Advertisement

*16*

பாத்திரங்களின் சத்தம் அதிகமாய் கேட்க, ஹாலில் சாமான்களை பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தவன் சமயலறை சென்றுப் பார்க்க பரபரவென இரண்டு அடுப்பிலும் மாற்றி மாற்றி எதையோ கிண்டிவிட்டபடி அருகிலேயே நின்று வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

“நிதானமா செய் கீர்த்தி. ஒன்னும் அவசரமில்லை.” 

“எனக்கு அவசரம். எட்டு மணிக்கு கிளம்புனாத்தான் கார்மெண்ட்ஸ் போக சரியா இருக்கும்.” என்று வேலையினூடே அவசரமாய் பதில் சொன்னாள். தலை கோதியவன் அவளை நெருங்கி அடுப்பை அணைக்க,

“ம்ச் தொல்லை பண்ணாம போறீங்களா? காலையிலேயே எரிச்சல் பண்ணாதீங்க.” என்று அவன் முகம் பார்க்காது கத்தியவள் அடுப்பை பற்ற வைக்கப் போக, விரல் கொண்டு அவள் முகத்தை திருப்பி தன்னை பார்க்க வைத்தவன்,

“எழுந்ததுலேந்து இந்த கண்ணு என்னை பாக்கவே இல்லை… வேலை வேலைனு இங்குட்டே குடி இருக்கு.” என்று அவள் விழி நோக்கி சொல்ல, அவன் விரல் தட்டிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டவள், 

“எட்டு மணிக்கு கிளம்புணும்னு சொல்லிட்டேன். திரும்பத் திரும்ப வந்து நச்சரிச்சா சமைக்காம நான் பாட்டுக்கு பட்டினியா என் வேலையை பார்க்க போயிட்டே இருப்பேன்.” என்றவள் வெளியேறப் போக,

“சரி சரி பழையபடி எரிஞ்சி வுழாத நான் போறேன்.” என்றவன் நகர்ந்து சமையலறை வாயில் சுவரில் சாய்ந்தபடி நின்று கொள்ள, போகவில்லையா என்பது போல் பார்த்தாள் கீர்த்தி.

“உன்ற கண்ணுக்கு காய்கறியும் சோறும் தான் தெரியுது ஆனா என்ற கண்ணுக்கு நீ மட்டுந்தான் தெரியுற…” என்று ரசனையாய் சொன்னவன் கண்ணில் வழிந்த ரசனையில் தடுமாறிய கீர்த்தி அமைதியாய் திரும்பி அவனுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டாள்.

கரண்டி பிடித்து கைகளுக்கு வேலைக் கொடுத்து இயல்பாய் இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் முதுகை துளைக்கும் அவனது பார்வை அவளை இம்சித்தது. தடுமாற வைத்தது. எதனால் இப்படி என்று யோசிக்கவும் வைத்தது. பிடித்தம் என்ற எல்லைக்குள் இன்னும் நுழையவில்லை என்றாலும் ஏதோ ஒரு உணர்வை அவன் அருகாமை உணர்த்தியது. உடன் வேறு யாரும் இல்லாததும் ஒருவரை ஒருவர் உணரச் செய்தது. அவன் மட்டும் இவளை அனைத்திற்கும் நாட, இவள் இன்னும் தவிக்கும் நிலை.

இதோ இன்று ஒருவார திருமண விடுப்புகள் முடிந்து வேலைக்குச் செல்ல வேண்டும். அதுவும் காலை உணவு செய்து சாப்பிட்டுவிட்டு மதிய உணவு கட்டிக்கொண்டு செல்ல வேண்டும். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது அவளுக்கு பழக்கம் இல்லாத ஒன்று. அதுவே ஒரு பதட்டத்தை கொண்டு வர அதை சரியாய் புரிந்து கொண்ட அஞ்சன் மீண்டும் அவளை நெருங்கி அடுப்பை அணைத்தான்.

“என்ன அடுப்பை அணைச்சி அணைச்சி விளையாடிட்டு இருக்கீங்க?” எரிச்சல் மிகுதியில் அவள் குரல் உயர்த்த,

“இம்புட்டு கஷ்டப்பட்டு அல்லாடாத. பாத்துக்கலாம்.” என்று மென்மையாய் சொன்னான்.

“தனியா கூட்டிட்டு வந்துட்டு தனியா அல்லாடாதன்னு சொன்ன ஆச்சா? எல்லாம் நாந்தான ஒத்தையா பாக்கணும். இன்னுமே நான் எதையும் அடுக்கி முடிக்கலை அதுக்குள்ள இது வேற…” என்று கீர்த்தி கத்தவே செய்தாள்.

