Advertisement

*23*

புலர்ந்த அக்காலை பொழுது புது விடியலாய் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் எழுந்தமர்ந்த கீர்த்தி அருகில் உறங்கிக்கொண்டிருந்த கணவனை எக்கிப் பார்த்தாள். பார்வைக்கு அவன் நன்றாய் உறக்கத்தில் இருப்பது போலிருக்க நன்றாக சம்மணமிட்டு அமர்ந்துகொண்டவள் அவனின் இருப்பை மனதில் பதிய வைக்கும் பொருட்டு விழிகளை அவனிடத்தில் நிலைத்து வைக்க,

“என்ற மூஞ்சுல என்ன இருக்குனு குறுகுறுன்னு பாத்துட்டு இருக்க?” உறக்கம் கலைந்து வெறுமென கண் மூடியிருந்தவனுக்கு அவளின் பார்வை குறுகுறுப்பு மூட்ட, கண்களை பட்டென திறந்து அவளைக் கேட்டான்.

“தூங்கலையா நீங்க?” பெரிதாய் பதறவெல்லாம் இல்லை. மெல்லிய அதிர்வு இழையோடி பின் இயல்பு திரும்பியிருந்தது கீர்த்தியிடம்.

“நான் தூங்குறது இருக்கட்டும் நீ என்ன பண்ணிட்டு இருக்க?”

“ரொம்ப நாள் கழிச்சி பயம் பதட்டம் இல்லாம நிம்மதியா எழுந்திரிச்சிருக்கேன். அதுக்கு காரணம் நீங்கதான்.” என்றாள் மனதில் உள்ளதை மறையாது.

“நான் இல்லாம என்ற தொல்லையும் இல்லாம நிம்மதியா இருந்திருப்பேன்னு நினைச்சேன்.” என்று அஞ்சன் தொக்கி நிறுத்த நொடியில் சோர்ந்து மாறியது கீர்த்தியின் முகம்.

“ஏதாவது மாத்திக்கணுமா சொல்லுங்க மாத்திக்குறேன் ஆனா இப்படி குத்தி குத்தி பேசாதீங்க. எவ்வளவு நாள் தாங்குவேன்னு தெரியல… ஆனா ரொம்ப நாள் தாங்காதுனு தோணுது. முடிஞ்சா என் மனசு விட்டுபோறதுக்கு முன்னாடி ஏதாவது செய்ய முடியுதான்னு பாருங்க.” எங்கோ பார்வை பதித்து வெற்றுக்குரலில் பேசியவள் கண்களில் ஒளி குன்றி வெறுமை படர்ந்துவிட, சட்டென வாய்க்கு பூட்டு போட்டான் அஞ்சன்.

அதற்கு மேல் அங்கு அமர்ந்திருக்க பிடிக்காது எழுந்து சென்று காலை வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள் கீர்த்தி. சிற்றுண்டி தயாரித்து மதிய உணவையும் செய்தவள் அதை டப்பாவில் அடைத்து அவனிடம் கொண்டு வந்து நீட்ட, என்ன என்பது போல் பார்த்தான் அவன்.

“மதியம் வெளில சாப்பிடாதீங்க.” என்றவளிடமிருந்து அதை வாங்கிக்கொண்டவன் அவளின் இரவு உடையையும் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தையும் பார்த்தவண்ணம்,

“மணியாகுது வேலைக்கு கிளம்பலையா?” என்று கேட்டிட, 

“மெடிக்கல் லீவ் போட்டிருக்கேன்.” என்று சொல்லியபடி அங்கிருந்து நகர்ந்தாள் கீர்த்தி.

ஆனால் அவள் பதிலில் பதறிய அஞ்சன் அவளை நெருங்கி கைப்பற்றி நிறுத்தி, “ஏன் என்னாச்சு? உடம்பு சரியில்லையா? ஏன் எங்கிட்ட  சொல்லல?” என்று தவிப்பை மறையாது வெளிக்காட்டிட, கீர்த்தியின் விழிகளில் மின்னலென வந்து போனது மலர்ச்சி.

