அவினாஷ் வீட்டிற்கு செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருநாள் குமுதினி. நேற்று ஷூட் வெகு நேரம் சென்றது. காலையில் தாமதமாகத்தான் எழுந்தாள். இன்று அவினாஷின் தாய் பிருந்தாவின் பிறந்த நாள். அவளை அழைத்திருந்தார். வெள்ளையும் வெளிர் மஞ்சளும் கலந்த ஒரு காட்டன் சல்வார் உடலில் வாகாகப் பொருந்தியிருந்தது. மெல்லிய மெட்டாலிக் செயின், சின்ன ஜிமிக்கி தோடுகள், ஒரு கை நிறைய வளை மறு கையில் வாட்ச். சில முடிக் கற்றைகள் ஒரு பக்கம் கன்னத்தின் ஓரம் படர்ந்திருக்க, மற்றது கிளிப்பில் அடங்கியிருந்தது. கண் மை, லிப்ஸ்டிக் என்று லேசான மேக்-அப் முடித்து கண்ணாடியில் பார்க்க, அழகாக தெரிந்தாள்.
அவினாஷ் அளவிற்கு வசீகரமோ, நிறமோ இல்லை என்ற மனதை, “சோ வாட்?” என்று கேட்டதும், அமைதி. “ஜஸ்ட் ஷட் அப்! இது தேவையில்லாத கம்பேரிசன்! அவனுக்கு பிடிச்சிருக்கு, அப்பறம் என்ன?” என்று கத்தியவள், தோள்பையை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.
அடையாரில் இருந்த அவன் வீட்டிற்குள் நுழைவதற்குள் சலனப்பட்ட மனதை திட்டி சரி செய்திருந்தாள். ஓடி வந்த ட்ரைவரிடம் கார் சாவியை தந்தவள் வீட்டின் பக்கமாக செல்ல, அவினாஷ் வாசலில் நின்றிருந்தான். இலகுவாக ஒரு ஜீன்ஸ், வெள்ளை காதி ஜிப்பா அணிந்திருந்தாலும் அது கச்சிதமாய் இருந்தது.
“ஹே… பிரிட்டி லேடி… என்னாச்சு லேட்?”
“ம்ம்…நேத்து ஷூட் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போதே மணி இரண்டாகிடுச்சு அவினாஷ். சாரி.”, அவன் கைகளோடு அவளுடையதை கோர்த்திருந்தாள்.
“பரவாயில்லை. வா. பூஜை முடிச்சிட்டு அம்மாவும் உனக்காகத்தான் வெயிட் பண்றாங்க.:, என்று அழைத்துச் செல்ல, அவினாஷின் சித்தியின் மகன் மற்றும் மகள் “, ஹாய் குமுதினி”, என்று வந்தனர்.
“ஹேய் அஜய், அனு! எப்படி இருக்கீங்க?” விசாரித்துவிட்டு,
அவினாஷின் தாயார் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று, அவர் பாதம் பணிந்து எழுந்தாள். “ஹாப்பி பர்த்டே ஆன்ட்டி”, தன் கைப்பையிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்துக் கொடுத்தாள்.
“தாங்க்யூ குமுதினி. நீ வந்ததே பிரசென்ட் தான். அதைவிடவும் நீ என் மருமகளா வந்து வாழ்த்தறது இன்னும் பெரிய கிஃப்ட்.”, என்றவரை அணைத்துக்கொண்டவள், “அதுவும் நடக்கும் ஆன்ட்டி” என்றாள்.
“அப்பறம் ஏன் டிலே பண்றீங்க இரண்டு பேரும்?”, என்று கேட்க,
“மாம். இப்பதான் வந்திருக்கா. அதுக்குள்ளவே ஆரம்பிக்காதீங்க. ப்ளஸ் இரண்டு பேரும் சேர்ந்தும் தனித்தனியாவும் உங்களுக்கு சொல்லிட்டோம். கொஞ்சம் டைம் எடுத்துக்கறோம்மா.”, என்று குமுதினியை காப்பாற்றினான் அவினாஷ்.
“இங்கதானே இருக்கப்போறேன் ஆன்ட்டி. பொறுமையா பேசலாம். உங்க ஆர்வம் புரியுது.”, பிருந்தாவின் முகம் வாடியது பொறுக்காமல் குமுதினி ஆறுதல் கூறினாள்.
அடுத்து அவினாஷின் சித்தி சித்தப்பாவை வரவேற்று, சிறிது நேரம் பேசியவள் பின் அஜய், அனுவோடு இணைந்து கொண்டாள்.
சிறு தீனியாக சாலட், ஜூஸ் என்று உண்டதில் பசி காணாமல் போயிருக்க, அஜய் வேலை பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“வேலையை விடு குமுதினி, ரேஷ்மா பத்தி கேளு”, என்று விஷமப் புன்னகையோடு அவள் அருகில் அமர்ந்தான் அவினாஷ்.
