“பாஸ்… என்ன இது இப்படி சொல்றீங்க?” , அலறியது பிரபஞ்சனே. அவனும் இங்கே வேலைக்குச் சேர்ந்த நாளாக பல வகையாக அதிர்ச்சிகளை சிம்மனிடம் பெற்றிருந்தாலும், இது வேறு லெவலில் இருந்தது.
“என்னடா ?”
“இல்ல… காசுக்கு ஆசைப்பட்டு வேணும்னே மாத்தி மாத்தி பேசின அந்த கந்தசாமி பார்ட்டியை வழியில்லாம லேசா மிரட்டச் சொல்லி ஆள் அனுப்பினோம்தான். ஆனா இப்படி மொத்தமா ஆள் கடத்தல்னெல்லாம் இறங்கினதே இல்லை பாஸ். நல்லா யோசிச்சீங்களா?”
சிம்மனுக்கு என்னவோ பிடித்து ஆட்டுகிறது என்பதுபோல பார்த்தான் பிரபஞ்சன்.
“டேய்… எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறியா? நீ சொன்ன மாதிரி விஷயங்களை மொத்தமா கறக்கணும்னா, இதுதான் ஓரே வழி. நான் ஏற்கனவே யோசிச்சு வெச்சிருக்கேன். “, என்று அவன் திட்டம் முழுவதும் கூறினான்.
கேட்டு முடித்து ஓரிரு நிமிட அமைதிக்குப் பின், “பாஸ், ஆன் பேப்பர் சரியாத்தான் வருது. சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க. உங்க அப்பா ஜீன் கொஞ்சம் இந்த விஷயத்துல உங்களுக்கும் ஹெல்ப் பண்ணுதுன்னு தோணுது.”
புதன் கிழமை ஆம்புலன்ஸ் வண்டியில் நரசிம்மன் ஏற்றப்பட, உடன் முத்தையன். காலையில் திருநெல்வேலி மருத்துவமனைக்குச் சென்றால், அட்மிட் ஆகி, எல்லா பரிசோதனைகளும் முடிந்து, மறு நாள்தான் திரும்புவார்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இது வழமைதான்.
கல்லூரிக்குச் செல்லும் வழியில் மருதுவை தூக்கியிருந்தார்கள். இரண்டே பேர், ‘முத்தையன் மகனா? உங்க அப்பா இங்க ஹாஸ்பிட்டல் வந்தாரே அங்க மயக்கமாயிட்டார்’, என்று பேச்சு கொடுப்பது போல தள்ளிச் சென்று, கத்தியை வயிற்றுப்பகுதியில் அழுத்தி, ‘மரியாதையா வண்டில ஏறு’ என்ற மிரட்டலில், ஏறியிருந்தான்.
கை, வாய் மற்றும் கண்கள் கட்டி, பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய சினிமா தியேட்டர் அறையில் உட்கார வைக்கப்பட்டிருந்தான். சிம்மா பில்டர்ஸ்தான் அக்கட்டிடத்தை இடித்து காம்ப்ளெக்ஸ் கட்ட பிராஜெக்ட் எடுத்திருந்தார்கள்.
முத்தையனுக்கு எப்போதும் போல சிம்மன் அழைத்துப் பேசினான். “அப்பாவை ஸ்கான் எடுக்க கூட்டிட்டு போயிட்டாங்களா முத்தையா?”
“ஆமாங்க தம்பி. இப்பத்தான் அழைச்சிட்டு போனாங்க. வர இரண்டு அவர் ஆகும்னாங்க. எதோ புதுசா டெஸ்ட் ஒன்னு எடுக்கணுமாம்.”
“ம்ம்…டாக்டர் எனக்கும் சொல்லியிருந்தார். சரி பார்த்துக்கோங்க. முக்கியமான மீட்டிங் போறேன், அதான் முதல்லயே கூப்பிட்டேன். நானே திரும்ப சாயந்திரம் பேசறேன்.”, என்று வைத்துவிட்டான்.
கேட்டுக்கொண்டிருந்த பிரபஞ்சன், யாருக்கோ அழைத்து, “ஹான்… பார்ட்டிகிட்ட இப்ப பேசிடலாம் செல்வா.”, என்று அடுத்த கட்ட ஆட்டத்தை தொடங்கிவைத்தான்.
இருவருமே அலுவலகத்தில்தான் இருந்தனர். ஒரு வேளை எதுவும் பிசகினாலும், அவர்கள் சென்னையில் அன்றாட வேலைகளை கவனித்திருந்தனர் என்ற சாட்சியங்கள் வேண்டுமே.
பிரபா பேசி வைத்த பத்து நிமிடங்களுக்குள் சிம்மனின் போன் சைலன்ட்டிலிருப்பதால் துடித்தது. இரண்டு மூன்று முறை முத்தையன் அழைத்துப் பார்த்து, அடுத்து பிரபாவின் கைபேசிக்கு அழைத்தான்.