அவனது அக்கறையில் அதுவரை மனதை நிறைத்திருந்த வெறுமை வாய்தா வாங்கிக்கொள்ள இதம் மெல்ல அவ்விடத்தை ஆக்கிரமித்தது.

“உடம்புக்கு என்னனு கேட்டுட்டு இருக்கேன் நீ என்ற மூஞ்சையே பாத்துட்டு இருக்க? என்னடி பண்ணது உடம்புக்கு?” என்று அஞ்சன் அவளை உலுக்க, வஞ்சனையின்றி விரிந்தது கீர்த்தியின் இதழ்கள்.

“உடம்புக்கு ஒண்ணுமில்லை. மனசுதான் நோவு கண்டுடுச்சு.”

“…” அறிந்தும் அறியாத பாவனை அஞ்சனிடம்.

“வேலைக்கு போயிட்டு வாங்க. பேசலாம். நம்ம பேச நிறைய இருக்கு.” என்று சிறிது நேரத்தில் அவனை வழியனுப்பி வைத்தவளின் அன்றைய நாள் முழுதும் யோசனையில் கழிந்தது. 

மருமகனை கண்டதும் நேரே தன் வீட்டிற்கு சென்றுவிட்ட கமலம் இடையில் தன் பங்கிற்கு மருமகன் எப்படி இருக்கிறார் அவளிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்று விவரம் கேட்டு அறிந்துகொண்டார். அன்றைய தினமும் முன்தினம் போலவே நேரமே வீடு வந்திருந்தான் அஞ்சன். அவன் வீடு வந்ததும் அவன் தேவையை கவனித்து அவனைப் பார்ப்பதும் பின் கடிகாரத்தை பார்ப்பதுமாக அவள் இருக்க, அஞ்சனின் சிந்தை வேறேதோ யோசனையில் உழன்று கொண்டிருந்தது.

நேரம் சரியாய் ஏழாக வெளியே எட்டிப்பார்த்த கீர்த்தி, இருள் படர்ந்துவிட்டதை உறுதி செய்துகொண்டு அவனிடம் வந்தாள்.

“வாங்க…”

“எங்குட்டு?”

“ப்ளீஸ்… வாங்க சொல்றேன்.” என்று ஒருகையால் அவனை பிடித்து எழுப்பி விட்டவள் முன்னே நடக்க பின்தொடர்ந்தான் அஞ்சன்.

இருவரும் வெளியே வரவும் கதவை இழுத்துப் பூட்டியவள் அவனுக்கு சைகை காட்டிவிட்டு மாடி ஏற, அஞ்சனின் புருவம் ஏறி இறங்கியது. நாலு படி ஏறியவள் அஞ்சன் மேலே வராமல் நிற்பதைக் கண்டு மீண்டும் கீழிறங்கி அவன் கைபிடித்து மேலே அழைத்துச் சென்றாள். 

வெக்கை தணிந்து லேசாய் எட்டிப்பார்த்த வாடைக் காற்றோடு மனைவியின் கை தன்னை வழிநடத்தி அழைத்துச் செல்வதை ஒருவித மோனநிலையில் உணர்ந்தபடி அவள் இழுப்புக்கு சென்ற அஞ்சன் சுவரில் சாய்ந்து அவள் அமரவும் தானும் அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.

இடைவெளியை கவனித்த கீர்த்தி இயல்பாய் அவன் புறம் நகர்ந்து அமர்ந்து தன் செவியில் ஒன்றும் அவனதில் ஒன்றுமாய் ஹெட்செட்டை மாட்டிவிட்டு தன் அலைபேசியில் பாடலை ஒலிக்கவிட்டாள். ஆர்ப்பாட்டமில்லாத சூழ்நிலைக்கு ஏற்றார் போல் பாடலும் செவியை தீண்ட அஞ்சனின் மனம்தான் அதில் லயிக்க மறுத்து கீர்த்தியின் செயலுக்கு பின் இருக்கும் காரணியை ஆராய முயன்றது. 

இரண்டு பாடல்கள் முடிந்ததும் பாடலை அணைத்த கீர்த்தி காதில் இருப்பதையும் உருவி ஒதுக்கி கீழே வைக்க, அஞ்சனின் பார்வையில் கேள்வி.

