Advertisement

*1*

அம்மண்ணிற்கே உரித்தான வானிலை பிற்பகலிலும் ஆதவனை அண்டவிடாது அதனின் வெக்கையை விரட்டியிருக்க, குறைவின்றி கூதல் காற்றும் கூடவே வருடிச் சென்றது. பசுமை போர்த்தி வனப்பை கூட்டி எவரையும் தன் அழகால், தன் மணத்தால் கட்டிப்போடும் ஜாலமும் இரைச்சலின்றி பறவைகளின் கீச்சொலிகளுடன் அசைந்தாடும் மரங்களின் ஓசையும், அனாசியமாய் கவலைகளுக்கு விடுப்பு கொடுக்கும் வண்ணம் இருக்கும் அச்சூழலில் லயித்தவண்ணம்  இருசக்கர வாகனத்தில் இருவரும் காதலை இடையே புகுத்திச் செல்கையில் இதமாய் இருந்தது கீர்த்திக்கு. 

“இங்க வந்தாதான் மனசும் உடம்பும் குளிர்ந்து போகுது. சுகமா இருக்கு.” என்று அதை வெளிப்படுத்தவும் செய்து, அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

“பின்ன இந்த அருண் கூட இருந்தா சுகமா இல்லாம போகுமாங்க கண்ணு! என்ன நாஞ்சொல்றது சரிதானங்க?” என்று குதூகலித்தான் அவனும். 

மங்கையவளின் மனமும் தேகமும் அவனை உரசி ஒருவித பரவசத்தில் வைத்திருக்க, அந்த இருசக்கர வாகனம் இன்னுமொரு பத்து மைல் வேகம் கூட்டியது.

“எல்லாம் சரிதான்… இன்னும் எவ்வளவு நாள் நான் ஒரு ஊர்லையும் நீங்க இங்கேயும் இருக்குறது அருண்? அம்மாகிட்ட வந்து பேசுங்களேன். இல்லை நானே பேசவா? எனக்கென்னவோ நீங்க வந்து பேசுனா அம்மாக்கு நம்பிக்கை வரும்னு தோணுது.” அந்த ஏகாந்தத்தையும் மீறி படபடத்தாள் நங்கை. 

காதல் படுத்தும் பாடு அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஏங்கியது மங்கையின் மனது. ஆனால் அவனுக்கும் அதே அளவு ஆர்வம் இருக்க வேண்டுமே? காதலில் கரைந்து நெகிழ்ந்து உருகி இசைந்து செல்கையில் இனிக்கும் மனது அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைக்கையில் அதனுடன் வரும் பொறுப்புகளை ஏற்க தயங்கும் சூழல். இப்போதே அதை ஏற்று என்ன செய்ய போகிறோம் சில காலம் போகட்டும் என்பதே அவன் எண்ணம்.

“அதுக்கென்னங்க கண்ணு உங்க அம்மையை பார்த்து பேசிபுட்டா போகுது. அவிங்களுக்கு என்ற மேல முழுசா நம்பிக்கை வந்துபுட்டா சட்டுபுட்டுன்னு ஓகே சொல்லிபுடுவாங்க. என்னை வோணாமுன்னு சொல்ல அவிங்களுக்கு ஒரு காரணமும் இருக்காது.” என்று எப்போதும் போல் வாய்ச்சவடால் அவனிடம். ஆனால் அவன் பேச்சில் இருந்த நம்பிக்கை அவள் அகத்தினுள் உதிர்க்க மறுக்க, அவள் முகம் சுணங்கியது.

“உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல. நான் எடுக்குற முடிவு சரியா இருக்கும்னு அம்மா நம்புனாலும் என் கல்யாண விஷயம்னு வந்தா அவங்க எப்படி யோசிப்பாங்கனு தெரியாது.”

“எல்லாமே புரியுதுங்க கண்ணு. ஒட்டுக்கா போயி பேசிப்புட்டா அவிங்களும் புரிஞ்சிப்பாங்க. கண்ணாலத்துக்கு என்ன அவசரம் இன்னும் கொஞ்ச நாளு போவோட்டுமே. நம்ம இப்டியே திகட்ட திகட்ட காதலிச்சிட்டு பொறவு கண்ணாலம் கட்டிக்கலாம். இப்போ  நீங்க அதைஇதைனு போட்டு ஒலப்பிக்காம இந்த அருணோட மனசுல ஒய்யாரமா இருங்க. அதுதான் என் கீர்த்தி கண்ணுக்கு அழகு…” 

