அத்தியாயம் – 8

தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான் அவினாஷ். மீண்டும் மீண்டும் நடந்தவற்றையே மனம் அலசிக்கொண்டிருந்தது. ஒரு சிக்கல், அதை உணர்வது என்பது ஒன்று, நடக்கும்போதே அதன் நுனி அறிந்து சத்தமின்றி முடக்குவது என்பது வேறு. அப்படி ஒரு ஆளுமை தன்னிடம் இல்லாததும், சிம்மனிடம் இருந்ததும், அது கண்கூடாக இன்று வெளிப்பட்டதும்தான் அவினாஷிற்கு செரிக்க முடியாத அவஸ்தையைக் கொடுத்தது. அட செய்துவிட்டு அவன் அலட்டியிருந்தால் கூட ஒரு ஆறுதல் கிடைத்திருக்கும். அதைப் பற்றிய பேச்சையே தட்டிவிட்டு சென்றதில் இன்னுமே முரண்டியது.

பிரஸ் மீட் எதிர்பார்த்தபடியே சில மீடியா மற்றும் பல யூட்டூப் சானல்களிலிருந்து வந்த நிருபர்களால் நிரம்பியிருந்தது. வந்தவர்களுக்கு காபி, டீ, ஸ்னாக்ஸ் என்று சிறப்பான கவனிப்பும் ஆஷ் மீடியாஸ் சார்பில் வழங்கப்பட்டிருந்தது.

ஆஷ் மீடியாசில் ப்ரத்யேக அறையில் இருந்த சிறு மேடையில் மூன்று நாற்காலிகள் இருக்க, மேசையில் அத்தனை மைக்குகள் வைக்கப்பட்டிருந்தது.  வீடியோ காமெராக்களுடன் ஆட்கள் ஒரு பக்கம் செட் செய்துகொண்டிருந்தார்கள்.

ஐந்தேகால் போல நடுவில் குமுதினி அமர அவள் இருபுறமும் சிம்மனும் அவினாஷும் வந்து அமர்ந்தார்கள்.

வந்திருந்தவர்களை வரவேற்றுவிட்டு, மீண்டும் ஒரு முறை தன் அறிக்கையை சுருக்கமாக வாசித்தாள் குமுதினி. கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்தவுடன்,

அவர்கள் எதிர்பார்த்திருந்தபடியே குமுதினி, ஜெயசிம்மன் பற்றிய கேள்விகள் , ஏன் திருமணம் முறிந்தது என்பதாக வர, இலகுவாகவே பதிலளித்துக்கொண்டிருந்தனர்.

“குமுதினி மேம் நீங்க கல்யாணமானவங்கன்னு ஏன் இதுவரைக்கும் மறைச்சிட்டீங்க? இதுல உள் நோக்கம் எதுவும் இருந்துதா?”, மூலையிலிருந்து ஒரு கேள்வி.

“ஒரு உள்  நோக்கமும் இல்லை, சொல்ல வேண்டிய தேவையும் வந்ததில்லை. பிரிஞ்சு வந்தப்பறம்  என்னோட வளர்ச்சிக்கான பாதையில் மட்டும் கவனம் வெச்சிருந்தேன்.”, என்று முடித்துவிட்டாள்.

“நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போற அவினாஷ் சார்கிட்ட கூடவா சொல்லலை?”, அந்த பச்சைசட்டைக்காரனே மீண்டும் கேட்டான்.

“எங்கிட்ட சொல்லியிருந்தாங்க ப்ரோ. ஏதோ கிராமத்து கோவில்ல பண்ண கல்யாணம், ரிஜிட்டர் மேரேஜ் இல்லைன்னவும் பெருசா யோசிக்கலை.”, அவினாஷ் பதிலளித்தான்.

“உங்களுக்கு கல்யாணம் லீகல்னு எப்ப எப்படி சர் தெரிஞ்சுது?”

“நாங்க கலயாணம் பண்ணப்போறதா அறிவிப்பு செஞ்சதும், அதைப் பார்த்து மிஸ்டர் ஜெயசிம்மன் கான்டாக்ட் செய்தார். அப்பறம் லீகல் ஒபினியன் வாங்கினோம். அப்போதான் தெரியும்.”