“கல்யாணத்துக்கு அப்புறம் நான் நடந்துக்கிட்டது தப்பா இருக்கலாம். நிறைய மறைச்சிருக்கலாம் ஆனா கல்யாணத்துக்கு நான் தயாரா இல்லைனு சொன்னது உண்மை. அம்மா மாதிரி நீயும் நம்பி ஏமாந்து போயிட்டியேன்னு எனக்குள்ள நானே மருகி நொந்துட்டு இருக்கும் போது கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டே ஆகணுங்குற பிரெஷர். எனக்கும் வேற வழி இல்லை ஏன்னா அருணை அம்மாவுக்கு புடிக்கலைன்னா அவங்க சொல்றவரை கட்டிக்கிறேன்னு வாக்கு கொடுத்திருந்தேன். ரொம்ப நம்புனேன் எல்லாம் சரியாகிடும்னு ஆனா எல்லாம் தலைகீழா மாறிடுச்சு.” என்றவள் நிறுத்தி நிதானமாய் அன்றைய தன் மனநிலையை அசைப்போட்டு அதை வார்த்தைகளில் எப்படி வடிப்பது என்று மனதில் ஒருமுறை சொல்லிப்பார்த்துவிட்டு தொடர்ந்தாள். 

“எதை பார்த்தாலும் எரிச்சல் யார் பேசுனாலும் குடைச்சல்னு மனசளவுல ரொம்பவே விரக்தியா இருந்தேன். அந்த விரக்தில விரும்புன போது தோணாதது எல்லாம் உங்ககூட கல்யாணம்னு வர்றப்போ தோணுச்சு. கல்யாணமாகி நான் உங்க வீட்டுக்கு வந்துட்டா அம்மா தனியா இருப்பாங்க… அவங்களை பாத்துக்க யாருமில்லைனு உரைச்சுது.

சம்மந்தமில்லாம உங்க மேல கோபம் வந்துச்சு. நீங்க என் வாழ்க்கையில் வந்ததால தான் எல்லாம்னு உங்களை புடிச்சி கத்தினேன்.அது தப்புனு எனக்கு தெரியவே இல்லை. என் தோல்வி கொடுத்த வலிக்கு முன்னாடி எதுவும் பெரிசில்லைங்குற எண்ணம்…” என்கையில் 

‘என் வலியின் முன் எதுவும் பெரிதில்லை.’ என்று தந்தையிடம் நேற்று சொன்னது நினைவு வந்தது அஞ்சனுக்கு. அவளை புரிவது போல் இருந்தது. எதையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் மனைவியின் பேச்சுக்கு இடையூறு செய்யாது அவளை கவனித்தபடி இருந்தான். 

“உங்களை கஷ்டப்படுத்தும்னு தெரியும் ஆனா இதை சொல்லாம என்னை உங்களுக்கு புரிய வைக்க முடியும்னு தோணல. கோவப்படாம கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்…”

பீடிகை எல்லாம் பலமாய் இருக்கிறதே என்றெண்ணிய அஞ்சனின் முகம் பார்த்து அவள் தயங்கி இருப்பது புரிய, மேலே சொல் என்று தலையசைத்து ஊக்கம் கொடுத்தான் அஞ்சன்.

“விவரம் புரியுற வயசுக்கு முன்னாடிலேந்தே எல்லாரையும் ஒரு எல்லைக்குள்ள நிறுத்திடணும்னு கேட்டு வளந்தவ நான். அம்மா நம்பி வீணா போன மாதிரி நானும் ஆகிடக்கூடாதுனு கட்டுப்பாடா வளத்தாங்க. அதுல கண்டிப்பு நிறைய இருக்கும். பாசம் ஒளிஞ்சி இருக்கும். அந்த பாசத்தை புரிஞ்சிக்க எனக்கு இத்தனை வருஷம் ஆகி இருக்கு. அவங்களோட அனுபவம் தான் அவங்களை அதுமாதிரி நடக்க வச்சிதுன்னு புரிஞ்சுது.

