Advertisement

*24*

ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, அந்தி நேர அமைதிக்கு எதிர்பதமாய் பரபரப்பாய் இருந்தது அவ்வூர். காலை கொடியேறி காப்பு கட்டுதலோடு துவங்கியது சோமயனூர் மாரியம்மன் கோவில் திருவிழா. இனி பூச்சாடல், கரகம், விளக்கு பூஜை, பால்குடம், தீமிதி, பூச்சட்டி ஏந்துதல் என்று விழா முடியும் வரை கலகலப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லை.

“துரைக்கு இப்போதான் இங்குட்டு வர நாழி கிடைச்சிதோ?” அவ்வீட்டின் பரபரப்புக்கு மத்தியிலும் பரிமளத்தின் குரல் அங்கிருந்தவர்களின் செவியை தீண்டிச் சென்றது. அவரின் விளிப்பில் முதலில் விழி உயர்த்திய குருங்கை ஆராய்ச்சியாய் வந்திருந்தவர்கள் மீது பார்வை பதித்தாள்.

“வேலை முடிஞ்சதும் நேரே கிளம்பி வரோம்… என்னங்குற இப்போ?” உடன் பிறந்த அலட்சியத்தொனி அஞ்சனிடமிருந்து வெளிப்பட, அவனின் அருகில் நின்ற கீர்த்தி கணவனை ஒருமுறை பார்த்துவிட்டு நேரே குருங்கையிடம் சென்று நின்றுகொண்டாள். 

கண்ணை சுருக்கி தன் கடைசி மருமகளை பார்த்த பரிமளம் எதுவும் பேசாது உள்ளே சென்றுவிட, அஞ்சன் மனைவியை பார்த்து தலையசைத்து கண் சிமிட்ட, தயக்கத்துடன் மாமியார் பின் சென்றாள் கீர்த்தி.

“வேலை முடிச்சி வர லேட் ஆகிடுச்சு அத்தை. என்ன செய்யணும்னு சொல்லுங்க செஞ்சிடுறேன்.” என்று வந்த கீர்த்தியை என்ன இதெல்லாம் புதிதாய் என்று பார்த்தவர்,

“இப்போவாவது இது உன்ற வூடுனு தெரிஞ்சுதே… பத்து நாளைக்கு தினம் யாமத்துல அம்மன் ஊர்வலம் வரும். அர்ச்சனைக்கு எல்லாம் முன்னாடியே எடுத்து வச்சாச்சு. நீயும் அவனும் போட்டு சாப்புடுங்க.” என்று சமைத்து வைத்திருந்த உணவை கைகாட்டியபடி வேறு வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார்.

அமைதியாய் அவர் சொன்னபடி தங்களுக்கான உணவை எடுத்து வந்து வெளியே வைக்க, சற்று தொலைவில் குருங்கையும் அஞ்சனும் பேசிக்கொள்வது தெரிந்தது.

“எல்லாம் ஓகே தான?” என்று ஆர்வமாய் தன்னிடம் வந்து கேட்டவரை புருவம் உயர்த்தி பார்த்தவன்,

“பாத்தா எப்படி தெரியுது?” என்று எதிர்கேள்வி கேட்டிருந்தான் அஞ்சன்.

“ம்ச்… தீயா உழைச்சிருக்கேன் கொழுந்தனாரே… சீக்கிரம் ரிசல்ட்டை சொல்லுங்க.” என்று அவசரப்படுத்தினாள் குருங்கை.

“தீயா உழைச்சீங்களா? அப்படி என்ன பண்ணீங்க குருங்கை?” கதை கேட்கும் பாவனை அஞ்சனிடம்.

“என்ன விளையாட்டா? சும்மா இல்லை ரெண்டு பேருக்கும் தூது போகாதது மட்டுந்தான் குறை. பேசிப் பேசி கரைச்சிருக்கேன் உங்களை!” 

“அடடா… என்ன உழைப்பு என்ன உழைப்பு…” வியர்வை துடைப்பது போல் நெற்றி தேய்த்து பாவ்லா காட்டியவன், “உழைச்சா மட்டும் போதாது குருங்கை, உழைப்போட பலனை அனுபவிக்கணும்னா காத்திருக்கணும்…” என்ற போதே கீர்த்தி அவர்களை நெருங்குவது தெரிய,

“எல்லாரும் வந்தாச்சுனு அப்பா போன் பண்ணாரு என்ன ஆரையும் காணோம்?” என்று விளையாட்டு விட்டு தீவிரமானான்.