“குமுதினி மேடம், உங்களுக்கு அப்போ எப்படி இருந்தது? “

“அதிர்ச்சியாத்தான் இருந்தது. ஆனால் இது ஜஸ்ட் ஒரு லீகல் இஷ்யூ, சரி செஞ்சுட்டு அப்பறம் கல்யாணத்துக்கு தேதி குறிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்.”

“அவினாஷ் சர். சிம்மன் சர் கூட ஜெய்கிஷன் ப்ரிவ்யூல சண்டை வந்ததும் இதுதான் காரணமா? ஏன் கைகலப்பு வரை போச்சு சர்?”, சிம்மன் மொபைலை நோண்டிக்கொண்டிருக்க, அவினாஷ் பல்லைக் கடித்தவன், “அது அப்போ, ஜஸ்ட் ஹீட் ஆஃப் தெ மொமென்ட். பேசி சரி பண்ணிட்டோம்.”

மற்றொரு மூலையிலிருந்து ஒரு குரல், “மேடம், இப்படி முன்னாள் இன்னாள்னு இரண்டு பேரோட உட்கார்ந்திருந்திக்கறது உங்களுக்கு எப்படி ஃபீல் ஆகுது?”

சிம்மன் நிமிர்ந்தான். அவினாஷ் முகம் இறுகியது. “எப்படி இருக்கும்னு நினைக்கறீங்க? சங்கடமாத்தான் இருக்கு.”, குமுதினியே பதிலளித்தாள்.

“இன்னும் உங்க ஹஸ்பண்ட் மேல ஃபீலிங்க்ஸ் இருக்கா மேடம்? குத்துவிளக்கேத்தி பில்டிங் எல்லாம் திறந்து வெச்சு ஒரே கலர்ல ட்ரெஸ் எல்லாம் போட்டிருந்தீங்க?”, மெதுவாக வன்மம் வெளிவரத் தொடங்கியது.

“அவரோட வளர்ச்சியில் ரொம்பவே சந்தோஷம்தான். திறப்பு விழாக்கு அழைச்சிருந்தார். நானும் அவினாஷும் போயிருந்தோம்.  அன்னைக்கு எதிர்பாராம ஒரே நிறத்துல ட்ரஸ் அமைஞ்சிருந்தது.“

“ஜெய்கிஷன் ப்ரீமியர் ஷோவுக்கு அவினாஷ் சர் கூட ட்ரெஸ் மாட்ச் பண்ணிருந்தீங்க…”, அதே நிருபர் தொடர்ந்தான்.

“அதுக்கு? என்ன கேட்க வரீங்க? புரியலை. நெக்ஸ்ட்”, என்று தாவப் பார்த்தாள் குமுதினி.

“உங்க வாழ்க்கையில் இப்ப நீங்க மறுத்தாலும் இரண்டு ஆண்கள் இருக்காங்க. இது நல்ல ஒரு உதாரணமா நினைக்கிறீங்களா? குமுதினி அரசியல் மேடை நிகழ்ச்சியில் காட்டுற கண்டிப்பு, நேர்மை எல்லாம் உங்க தனிப்பட்ட வாழ்க்கையில இல்லையா?”

இடமே சற்று சூடானது. பதிலைக் கேட்க  அறை அமைதியானது.

“என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மையா இருக்கணும்னுதான் இது என் பர்சனல் என்றாலும், பதில் சொல்லிட்டு உட்கார்ந்திருக்கேன்.   என்னை  புரிஞ்சதாலதான் ஜெய்சிம்மனும் அவினாஷும் இங்க இருக்காங்க. இரண்டு பிசினஸ் மென்னும் அவங்க பர்சனல் எதுவும் பொது வெளியில் பேசினதில்லை. என்னால இப்ப இங்க வந்து உட்கார்ந்திருக்காங்கன்றதே எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு. ஆனா ந்யூஸ் பைட்டுக்காக நீங்க இப்படி என்னை என் காரெக்டரை அசிங்கப்படுத்தறது உங்களைத்தான் மட்டமா காட்டும்.”, எவ்வளவு முயன்றும் குமுதினியின் குரலில் கோபம் எட்டிப்பார்த்தது. ஆனாலும் உண்மையை பேசுகிறோம் என்ற தெளிவும் தைரியமும் அவள் குரலில் இருந்தது.