“ஓ… அது யாரு அஜய்?”, என்பதற்குள் லேசாக கன்னம் சிவந்திருந்தான் அஜய்.
“அண்ணா…”, என்று அவினாஷைப் பார்த்து கண்களை உருட்டியவன், “அதெல்லாம் ஒண்ணுமில்லை குமுதினி”, அழகா இருக்கான்னு சொல்லிட்டேன். அதை அனு இவர்கிட்ட சொல்லி, இரண்டு பேரும் என்னை ஓட்டறாங்க”, புகார் வாசித்தான்.
“உங்க ஸ்டைல்ல கேள்வி கேட்டு உண்மையை வரவைங்க குமுதினி!”, அனு உந்த, “அச்சோ… அதுக்கெல்லாம் வொர்த்தே இல்லை. நீங்க வேற பேசுங்க.” அஜய் அலறியதில் சிரிப்பலை எழுந்தது.
பக்கவாட்டு புல்வெளியில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்து இவர்கள் பேச, கண்ணாடி வழியே பார்த்திருந்த பெரியவர்களுக்கு அனைவரும் சிரிப்பது தெரிந்தது.
“பிருந்தா… நீ கவலைப்படாதே. அங்க பாரு இரண்டு பேரும் சந்தோஷமாத்தான் இருக்காங்க. எந்த சண்டையும் இருக்க மாதிரி தெரியலை. இப்பதான் அவினாஷோட பழைய சிரிப்பை பார்க்க முடியுது. எல்லாம் நல்லதாவே நடக்கும். நீ அவங்களுக்கு கொஞ்சம் டைம் குடு”, பிருந்தாவின் தங்கை வசந்தா அறிவுறுத்தினார்.
பொழுது இனிமையாகக் கழிந்தது. “குமுதினி! போன் அடிக்குது பாரும்மா.”, என்று வசந்தா சொல்லவும் எழுந்து சென்று பார்த்தாள். ஜெய் அழைப்பு.
போனுடன் அறையை விட்டு வெளியே வந்தவள், அழைப்பை ஏற்று, “ஹலோ?”
“மேடம் புது மாமியார் வீட்டுல ரொம்ப பிசியோ? போன் எடுக்க மாட்டேங்கறீங்க?” நக்கலாக வந்தது சிம்மனின் குரல்.
‘நான் இங்க இருக்கறது எப்படி தெரியும்? என்னை வேவு பார்க்கறானா?’ என்ற அதிர்வில் ஒரு நொடி மௌனம் காக்க, “ரொம்ப ஜாலியா இருக்கியோ? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”, என்று அடுத்து கேட்டான்.
“நான் எங்க எப்படி இருக்கன்னு உனக்கு எப்படி தெரியும்?”
“ம்ம்… உன் லவ்வர் போட்டோ அனுப்பினான். மறுபடியும் மாட்சிங்கா ட்ரஸ் போட்டிருக்கீங்க?” குற்றம்சாட்டினான்.
“போட்டோவா? எப்போ? எதுக்கு?”
“ம்ம்… நீ அவன் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கியாம்? எனக்கு அனுப்பி எப்படியிருக்குன்னு கேட்கறான். அப்படி என்ன பொங்கி வருது சிரிப்பு உனக்கு?”
ஊஃப் என்று வந்த எரிச்சலை காற்றோடு ஊதியவள், “இது நீ ஆரம்பிச்சு வெச்சது. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்?”, என்று ஆரம்பிக்க, “என்ன திட்டறதுனாலும் அவனையும் கூட வெச்சிட்டு திட்டு. நான் மட்டும் தப்பு கிடையது”, என்று சிம்மன் ஏற்றி விட,
பல்லைக் கடித்தவள் அவினாஷை கையசைத்து அழைத்தாள். வந்தவனை அருகில் இருந்த அவன் அலுவலக அறைக்குள் இழுத்துச் சென்று, போனை ஸ்பீக்கரில் போட்டவள்,
“அவினாஷ், போன்ல ஜெய். எனக்குத் தெரியாம போட்டோ எடுத்து அனுப்பினியா?”, என்று விசாரணையை துவக்கினாள்.
ஜெய் என்றதுமே என்னவாகியிருக்கும் என்று ஊகித்தவன், டேபிளின் மீது சாய்ந்தபடியே, “உனக்குத் தெரிஞ்சு எடுத்த போட்டோதான் குமுதினி, டைனிங் டேபிள்ல எல்லாரும் சாப்பிடும்போது எடுத்தது. மத்தவங்க மாதிரி தெரியாம போட்டோ எடுத்து அனுப்பற இண்டீசன்சியெல்லாம் எனக்குத் தெரியாது.”
அவினாஷ் ஊசி ஏற்ற, அங்கே சிம்மன் பல்லக்கடித்தான். மனதிற்குள் நாலு கெட்ட வார்த்தை உதிர்த்தான். ஆனாலும் பேசவில்லை.
“போட்டோவை எதுக்கு ஜெய்க்கு அனுப்பின?”
