Advertisement

*4*

ஒற்றை அறைக் கொண்ட அந்த சிறிய வீட்டில் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றனர். கமலத்தின் பார்வை தன் அண்ணனின் மீதிருக்க, கீர்த்தி தாய்மாமனையும் அன்னையையும் மாறி மாறி பார்த்தாள்.

“அண்ணா?” அங்கு நிலவிய அமைதியை கலைத்த வண்ணம் கமலம் அண்ணனை ஏறிட, அவர் கீர்த்தி புறம் பார்வையை திருப்பி,

“அம்மாடி கீர்த்தி உன் அம்மா எல்லாத்தையும் சொன்னா… நீ என்ன முடிவு பண்ணி இருக்க? உன் அம்மாக்கு நடந்தது தெரியும்தானே? படிக்கும் போது இவ மனசை கலைச்சி காதலிச்சிட்டு நாங்க ஒத்துக்க மாட்டோம்னு இவளை நம்பவச்சி எங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போனான். ஒரே மாசம் ஆள் எங்கேயோ ஓடிட்டான். கண்டுபிடிக்க முடியல. அப்புறம் நீயும் உண்டாகிட்ட, உங்கம்மா நீதான் வாழ்க்கைனு போராடி இங்க வந்து உன்னையும் வளத்துட்டா…” 

‘அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்ற பார்வை கீர்த்தியிடம்.

“மாமா கேக்குறாங்கல்ல சொல்லுடி…” கமலம் மகளை உசுப்ப, சுணக்கம் மகளிடம்.

இத்தனை வருடமும் பொங்கல் தீபாவளிக்கு பலகாரம் சீர்பணத்துடன், பண்டிகை தினங்கள் தாண்டி வேறு எந்த நாளும் தலை காட்டாத தாய்மாமன் இன்று எந்த உரிமையில் என்னை கேள்வி கேட்கிறார் என்ற பாவனை கீர்த்தியிடம் நிரம்பி வழிந்தது. இருந்தாலும் அன்னையின் உசுப்பல் அவளை வாய் திறக்க வைத்தது.

“என் விருப்பத்தை அம்மாகிட்ட சொல்லிட்டேன் மாமா. அதுல எந்த மாற்றமும் இல்லை.” திண்ணமாய் வந்து விழுந்தது அவளது சொற்கள்.

“உன் விருப்பம் சரி உன் அம்மா விருப்பம் வேணுமா வேணாமா?” கொக்கி போட்டு அழுத்தமாய் தாய்மாமன் கேட்க, கீர்த்தியின் கமலத்தை பார்த்தாள்.

“உன் விருப்பம் முக்கியம்னு தானே உன்கிட்ட வந்து நின்னேன். எனக்கு நீயும் முக்கியம் அவரும் முக்கியம். எத்தனை முறை கேட்டாலும் என்னோட பதில் இதுதான். இதுக்கு மேல நீயே முடிவு பண்ணிக்கோ.” மாமனுடைய கேள்விக்கு தாயிடம் பதில் அளித்த கீர்த்தி, அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே இருந்த படி வழியே மாடியேறினாள்.

“என்ன இப்படி பேசிட்டு போறா? அப்படியே உன்னை பாக்குற மாதிரி இருக்கு கமலா…” என்று கமலத்தின் அண்ணன் நெற்றி தேய்க்க, 

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல அண்ணா… சட்டுனு என்னால யாரையும் நம்ப முடியல… அதுவும் காதல்? அது தந்த வலியும் வடுவும் இன்னமும் பசுமையா என் மனசுல இருக்கு. அதை மறக்க, மறைய இந்த ஜென்மம் போதாது…” என்றபோதே வெடித்து விழுந்தது கேவல்.

கரைந்து உருகி இசைந்த காதல் சொற்ப நாட்களில் மடிந்து போக, எண்ணங்கள் யாவையும் நிறைத்திருந்தது கசப்பே. அந்த கசப்பு பெண்ணுக்கு நேர்ந்திட கூடாதென்று திண்ணமாய் இருந்த கமலத்திற்கு மகள் அமிலத்தை அறிமுகப்படுத்த, திண்டாடித்தான் போனார்.