எடுத்த பிரபா, “ஐயா பெரிய கிளையன்ட் கூட இருக்கார், இப்ப பேச முடியாதுங்க”, என்று முத்தையன் பேசுவதற்கு இடம் தராமல் அழைப்பை துண்டித்தான். மீண்டும் அழைப்பு வர, அதை நிராகரித்தான்.
முத்தையனுக்கு மீண்டும் ஒரு அழைப்பு வந்தது, இந்த முறை, “ப்பா…”, என்ற மருதுவின் குரல் அலறலாய்.
“ஒழுங்கா கிளம்பி சொன்ன இடத்துக்கு வா. இல்லைன்னா, உன் புள்ளை பரீட்சை எழுத விரல் இருக்காது.”, மிரட்டலாய் ஒரு குரல்.
“இல்ல… இல்ல… கிளம்பிட்டேன். அவனை ஒன்னும் பண்ணிடாதீங்க”, அலறிய முத்தையன் ஆட்டோ பிடிக்க ஓடினான்.
அவனை ரோட்டில் மறித்த இருவர், “வாண்ணே…உனக்குத்தான் வெயிட்டிங்”, என்று தோளில் கைபோட்டு அருகில் இருந்த காரில் ஏற்றினர்.
“டேய்… யாருடா நீங்கல்லாம்?”, என்று கேட்டு முடிப்பதற்குள் வாயில் ப்ளாஸ்திரி ஒட்டப்பட்டு, கண்கள் மூடப்பட்டு, கைகள் இரண்டும் கேபிள் வயர் கொண்டு கட்டப்பட்டன. முத்தையன் தனியறையில் அடைக்கப்பட்ட செய்தி கிடைத்ததும், சிம்மன் பிரபாவுடன் வீட்டிற்கு கிளம்பினான்.
அவனது அறையில், சென்று அமர்ந்தவன், பிரபாவைப் பார்க்க, “ஆரம்பிக்கலாம் செல்வா”, என்று அழைத்துக் கூறி கைப்பேசியை டீவியில் வைஃபை மூலம் இணைக்க திரையில் முத்தையன் நாற்காலியில் கை கால் கட்டப்பட்டு அமர்ந்திருந்தான். பிரபா அதோடு அறையைவிட்டு வெளியேறிவிட்டான்.
திரையில் செல்வா முத்தையன் எதிரில் வந்து அமர்ந்தான். சிம்மனுக்காக சில பல மிரட்டல்கள், வளர்ந்து வரும்போது ஆட்டம் காட்டிய சில கான்ட்ராக்டர்களை வழிக்கு வர செய்வது என்று செய்து கொடுத்தவன். இதுவரை நம்பிக்கையானவன். மூன்றாம் நபரை இதில் இழுக்க மிகவும் யோசித்தான் சிம்மன். வேறு வழியில்லாததால், இந்த முடிவு.
“இங்க பாரு முத்தய்யா. உன் புள்ளைக்கு சேதாரமில்லாம நீயும் நேரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு திரும்பணும்னா கேட்கற கேள்விக்கு பதில் சொல்லிட்டா கிளம்பலாம்.”, செல்வா பேச்சை தொடங்கினான்.
“யாரு நீங்கல்லாம்? அந்த டீவிக்கார சிறுக்கி அனுப்பினாளா?”, கோவமாய் எகிறினான் முத்தையன்.
சிம்மன் பேசுவது செல்வா காதில் பொறுத்தியிருந்த ஹெட்போனில் வர, “யாரு அந்த குமுதினி மேட்டரா? அது என்ன கதை?”, செல்வம் கேட்க,
“அது எதுக்கு? ஆமா நான் தான் அந்த கல்யாண மேட்டரை கசியவிட்டேன். அது எங்க ஐயா இரண்டு பேருக்குமே தெரியும். இப்ப என்னவாம்?”
“யார் சொல்லி செஞ்ச? உனக்கெல்லாம் தனியா செய்யற அளவு விவரம் இல்லைன்னு கேள்விப்பட்டேனே?”, செல்வம் சற்றே இகழ்வாகப் பார்த்தான்.
“உனக்கெதுக்கு அதெல்லாம்?”, முத்தையன் முறைத்தான்.
“அய்யய்ய… இன்னும் உனக்கு புரியலையாடா? நான் என்ன கேட்டாலும் நீ பணிவா பதில் சொல்ற…இல்லைன்னா…”
“இல்லைன்னா என்ன?”
“டேய்… ஒரு சாம்பிள் காட்டுங்கடா..”, என்று செல்வா மற்றொரு கைப்பேசியில் யாருக்கோ அழைத்துச் சொல்ல, ஸ்பீக்கரில் பளார் என்று அறையும் சத்தமும், அதைத் தொடர்ந்த அலறலும் கேட்டது.
“ஐயோ… மருது…”, முத்தையன் கதற, கைப்பேசி இணைப்பை துண்டித்த செல்வா,
“இங்க பாரு முத்து, உன் புள்ளை தேவையில்லாம அடி வாங்கணுமா சொல்லு? அதுவும் நோஞ்சானா வேற இருக்கான். அப்பறம் அடிக்கற அடியில உயிர் போச்சுன்னா என்னை சொல்லக்கூடாது.”, செல்வா இணக்கமாக விளக்கினான்.