அவள் மூக்கை பிடித்து ஆட்டி விடுவித்தவன், “எப்போதும் இந்த மூக்குக்கு மேல கோவம் இருந்துட்டே இருக்கு.”

“நான் வேலைக்கு கூட்டிட்டு போய் வுட்டு கூட்டியாறேன். அரை மணி நேரம் லேட்டா… ஒரு எட்டரை எட்டேமுக்கால் போல கிளம்புனா சரியா இருக்கும்.” என்றவன் கனிவாய் கண்சிமிட்ட, கீர்த்திக்கு அத்தனை நேரம் இருந்த கவலை சற்று குறைந்து உடல் தளர்ந்தது. ஆனால் சில நொடிகளே… 

அவனுடன் ஒன்றாய் வண்டியில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் இறுக்கத்தை கொணர, அவள் முகத்தில் வந்து சென்ற மாற்றங்களை கவனித்திருந்த அஞ்சன், “உனக்கு அலைச்சல் வேணாம்னு தான் கார்மென்ட்ஸ் பக்கம் வூடு பாத்தேன். நடந்து போனா கூட பத்து நிமிஷத்துல போயிடலாம்.” என்றிட அதன் பின்தான் கார்மெண்ட்ஸ் அருகிலேயே வீடு இருப்பது உரைத்தது அவளுக்கு.

தனக்காய் யோசித்து செய்திருக்கிறான் என்ற எண்ணமே அவளின் இறுக்கத்தை தளர்த்து இளகியது மனம். இவனும் எனக்காக என் சவுகரியத்தை பார்த்துப் பார்த்து அனைத்தும் செய்கிறான். பதிலுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்ற கேள்வியும் எழுந்தது. பதிலாய் உன் அன்பு, அரவணைப்பு, காதல் வேண்டும் என்று அவன் பலமுறை வேண்டியதை மறந்திருந்தது போல மங்கையின் மனம்.

“நான் வண்டியில கூட்டி போய் விடவா? இல்லை நடந்துதான் போகணுமா?” அவள் யோசனையை கலைக்கும் வண்ணம் அஞ்சன் ஏமாற்றத்தை மறைத்து கேட்டிட, 

“நீங்களே கொண்டு வந்து விடுங்க.” என்றுவிட்டாள் கீர்த்தி. வீட்டில் அரை மணி நேரம் கூடுதலாய் கிடைக்கிறது என்ற ஆனந்தம் அவளுக்கு.

அவள் பதிலில் அவன் மனம் குத்தாட்டம் போட்டதை சொல்லவா வேண்டும். அதன் வெளிப்பாடு அவனின் அடுத்தடுத்த செயலில் தெரிந்தது.

“என்ன நறுக்கனும்னு சொல்லு நான் நறுக்கித் தரேன். நீ அடுப்பை பாத்துக்கோ.” என்று அவள் கையிலிருந்த கத்தியை வாங்கிக் கொண்டான்.

அலட்டாது கீர்த்தியும் அவனிடம் கத்தியை கொடுத்துவிட்டு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் கவனம் செலுத்த, பாதி வெங்காயம் அவள் காலடியில் வந்து விழுந்தது. இயல்பாய் குனிந்து அதை எடுத்த கீர்த்தி தண்ணீரில் கழுவி அவனிடம் கொடுக்க அடுத்தடுத்து மீண்டும் அவள் பாதத்தில் விழுந்தது பல துண்டுகள்.

“ம்ச் எல்லாத்தையும் கீழ போட்டு… என்ன பண்றீங்க?” என்று முறைத்தபடி இடுப்பில் கைவைத்து கேட்க, அசட்டையாய் சிரித்தவன், “அதுவா விழுது கண்ணு… நான் நறுக்கத்தான் செஞ்சேன்.” என்று அப்பாவியாய் சொன்னவனை நம்பாமல் பார்த்தாள் கீர்த்தி.

“அதெப்படி அதுவா விழும்?” 

“இப்படித்தான்…” என்று வெங்காயத்தை கையில் அழுத்திப் பிடிக்காது கத்தியை படக்கென்று அதில் இறக்க தெறித்து கீழ விழுந்தது துண்டுகள். 

