Advertisement

*15*

அந்த வைகறை பொழுதின் மென்குளிரில் கையை பிசைந்து திணறியபடி நின்ற மகளை மனதில் அர்ச்சித்த வண்ணம் டம்ளரை வரிசையாய் தட்டில் அடுக்கி அனைத்திலும் பால் ஊற்றியவர் மகளுக்கு சமிக்ஞை செய்ய, நல்ல பிள்ளை போல் அதை எடுத்துக்கொண்டு வெளியே இருந்த அனைவருக்கும் கொடுத்தாள் கீர்த்தனா.

பெரியவர்கள் அமைதியாய் இருந்தாலும் வாண்டுகளின் சத்தம் அந்த புது வீட்டை உயிர்ப்பிக்க, குருங்கையின் கவனம் முழுக்க கீர்த்தியிடம் தான்.

“வூட்டுக்கு தேவையானது எதுனாலும் தயங்காம கேளு கீர்த்தி.” என்று அவளிடம் பேச்சுக் கொடுக்கவும் செய்தாள் குருங்கை. அதற்கு மண்டையை மட்டுமே ஆட்டிய கீர்த்தியை ஆயாசத்துடன் பார்த்து வைத்தாள்.

‘கேட்டதும் உடனே எடுத்து வந்து கொடுக்குற தொலைவுலையா இருக்காங்க? ஒரேடியா அம்மா வூடு பக்கம் வந்தாச்சு. இனி கொழுந்தனார் நம்ம குடும்பத்துக்கு இல்லை…’ என்ற மற்ற நங்கையின் முணுமுணுப்பும் கீர்த்தி காதில் விழவே செய்தது.

‘நான் என்னமோ பிரிச்சு கூட்டிட்டு வந்த மாதிரி பேசுறாங்க…’ என்ற கீர்த்தியின் எண்ணத்திற்கு தோதாய், ‘இந்த பேச்செல்லாம் உனக்கு தேவையா?’ என்று கமலமும் மகளை முறைத்தார்.

“நாங்க கிளம்புறோம்… எதுனாலும் கூப்புடுங்க.” என்று பழனிவேல் எழ, பதறிவிட்டார் கமலம்.

“என்ன அதுக்குள்ள கிளம்புறீங்க அண்ணா? இப்போ தான பால் காய்ச்சினோம். ஒரு வாரம் இருந்துட்டு போவீங்கன்னு நினைச்சேன்…”

கமலத்தின் கேள்வியில் பழனியின் பார்வை தன்னால் இளைய மகன் புறம் சென்று மீண்டது, “ஊருபட்ட சோலி இருக்கு… பசங்களும் பள்ளிக்கூடம் போகோணும். இப்போ கிளம்புனாதான் சரியா இருக்கும்… இங்கிட்டு தானே பக்கத்துல இருக்கோம்… இன்னொரு நாள் பாத்துக்கலாம்.” என்று அனைவரையும் பார்க்க, அனைவரும் மறுபேச்சின்றி எழுந்து கொண்டனர்.

“என்ன பாத்துட்டு நிக்குற? இருக்க சொல்லுடி…” என்று கமலம் மகளிடம் கிசுகிசுக்க, அதுவும் பழனி கண்களில் இருந்து தப்பவில்லை.

கீர்த்தி தயக்கத்துடன் அஞ்சன் புறம் பார்வை செலுத்த அவனோ தன் அன்னையிடம் பார்வை செலுத்தி, “என்ற மேல இருக்குற கோவத்துல இப்படி காலுல வெண்ணீ கொட்டுன மாதிரி ஓடாதீங்க. இருந்துட்டு போங்க.”

“கோவமெல்லாம் ஒன்னுமில்லை அஞ்சு… கண்ணால அலம்பல்ல வூட்டுல எல்லாம் இன்னுமும் போட்டது போட்டபடி கிடக்கு… சுத்தம் பண்ண ஆள் வர சொல்லியிருக்கு. பசங்களும் லீவு போட முடியாது… பொறவு லீவு இருக்கும் போது வரோம். நீயும் கீர்த்தியை கூட்டிட்டு வூட்டுக்கு வா…” என்று பெரிய அண்ணன் சுவாமிநாதன் தான் சமாதானம் பேசினான்.

