்லைக் காட்டியபடி செல்லம் தலையைச் சொரியவும்,

அப்போது உள்ளே செல்லத்தின் அக்கா ஓவியா திவ்யாவிற்குக் காபி எடுத்து வந்து கொடுக்க,

“ஹாய்! அக்கா எப்படி இருக்கீங்க” என்ற திவ்யாவின் கேள்விக்கு ஒரு புன்னகையும் தலையசைப்பும் மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டுப் அவள் போகவும்,

“அக்காவுக்கு என்ன ஆச்சி? ஏன் சோகமா எதுவுமே பேசாம போறாங்க” என்று திவ்யா கேட்ட படி இவள் பக்கம் திரும்ப,  செல்லம்

“அக்கா கதைய அப்புறம் பேசுவோம், இப்போ நீ லீவ் அதுவுமா இங்க இவ்வளவு காலைல வந்த கதைய சொல்லு” என்றபடி அவள் கையில் இருந்த காப்பியை வாங்கி குடிக்கத் தொடங்கியவளை முறைத்து வைத்த திவ்யா

“நாத்தம் நாத்தம்! பல்லு விளக்காம என்ன காப்பி கேக்குது உனக்கு?” என்று அடித்த திவ்யாவை கண்டு கொள்ளாது காப்பியை சூடாக ரசித்து  குடித்து விட்டு, காலி டம்பளரை அவள் கையில் கொடுத்தவள்.

“சொல்லு திவ்வி, இந்த மார்னிங்கே இவ்ளோ நீட்டா கிளம்பி வந்திருக்க, வெளிய எங்கயாவது போறியா டி?” என்றவளை அதிர்ந்து பார்த்தவள்

“ஏ… என்ன விளையாடுறியா டி? நம்ம பேசி வச்சது தான  , நம்ம டென்த் ரிசல்ட் பாத்துட்டு வந்தபோது, என்னும் ரெண்டு நாள்ல மார்க் சீட் வாங்கிட்டு  கையோட க்ரூப் செலக்ட் பண்ண போகணும்னு”

“ஓ… ஆமா சொன்ன… ஆனா எனக்கு இப்போ டயடா இருக்கே டி… இன்னைக்கே போய் ஆகணுமா… திவ்வி” என்று இழுத்தவளை கோபமாக முறைத்த திவ்யா

“சீக்கிரம் போனாதான லூசு, நமக்கு நம்ம  கேட்ட க்ரூப் கிடைக்கும், இல்லனா லாஸ்ட் க்ரூப்ல தள்ளி விட்டுருவாங்க செல்லம்”

“லாஸ்ட் க்ரூப் பா…அப்போ எனக்கு ஓகே, நீ இன்னைக்கு எங்க அக்காவ கூட்டிட்டு நீ மட்டும் போயிட்டு வா, நான் நாளைக்கே போறேன்” என்ற செல்லத்தை,  திவ்யா  மீண்டும் அடிக்கவும், அவளை முறைத்த செல்லம்

“எதுக்குடி இப்போ என்ன அடிச்சிட்டே இருக்க?”

என்று எகுற, அவளுக்கு மேலே எகிறிக்கொண்டு போன திவ்யா, ” மென்டலாவே ஆகிட்டியா டி நீ? நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான மேக்ஸ் க்ரூப் எடுக்க பிளேன் போட்டோம்? அந்த க்ரூப்புக்கு இன்னைக்கே போனாதான டி சீட் கிடைக்கும் நான் சொல்றது உனக்கு புரியலையா டி “

“அதெல்லாம் புரியுது! புரியுது! ……உனக்கு தான் நான் சொல்ல வரது  புரியல, நான் மேக்ஸ் க்ரூப் எடுக்கப் போறதே இல்லை, அப்புறம் எதுக்கு இன்னைக்கு நான் போகணும்” என்றவளை புரியாமல் பார்த்த திவ்யா

“என்னடி செல்லம் பேசுற? எனக்கு ஒன்னும் புரியல”

என்று முழித்தவளின் கையைப் பிடித்து அமர வைத்த செல்லம், “இதோ பாருடி திவ்வி, எப்படி இருந்தாலும் பொண்ணுங்க நம்மள படிச்சி முடிச்சதும் நமக்கு கல்யாணம்தான் பண்ணி வைக்கப் போறாங்க”

“அதுக்கு!”

“அதான், கல்யாணம் பண்ணி வீட்டோட இருக்கப் போற நம்ம எதுக்கு கஷ்டப்பட்டு படிக்கணும்? சிம்பிளா லாஸ்ட் க்ரூப் எடுத்தோமா, ஜாலியா ஈசியா பாஸ் ஆனோமான்னு இருந்திருவோம் டி”

என்றவளை, “அட லூசு!” என்பது போல பார்த்து வைத்தவள்,

“அப்புறம் எதுக்கு டென்த்ல உசுர கொடுத்து படிச்சி நானூறு மேல  மார்க் எடுத்த?”