“இரண்டு பேரோடவும் தொடர்புல இருக்கீங்க. அது…” என்றவனை இடைமறித்து,

“மைண்ட் யுவர் வொர்ட்ஸ்”, என்று எச்சரித்தான் அவினாஷ்.

“இல்லை சர். இரண்டு பேர் கூடவும் ஃப்ரெண்ட்லியா இருக்காங்க. “

“அதுனால?”

“நீங்க அவினாஷ் சர் எக்ஸ் வைஃப் கூட ஃப்ரெண்ட்லியா இருக்கீங்களா மேடம்? அவங்க சர் கூட பார்க்க முடியறதில்லையே? உங்களை அவங்களுக்கு அறிமுகப்படுத்தினாரா சர்?”

“இது தேவையில்லாத கேள்வி. அவங்களை அறிமுகப்படுத்தற தேவை இன்னும் ஏற்படலை.”

“இல்லை சர். இப்ப ஆண்கள் நீங்க இரண்டு பேரும் விட்டுக்குடுத்துப் போறீங்க. அதுமாதிரி பெண்கள் சைடுல எப்படின்னு கேட்க விரும்பினேன்.”, என்றவன் சிரிப்பே அவினாஷை எரிச்சலடையச் செய்தது.

“நீங்களுமே டைவர்சின்றதால குமுதினி மேடம் விஷயத்தை ஈசியா அணுக முடியுதுன்னு நினைக்கறீங்களா சர் ?” இதுவே உங்களுக்கு இது முதல் கல்யாணமா இருந்திருந்தா உங்க முடிவு மாறியிருக்குமா சர்?”

யாருடா நீ? எங்கேந்துரா வரீங்க? என்பதாகத்தான் எண்ணம் ஓடியது அவினாஷிற்கு. என்னவோ குமுதினியை விட்டுவிட்டு தன்னை டார்கெட் செய்கிறானோ என்று தோன்றியது.  குமுதினியை வளைத்து வளைத்து கேள்வி கேட்பார்கள், வன்மம் வக்ரம் அதிகமானால் எப்படி சமாளிப்பது என்று யோசித்திருந்தவன், தன்னை நோக்கி தோட்டா பாயும் என்று நினைக்கவில்லை.

மேலும் அவனே அடுத்த கேள்வி கேட்க ஆரம்பிக்கவும், சிம்மன் மைக் முன் வந்து, முதல் முதலாக இதைப் பற்றிய செய்தி போட்ட யூட்டூபர் கைது என்ற தகவல் போலீசிடமிருந்து வந்ததாக தெரிவித்தான்.

 “ஏன், இது எங்களுக்கு மிரட்டலா?”, “மோசமாகப் பேசினால் போலீஸ் கேஸ் ஆகும்னு குமுதினி சொன்னதை இப்ப செய்யறாங்களா?”, “கைதுகள் இன்னும் தொடருமா?”, என்று கேள்விகள் திசைமாறின.

சிம்மன் தான் குடுத்த புகாரின் பேரில் நடந்த கைது. யார் மூலம் இது கிடைத்தது என்ற விவரம் வேண்டும் என்பதால் கைது, விசாரணை என்று விளக்கினான். இன்று இத்தனை விளக்கங்கள் கொடுத்த பின் மீடியாவில் யூகங்கள்  நின்றுவிடும் என்று நம்புவதாகக் கூறினான். ஆனால் அவன் பேச்சு உடல்மொழி அனைத்தும், நிற்க வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தியது.

மேலும் ஒன்றிரண்டு கேள்விகளுக்குப் பின் இடம் அமைதியானது. சிம்மன் எழுந்து நன்றி என்று சொல்ல, அடுத்து குமுதினியும் அவினாஷும் சொல்லிவிட்டு தொடர்ந்தனர்.

மீட்டிங் அறைக்குத் திரும்பும் வரை யாரும் பேசவில்லை. “யார் அவனுங்க இரண்டு பேர்? சட்டுனு அமைதியாகிட்டாங்களே எப்படி?”, குமுதினி கேட்க, அவினாஷ், சிம்மனைப் பார்த்தான்.