அனைவரும் விடைபெற்றுச் சென்றதும் நானும் கிளம்புகிறேன் என்று வந்து நின்ற கமலத்தை திகைப்புடன் பார்த்தாள் கீர்த்தி. 

“வந்ததுலேந்து முறைச்சிட்டு சுத்துனது பத்தாதுன்னு இப்படி உடனே வேற கிளம்புற?” பதறி அன்னையை நெருங்கி கரம் பற்றிக்கொண்டாள் கீர்த்தி.

“கல்யாண வேலையால நிறைய பிளவுஸ் முடிக்காம பெண்டிங்ல இருக்கு. சீக்கிரம் முடிச்சு குடுக்கணும் கீர்த்தி.” என்ற காரணத்தை ஏற்க மறுத்தாள் மகள்.

“ஒரு வாரம் தங்கிட்டு போலாமே அத்தை.” என்றான் அஞ்சனும்.

“இல்லை மாப்பிள்ளை. கிளம்பனும்.” என்று மொட்டையாய் நிறுத்திக்கொண்டார் கமலம். 

அவரின் கத்தரித்த பேச்சில், “சரி நான் ஆட்டோ புடிச்சிட்டு வரேன்.” என்று நாசூக்காய் நகர்ந்துவிட்டான் அஞ்சன். 

அதற்காகவே காத்திருந்தது போல் மகளை பிடித்துக்கொண்டார் கமலம்.

“என்ன நினைச்சுகிட்டு இருக்கேனு தெரியல கீர்த்தி. கல்யாணம் ஆகி நாலே நாள்ல இப்படி தனியா வந்தா மாப்பிள்ளை வீட்டுல என்ன நினைப்பாங்கனு கொஞ்சமாச்சும் யோசிச்சியா? அதுவும் இப்படி அவங்க வீட்டை விட்டு தள்ளி வந்து எனக்கு பக்கத்துல இருக்கணும்னு என்ன இருக்கு?”

“என்னமோ நான் இங்க வீடு பாக்க சொன்ன மாதிரி நீயும் பேசுற?” அன்னையிடம் ஏறினாள் மகள்.

“நான் மட்டுமா பேசுறேன் எல்லாரும் அப்படிதான் நினைக்குறாங்க. நீதான் இதெல்லாம் முன்னமே யோசிச்சு மாப்பிள்ளைக்கிட்ட சொல்லி இருக்கணும். இதுல அவங்க கிளப்புன அப்புறமும் நான் இருந்தா சரியா இருக்காது.”

“ம்ச்… சும்மா என்னையே சொல்லாத… இந்த வீடை பாத்து எல்லாம் முடிவு பண்ணிட்டுதான் என்கிட்டயே சொன்னாரு. இப்போ நீ பக்கத்துல இருந்தாத்தான் என்ன?”

“எல்லாம் சரியா இருந்து எனக்கு பக்கத்துல இருந்தா ஒண்ணுமில்லை. ஆனா இன்னும் அவங்க குடும்பத்தோட ஒட்டாம யாருக்கு வந்த விருந்தோன்னு நிக்குற. வீட்டுக்கு வந்தவங்களை கவனிக்க நான் சொல்லிக்கொடுக்கணுமா? உனக்கா தெரிய வேணாம்… பால் காய்ச்சிட்டு அப்படியே நிக்குற…”

“ம்ச்… என்னைக்கு நம்ம வீட்டுக்கு இத்தனை பேர் வந்திருக்காங்க நான் எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்க? திடீர்னு இப்படி ஒரு கும்பல்ல கொண்டு போயி தள்ளிட்டு எல்லாம் ஏத்துக்கோ பழகிக்கோன்னு சொன்னா ஆச்சா?”