“அப்பவாவது தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணாம டைவர்ஸ்க்கு ரெடி பண்ணுவாரான்னு பார்க்கத்தான். ஒரு நாள் கெட்ஸ்ட்டா இல்லாம, உரிமையோட உனக்கு இந்த சந்தோஷம் தினம் தினம் கிடைக்கணும். அது புரியணும்னுதான் அனுப்பி வெச்சேன்!”
அதில் நெகிழ்ந்து அவன் கையைப் பற்றிக்கொண்ட குமுதினி, “அவினாஷ்”, என்று அழைக்கும்போதே போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து தலையசைத்தவள்,
“அவினாஷ்…இவனை பொறுமையாத்தான் சமாளிக்கணும். இது அவனை சீண்டித்தான் விடும். அதுவும் நீ இப்படி சொன்னது அவன் ஈகோவைத்தான் கிளறும். எனக்கு சொல்லாம எதுக்கு அவனுக்கு அனுப்பின?”, சங்கடமாகக் கேட்டாள்.
“நான் தள்ளித்தான் நின்னேன் குமுதினி. உங்க இரண்டு பேர் போட்டோ அனுப்பி அவன் தான் என்னை இதுக்குள்ள இழுத்தான். குடுக்கத் தெரிஞ்சவனுக்கு வாங்கிக்கவும் தெரியணும். ஈகோ அவனுக்கு மட்டும் சொந்தமானதில்லை!”, சீறலாய்க் கூறியவன், வேகமாக வெளியேறினான்.
என்னவோ அவள் சங்கடப்பட்டு கேட்டது சிம்மனுக்காக பரிந்து பேசியது போல் தோன்றியது. ‘அவன் பெரிய இவனா? சீண்டக்கூடாதாம், ஈகோ கிளறக்கூடாதாம்…போடா டேய்!’ என்று தாளித்துக்கொண்டே வந்தான்.
தலையைப் பிடித்துக்கொண்டு அங்கேயே சற்று நேரம் அமர்ந்துவிட்டாள் குமுதினி. இருவர் ஈகோவிற்கு மத்தியில் தன்னை பந்தாடுகிறார்களே என்று எரிச்சல் மண்டியது.
அதைவிட பெரிய எரிச்சலில் இருந்தான் சிம்மன். “டேய் பால்டப்பா, என்ன கடுப்பேத்த போட்டோவை அனுப்பிட்டு, அப்படியே ப்ளேட்டை மாத்தி ஸ்கோர் பண்றியா? உங்களை வெச்சு நான் விளையாடணும்னு நினைச்சா, எங்கிட்டயேவா?”
அவினாஷை நோகடிக்க என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தான்.
“பாஸ், மைலாப்பூர் சைட் பார்க்கப் போலாமா?”, பிரபஞ்சன் உள்ளே வந்து கேட்க, சிம்மனிடமிருந்து கெட்ட வார்த்தை ஒன்று விழுந்தது.
“வாடா…உட்கார். அப்பறமா போலாம். இப்ப வேற ஒரு விஷயம்.”
சிம்மனின் குரல் கோபமாக இல்லாதிருக்க, “சொல்லுங்க பாஸ்!”, இருக்கைக்கு சென்றவன், ‘சிங்கம் முடிவு பண்ணிருச்சு. செத்தானுங்க’, என்ற மைண்ட் வாய்ஸ் முகத்தில் தெரியாத வண்ணம் முகத்தில் சிறு முறுவலை ஒட்ட வைத்தான்.
“சுத்தமல்லி போலாம்னு இருக்கேண்டா. அப்பாவைப் பார்த்து நாளாச்சு. ஒரு வாரம் பத்து நாள் ஆகும் திரும்ப வர.”
“ஓஹ்…சரி…ம்ம்.. அந்த மங்களம் ப்ராபர்ட்டி ரெஜிட்ரேஷன் அடுத்த வாரம் புதன் கிழமை இருக்கு. மத்த எல்லாம் ஜூம்ல பார்த்துக்கலாம் சார்.”, கடமை கண்ணாயிரமாக இருந்தான்.
“ம்ம்…சரி புதன் காலையில ரிடர்ன் ஃபளைட் போட்டுக்கலாம். நீ செவ்வாய்கிழமை குமுதினிக்கு போன் பண்ணு. நான் ஊருக்கு போயிருக்கேன், வர பத்து நாளாகும்னு சொல்லு. வெயிட் பண்ண முடியாதுன்னா, அங்க கிராமத்துல பேசிக்கலாம்னு சார் சொன்னார். அங்க கொஞ்சம் ஃபரீயாதான் இருப்பார். சொல்லச் சொன்னார்னு சொல்லு. வரமாட்டா, ஆனா வரேன்னு சொன்னா டேட் கேளு ஆனா எங்கிட்ட சொல்லாம கன்ஃபர்ம் பண்ணாதே. புரிஞ்சுதா?”