Advertisement

*2*

அரபிக்கடலுக்கு இணையாக தபதி ஆற்றின் தெற்கே மராட்டியம் துவங்கி ஐந்து மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி வரை செழுமையுடன் அடர்ந்து பரந்து விரிந்து பசுமை போர்த்தி நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் தமிழக எல்லையை ஒட்டிய கிராமம் அந்த சோமயனூர். கொங்கு மண்டல எல்லைக்கு உட்பட்டு இருக்கும் அவ்வூர் கேரளத்துக்கு அருகில் இருந்தாலும் கொங்கு தமிழின் ஆதிக்கமே அங்கு.

ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் அக்கிராமத்தின் பிரதானம் வெள்ளாமையும் செங்கல் தொழிற்சாலையுமே. சிறிய சூளை துவங்கி பெரிய தொழிற்சாலை வரை செங்கல் உற்பத்தி அவ்வூரில் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியிலும் கொடிகட்டி பறந்தது. அதற்கேற்ப அங்கிருக்கும் மக்களின் வாழ்வும் வருமானமும் அதை ஒத்தே… சிலர் வருமான வரம்பிற்கு கீழ் சிலர் மேல்… 

அப்படி கீழே துவங்கி மேலேறிய பழனிவேல் மூப்பு காரணமாய் தற்சமயம் தொழில் இருந்து மெல்ல தன்னை விடுவித்துக் கொள்ள, அவரது மகன்கள் அவர் வழி பின்பற்றி தங்களின் சிறகை பரப்பி, தொழிலை விரிவுபடுத்த உழைத்தனர்… அவர்களின் கடைக்குட்டியைத் தவிர. அவனைப் பற்றிய கவலை மட்டுமே அவ்வப்போது அவரை படுத்த, மற்றபடி முறையே ஐந்து மூன்று பேரன்கள் பேத்திகள் எடுத்து நிறைவாய் இருந்தார் மனிதர்.

“சின்னவன்கிட்ட ஏதோ பேசோனோம்னு சொன்னீகளே? செத்த நேரத்துல கிளம்பி வந்துருவான் விவரமா பேசிபுடுங்க…” என்று கணவருக்கு நினைவுபடுத்தினார் ஐந்து பிள்ளைகளை பெற்ற மகராசி.

“எதுக்குமே புடி குடுக்க மாட்டேங்குறான்… இவனை என்னதான் செய்யுறது?” என்று பழனி தவிக்க,

“என்னைய சாடுற மாறி இருக்கே?” என்று வந்து நின்றான் அவ்வீட்டின் கடைக்குட்டி.

“உன்ற மனசுல என்ன நினைக்கிறீகனு எங்களுக்கு தெரியமாட்டேங்குது. ஆனா நித்தமும் எங்களுக்கு உன்ற பத்தின யோசனைதான்.

இப்போகூட நம்ம பெரியவன் வூட்டு பக்கத்தால இருக்கிற மெயின் ரோட்டை ஒட்டி ஒரு ஐநூறு மீட்டர் உள்ளாக்க பருப்பு குடோன் ஒன்னு விலைக்கு வருது… அதைப்பத்தி தான் யோசனை பண்ணிபுட்டு இருந்தேன். நீ ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடு கண்ணு… தோதா இருந்தா வாங்கிப் போடுவோம். உன்ற பேர்லையும் சொல்லிக்கிற மாதிரி மில்லு குடோனுன்னு இருந்தா பொறவு வர காலத்துல உபயோகமா இருக்கும்ல…” என்று மூத்த மகன் வீட்டின் அருகில் இருக்கும் குடோனைப் பற்றி யோசனையாய் சொன்ன தந்தையை சுணக்கத்துடன் ஏறிட்டவன்,

“அந்த குடோனு ஏற்கனவே ரெண்டு மூணு கைக்கு மாறியிருக்கு, அது வேணாம்.” என்று மறுத்தான்.