“நீ பேசறதை பாத்தா எனக்கு பயமா இருக்கு கீர்த்தி… சுயநலமா உன்னை மட்டும் பார்த்து மாப்பிள்ளை வாழ்க்கையை வீணாக்கிட்டோம்னு தோணுது.” என்றிட,

“ம்ம்மா…” அதிர்ந்துவிட்டாள் கீர்த்தி. என்னால் அவன் வாழ்க்கை கெடுகிறதா? அதை என்னை பெற்றவரே சொல்வதா? ஏற்க முடியவில்லை அவளால்.

“கத்தாத… மாப்பிள்ளை என்ன பண்ணாருன்னு அவரை தண்டிச்சிட்டு இருக்க? உன் மேல அக்கறையா இருக்கிறதுதான் அவர் பண்ற தப்பு போல…”

“ம்மா…” குற்ற எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்க சொற்கள் மரணித்தது கீர்த்தியிடம்.

“தப்பு பண்ண அந்த அருணை நினைச்சுகிட்டு தப்பே பண்ணாம உன் மேல பாசமா இருக்குறவரைத் தான் நீ விரட்டிட்டு இருக்க. இப்படி விரட்டி அவரை தள்ளி நிறுத்தி என்ன சாதிக்க போற? திரும்ப அருணோட வாழப்போறியா? அந்த எண்ணத்துல தான் இதெல்லாம் செய்றீயா?”

“ம்மா…” இந்தமுறை அவள் கத்திய கத்தலில் பதறியது அஞ்சன்.

“என்னாச்சு கண்ணு? ஏன் கத்துற?” என்றபடி உள்ளே வேகமாய் நுழைந்தவனைக் கண்டதும் கீர்த்தி சட்டென வாய் மூடிக்கொண்டாள். இதயம் படபடவென அடிக்க வியர்வைத் துளிகள் நெற்றியில் பூத்தது.

“ஒண்ணுமில்லை மாப்பிள்ளை ஏதோ பூச்சு மேல விழவும் பயந்து கத்திட்டா…” என்றவரை நம்பாமல் பார்த்தான் அஞ்சன். தேவையான பொருட்கள் கூட இன்னும் வீட்டை நிறைக்கவில்லை. வெகு சில சமையல் சாமான்கள் மட்டுமே இடத்தை அடைக்காமல் ஒரு ஓரத்தில் கிடக்க, வீடும் நேற்று தான் ஆள் வைத்து சுத்தம் செய்திருக்க ஏதோ நெருடலாய் பட்டது அஞ்சனுக்கு.

“ஆட்டோ வந்துடுச்சா மாப்பிள்ளை?” என்று கமலம் பேச்சை திசைதிருப்ப அமைதியாய் தலையசைத்தான் அஞ்சன்.

“வீட்டுக்கு அடிக்கடி போய்ட்டு வாங்க… அப்பா அம்மா தனியா இருப்பாங்க அவங்களை ரொம்ப நாள் தனியா விடாதீங்க…” என்றதோடு மகளிடம் தலையசைத்து விடைபெற, அஞ்சன் வாயிற்படியிலேயே நின்றுகொண்டான். 

ஆட்டோவில் அவர் ஏறும் வரை அவரை தொடர்ந்த கீர்த்தியின் கண்கள் கலங்கிவிடுவேன் என்று நீர் சுரந்து நிற்க, “உனக்காகத்தான் மாப்பிள்ளை இங்க வீடு பார்த்து வந்திருக்காரு. இன்னும் உனக்கு அவரை புரியலைனா என்னோட வளர்ப்புதான் சரியில்லை. நாந்தான் உனக்கு எதையும் சொல்லிக்கொடுத்து வளக்கலைனு அர்த்தம். பாத்துக்கோ.” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல, ஆட்டோ கிளம்பியது.

