Advertisement

*10*

இமைகளுக்கிடையில் கண்ணீரோடு தவிப்பையும் தேக்கி வேகமாய் உள்ளே நுழைந்து கதவை சாற்றியவளைக் கண்டதும் என்னவோ ஏதோவென்று பயந்து அவளை நெருங்கிய அஞ்சன், “என்னாச்சு கண்ணு? ஆராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்டிட,

வலக்கையால் தோளில் இருந்த புடவையை அழுந்தப் பற்றியபடி மெத்தை அருகே இருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்தாள் கீர்த்தி. மடை திறந்த வெள்ளமென அவளது விழிகள் போட்டி போட்டுக்கொண்டு நீரை கீழிறக்க, தலையை கைகளில் ஏந்தியவள்,

“என்னால முடியல… எனக்… எனக்கு இது… இதெல்லாம் வேண்டாம்…” செறுமியபடி கீர்த்தனா வார்த்தைகளை திக்கித்திக்கிப் பேச, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்த அஞ்சன் தன் தடதடக்கும் நெஞ்சத்தை நீவி விட்டான்.

அவளது செய்கைகள் ஒவ்வொன்றும் அவனை விலக்குவது போலவே இருந்திட அதை உடைக்க எண்ணியே காலை அவளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தும் நெருங்கியிருந்தான். இப்போது அவள் எனக்கு எதுவும் வேண்டாம் எனவும் அனுமதி கேட்காமல் மனதில் வந்து ஒட்டிக்கொண்டது பாரம். என்ன நடந்தது என்று கேள்வி கேட்டாலும் அவள் பதில் பேசப் போவதில்லை என்பதை ஏற்றுக்கொண்டு அதை மனதிலும் பதித்தபடி அமைதியாய் அவள் முன் அமர்ந்துவிட்டான். 

அவளாய் பேசட்டும் என்று அமர்ந்துவிட்டாலும் விசும்பிக் கொண்டிருப்பவளை தேற்றவே பரபரத்தது அவன் மனமும் கரமும். அவளை அணைக்கத் துடித்தக் கரங்களை கடினப்பட்டு நெஞ்சில் கட்டிக்கொண்டான்.

“வீட்டுக்கு பேசு கண்ணு…”

“அம்மாட்ட பேசுனா நல்லாயிருக்கும்…”

ம்கூம் விசும்பல் குறைந்ததே தவிர ஒரு முன்னேற்றமும் இல்லை அவளிடம். காற்றில் பறக்க இருந்த பொறுமையையும் இழுத்துப் பிடித்தவன்,

“இங்கிட்டு நங்கைங்க ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்க, பட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் கீர்த்தி.

“அப்போ ஏதோ சொல்லி இருக்காங்க.” என்ற முடிவுக்கு வந்தவனாய் எழுந்தவன் வேகமாய் வேட்டி கட்டி சட்டையை போட்டுக்கொண்டு வெளியேறி தன் நங்கைகள் முன் சென்று நின்றான்.

“வந்தோமா விசேஷத்துல கலந்துகிட்டோமா போனோமான்னு இருக்கோணும்… சும்மா என்ற பொண்டாட்டியை சீண்டிகிட்டு சுத்துனா பொறவு நடக்குற எதுக்கும் நான் பொறுப்பில்லை…” என்று கண்டிக்க,

“உங்க கண்ணாலத்துக்கு எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சதுக்கு நல்ல மரியாதை கொடுக்குறீக கொழுந்தனாரே…” என்ற நடுநங்கை தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே நிறுத்திவிட்டு அங்கிருந்து எழ,

“கண்ணாலம் ஆகி ஒரு ராத்திரில எங்களையே மிரட்டுற அளவுக்கு வந்தாச்சா… நல்ல மகராசியை புடிச்சு கூட்டிட்டு வந்திருக்கீக இந்த வூட்டுக்கு.” என்று மாமியாரிடம் சின்ன நங்கை வரிந்து கட்டி சண்டைக்குச் சென்றாள். 

