“இல்ல இல்ல… நான் சொல்றேன். எதுக்குன்னு உனக்குத் தெரிஞ்ச வரைக்குமாவது சொல்லேன்.”
“நீ முதல்ல சொல்லு. அப்பறம் நான் சொல்றேன்.”
“சுத்தமல்லியிலிருந்து ஒரு 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமத்தின் பேரைச் சொல்லி, நர்ஸ் சுந்தரவல்லின்னு பேரு. அங்கதான் இருக்கா. நீ சொல்லு இப்ப.”, சற்றே தவிப்பாகக் கேட்டான்.
“மட்ட ஜாதி பொண்ணோட சுத்தறாரு சின்னய்யான்னு சேதி வந்தப்போ பெரியய்யா கண்டுக்கலை. இப்பத்தான் என் புள்ள ஆரம்பிச்சிருக்காண்டா முத்து. ருசி பார்த்து துப்பிட்டு போவான்னு சொன்னார். ஆனா இப்படி கல்யாணம் முடிச்சு கூட்டிட்டு வந்து எங்க தலையில கல்லைப்போடுவார்னு யார் நினைச்சோம்? நல்லா மயக்கிட்டா சூனியக்காரி!”, பழைய நினைவில் சபித்தான்.
“ஓ…அப்பறம்?”
“ஐயா ஆரத்தி எடுத்து உள்ள அழைச்சிகிட்டது எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு. இதுல எல்லாருக்கும் சொல்லி ஒரு பெரிய வரவேற்பு ஏற்பாடு பண்ணனும்னு வேற பேசிகிட்டு இருந்தார். அது இன்னமும் எனக்கு கோவமாகிடுச்சு. கல்யாண ஜோடிக்கு விருந்து தடல்புடலா நடந்தது.. ஐயாகிட்ட இரண்டு நாள் நான் பேசவே இல்லைன்னா பார்த்துக்கோ”, கதை சொல்லிக்கொண்டிருந்தான்.
“உங்க சின்னய்யா கல்யாணத்துல அவர் அப்பாவுக்கே பிரச்சனையில்லைன்னா உனக்கென்னடா வந்துச்சு?”
“எங்க சின்னைய்யாவுக்கு எங்க சாதியில பெரிய பணக்கார வீட்டு பொண்ணா எடுத்து, ஊரை வளைச்சு கல்யாணம் பண்ண எவ்வளவு கனா கண்டிருப்போம் நானும் ஐயாவும். இப்படி பொசுக்குனு மூணாம்பேருக்குத் தெரியாம கோயில்ல வெச்சு…” தலையில் அடித்துக்கொண்டான்.
“அவரே மன்னிச்சப்பறம் என்னாச்சு? ஏன் அவங்க போயிட்டாங்க?”
“ஹா…எங்க ஐயாவா கொக்கா! சின்னைய்யாவுக்கு பொம்பளை ருசி காட்டணும்னு நாலு நாள் விட்டு வெச்சாரு. அப்பறம் அவசர வேலைன்னு பிள்ளையை அனுப்பிவிட்டு இங்க சுலபமா அந்த அன்னக்காவடியை பத்தி விட்டுட்டாரே! எத்தனை பேரை மிரட்டி அனுப்பியிருப்போம், இந்த சிறுக்கியெல்லாம் எம்மாத்திரம்? முதல்ல கொஞ்சம் முரண்டு பண்ணா. அவ பாட்டி கழுத்துல கத்திய வெச்சதும், சொன்னதெல்லாம் கேட்டுகிட்டு ஓடிப்போயிட்டா. அதோட சனியன் விட்டுதுன்னு பார்த்தா, திரும்ப வந்து நிக்கிறா! ஏதோ, எங்க ஐயாவை விட்டுட்டு வேற ஒரு புளியங்கொம்பை பிடிச்சிட்டா. அது வரைக்கும் நல்லது.”, முத்தையன் திருப்தியாகக் கூறிமுடிக்க, அங்கே சிம்மன் அதிர்ந்து நின்றவன் முகம் இரத்தம் வடிந்து வெளிறிப் போயிருந்தது. ஒரு சில நொடிகள் உலகமே உறைந்தது போலிருந்தது.