மறுப்பை ஏற்காத தந்தை, “கை மாறுனதா முக்கியம். அது எந்த இடத்தில இருக்கு, எவ்வளவு பெறுமானம் தேறும். பொறவு அதோட மதிப்பு எவ்வளவு கூடும்னுதான் பார்க்கோணும். அந்த இடம் டவுனிலேந்து அஞ்சு மைல்குள்ள இருக்கு. கோயம்புத்தூரும் அங்கன இருந்து பக்கம்தான். எல்லாத்துக்கும் வசதியா இருக்கும். இந்த வூருக்கு பெரிய குடோனு அதுதான். நம்ம பயக வெள்ளாமை பண்ணது எல்லாம் அங்கனதான் இப்போ போய்ட்டு இருக்கு. நல்ல வருமானம் வரும்.”

“அப்போ நீங்களே வாங்கி உங்க பசங்களுக்கு கொடுத்துடுங்க… எனக்கு வேண்டாம்.” தவறிக்கூட தந்தை மீது பார்வை செலுத்தாத மகன் தனக்கென தட்டில் வைத்த உணவை வேகமாய் உண்டு அதிலேயே கைகழுவி எழுந்தான். 

“ஏலேய் அதைத்தானே செய்யுறேன்… என்ற புள்ளைக்குதான் சொத்து சேக்குறேன். மத்தவனுங்களுக்கு  செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சு, பிரிச்சு, செட்டில் பண்ணி வுட்டாச்சு. உனக்கும் கொஞ்சம் சேர்த்து வப்போம்னு நானும் பல வருஷமா போராடுறேன்… எது வாங்க சொன்னாலும் வோணாம் வோணாம்னு சொல்லிட்டு திரியுற. என்ன ரோசனையில் இருக்க நீ? இப்படி ஒன்னுமே இல்லாம இருந்தா எப்படி நாளைக்கு கண்ணாலம் கட்டிக்கிட்டு புள்ள குட்டிங்களை வளர்ப்ப?” என்று அவர் அதட்ட,

“அது என்றபாடு… என்ற வாழ்க்கைக்கு அது அவசியம்னா நானே உழைச்சு சம்பாரிச்சு என்ற காசுல புதுசா கட்டிக்குவேன்… ஏற்கனவே பல கை மாறி புழக்கத்தில இருந்து தேஞ்சி ஓஞ்சி ஓடா போன பழசு எனக்கு வோணாம். அது எத்தாச்சோடு (எவ்வளவு பெரிய) குடோனா இருந்தாலும் சரி இந்த வூடா இருந்தாலும் சரி…” என்று தீர்க்கமாய் சொன்னவன், 

உயிலில் அவர்கள் தற்போது தங்கியிருக்கும் வீட்டை இவன் பெயரில் எழுதி வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேசிவிட்டுச் செல்ல, அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த பழனி பெருமூச்சிழுத்தார்.

”அவனுக்கு இதெல்லாம் தோதுபடாதுன்னு தெரியாதா உங்களுக்கு? எதுக்கு தேவையில்லாம ஒவ்வொரு வாட்டியும் அவன்கிட்ட கெஞ்சாத குறையா பேசிட்டு இருக்கீக? ரோஷம் உள்ளவன் அவனே வுழைச்சி வாங்கிப்பான்…” என்று அவர் மனைவி கழுத்தை வெட்ட, அதை மறுத்த பழனி,

“உன்ற பார்வைக்கு அவன் பிடிவாதத்துக்கு பின்னாடி இருக்குற வீரியம் புரியல கண்ணு… இந்த குணம் அவனை எங்கன கொண்டுபோய் நிறுத்தப்போகுதோ தெரில… சொல்ல முடியாது இந்த குணமே அவனை முன்னேற விடாம தடுத்து வச்சாலும் வச்சிடும். வாழுறதுக்கு கொஞ்சம் அனுசரணையும் முக்கியம் கண்ணு. அது இவனுக்கு எப்போ புரியப்போகுதோ?

