அத்தியாயம் – 6

சீ ப்ரீஸ் மால் பூ அலங்காரத்தில் மணந்துகொண்டிருந்தது. அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் வர, சிம்மனின் டீம் அவர்களின் வரவேற்பை பார்த்துக்கொண்டார்கள்.

சிம்மன் மாலின் ஆஃபீஸ் அறையில் அமர்ந்து சீ.சீ டிவி கேமரா வழியாக நடப்பதைப் பார்த்து தேவைப்பட்டால் அவர்களுக்கு ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தான்.

“சார். நீங்க எங்கன்னுதான் எல்லாரும் கேட்கறாங்க. ப்ளீஸ் சர், இப்போதைக்கு எதாவது ஒரு சட்டை போட்டுட்டு வாங்க சர்.”, பிரபஞ்சன் போனில் அழைத்துக் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

“டேய்… குமுதினி வீட்டுகிட்ட இருக்க ஆள் நல்லா பார்த்தானா? அவ இன்னேரம் கிளம்பியிருக்கணுமேடா? போட்டோ எடுக்காம விட்டுட்டானா?”, சிம்மன் கடிய,

“அஹ்…வந்திருச்சு சார். அவினாஷ் பிக்-கப் பண்ண வந்திருக்கார். போட்டோ அனுப்பறேன்.”, வேகமாக அனுப்பி வைத்தான்.

“அவினாஷா? அவனை யாருடா கூப்பிட்டா?” சிம்மனின் ஆச்சரியம் பிரபஞ்சனுக்கு லேசாக பயத்தை காட்டியது.

“ச.சார்? அது கெஸ்ட் எல்லாரும் ப்ளஸ்-ஒன் கூட்டிட்டு வரலாம்னு சொன்னோமே சார். அதுதான் மேடம் அவினாஷ் அவங்க ப்ளஸ்-ஒன் சொல்லி கன்…” , வந்து விழுந்த கெட்ட வார்த்தையில் வாயை மூடிக்கொண்டான் பிரபஞ்சன்.

“இதை ஏன் எங்கிட்ட சொல்லலை? ராஸ்கல் தோலை உரிக்கறேன்”, என்று திட்டியவன், “கடவுளே… மஞ்சள், சிவப்பு பார்டர் புடவை கட்டினா, இதுல நான் என்னத்தடா போட?”, பல்லைக்கடித்தான்.

வேகமாக அங்கே பரப்பியிருந்த இராம்ராஜ் வேட்டிகளைப் பிரட்டியவன், சிகப்பு கரையிட்ட ஒன்றை எடுத்து, வெள்ளையில் சிகப்பு கோடுகள் போட்ட சட்டையை தேர்ந்தெடுத்து மாற்றிக்கொண்டே, “நீ என்ன செய்யற, மூணாவது ரோல அவினாஷ்க்கு சீட் போடு. குமுதினியை முதல் ரோல, அமைச்சருக்கும் எனக்கும் நடுவுல உட்கார வை. மேடைக்கு வந்தாலும் அதே ஆர்டர்லதான் உட்காரணும். விழா முடியற வரை அதேதான், சரியா? அவனை போட்டோ போட்டு கலாய்க்கறதை விட நேர்ல லைவ் ஷோவா வெறுப்பேத்தலாம்.”, சிம்மன் பேசப்பேச, பிரபஞ்சனுக்குக்  கண்ணைக் கட்டியது.

“ஐயோ…சார். மறுபடியும் எதுவும் சண்டை வேணாம் சார். மேடம் அப்பவே சொன்னாங்க, நீங்க எதாவது செஞ்சா, நாந்தான் பொறுப்பு, என்னைத்தான் கேட்பாங்களாம். ப்ளீஸ் சர்…”, பிரபஞ்சன் கெஞ்ச,

“ஓ… நீதான பொறுப்பு? அப்ப எனக்கென்னடா, நீயே பேசிக்கோ”, என்றான் ஒரு வில்லச் சிரிப்போடு.

