Advertisement

*17*

கட்டிலின் ஒரு புறத்தை அஞ்சன் பிடித்திருக்க குறுக்கே வரும் பக்கவாட்டுக் கட்டையை மற்றொரு புறத்தோடு பொருத்தினான் அருண். 

“சரியா பொருந்தலடா… ஒழுங்கா மாட்டு… அதை கிழக்கால சாச்சி திருப்பி புடிச்சி போடு…” என்று அஞ்சனின் குரல் மட்டுமே அவ்வீட்டில் பிரதானமாய் ஒலிக்க, கீர்த்தி சமையலறையில் புகுந்து கொண்டாள்.

அஞ்சனை எதிர்பார்த்து சமைத்து வைத்திருக்க, அருணின் வரவு மனதில் இருந்த அனைத்தையும் துடைத்து விட்டிருந்தது. சென்ற முறை கோவிலில் பார்த்த போது எழுந்த உணர்வுகள் யாவும் இம்முறை எழவில்லை. எந்தவித வருத்தமோ ஆதங்கமோ அதிர்வோ இன்றி மனம் ஒருவித அமைதியை சூட்டிக்கொண்டது. இதற்கு மேல் என்ன சிந்திக்க வேண்டும் எப்படி அருணை எதிர்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இலக்குமின்றி இயந்திரத்தனமாய் வந்தவர்களுக்குக் கதவை திறந்து வழிவிட்டு நிற்க,

“அருணை தெரியும்தானே உனக்கு? அன்னைக்கு கோவில்ல பாத்தோமே… என்ற கூட சின்ன வயசுலேந்து இருக்கான்… நம்ம சாமி கடையில இப்போ இருக்கான். கார்மெண்ட்ஸ்கு வந்துட்டு அப்படியே ஓடுறான், அமுக்கி புடிச்சி அப்புடியே கூட்டிபுட்டு வந்துட்டேன். காபி போடு நாங்க அதுக்குள்ள ரூம்ல கட்டில மாட்டிபுடுறோம்.” என்ற அஞ்சன் அருணை இழுத்துக்கொண்டு சென்றவுடன் இவளும் சமையல் அறையில் தஞ்சம் கொண்டாள்.

சுவரை வெறித்தபடி நின்றவளுக்கு சென்ற முறை அருணை சந்தித்ததும் அதனூடான அவளின் செயல்களும் அதன் பின்விளைவுகளும் தன்னால் நினைவு வந்தது. உடன் அருணுடன் வாழக் காத்திருக்கிறாயா? என்ற அன்னையின் கேள்வியும்தான்.

தன்னை வேண்டாம் என்றவனை எண்ணி ஏங்கி வாழக் காத்திருக்கும் அளவுக்கு அவனது அன்பு அழுத்தமாய் இல்லையே என்ற வலி எழாமல் இல்லை. நண்பனுக்காக விட்டுக்கொடுத்திருக்கிறான் என்று அஞ்சன் குடும்பத்தினருடன் அருண் பழகும் விதமே காட்டிக்கொடுத்தது. அப்படி விட்டுக்கொடுக்கும் அளவுக்குத்தான் அவனின் காதல் இருக்கிறது என்றால் என் உண்மையான அன்பிற்கான மரியாதை எங்கே? என் காதலுக்கு இழைக்கப்பட்ட அநீதி கேட்பாரற்று கிடக்கிறதா… அதனால்தான் என் கண் முன் அடிக்கடி வந்து பலகீனப்படுத்துகிறானா என்னை? இன்றே இதற்கு ஒரு முடிவுகட்டியாக வேண்டும் என்ற தீர்க்கம் எழ, யோசனைகள் சென்ற திசைக்கு வலு சேர்க்கும் விதமாய் அவளது செயல்களும் இருந்தது.

நேரே அறைக்குச் சென்றவள் அஞ்சன் தோள் தட்டி, “பால் இல்லை வாங்கிட்டு வாங்க…” என்றிட, 

“ஊறுபட்ட சோலி இருக்கு. நான் கிளம்புறேன்.” என்று எழுந்துவிட்டான் அருண்.