பல்லைக் கடித்த முத்தையன், “டேய்… எங்க ஐயா, சின்னையாகிட்ட சொல்லி உங்களை என்ன பண்றேன் பாரு”, என்று கோவத்தைக் காட்ட, செல்வா கைப்பேசியை மீண்டும் எடுத்தான்.
“இல்ல …வேணாம். நீ என்ன கேட்கறியோ நான் சொல்றேன். அது பெரியய்யா சொல்லித்தான், சின்னய்யா அலமாரியிலருந்து தேடி எடுத்து போட்டோ புடிச்சு என் புள்ளை மூலமா யூட்டூபுல போட்டோம்.”, அவசரமாகக் கூறினான்.
சிம்மன் முகம் இறுகியது. “உங்க சின்னைய்யா பேரும்தானடா கெட்டுது. அவருக்கும்தான அவமானம். நிஜமா சொல்லு, உங்க பெரியய்யாவா சொன்னது?”, செல்வா காதில் வரும் சிம்மனின் உத்தரவைக் கேள்வியாக்கினான்.
“அது… அது அந்த பொண்ணை சின்னைய்யா புது கட்டிடத்துக்கு குத்துவிளக்கு ஏத்த வெச்சார்ன்னு பெரியய்யாவுக்கு கோவம். அதுதான் இப்படி செய்யச் சொன்னாரு. ஆனா அது…இவ்வளவு பெருசா போகும்னு நினைக்கலை.”
சிம்மன் நினைத்ததுபோல அவனுக்கு தண்டனை தரவும்தான் அவன் தந்தை இதை செய்திருக்கிறார். ஆனால் கேட்டதிற்கு,’ நான் இப்படி செய்வேன்னு நினைக்கிறியா?’ என்று நேரடியாக பதில் கூறாமல் தவிர்த்துவிட்டார்.
“செல்வா… பழைய கதைங்களைக் கேளு”, என்று கட்டளையிட்டான்.
“சரி… அது அப்பா புள்ள தகராறு. எனக்கு வேண்டியது அதில்லை.”
“அப்ப… அந்த பொம்பளை அனுப்பலையா உங்களை?”, முத்தையன் இடைமறித்தான்.
“ம்ப்ச்.. இல்லை. இது கொஞ்சம் பழசு. உங்க ஐயா நடமாடிகிட்டு இருந்த காலத்துல மன்மதனா சுத்திகிட்டு இருந்தாராம்? நீதான் அவருக்கு ஏற்பாடாமே? அப்படியா?”
“ஹ்ம்ம்… உங்க சின்னய்யா தவிர வேற வாரிசு எதாவது இருக்குதா?”
“அதெல்லாம் விவரமாத்தான் இருந்தோம். அப்படி எதாவது கரு தங்கினா, ஒரு நர்ஸ் இருந்துச்சு, மாத்திரையக் குடுத்து வேலையை முடிச்சிரும். சின்னய்யா மட்டும்தான் வாரிசு.”, குரலில் பெருமை வேறு.
“ஓ.. சம்மதிச்சு வார பொம்பளைங்க மட்டும்தானா இல்ல…?”, செல்வம் இழுத்தான்.
“எங்க ஐயா இஷட்டப்பட்டுட்டா, யாரு தடுப்பாங்க? புருஷனாவது, அப்பனாவது? எல்லாம் அடங்கி ஓடுங்கி,போட்ட காசை பொறுக்கிட்டு போயிடுவாங்க.”, திமிரோடு வந்தது பதில்.
“எத்தனை பேரடா இப்படி அழிச்சிருக்கீங்க?”
“அது இருக்கும் ஒரு பத்து பதினஞ்சு. அப்போல்லாம் ஐயா இதுக்குன்னு ஒரு நோட்டுல எழுதி வெச்சிருப்பார். இப்ப ஏன் அதெல்லாம் கிளறிட்டு?”
“ஹ்ம்ம்… இவ்வளவுதானா இல்ல யாரையும் போட்டு தள்ளியிருக்கீங்களா?”
சிம்மனுக்கு நெருப்பில் நிற்பது போல இருந்தது. அவன் தந்தையைப் பற்றி அவன் வைத்திருந்த பிம்பம் முற்றிலும் சிதறிவிட்டது. முயன்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டு , மேலும் சில கட்டளைகளை செல்வாவிற்குக் கூறினான்.
“இப்ப அந்த நர்ஸ் எங்க?”
“அது எதுக்கு?”
“ம்ம்…சொல்லு. உங்ககிட்ட பணம் வாங்கிட்டு கருவ அழிச்ச மாதிரி, வேற யார்கிட்டவும் பணத்தை வாங்கிட்டு வாரிசை வளரவிட்டிருந்தா?”, செல்வம் கொக்கி போடவும்,