சிம்மன் வந்திருந்தவர்களை வரவேற்று பேசிக்கொண்டிருக்க, அவினாஷ் கார் வர, சிம்மனிடம் சொல்லிவிட்டு பிரபஞ்சன் வரவேற்க ஓடினான். உள்ளே வந்தவர்களை, சிம்மன் எதிர்கொண்டு, “வாங்க வாங்க”, என்று கைகூப்ப, அவன் போட்டிருந்த வேட்டி சட்டை அவள் உடையுடன் பொருந்திப்போவதைப் பார்த்த அவினாஷின் முகம் சுருங்கியது.

அவன் ஃபார்மல் பேண்ட் சட்டையில் வந்திருந்தான். இவன் என்னடா கல்யாண மாப்பிள்ளை கணக்காக வேட்டி சட்டையில், அதுவும் சிகப்பு கலரில், எப்படித் தெரியும் என்று யோசனை ஓடியது.

அமைச்சர் வரவும், “பிரபா… அழைச்சிட்டு போய் உட்கார வை”, என்பதோடு அகன்றான்.

இருவரும் ஒன்றாக அமரப்போவதில்லை என்பதை உணர்ந்த நொடி, அவினாஷின் முகம் கடுப்பாக, “சார், ஒரு பத்து நிமிஷம்தான், மேடம் மேடைக்கு போயிடுவாங்க. சீட்டிங்ல லாஸ்ட் மினிட் சொத்தப்பலாகிருச்சு. சாரி”, என்று தன் மேல் பழியைப் போட்டுக்கொண்டு மன்னிப்பு வேண்டினான் பிரபஞ்சன்.

குமுதினியுடன் முதல் வரிசைக்குச் செல்ல, “உண்மையை சொல்லுங்க பிரபஞ்சன், இது ஜெய் சொல்லித்தான?”, என்று கூர்மையான பார்வையோடு கேள்வி கேட்க, தன்னை மீறி தலையாட்டிவிட்டான். பின்புதான், “மேடம்… ப்ளீஸ், நான் சொன்னதா சொல்லாதீங்க, தூக்கிப்போட்டு மிதிச்சிடுவார்”, என்றும் கூற, ஒன்றும் பேசாமல் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

‘யப்பா…என்ன பார்வைடா… அதான் டிவி லே கேட்டதும் அவனவன் உண்மையை கக்கிடறான் போல!’, என்று யோசித்தபடியே எதிரில் வந்து கொண்டிருந்த அமைச்சரை நோக்கி கும்பிட்டான்.

குமுதினியை அமைச்சர் செழியனுக்கு அறிமுகப்படுத்த, “அட நல்லாத் தெரியுமேப்பா. என்னைக் கூட அவங்க ஷோல கூப்பிட்டு பேசினாங்களே”, என்று புன்னகைத்தார். குமுதினி வணக்கம் வைத்தாள். அறிமுகம் முடிந்து அவர்கள் அமர, சிம்மன் அவள் மறுபுறம் சென்று அமர்ந்தான்.

“ஜெய்…என்ன பண்ற?”, என்று  முணுமுணுத்தாள்.

 நிகழ்ச்சிக்கான தொகுப்பாளினி பேச ஆரம்பிக்க, சிம்மன் பதில் சொல்லாமல் தப்பித்துக்கொண்டான்.

 விழா இனிதே முடிவடைய, சிம்மன் நன்றி உரைத்ததும் மேடையிலிருந்து குமுதினி இறங்கினாள். நேராக அவினாஷின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். “சாரி அவினாஷ். இதை நான் எதிர்பார்க்கலை. இங்க பிரஸ் எப்படியும் கவர் பண்ணுவாங்க, உன்னோட வந்தா பிரச்சனை இருக்காதுன்னு யோசிச்சேனே ஒழிய இப்படி அவனுக்கு உன்னை இன்சல்ட் பண்ண ஒரு சான்ஸ் ஆகும்னு நினைக்கலை.”