“ஏலேய்… இருடா… ஓடுறதுலேயே குறியா இருக்க…” என்று நிமிர்ந்த அஞ்சன் அருணை முறைத்தபடி, “மெத்தையை விரிச்சி போடு… நான் பால் வாங்கிட்டு வரேன்.” 

“நான் வாங்கிட்டு வரேன்.” என்று கிளம்பிய அருணை கண்டுகொள்ளாது வெளியேறி இருந்தான் அஞ்சன். 

தவிப்புடன் அருணின் பார்வை கீர்த்தியிடம் செல்ல, அதற்காகவே காத்திருந்த பாவை, “நீங்க காதலிச்ச பொண்ணை உங்க பிரெண்டோட மனைவியா பாக்க எப்படி இருக்கு அருண்? நீங்க பாத்து விட்டுக்கொடுத்து நடத்தி வச்ச கல்யாணமாச்சே எப்படி இருக்கு எங்க ஜோடி பொருத்தம்?” என்று புருவம் உயர்த்தி அலட்சியமாய் கேட்க, விடுவிடுவென அவ்வறையில் இருந்து வெளியேறி வாசலில் நின்றுகொண்டான் அருண்.

விடுவேனா என்று பின்னேயே வந்த கீர்த்தி, “எங்களை பாக்கப் பாக்க திகட்டலையோ அதான் அடிக்கடி வறீங்களா?”

“ப்ளீஸ்… போதும்…” என்று முகத்தை அழுந்தத் துடைத்து தலை கோதினான் அவன்.

“என்ன போதும்? நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே…” என்றவள் முகம் இடுங்க அவன் முன் வந்து நின்று, “எங்க பெட்ரூம் வந்து என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று அழுத்தமாய் கேட்க இந்த நொடி பூமி பிளந்து அதில் அமிழ்ந்து விட மாட்டோமா என்று துடிதுடித்துப் போனான் அருண்.

“இந்த மாதிரியெல்லாம் பேசாத… இது நீ கிடையாது. ப்ளீஸ்…” என்று அவன் மேலும் குறுகிட,

“பெரிய தியாகியாட்டம் விட்டு கொடுத்துட்டு இப்படி இயல்பா அவரோட பேசி பழக எப்படி முடியுது உன்னால? என்னை எப்படி பாக்க முடியுது உன்னால? கொஞ்சம் கூட உறுத்தாம எங்க ரூம் வரைக்கும் வந்திருக்க… அப்போ எல்லாமே பொய்… நீ என்னை நேசிக்கிறேன்னு சொன்னது பொய் இல்லையா? எவ்வளவு சுலபமா என்னை விட்டு கொடுத்துட்ட…”

“என்னை வேற என்ன பண்ண சொல்ற? அஞ்சனோட குடும்பம் என்ற குடும்பத்துக்கு நிறைய உதவி இருக்காங்க… ஐயா… அஞ்சனோட அப்பா அஞ்சனுக்கு பொண்ணு பாத்து இருக்கேன். இந்த பொண்ணு தான் அவனுக்கு ஒத்துவரும். இந்த பொண்ணோட ஜாதகம் மட்டும்தான் பொருந்துது… நான் சொன்னா ஏட்டிக்கு போட்டியா பண்ணுவான். எப்படியாவது ஒத்துக்க வைனு கெஞ்சும் போது நான் என்ன பண்ண முடியும்?”

“அப்போவே உண்மையை சொல்லி இருக்கணும். உன்னை யாரும் மிரட்டி கட்டாயப்படுத்தலையே.” என்றாள் பட்டென்று.

அவள் பேச்சில் இருந்த உண்மை நெஞ்சை சுட, அருண் தலை குனிந்து கொண்டான். அஞ்சனின் தந்தை அவர் விருப்பை சொன்னார். கீர்த்தியின் தாய் தன் விருப்பு வெறுப்பை சொன்னார். ஆனால் இருவரும் அவனை மிரட்டவில்லையே. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அவர்களது விருப்பத்தை பிள்ளைகள்  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒன்றன் பின் ஒன்றாய் முன் வந்து நிற்க, அவனுக்கு இருவரையும் மறுக்கும் அளவுக்கு திராணி இல்லை. அதற்கு பலிகடாக அவனது காதலை வைத்திட, சிக்கியது என்னமோ கீர்த்தி அஞ்சனின் வாழ்க்கை தானே… 

