“அந்த சர்ட்டிஃபிகேட் காப்பி, நான் உனக்கு அனுப்பினேன். நீ வேற யாருக்கும் அனுப்பினியா?”, சிம்மன் கேட்கவும்,

“அவினாஷுக்கு மட்டும்தான் அனுப்பினேன்”, என்றாள் குமுதினி. அவினாஷைப் பார்த்தான் சிம்மன்.

“லாயர் திலீப்புக்கு மட்டும்தான் நான் அனுப்பினேன்”, என்று அவினாஷ் சொல்லும்போதே முகம் சற்றே கறுக்க, தலையில் தட்டிக்கொண்டான் சிம்மன்.

“லாயருக்கு இது வாட்சப்ல அனுப்பற விஷயமா? இப்படியா கேர்லெஸ்சா இருப்ப? போனைப் போட்டு அந்த லாயர் யாருக்கும் அனுப்பிச்சாரான்னு கேளு”

சிம்மன் சொல்லி முடிக்கும் முன்னர் சற்று தள்ளி நின்றிருந்த ஜாஸ்மின் திலிப்பின் அலுவலகத்திற்கு அழைத்திருந்தாள். இரு முதலாளிகளும் அவர்களின் அசிஸ்டென்டிற்கு வக்காலத்து வாங்க, இருவரும் அறையில் இருந்தனர்.

அவினாஷ், “அவர் சீனியர் லாயர். கான்ஃபிடென்ஷியலாத்தான் இருப்பார்”, என்று சொல்லும் போதே, போனை அவனிடம் தந்தாள் ஜாஸ்மின்.

“திலீப் சர்”

“ஹலோ அவினாஷ். டெசிஷன் எதுவும் எடுத்தீங்களா?”, என்றவருக்கு இன்னும் விஷயம் தெரியாது என்பது புரிய சுருக்கமாக விளக்கினான்.

“உங்களுக்கு வாட்சப்ல அனுப்பின அந்த கோவில் சர்ட்டிஃபிகேட் வேற யார் கைக்கும் போச்சா சர்?”

“ஹ்ம்ம்…  உங்களோட மீட்டிங் முடிஞ்சதும், என் அசிஸ்டென்ட்க்கு அனுப்பினேன். உங்க கேஸ் எடுக்கற வரைக்கும்  ஒரு டெம்ப்ரரி கேஸ் ஃபைல் சர்வர் ஃபோல்டர்ல இருக்கும்.  உங்க கேஸ் பத்தின டீடெயில், கூட இதுவும் சேவ் ஆகியிருக்கும். பட் ஹானஸ்ட்லி, இதைவிட நிறைய சென்சிட்வ் டீடெய்ல்ஸ் தினம் தினம் ஹாண்டில் பண்றோம் அவினாஷ். இங்கிருந்து போயிருக்க வாய்ப்பில்லை, இருந்தாலும் ஒரு முறை செக் பண்றேன். பேசிட்டு அப்டேட் சொல்றேன்.”, என்று வைத்துவிட்டார்.

பல்லைக் கடித்தான் சிம்மன். “லாயர்கிட்ட காட்டினா பத்தாதா? எப்ப பேசின அவர்கிட்ட?”

“மால் ஓப்பனிங் அப்பறம்.”, அவினாஷின் பதிலில் அவர்கள் இருவரையும் பார்த்தவன்,  நக்கலாக, “டைவர்ஸ்க்கு என் சம்மதிமில்லாம வேற ஆப்ஷன் இருக்கான்னு கேட்க போனீங்களாக்கும்? “, என்றதில் அவினாஷ் தோளை குலுக்கினான்.

அதை புறக்கணித்த சிம்மன், “பிரபா, கார்த்திக் எதுவும் சொன்னாரா?”, என்று நடப்பதில் கவனம் செலுத்த, ஜாஸ்மின், “அவினாஷ், பி.ஆர். ஹெட் பார்க்கறதுக்கு வெயிட் பண்றார். ஒரு ஸ்டேட்மென்ட் ரெடி பண்ணி எடுத்துட்டு வந்திருக்கார்.”

அடுத்த அரை மணி நேரம் பரபரப்பாக சென்றதில், கண்டிப்பாக குமுதினியின் பெயரைக் கெடுக்க வேண்டுமென்றே வைரலாக்க முயற்சிகள் நடப்பது போலிருப்பதை போலீஸும் , அவினாஷின் மீடியா டீமும் ஓரே முடிவுக்கு வந்திருந்தனர்.