“படிச்சு முடிச்சதும் புள்ளைக்கு ஒழுங்கா ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிருந்தா இப்படியெல்லாம் வந்து நின்னிருக்க மாட்டா…” என்று தங்கையை கடிந்து கொள்வதைத்தவிர வேறெதுவும் தெரியவில்லை அவருக்கு.

“என் அனுபவத்துல சொல்றேன் இதுக்கு மேல கீர்த்தியை இப்படியே விடுறது நல்லதுக்கு இல்லை கமலா. ஒன்னு அவளுக்கு புடிச்சவனையே கல்யாணம் பண்ணி வைக்கணும் இல்லை நேரம் கடத்தாம வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சிடனும்.”

“இதுக்கு வேற வழியே இல்லையா? கல்யாணம் பண்ணிதான் ஆகணுமா?” கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் வழியறியாது நின்ற கமலத்தை அழுத்தமாய் பார்த்த அவர் அண்ணன்,

“நம்ம பண்ணி வைக்கலைனா கண்டிப்பா அவளே ஒருநாள் பண்ணிப்பா… அது பரவாயில்லையா உனக்கு?”

“ஐயோ!!! நான் ஒருத்தி உங்களை மீறி கல்யாணம் பண்ணி இழந்தது போதாதா? நாதி இல்லாதவன காதலிச்சதுக்கு பலனா என்னோட வாழ்க்கைக்கு யாருகிட்ட நியாயம் கேக்குறதுனு திக்கு தெரியாம திண்டாடி ஓஞ்சி போயி இருக்கேன். இந்த நிலைமை என் பொண்ணுக்கு வேண்டாம்னா…” கேவியவர் எச்சில் கூட்டில் விழுங்கி, வழிந்த நீரை தன் முந்தானை கொண்டு துடைத்து வண்ணம், 

“நீங்களே நல்ல குடும்பமா பாருங்க… அவளுக்கு குடும்பம் அரணா இருக்கணுமே ஒழிய அறுக்கிற மாதிரி இருக்க கூடாது. நாளைக்கே ஏதாவதுன்னா சட்டையை புடிச்சு கேள்வி கேக்குறதுக்கு எங்க பக்கம் நீங்களும் இருக்கனும் அவங்க பக்கம் குடும்பமும் இருக்கனும்.” 

“உறுதியா தான் சொல்றியா? நான் பாக்க ஆரம்பிக்கவா?” சந்தேகமாய் கேள்வி தன்னை நோக்கி வர, முடிவெடுத்தவராய்,

“இவ்வளவு தூரம் வந்ததுக்கு அப்புறம் அவ என் பேச்சை கேப்பான்னு தோணலை. எப்போதும் அவளை கண்காணிச்சிக்கிட்டே இருக்க முடியாது.” என்றார் கமலம்.

“ஏதோ ஒருசில பேருக்கு கல்யாண வாழ்க்கை கசந்துடுது அதுக்காக எல்லாரோட வாழ்க்கையும் சிக்கலா இருக்காது. நான் நல்ல குடும்பமா பாக்குறேன். நீ பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் சேத்து உன் பொண்ணு நல்லா வாழுவா அதுக்கு நான் பொறுப்பு…” என்றவருக்கு சட்டென மாமன் பாசம் முண்டியடித்து வந்து கீர்த்தியை நல்ல குடும்பத்தில் சேர்த்திட வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது.

“அவ விரும்புற பையனை என்ன செய்யுறது? கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாளே?” யோசனையாய் கேட்ட அண்ணனுக்கு,

“அவளே அந்த பையனை வேண்டாம்னு சொல்லுவா… அதுவரைக்கும் அவளுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்.” என்று பதில் கூறிய கமலத்திற்கு கிஞ்சித்தும் மகள் விருப்பப்படுபவனுடன் சேர்த்து வைக்கும் அவா இல்லை. அவருக்கு காதல் மட்டுமல்ல காதலிப்பவர்களும் கசக்கத்தான் செய்தது.