“பதில் சொல்ல முடியலையா? உன்னோட கோழைத்தனத்தால் என்னோட வாழ்க்கை மட்டுமில்ல அவரோட வாழ்க்கையும் சேர்த்து கெடுத்துட்ட… என் மனச சாகடிச்சு அவர் மனசுல ஆசையை வளர்த்து விட்டு… என்ன பண்ணி வச்சிருக்கேன்னு உனக்கு புரியுதா இல்லையா? இதுல அவர் கூட ஜோடி போட்டுகிட்டு வீடு வரைக்கும் வர…” கத்தவில்லை என்றாலும் அவள் சொற்களில் அவ்வளவு அழுத்தம். 

அவள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் யாவும் உண்மை எனும் போது என்ன சொல்ல முடியும் அவனால்? மெளனித்து நின்றான். 

“இப்படி ஒருத்தனை ஏன் விரும்பினேன்னு ஒவ்வொரு நிமிஷமும் புழுங்க வச்சிட்ட…” அவள் வசைகள் அதிகரிக்க அதை தடுக்கும் விதமாய் அஞ்சன் பால் வாங்கி வரவும் அமைதியானாள். 

“ஏன் வாசல்ல நிக்குறீங்க? உள்ளார உக்கார வேண்டியதுதானே?”

கீர்த்தி அஞ்சன் கையிலிருந்த பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு அருணை வெட்டும் பார்வை பார்த்துவிட்டுச் செல்ல, அஞ்சன் அருணுடன் வெளியே நின்று கொண்டான்.

“என்னை கண்டு ஏன் ஓடுற? அப்படி எந்த சீமைக்கு போய் சிங்காரிக்க போற?” அருண் தோளில் கைபோட்டபடி அஞ்சன் அவன் கழுத்தை மெல்ல நெறித்தான்.

“ஆயா தனியா இருக்குடா… நானும் பழையபடி நம்ம செங்கல் சூளையை பார்த்துகிட்டு அங்குட்டே இருந்துடலாம்னு பாக்குறேன்.” 

திருமணம் ஆனதும் கீர்த்தி கோவை சோமயனூரில் இருப்பாள் என்றெண்ணி சுவாமிநாதன் தயவில் திருப்பூரில் வேலை இருக்கும்படி பார்த்துக்கொள்ள, இப்போது இவர்கள் திருப்பூருக்கு வந்ததும் அவன் திரும்ப தன் ஊருக்கே சென்றுவிடும் முடிவில் இருந்தான். அதுவும் கீர்த்தி இப்படி பேசிய பின் இந்த மண்டலத்தை விட்டு வேறெங்காவது கண்காணாத இடத்துக்கு சென்று விடவேண்டும் என்று கூட தோன்றியது.

“அதெல்லாம் ஒன்னும் வோணாம்… உன்ற அம்மணியும் இங்கேயே தான இருக்கு. நானும் இங்குட்டு வந்துட்டேன்… ஆயாவையும் கூட்டிட்டு இங்க பக்கமா வந்துடு…” அருணின் அலைப்புறுதல் அறியாமல் அஞ்சன் யோசனை கொடுக்க நெஞ்சம் அடைத்தது அருணுக்கு.

“அதெல்லாம் சரியா வராது… நான் கிளம்புறேன்.” என்று அதற்கு மேல் நிக்காமல் விறுவிறுவென சென்றுவிட,

“டேய் டேய் நில்லு…” கத்திக்கொண்டே அஞ்சன் அவனை பிடிக்க முயல, அருண் தன் வண்டியை பறக்க விட்டிருந்தான்.

‘என்னாச்சு இவனுக்கு?’ என்று நினைத்தபடி உள்ளே நுழைந்து அமைதியாய் ஹாலில் அமர்ந்துகொண்டான்.

கீர்த்தி இருவருக்குமாய் காபி போட்டு எடுத்துவர, “என்னாச்சுன்னு தெரில… சொல்ல சொல்ல கேக்காம கிளம்பிட்டான்.” என்றபடி காபியை வாங்கிக்கொண்டான்.