சில நிமிடங்கள் ஆட்டோ சென்ற திசையை வெறித்து நின்றவள் கண்களை துடைத்துக்கொண்டு உள்ளே வர, வீடே வெறிச்சென்று இருந்தது. அஞ்சனும் விட்டதை வெறித்தபடி வெறும் தரையில் படுத்திருக்க இவள் ஒரு மூலையில் சென்று அமர்ந்துகொண்டாள். வீடு நிர்மலமாய் இருந்தாலும் அங்கிருந்த இருவரின் மனமும் அமைதியின்றி தவித்தது. இருவரின் எண்ணப்போக்கும் வேறு வேறாய் இருக்க மணி காலை பத்தானதும் கீர்த்தியின் வயிறு பசியை நினைவூட்டியது.

நிமிர்ந்து அஞ்சனைப் பார்த்தவள் எதுவும் பேசாமல் சமையலறை சென்று மீதமிருந்த பாலை குடித்து வர, ஹாலில் இருந்த அஞ்சனைக் காணவில்லை. நெஞ்சம் லேசாய் பதறத்தான் செய்தது. அமைதியான வீடும் மனதில் பாரத்தை கூட்ட, தனிமை இம்சிக்க, கைகள் நடுக்கம் கொண்டு பசியில் மயக்கம் கூட வருவேன் என்பது போல் மிதமாய் ஒரு சுற்றல். அப்படியே தரையில் அமர்ந்து தலையை பிடித்துக்கொண்டாள்.

‘என்ன பண்ணிட்டு இருக்கேன் நான்?’ உடல் பலகீனத்திலும் மனம் பலமாய் கேள்வி எழுப்பி அவளை குத்தியது.

கேள்விக்கான பதிலை தேடி சிந்தனை ஓடுவதற்குள் உணவுப் பொட்டலத்தை அவள் முன் நீட்டியிருந்தான் அஞ்சன். தன் முன் பொட்டலம் நீட்டப்படவும் பதில் பேசாது வாங்கிக்கொண்டவள் வேகமாய் அதை பிரித்து உண்ண, இரண்டு இட்லிகள் உள்ளே சென்ற பின்னே அவன் நினைவு வந்து நிமிர்ந்தாள்.

அவன் உண்ணாமல் இவளையே பார்த்து அமர்ந்திருக்க கேள்வியாய் புருவம் சுருக்கியவள் ஏன் என்பது போல் பார்க்க, அவளுக்கு மட்டுமே உணவு வாங்கி வந்திருப்பது உரைத்தது. உடன் அவன் பசி தாங்கமாட்டான் என்ற நிதர்சனமும் நினைவு வர அவள் பொட்டலத்தை அப்படியே அவனிடம் நீட்டினாள். அதில் இருந்த மீதி இரண்டு இட்லிகளை பார்த்தவன் மறுப்பாய் தலையசைக்க, இரண்டொரு நொடி தயங்கியவள் மனதை திடப்படுத்தி இட்லியை பிய்த்து அவன் வாயருகே கொண்டு போக அவன் இதழ்கள் தானாய் பிரிந்து அதை ஏற்றுக்கொண்டது.

“ஏன் உங்களுக்கு சாப்பாடு வாங்கல?” அவனுக்கு ஊட்டிவிட்டபடி அவள் கேட்க,

“தோணல…” என்ற பதிலே ஒட்டுதல் இன்றி வந்தது.

இது என்ன பதில் என்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் கீர்த்தனா. ஆனால் அதைப் பற்றி தோண்டித் துருகாமல் நேற்றைய வாதத்தை மீண்டும் துவங்கினாள்.

“நாம தனியா வந்திருக்க கூடாது. மாமா அத்தையை தனியா விடுறது சரியில்லை.” நேற்று அவனுடன் தனியே இருக்க பயந்து அவள் வாதிட்ட விவாதம் இன்று வேறொரு பரிமாணம் கொண்டிருந்தது. ஆனால் அவன் பதில் அச்சுபிசகாமல் நேற்று சொன்னதே இன்றும் வந்தது.