சிம்மன் அவினாஷ் எழுதி வந்திருந்த அறிக்கையில் சில திருந்தங்களைக் கூறினான். கூடவே இருவரின் லாயர்களும் கூட படித்து ஒப்புதல் அளித்தனர்.

பி.ஆர் ஹெட் அனுபவஸ்தர். “சர்…மேடம் முதல்ல ஸ்டேட்மென்ட் படிக்கட்டும். தேவையில்லாம அவதூறு பரப்பரவங்க மேல கம்பளெய்ண்ட் குடுப்பேன், மான நஷ்ட வழக்கு தொடருவேன்னு மிரட்டலாவே சொல்லட்டும். கூடவே மாலை அஞ்சு மணிக்கு ப்ரஸ் மீட்ல உங்க இரண்டு பேரோட சேர்ந்து பேட்டி குடுக்கறதா சொல்லட்டும். ஃபோகஸ் அங்க மாறும். இதுல ஒரு சுவாரசியமும் இல்லைன்னு புரிய வெச்சா தானா அடங்கிடும். போலீஸ் அந்த முதல் யூடூபரை விசாரணைன்னு அள்ளிகிட்டு போனாலே போதும், மத்தவங்க அடங்கிடுவாங்க. சிம்மன் சர் அதுக்கு ஏற்பாடு பண்ணீங்கன்னா மிச்சம் சுலபமா முடியும்.” நீண்ட விளக்கமளித்தார்.

“பிரபா? கார்த்திக் ஏரியா இன்ஸ்கிட்ட பேசறதா சொன்னாரே, ஆச்சா? இன்ஸ் இன்ட்ரோ வாங்கிட்டு கவனிக்கணும்னா பார்த்து சட்டுனு பண்ணு. அஞ்சு மணிக்கு ப்ரஸ் மீட்டுக்கு முன்னாடி அவன் போலீஸ்ல சிக்கியிருக்கணும்.”, பிரபா போனைக் காதில் வைத்தவன், கை காட்டிவிட்டு வேறு அறைக்குச் சென்றான்.

ஜாஸ்மின் உள்ளே நுழைந்தாள். “குமுதினி, ரெடியா இருக்கோம். கொஞ்சம் மேக்-கப் போட்டுட்டு ஸ்டேட்மென்ட் ஷூட் பண்ணிடலாம் வாங்க”, என்று அழைத்தாள்.

“அவினாஷ், லஞ்ச் டைம் ஆகுது. இங்கேயே டெலிவர் பண்ண ஏற்பாடு செய்திடவா?” என்று ஜாஸ்மின் விசாரிக்க, அவினாஷ் தலைமுடியை அழுத்தக் கோதியவன், “ம்ம்.. யா ஒகே”, என்றான்.

“குமுதினி, சாப்பிட்டுட்டு போ”, சிம்மன் சொல்ல, “இல்ல, இதை ஷூட் பண்ணிடலாம். எடிட் பார்த்துட்டா மத்தவங்க லஞ்சுக்கு போவாங்க. அரை மணி நேரத்துல வந்துடறேன். நீங்கல்லாம் முதல்ல சாப்பிடுங்க”, என்று ஜாஸ்மினுடன் சென்றாள்.

“குமுதினி வரவும் டெலிவர் ஆகற மாதிரி பார்த்துக்கோ ஜாஸ்”, அவினாஷிற்கு தலையசைத்து கதவை திறந்து சென்றாள்.

கார்த்திக் அழைப்பு வர, எடுத்த சிம்மன், ஒற்றை வார்த்தைகளாகப் பேசிவிட்டு நன்றி சொல்லி வைத்தான்.

அவினாஷைப் பார்த்து, “அந்த புறம்போக்கு மினிஸ்டர்தான் இதுக்குப் பின்னாடி இருக்கான். கார்த்திக் சோர்ஸ் வைரலாக்கின இரண்டு மூணு யூடூபருங்ககிட்ட விசாரிச்சிருக்கார். போன வாரம் குமுதினி ஷோல அசிங்கப்பட்ட கோவம், அவ பேரை டாமேஜ் பண்ற மாதிரி அசிங்கமா பேசச் சொல்லி காசு தந்திருக்காங்க.” விஷயத்தைக் கூறியவன், அமைச்சரை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தான்.