காரணமே இல்லாம அருண் என்னை மறுத்தப்போ அம்மாவோட நிலைமையை உணர முடிஞ்சுது. அவங்க உங்களை மாப்பிள்ளைன்னு சொன்னதும் பிடிக்கலைனாலும் என்னை நானே தேத்திகிட்டு ஒத்துக்கிட்டேன். கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணல.” என்று சொல்லிக்கொண்டே வந்தவள் பேச்சை நிறுத்தி எச்சில் கூட்டி விழுங்கி தலைகுனிந்தபடி தொடர்ந்தாள்.

“வேலை விஷயமா கார்மெண்ட்ஸ்கு அடிக்கடி வந்தப்போதான் அருண் பழக்கம். பாத்ததும் எல்லாம் புடிக்கலை. ஆனா பேச பேச ஏதோ ஒரு பிடிப்பு. அதுவும் அவர் கொங்கு தமிழ்ல சாதாரணமா பேசுறதே என்னை ராணியா உணர வச்சிது. அதிகம் வெளி ஆட்களோட பழக்கம் இல்லாததால அவர் எனக்கு கொடுத்த முக்கியத்துவமே என்னை அவர் பக்கம் சாய்ச்சுது. 

வீட்டுல அம்மா நான் மட்டும்தான் யாரும் அதிகம் வர மாட்டாங்க. அப்படி இருக்கையில வீடு விட்டா படிப்பு வேலை எப்போவாவது பிரெண்ட்ஸோட வெளிலனு போய்ட்டு இருந்த என் வாழ்க்கையில முதல் முறையா என்னை கொண்டாடுற ஒருத்தர் வரவும் அதை கெட்டியா புடிச்சிக்க தோணுச்சு. புடிச்சிகிட்டேன்… எவ்வளவு இன்னல் வந்தாலும் கடைசி வரைக்கும் பிடிச்சிக்கணும்னு நினைச்சேன் ஆனா அதை நான் மட்டும் நினைச்சா போதாதுன்னு வலிக்க வலிக்க புரிய வச்சிட்டான் அவன். எனக்காக இல்லைனாலும் என்னோட நேசத்துக்கு உண்மையா இருந்திருக்கலாம் அதுக்கு கூட அவனுக்கு திராணியில்லை.” என்றவள் செருமிக்கொண்டாள். 

நிமிர்ந்து கணவன் முகம் பார்க்க தைரியமற்றவளாய் இன்னும் தலையை தாழ்த்திக்கொண்டாள்.

“ஆனா நீங்க எனக்காக கல்யாணமான நாலே நாள்ல தனியா கூட்டிட்டு வந்து ஒன்னும் ஒன்னும் பாத்து செஞ்சப்போ உங்களை கவனிக்க வச்சீங்க. என்னையே அறியாம உங்க கூட சண்டை போட்டாலும் உங்களை ஏத்துக்கனும்னுங்குற எண்ணம் வந்துச்சி… 

கொஞ்ச கொஞ்சமா எப்போவும் பிடிச்ச வாழ்க்கை கிடைக்காது ஆனா கிடைச்ச வாழ்க்கையை பிடிச்ச மாதிரி வாழ முடியும், மாத்திக்க முடியும்னு புரிஞ்சிது. அதை நம்பித்தான் அன்னைக்கு… அன்னைக்கு எல்லா விதத்திலேயும் உங்க மனைவியா மாறணும்னு தயாரானேன். ஒத்துக்குறேன் அந்த எண்ணம் தானா வந்தது இல்லை நானா வலுக்கட்டாயமா வரவச்சிக்கிட்டது. 

எல்லாம் சரியா நடந்தா உங்க காதல் என்னை உங்களை காதலிக்க வைக்கும்னு தோணுச்சு. ஆனா உங்க காதலுக்கு துரோகம் பண்றோம்னு தோணாப்போய் எல்லாம் சொல்லிட்டேன். நீங்களும் கோச்சிட்டு போய்ட்டிங்க. அப்போ கூட கிடைச்ச வாழ்க்கையும் பிடிக்க மாட்டேங்குதேன்னு சலிப்பு வந்துச்சு. கோபம் வந்துச்சு.” என்று நிறுத்த,

“தண்ணீ கொண்டாரவா?” என்று திருவாய் திறந்தான் அஞ்சன்.