“மாட்டாமலா போயிடுவீங்க…” என்று விழிகளை உருட்டியவள், “உங்க அண்ணனுங்க எல்லாம் கோவில் கமிட்டி குழுவோட பேச போனாங்க கூடவே உங்க நங்கைகளும் குழந்தைங்களை கூட்டிட்டு கடை வீதி பாக்க போயாச்சு.”

“நீங்களும் போக வேண்டியது தானே அக்கா?” என்றபடி வந்து நின்றாள் கீர்த்தி.

“பெரியக்கா வீட்ல தான் இருக்காங்க கீர்த்தி. ஏதோ வேலை இருக்காம் அது முடிஞ்சதும் கிளம்பலாம்னு இருந்தோம்.”

“பெரிய நங்கை இருக்காங்களா? ஆளையே காணோம்.” என்ற கேள்வியுடன் பார்வையும் பெரிய நங்கையை தேடியது. 

“கொல்லைக்கு போனாங்க… வருவாங்க. நீங்க சாப்பிடுங்க… நாமளும் கடைக்கு போகலாம்.” என்ற குருங்கையை தொடர்ந்து கீர்த்தி கண்ணசைத்து கணவனை அழைக்க, அவனும் பின்னோடே செல்ல, குருங்கையின் இதழ் அவர்களின் இயல்பில் கனிந்து விரிந்தது.

சற்று நேரத்தில் பெரிய நங்கையும் வந்துவிட, இவர்கள் உண்டு முடித்ததும் கடை வீதிக்கு கிளம்பினர். இரண்டு தெரு தள்ளி தான் கோவில் என்பதால் நடந்தே செல்ல முடிவெடுத்து நால்வரும் நடக்க, குருங்கையின் குழந்தையை தூக்கிக்கொண்டு நடந்தான் அஞ்சன். நூறு மீட்டர் தான் நடந்திருப்பர் குழந்தையை வாங்கிக்கொண்ட குருங்கை,

“சரோசா அக்காகிட்ட மாலை கட்ட சொல்லி இருந்தாங்களாம் ரெடி ஆகிட்டான்னு பாத்துட்டு வரோம். நீங்க போங்க.”

“நாங்க வெய்ட் பண்றோம் நீங்க போய்ட்டு வாங்கக்கா…” என்றாள் கீர்த்தி.

‘காரியம் கெட்டுச்சு…’ முனகிய குருங்கை, “உங்களுத்தான் தெரியுமே சரோசாக்கா பத்தி… பேச ஆரம்பிச்சா நிறுத்தவே நிறுத்தாது. நீங்க போங்க.” என்று அஞ்சனிடம் சொல்ல, சரியென்ற தலையசைப்பு அவர்களிடமும் மனைவியிடமும். புரிந்துகொண்ட கீர்த்தி இரு அக்காவையும் பார்த்து புன்னகைத்துவிட்டு அஞ்சனோடு நடந்தாள். 

“ரொம்ப பயந்தேன் அத்தை ஏதாவது கேட்டா என்ன பண்றதுனு…” கணவன் முகம் பார்த்து கீர்த்தி சொல்ல, பக்கவாட்டில் நடந்தவளிடம் பேச வசதியாய் சற்று நெருங்கினான் அஞ்சன். 

“என்ற அம்மாவ பாத்தா புலி சிங்கம் மாதிரியா இருக்கு?”

“நான் அப்படி சொல்லல… நம்ம தனியா இருக்குறது அத்தைக்கு புடிக்கலை… நானும் இங்க இன்னும் பழகல… அவங்களுக்கும் வருத்தம் இருக்கும்ல.”

“இருக்குந்தான் இல்லைனு ஆர் சொன்னது? அதெல்லாம் மனசுல ஏத்திக்காத. அடிக்கடி வந்து போக இருந்தா சரியாகிடும்.” சமாதானம் சொன்னான் அஞ்சன்.