ஏற்கனவே அரை மணி நேரமாக இருவரும் அருகருகே தம்பதியரைப் போல ஒரே வண்ண உடையணிந்து அமர்ந்திருப்பதைப் பார்த்திருந்த அவினாஷிற்கு உள்ளுக்குள் கனன்றது.

பல்லைக் கடித்தவன், “நீ அவனுக்காக சாரி கேட்காதே குமுதினி. என்னை இன்சல்ட் பண்றதா நினைச்சு உன்னையும்தான் இன்சல்ட் பண்ணியிருக்கான். நாளைக்கு பிரஸ் கவரேஜ்ல  நீங்க ஜோடியா உட்கார்ந்திருக்க போட்டோதான் வரும். மூணாவது ரோல இருக்க  நான் தெரிய மாட்டேன். மறுபடி தேவையில்லாம காசிப்  கிளம்பும்.”

குமுதினிக்கும் புரிந்தது. அவனது விழாவை கெடுக்க வேண்டாமென்றுதான் அவள் பொறுத்துப்போனது. பிரபஞ்சன் வரவும், “பிரபஞ்சன் உங்க சார் இன்னிக்கு பண்ண அல்பத்தனமான வேலையில என் பேர்தான் கெட்டுப் போகும். இருந்தாலும் உங்க ஃபங்க்ஷன் நல்லபடியா நடக்கணும்னு நான் எந்த பிரச்சனையும் பண்ணலை. ஆனா இனிமேலும் இந்த மாதிரி விளையாட்டுக்கு நான் ஆளில்லை. சீரியசா பேசி பிரச்சனையை முடிக்க விருப்பப்பட்டா மட்டும் எங்கிட்ட பேச சொல்லுங்க.”,  என்றதோடு அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் சென்று விட, அவினாஷ் அவளை தொடர்ந்து சென்றான்.

ஒரு நிமிடம் சிம்மனுடன் தனிமை கிடைத்ததும் பிரபஞ்சன் அவள் சொன்னதை வார்த்தை மாறாமல் ஒப்பித்தான்.

 “ஏன் பாஸ் இப்படிப் பண்றீங்க?” கவலையாகப் பார்த்தான்.

 “ஊர்ல எங்களுக்குக்  கூடதான் இவளால கெட்ட பேரு. அப்போ நாங்க அமைதியா இருந்தோம். இப்ப அவளோட முறை. வேலையைப் பாருடா”, என்று நகர்ந்தவன், “டேய், சாப்பிட்டாங்களா?”

சிம்மனை ஒரு பார்வை பார்த்தவன், “அவங்க இருந்த கோவத்துக்கு, நான் கேட்டிருந்தா என் கன்னம் பழுத்திருக்கும். அவ்வளவு பாசம்னா நீங்களே கிட்ட நின்னு கவனிக்கறதுதான? வந்துட்டார் என்னை கேட்க”, என்றதோடு வேகமாக நகர்ந்துவிட்டான். பின் இருந்தால், சிம்மன் அவன் கன்னத்தைப் பதம் பார்ப்பானே!

‘ம்ப்ச்… சாப்பிடலைன்னா, அவ லவ்வர் ஊட்டிவிடுவான். நீ அடங்கு!’, என்று மனதிடம் வாதிட்டுக்கொண்டே வேலைகளை கவனித்தான்.

எதிர்பார்த்தபடியே அன்று மாலை சோஷியல் மீடியாவிலும், மறு நாள் பேப்பரிலும் புதிய மால் பற்றிய செய்திகள் வந்தன. போட்டோக்கள் அவினாஷ் கணித்தபடியே இருந்தது. பெரிதாக சர்ச்சை என்று கிளம்பவில்லை. அமைச்சரும் அவளும் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர் என்பதாக இருந்தது.