பிரச்சனை வெடிப்பது போலிருக்க, “விடியோலயே அடுப்படிக்கு வந்து என்ன அக்கப்போரு பண்ணிக்கிட்டு இருக்க நீ? எங்க அந்த புள்ள?” என்று மகனை அதட்டினார் பரிமளம்.

“மருமவளை என்ன அந்த புள்ள இந்த புள்ளன்னு சொல்ற? நீ ஒழுங்கா கூப்புடு. உன்னை பார்த்து தான் எல்லாரும் என்ற அம்மணியை மதிப்பாங்க…” என்று பதிலுக்கு தாயையும் அதட்டினான் அஞ்சன்.

“உங்க அம்மணியை நாங்க எதுவும் சொல்லல… நம்ம தங்கச்சி தானேனு கேலியா பேசக்கூட இல்லை… பார்க்கத்தான் செஞ்சோம் அதுக்கெல்லாம் நீங்க வரிஞ்சிக்கட்டிட்டு வந்தா ரொம்ப கஷ்டம்…” என்ற நடுநங்கை மாமியாரிடம் திரும்பி, 

“இப்டியே போச்சுன்னா நாங்க இங்க இனிமே வரலாமா வேண்டாமான்னு நீங்க முடிவு பண்ற நிலைமை வந்துடும்…” என்றுவிட்டு சமையலறையில் இருந்து சென்றுவிட, குருங்கை ‘ஏன்’ என்று பார்த்தாள் அஞ்சனை.

அன்னையை அழுத்தமாய் பார்த்துவிட்டு அவன் கொல்லைப்புறம் செல்ல, குருங்கையும் அவன் பின்னோடே சென்றாள்.

“என்னாச்சு கொழுந்தனாரே? நீங்க இப்படி பேசுனது மச்சாண்டருக்கு தெரிஞ்சா உடனே கிளம்பிடுவாங்க… குலதெய்வ கோவிலுக்குப் போகணும்.. இப்படி மனக்கசப்போட போனா நல்லாவா இருக்கும்?” என்று கேள்விகளை அவள் அடுக்க, 

“அம்மணி அழும் போது நான் என்ன பண்ணட்டும் குருங்கை?” என்று ஆயாசமாய் கேட்டான் அஞ்சன்.

“அழறாளா?” என்ற குருங்கையின் கேள்விக்கு அமைதியாய் செடிகளை பார்த்தபடி நின்றான்.

“ரெண்டு பேரும் இங்கன என்ன பண்ணிட்டு இருக்கீங்க? டேய் அஞ்சு இன்னைக்கு ஒருநாள் வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்தாத்தான் என்ன? நங்கைங்க அண்ணாகிட்ட பஞ்சாயத்து கூட்டிட்டு இருக்காங்க… அப்பா சமாதானம் செஞ்சிட்டு இருக்காரு.” என்றபடி குரு அவர்களை நெருங்கினான்.

“ம்ச்… வேலை இருந்தா போய் பாரு…” என்றபடி அவர்களை தவிர்த்து திரும்ப அறைக்கே சென்றுவிட்டான் அஞ்சன். விஷயம் பெருசாகி அடங்கும் வரை இவர்களிடம் பேச்சுக் கொடுத்தால் தன்னை நோண்டுவார்கள். என்ன பிரச்சனை என்று கீர்த்தியும் ஒழுங்காய் வாய் திறக்க மாட்டாள் என்று அவன் நகர்ந்து சென்றுவிட,

“கீர்த்திக்கும் சாமர்த்தியம் பத்தலை… இவரும் இப்படினா என்ன பண்றது?” என்று வருந்தியபடி குருங்கையும் உள்ளே சென்றுவிட்டாள். 

குருவும் ஒரு அளவுக்கு மேல் எதிலும் தலையிட முடியாமல் அமைதியாகிவிட்டான். அவ்வீட்டின் பெரியவனும் குருவும் எப்போதும் சச்சரவுகளில் தலை கொடுப்பதில்லை. அவர்களுக்கு ஏற்றபடி அவர்களின் மனைவிமார்களும் சச்சரவு என்று எதற்கும் வந்து நின்றதில்லை. அதனால் குரு மேலோட்டமாய் தம்பியிடம் கேட்டு விட்டுவிட்டான்.