கீழே தன் வாழ்க்கையை தீர்மானித்துவிட்ட திருப்தியில் கமலம் நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டிருப்பது தெரியாத கீர்த்தி அருணுக்கு அழைத்தாள். அவன் உடனே ஏற்றுவிட,

“எங்க அம்மாகிட்ட நம்ம விஷயம் பத்தி சொல்லிட்டேன். அன்னைக்கே இதை சொல்ல தான் கூப்டேன் நீங்க தான் படத்துக்கு வந்திருக்கேன்னு சொல்லி… அப்புறம் பேசுனப்போவும் ஏதேதோ பேசி மயக்கிடீங்க.” சுற்றிவளைக்காமல் அட ஹலோ கூட சொல்லாமல் கீர்த்தி சொல்லிய செய்தியில் அதிர்ந்தான் அருண்.

“என்ன இப்படி விசுக்குனு குண்டை தூக்கி போடுறீங்க?” 

“தினம் வயசு ஏறிட்டே போகுது கல்யாணத்தை பத்தி உங்களுக்கும் நினைப்பில்லை எங்க அம்மாவுக்கும் நினைப்பில்லை அதான் நானே விஷயத்தை கையில எடுத்தேன்.” அனாசியமாய் பேசினாள் பெண்.

கீர்த்தியின் பதிலில் அதிருப்தி மேலோங்கியது அருணுக்கு, “அப்புடி என்ன வயசாகிபுடுச்சுனு நீங்க இத்தினி அவுதிபடுறீங்க? இருபத்தி மூணுதானே உங்களுக்கு?”

“என்கூட படிச்சவளுங்க முக்கால்வாசி பேருக்கு கல்யாணம் ஆகி வயித்துல ஒன்னு கையில ஒன்னுன்னு இருக்காங்க… நீங்க என்ன இப்படி ஆர்வமில்லாம இருக்கீங்க? உங்களுக்கு ஆசையே இல்லையா?” ஏக்கமாய் கீர்த்தி கேட்டுவிட, அருணின் மனக்குறை மட்டுப்பட்டது.

“என்ன இப்புடி கேட்டுபுட்டீங்க கண்ணு? என்ற மனசுலையும் ஆசையெல்லாம் இருக்கு. ஆசை மட்டும் வாழுறதுக்கு போதாதே… எல்லாத்தையும் பாக்க வேண்டியதிருக்கே! இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே! நான் உன்ற அம்மைக்கிட்ட பேசுறேன் கண்ணு. அவங்க புரிஞ்சிப்பாங்க… இப்போ கண்ணாலம் பண்ணிக்க வோணாம்.” 

“ம்ச் நான் ஆசையா இருந்தேன்!” என்று சிணுங்கினாள் பெண்.

“ஆசையை அப்படியே பொத்தி வச்சிக்கோங்க கண்ணு… நேர பாக்கும் போது பத்த வச்சி பத்திக்கலாம்…” சரசமாய் பேசிய அதே வாய் அடுத்த முறை சந்தித்த போது சிறகை வெட்டியது.

வந்த நாட்கள் இயல்பாய் செல்ல, அடுத்த மாதத்தில் அவர்கள் சந்தித்த போது, கீர்த்தி விஷயத்தை கூற, “இது சரிவராதுங்க அம்மணி…” என்றிருந்தான் அருண்.

அவனின் பதிலை கீர்த்தி புரியாமல் பார்க்க, “நமக்குள்ள இனி எதுவும் இல்லைங்க. எல்லாம் இதோட முடிஞ்சுது.” என்று ஆணியடித்தாற் போல் அவர்கள் இருவரையும் அருண் சுட்டிக்காட்ட, அவன் பேச்சின் வீரியம் மெல்ல அவளுள் இறங்கி அவளை நடுங்க வைத்தது.