மற்றொரு காபியை தான் எடுத்துக்கொண்டு, “ஏன் அவரையெல்லாம் ரூம் வரைக்கும் விடுறீங்க? எனக்கு புடிக்கல.” என்றாள் கீர்த்தி குனிந்த தலை நிமிராது. 

அவளை புரியாது பார்த்தவன், “ஏன் அவனுக்கு என்ன? அவன் என்றகூடவே வளந்தவன். அவனை வேறையா பாக்காத கீர்த்தி.”

வேற எப்படி பாக்கணுமாம்? வாய் வரை வந்த கேள்வியை விழுங்கியவள், “வேற யாருமே அந்த கட்டில் மாட்ட கிடைக்கலையா? எனக்கு என்னமோ அங்க வரை அவர் வர்றதெல்லாம் ஒப்பலை.” என்றாள் மீண்டும். 

அருணை மறந்து அஞ்சனை பற்றி யோசிக்கலாம் என்ற எண்ணம் மெல்ல எட்டிப்பார்க்க துவங்கியிருக்க, அருண் அவர்கள் அறை வரை வந்ததை அவளால் ஏற்க முடியவில்லை. அவனின் இருப்பு அவள் வாழ்க்கையில் இறுதிவரை இருக்குமோ என்ற ஐயம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. அதன் வெளிப்பாடே அவளது வார்த்தைகளாய் உருப்பெற அதன் வீரியம் அஞ்சனுக்குப் புரியவில்லை.

“பூமி அண்ணன் எல்லாம் செட் பண்ண ரெண்டு நாள்ல வரேன்னு தான் சொல்லுச்சு நாந்தான் அருணை பார்த்ததும் நேரத்தை வீணாக்க வேணாம்னு அவனை வச்சே கட்டில் மாட்டிட்டேன்.” என்றான் அஞ்சன் தன்பக்க நியாயத்தை…

‘அப்படி என்னத்தான் அவசரமோ…’ என்று அவள் முணுமுணுத்தது அவன் காதில் விழுந்ததும் அஞ்சன் முகத்தில் கள்ளச்சிரிப்பு.

“எங்கேயாவது வெளில போயிட்டு அப்படியே சாப்பிட்டு வரலாமா?” 

“நான் சமைச்சி வச்சிட்டேன்.” என்றாள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து.

“ஓ… சும்மா போயிட்டு வரலாமே? காலையிலேயே அவசரமா போனோம்.” என்று அஞ்சன் ஆவலுடன் அவன் முகம் பார்க்க, சங்கடத்துடன் அவனை ஏறிட்டவள், “எனக்கு சோர்வா இருக்கு. சீக்கிரம் சாப்பிட்டு தூங்கலாம்னு நினைச்சேன்.” என்றதும் அவன் முகம் லேசாய் சுருங்கி பின் மீண்டது.

“மாடிக்காவது போலாமா?” 

சரியென்று அவள் தலையசைக்கவும் வீட்டை பூட்டிக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றனர்.

அஞ்சன் மாடியின் ஒரு ஓரம் சென்று கட்டையில் சாய்ந்து கொள்ள, அப்போது தான் மாடிக்கு முதல் முறையாய் வந்த கீர்த்தி அவ்விடத்தை கவனித்த வண்ணம் நடுவே நின்றுகொண்டாள். சுத்தமாய் துடைத்து வைத்திருந்த மாடியின் ஒரு மூலையில் தண்ணீர் தொட்டி மற்றபடி துணி காய வைக்கும் கொடிகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தது.

“கீர்த்தி இங்குட்டு வா…” கைநீட்டி அழைத்தான் அஞ்சன்.

நொடி தயங்கியவள் அவனை நெருங்கி அவனருகில் நின்று கொண்டாள். நீட்டிய கரத்தில் கரம் கோர்ப்பாள் என்று எதிர்பார்த்தவன் அவள் அமைதியாய் அருகில் நின்று கொள்ளவும், நீட்டிய கையை தானாய் அவள் விரல்களுடன் கோர்த்துக் கொண்டு அவள் முகம் பார்த்தான்.

அவனின் பார்வையில் தவித்த கீர்த்தனா முகம் திருப்பிக்கொள்ள, அவள் விரல்களில் அழுத்தம் கொடுத்தவன், “வூடு பரவாயில்லையா? வசதியா இருக்கா?” 