“உங்ககிட்ட போய் கொடுத்தேன் பாருங்க என்னை சொல்லணும்…” என்று தலையில் அடித்துக்கொண்ட கீர்த்தி அவனிடமிருந்து கத்தியை பிடுங்கி அதை ஆட்டியபடி, “சோறும் உயிரும் முக்கியம்னா ஒழுங்கா வெளில போங்க…” என்று விழி உருட்டி மிரட்ட, அஞ்சனின் புருவம் ஏறி இறங்கி,

“இதுவும் நல்லாத்தான் இருக்கு.” என்றிட,

“எது?” என்று கேட்டபடி வேகமாய் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கினாள்.

“இப்புடி நீ என்றகூட உரிமையா கோவிச்சு சண்டை கட்டுறது.” என்று தனக்குத்தானே வேட்டு வைத்துக்கொண்டான் அஞ்சன்.

அதற்குள் அத்தனை இயல்பாய் அவனிடம் பழகுகிறோமா? என்று தோன்றிய நொடி சீலிட்டது போல் மூடிக்கொண்டது அவள் அதரங்கள். மருந்துக்கும் வார்த்தைகள் வெளி வரவில்லை. சமைத்து முடித்து காலை உணவை தட்டில் பரிமாறி அவன் முன் நீட்ட, அவள் முகம் பார்த்தவன் எதுவும் சொல்லாது வாங்கிக் கொண்டான்.

மெளனமாய் இருவரும் உண்டு முடிக்க, கீர்த்தி அனைத்தையும் ஒழித்து சிங்க்கில் போட்டுவிட்டு உடை மாற்றச் சென்றாள். அவள் செல்வதையே பார்த்திருந்தவன் அங்கு ஹாலின் ஓரத்தில் இருந்த தன் பையிலிருந்து சட்டை பேண்ட் எடுத்து அங்கேயே மாற்றினான். 

ஆம் அவன் மட்டுமல்ல அவன் உடைகள் கூட இன்னும் அவள் வாசத்தை நெருங்கவில்லை. புது வீட்டிற்கு வந்து ஒரு நாள் மட்டுமே ஆகியிருந்தது ஒரு காரணமென்றால் எந்த நிமிடமும் நெருங்கி பாய்ந்துவிடுவான் என்ற கலவரத்தை தாங்கி நடமாடியவளை மேலும் சீண்ட விரும்பாது நல்ல பிள்ளையாய் உடமைகளுடன் அந்த ஒற்றை படுக்கையறை வீட்டின் ஹாலிலேயே இருந்து கொண்டான். படுக்கை கூட தனியாக ஹாலில் தான். அதில் கீர்த்திக்கு நிம்மதியான உறக்கம். தொந்தரவு கொடுக்காமல் அவகாசம் கொடுக்கிறான் என்ற மகிழ்வு தான் காலை அவனிடம் சகஜமாய் இருக்க உதவியது. இது புரியாத அஞ்சனிடம் அவன் செயல்களுக்கான காரணங்கள் வேறு என்று அப்பாவைக்கு புரியவில்லை பாவம். 

“கீர்த்தி போலாமா?” என்று இவன் குரல் கொடுக்க, சுடிதார் அணிந்து பேக்கையும் எடுத்து வந்தவள் இவனை கண்டுகொள்ளாமல் நேரே சமயலறை செல்ல பின்னோடு சென்றான் அவனும். 

உணவு கட்டி வைத்திருந்த டப்பாவை எடுத்து தன் பையில் வைத்தவளைக் கண்டவன், “என்ற டப்பா?” என்று அவளிடம் சென்று நின்றான்.

நெற்றி சுருக்கியவள், “வேலைக்கு போறீங்களா?”

“எனக்கும் ஒரு வார லீவு மூஞ்சிடுச்சு.” 

“ஓ…”

“என்ன ஓஓ?” தானும் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை மறந்துவிட்டாளே என்ற வருத்தத்தில் உர்ரென்று முகத்தை தூக்கினான் அவன்.

“நீங்க ஆறுனா சாப்பிட மாட்டீங்கல்ல அதான்… மதியத்துக்கு எனக்கு மட்டும்தான் சமைச்சேன்.” தயங்கித் தயங்கி வந்தது பதில். 

தனக்கும் சேர்த்து சமைக்ககூட இல்லையா என்ற அதிருப்தி எட்டிப்பார்க்க ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்று விட்டான் அஞ்சன்.

‘உனக்காக அவர் எவ்ளோ செய்யுறார்… நீ அவரை பத்தி யோசிக்க கூட மாட்டேங்குற…’ என்று நொந்துகொண்டவள் வீட்டை பூட்டி வந்து சாவியை அவனிடம் நீட்டினாள்.