பிருந்தாவிற்குத்தான் அந்த போட்டோ பார்த்து கொஞ்சம் கவலையாகிற்று. “அம்மா, அவ சீஃப் கெஸ்ட் அதனால மேடையில இருந்தா. நான் எங்க அங்க உட்கார முடியும்? ஆமாம் சிம்மனோட அப்ப பிரச்சனையாச்சு, பட் அப்பவே சார்ட் ஆகிடுச்சு. இப்ப குமுதினிக்காக போனேன். விழா முடிஞ்சதும் கிளம்பிட்டோம்.”, என்று சமாதானப்படுத்தினான். ஆனாலும் சிம்மன் மீதிருந்த அதிருப்தி கோபமாக மாறியிருந்தது.

‘ஒரு வகையில அவன் இப்படி பண்ணிகிட்டு இருக்கறதும் நல்லது. குமுதினிக்கு அவன் மேல இருக்க வெறுப்பு கூடும்’, என்றும் யோசித்தான்.

ஒரு வாரம் போல் எந்த மாற்றமும் இல்லாமல் சென்றிருந்தது. சிம்மன் அழைக்கவில்லை. குமுதினிக்கும் அழைத்துப் பேசப் பிடிக்கவில்லை.

“என் லாயர்கிட்ட பேசலாம் குமுதினி. இதுக்கு வேற எதுவும் வழியிருக்கான்னு பார்க்கலாம்“, என்று கேட்டுக்கொண்டதில் சிம்மன் தனக்கனுப்பியிருந்த கோவில் சான்றிதழை வாட்ஸப்பில் அனுப்பியிருந்தாள்.

இருவருமாக அட்வோகேட் திலீப்புடன் அமர்ந்திருந்தனர். குமுதினியை அறிமுகப்படுத்திய பின், விஷயத்திற்கு வந்தனர்.

“உங்க கல்யாணம் செல்லும் மேடம். கோவில்ல குடுத்த சர்டிஃபிக்கேட் பார்த்தேன், அவினாஷ் அனுப்பியிருந்தார். கல்யாணத்தப்போ எடுத்த போட்டோஸ் இருக்கு, சாட்சி இருக்குன்னு சொல்லியிருக்கீங்க.  ரிஜிஸ்ட்டர் பண்ண வேண்டிய அவசியமில்லை. டைவர்ஸ் வாங்காம அவினாஷை நீங்க கல்யாணம் செய்ய முடியாது.” அவர்களுக்கு தெரிந்ததையே மீண்டும் வலியுறுத்தினார்.

“இதுல எட்டு வருஷம் பிரிஞ்சிருந்தீங்கன்ற காரணத்தால மியூச்சுவல் டைவர்ஸ்தான் பெஸ்ட். ஆனா அவினாஷ் அதுல சிக்கல்னு சொல்றாரே. நீங்க பேசிப் பார்த்தீங்களா?”

திலீப்பை நிமிர்ந்து பார்த்தவள், “ஹ்ம்ம்… அவர் முடியாதுன்னு சொல்லலை, ஆனா இழுத்தடிக்கறார். அதனாலதான் வேற ஆப்ஷன் பார்க்கலாம்னு வந்தோம்.”

அதில் தலையை ஆட்டிக்கொண்டவர், “இந்த எட்டு வருஷ பிரிவை காரணம் காட்டி, நீங்க மட்டும் கன்டெஸ்டட் டைவர்ஸ் ஃபைல் பண்ணலாம். கல்யாண போட்டோ, தாலி கட்டற போட்டோ, சாட்சிகளோட ஸ்டேட்மென்ட் எல்லாம் கலெக்ட் பண்ணனும். அடுத்து எட்டு வருஷம் பிரிஞ்சிருந்தீங்கன்ற எவிடென்ஸ் வேணும்.  அப்பறம் ஃபைல் பண்ணலாம்.”