அறைக்குள் நுழைந்த அஞ்சன் பேசாது கட்டிலில் சென்று அமர்ந்துகொண்டு கீர்த்தியைப் பார்க்க, அவளும் இவனைத் தான் பார்த்தாள். அழுகை நின்றிருந்தது. இரு பக்கமும் முடி எடுத்து உச்சந்தலையில் கிளிப் குத்தி, முகத்திலும் பவுடர் பூசி சற்று தெளிந்திருந்தாள் பாவை.

“நங்கைங்க ஏதாவது பேசுனா நீயும் திரும்ப பேசிவிடு… பயந்து அழுதுட்டு இருக்காத…” என்றதோடு நிறுத்திக்கொண்டான் அஞ்சன்.

சீண்டாது பெரிதாய் கேள்வியும் எழுப்பாது அவன் தள்ளி இருக்கவும் கீர்த்தியும் ஆசுவாசமாய் உணர்ந்தாள்.

“நா…நான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன்… கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க. கிளம்பிடுங்க…” என்று அவன் முகம் பார்க்காது அவள் சொல்லிச் செல்ல, தன் செவியை நம்பாது தேய்த்துக்கொண்டான்.

‘நெஞ்சமாவே எங்கண்ணு எங்கிட்ட பேசுச்சா? அதுவும் அதட்டாம?’ மனதில் சிலாகித்தவன் மகிழ்வாய் வேறு உடைக்கு மாறி வெளியே சென்று திண்ணையில் அமர்ந்துகொண்டான்.

காபி எடுக்க வந்த கீர்த்தியை பார்த்த பரிமளம் இரு தம்ளரை அவளிடம் நீட்டி, “கூட்டுக்குடும்பம்னா அப்படி இப்படிதான் இருக்கும். எல்லாத்தையும் வூட்டு ஆம்பிளைங்க கிட்ட கொண்டு போனா குடும்பம் சிதைஞ்சிடும். பார்த்து இருந்துக்கோ கண்ணு.” 

மாமியாரின் அறிவுரைக்கு மண்டையை நன்றாக உருட்டிய கீர்த்தனா காபி டம்ளரை வாங்கிக்கொண்டு அறைக்குச் சென்றாள். அங்கு அவன் இல்லை. பசி வயிற்றை கிள்ள ஒரு டம்ளரை அங்கேயே மேசையில் வைத்துவிட்டு தன்னுடையதை மெல்ல உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தாள். மனம் சற்று முன் அன்னையிடம் பேசியதை அசைப்போட்டது.

“ம்மா… எனக்கு இங்க பிடிக்.. பிடிக்கலைமா…”

“சரி என்ன பண்ணலாம்னு சொல்ற?” என்று அவளிடமே கேள்வியை திருப்பினார் கமலம். 

“ம்மா…” என்று மகள் இறைஞ்ச,

“நல்லது கெட்டது ஆராய்ஞ்சு தானே இந்த சம்பந்தம் முடிவாகி கல்யாணம் வரைக்கும் வந்துச்சு. நீயும் சரி சொன்னியே கீர்த்தி… கல்யாணமாகி ஒருநாள் தான் ஆகியிருக்கு இப்ப புடிக்கலைனா என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு.”