“அவங்களுக்கு சொன்னதுதான் உனக்கும் சொல்றேன்… அவங்களுக்கு நான் மட்டும் புள்ளை இல்லை இன்னும் நாலு பேர் இருக்கானுங்க… அவனுங்களுக்கும் பொறுப்பு இருக்கு. 

ஆனா இந்த வூடு… வாடகை வூடுனாலும் இது முழுக்க முழுக்க என்ற வூடு. என்ற உரிமை. உரிமைப்பட்டவனா என்ற விருப்பப்படி என்ற பொண்டாட்டியோட வாழத்தான் இந்த வூட்டுக்கு வந்திருக்கோம். நீ என்ன சொன்னாலும் இதுல மாறுதல் இல்லை.”

தானே முதன்மையாய் இருக்க வேண்டும் என்ற ஆவலில் பேசுபவனிடம் வேறு என்ன சொல்ல என்று அவள் வாய் மூடிக்கொள்ள, அவன் துவங்கினான்.

“உனக்கு வேறேதோ பிரச்சனைல? அதான் என்ற கூட சரியா பேச மாட்டேங்குற… அப்பா சொன்னாங்க உன்ற அப்பானால நீங்க தனியா இருக்குறது பத்தி எல்லாம்…” என்று அவன் நிறுத்த, இட்லியை பிய்த்து அவனுக்கு ஊட்ட வந்த கை அப்படியே அந்தரத்தில் நின்றது.

அப்பா. அவர் புகைப்படம் கூட கண்ணில் பட்டதாய் நினைவில்லை. அன்னையும் நேர்மறையாய் அவரைப்பற்றி பேசியதில்லை. இன்றியமையாத அந்த உறவு அவள் வாழ்வில் இல்லை என்ற நிலையை எண்ணி அவள் வருந்தியது சில சமயங்களில் மட்டுமே. மற்றபடி அவர் மீது அளவில்லா கோபமும் வன்மமும் அவள் மனதின் ஒரு ஓரத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை அதை யாரும் தட்டி எழுப்பியதில்லை. நீயும் எழுப்பி விடாதே என்ற தொனியில் அவள் பார்த்து வைக்க அது அவனுக்கு புரியவில்லை.

“எதுக்கு என்னை வுட்டு ஒதுங்கி ஒதுங்கி போறேன்னு நானும் ஓசனை பண்ணி பாக்குறேன் எனக்கு ஒன்னும் விளங்கள… உன்ற அப்பா மாதிரி நானும் இருந்துடுவேன்னு என்னை புடிக்கலையா கண்ணு? என்ற மேல நம்பிக்கை வரலையா?” என்று கேட்டுவைக்க, குற்றம் சுமந்திருக்கும் அவள் மனம் குறுகுறுத்தது.

பெற்றவன் போல்தான் மற்ற ஆண்மகன்கள் என்ற நிலைப்பாடு இருந்திருந்தால் அவளுக்கு அருணையும் அல்லவா பிடிக்காமல் இருந்திருக்க வேண்டும்? ஆக நம்பிக்கை எல்லாம் இருக்கிறது என்பது அவள் அளவில் தெளிவாக இருக்க அதை அவனுக்கு கடத்தவும் செய்தாள்.

“அப்படிலாம் ஒண்ணுமில்லை.”

“பொறவு வேறென்ன?” மின்னலென வந்தது அவன் கேள்வி.

அருணை பற்றி சொல்லி விடலாமா? இருவரும் நண்பர்கள் தானே…  தெரியட்டும் இவன் நண்பனின் லட்சணம்… என்ற எண்ணத்தில் அவள் வாய் திறக்க, அவன் அலைபேசி ஒலித்து அவர்களை கலைத்தது.

அந்த வீட்டிலிருந்து புது கட்டில், பீரோ ஏனைய சீர் சாமான்கள் இங்கு வந்து இறங்கக் காத்திருக்க விலாசம் கேட்டு அழைப்பு. அவர்களுக்கு விலாசம் சொல்லியபடி அவன் எழுந்து சென்றுவிட, கீர்த்தியின் மனம் முடிவு எடுக்க முடியாமல் அலைபாய்ந்தது.

