அத்தியாயம் – 7

திங்கள் கிழமை வழக்கமான பரபரப்புடன் இருக்க, அவினாஷின் மீடியா டீமிலிருந்த ரவி அவசர கதியாக ஓடி வந்தான்.

“சர்… உங்க பத்தி பர்சனல் நியூஸ் ஒன்னு சோசியல் மீடியால வந்திருக்கு சர். உண்மையா?”, என்றவன் முகத்திலும் சற்று அதிர்ச்சி இருந்தது.

ஏதோ ஒரு யூடூபர் தளம், “புருஷன், காதலன் என்று இரண்டு பிரபல தொழிலதிபர்களுடனும் பிரபல அரசியல் மேடை நெறியாளர் குமுதினி!”, என்று டைட்டிலில் ஐந்து நிமிடம் ஓடியது. அதில் தெளிவாக சிம்மன்,குமுதினி திருமணத்திற்கான கோவில் அத்தாட்சி, அடுத்து ஜெய்கிஷன் படத்தின் ப்ரீமியர் ஷோவில் இருவரும் சண்டையிட்ட வீடியோ, அவினாஷ், குமுதினியின் இன்ஸ்டாவில் இருவரும் திருமணம் செய்யப் போவதாக போட்டிருந்த ஸ்டோரி, இறுதியாக குத்துவிளக்கேற்றி, சிம்மனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் குமுதினி, அவினாஷுடன் வேறு சில ஈவென்டிற்கு வந்த குமுதினி என்று கதை சொல்லச் சொல்ல தோதான விடியோக்கள் வந்த வண்ணம் இருந்தது. 

“நாட்டையே திருத்தப் போற மாதிரி டீ.வியில பேசுவாங்க, இவங்களே இரண்டு ட்ராக் பப்ளிக்கா ஓட்டிகிட்டு இருக்காங்க”, என்று மேலும் அவதூறை அள்ளித் தெளித்திருந்தான்.

“யார்…யார் இவன், இந்த மாரெஜ் சர்ட்டிஃபிகேட் எப்படி கிடைச்சுது? கண்டுபிடிக்க ட்ரை பண்ணுங்க! ஜாஸ்மின்..  சைபர் போலீஸ்ல யாரை பிடிக்கலாம்னு பாரு, லீகலா என்ன செய்யணும்னு ப்ரவீன் கிட்ட பேசணும், கனெக்ட் பண்ணு. வைரலாகறதுக்கு முன்ன, வீடியோவை ஷட் டவுன் பண்ணனும்.”, என்று கட்டளைகளை பிறப்பித்தவன், குமுதினியை அழைத்தான்.

“குமுதினி, ஒரு லிங்க் அனுப்பறேன் பாரு. யாரோ நம்ம விஷயத்தை லீக் பண்ணியிருக்காங்க. உன் கல்யாண சர்ட்டிஃபிகேட் லீக் ஆகியிருக்கு. அந்த காட்டுமிராண்டி நீ அவங்கப்பாவை பேசினதுக்கு பழிவாங்க ட்ரை பண்றானா?”

அவினாஷ் பேசுவதைக் கேட்டவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. லீக் ஆகிவிட்டது என்றதில் உள்ளம் சில்லிட்டது.

“நான் பார்த்துட்டு கூப்பிடறேன்.”, என்றாள்.

“முதல்ல வீடியோவை முடக்க ட்ரை பண்றேன். திரும்ப நானே கூப்பிடறேன். எதுவானாலும் பார்த்துக்கலாம்”, என்றதோடு அழைப்பை துண்டித்திருந்தான்.

அதைக் கேட்டிருந்த ஜாஸ்மினுக்கும் ரவிக்கும் விஷயம் உண்மை என்று தெரிந்த அதிர்வில் நின்றிருக்க, “என்ன பார்த்துக்கிட்டு இருக்கீங்க? சொன்னதை செய்ங்க. கெட் அவுட்”, என்று அவினாஷ் கத்தவும் ஓடினார்கள்.