“ம்மா… இங்க எல்லாரும் அவரோட சேர்த்து என்னை கேலி பேசும் போது கஷ்டமா இருக்குமா… வெளில… வெளில போனப்போ புடவை முந்தி கதவுல மாட்டி ப்ளவுசுல குத்தியிருந்த பின் கழண்டு புடவை லேசா நழுவிடுச்சு. அதுக்கு அவரோட அண்ணிங்க பார்த்த பார்வை… உடம்பெல்லாம் கூசுதுமா… என்னால தாங்க முடியல.” என்று கீர்த்தி தேம்பித் தேம்பி அழு,

அஞ்சன் சீண்டியிருப்பான் என்று நினைத்து அவர்கள் கேலியாய் பார்த்திருப்பார்கள், இவள் இருக்கும் நிலைமைக்கு எல்லாம் பெரிதாய் தெரிகிறது என்று நினைத்த கமலம், 

“பெரிய குடும்பத்துல புதுசா கல்யாணமானவங்களை கேலி பேசுறது எல்லாம் சகஜம் தான். யாரும் வேணும்னு பண்றது இல்லை. சும்மா விளையாட்டுக்கு ரெண்டு நாள் பேசுவாங்க அதெல்லாம் பெருசா எடுத்துக்காத கீர்த்தி. ஒருவாரம் போனா தன்னால எல்லாம் அடங்கிடும்.” என்று சமாதானம் பேசினார்.

“இல்லைம்மா…”

“நாலு பேர் நாலு விதமாத்தான் இருப்பாங்க. உன்னால முடிஞ்ச அளவு ஒத்துப் போகப் பாரு. அனுசரிக்க முயற்சி பண்ணு. இல்லை முடியலையா  ஒதுங்கிக்கோ. ஆனா என்னைக்கும் அந்த குடும்பம் உடைய நீ காரணமா இருக்கக் கூடாது. பார்த்து இருந்துக்கோ. மாப்பிள்ளையை அனுசரிச்சு புரிஞ்சி நடந்துக்கோ…” என்று மேலும் அறிவுரை பறந்தது. 

“ம்மா… அவரு…” 

“யாரு மாப்பிள்ளையா?”

“ம்ம்…”

“அவருக்கு என்ன? உன்கிட்ட நல்ல மாதிரியா நடந்துக்குறாருல்ல?” அதுவரை இருந்த குரலில் புதிதாய் பேதம் எட்டிப்பார்க்க, மகளின் பதிலுக்கு ஆவலாய் காத்திருந்தார் அந்தத் தாய்.

இதற்கு என்ன சொல்லுவாள் மகள்? ஏதோ ஒரு வேகத்தில் மனதில் இருந்த ஆதங்கத்தை பகிரும் நோக்கில் பேச்சை துவங்கி விட்டாள். ஆனால் பிடித்தம் இல்லையென்றாலும் அவர்களுக்கு நடுவில் இருக்கும் அந்தரங்கத்தை பகிர தடையாய் தானாய் வந்து ஒட்டிக்கொண்டது தயக்கம்.

“என்ன கீர்த்தி? மாப்பிள்ளை எதுவும் திட்டிட்டாரா? எதுனாலும் நிதானமா பேசுனா புரிஞ்சிப்பாருடா…” என்று கமலமே எடுத்துக்கொடுக்க, ம் கொட்டினாள் மகள்.

“கோவில்ல பொங்கல் வச்சிட்டு இங்க வருவீங்கன்னு சொன்னாங்க… நேரமே கிளம்பி போயிட்டு வாங்க… அம்மா வெயிட் பண்ணிட்டு இருப்பேன்…” என்று கமலம் பேசிய பின் தான் சற்று தெளிவு பிறந்திருந்தது மகளிடம்.

தன் காபியை பருகி முடித்தபின் அவன் இன்னும் அறைக்கு வரவில்லையே என்ற நினைப்பு வர எழுந்தவள் அவனுடைய காபி டம்ளரை எடுத்துக்கொண்டு அவனைத் தேடி வெளியே வர,

“அவன் வெளில இருக்கான் நீ என்ன இங்கிட்டு நின்னுட்டு இருக்க கண்ணு?” என்று பரிமளம் வழி மறித்தார்.

“அவரை தான் தேடிட்டு இருந்தேன்…” இவள் மென்குரலில் கூற,

“நல்லாத் தேடுனா போ… அவனுக்கு காபி சுடச்சுட வேணும்… இதை வச்சிட்டு வேற எடுத்துட்டு போ.” என்ற முணுமுணுப்புடன் அவர் நகர்ந்துவிட, அவளுக்கு சிரமம் தராதபடி மற்றொரு டம்ளரை அவள் முன் நீட்டினாள் குருங்கை.