எவ்வளவு முக்கியமான விஷயம் பேசுகையில் இதுதான் இப்போ முக்கியமா என்று கீர்த்தி பார்த்து வைக்க,

“இல்லை ரொம்ப நேரமா பேசுறியே… வாய் வறண்டு போயிடும்னு…” என்று இழுத்து நிறுத்தினான் அஞ்சன்.

அவனுக்கு மறுப்பை தலையசைப்பில் காட்டியவள், “ஒருவிதத்துல நீங்க என்னை விட்டு போனது கூட நல்லதுதான். கூட இருந்தப்போ புரியாதது எல்லாம் நீங்க இல்லாதப்ப புரிஞ்சுது. காதல் வந்துடுச்சுனு சொல்லல ஆனா உங்களை விட்டுற கூடாதுனு ஒரு எண்ணம். 

சின்னதா ஒரு பாராட்டு, தூரலா கொஞ்சம் கொஞ்சல், தூக்கலான காதல், ஒருபடி அதிகமான உரிமை இதைத்தான் நம்ம ரெண்டு பேரோட மனசும் எதிர்பாக்குதுனு புரிஞ்ச நேரம் ஒரு பிடித்தம்.” என்று நிறுத்த, இனிய அதிர்வில் மலர்ந்து விரிந்தது அஞ்சனின் இதழ்கள்.

“பிடித்தமா?” என்று உல்லாசமாய் அவன் கேட்க,

கண்களை சிமிட்டியவள் மென்முறுவலுடன், “ஆமா நேத்து உங்களை அந்த கார்மண்ட்ஸ் வாசல்ல வச்சி பார்த்தப்போ தோணுச்சு. இன்னைக்கு காலைலேந்து யோசிச்சேன் ரெண்டு பேருமே நமக்குன்னு சொந்தமானவங்களை சொந்தமாக்கிக்க அவசரப்பட்டு இருக்கோம். நான் அருணை சொந்தம்னு நினைச்சி ஆரம்பிக்க போய்தான் எல்லாம் நடந்துச்சு. நீங்களும் உங்களுக்கே உரிமையான சொந்தம்னு என்னை நினைச்சதால தான் ஆரம்பத்துலேந்து என்னை நெருங்கி வந்தீங்க. அது புரியாம பழசை நினைச்சு நான் உங்களை கத்தி ஏதேதோ ஆகிடுச்சு. 

அன்பு அழிக்கவும் செய்யும் ஆக்கவும் செய்யும். முறிஞ்சி போன அருணோட அன்பை நினைச்சிகிட்டே இருந்தா அழிஞ்சி போயிடுவேனு புரிய வச்சுது உங்க பிரிவு. இனிமே அதை ஆக்கமா மாத்துறது உங்க முடிவுல இருக்கு. இத்தினி நாள் என் மனசுல என்ன இருக்குன்னு ஒடச்சி சொல்லுன்னு கேட்டுட்டே இருந்தீங்க. இன்னைக்கு ஒடச்சிடணும்னு தோணுச்சு.” என்றவள் பெருமூச்செடுத்து எழுந்து கொண்டாள்.

“நைட் டிபன் பண்ணிட்டு கூப்புடுறேன். வாங்க…” என்று அவனுக்கு யோசிக்க அவகாசம் கொடுத்து அங்கிருந்து நகர, அவளை தடுக்கவில்லை அஞ்சன்.

அவள் பேசிச் சென்ற மனக்குமுறல்கள், தவிப்புகள், மாற்றங்கள் அனைத்தையும் கிரகித்து அதை புரிந்துகொள்ள முயன்றவன் நினைவில் அன்று மதியம் குருங்கை பேசியது நினைவு வந்தது.