“எனக்காக தான தனியா வந்தீங்க? நாம வேணும்னா திரும்ப இங்கேயே வந்துடலாமா?” 

“உனக்காக வந்தது வந்ததாவே இருக்கட்டும். திரும்ப இங்குட்டே வர எண்ணமெல்லாம் எனக்கில்லை. பக்கத்துலே அண்ணனுங்க இருக்காங்க பார்த்துக்கிடுவாங்க.” 

“ஏன் இப்படி சொல்றீங்க? அப்போ நான் என்ன மனநிலையில இருந்தேன்னு சொன்னேனே…” என்று தவிப்பாய் பார்த்தாள் கீர்த்தி. 

“அப்போ வந்தது உனக்காக இப்போ திருப்பூருலயே இருக்கலாம்னு சொல்றது எனக்காக…” என்று பூடகமாய் அஞ்சன் பேச, கண்களை சுருக்கினாள் கீர்த்தி.

“கண்டதையும் யோசிக்காத… இந்த வூட்டு அரசியல் எல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ என்னை மட்டும் பாத்துக்கோ.” என்று அவள் தலையில் மெல்ல தட்டினான் அஞ்சன்.

அவன் தட்டியதில் செல்லமாய் முறைத்தவள் தானே அவன் தோள் உரச நெருங்கி அவன் விரல் இடுக்கில் தன் விரல் கோர்த்துக்கொண்டாள்.

தனக்குள் பொதிந்த அவளது மென்விரல்களை அழுத்தமாய் பற்றிக்கொண்டவன் அவள் புறம் பார்வை திருப்பாது நேராய் பார்த்து நடக்க, பெண்ணவளின் பார்வை முழுதும் கணவனை மொய்த்தது.

பேச்சுக்கள் இனி உங்கள் விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று ஒதுங்கிக்கொள்ள, மற்றவரின் அருகாமையை மனதில் உணர்ந்து ரசித்தபடி விரலிடுக்கின் அழுத்தத்தை இருவருமே கூட்ட, உன் அழுத்தம் அதிகமா என்னது அதிகமா என்று ஒன்றுக்கு ஒன்று சளைக்காது போட்டி போட்டுக்கொண்டு இறுக்கிக்கொண்டதில் இருவரின் விரல்களும் சிவந்து வலியெடுத்தது. ஆனால் இருவருமே விலக்கிக் கொள்ளவில்லை கோவிலை நெருங்கும் வரையிலுமே. 

“கண்ணாலம் ஆனாலும் ஆச்சு உன்னை ஊருக்குள்ள பாக்கவே முடில?” என்று அவர்களின் தனிமைக்கு தடையாய் குறுக்கே வந்தார் ஊர்க்காரர் ஒருவர்.

கீர்த்தியின் விரல்களுக்கு விடுதலை கொடுத்தவன் புருவம் உயர்த்தி, “அதான் இப்போ பாக்குறீரே!” 

“உன்ற குசும்புக்கு குறைச்சல் இல்லடா அஞ்சு. உனக்காச்சும் கண்ணாலம் ஆகி குடும்பம்னு புழைப்பை பாக்க போயிட்ட உங்கூடவே சுத்துவானே உன்ற பங்காளி எங்கடா ரொம்ப நாளா கண்ணுலையே படலை?”

அவரது கேள்வியில் அவன் முகம் இறுக, அவர் யாரை விசாரிக்கிறார் என்று புரிந்துகொண்ட கீர்த்தியின் இதயத்துடிப்பு நொடியில் நூறை தொட்டது. 

“என்ன இப்புடி யோசிக்குற? உனக்கு தெரியாம எங்குட்டு போனான்? வூடும் ரொம்ப நாளா பூட்டிக் கிடக்கு. வயசான ஆயாவை கூட்டிட்டு எங்க சுத்துறான்?” என்று அஞ்சன் முகம் பார்க்க, அவன் முகத்தில் தெரிந்த தீவிரம் அவரை ஒதுங்கிப் போக வைத்தது.