ஆனா இவன் இப்போ பண்றது எல்லாம் மேல வரத்துக்கான வழியில்லைன்னு மட்டும் நல்லா தெரியுது. இப்படியே இருந்தான்னா ஒருநாள் ஒன்னுமில்லாம நிப்பான்.” தந்தையாய் அவர் கவலை அவரை மெல்ல சுருட்ட,

“அவனுக்கு எப்போ புத்தி வந்து… ஹ்ம்ம்… ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.” என்று கைவிரித்தார் அவர் மனைவி பரிமளா.

“அவனுக்கு பொண்ணு பார்த்து கண்ணாலம் பண்ணா எல்லாம் சரியாகிடும்னு மனசுக்கு தோணுது கண்ணு. அவனுக்குன்னு ஒரு குடும்பம் வந்தா முண்டியடிச்சு மேல வந்துதானே ஆகோணும்?” 

முப்பதை இன்னும் இரண்டு வருடங்களில் எட்டித் தொடவிருக்கும் அவரின் கடைசி மகன் மீதான கவலை நாளுக்கு நாள் பெருக, மகனை இனி தன்னால் சமாளிக்க இயலாது என்பதை ஒப்புக்கொண்டு, அவனை மாற்றும் பொறுப்பை பெரிய மனது வைத்து மருமகளிடம் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் இந்த கொஞ்ச நாட்களாய்… 

“அதுக்கு அவன் ஒத்துக்கோணுமே!” கவலை பரிமளத்திடம்.

“இனிமேயும் இப்டியே விடமுடியாது. எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் கண்ணு.” என்று கண்ணடித்தவர் தன் அலைபேசி எடுத்தார்.

“கண்ணாடி எடுத்துட்டுவா கண்ணு… இந்த கண்ணு வேற இப்போல்லாம் சரியா தெரியமாட்டேங்குது.” என்ற முனகலுடன் மனைவி எடுத்துவந்து கொடுத்த மூக்கு கண்ணாடியை மாட்டி தன் மகனின் நண்பனுக்கு அழைப்பு விடுத்தார்.

அழைப்பு மறுபக்கம் எடுக்கப்பட்டவுடன், “என்ன கண்ணு நல்லா இருக்கியாப்பா?” என்று நலம் வேண்ட,

“உங்ககிட்ட இருந்து நல்லா இல்லாம இருப்பேனாங்க ஐயா? இந்நேர கூப்புட்டிருக்கீங்க? ஏதாவது முக்கியமாங்க?” என்று விசாரிப்பு மறுபக்கம். 

“அது கண்ணு… உனக்கும் நம்ம சின்னவன் வயசுதான ஆகுது. அதுதான் உனக்கொரு கண்ணாலத்தை பண்ணிபுடலாம்னு பாக்குறேன். நான் பார்த்து வளர்ந்த புள்ள இப்போ இப்படி தனியா இருக்கிறது சங்கடமா இருக்குப்பா.” என்று இவர் இழுக்க மறுபக்கம் அமைதி.

“என்ன கண்ணு சத்தத்தையே காணோம்?”

“அவனுக்கு முதல்ல பாருங்கய்யா… பொறவு என்னப்பத்தி யோசிக்கலாம். நீங்க எல்லாம் இருக்கிறப்போ நான் தனி கிடையாதுங்கய்யா.” என்று அழுத்தமாய் அவன் மொழிய, மகனின் நண்பன் வார்த்தையில் மனம் நெகிழ்ந்த பழனி தொடர்ந்து,

“அவனுக்கு நாங்க பொண்ணு பாத்தா அவன் ஒத்துப்பானா கண்ணு? ஏதாவது நொட்டம் சொல்லுவாரு. அவரே அவருக்கு புடிச்ச மாதிரி பாத்துக்கட்டும். நீ சொல்லு கண்ணு உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?”

“இப்படி கேட்ட எப்டிங்கய்யா? கொஞ்ச நாள் போகோட்டுமே. பொறவு பாக்கலாம்.” என்றுவிட,

“சரி உன்ற விருப்பம் கண்ணு.” என்று அழைப்பை துண்டித்தார் பழனி.