“பக்கத்துலேயே இருந்துட்டு வூட்டுக்கு வராம இருக்குறதெல்லாம் சரியா கொழுந்தனாரே? நீங்க பண்ணது சரினு தோணுதா உங்களுக்கு?” என்றுதான் ஆரம்பித்தாள் பேச்சை. கீர்த்தி அவளிடமும் அஞ்சன் வீடுவந்ததை சொல்லியிருந்தாள்.

அட இவருக்கும் தெரிஞ்சிடுச்சா என்று தலையை தேய்த்துக்கொண்டவன் அமைதியாய் இருந்தான்.

“இப்படி பண்றதால உங்களோட அந்தரத்தை பிரகடனப்படுத்துறீங்க. வெளியாள் வேண்டாம் நம்ம குடும்பமே போதும் உங்க ரெண்டு பேரையும் நிம்மதியா இருக்க விடமாட்டாங்க. யோசிக்க மாட்டீங்களா?”

“ஆருக்கும் தெரியாது தெரியாது சொல்லிட்டு ஊருக்கே சொல்லி இருக்காளா?” என்று இவன் கேட்க,

“ஆமா கீர்த்திதான் சொன்னா… அவளுக்கு உங்களை எப்படி நெருங்குறது எப்படி கண்டுபுடிக்குறதுனு தெரியாம என்றகிட்ட வந்தா…” 

“கிழிச்சா… கொஞ்ச நாள் பக்கத்துல இல்லைனதும் அப்படியே பாசம் பொங்குற மாதிரி நடிச்சிருக்கா…” என்று பல்லை கடித்தான் அஞ்சன்.

“என்ன பேச்சு இது? ஒரு பொண்ணு காதலிச்சு அது கைகூடலைனா அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். அதையெல்லாம் தாங்கி வீட்டுல சொன்ன ஒரே காரணத்துக்காக வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணி அவர் மேல நேசம் வந்தா அது வேஷம் போடுறதா ஆகிடுமா?”

“என்னாலையே அவளை பழையபடி விரும்ப முடியுமான்னு தெரில இதுல அவ அவனை மறந்து என்னை நினைச்சிட்டாலும்.” எரிச்சல் அப்பட்டமாய் வெளிப்பட்டது அஞ்சன் குரலில்.

“ஏன் உங்களால பழையபடி நேசிக்க முடியாது? இந்த விஷயம் எல்லாம் தெரியுறதுக்கு முன்னாடி அவளை நேசிச்சதை விட பலமடங்கு அதிகமா இப்போ உங்களால அவளை விரும்ப முடியும்… எதிர்பார்ப்பில்லாத அன்புன்னு ஒன்னு இருக்கானு தெரியல ஆனா கீர்த்திக்கிட்ட உங்களோட எதிர்பார்ப்பு என்னவா இருக்கும்னு எனக்கு புரியும். அதை ஏத்துக்குற பக்குவத்துக்கு அவ வந்துட்டா அப்போ அவளை உங்களுக்கு அதிகமாதான புடிக்கணும்.” என்று குருங்கை பேச, அப்பேச்சு சுத்தமாய் பிடிக்கவில்லை அஞ்சனுக்கு.

“என் எதிர்பார்ப்பு புரியுதுல்ல அப்போ அது நடக்காதுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கணுமே. அவனை காதலிச்சவ எப்படி என்னை காதலிக்க முடியும்? காதல் ஒருமுறை தான் வரும்.”

“நமக்கானவங்க நம்மகிட்ட வந்து சேர்றப்போ வர்றது தான் அந்த காதல். அது ஒருமுறை தான் வரும். அதுக்கு முன்னாடி வந்ததெல்லாம் ஒரு பாடம். அனுபவம் மாதிரி. நமக்கானவங்க யாருனு காட்ட அது உதவியா இருக்கும். சிலருக்கு சுலபமா எடுத்ததும் அமைஞ்சிடும் உங்களை மாதிரி… சிலருக்கு வலிக்க வலிக்க பாடம் கத்துக்கொடுத்து அமைச்சு கொடுக்கும். அவளை மாதிரி… அப்படி வலிக்க வலிக்க கத்துக்கிட்டவங்களுக்கு அதோட முக்கியத்துவம் தெரியும். என்னைக்கும் அதை அவங்க விடமாட்டாங்க.”  