“மினிஸ்டர் செஞ்சதுக்கு எவிடென்ஸ் இருக்கா? ஆஷ் மீடியாஸ் மூலமாவே கேஸ் ஃபைல் பண்ணலாம்.”, அவினாஷ் சொல்லவும் அவனைப் பார்த்தவன், “அவன் பவர்ல இருக்கறவன், கேசை ஒன்னுமில்லாம செய்யறதுக்கு பத்து நிமிஷமாகாது. அந்தாளு பேட்டியில சொதப்பினது கட்சிக்கு தேவையில்லாத கெட்ட பேருன்னு சி.எம்க்கு கூட எரிச்சல், ஆனாலும் மினிஸ்டருக்கு தொகுதியில பவர் அதிகம் சோ ஒன்னும் செய்ய மாட்டார். குமுதினிக்கும் உன் கம்பனிக்கும்தான் அந்த கோவம் திரும்பும். “

“அப்போ…அந்தாளை சும்மாவா விடறது?”, அவினாஷைப் பார்த்து வில்லத்தனமாக முறுவலித்தவன், “உடனே செய்யணும்னு இல்லை, வெச்சு செய்யலாம். குமுதினி விஷயத்தை முதல்ல க்ளியர் பண்ணலாம்.”

“ம்ம்.. நான் எதாவது செய்யணும்னா சொல்லுங்க. என் சோர்ஸ்ல அந்தாளைப் பத்தி நானும் விசாரிக்கறேன். அவன் பேரை நாறடிக்கணும்.”, என்றதிலேயே அவினாஷின் ஆத்திரம் தெரிந்தது.

“ஏற்கனவே அதை செஞ்சுத்தான் இந்த வம்பை விலைக்கு வாங்கியிருக்கோம். உடனே எதுவும் செய்யாதே. கணக்கு முடிஞ்சுதுன்னு அந்தாள்  நினைக்கட்டும். அப்பறமா செய்வோம்.”

“சரி, போய் குமுதினி பேசறது பார்க்கலாம். வாங்க”, ஸ்டூடியோவிற்கு அழைத்துச் சென்றான். மானிட்டர் மூலம் இருவரும் பார்க்க, அழுத சுவடே தெரியாமல் தெளிவாக, இலகுவாக காமெராவைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாள் குமுதினி.

“காலேஜ் டைம்ல கோயில்ல வெச்சு கல்யாணம் செய்தது, இப்பதான் லீகலா செல்லும்னு புரிஞ்சு, ஜெய்சிம்மனை பார்த்து பேசினேன்.  இது ஒரு சட்டச் சிக்கல், அதை முறையா அணுகறோம். அதை வேணும்னே கொச்சை படுத்தி, என் பேரை களங்கப்படுத்தற மாதிரி பேசறவங்க மேல மான நஷ்ட வழக்குப் போடுவேன். நாங்க மூணு பேருமே சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஆஷ் மீடியாஸ் அலுவலகத்துல பேட்டி தரோம். பிரஸ் தாராளமா உங்க சந்தேகங்களைக் கேட்கலாம். அதைவிட்டு சும்மா உங்க இஷ்டத்துக்கு தரக்குறைவா பேசினா போலீஸ் கேஸ்னு போக வேண்டியதாயிருக்கும்.”, மிரட்டலாகவே முடித்தாள்.

ஒடுங்கிவிடாமல் “வாடா…வந்துப்பாருங்கடா”, என்று பேசியவளின் தாக்கம், சிம்மனுக்கே கைதட்ட வேண்டும் போல் இருந்தது. அவினாஷ் செய்தே காட்டிவிட்டான். “சூப்பர் குமுதினி. பவர்ஃபுல்”, என்று லேசாக அவளை அணைக்க, சிம்மனுக்கு அதுவரை இருந்த மகிழ்ச்சி வடிந்து எரிச்சல் தலைதூக்கியது.

அவனிடம் வந்த குமுதினியைப் பார்த்தவன், “காமெரா முன்னாடி மட்டும் இல்லை, எப்பவும் இந்த தைரியம் இருக்கணும்.” என்று பேசி வைத்தான்.

“பிரஸ்ல என்ன பொடி வெச்சு கேள்வி கேட்டாலும், கேட்டவன் சட்டையை பிடிக்காம பொறுமையா பதில் சொல்ல நீ பாரு முதல்ல. அப்பறம் என்னைச் சொல்லலாம்”, என்று காய்ந்தாள்.