“என்ன? ஏன்? என்னாச்சு?” கேள்விகள் பழ எழும்ப, 

விழிமணிகள் இரண்டும் நம்பிக்கை துரோகத்தின் பலனில் சட்டென கண்ணீரால் சூழப்பட்டு மின்ன, செங்குருதி ஆக்கிரமித்திருந்த அந்த விழிகளில் அனல் தெறித்தது.

“இப்போ என்னதாங்க சொல்ல வர்றீங்க நீங்க?” அவள் கேள்வி இயலாமையில் இறங்கியது.

“நீ… நீங்க உன்ற அம்மா பார்த்த அவனையே கண்ணாலம் கட்டிக்கோங்க அம்மணி. உங்… உங்களுக்கு அவன்தான் பொருத்தம். எனக்கு அவனை, அவன் குடும்பத்தை சிறுசுலேந்து தெரியும். என்ற வூருதான். அவங்க உங்களை நல்லா பாத்துப்பாங்க அம்மணி.” திக்கித்திணறி அவன் சொல்லி முடித்தவுடன் அவனது சட்டைக் காலரை ஆங்காரமாய் பிடித்தாள் அவள்.

“யாரோ போல அம்மணின்னு கூப்பிடுறதை நிறுத்துங்க முதல்ல… எப்போதும் போல கண்ணுன்னு கூப்பிடுங்களேன்…” ஆவேசமாய் துவங்கியவள் இறுதியில் இறைஞ்ச அதுவும் பிடிக்கவில்லை அவளுக்கு.

காதலிக்கும் போது மட்டும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைக்காது கொஞ்சி, மிஞ்சி, ஊர் சுற்றிவிட்டு இப்போது அக்காதலை கரை சேர்க்க இவள் மட்டும் கெஞ்சுவானேன்! அவர்களின் காதலை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு அவனுக்கு இல்லையா என்ன! ஏதோ ஒருதலை காதல் போல் இவள் சென்று கெஞ்சுவது சுயமரியாதையை தட்டி எழுப்ப, அவன் காலரை பிடித்திருந்த கை, தன் பிடியில் இறுக்கம் கூட்டி அவனை உலுக்கியது.

“தலையை கவுத்து நின்னா நான் விட்டுருவேன்னு நினைச்சீங்களாங்க அருண்? எனக்கு பதில் வேணுங்க. என்னோட அன்புக்கு நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும்?”

“இனி சொல்ல எதுவும் இல்லைங்க அம்மணி… நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேனுங்க. நீங்க நிசமாவே என்ற மேல அன்பு வச்சிருந்தா என்னை வற்புறுத்தக்கூடாது. நீங்க அந்த வூட்டு மருமவளா ஆகுறதுதான் சரி. அந்த வூட்டு மருமவளாவும் ஆகிடுவீங்க. அந்த வூடு என்னை வளர்த்து வுட்ட வூடு. அவங்க வூட்டு மருமவ இப்படி தனியா என்னை சந்திச்சு பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டுங்க அம்மணி… நீங்க கிளம்புங்க.” தனக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லை என்ற தொனியில் பேசியவனை என்ன செய்தால் தகும் என்று பார்த்தவள்,

ச்சீ என்று முகம் சுழித்து அவன் காலரை விடுத்தாள், “அப்போ நல்லா கேட்டுக்கோங்க… உங்க கண்ணு முன்ன அவங்களோட பொஞ்சாதியா சந்தோசமா வாழ்வேன். அதை நீங்க பார்த்து பார்த்து புழுங்கனும். என் கையை பிடிச்சுக்கிட்டு எங்கெல்லாம் நீங்க கூட்டிட்டு போனீங்களோ… எங்கெல்லாம் காதல் வார்த்தை பேசி நம்பிக்கை கொடுத்தீங்களோ அங்கெல்லாம் நான் அவங்களோட போவேன்… அவங்க கையை பிடிச்சுக்கிட்டு போவேன், அதெல்லாம் பார்த்து குளிர்ந்து போங்க… அதுதானே வேணும் உங்களுக்கு… காரணமே இல்லாம வேண்டாம்னு சொல்றீங்கள்ள கண்ணகுளிர எல்லாத்தையும் பார்த்து ரசிங்க…” என்று கத்தியவள் அவனை அற்பமாய் பார்த்து அவனை உதறி தள்ளினாள்.