“ஏதேதோ உருட்டி அவளுக்கு சப்பை கட்டு கட்டுறீங்க.” என்று கண்டிப்பு அஞ்சனிடம்.

“நான் முட்டு கொடுக்குறதாவே இருக்கட்டும் இதுக்கு மேல என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” என்ற குருங்கையின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.

“…”

“ஒத்துவரலைனா பிரிச்சிடலாமா?” என்ற அவளின் கேள்வியில் அவனுக்கு  சுறுசுறுவென கோபம் ஏறியது தலைக்கு.

“சும்மா பிரிச்சி விட்டுருவேன்னு சொல்லி எல்லாரும் பயம் காட்டுறீங்களா?” 

“எல்லாருமா?”

“என்ற அப்பா தான் வேற ஆரு…” என்று அஞ்சன் முனக,

“பயம் காட்டல… நிதர்சனத்தை சொல்றோம்… ரெண்டே வழிதான் இருக்கு ஒன்னு சேர்ந்து வாழனும் இல்லை பிரிஞ்சிடனும். சும்மா பக்கத்துல இருந்து ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திட்டே இருக்கக்கூடாது. 

எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. அதை தாண்டிட்டா போனது திரும்ப கிடைக்காது. யோசிச்சிக்கோங்க.” என்று அவள் வைத்திருக்க, கீர்த்தியின் பேச்சும் அவனை சுழற்றியது.

அதுவும் காலை ‘ரொம்ப நாள் தாங்காது, என் மனசு விட்டுபோறதுக்கு முன்னாடி ஏதாவது செய்’ என்று சொல்லிய அவளின் தொனி அவனை வெகுவாய் தாக்கியது. 

பழையதை மீண்டும் மீண்டும் கிளறி வார்த்தையால் அவளை குத்தி தானும் வருந்தி அவளையும் வருத்தி என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற சிந்தை பலமாய் எழுந்தது. அதன் பலனாய் இருவருமே நிம்மதியாய் இல்லை என்று ஆணி அடித்தது போல் பதிய தலை கோதினான்.  

நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் இதென்ன சோதனை? 

அதுவும் நெஞ்சம் பதறி வலிக்க வலிக்க ஒரு யுத்தம். ஆம் ஓர் யுத்தம் அவனுள்.

அவள் முன்னாள் காதலுடன் அவனது இந்நாள் காதல் மோதி யார் வெல்வது என்ற சவாலான யுத்தமொன்று சத்தமின்றி நடந்தேறிக்கொண்டிருந்தது. 

யார் வென்றது யார் தோற்றது என்று தேடித் தேடி போரிட்டு போரிட்டு துவண்டு போயிருந்தவன் கோபத்தில் ஈரோட்டில் இருந்து மீண்டும் அவளின் அருகாமை உணர திருப்பூருக்கே வந்தது… அவனை அங்கு வரவைத்தது அவள் மீதான அவனது நேசம் தானே! 

புரிந்து கொள்ளக்கூடாது என்று வீம்பாய் இருந்தாலும் நிதர்சனமும் அவளது விளக்கங்களும் தெளிவை ஏற்படுத்த மனம் லேசான உணர்வு. அவள் விரும்பியது வேண்டுமானால் கிட்டாமல் இருக்கலாம் ஆனால் அவன் விரும்பிய கீர்த்தி அவனிடம் தானே இருக்கிறாள். அவனுடையதை அவனுக்கு ஏற்றதாய் மாற்றுவது அவன் கையில் தானே இருக்கிறது. இதுவரை அவளை அவனுக்கேற்றது போல் மாற்ற முயன்றிருந்தாலும் அவளது ஒத்துழைப்பு இல்லாது எதுவும் சாத்தியப்படவில்லை.

தற்சமயம் அவளே மாற விரும்பி அவனை ஏற்கும் மனப்பக்குவத்தோடு இருக்க, இம்முறை அவனுக்கு ஏற்ற ராகமாக அவளை ஆராதித்து கீர்த்தனை புனைய அக்கணம் தோன்றிற்று! 

Advertisement