முத்தையன் கூறியதை முழுதுமாக கிரகிக்கக் கூட திராணியின்றி நின்றிருந்தான்.
செல்வாவே கொஞ்சம் அதிர்வில்தான் இருந்தான். சொந்தத் தகப்பனே இப்படிச் செய்வாரா? ஹ்ம்ம் வெட்டியே போடறாங்க. அந்த வரையில் இங்க உயிரோடவாவது விட்டாங்களே என்று நினைத்தவன்,
“ம்ம்.. திறமையான பொண்ணு. விபரீதமா யோசிக்காம, வேற எங்கையாவது பொழைக்கட்டும்னு அனுப்பி வெச்சீங்களே. அந்த மட்டுக்கும் நல்லது.”, என்று சொல்லியும்விட்டான்.
“ம்க்கும்… கிணத்துல தள்ளிவிடலாம்னு தான் முதல்ல யோசிச்சோம். ஆனா அதுக்கு முந்தின மாசம்தான், ஐயா கைபட்ட ஒரு பொண்ணு கிணத்துல விழுந்து செத்துப்போயிட்டா. அதோட, அப்படி எதுவும்னா சின்னய்யா தோண்டி துருவுவாரு, இல்லை அவ நினைப்பாவே இருந்துடுவாரோன்னு பயம். அதுதான் நீ வேணாம்னு கடுதாசி எழுதிவெச்சிட்டு ஓட வெச்சோம். அவ எதுவும் சின்னையா கூட பேசிடாம இருக்க, அவ பாட்டியை எங்க பார்வையிலேயே வெச்சிருந்தோம். ”, சொன்ன செய்தியின் வீரியம் அறியாமலேயே பேசினான் முத்தையன்.
முயன்று தன்னை நிலைப்படுத்திய சிம்மன், “அவனை நாலு அடி பின்னி எடு செல்வா, அப்பறம் கூட்டிட்டு போய் ஹாஸ்பிட்டல் கிட்ட விட்டுரு. ஒரு அரை மணி நேரம் கழிச்சு, மருதுவை கொஞ்சம் தள்ளி வேற எங்கேயாவது இறக்கி விடுங்க. இரண்டு பேருக்கும் அவங்க இருந்த இடம் தெரியக்கூடாது. ஜாக்கிரதை.”, கட்டளையிட்டு இணைப்பை துண்டித்தான்.
பிரபாவை அழைத்தவன், “டேய்…எல்லாம் விசாரிச்சாச்சு. செல்வாவை ஃபாலோ பண்ணி இரண்டு பேரும் ஒழுங்கா போயிட்டாங்களான்னு பார்த்துக்கோ. ஒரு இரண்டு நாள் என்னை முடிஞ்சவரைக்கும் தேடாத. நீயே மானேஜ் பண்ணு.”, என்றதோடு கைப்பேசியை அணைத்தான்..
அவன் தந்தையின் தந்திரம் மெதுவாக கிரகிக்க மனம் வெகுவாக கனத்துப்போனது. அவரது பிம்பம் உடைந்தது போறாதென்று அதன் உடைந்த பகுதிகள் அவனை மேலும் கூறு போடுகிறது.
குமுதினியின் நிலையை நினைக்கவே மனம் முரண்டியது. என்னென்னவோ எண்ணங்கள் சுழன்றது. மனம் கொதித்துக்கொண்டிருந்தது.
கேட்டதை எல்லாம் உணர்ந்து தெளிந்து சிம்மன் வரும் நேரம் அவன் மன நிலை எப்படி இருக்கும்? அவன் கோவம், வருத்தம், வலி யார் மீது திரும்பும்?