அங்கே வீடியோவைப் பார்த்த குமுதினியோ உட்ச பட்ச அதிர்ச்சியிலும் அவமானத்திலும் இருந்தாள். வேகமாக சிம்மனை அழைத்தாள். என்னதான் அவினாஷ் அவனை குற்றம் சாட்டியிருந்தாலும், கண்டிப்பாக இருக்காது என்ற உறுதியில் இருந்தாள் குமுதினி.  இது மூவருக்குமே அசிங்கம். வேறு யாரோதான் என்பது திண்ணம்.

போனை சிம்மன் எடுத்ததுமே, “ஹலோ ஜெய், நம்ம கல்யாண சர்ட்டிஃபிகேட் லீக் ஆகியிருக்கு, லிங்க் அனுப்பியிருக்கேன் பாருங்க.“, குமுதினி சொல்லவும்.

“வாட்? பால்டப்பா வேலையா? நான் டைவர்ஸ் தரலைன்னு இந்த கேவலமான வேலை பார்த்திருக்கானா?”, என்று உடனே பாய்ந்தான்.

“ஷ்… வீடியோவை பார்த்துட்டு கூப்பிடுங்க. லிங்க் ரிமூவ் பண்ணத்தான் அவினாஷ் ட்ரை பண்றான்.”, என்றதோடு வைத்தாள்.

அதற்குள், “பாஸ் …”, என்று ஓடி வந்தாள் பிரபஞ்சன்.

அவன் முகத்தைப் பார்த்ததுமே, “வீடியோவா? இப்பதான் குமுதினி போன் பண்ணா… பார்க்கறேன் இரு.”, என்றவன் ஓடவிட, முடிவில் சில பல கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்தது. உச்ச பட்ச கோவத்தில் இருக்கிறான் என்று தெளிவாக தெரிந்தது.

“பாஸ்.. லாயர் வரச் சொல்லியிருக்கேன். நம்ம ஏ.சி. கார்த்திக் சர் கூப்பிடவா? ஒரு வார்த்தை உங்ககிட்ட கேட்டுக்கலாம்னுதான்..”,

“ம்ம்”, என்பதே கர்ஜனையாக வந்தது.

அசிஸ்டென்ட் கமிஷ்னரிடம் பேசி வைத்த சிம்மன், குமுதினியை அழைத்திருந்தான்.

“யார் போனும் அட்டென்ட் பண்ணாத. வேற ஒரு போன் அனுப்பி வைக்கறேன். உன்னோடதை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடு. அவினாஷ் என்ன பண்றான்? வீடியோ பரவுது. நிறுத்தணும்னா எல்லாரும் ஒரே டைரெக்ஷன்ல மூவ் பண்ணனும் குமுதினி.”, இறுகி வந்தது சிம்மனின் குரல்.

“அதுதான் நானும் அவினாஷ்கிட்ட சொன்னேன். இது நம்ம மூணு பேரையும் அசிங்கப்படுத்துது. முதலில் வந்த அந்த யூடுபர் யாரோ ஒருத்தன். பட் இது யாரோ உடனே எடுத்து வைரலாக்க ட்ரை பண்றாங்கன்னு சொல்றான் அவினாஷ்.”, உடைந்து வந்தது குமுதினியின் குரல்.

“கண்டுபிடிக்கலாம். நீ தைரியமா இருக்கணும் குமுதினி ஆனா தனியா இருக்க வேணாம். அவினாஷ்கிட்ட பேசறேன். எல்லாரும் ஒன்னா இருந்து இதை ஹாண்டில் பண்ணனும். போன் உனக்கு இன்னும் பத்து நிமிஷத்துல கிடைக்கும். என் ஸ்டாஃப் உன் பில்டிங் வருவான். வாங்கிக்கோ. அந்த நம்பர்ல கூப்பிடுறேன். எதுன்னாலும் பார்த்துக்கலாம் ”, வலியுறுத்தியவன் அழைப்பை துண்டித்தான்.

இருவருமே எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்றது மனதுக்கு சற்றே ஆறுதலாக இருந்தது.

அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்ருந்த பிரபஞ்சன், “சர் குமுதினி மேடம் மேல இவ்வளவு அக்கறையா?”, என்று வாய்விட்டே கேட்டுவிட்டான்.

அவனை ஒரு பார்வை பார்த்த சிம்மன், பல்லைக் கடித்து, “டேய், பிசினஸ்ல இதுவரைக்கும் ஜெயசிம்மன்னா ஒரு பிம்பம் இருக்கு. இப்ப இதைப் பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க? பொண்டாட்டி விட்டுட்டு போனதுமில்லாம வேற ஒருத்தன் கூட சுத்தறா, இவன் வெக்கமேயில்லாம அவளை கூட்டிட்டு வந்து மால் திறந்து வைக்கறான். ஒரே கலர்ல டிரெஸ் போட்டு பல்லைக் காட்டறான்னு சிரிப்பானுங்க. “

‘அது நீங்களா இழுத்துவிட்டதுதான?’, என்று பிரபஞ்சன் பார்த்து வைக்க,

“கொன்றுவேன்! பால்டப்பாவையும் அவளையும் வெறுப்பேத்த செஞ்சது எனக்கே ஆப்பா வந்திருக்கு. தெரியுது. இப்ப டாமேஜ் கன்ட்ரோல் பண்ணனும். அதுக்குத்தான் வழி பண்றேன். நீ பால்டப்பாவை கூப்பிடு”, கட்டளையிட்டான்.

அவினாஷுடன் பேசிய சிம்மன்,  மூவரும் ஒன்றாய் இருக்க வேண்டிய அவசியத்தை சொல்லி, இங்கே அவன் அலுவலகத்துக்கு அழைக்க, “இல்லை சிம்மன், இங்க பி.ஆர் டீம் இருக்காங்க.  இங்க நம்ம மூணு பேருமே ஒரு ஸ்டேட்மென்ட் ஷூட் பண்ணி ரிலீஸ் பண்ணணும்னாலும் செய்ய வசதியா இருக்கும். உங்க ஸ்டாஃப் யாரும் கூட்டிட்டு வரணும்னாலும் வந்துடுங்க. “, என்று சொல்ல, மறுக்காமல் சரி என்றவன் “ஒன்னவர்ல இருப்போம்.”, என்றதோடு, பிரபஞ்சன் தன் கம்ப்ளெயிண்ட்டை வாங்கிக்கொண்டு ஏ.சியை பார்க்கச் சென்றதையும் சொல்லி வைத்தான்.

 சிம்மன் பார்க்காதே என்று சொல்லியும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் குமுதினி வலைதளத்தில் தேட, விஷயம் பரவ ஆரம்பித்திருப்பது தெரிந்தது. அவள் போனை அணைத்திருந்தாள். புது நம்பர் இப்போது சிம்மனுக்கும் அவினாஷுக்கும் மட்டும்தான் தெரியும். வீட்டிலிருந்த சமையல் அக்காவிடம், “யார்கிட்டயும் பேசாதீங்க அக்கா.  நானே போன் பண்ணி கூப்பிடற வரைக்கும் வரவேணாம்.”, என்று அனுப்பிவிட்டவள், தனிமையில் கதறிவிட்டாள்.

இத்தனை  நாள் தான் சேர்த்து வைத்திருந்த மரியாதை எல்லாம் ஐந்து நிமிட செய்தியில் காணாமல் போயிருந்தது. ஒரு வாரம் முன்னர் அவளது அரசியல் மேடை நிகழ்ச்சிக்கு அத்தனை வரவேற்பு. ஆளும் கட்சி அமைச்சரை அவர்  துறையில் நடந்த ஒரு குளறுபடிக்காக ஒரு பிடி பிடித்திருந்தாள். அவர் எத்தனை சமாளிக்கப் பார்த்தாலும், நடந்த தவறு உங்கள் பொறுப்புதானே என்று ஏற்றுக்கொள்ள வைத்திருந்தாள்.  திங்களன்று காரணமானவர்கள் இருவர் சஸ்பெண்டாகியிருந்தார்கள். அடுத்த இரண்டு நாளும் அவளும், அந்த விவாதமும் வைரலாகியிருந்தது. ஒரே வாரத்தில் அவளை மெச்சியவர்களே இதோ சாக்கடையில் தூக்கி வீசுகிறார்கள்.