“உன்ற மவன் கண்ணாலம் பண்ணி வைங்கன்னு இன்னைக்கே வந்து நிப்பாரு பாரு.” என்று சொன்ன பழனியின் வார்த்தையை பொய்க்காது அன்று இரவே அவர்கள் முன் வந்து நின்றான் அவ்வீட்டின் கடைக்குட்டி.

“என்ற தோஸ்த்துக்கு கண்ணாலம் கட்டி வைக்கணும்னு நினைப்பு இருக்கு. ஆனா உன்ற கண்ணுக்கும் உன்ற புருஷன் கண்ணுக்கும் இந்த புள்ளையை தெரியாதே?” என்று பரிமளத்திடம் வந்து நின்றான் அவன்.

மகன் வேலை முடித்து வந்ததும் பரிமளம் இரவு உணவை எடுத்து வந்து வைத்து அவனுக்கு பரிமாற, 

“நாங்க எது செஞ்சாலும்தான் உனக்கு புடிக்காதே கண்ணு. பொறவு நாங்க எப்படி உனக்கு பொண்ணு பாக்குறது?” என்று நாசூக்காய் பேச்சை துவங்கினார் பழனி.

தந்தையின் சூட்சுமம் அறியாத மகனோ விறைப்பாய், “சரிதான்! நான்ன்னா எப்போதும் உங்களுக்கு ரெண்டாம்பட்சம் தானே… எனக்கு ஏதாவது செய்யணும்னா உங்களுக்கு வலிக்கும். அதுக்கு என்னையவே சாக்கா சொல்லுவீங்க…”

“அப்போ பொண்ணு பாக்கவா?” ஆர்வத்தை கடினப்பட்டு அடக்கி மகன் வாயிலிருந்து சம்மதம் வாங்க காத்திருந்தார் பழனி.

“எனக்குன்னு மெனக்கெட்டு இதுவரைக்கும் எதையும் செஞ்சதில்லை… இதையாவது உருப்படியா செய்யுங்க…” என்று வலிய சென்று தலை கொடுத்தான் அவன்.

பரிமளமும் பழனியும் ஒருவரை ஒருவர் அர்த்தமாய் பார்த்து பின் சட்டென பார்வையை விலக்கிக்கொண்டனர்.

“சரி கண்ணு நான் பாக்குறேன்.” என்று பழனி மெல்ல நகர்ந்துவிட, அமைதியாய் உண்டு தன்னறைக்கு சென்றான் அவன். அவன் அஞ்சன்! 

சீறும் சிங்கம், பாயும் புலி, அஞ்சா நெஞ்சன் என்றெல்லாம் இல்லை. அந்த வீட்டில் ஐந்தாவதாய் பிறந்தவன் ஆகையால் அஞ்சன். பெண் பிள்ளை வேண்டும் என்ற அக்குடும்பத்தின் தேடல், ஐந்தாவதாக பிறந்த அவனும் ஆணாய் பிறந்ததால் மேலும் விரிவாக்கம் ஆகிவிடுமோ என்று பயந்த ஏனைய சொந்தங்கள் அவனோடு போதும், நிறுத்திவிடுங்கள் என்று இவன் பிறந்தவுடன் விளையாட்டாய் அஞ்சு போதுமா! அஞ்சா? அஞ்சாவது புள்ளையா? என்று கேலியாய் ஆர்வமாய் விஷமமாய் கேட்டுவைக்க அதுவே பெயராகிற்று. 

அஞ்சன் பழனிவேல். 

அவ்வீட்டில் தனித்துவமாய் இருப்பதும் அவன் பெயரே. அவனுடன் பிறந்த ஏனையர்கள் சுவாமிநாதன், பூமிநாதன், சுந்தரநாதன், குருநாதன். மகன்கள் நால்வருக்கும் மணம் முடித்து சில நாட்கள் இடைவெளியில் ஒவ்வொருவரையும் பழனியே தனியாய் வீடு பார்த்து வைத்துவிட்டார். தனித்தனி வீடு என்றாலும் அனைவரின் குடும்பமும் அதே சுற்றுவட்டாரத்தில் அரை மணி நேரத்தில் போய் வரும் தூரத்தில் தான் இருந்தது. திருமணமாகாத இந்த கடைக்குட்டி மட்டும் பெற்றோருடன் தற்சமயம்.

