“என்னடா?”, பிரபாவின் பார்வையைப் பார்த்து சிம்மன் அதட்டினான்.

“ஹ்ம்ம்…இந்த டெரர் பீஸுக்குள்ள இப்படி ஒரு சாக்லேட் பாய் காதலன் இருக்காரான்னு ஆச்சரியப்பட்டுகிட்டு இருக்கேன் சார்.

பென்சில் பறந்து வந்தது. “ஒரு மணி நேரம் இருப்பேன். என்ன முக்கியமா பார்க்கணுமோ கொண்டுவா”, என்று விரட்டினான்.

வீட்டிற்கு வந்த குமுதினி அலுப்பில் உணவு கூட உண்ணாமல் படுத்துவிட்டாள். சிம்மனோடு இருந்த நேரத்தை மீண்டும் மனதில் ஓட்டினாள். ‘இருந்த எல்லா ஆப்ஷனும் விட்டுட்டு ஏன் முட்டை தோசை செய்தேன்?’ என்று யோசிக்க, ‘அவனுக்கு பிடிக்கும் அதனால கை தானா செய்ய ஆரம்பிச்சது.’ மனது பதிலளிக்க, ‘ஓ..சரி, அவினாஷ்க்கு என்ன பிடிக்கும்?’ யோசித்தாள். இரு முறை இங்கே வீட்டில் உணவருந்தியிருக்கிறான். ‘அதிகம் ஸ்ட்ரெயின் எடுத்துக்காதே குமுதினி, உனக்கு எது ஈசியோ அதை செய். எனக்கு எல்லாமே ஓகேதான்’ என்று அவன் கூறியதில் எளிதான சமையல்தான் செய்தாள். அவர்கள் வெளியில் உண்ணும்போதும் கலவையாகத்தான் ஆர்டர் செய்வான். அவன் விருப்பமான உணவு இது என்று சட்டென்று கூற முடியவில்லை.

“சரி…இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத கம்பேரிசன்? “, வாய்விட்டே கேட்க, முயன்று அடுத்த விஷயத்திற்கு தாவினாள். சிம்மனைப் போட்டு தாளித்ததில் சற்று அவள் கோபமும் ஆதங்கமும் மட்டுப்பட்டது உண்மை. ஆனால் அவன் கலங்கியது, கண்ணில் தெரிந்த தவிப்பு அவளையும் பாதித்தது. மனதோடு ஒப்புக்கொண்டாள்.

“ம்ம்.. ஹீரோவா நம்பியிருந்த அப்பா இப்படி ஒரு அசிங்கமானவனா இருந்திருக்கான், வாழ்க்கையோட விளையாடியிருக்கான்னா யாரா இருந்தாலும் உடைஞ்சுதான் போயிருப்பாங்க. அப்போ எனக்கும் ஜெய் பார்த்து பாவமாயிடுச்சு. அவ்வளவு கெத்தா சுத்திகிட்டு இருந்தவன், அவனோட அப்பாவே அவனை முட்டாளாக்கியிருக்கார், அதையும் எங்கிட்டவே கேட்கறான், பின்னே கைகொட்டி சிரிக்கவா முடியும்? கஷ்டமாத்தான் இருந்துச்சு”, வாதாடினாள்.

‘அப்ப லிஃப்ட்ல ஏம்மா அந்தக் கதறு கதறின?’, ‘ம்ம்..கிறுக்கன் சொன்னதை செய்வான். என்னால அவன் ஒத்தையில நின்னுட்டா? அப்பறம் நான் மட்டும் என் வழியை பார்த்துகிட்டு போயிட முடியுமா? அவ்வளவு கல் நெஞ்சக்காரியா நானு?’

“ஒ…அப்ப அது மட்டும்தான் அழுகைக்கு காரணமா?”, மனசாட்சி விடாது கேட்க, “என்ன இப்போ? தோத்துப்போன எங்களோட காதலுக்கும் கல்யாணத்துக்கும் கூட சேர்த்துதான் அழுதேன். அதனால என்ன இப்ப? மூடிட்டு போறியா?”, மனசாட்சியை அடக்கியவள் மனதை மாற்ற அவினாஷுக்கு அழைத்தாள்.

“ஹலோ…சொல்லு குமுதினி”

“பிசியா இருக்கியா அவினாஷ்? அர்ஜென்ட் எல்லாம் ஒன்னுமில்லை”

“ஓஹ்…சரி, ஒரு கிளையன்ட் மீட் இருக்குமா. அப்பறம் கூப்பிடவா?”

