Advertisement

*9*

எங்கோ தொலைவில் கதவு தட்டப்படும் அரவம் கேட்க தலையை சிலுப்பியவள் மீண்டும் உறக்கத்திற்குச் செல்ல, அந்த அரவம் இடைவிடாது தொடர்ந்து செவியைத் தீண்ட, அடித்துபிடித்து அவசரமாய் எழுந்து அமர்ந்தாள் கீர்த்தனா. அழுது கொண்டே இருந்தவள் அப்படியே தரையில் தூங்கியிருந்தாள். 

அதிகம் யோசிக்கத் தேவையின்றி இருக்கும் இடம் பளிச்சென்று உடனே நினைவில் வர, கீர்த்தனாவின் பார்வை மெத்தையில் இருக்கும் அஞ்சனிடம் சென்று மீண்டது. 

‘என்கிட்ட ராத்திரி அப்புடி நடந்துட்டு எங்க வீட்டுல வாங்கிக்கொடுத்த கட்டில்லயே எப்படி ஒய்யாரமா தூங்குறான் பாரு…’ என்று கருவியவாறே கதவுத் தட்டும் சத்தம் மீண்டும் கேட்கவும் எழுந்து சென்று கதவைத் திறந்தாள். 

அங்கு குருங்கையை கண்டவுடன் என்னவென்று கீர்த்தனா கேள்வியாய் பார்க்க,

“இன்னைக்கு நம்ம வூரு கோவில்ல பொங்கல் வுட்டு சாமி கும்பிட்டதும் உங்க மறுவூட்டு அழைப்புக்கு போகணும். குளிச்சி கிளம்பிடு கீர்த்தி. கொழுந்தனாரையும் கிளம்ப சொல்லிடு…” என்று குருங்கை தான் வந்த தகவலை தெரிவித்துவிட்டுக் கிளம்ப அவளை பிடித்து நிறுத்தினாள் கீர்த்தனா.

“அங்கன எப்புடி குளிச்சி ட்ரெஸ் மாத்துறது? வேற ரூம்ல பாத்ரூம் இல்லையா? இங்கன வேற நிறைய பேர் இருக்காங்க…” 

நேற்றே கவனித்திருந்தாலே அவ்வீட்டில் பொதுவாய் ஒரு குளியலறையும் கழிவறையும் கொல்லை புறத்தில் இருந்ததை. அங்கேயே குளித்து உடைமாற்றுவது என்பது அத்தனை வசதிபடாத காரியமாய் அவளுக்குத் தோன்றியது. அதோடு வீட்டில் ஆட்கள் நடமாட்டமும் அதிகமிருக்க, தானாய் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது படபடப்பு.

“நைட்டியோ இல்லை சுடியோ போட்டுட்டு இங்கன ரூமுக்கு வந்து மாத்திக்கோ. ஆம்பளைங்க கொஞ்சம் லேட்டா தான் குளிப்பாங்க, அதுக்குள்ள நம்ம குளிச்சி கிளம்பிடலாம்.” என்று இதழை வளைத்தாள் குருங்கை. மணமான புதிதில் இதே தயக்கமும் பயமும் அவளுக்கும் இருந்ததே! 

பெரிய குடும்பத்தில் வாக்கப்பட்டால் பொறுப்புகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்திருக்க, நடைமுறை சிக்கலும் இருக்கிறதே. கட்டியவனை சமாளிப்பதே எப்படி என்று புரியாது இருக்க இன்னும் என்னென்ன சாங்கியங்கள் வைத்திருக்கிறார்களா என்று கிலி பிறந்தது கீர்த்திக்கு. அகத்தின் தவிப்பு முகத்தில் தெரிய,

“பயப்புடாத கீர்த்தி. கொழுந்தனார் கூடவே இரு ஆரும் எதுவும் சொல்ல மாட்டாங்க…” என்று தைரியம் சொன்ன குருங்கை சற்று அவள் புறம் சாய்ந்து மெல்லிய குரலில், “அம்புட்டு சீக்கிரம் இந்த வூட்டுல கொழுந்தை யாரும் சீண்ட மாட்டாங்க… அவர் கூடவே இருந்தா எல்லாத்திலேந்தும் நீ தப்பிச்சுடலாம்.” என்று கண்ணடிக்க, 

‘அவனுடனா?’ என்றிருந்தது கீர்த்திக்கு.