“ஆனா ஒன்னு என் அம்மா சொன்னது சரியாகிடுச்சு… காதல் ஏமாத்ததான் செய்யும். தொலைவுல தெரியுற கானல் நீர் மாதிரி நெருங்க நெருங்க ஒன்னுமில்லைனு காமிச்சிட்டீங்க. நிமிஷத்துல நம்மை அன்பை விட்டுக்கொடுத்து என்னை விட்டுட்டீங்கள்ள? உண்மையா காதலிச்சிருந்தா என் பக்கத்துல இன்னொருத்தனை நிறுத்தி பாக்கவே கூசியிருக்கும். ஆனா நீ!…” மனதின் வலி விழியில் தேங்க, உப்பு நீருடன் பல்லை கடித்தவள், 

“இதை நான் மறக்கவே மாட்டேன். இந்த நிமிஷத்துலேந்து அருண் என் வாழ்க்கையில இல்லை. இனிமே நான்…” இன்னொருவனின் மனைவி என்ற நினைப்பே அவளை வலிக்க வைக்க, இதழ் கடித்து மூச்சு வாங்கினாள்.

“கிளம்புங்க…” என்ற அருண் திரும்பி நின்றுகொள்ள, அவனின் முதுகை வெறித்தவள் கீழே கிடந்த தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

தவிப்பும் ஆசையுமாய் அவனைக் காண ஓடி வந்ததென்ன? இப்போது ஒட்ட வைக்க முடியாத விரிசலுடன் உடைந்து செல்வதென்ன? என்று மனமே அவளை கேலிக்கூத்தாட, அன்னை சொன்ன செய்தி நினைவு வந்தது. 

என்னோட மனநிம்மதிக்காக உன் மாமா நமக்கு ஏத்த மாதிரி உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க. நீ விரும்புறவனை வந்து என்னையும் மாமாவையும் பாக்க சொல்லு, எங்களுக்கு எல்லாம் ஒத்துவந்தா உன் விருப்பத்துக்கு விட்டுறோம். இல்லைனா நீ நாங்க பார்த்திருக்கிறவனை கல்யாணம் பண்ணிக்கணும் என்று சொல்லித்தான் அனுப்பி வைத்தார்.

அருணை அம்மாவிடம் அழைத்துச் சென்று சம்மதம் வாங்கிவிடலாம் என்று அவள் கோவை வந்து இறங்கியிருக்க, அருண் சொல்லிய வார்த்தைகள் அவள் உயிர்நாடியை தாக்கி மொத்தமாய் அதை பிடுங்கி எரிந்தது. 

விரிசலின் வீரியத்தில் அகம் முழுதும் வெற்றிடம் சூழந்துவிட அவள் சிந்தை மழுங்கியது. அன்னை பார்த்திருக்கும் மாப்பிள்ளை யாரென்று தனக்கே தெரியாத போது அவனுக்கு எப்படி அந்த மாப்பிள்ளை குடும்பம் வரை தெரிந்தது என்ற யோசனை கூட பெண்ணிடம் இல்லை.

உடல் விறைத்து, மரத்து, அழுகையில் குலுங்க அவளதும் அவனதும் ஒன்றுபோல துடித்தது அடங்கியது.

உயிரிலே

நினைவுகள் தழும்புதே!

கன்னங்களில் கண்ணீர் வந்து

உன் பெயரையே எழுதுதே!

விழியிலே! என் விழியிலே!

கனவுகள் கலைந்ததே!

உயிரிலே!

நினைவுகள் தழும்புதே!

Advertisement