“பேட்டி எடுத்த உன்னை அசிங்கப்படுத்தினா மட்டும் போதுமா, உன்னை இஷ்டத்துக்கும் ஆட விடற உன் ப்ரொட்யூசர் ப்ளஸ் ஃபியான்சே சேர்ந்து அசிங்கப்பட்டாதானே நல்லாயிருக்கும்? அடுத்த முறை மோதவேணாம்னு உனக்கு எடுத்துச் சொல்வாங்கல்ல?”, சிம்மன் சொல்ல,

”நிகழ்ச்சியோட கன்டென்ட் அவினாஷ்க்கு பொதுவான சம்மரியாதான் போகும். நான், டைரக்டர் எடிட்டர்தான் ஃபைனல் முடிவு பண்ணுவோம்.”

குமுதினி சொல்லவும், “அது அந்த புண்ணாக்கு அமைச்சருக்கு தெரியாதில்லையா? இரண்டு பேரையும் சேர்த்து அசிங்கப்படுத்துன்னு பணம் குடுத்து ஆர்டர் போயிருக்கு.”

“என்ன செஞ்சு அவனுங்களை அடக்கினீங்க சிம்மன்?”, அவினாஷ் அமைதியாகக் கேட்கவும்,

“பணம்தான் வேறென்ன? பிரபா எங்க ஆள் ஒருத்தன் மூலமா கேட்டவரை போதும்னு சொல்லி கவர் குடுத்துவிட்டான். டாப்பிக்கை மாத்த கைது விவகாரத்தை யூஸ் பண்ணிக்கிட்டேன்.”,இலகுவாகவே கூறினான் சிம்மன்.

“எனக்குத் தெரிஞ்சு இந்த ஆள் தூண்டிவிட்டதுனாலதான் இத்தனையும். ஆனாலும் அவனுக்கு எப்படி அந்த டாக்குமென்ட் கிடைச்சுதுன்னு தெரியணும். சரி, நான் கிளம்பறேன். குமுதினி பிரபாவை விட்டு ட்ராப் பண்ண சொல்லவா?”

“இல்லை  நானே போயிடுவேன் ஜெய்.”, குமுதினி மறுக்க, அவினாஷின் நன்றியை இடைமறித்தவன், “விடு பார்த்துக்கலாம்”, என்றதோடு கிளம்பிவிட்டான்.

வீட்டிற்கு வந்த பின் மீண்டும் ஒரு முறை பிரஸ் மீட்டை ஓட விட்டுப் பார்க்க, சிம்மனிடமும், குமுதினியிடமும் தெரிந்த ஆளுமை தன்னில் குறைவாக இருந்தது நன்றாகவே தெரிந்தது. அதற்கேற்றது போலத்தான் கமெண்ட்ஸ் வந்துகொண்டிருந்தது.

குமுதினியின் நேர்மையான பதில்கள் பெண்களிடமும், இளைய தலைமுறையிடமும் வரவேற்பை பெற்றிருந்தது. வழக்கம் போல அசிங்கமாக பேசுபவர்கள் கற்பனையை கொட்டியிருந்தார்கள், ஆனால் மறுமணம் புரிந்த பலரும் ஆண், பெண் பேதமின்றி, குமுதினியின் நிலையை உணர்ந்திருக்கிறோம். என்ன செய்வது, கடந்துதான் வரவேண்டும். இருவரும் சுமூகமாக இருப்பது பாராட்டத் தக்கது என்று கருத்துகள் பதிவிட்டிருந்தனர்.

அவன் வீட்டு ஆஃபீஸ் அறையில்தான் அமர்ந்திருந்தான் அவினாஷ். கதவை தட்டிவிட்டு பிருந்தா உள்ளே வந்தார்.

“எவ்வளவு நேரம்டா இங்கேயே இருப்ப? ஊரை கூட்டி விளக்கம் சொன்னவன், பெத்தவளுக்கு சொல்ல மாட்டியோ?  நானும் டி,வி பார்த்துதான் எல்லாம் தெரிஞ்சுக்கணுமோ?”, கடுப்புடன் எதிரில் அமர்ந்தார்.