“ஷூர். பை அவினாஷ்”

வைத்தவள், ‘ஏன் அவினாஷ்க்கு இதுவரைக்கும் செல்ல பேரே வெக்கலை?’ என்று கேள்வி வந்தது. ‘அட அவங்க அம்மா கூப்பிடற அவி கூட நான் யூஸ் பண்றதில்லையே? எண்ணம் போகும் போதே, ஆனா ஜெய் பார்த்து பேச ஆரம்பிச்சதுமே கூப்பிட்டேன். எல்லாரும் அப்ப அவனை சிம்மன்னுதான் கூப்பிட்டாங்க. ‘

அவள்  ஜெய் என்று கூறிய போது, சற்று ஆச்சரியமாக பார்த்தவன், அப்போது ஒன்றும் சொல்லவில்லை. காதல் சொல்லிக்கொண்ட பின்பு ஒரு முறை, “எங்க அம்மா மட்டும்தான் என்னை ஜெய்ன்னு கூப்பிட்டிருக்காங்க. அதுக்கப்பறம் நீதான். என்னவோ நீ அப்படி கூப்பிட்டப்போ வேணாம்னு சொல்லத் தோணலை. அப்பவே உங்கிட்ட மாட்டிகிட்டேன் போல”, என்று அவள் தலையைப் பிடித்து ஆட்டியிருந்தான்.

தலையில் தட்டிக்கொண்டவள், “அடிங்க…அவன் கஷ்டப்பட்டதும் மனசு அங்க அலைபாயுதோ?  நீ பட்ட கஷ்டம், பாட்டி பட்ட கஷ்டமெல்லாம் மறந்தா நீயெல்லாம் மனுஷியே இல்லை. வெட்டியா யோசிக்காம வேலையைப் பாருடி கிறுக்கச்சி”, தன்னையே திட்டிக்கொண்டவள் லாப்டாப்பை திறந்து வேலையில் மூழ்கிப்போனாள்.

அவினாஷ் அலைபேசியில் அழைக்கவும், கவனம் கலைந்து எடுத்தாள்.

முதுகு, கழுத்து என்று வலிக்கும்போதுதான் இரண்டு மணி நேரமாக அமர்ந்திருப்பது தெரிந்தது.

“ஹலோ…ஹா…ம்மா”, என்று மெதுவாக எழுந்து நின்றாள்.

“என்ன குமுதினி?

“வேலையில டைம் பார்க்கலை, கழுத்து முதுகு எல்லாம் இப்ப சண்டைக்கு வருது” என்று மெல்ல நடை பயில, சிரித்தவன், “ஒழுங்கா உன் டேபிள்ல உட்காராம பெட்ல சாஞ்சுட்டு இருந்தியா? சொல் பேச்சு கேட்கறதில்லை”, மென்மையாக திட்டினான்.

“யெஸ் யெஸ் தப்புதான். அதுதான் வலி பின்னுதே”, என்று சமையலறைக்குச் சென்றாள். வயிறு பசித்தது.

“போன் பண்ணிருந்தியே என்ன குமுதினி?”

அவினாஷ் ஞாபகப்படுத்தவும், “ம்ம்ம்…யா. ஜெய்க்கு ஒரு வழியா அவங்க அப்பாவோட சுயரூபம் தெரிஞ்சிருச்சு, ரொம்பவே உடைஞ்சு போயிருக்கான். அதுதான் இரண்டு நாளா போனும் எடுக்கலை பிரபாவும் அல்வா குடுத்திருந்தான்.”

“ஓ… கஷ்டம்தான். உனக்கெப்படி விஷயம் தெரியும்?”

சுருக்கமாக நடந்ததைக் கூறியவள், அங்கே சிம்மனுடன் பேசியதை மேலோட்டமாக மட்டுமே கூறினாள். சமைத்துக் கொடுத்ததை சொல்லவில்லை. அது தேவையில்லை என்று அவளாகவே முடிவு செய்துகொண்டாள்.

“ஹ்ம்ம்.. பேசி முடிக்க வேண்டிய சப்ஜெக்ட். இப்ப அவன் கேட்ட க்ளோஷர் கிடைச்சுதாமா? டைவர்ஸ் தரானாமா?”

ஒரு நொடி அமைதி காத்தாள். சிம்மனுடம் பேசி கிளம்பும் நேரம் டைவர்ஸ் பற்றிக் கேட்கவேயில்லை.

“ம்ப்ச்… டைவர்ஸ் அப்பறம் வேற கல்யாணம் பண்ணிக்கோன்னேன். நீ பண்ணா நானும் பண்ணனும்னு அவசியம் கிடையாது. பண்ணமாட்டேன்னு சொன்னான். திட்டிட்டு கிளம்பிட்டேன். ஒரு இரண்டு நாள் போகட்டும் அவினாஷ். அவன் அப்பாவோட துரோகத்துலர்ந்து வெளிய வரட்டும். அப்பறம் கேட்கலாம்.”

