தலையை ஒரு பக்கம் கையால் தாங்கியிருந்தவர், “அவ பத்தி எதுவும் ந்யூஸ், போட்டோ வரக்கூடாது, உங்க பிள்ளைகிட்ட சொல்லி வைங்க. உங்களால முடியாதுன்னா நான் பார்த்துக்கறேன். கீதா இப்ப சந்தோஷமா கனடால இருக்கா. அதை கெடுக்கற மாதிரி எதுவும் நடக்கக் கூடாதுன்னு ஒரு மாதிரி மிரட்டினார்.”
மனதிற்குள் கெட்ட வார்த்தைகளால் வசைபாடினான். “அவன் பொண்ணு அப்படியே குடும்ப குத்துவிளக்கு! வந்துட்டான் பேச. அங்க புருஷன்ற பேர்ல ஒரு டம்மியை வெச்சிட்டு அவ அடிக்கற கூத்து தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்காரா? இனியொரு தரம் போன் செய்தா, எங்கிட்ட பேசச் சொல்லிட்டு கால் கட் பண்ணுங்கம்மா. அவன் தெரிஞ்சுதான் உங்ககிட்ட கூப்பிட்டு சொல்லியிருக்கான்”, பல்லைக் கடித்தான்.
மெதுவாக ஏன் இந்த செய்தி வந்தது என்று பின்னணியை விளக்கவும் இன்னும் ஆயாசமாகப் பார்த்தார் பிருந்தா.
“அவளுக்கு இன்டர்வ்யூ பண்றதுதான்மா பிடிச்சிருக்கு. பிரமோஷன் மாதிரி நான் முன்னாடியே தரேன்னு சொல்லும்போதுகூட இல்லை வேணாம்னு சொன்னா. இது ஜஸ்ட் ஒரு வாட்டிக்காக ஏன்மா மாத்திக்கணும்?”
“இல்லைடா. இந்த மாதிரி கல்யாணத்துக்கு அப்பறமும் வில்லங்கத்தை கூட்டிட்டு வந்தா, எத்தனை பேருக்குன்னு பதில் சொல்றது? வசந்தா உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்துதா? ஏன் எங்கிட்ட சொல்லாம மறைச்சுட்ட, அப்படி அன்னியமாபோயிட்டோமா நாங்கன்னு சண்டை போடறா. இவ வாழ்க்கையில வேற எதாவது சம்பவம் இருக்காடா? நல்லா விசாரிச்சியா? “ பிருந்தாவின் பேச்சு அவினாஷிற்கு பிடிக்கவில்லை.
அவர் நோக்கம் புரிகிறது. குடும்பம் மற்றும் பிள்ளையின் பேர் கெடாமல் இருக்கவேண்டும் என்றுதான் பேசுகிறார். ஆனாலும் குமுதினியிடம் எதுவும் கேட்டுவிடுவாரோ என்று கவலையாகிப்போனது.
“இது பத்தி இப்ப குமுதினிகிட்ட பேச வேணாம்மா. கொஞ்ச நாள் போகட்டும். அவளுமே ஸ்ட்ரெஸ்ல தான் இருக்கா.”, என்று மட்டும் சொல்லி வைத்தான்.
சிம்மன் வீட்டிற்கு வந்தவன், எப்போதாவது கையில் எடுக்கும் விஸ்கியை இன்று எடுத்து அமர்ந்திருந்தான். வெளியே எங்கும் செல்லவோ, யாரையும் பார்க்கவோ பிரியப்படவில்லை. நாள் முழுதும் அவனுடன் இருந்த பிரபஞ்சனையும் அனுப்பிவிட்டான். யூட்டூபர் விசாரணையில் எதுவும் கூறினால், கார்த்திக் மூலமாக வரும் செய்தியை மட்டும் சொல், மற்றபடி அலுவல் சம்மந்தமாக எதற்கும் அழைக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தான்.
கோப்பையில் இருந்த திரவத்தைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். அன்று குமுதினி கடிதம் எழுதிவிட்டு நிஜமாகவே அவனை வேண்டாம் என்று முடிவெடுத்துச் சென்றுவிட்டாள் என்று புரிந்தபின் அடுத்த சில மாதங்களை இதே விஸ்கியைக் கொண்டுதான் தள்ளினான்.