“நீ அந்த அமைச்சரை வெச்சு செஞ்சதுக்குத்தான் என் மானம் மரியாதையும் சேர்ந்து காத்துல பறக்குது. அதை நீயும் நினைவுல வெச்சிக்கோ!”, என்றவன் விடுவிடுவென்று கான்ஃப்ரென்ஸ் அறையை நோக்கி நடந்தான்.

புருவம் சுளித்தவள் அவினாஷைப் பார்க்க, கார்த்திக் மூலமாக தெரிய வந்த விஷயத்தை அவளுக்கு விளக்கியபடியே உணவு உண்ண அழைத்துச் சென்றான்.

ஜாஸ் உள்ளே உணவு வந்திருந்த டப்பாக்களை பரப்பி, தட்டுக்களை வைத்திருந்தாள்.

இவர்கள் உள்ளே நுழையும்போது, சிறிய கிண்ணங்களில் சூப் ஊற்றிக்கொண்டிருந்தாள்.

பிரபாவுடன் பேசிக்கொண்டிருந்தவனை ஆவினாஷ் அழைக்க, இருவருமாக உணவிருந்த மேசைக்கு வந்தனர்.

எல்லாருமாக சூப் கிண்ணங்களை எடுத்துக்கொண்டு அமர, சிறிய பாட்டிலில் இருந்த பெப்பர் தூளை அவினாஷுக்கு மட்டும் தூவினாள்  ஜாஸ்மின்.

அதை கவனத்தில் கூட கொள்ளாது போனைப் பார்த்துக்கொண்டிருந்த அவினாஷ்,  நன்றி என்பதாக லேசாய் தலையசைத்தான்.

“ஹ்ம்ம்…இதுக்குத்தான் லேடி செக்ரட்டரி வேணும்ங்கறது. என்னைக்காவது என்னை இப்படி கவனிச்சிருக்கியாடா?”, சிம்மன் பிரபாவின் காதை கடித்தான்.

கருமமே கண்ணாக சூப் கிண்ணத்தில் கவனமாக இருந்த பிரபஞ்சன், “என்னிக்காவது கெட்ட வார்த்தையில திட்டி, வகுந்துருவேன், பொளந்துருவேன்னு மிரட்டி, நடு ஜாமம்னு கூட பார்க்காம உடனே வந்தாதான் ஆச்சுன்னு அவர் லேடி செக்ரட்டரிகிட்ட அவினாஷ் சொல்லியிருக்காரான்னு கேட்போமா?”, என்று பதிலுக்கு நக்கலடித்தான். அதில் சிம்மனுக்கு புன்னகை விரிந்தது.

“என்ன சிம்மன்? இந்த ரணகளத்துலேயும் சிரிப்பு வருது?”, அவினாஷ் கண்டுவிட்டு கேட்டான்.

“இல்லை உங்களுக்கு மட்டும் ஜாஸ்மின் பெப்பர் தூக்கலா போட்டாங்களே, எங்களுக்கு வேணுமான்னு கூட கேட்கலைன்னு சொல்லிட்டிருந்தான் பிரபா…”, என்று இழுக்க,

“ஓஹ்… சாரி… உங்களுக்கும் வேணுமா? அது அவினாஷ்க்கு வைட் பெப்பர் தூவினா பிடிக்கும்னு எப்பவும் வெச்சிருப்பேன். “, சூப்பை பாதியில் விட்டு ஜாஸ்மின் எழ,  “அட…அதெல்லாம் ஒன்னுமில்லை. நீங்க சாப்பிடுங்க. வெள்ளை பெப்பர் டேஸ்ட் எப்படி மாத்தும்னு கேட்டாலும் தெரியாது. எனக்கு வேஸ்ட் பண்ணாதீங்க”, என்று இலகுவாக பேசியவன் அடுத்து அங்கிருந்த  நான் மற்றும் சிக்கன் கறியை தட்டில் வைத்துக்கொண்டான்.

இதில் எதையும் கண்டு கொள்ளாமல் யோசனையில் இருந்தாள் குமுதினி. சிம்மன் அவினாஷின் கவனைத்தைப் பெற்று, குமுதினியை கண்காட்டி ‘என்னவாம்?’ என்பதாக பார்த்தான்.