உண்டு முடித்தவன் எதுவும் பேசாது அறைக்குள் புகுந்து கொண்டான். சற்று முன் திருமணத்திற்கு சரியென்று ஒப்புதல் கொடுத்த எண்ணத்தோடு அறையை சுற்றி நோட்டமிட்டான் அஞ்சன். அவனுக்கே அவனுக்கென்று முதல் முறையாய் தனி அறை கிடைத்தது என்னவோ நாலாவது அண்ணன் குருநாதனுக்கு திருமணமாகி இரண்டு மூன்று வருடங்களுக்கு பின்தான். துல்லியமாய் கணக்கிட்டால் இருவருடமாகத்தான் இந்த அறையும் அவனுக்கானதாய் இருக்கிறது. அதுவரை சட்டை முதல் படித்த காலம் தொட்டு நோட்டு, பேனா, சைக்கிள், புத்தகம், தின்பண்டம், வண்டி என்று அறை வரை நால்வருடன் பின் மூவருடன் பின் இருவர் என அவன் வாழ்வில் எப்போதும் பகிர்தல் இன்றியமையாத ஒன்றாய் கலந்திருக்க, அதுவே அவனை குடும்பத்தினருடன் இணக்கமாய் இருக்க விட்டதில்லை.

இப்போது திருமணம் என்று வந்தால் மீண்டும் ஒரு பகிர்தலா? அறை துவங்கி அங்கங்கள் வரை ஒரு பகிர்தல் இதற்கு அவசியமே! அதுவும் வாழ்வு முழுக்க? சாத்தியமா? என்ற குழப்பம் மேலோங்கியது. 

காலை என்னவோ நண்பன் சொல்லிய செய்தியில் கடுப்பானது உண்மை.

“அஞ்சா காத்தாலையே ஐயா போன் போட்டு உனக்கும் அஞ்சனுக்கும் ஒரே வயசுதானே… பொண்ணு பாக்குறேன் கண்ணாலம் பண்ணிக்கிறியான்னு கேக்குறாரு…” என்றுவிட,

என் தோஸ்து அவன், அவனுக்கு பொண்ணு பாக்கோணும் கண்ணாலம் பண்ணனோம்னு எல்லாம் நினைப்பு இருக்கு ஆனா எனக்குன்னா மட்டும் எல்லாம் மறந்து போயிடும். எப்போவும் இந்த அண்ணனுக்கு அந்த அண்ணனுக்குனு எவனுக்காச்சு செய்யும் போது போனா போகுதுனு என்னையும் அதுல சேர்த்து விடுறது… இப்போ அண்ணன் போயி பிரெண்டா? எனக்குன்னு எதுவும் தனியா செய்ய மாட்டாங்களாமாம்? இந்த விஷயத்தை கண்டிப்பா விட மாட்டேன் என்று வீம்புடன் வந்து சம்மதமும் சொல்லி ஆகிற்று. 

அடுத்து என்ன? இது சரிவருமா? என்ற எண்ணத்தில் உழல, அவனின் அலைபேசி சிணுங்கியது.

யாரென்று பார்த்ததும் அவனின் முகத்தில் தானாய் ஒரு இலகல். 

“என்ன புது மாப்பிள்ளை எப்புடி இருக்கீக? உன்ற முகத்துல தெரியுற ஒளிவட்டம் இங்கன வரை வந்து வூடே லைட்டு போடாம பிரகாசமா இருக்கு கொழுந்தனாரே!” 

“ஏதே! வெளிச்சம் அதுக்குள்ள அவித்த(அவ்விடம்) வரை வந்துடுச்சா குருங்கை?” செய்தி அதற்குள் வந்துவிட்டதா என்று இவன் விளிக்க,

“எத்தினி முறை சொல்றது இப்புடி கூப்புடாதீகன்னு? குருங்கை முருங்கைனு? பேர் சொல்லியே கூப்பிட்டுடலாம் இதுக்கு.” என்று சடைத்தாள் அவனின் கடைசி நங்கை(அண்ணி). 