குமுதினியின் பாட்டியைப் பார்த்து அவரும் கடிதத்தில் இருப்பதையே தன்னிடமும் சொல்லிச் சென்றுவிட்டாள், எனக்கும் எங்கே என்று தெரியாது என்று பயந்து அழுது அரற்றியபின் நிஜமாகவே குமுதினி சென்றுவிட்டாள் என்று உணர்ந்த நேரம், மிகவும் கடினமானது.
எங்கேயிருந்தாலும் அவளை கண்டுபிடிக்கிறேன் என்று சூளுரைத்து வீட்டைவிட்டு யத்தனிக்க, வாசலிலேயே நின்றிருந்தார் நரசிம்மன்.
“ஓ.. ஓடுகாலி வீட்டைவிட்டு ஓடிப்போய் மூணு நாளாச்சு. இப்ப அவளை தேடி போய் இருக்கற கொஞ்ச நஞ்ச மான மரியாதையையும் காத்துல பறக்க விடப்போறியா?”
“ப்பா…”
“ஜாதி மாறி கல்யாணம் பண்ணிகிட்டு வந்தாலும், ஒரே பிள்ளை அவன் விருப்பம்தான் முக்கியம்னு ஏத்துக்கிட்டேன். இருவது வருஷமா கண்ணா வளர்த்த பாட்டியை விட்டு, அவ வீட்டைவிட்டு உன் கூட ஓடி வந்தா. இப்ப உனக்கு ஒரு லெட்டரை எழுதி வெச்சிட்டு எங்க யாரோட ஓடிப் போனாளோ?
“அப்பா….”
“நான் பேசலைன்னாலும் ஊரு பேசும்டா. ஆனா அவளைத் தேடி நீ போனன்னு வை, நீயெல்லாம் ஆம்பளையான்னு சிரிப்பா சிரிப்பானுங்க. நம்ம பெருமை, பரம்பரை எதுவும் தெரியாத அவ நம்ம மான மரியாதையை காத்துல விட்டுட்டு போனா, எல்லாம் தெரிஞ்ச நீயும் அதையேதான் செய்வியாடா? அதெல்லாம் பார்க்கற சக்தி எனக்கில்லைடா. என்னை கொன்னுட்டு போ.”, கண்ணீர் மல்க கை கூப்பியவர், நாற்காலியில் அமர்ந்தார்.
எதற்கும் கலங்காத எப்போதுமே கம்பீரமாக வளையவரும் தந்தையை இந்தக் கோலத்தில் பார்த்தவனுக்கு குமுதினியின் மீது பெரும் கோபம் வந்தது. இப்படிப்பட்ட தந்தையை அவமானத்திற்கு உள்ளாக்கிவிட்டோமே என்று அவன் மீதே வெறுப்பும் வந்தது. அமைதியாக அவன் அறைக்குத் திரும்பினான்.
கோபம், கழிவிரக்கம், வெறுப்பு, குழப்பம் என்று பல வகையான உணர்வுகள் எண்ணங்கள். அதிலிருந்து விடுபட கையில் எடுத்தது விஸ்கி. ஆறு மாத காலம் செல்ல, அவன் தாயின் நினைவு நாள். முதல் நாளே முத்தையன் அவன் அறைக்கு வந்து இரு முறை ஞாபகப்படுத்திவிட்டு சென்றிருந்தான். காலையில் எழுந்து, தாடி மீசையை சரி செய்து, குளித்து வெகு நாட்களுக்குப் பின் சற்றே தெளிவாக வெள்ளை வேட்டி சட்டையில் பூஜைக்கு வந்து நின்றான்.
அவன் வந்ததும், தன் மனைவியின் படத்திற்கு கற்பூரம் காட்டிய நரசிம்மன், தீபத்தை அவனிடம் நீட்டி, “என் மேல சத்தியம் செய் சிம்மா. இனியும் போனவளை நினைச்சு உன் வாழ்க்கையை சீரழிச்சுக்காம, உன் திறமையை, வேகத்தை தொழில்ல காட்டி, வாழ்க்கையில் சாதிப்பன்னு என் மேல உங்க அம்மாவோட நினைவு நாள்ல சத்தியம் பண்ணு.”