“அது!… வந்து, நம்ம க்ளாஸ் மேம் டார்ச்சர் தாங்காம படிச்சது டி  அது” என்று தலையை சொறிந்தவளை நம்ப முடியாமல் பார்த்தவள்,

“அப்புறம் ஏன்டி, உன் ஏம்னு கேக்கும்போது எல்லாம் லாயர், இல்ல போலீஸ்னு உளறிட்டு இருந்த?”

“அது நேத்து வரை….., இன்னையில இருந்து, என் ஏம் செஃப் டி , குக்கிங் கத்துக்கிட்டு போற இடத்துல என் அப்பாக்கு நல்ல பேரு வாங்கித் தர போறேன் டி” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமையாக சிரித்தவளை, தலையில் அடித்துக்கொண்டு பார்த்த திவ்யா,

“ஒரு நாள் நைட்லயே எப்படி மற கலண்டவ மாதிரி பேசுற? ரிசல்ட் பாத்து என் கூட ஜாலியா குதிக்குறவர நல்லதானடி இருந்த? இப்போ என்னடி லூசு மாதிரியே பேசுற?

இல்ல, இது வேலைக்கு ஆகாது, நான் ஆன்ட்டி கிட்ட போய்க் கேக்குறேன், உனக்கு என்ன ஆச்சின்னு” என்று எழுந்து போக முயன்ற திவ்யாவின் கையைப் பிடித்து அமர வைத்த செல்லம்,

“திவ்வி! அம்மா கிட்ட இப்போ என்னடி பேச போற?” என்றவளின் கையை உதறியவள்,

“பின்ன, நேத்து வரை பெரிய ஆளா ஆகணும், அப்பாக்கு பெருமை சேக்கணும்னு பேசிட்டு இருந்தவ இப்படி ஒரே நாள்ல தலைகீழா மாறுனா எனக்கு டவுட் வராதா டி?

என்ன என்கிட்ட மறைக்கிற? ஒழுங்க சொல்லு செல்லம்.” என்றவளை கை பிடித்து சமாதானம் படுத்தினாள் செல்லம்.

திவ்யாவும் செல்லமும் இருவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள். அதற்குக் காரணம் இருவரின் வீடும் ஒரே தெருவில் இருப்பதாக கூட இருக்கலாம்.

திவ்யா வீடு தெருவின் ஒரு முனையில் இருக்க, செல்லம் வீடு மறுமுனையில் உள்ளது. அதன் விளைவு நடக்க தொடங்கியது  முதல்  பள்ளி, விளையாடும் இடம் என்று எங்கேயும் ஒன்றாகத்தான் சுற்றி வருவார்கள்.

திவ்யா வீட்டில் அவளுக்குப் பின் இரு தம்பிகள், இவளே மூத்தவள். இங்கு செல்லம் வீட்டிலோ இவள்தான் கடைக்குட்டி.

 திவ்யா எப்போதும் சிறிது பொருப்பாக இருப்பாள் என்றாள், செல்லம் முழுக்க முழுக்க குறும்பு தனத்துடம் இருப்பாள், இதுவும் இருவரின் பிரியாத  நட்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இருவருக்கும் ஒளிவு மறைவு என்று ஒன்று என்றுமே இருந்தது இல்லை.  காலை முதல் தூங்கும் முன் வரை நடப்பதை அனைத்தும் இருவரும் மாற்றி மாற்றி பகிற வில்லை என்றால் அன்று இருவருக்கும்  நாள் போகாது.

அப்படி இருக்க இப்போது இரவு நடந்ததை தோழியிடம் மறைக்க முடியாது திணறிய படி, நெற்றியைத் தட்டி கொண்டு யோசித்துக் கொண்டிருந்த செல்லத்தை, பொறுமை இழந்து உலுக்கி எடுத்தாள் திவ்யா.

“இப்போ என்ன ஆச்சுன்னு சொல்லப் போறியா இல்லயா. இல்ல  நான் போய் ஆண்டிகிட்ட கேட்கட்டா?”

“ஏ… விடு திவ்வி… சொல்றேன்” என்று அவள் கையைத் தள்ளிவிட்டவள் எட்டி வாசலைப் பார்த்துவிட்டு மிக மெதுவாக

“எங்க அக்காவுக்கு இன்னும் மூணு மாசத்துல கல்யாணம்” என்றவளை அதிர்ந்து பார்த்தாள் திவ்யா.