தலை குனிந்து கொண்டவளிடம் ‘ம்’ என்ற முனகல் மட்டுமே.

“இன்னைக்கு வேலை எப்புடி போச்சு?” பொதுவான பேச்சே அவன் துவங்க, ஓரிரு வார்த்தைகளே பதிலாய் வந்தது.

“நல்லா போச்சு.”

“சீக்கிரமே வந்துட்ட? நீ மெசேஜ் போட்டதும் வசதியா போச்சு இல்லைனா உங்க கார்மெண்ட்ஸ் வெளில நின்னுட்டு இருந்திருப்பேன்.”

“ம்…”

“சில நாள் எனக்கு வேலை சீக்கிரம் மூஞ்சிடும் சில நாள் நாழியாகிடும். நாழியானா முன்னாலேயே சொல்லிடுறேன் நீ எனக்கு காத்திருக்காம வூட்டுக்கு வந்துரு.”

“ம்… சரி.”

“நான் என்ன வேலை பாக்குறேனு தெரியுமா?”

“ம்.”

“ஆனா எனக்கு இந்த வேலை புடிக்கல.”

“ம்…”

“அதுக்கும் ‘ம்’ ஆ? ஏன் புடிக்கலைனு கேக்க மாட்டியா?” ஏமாற்றத்துடன் அவன் எழுப்பிய கேள்வியில் நிமிர்ந்த கீர்த்தனா, “இல்லை… நீங்க பேசிட்டு இருந்தீங்க… சொல்லுவீங்கன்னு பாத்தேன்.”

“ம்… இதெல்லாம் முன்னாடியே சொல்லணும்னு தான் உனக்கு தினம் கூப்புடுவேன். நீதான் சரியா பேச மாட்ட… நான் பேசுனாலும் சீக்கிரம் போன் வச்சிடுவ…”

“இப்போ கேக்குறேன் சொல்லுங்க.” என்றாள் வேகமாய். எங்கே பேசவில்லை என்ற குற்றச்சாட்டு மீண்டும் சுமத்தப்பட்டுவிடுமோ என்ற பயமே அந்த வேகத்திற்கு காரணம்.

“நமக்குன்னு கார்மெண்ட்ஸ் ஆரம்பிக்கணும் கீர்த்தி. மத்த கார்மெண்ட்ஸ் மாதிரி இருக்கக்கூடாது. புதுசா ஏதாவது பண்ணனும்னு ஓசனை பண்ணிட்டு இருக்கேன். என்ன பண்ணலாம்னு தான் இன்னும் முடிவு பண்ணல. இந்த ஏஜன்ட் வேலைல சேந்ததும் நிறைய பேரோட பழக முடியுது. நிறைய தெரிஞ்சிக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் பெருசா ஏதாவது செய்யனோம்.”

கனவுகளுடன் அவன் பேச, கனிவு எட்டிப்பார்த்தது பாவையிடம், “ம்… கண்டிப்பா செய்யலாம்.” 

“செய்யணும் கீர்த்தி…” என்றவன் கோர்த்திருந்த கையை பிரித்து அவள்  தோள் சுற்றி போட்டுக்கொள்ள, மனது விலக உந்தினாலும் விலகாது அப்படியே நின்றாள் கீர்த்தி.

“ஒரு நாள் வேலை முடிச்சி சர்பிரைஸா உன்னை பாக்கலாம்னு உங்க வூட்டுக்கு வந்தேன். அந்தியாகிட்டா அத்தை என்ன நினைப்பாங்களோனு வூட்டை வுட்டு தள்ளி நின்னு உனக்கு போன் போடலாம்னு பாத்தா நீ மாடியில நின்னு ஹெட்செட் போட்டிருந்த… அப்போலேந்து இப்புடி இருக்கணும்னு ஆசை அதான் மாடி வூடா பாத்தேன்…” என்றவன் தன் சட்டை பையிலிருந்து ஹெட்செட் எடுத்து ஒரு புறத்தை தன் காதிலும் மற்றொரு புறத்தை அவள் காதிலும் சொருகிவிட்டு பாட்டை ஒலிக்க விட்டான்.