அவரையே பார்த்திருந்தான் சிம்மன். “கஷ்டம்னு வந்தா கொஞ்ச நேரம் சோர்ந்து போலாம், ஆனா மொத்தமா ஒடிஞ்சு போயிடக்கூடாது. தன்னையே மீட்டு எடுத்து விஸ்ரூபமெடுக்கறவங்கடா நம்ம பரம்பரை. உங்கம்மா போனப்பறம் நான் படாத வேதனையா? ஆனா மீண்டு வந்தேன். உனக்காக. இப்ப எனக்காக நீ இதைத் தாண்டி வரணும்”, மறுப்பே சொல்லக்கூடாது என்பதாக பிடிவாதமாக நின்றுவிட்டார் நரசிம்மன்.
அன்று தொடங்கிய ஓட்டம். முதல் இரண்டு ப்ராஜெக்ட் தந்தையின் தொடர்புகள் மூலம் செய்து முடித்தவன், அடுத்தடுத்து அவர் விரும்பிய விஸ்ரூப வளர்ச்சியை நோக்கித்தான் ஓடினான், ஓடிக்கொண்டிருக்கிறான்.
வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த அவனது பர்சனல் கைப்பேசி அழைத்து சிம்மனின் கவனத்தை மீட்டது. முத்தையன் அழைப்பு.
“ஹலோ என்ன முத்தையா?“, கேட்டாலுமே அவனது பேட்டியைப் பார்த்தபின் அழைப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்தான்.
“சின்னையா… உங்க பேட்டியை அப்பா பார்த்தாருங்க. அதுலர்ந்து….. ரொம்ப கோவமா இருக்காருங்க. ஏன் வலிய போய் நீங்க பேட்டி குடுக்கறீங்க? அவ எப்படி போனா என்ன? அதான் புதுசா ஒருத்தனை புடிச்சிருக்காளே அவன் பார்த்துக்கப்போறான்னு திட்றாருங்க. இப்பவும் ஸ்பீக்கர்ல போட்டு பேசறேனுங்க, ஐயா கேட்டுகிட்டு இருக்காருங்க.”, பவ்யமாகப் பேசினாலும், கடகடவென்று பேசிவிட்டான் முத்தையன்.
“அவர்கிட்ட எதுக்கு இதெல்லாம் காட்டினீங்க?”, என்று சலித்தவன்,
“அப்பா. என் பேரும் தொழிலும் கண்டவனுங்க இட்டுகட்டிப் பேசி கெடுக்க இடம் குடுக்க வேணாம்னுதான்ப்பா இப்படி ஒரு பேட்டி. எவனோ எங்க கல்யாண சர்ட்டிஃபிகேட் வெச்சு இதை இப்படி ஊதி பெருசாக்கியிருக்காங்க. அவனைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.”, சிம்மனின் விளக்கம் எதுவும் கேட்கப் பிடிக்காமல், குழறலாக மறுத்தார் நரசிம்மன்.
“ஓடிப்போனப்பவே அவளை அத்துவிட்டாச்சுன்னு ஒரதா கையக்கழுவாம நீ ஏன் அவ கூட போய் உட்கார்ந்த. மான ரோஷமே இல்லையா?”, கோபத்தில் வார்த்தைகள் திக்க, சற்று சிரமப்பட்டே சிம்மனுக்கு அவர் பேசியது புரிந்தது.
“ப்பா… அமைதியா மாத்திரையை போட்டுட்டு படுங்க. கஷ்டப்பட்டு வளர்த்த தொழில், பேரு எனக்கும் முக்கியம்தான். அதைத்தான் காப்பாத்தினேன். நீங்க சொல்ற மாதிரி செஞ்சிருந்தா, பிரச்சனை என் பேர்லயும் திரும்பும். இங்க விவேகம்தான் தேவை. முத்தைய்யா, அவரை ஜாக்கிரதையா பார்த்துக்க. இனி இந்த மாதிரி விஷயமெல்லாம் அவர் காதுக்கே போக்கக்கூடாது. உன் எஜமான விசுவாசம், அவர் உடம்பைவிட, உயிரைவிட முக்கியமா போச்சா உனக்கு?”, என்று எகிறிவிட்டே வைத்தான்.
மொத்தத்தில் அன்றைய இரவு அவினாஷ், சிம்மன் இருவருமே குமுதினியால் பெற்றவர்களின் வருத்ததை சம்பாதித்துக்கொண்டனர். இது எதுவும் அறியாத குமுதினியோ, அன்றைய நாளில் பல உணர்வுகளின் தாக்கத்தால் பந்தாடப்பட்டதின் விளைவாக அடித்துப்போட்டது போல தூங்கிக்கொண்டிருந்தாள்.