“உன்ற வூட்டுக்காரருக்கு கொஞ்சம் சூடு கொறைஞ்சாலும் காபி உள்ள இறங்காது. இந்தாப் புடி.” 

நீட்டிய காபி டம்ளரை வாங்கிக்கொண்ட கீர்த்தி முகம் மலர, “நீங்க இல்லைனா எனக்கு ரொம்ப கஷ்டம் அக்கா… ஒரு வாரம் இங்க இருந்துட்டு போங்களேன்…” என்று வேண்ட, கீர்த்தியின் கன்னம் தட்டியவள்,

“உன்ற மச்சாண்டார் கிட்ட கேட்டுட்டு சொல்றேன் கீர்த்தி. சின்னவன் தினம் ரெண்டு மணிநேரம் பிளே ஸ்கூல் போறான்… அங்குட்டு இருந்தா நானே கூட்டிட்டு போயி கூட்டியாந்துருவேன்… இங்கிட்டிருந்து போயி வார உன்ற மச்சாண்டார் ஒத்துக்கிட்டா ஒரு வாரமென்ன பத்து நாள் இருந்திட்டே போறேன்.” என்று குருங்கை தன் நிலை உணர்த்த, 

‘எல்லாருக்கும் அவங்கவங்க வேலை இருக்கு. அதெல்லாம் விட்டுட்டு உன் கூடவே இருப்பாங்களா? உன் பிரச்சனையை நீ தான் சமாளிக்கணும்.’ என்று மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டாள் கீர்த்தி.

குருங்கையிடம் தலையசைத்து நகர்ந்த கீர்த்தி வழியில் தென்பட்டவர்களுக்கு இழுத்து ஒட்டிய புன்னைகையை தந்தபடி நடக்க, பஞ்சாயத்து முடிந்து வந்த நங்கைகள் அவளைக் கண்டு முகம் திருப்பிச் சென்றனர்.

‘இவங்க பேசுற பேச்சுக்கு நாந்தான் முகத்தை திருப்பனும். இவங்க திருப்பிட்டு போறாங்க…’ என்று நினைத்தபடி வெளியே திண்ணையில் அமர்ந்திருந்த அஞ்சனிடம் காபி டம்ளரை நீட்டினாள்.

அவள் முகம் கூட காணாது அவன் அதை வாங்கிப் பருக, கீர்த்தியின் முகம் சுருங்கி பின் இயல்பானது. ஓரிரு நொடி அவன் ஏதும் சொல்வானா என்பது போல் பார்த்து நிற்க, அங்கிருந்த அவளின் மாமனார் பழனிவேல்,

“வேனுக்கு சொல்லி இருக்கு கண்ணு… இன்னும் அரை மணி நேரத்துல வந்துபுடும்… சீக்கிரம் கிளம்புங்க.” என்று தகவல் சொல்ல, அவரிடம் மண்டையை ஆட்டியவள் நேரே குருங்கையை தேடிச் சென்றாள்.

அவள் கொல்லையில் தன் பிள்ளைகளை குளிக்க ஊத்திக்கொண்டிருக்க, “க்கா… அரைமணிநேரத்துல வேன் வந்துடும்னு மாமா சொன்னாங்க… அதுக்குள்ள எப்படி எல்லாரும் சாப்புடுறது?” என்று தீவிரமாய் கேள்வி எழுப்பினாள். 

அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்த குருங்கை, “சாப்பாடா? அதெல்லாம் பொங்கல் வுட்டு சாமி கும்புட்ட பொறவுதான்… அதுவரைக்கும் பசங்களுக்கு மட்டும் கொஞ்சம் இட்லி ஊத்தி இருக்கோம். நமக்கு அங்குட்டு வெளில சொல்லி இருக்கு.”

“என்ன?” என்று அதிர்ந்து நின்றாள் கீர்த்தி. 