‘அருணை பத்தி சொன்னா என்ன மாறிடப் போகுது? மிஞ்சி மிஞ்சி போனா அருணும் இவரும் சண்டை போட்டுப்பாங்க. சேர்த்தா வைக்க போறாங்க… ச்சீசீ… அம்மா சொன்ன மாதிரி அவனோட திரும்ப வாழவா போறேன்? முடியவே முடியாது. என்னை ஏமாத்துனவன் முன்னாடி வாழ்ந்து காட்டணும்னு சவால் எல்லாம் விட்டேனே… நடக்குமா? முடியுமா? 

அப்படி நடந்தா உண்மையை சொல்லி என்ன பிரயோஜனம்? மெல்லவும் முடியாம துப்பவும் முடியாம என்னை மாதிரி இவரும் கஷ்டப்படுவாரு… ஏற்கனவே பென்சில், ரப்பர், டிரெஸ் விட்டுக்கொடுத்த கதையெல்லாம் இப்போ வரை நியாபகம் வச்சி புலம்பிட்டு இருக்காரு. இதை சொல்லி நாமளும் அவரை வருத்த வேணாம்.’

முதல்முறையாய் அவனைப் பற்றி சிந்தித்து அவனை முன்னிறுத்தி அவள் முடிவு மாறியிருக்க காரிகையின் மனதில் சின்னதாய் ஒரு மாற்றம். தன் ஏமாற்றத்தை பிடித்து தொங்கக்கூடாது என்ற தெளிவு அன்னை பேசிய பேச்சின் பலனால் விளைய, உள்ளே நுழைந்த அஞ்சனைக் கண்டவள் வேகமாய் எழுந்து,

“உங்களுக்கு சூடா ஏதாவது செஞ்சி எடுத்துட்டு வரேன்.” என்று சமையலறை புக, பின்னோடு வந்தவன்,

“பரவாயில்லை எனக்கு சூடா இருந்தாதான் புடிக்கும்னு தெரிஞ்சி வச்சிருக்க.” என்றபடி அவள் மேடையில் மூடி வைத்த இட்லியை பிரித்து அவளுக்கு ஊட்ட, கைகழுவிட்டு வந்தவள் முதலில் மறுத்தாள். கையை கீழிறக்காது பிடிவாதமாய் அவன் நிற்கவும் வாய் திறந்து வாங்கியபடி என்ன சமையல் செய்வது என்று சாமான்களை துழாவினாள்.

“உப்புமா செய்யவா? சீக்கிரமே செஞ்சிடலாம்.” என்று ரவையை எடுக்க, அதை பிடுங்கி வைத்தவன்,

“எனக்காக முதோதரம் செய்யுற. எனக்கு புடிச்ச அரிசி பருப்பு சாதம் செஞ்சி கொடு.” என்று ஆசையாய் அவன் கேட்க, சில நொடிகள் தடுமாறியவள்,

“நேரமாகுமே… சாமான் எல்லாம் இன்னும் சரியா அடுக்கல. எது இருக்கு இல்லைனு தெரியல. தேடித்தேடி தான் செய்யணும்.” என்று இழுக்க,

அவனுக்காய் யோசித்து அவள் செய்வதிலேயே மகிழ்ந்தவன், “உனக்காக எதுவும் செய்வேன் நீ செஞ்சு கொடுக்குறதுக்கு காத்திருக்க மாட்டேனா… எது வேணும்னு பாத்து சொல்லு வாங்கிட்டு வரேன்.” என்று களிப்பில் பேசியவன் வேகமாய் அவள் கன்னத்தில் இதழ் ஒற்றி எடுத்து,

“எனக்காக யோசிக்குற இந்த கீர்த்தியைத்தான் எனக்கு புடிச்சிருக்கு. என்னோட கீர்த்தி…” என்று அகம் மகிழ்ந்து அகமுடையாளை எண்ணி எண்ணி பூரித்து நின்றான் கணவன்.

Advertisement