“விரசா கிளம்புனாலே இங்கன எல்லாரையும் கூட்டி கிளப்ப லேட் ஆகிடும்… பார்த்துக்கோ…” என்றுவிட்டு குருங்கை சென்றிட, கதவடைத்து வந்த கீர்த்தி கைபிசைந்து நின்றாள். 

காலை கடன்கள் அவளை அதற்கு மேல் யோசிக்க விடாது செய்ய, ‘எங்க வந்து மாட்டிருக்க பாரு… எல்லாம் இந்த அருணை சொல்லணும்.’ என்று அருணை வைதுகொண்டே தன் பையிலிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் சென்றாள்.

போகும் வழியில், “புதுபொண்ணு அதுக்குள்ள எழுந்தாச்சா… கண்ணெல்லாம் செவந்து கிடக்கு கொழுந்தனாரு தூங்க விடலையா?” என்று அஞ்சனின் நடுநங்கை கேலி பேச அதை காதில் வாங்காதது போல குளியலறையில் புகுந்து கொண்டாள்.

“என்ன இந்த பொண்ணு பேசவே காசு கேக்கும் போல?” என்று ஓரகத்தியிடம் குற்றம் படிக்க,

“அதானே! கொழுந்து பேசுற பேச்சுக்கு அவரை சுத்தல்ல விடுற பொண்ணா வரும்னு பாத்தா இதென்ன இப்படி புள்ள பூச்சியா இருக்கு. எல்லாம் அவருக்கு சாதகமாத்தான் இருக்கு.” என்று அஞ்சன் கீர்த்தி பற்றிய பேச்சுக்கள் அவர்களின் மாமியார் பரிமளம் அழைக்காவிட்டால் இன்னும் நீண்டிருக்கும்.

குளித்து முடித்து ஒரு சுடிதார் அணிந்தவள் துவைத்த தன் உடைகளை அங்கிருந்த கொடிகளில் காய வைத்துவிட்டு குனிந்த தலை நிமிராது அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டாள். அஞ்சன் இன்னும் உறக்கத்தில் இருக்க கடுப்புடன் தரையை உதைத்தவள் குறுக்கே நெடுக்கே அறையை அளந்தபடி நடக்க, அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையே அவளை ஆக்கிரமித்திருந்தது.

“குளிச்சிட்டு வாக்கிங் போவாங்களா என்ன?” என்ற கேள்வியில் நடையை நிறுத்தி திரும்பிப் பார்க்க, கட்டிலில் சாய்ந்து அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான் அஞ்சன். இவள் பதில் பேசாது அவனை முறைக்க,

“வாயை திறந்தா முத்து உதிந்துடுமோ?” என்று இதழை இகழ்ச்சியாய் வளைத்தவன் சட்டென எழுந்து அவள் அருகில் வர, பயந்து பின் சென்றாள் கீர்த்தி.

“பயந்த புள்ள மாதிரி விசுவிசுக்குனு பின்னால போவாத.. சண்டை கட்டனும்னா மட்டும் இந்த வாயில வீராப்பு வருது. நான் எதுவும் பொறுமையா கேட்டுட்டா கப்புனு மூடிட வேண்டியது…” என்றபடி அவள் இதழை தன் இருவிரலால் அழுத்திப் பிடித்துச் சுண்டிவிட, அவன் விரலை தட்டிவிட உயர்ந்த அவளது வலக்கரத்தை தன் மற்றொரு கரத்தால் பிடித்துக்கொண்டான் அஞ்சன். 

அவளது இடக்கை உடனே உயர்ந்து தன் இதழை சிறைப் பிடித்திருக்கும் அவனது கரத்தின் மணிக்கட்டின் மேல் அழுத்தமாய் படிந்தது. 

“என்ன வுடனுமா?” என்ற அவனது கேள்விக்கு அவள் தலை வேகமாய் ஆடியது. 

“ஒழுங்கா இனிமே பேசுறேன்னு சொல்லு வுடுறேன்… இல்லைனா…” மிரட்டலுடன் அவளை இன்னும் நெருங்கி மூக்கோடு மூக்கு உரசியவன், “நீ எங்கிட்டு இருந்தாலும் சரி என்ற வாய் இங்கன நேரடியா பேசிக்கும்…” என்று ஒவ்வொரு வார்த்தையையும் அவள் இதழ் உரசிப் பேச, அவனை தடுக்க முடியாது அதிருப்தியில் கண்களை இறுக மூடிக்கொண்டாள் கீர்த்தனா.