மணி காலை ஆறு தான் ஆகியிருந்தது. இந்த கூட்டத்தை கிளப்பி பொங்கல் வைத்து சாமி கும்பிட எப்படியும் குறைந்தது பத்து மணியாகிவிடும். அதுவரை தாங்குமா பசி? இரண்டு நாட்களாய் ஏனாதானோவென சாப்பிட்டு உணர்ச்சிகளின் பிடிகளில் சிக்குண்டு இருந்தவள் அப்போது தான் சற்று தெளிந்திருக்க, பசியும் தெரிந்தது. ஒரு டம்ளர் காபி இன்னும் பத்து நிமிடத்தில் செரித்துவிடுவேன் என்றிருக்க அதன் பின்? என்று முழித்து நின்றாள் கீர்த்தனா. 

“கொழுந்தனார் மட்டுந்தான் இதெல்லாம் கேக்க மாட்டாரு… நேரத்துக்கு சாப்டுடுவாரு.” என்று பிள்ளையை துவட்டியபடி குருங்கை சொல்ல,

‘இப்போ என்ன அவன்கூட இருந்தா யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க சாப்பாடு கிடைக்கும் அதுதானே? எங்குட்டு போனாலும் அவன்கிட்டேயே போயி முடியுது எல்லாம்.’ என்று மனதிற்குள் வசைபாடியவள், ‘எனக்கு சாப்பாடே வேணாம்.’ என்ற முடிவெடுத்து உள்ளே சென்றுவிட்டாள்.

அப்படி இப்படியென்று வீட்டிலிருந்து அவர்கள் கிளம்ப மணி ஏழாகிவிட, வேனில் தேகம் உரசி அஞ்சனும் கீர்த்தியும் அருகருகே அமர்ந்திருந்தாலும் அவர்களின் மனம் வெகு தொலைவில் தனித்தனியே உழன்று கொண்டிருந்தது.

கீர்த்தியின் எண்ணம் எல்லாம் முடித்து எப்போது அன்னையை பார்ப்போம் எப்போது தன் வீட்டிற்குச் செல்வோம் என்று பரிதவிக்க, அஞ்சனின் எண்ணங்கள் காலை அப்பாவிடம் பஞ்சாயத்து முடித்து நங்கைகள் தன்னிடம் சொல்லிய செய்தியில் இருந்தது.

“மாமா சொன்னாக்கன்னு பேசாம போறோம். ஆனா ஒன்னு கொழுந்தனாரே… கண்ணாலம் ஆன புதுசுல கேலி பேசுனாலோ கிண்டலா பாத்தாலோ வெட்கந்தான் படுவாக… உங்க அம்மணி மட்டுந்தான் இதுக்கெல்லாம் பஞ்சாயத்து இழுத்து வுடுறாக… ஒரு ஆர்வம், வெட்கம் எதுவும் கிடையாது. நெசமாலுமே சம்மதிச்சு தான் இந்த கண்ணாலத்துக்கு ஒத்துக்குச்சானு தெரில… ஏசுனாலும் பூசனாலும் நீங்க எங்க வூட்டுக்காரரோட தம்பி எங்களுக்கும் உங்க மேல அக்கறை இருக்கு. பார்த்து இருந்துக்கோக…” என்றிட,

‘என்ற அம்மணியை இந்த கண்ணாலத்துக்கு கட்டாயப்படுத்தி இருப்பாங்களோ? அதுதான் அம்மணி எதிலையும் ஆர்வமில்லாம இருக்காங்களா?’ என்ற புது சந்தேகம் முளைத்திருந்தது அவனுள்.

அந்த சந்தேகத்தின் பலனாய் வெகுநேரம் அவளை அவன் நெருங்காதிருக்க, கோவில் பூசை முடிந்து தன்னை நெருங்கி உரிமையாய் கை கோர்த்து லேசாக தோள் சாய்ந்து தன்னை நிமிர்ந்து பார்த்து, “எனக்கு பசிக்குது… சாப்புடலாமா?” என்று கேட்ட கீர்த்தியை புரியாது பார்த்தான் அஞ்சன்.

Advertisement