“என்றகிட்ட இன்னொன்று சாவி இருக்கு. நீ வச்சிக்கோ.” என்று அவள் புறம் பார்வை திருப்பாது சொன்னவன் வண்டியை உசுப்ப, ஒரு நொடி அவன் முகத்தை பார்த்தவள் எதுவும் சொல்லாது பின்னால் ஏறிக்கொண்டாள்.

பைக்கில் முதல் பயணம். அது எப்படி எப்படியோ இருக்க வேண்டும் என்று கனவு கண்டிருந்தவன் அவளின் செயலில் உற்சாகம் வடிந்து கடமைக்கு வண்டியை செலுத்த கீர்த்தியை கேட்கவும் வேண்டுமா? அந்த அமைதியை ரசித்தபடி சில நொடிகளும் அதே சமயம் அவன் மதிய உணவுக்கு என்ன செய்வான் என்ற கவலையின்றி தன்னை மட்டும் முதன்மையாய் நினைத்து சமைத்ததை எண்ணி சில நொடிகளும் வருந்தினாள். பின் வந்த கடைசி சில நொடிகள் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் கழிந்தது.

அவன் சொன்னது போல் பத்து நிமிடத்தில் அவளை கார்மெண்ட்ஸ் வாசலில் இறக்கிவிட, வண்டி முன் வந்து அவன் முகம் பார்த்தவள், “மதியம் வெளில சாப்பிட்டுக்கோங்க. நாளைக்கு சேர்த்து செஞ்சிடுறேன்.”

“இன்னைக்கு வுட்டுட்டீல்ல…” குழந்தையென முகம் திருப்பி குற்றம் படித்தான் கணவன்.

அவனின் முகத்திருப்பலில் எரிச்சல் வருவது போல் இருந்தது கீர்த்திக்கு. இது என்ன சிறுபிள்ளைத்தனம் என்ற எண்ணம் வார்த்தைகளாய் வெளியே வந்தது.

“ஒரு நாள் தெரியாம பண்ணிட்டேன் அதுக்கு இப்படித்தான் மூஞ்சை தூக்குவீங்களா?” கீர்த்தி தன் நியாயத்தை முன்வைக்க, அவனின் முகம் அவள் புறம் திரும்பியது.

“ஒரு நாள் இல்லை மொதோநாள்…”

“இன்னைக்குத்தான் வேலைக்கு போற மாதிரி இதுதான் முதநாளுன்னு சொல்லிக்கிட்டு…?” 

“கண்ணாலம் ஆகி மொதோ நாள் வேலைக்குப் போறேன் என்னை பட்டினியா அனுப்புற நீ…” 

சமாதானம் ஆகாமல் இவன் இதை விடப்போவது இல்லை என்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டவள் தன் பையை துழாவி தன்னுடைய டிபன் டப்பியை எடுத்துத்தர, அவன் முகம் சட்டென பிரகாசித்தது.

“வோணாம்… நான் வெளிலயே சாப்பிட்டுக்குறேன். நீ நல்லா சாப்புட்டு வேலை பாரு கீர்த்தி. பொழுதோட கூட்டிட்டு போக வரேன்…” என்று பைக்கை விரட்டிக் கிளம்ப, பேவென்று விழித்து நின்றாள் கீர்த்தி.

‘என்ன டிசைன்டா நீ? மறந்துட்டேனு சொன்னா பட்டினி போடுறேனு கோவிச்சுக்குற சரினு என்னோடதை குடுத்தா வாங்காம பல்லை காட்டிட்டு போற…’ அவன் செயலுக்கான காரணம் விளங்காது அவள் நிற்க, அவன் தேடியது உணவை அல்ல அவளின் அன்பை அக்கறையை என்று எங்கனம் அவள் விளங்கிக்கொள்ள…

ஆனாலும் மாலை அவனுக்கு காத்திராமல் நேரமே நடந்து வீடு வந்து சேர்ந்தவள், மனம் கேளாது அவனுக்கு என்ன பிடிக்கும் என்று குருங்கையிடம் கேட்டு அதை செய்து வைத்து காத்திருக்க வாயிற்கதவு மணி அடித்தது.

ஆவல் ஆசை இல்லையென்றாலும் அவன்தான் வந்திருப்பான் என்று கணித்தவளுக்கு மனதில் ஏதோ ஒரு புது உணர்வு பூக்க, அதை அனுபவித்து அதற்கு பெயர் கண்டுபிடிக்க விழைந்தபடி கதவை திறக்க, வாசலில் கணவனுடன் நின்ற அருணைக் கண்டவுடன் அனைத்தும் வடிந்தவளாய் இறுகிப் போனாள்.

Advertisement