அவர் நகர்ந்த பின்னும் இறுக்கத்துடன் நின்ற அஞ்சனை நெருங்கவே பயந்து மூச்சை பிடித்து நின்றாள் கீர்த்தி. எல்லாம் பழையபடி மாறவில்லை என்றாலும் இந்த ஒரு மாதமாகத்தான் அவனது குத்தல் பேச்சுக்கள் குறைந்திருக்கிறது. பிடித்தம் பிடிமானமாகி நெருங்க வைக்கிறது. இயல்பான பேச்சுக்களும் கண்ணசைவில் மற்றவரை ஓரளவு புரிந்துகொள்ளவும் தேறியிருந்தனர். 

தயக்கமின்றி தங்களின் எண்ணங்களை பகிரும் நிலையை எட்டியிருக்க இதென்ன மீண்டும் பூதம் கிளம்புகிறது என்று விக்கித்து நின்றாள் கீர்த்தி. அவளை மேலும் கலவரப்படுத்தும் வகையில் அவளை அப்படியே விட்டுவிட்டு பாதங்களை தூர வீசி நடந்தவன் சற்று தூரம் சென்றே அவள் உடன் வராதது உணர்ந்து நடையை நிறுத்தி திரும்பிப் பார்த்தான்.

அவன் விட்ட இடத்திலேயே வெறித்தபடி மலங்க மலங்க விழித்து நின்றாள் அவன் மனையாள். அவளை நெருங்கு… அவளை விலக்கு… என்று இருவிதமான குரல்கள் அவனுள் கேட்க, நாளங்கள் சூடேறி அவனின் புஜம் இறுகியது. இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் அவன் தயங்கி தவித்து நிற்க, வேக எட்டுக்கள் வைத்து அவனிடம் வந்த கீர்த்தி அவன் கை பற்றிக்கொண்டாள்.

“திரும்ப அதை பார்க்க வேண்டாமே?” அவள் குரலில்தான் அத்தனை தவிப்பு.

“எதை?”

தடதடக்கும் இதயத்திற்கு ஈடாய் அலைபுரியும் விழிகளோடு அவனை நோக்கியவள், “போனது போனதாவே இருக்கட்டுமே! எதையும் தெரிஞ்சிக்க வேணாம். யாரும் நமக்குள்ள வேணாம். நான் உங்களை பாக்குறேன் நீங்க என்னை பாத்துக்கோங்க.”

பேச்சுக்கள் அருணை பற்றியதாய் இருந்தாலும் அவன் பெயர் எடுக்காது அவள் பேசியதின் சாராம்சம் தவித்து நின்றவனுக்கு சக்கரை பாகாய் தித்தித்தது.

“நிறைய கடை போட்டிருப்பாங்க என்ன வேணுமோ வாங்கிக்கோ.” என்று அவனும் அருணின் எண்ணங்களிலிருந்து விடுபட முயற்சி எடுக்க அதற்கு ஆதாரம் சேர்த்தாள் கீர்த்தி.

“நீங்க வாங்கி தாங்க… உங்க டேஸ்ட் எப்படி இருக்குனு நானும் தெரிஞ்சிக்குறேன்.” அவன் கரம் பற்றி கடைகள் இருக்கும் திசை நோக்கி நடந்தாள்.

“உன்ற பின்னாடி சுத்துறதை வச்சே என் டேஸ்ட் தெரியல?”

“அஹான்… உங்களுக்கு வேற சாய்ஸ் இல்லை. என்னை மட்டும் பொண்ணு பார்த்துட்டு ஓகேன்னு சொல்லிட்டீங்க. இன்னும் ரெண்டு பேரை பாத்திருந்தா இதே மாதிரி இருந்திருப்பீங்களா?”

“உன்ற சந்தேகத்தை தீர்க்குறத்துக்காக எல்லாம் என்னால மத்த பொண்ணுங்களை பாக்க முடியாது. ஆனா பாத்து பழக்கியிருந்தா என்ற கஷ்டம் என்னன்னு உனக்கு முன்னாடியே புரிஞ்சிருக்கும்.” இயல்பாய் அவள் கேலிக்கு பதிலுக்கு பதில் என துவங்கிய பேச்சு அவன் மனதின் ஓரத்தில் பதுங்கியிருக்கும் குமுறளை அப்பட்டமாக்கிவிட, நிசப்தம் இருவரையும் சூழ்ந்து கொண்டது.

Advertisement