“என்னடி செல்லம் சொல்ற? உங்க அக்கா இப்போதானடி காலேஜ் முடிச்சாங்க, அதுக்குள்ள கல்யாணமா?” என்று அதிர்ச்சியில் கத்தியவளின் வாயில் அடி போட்ட செல்லம்.

“ஷ்… கத்தாதடி” என்று அதட்டவும் திவ்யாவும் செல்லம் போல மெதுவான குரலில்

“உங்க வீட்டுல இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்களா டி?”

என்றதற்கு ஆமாம் என்று தலையசைத்த செல்லத்தைப் பயந்துபோய்ப் பார்த்த திவ்யா.

“அக்காவுக்கு இதுல ஓகேவா டி? அக்கா முகமே ஒரு மாதிரி இருந்துச்சே டி” என்றதற்குப் பெருமூச்சு ஒன்றை விட்டவள்

“அக்காவுக்கு ஒரு பெரிய மருந்து கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு. அவளுக்கு வேலைக்குப் போக தான் ஆசை டி. அதை அப்பாகிட்ட சொல்லி பெரிய சண்டை நைட்டு”

“அப்புறம்?”

“அப்புறம் என்ன? அப்பா ‘நீ கல்யாணம் பண்ணி உன் புருஷன்கிட்ட கேட்டு எத்தன வருஷம் வேணா வேலைக்குப் போ, இப்போ என் பொண்ணா நீ இருக்கற வரை வேலைக்குப் போகக் கூடாது’ன்னு சொல்லிட்டாங்க”

“அப்போ இதான் காரணம்” என்றவளுக்கு ஆம் என்று இவள் தலையாட்டவும், ஆட்டிய தலையில் கொட்டியவள்

“அப்பா சொன்னாங்கன்னா என்னடி! அவரோட செல்லப் பிள்ளதானே நீ லூசு! அவர்கிட்ட போய் அக்கா காகப் பேசி ஒத்துக்க வைக்காம இங்க வந்து மண்டையை ஆட்டிட்டு இருக்க”

என்றவளை முறைத்தவள் “அப்பாகிட்ட பேசாம இல்ல, நான் போய் பேசினேன் ‘ஏன்ப்பா அக்காவ வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொல்றீங்க? அக்கா பாவம், அலுகுறா பாருங்கன்னு’”

“சரி! அதுக்கு அங்கிள் என்ன சொன்னாங்க?”

“அப்பா, ‘வெளில பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்ல, இது தெரியாம அக்கா பேசுறா. இந்த அப்பாக்குத் தெரியாதா செல்லம், உங்களுக்கு எத எப்போ பண்ணணும்னு’ சொன்னாங்க.

அப்பா சொல்றது சரிதானடி? இத்தன வருஷம் நமக்காகத்தானே எல்லாம் பார்த்துப் பார்த்துச் செஞ்சிருக்காங்க, அப்பா அவருக்குத் தெரியாததா டி நமக்கு எது சரின்னு “

“உன்கிட்ட போய்க் கேட்டேன் பாத்தியா? என்ன சொல்லணும்? நீ சும்மாவே உங்க அப்பா சொன்னா பூமி வட்டம் இல்ல சதுரம்னு நம்புற ஆளு, உன்ன போய்!” என்று அழுத்து கொண்டு எழுந்தவள்.

இடுப்பில் கை வைத்துக்கொண்டு “அப்போ உன் முடிவு லாஸ்ட் க்ரூப் எடுத்து உங்க அப்பா சொன்ன மாதிரி நடக்கப் போறது தானா?” என்றதற்கு  ஆமாம் என்று தலையசைத்தவள்

“அப்பா சொன்னா சரியாதான் இருக்கும்” என்று வேறு பேசவும் , கண்களை மூடி மறுப்பாக தலையசைத்தவள்

“உனக்குப் பயமா இல்லையா டி எதிர்காலத்தை நினைச்சி? அப்பா அப்பான்னு அவரை நம்பியே இருக்கியே, ஏதாவது தப்பா ஆகிடுமோன்னு தோனவே இல்லையா ?” என்றதற்கு மறுப்பாக தலையை அசைத்தவள்

“அப்படி என்ன தப்பா ஆகிடும்…” என்று சிரித்தவளின் முகம்தான் இப்போது, முகம் முழுக்க ரத்தம் வழிய,

தரையில் வலியில் துடித்தபடி முகம் கசங்கி,  அருகில்  யாரேனும் இருக்கிறார்களா என்று கூட பார்க்க முடியாத கண்களை வைத்து கொண்டு. வயிற்றில் குத்தப்பட்டிருந்த பீங்கானை எடுக்க முயன்று கொண்டிருக்கிறாள்.

என்ன நடந்திருக்கும்? இப்படி உயிருக்குப் போராடும் அளவு அவளுக்கு என்ன தான் ஆகியிருக்கும்?.