தான் கேட்டால், மீண்டும் சண்டை ஆரம்பிக்க வாய்ப்பிருக்கலாம் என்றே அவினாஷை விட்டு விசாரிக்கச் சொன்னான்.

“என்ன யோசனை குமுதினி?”

“ஹ்ம்ம்? சாயந்திரம் ப்ரஸ் மீட்ல ஏடாகூடமா கேள்வி வந்து மறுபடி கைகலப்புல முடியாம இருக்கணும். ஜெய்க்கு ந்யூஸ் பைட்க்காக கடுப்படிக்கற கேள்வியெல்லாம் கேட்கறவங்களை டீல் பண்ணி பழக்கமில்லை. அதுதான் ஒரு ட்ரையல் பார்த்துடலாமானு யோசிக்கறேன் அவினாஷ்.”

“நான் பார்த்துக்கறேன்”, என்றவனைப் பார்த்து முறைத்தவள், “உங்களை எதிர்த்து பேச ஆரம்பிச்சாலே கோவப்படுவீங்க. இன்னும் அவங்க வாய்க்கு அவலா போயிரும்.”

ஆனால் அவள் சொல்வதை ஆமோதித்த அவினாஷ், “சரி பார்த்துடலாம். நீயே கேள்வி கேளு குமுதினி. நாங்க எப்படி பதில் சொல்றோம்னு பாரு. பதில், இல்லை பாடி லாங்க்வேஜ் எதாவது திருத்தணும்னா திருத்திக்கலாம்.”

பிரபா கைப்பேசியில் ரெக்கார்ட் செய்ய, ஜாஸ்மினும் குமுதினியும் நிருபர்களாக எதிரில் அமர்ந்திருக்க, மேசையின் மறுபுறம் அவினாஷ் மற்றும் சிம்மன் அமர்ந்திருந்தார்கள்.

“ஜெய்சிம்மன் சர், குமுதினி அவினாஷை கல்யாணம் செய்துக்கறது பத்தி உங்க கருத்து என்ன ?”, குமுதினியே விவகாரமாக ஆரம்பித்து வைத்தாள்.

முகத்தில் எந்த பாவனையும் காட்டாத சிம்மன், “அவங்க வாழ்க்கை அவங்க இஷ்டம். இதுல யாரும் கருத்து சொல்ல என்ன இருக்கு?”

“ஆனா நீங்க அவங்க ஹஸ்பண்ட் ஆச்சே சர். யாரோ இல்லையே?”

“அது ஜஸ்ட் லீகாலிட்டி. நாங்க பிரிஞ்சு பல வருஷமாச்சு.”, சிம்மன் பதில் சொல்லிய உடனே,

“சர், ஏன் நீங்களும் குமுதினியும் பிரிஞ்சீங்கன்ற காரணம் சொல்ல முடியுமா?”, ஜாஸ்மின் கேட்க,

“முடியாது. இந்த விஷயத்துக்கு அது தேவையில்லாதது.”, சிம்மனின் பதில் இதற்கு மேல் கேட்கக்கூடாது என்பதாக கூர்மையாக வந்தது.

“உங்களுது காதல் கல்யணமா சர்? இல்லை வீட்ல பார்த்து வெச்சு பிடிக்காம விலகிட்டீங்களா?”, குமுதினி சட்டை செய்யாது மீண்டும் கிளர,

“காலேஜ்ல லவ் பண்ணோம்.”

“லவ் மேரேஜ்ன்னா அப்பறம் ஏன் சர் விலகினீங்க?”, ஜாஸ்மின் கேட்க,

“ஏன் லவ் பண்ணவங்க யாரும் பிரியறதில்லையா? ஏன் என்னையே கேள்வி கேட்கறீங்க? அவினாஷ்கிட்டேயும் கேட்கலாமே?”, சிம்மன் பொறுக்க முடியாது அவினாஷை கைகாட்ட,

அதில் சிரித்த அவினாஷ், “ப்ரோ… பிரஸ்கிட்ட இப்படில்லாம் என்னை கோர்த்துவிடக் கூடாது.”, என்றான்.

எத்தனைதான் தயார் செய்திருந்தாலும் அந்த  நேரத்தில் எப்படி கையாளுகிறோம் என்பதுதான் முக்கியம் அல்லவா.  அதோடு ஆட்சியையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த சோஷியல் மீடியாவின் பொது ஜனம் எந்த விஷயத்தை எப்படி அணுகும் என்பது இன்னுமே கணிக்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.