புது போன் அலறியது. சிம்மன நம்பர் வரவும், எடுத்தாள். “அவினாஷ் ஆஃபீஸ்ல வெச்சு இதை சார்ட் அவுட் பண்ணலாம். கிளம்பிட்டியா? அங்க வந்துடுறியா இல்லை நான் வந்து பிக் அப் பண்ணிக்கவா?”

“இல்லை நானே வந்துடுறேன் ஜெய். கிளம்பிட்டேன்”, என்றவளின் குரல் கரகரப்பும், அழுததில் மூக்கை உறியும் சத்தமும் கேட்டவன். “மடச்சி…  எதையும் பார்க்காதேன்னு சொன்னேந்தான? சொல் பேச்சு கேட்க மாட்டியா? இப்படி அழுதா, ஆழப் புதைச்சிடுவாங்க. யார் காரணம்னு கண்டுபிடிச்சு அவனை புதைக்கணும். அதைப் பார்க்கலாம் முதல்ல, கிளம்பி இரு. பிரபா அனுப்பறேன். அவன் உன் வண்டியை ஓட்டிட்டு வரட்டும். இந்த மூட்ல நீ ஓட்ட வேணாம்.”  அவள் மேலும் பேச வாய்ப்பே அளிக்காமல் வைத்துவிட்டான்.

தலையை தட்டிக்கொண்டவள், கிளம்ப ஆயத்தமாக, புது நம்பரில் அவினாஷ் அழைத்தான். “குமுதினி, சிம்மன் இங்க வரான்.  நான் வந்து உன்னை அழைச்சிக்கவா? “

“ஜெய் பேசினான் அவினாஷ். அவன் அசிஸ்டென்ட் பிரபஞ்சன் வரான், என் கார்லயே வந்துடறேன். ரெகுலர் பிரெஸ் யாரும் இங்க வீட்டுக்கு வர முன்ன கிளம்பிடறேன்.“, குமுதினி சொல்லவும்,

“யா… குட் குட்… நான் இங்க பார்க்கறேன் குமுதினி. எதுன்னாலும் உடனே கால் பண்ணு. பிரபஞ்சன் பர்சனல் நம்பர் அனுப்பி வை எனக்கு. இங்க பிரஸ் யாரையும் உள்ளே விடவேணாம்னு சொல்லியிருக்கேன். ஆல்ரெடி கேள்வி கேட்டு போன் வர ஆரம்பிச்சிருச்சு. அஹ் ஷிட்…செகண்ட் லைன்ல அம்மா கூப்பிடறாங்க…”, அவினாஷ் வைத்துவிட்டான்.

குளிரூட்டப்பட்ட கான்ஃப்ரென்ஸ் அறையில் சூடான விவாதம் ஓடிக்கொண்டிருந்தது.

“எல்லாம் உங்களாலதான் சிம்மன். தேவையில்லாம அன்னிக்கு பப்ளிக்ல என் சட்டையை பிடிச்சது,  இவளை வெச்சு மால் ஓப்பனிங பண்ணதும் பத்தாதுன்னு ஒரே கலர்ல ட்ரெஸ் போட்டதும்தான் இப்ப விஷயத்தையே ஊதிப் பெருசாக்கியிருக்கு.”, என்ற அவினாஷின் குற்றச்சாட்டுதான் சூட்டைக் கிளப்பியிருந்தது.

“உங்களை யாரு விடலைப் பசங்க மாதிரி இன்ஸ்டால போட்டு ஊருக்கே சொல்லச் சொன்னது? தேவையில்லாத அட்டென்ஷன்”, என்று பதிலுக்கு சிம்மன் வாதிட,

“ப்ளீஸ். நிறுத்தறீங்களா இரண்டு பேரும். யாரு தப்புன்னு அடிச்சிக்கறதுக்கு இது நேரமா? “, இருவரையும் சேர்ந்து குமுதினி கத்திவிட்டாள்.