“நீயா பேசுனா உனக்கு நல்லது கண்ணு இல்லைனா பேச வைப்பேன்…” என்ற கண்டிப்பான செய்தியுடன் துண்டு எடுத்துக்கொண்டு வெளியேறப் போனவன் திரும்பி, “இதை சுத்தம் பண்ணிடு.” என்று மெத்தை மற்றும் அறையின் பூ அலங்காரங்களை சுட்டிக்காட்ட,

“முடியாது.” என்று உடனே மறுத்தாள் கீர்த்தி.

புருவத்தை மேலுயர்த்தி தெனாவட்டாய் பார்த்தவன், “நீயா பண்ணிட்டா என் நங்கைங்க கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்… இல்லைனா நான் எழுந்ததை பார்த்ததும் சடங்கு அதுஇதுனு சொல்லிக்கிட்டு நேரா இங்குட்டு தான் வருவாங்க பொறவு நீயே முடிவு பண்ணிக்கோ…” என்று அலட்சியமாய் சொல்லிவிட்டுச் செல்ல,

‘இவனை!’ பல்லைக் கடித்து நின்றாள் கீர்த்தி. வேறு வழியின்றி மெத்தையில் இருந்த பூ அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு கொண்டிருக்கும் போதே அறைக்கதவை பெயருக்கு தட்டிவிட்டு உடனே உள்நுழைந்தனர் அவனது நங்கைகள். 

“என்ன அம்மணி நீயே எல்லாத்தையும் சுத்தம் பண்ற? இதெல்லாம் நீ பண்ண கூடாது…” 

“பூவெல்லாம் கசங்குன மாதிரியே இல்லையே…” என்ற சின்ன நங்கையின் பார்வை அறையை ஒரு முறை சுற்றி வலம் வர,

‘ஐயோ’ என்று மனதில் அலறினாள் கீர்த்தி. அவள் அகத்தில் அலறியது கேட்டது போல் உள்ளே நுழைந்த குருங்கை, “கோவிலுக்கு தேவையான சாமான் எடுத்து வைக்க அத்தை கூப்புடுறாங்க அக்கா…” என்க, நெற்றி சுருக்கிய நடுநங்கை, “நீயே எடுத்து வைக்க வேண்டியதுதானே?”

“நீங்கதான் இதெல்லாம் சரியா செய்வீக… நான் எதையாவது மறந்துப்புடுவேன்.” என்ற குருங்கையின் பேச்சில் தன்னை உசத்தியாய் நினைத்த நடுநங்கை அங்கிருந்து நகர்ந்துவிட பின்னாலே தொத்திக்கொண்டு சின்னவளும் சென்றுவிட்டாள். அவர்கள் செல்லவும்தான் கீர்த்திக்கு மூச்சு சீரானது.

“இன்னைக்கு எல்லாரும் கிளம்பிடுவோம்… நாளைக்கு நீ ப்ரீயா இருக்கலாம்.” 

நட்பாய் புன்னகை உதிர்த்த கீர்த்தி, “தேங்க்ஸ் அக்கா…”

“எப்போதும் இப்புடியே இருக்காது புள்ள… போக போக இவகளை சமாளிக்க கத்துக்க… கத்துப்ப… கொழுந்தனார் இருக்காருல்ல அவரு எல்லாம் சொல்லிக் கொடுப்பாரு.” என்றபடி அறையை சுத்தம் செய்ய, கீர்த்தி அமைதியாய் நின்றாள்.

அவளின் அமைதி கண்டு நிமிர்ந்த குருங்கை, “கொழுந்தனாரு குழந்தை மாறி… சின்ன சின்ன விஷயத்துக்கு மூஞ்சை தூக்கிப்பாரு ஆனா மனசுல அம்புட்டு ஏக்கம் மண்டிக்கிடக்கு… நீதான் அவரை நல்லா பாத்துக்கிடனும் கீர்த்தி. பழகிட்டா அவரை விட நேசம் வச்ச மனுசனை பாக்கவே முடியாது…” 

அதற்கும் கீர்த்தி அமைதியாய் நிற்க தலைசிலுப்பிய குருங்கை அறையை சுத்தம் செய்து கிளம்பும் முன், “புடவை மாத்திட்டு வா அத்தை காபி கலந்து வச்சிருக்காங்க…” என்றுவிட்டு செல்ல, 

அவள் பின்னேயே சென்று கதவடைத்த கீர்த்தி தன் பையை துழாவி ஒரு புடவையை எடுத்துக் கட்டி முடிக்க சரியாய் கதவு தட்டப்பட்டது. தன்னை சரி செய்து கொண்டு கீர்த்தி கதவை திறந்துவிட, குளித்துவிட்டு துண்டு மட்டும் கட்டியபடி உள்ளே நுழைந்தான் அஞ்சன்.