பாடலின் இனிமையில் மயங்கி அதன் தாளத்திற்கேற்ப அவன் தலை அங்குமிங்கும் அசைந்ததில் அவள் காதில் இருந்தது நழுவிவிட, தானே எடுத்து மாட்டிக்கொண்டாள். சில நொடிகளிலேயே அவன் அசைவில் அது மீண்டும் நழுவ கடுப்பானவள் அவன் காதில் இருந்ததை பிடுங்கவும்தான் தன்னிலை உணர்ந்து கேள்வியாய் பார்த்தான் அஞ்சன்.

“தலையை ஆட்டாம கேக்குறதுனா கேளுங்க… இல்லைனா ஸ்பீக்கர்ல போடுங்க.” என்று அவள் முறைக்க, 

“சரி சரி கோச்சிக்காத…” என்று அவள் காதில் மீண்டும் மாட்டிவிட்டு அவளை உரசியபடி நின்று கொள்ள, அனிச்சையாய் கீர்த்தி நகர்ந்தாள். அவளின் விலகளில் அவன் காதில் இருந்தது இம்முறை விழுந்துவிட,

“இது சரிப்பட்டு வராது…” என்று அப்படியே அமர்ந்தவன், அவள் கைபிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்திக்கொண்டான்.

என்ன செய்கிறான் இவன் என்று அவள் யோசிக்கும் போதே அவள் வலத்தோளில் தன் தலையை சாய்த்திருந்தான். உடன் ஹெட்செட்டின் ஒரு பகுதி அவள் செவியில் மற்றொன்று அவனிதில். நின்ற இடத்திலிருந்து பாடல் தொடர, அஞ்சனின் இமை தானாய் மூடி அதன் இனிமையில் லயித்தது. 

அவனின் அருகாமையில் அவள் உடல் நொடி இறுகி இளகியது. இவன் அந்நியன் இல்லை. உன்னவன் என்று மனதில் உருபோட்டபடி கீர்த்தி லேசாய் தலை சரித்து அவன் முகம் காண, மூடியிருந்த இமையினுள் அங்குமிங்கும் அசைந்தாடியது அவன் விழிகள். உடன் அருண் உருவத்தோடு இவனதை ஒப்பிடுவது அவள் அனுமதியின்றி தானாய் நடந்தது.

நிறம் முதல் உயரம் வரை அனைத்திலும் வேற்றுமை. அவனைப் பிடித்தது போல் இவனைப் பிடிக்குமா என்ற மனதின் கேள்விக்கு பிடித்தாக வேண்டும் என்று திண்ணமாய் கூறியது சிந்தை. பிடித்தத்தை இப்படி பிடிவாதமாய் மனதில் உருவேற்றிட முடியுமா? அது சாத்தியமா? எப்படி இவனை தனக்கு பிடித்தவனாக மாற்றுவது? அவனை மாற்ற முடியுமா இல்லை நான்தான் மாற வேண்டுமா? சிந்தனை கடிவாளமின்றி தறிகெட்டு ஓட, 

அதற்கு மேல் அவளை சிந்திக்க விடாது “கீழ போவோமா? சீக்கிரம் தூங்கனும்னு சொன்னியே” என்று அவன் எழுந்து கொண்டு அவளுக்கு கை நீட்ட, தயக்கத்துடன் அவன் கரம் பற்றி எழுந்தாள் கீர்த்தி. 

“ஓகே தான?” என்ற அவனின் கேள்விக்கு பார்வையை அவனுடன் கலக்க விட்டவள், “எனக்கு தெரில… நீங்கதான் ஓகே பண்ணனும்.” 

என் மனம் மாற நீயும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் அவள் சொல்ல அவனுக்கு என்ன புரிந்ததோ… 

“ஓகே பண்ணனுமா?” என்று விஷமமாய் கேட்டவன், போனை தன் பேண்ட்டில் திணித்துவிட்டு சட்டென இரு கரத்தால் அவளை எந்திக்கொண்டான். கீர்த்தி அதிர்வில் மூச்சு விடவும் மறந்து அவனையே உற்றுப் பார்க்க, 

“கொஞ்சம் வெயிட்டா தான் இருக்க… பரவாயில்லை… என்ற பொண்டாட்டிதான பழகிக்கிறேன்.” என்று அவளை ஒரு உலுக்கு உலுக்கி அவன் நன்றாக தாங்கிக்கொள்ள, பயத்தில் அவன் கழுத்தை சுற்றி கரம் கோர்த்து,

“பயமா இருக்கு… கீழ விடுங்க…” என்று இறங்கப் பார்த்தாள் கீர்த்தி. 