“ம்ப்ச்… சரி… எதோ ஒரு ஸ்டெப் முன்னேற்றம் இருக்கே. பட் இதுக்கும் மேல இழுக்க முடியாது குமுதினி. அடுத்த வாரம் கண்டிப்பா நாம பிராசஸ் ஆரம்பிச்சாகணும்.”, அழுத்தமாகவே கூறினான்.

“சரி அவினாஷ். நீ வேலையை பாரு. நான் டின்னருக்கு பார்க்கறேன்”, என்று வைத்துவிட்டாள்.

முகம் கழுவி வந்தவள், இட்லி ஊற்றிக்கொள்ளலாம் என்று பார்த்தால், மாவு இல்லை. இரவு சாதம் உண்ண பிடிக்கவில்லை. சரி  சற்று நடந்தால் முதுகு வலியும் போகும் அப்படியே பக்கத்தில் இருக்கும் கடையில் மாவு வாங்கிவரலாம் என்று கிளம்பினாள்.

அப்போதே லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. மெல்ல வளாகத்தை விட்டு வெளியில் வந்தவள் தெரு ஓரமாக நடக்க ஆரம்பித்தாள்.  பக்கத்து தெரு முனையில் மாவை வாங்கிக்கொண்டு திரும்பி வரும் பொழுது, பக்கவாட்டில் வந்த ஒரு பைக்காரன், அவளை திடீரென்று எட்டி உதைக்க, நிலை தடுமாறி  பாதி ரோட்டிலும் மீதி ப்ளாட்பாரக் குப்பையிலுமாக விழுந்தாள்.

என்ன ஏது என்று புரிவதற்குள் பைக்கில் சென்றவன் பறந்துவிட்டிருந்தான். இதை கவனித்து இரண்டொருவர் ஓடி வந்து அவளை எழுப்பினர்.

மெல்ல எழுந்தவளால் நிற்க முடியவில்லை. வலது கணுக்கால் சுரீரென்று வலித்தது., தடுமாறியவளை கூட இருந்த பெண்மணி பிடித்துக்கொண்டாள். வண்ண வணணமாக பைக்காரனை திட்டிக்கொண்டிருந்தாள்.

“அந்த பொறம்போக்கு யாருன்னு உனக்குத் தெரியுமாம்மா?”, என்று கேட்க, இல்லை என்று தலையசைத்தாள்.

“ஏ… நீ… நீங்க குமுதினிதான? “, என்று ஒரு வழியாக அடையாளம் கண்டு கேட்க, முகத்தை வலியில் சுளித்தவள் “ம்ம்… கொஞ்சம் ஆட்டோ எதாவது கூப்பிடுங்களேன் ப்ளீஸ். பக்கத்துல ஹாஸ்பிட்டல் போகணும்.”, என்றாள் மெலிந்த குரலில்.

அவள் பிரபலம் என்பதாலோ என்னவோ,  “இரும்மா,   நாங்களே டிராப் பண்றோம். எங்க கார் இங்கதான் இருக்கு.” என்றவர் அடுத்த சில நிமிடங்களில் கணவரை அழைத்து, அவளை கைத்தாங்கலாக காரில் ஏற்றினார்.

“யாருக்காவது சொல்லணுமா மேடம்?”, அந்தப் பெண்ணின் கணவர் கேட்கவும், கைப்பையை தேட, உடனே  “மாவு பாக்கெட் கொடிடுச்சுன்னு அங்கேயே விட்டுட்டேன். இது மட்டும் எடுத்துட்டேன்”, என்ற தகவலோடு அந்தப் பெண் எடுத்துக் கொடுத்தார்.

கைகளிலும் அங்கங்கே சிராய்ப்பு. சற்றே நடுங்கிய கைகளை முயன்று கட்டுப்படுத்தியவள், கடைசியாக அவினாஷின் எண் இருக்க, அழைத்தாள்.

“அவினாஷ்…. ஒரு சின்ன ஆக்சிடென்ட். இங்க பக்கத்துல விஹார் ஹாஸ்பிட்டல் வந்திருக்கேன். நீ வரமுடியுமா ப்ளீஸ்?”, என்று கேட்கவும் அந்தப்பக்கம் பதறிவிட்டான்.

“கீழ விழுந்துட்டேன், கணுக்கால் பயங்கரமா வலிக்குது. இங்க வழியில பார்த்த ஒரு கப்பிள் ஹெல்ப் பண்றாங்க. நீ ஹாஸ்பிட்டல் வந்துடு”, என்று கூறும் போதே குரலில் கரகரப்போடு அவளையும் மீறி நடுக்கம் வேறு வெளிப்பட்டது.

அவினாஷ் அடித்து பிடித்து வருவதற்குள், அட்மிட் ஆகி, காயங்கள் கணிக்கப்பட்டு, எக்ஸ்-ரே எடுக்க அழைத்துச் சொல்லப்பட்டிருந்தாள் குமுதினி.