“வேற எப்புடி கூப்பிடுறதான் உங்களை? நங்கையை பேர் சொல்லி அழைக்குற பழக்கம் என்ற வம்சத்துலேயே இல்லை குருங்கை. பெரிய நங்கை, சின்ன நங்கை, நடுநங்கை, கடைசியா இருக்கிறவங்க கடைசி நங்கைன்னா கூப்பிட முடியும்? ஒவ்வொருவாட்டியும் அவ்ளோ இழுத்து கடைசிசின்னு கூப்பிட்டா நல்லாவா இருக்கும் அதான் சுருக்கிட்டேன்.” கடைசி அண்ணன் குருநாதனின் மனைவி, அண்ணன் முதல் பெயருடன் இணைந்து குருங்கை ஆகியிருந்தது. பொருளின்றி அர்த்தமின்றி ஒரு அழைப்பு. 

“என்னை சுருக்குனது இருக்கட்டும் நிசமாவே கண்ணாலம் கட்டிக்க சம்மதமா கொழுந்தனாரே?” சந்தேகமே அவள் குரலில் பிரதானமாய் இருந்தது.

“அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?”

“இல்லை… நீங்க இருந்த பவுசுக்கு இன்னும் ரெண்டு மூணு வருஷம் தனிக்கட்டையா தனிக்காட்டு ராசாவா சுத்துவீகன்னு நினச்சேன்!”

“இதை பத்தியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. எல்லாம் உன்ற மாமனாரு பண்ண கூத்து… என்ற தோஸ்த்துக்கு கண்ணாலம் கட்டி வைப்பாராம் என்னை வுட்டுடுவாராம்?”

“அதுனால் வீம்புக்கு நீங்க சரி சொல்லியிருக்கீக?” என்று சரியாய் கேட்டாள் அவள்.

“ஆமாம் சொன்னேன்!” 

“வீம்புக்கு வாழ்க்கையில விளையாடுவீகளா கொழுந்தனாரே?” சிறு வயதிலிருந்து உடன் பிறந்தவர்களுடன் பகிர்ந்த சிறு சிறு விஷயங்களையும் நினைவு வைத்து இன்று வரையும் அதற்கு முகத்தை தூக்கிகொண்டு இருப்பவன் பெண் நுண் உணர்வுகளை புரிந்துகொண்டு அனுசரணையாக வாழ்வானா என்ற ஐயம் அவளிடம்.

“எல்லாம் சரியா வருங்க நங்கை. என்ற மனசுக்கு புடிச்ச மாதிரி எனக்கே எனக்கு மட்டும், என்ற மனசை மட்டுமே பாத்து நேசிச்சு என்னையவே சுத்தி சுத்தி வரப்போற என்ற பொண்டாட்டியும் என்ற அண்ணமார்களும் ஒண்ணா என்ன?” என்றவனுக்கு எப்போதும் போல அவனின் கடைசி அண்ணியிடம் பேசியுடன் தெளிவு கிட்டியிருந்தது.

அண்ணணும் மனைவியும் வேறல்லவே. அண்ணன்களிடம் தோன்றிய போட்டி, பொறாமை, எரிச்சல், விலகல்  மனையாளிடம் வர வாய்ப்பில்லையே! 

அவளே அவன்! அவனே அவன்! எனும் போது பொறாமையும் வெறுப்பும் வராதே என்று அவன் எண்ண,

அண்ணன்களால் பெற்றவர்களிடமே மீயுடைமை உணர்வு பெருகியிருக்க, அது மனையாளிடம் வெளிப்படாமல் இருக்குமா என்ற எண்ணம் சிறிதும் இன்றி உல்லாசமாய் உணர்ந்தான் அஞ்சன்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு! மீயுடைமை உணர்வும் அப்படியே! கொஞ்சம் மிகையானாலும் பிசகிவிடும் என்று யார் வந்து சொல்வது அவனுக்கு?

Advertisement