“உன்றகிட்ட பேசியெல்லாம் ஓகே பண்ண முடியாது. உன்ற அழுத்தத்துக்கு இதுதான் சரி…” என்றவன் கீழே சென்றுதான் அவளை இறக்கி விட்டான்.

அதோடு சும்மா இல்லாமல் வீட்டினுள் நுழைந்ததும் இடுப்பை பிடித்துக்கொண்டு, “ரொம்ப கணக்குற கண்ணு… முதுகு புடிச்சிகிச்சு அமுக்கி வுடுடி…” என்று முகத்தை சுருக்கி முணுக,

“நான் கணக்குறேனா? உனக்கெல்லாம் எவளும் செட் ஆக மாட்டாடா…” கடுப்பில் அவன் புஜத்திலேயே குத்தினாள் கீர்த்தி.

“அதுவா முக்கியம்… வலிக்குது.” என்று சிணுங்கியபடி அறைக்குச் சென்று மெத்தையில் குப்புற விழ, பல்லை கடித்துக்கொண்டு பின்னோடே வந்தவள் அவன் இடையை கிள்ளி வைத்தாள்.

“அடியே… ஏதாவது பண்ணுடி… நீ ஓகே பண்ண சொன்னேன்னுதான் ரிஸ்க் எடுத்து உன்னை தூக்கி இருக்கேன். இதுகூட பண்ண மாட்டேங்குற.”

“இப்படியெல்லாம் சொன்னா எந்த பொண்ணும் ஓகே சொல்ல மாட்டா…”

“எந்த அம்மணியும் சொல்ல வேணாம். நீ சொல்லு அது போதும்.” என்றவன் திரும்பி அவளைப் பார்க்க, கீர்த்தியின் வாய் மூடிக்கொண்டது.

அவளின் அமைதியில் அவனுக்கு எரிச்சல் எட்டிப்பார்த்தது, “என்னாச்சு இப்போ? பூ மாதிரி இருக்கேனு சொல்லனுமா? அப்படி சொன்னாதான் ஓகே சொல்லுவியா எனக்கு?” என்று கேட்டிட, அவளின் பதில் மெளனமே.

“இங்குட்டு பாரு கண்ணு… என்ற மனசுல என்ன தோணுதோ அதை சொல்லித்தான் பழக்கம். சும்மா பேச்சுக்கு இல்லாததை சொல்லி அதுல சந்தோசப்படுறது எல்லாம் என்ற வழக்கம் இல்லை அது சுத்தமா வரவும் வராது. இதுதான் நானு… உனக்கு என்னை இப்படியே புடிச்சா ஏத்துக்கோ…” என்று தீர்க்கமாய் பார்க்க, அவனின் பார்வை அவளை உசுப்பியது.

“இல்லைனா?”

“இல்லைனாலும் ஏத்துக்கோ.” என்று கண்சிமிட்டினான் அஞ்சன்.

அவனின் இமை சிமிட்டலில் புருவம் உயர்த்தியவள், “முடியலைனா?”

“ஏத்துக்க வைக்க என்ன பண்ணனும்னு சொல்லு பண்றேன். ஆனா என்ற வாழ்க்கைக்கு நீ வேணும்.” என்றான் அழுத்தமாய்.

தன்னை வேண்டாம் என்பவனை நினைக்கும் மனது வேண்டும் என்று சொல்பவனிடம் உரிமை எடுக்க மறுக்கிறதே என்று நொந்துகொண்ட கீர்த்திக்கு எந்த மாற்றத்திற்கும் அவகாசம் நிச்சயம் தேவைப்படும் என்ற புரிதல் இல்லாமல் போக, அவள் அவசரகதியில் செய்த விஷயத்தால் வேண்டும் என்று நிற்பவனையே வேண்டாம் என்று சொல்ல வைத்து பிரிவுக்கு வழி வகுத்தாள் தன் மடத்தனத்தால்.

Advertisement