அவனின் அரைகுறை நிலையைக் கண்டவுடன் கீர்த்தியின் தலை தானாய் தாழ்ந்து அப்படியே அவள் வெளியே செல்லப் பார்க்க, அவள் கைப்பிடித்து நிறுத்தினான் அஞ்சன். 

“போட்டுக்க உடுப்பு எடுத்து கொடுத்துட்டு போ கண்ணு…” 

அவன் சாதாரணமாய் சொன்னாலும் அது அவளுக்குக் கட்டளைப் போலவே தெரிய விழியில் அனலைத் தேக்கி கண்டனப் பார்வை வீசினாள்.

இதற்கெல்லாம் அசருபவனா நான் என்பது போல் அவளை அருகே இழுத்து அவள் இடையில் கைகொடுத்தவன், “உனக்குத்தான் பொண்டாட்டியா எப்படி நடந்துக்கணும்னு தெரியலையே… நானே சொல்லித்தாரேன்… கத்துக்கிட்டு நீ எனக்கு புருஷனா எப்புடி இருக்கணோம்ன்னு சொல்லித்தா…” என்றிட, அவன் வெற்று நெஞ்சில் கை வைத்துத் தள்ளினாள் கீர்த்தனா.

விடுவேனா என்று அவன் பிடி இறுக, அவன் நெஞ்சை பதம் பார்த்தது அவளது விரல்கள். அவளிடும் அடிகளை சிரிப்புடன் வாங்கிக்கொண்டவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து மூக்கால் அவள் தேகத்தை உரசி, “இப்போவே உடுப்பு எடுத்துக்கொடுத்தா வுட்டிருவேன்… பொறவு நீதான் போட்டுவிடணும்னு சொல்லிப்புடுவேன் பார்த்துக்கோ…”

அவனது மிரட்டலில் மிரண்டவள், “எங்க இருக்கு உங்க டிரெஸ்?” என்று கேட்க, அவன் பிடியும் இளகியது.

இடையில் இருந்த அவன் கை சற்று தளர இதுதான் சமயம் என்று அவனிடமிருந்து பிரிந்தவள் வெளியே ஓடப்பார்க்க, பாய்ந்து பின்னிருந்தே அவளைப் பிடித்த அஞ்சன் இம்முறை சேலை மறையா அவள் வயிற்றை இறுக்கப்பற்ற கீர்த்தியின் விழிகள் கலங்கி கண்ணீர் கீழே விழத் தயாராய் இருந்தது.

எப்படி சென்றாலும் தன்னை மடக்கும் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது… எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கும் தன்னையே அவள் நொந்துகொள்ள, பிடிக்காத அவனின் தழுவலும் உரசலும் தன்னால் அவள் உடலில் ஒரு இறுக்கத்தை கொண்டு வந்திருந்தது. 

அந்த இறுக்கம் அவனது தேகத்தில் நன்றாய் பிரதிபலிக்க, அதை உணர்ந்தவன், “எங்குட்டு ஓடுனாலும் இங்குட்டு தான் கடைசியா வரணும்… இப்போ போ… போய் ஏதாவது குடி. குடிச்சிட்டு எனக்கும் காபி கொண்டா.” என்றதுடன் அவளை விடுவித்தான்.

அவன் விடுவித்தது தான் தாமதம் விருட்டென அவ்வறை விட்டு ஓடியே விட்டாள் அவள். அவளின் செயலில் பெருமூச்சு விட்டவன் திரும்பி தன் உடை எடுத்துக்கொண்டிருக்கும் போதே வேகமாய் உள்ளே நுழைந்து கதவை தாழிட்டாள் கீர்த்தனா.

என்னவென்று அவன் கேள்வியாய் பார்க்க, அவன் பார்வையை சந்தித்த பாவையின் விழிகளில் தெரிந்த தவிப்பில் கரைந்து தான் போனான் அஞ்சன். 

Advertisement