ஒவ்வொரு முறையும் வார்த்தைக்கு வார்த்தை தேன் ஒழுக தித்திப்பு கொங்குத் தமிழில் அவன் மரியாதை இட்டு கொஞ்சி பேசுகையில் கீர்த்தியின் மனம் நெகிழ்ந்துதான் விடுகிறது. அந்த நெகிழ்தலே மெல்ல தணிந்து குழைந்து காதலாகி கரைய, காதல் கல்யாணம் குடும்பம் என்ற அமைப்பையே சுணக்கத்துடன் எதிர்நோக்கும் அவள் அன்னை இதை எப்படி எடுத்துக்கொள்வார் என்ற ஐயம் மெல்ல எட்டிப்பார்க்கத் துவங்கியது. அதுவே அவள் வார்த்தைகளிலும் எதிரொலித்தது.

“நீங்க நினைக்குற மாதிரி இது அவ்வளவு சுலபம் இல்லை.”

“அட விடுங்க கண்ணு… இந்த அருண் பார்த்துப்பேனுங்க எல்லாத்தையும்… ஐஸ்க்ரீம் சாப்புடுறீங்களா? உங்களுக்கு புடிச்ச பட்டர்ஸ்காட்ச் பிளேவர்.” கேள்வி அவளை நோக்கிச் செல்ல, வண்டி கடையை நோக்கிச் சென்றது பதிலுக்கு காத்திராமல்.

“எனக்கு இப்போ வேண்டாமே.” மறுத்தாள் கீர்த்தி.

“சும்மா சாப்புடுங்க. உங்களுக்கு புடிச்சதுதானே.” 

பிடித்ததாய் இருந்தாலும் எல்லா நேரமும் அதன்மீது பிடித்தம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே. பிடித்ததை பிடித்த நேரத்தில் செய்வதே அவளுக்கு பிரியமாய் இருக்க அதை உணர்ந்ததில்லை அவன். அன்றும் அப்படியே…

“ஏனுங்க கண்ணு இந்த கடையில உங்களுக்கு தெரிஞ்சவங்க ஆராவது இருக்காங்களா என்ன? ஒருமாதிரி படபடப்பா இருக்கீங்க?”

அவளது விழி பிடித்தத்திலும் இல்லாமல் பிடித்தவன் மீதும் நில்லாமல் அங்குமிங்கும் அலைபாய்வதை கவனித்து அவன் கேட்க, பதிலோ கீர்த்தியின் கரத்திலிருக்கும் ஐஸ்க்ரீமின் குளுமைக்கு எதிர்பதமாய் வந்தது.

“மனசு கலக்கமா இருந்ததால தான் உங்களை பார்க்க அவசரமா கிளம்பி வந்தேன். ஆனா நீங்க அதை முழுசா காதுல வாங்குற எண்ணமே இல்லாம பசப்புறீங்க.” காதல் முழுதாய் ஆக்கிரமிக்கத் துவங்கிய புதிதில் உண்டாக்காத ஐயம் அருணுடன் அதிக நேரம் செலவிட விழைந்து திருமணப்பந்தம் ஏற்கும் நிலைக்கு வந்ததும் பயஉருண்டை உருளத் துவங்கியது.

“ம்ச்… என்ற மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு? நாந்தான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்னு சொல்றேன்லங்க… பொறவும் இப்புடி இருந்தா என்ன அர்த்தம்? நேருல பாக்குறதே எப்போவோ தான்… அதையும் கெடுக்கிற மாதிரியே நடக்குறீங்க.” என்று முகத்தை காட்டினான் அருண்.

இதம் மரித்து இம்சிக்க இருவருமே முகத்தை தூக்கி வைத்து நின்றனர். 

“நான் கிளம்புறேன்.” ஐஸ்க்ரீம் உருகி கரைந்திருக்க, அதை அப்படியே சாய்த்து சாறு போல குடித்தவள் உர்ரென்று விடைபெற நிற்க, அவசரமாய் தன்னதை உண்ட அருண்,

“இம்புட்டு சீக்கிரமாவா? பொழுதால போலாம். நான் வந்து பஸ் ஏத்திவுடுறேன்.” என்றான் அவளை பிரிய மனமில்லாமல்.

“நீங்க ஒன்னும் என்னை பஸ் ஏத்திவிட வேண்டாம். திருப்பூர்ல இருந்து தனியா இங்க வந்தவளுக்கு திரும்பி தனியா போகத் தெரியாதா? உங்க அக்கறை சக்கரை எல்லாத்தையும் நம்ம கல்யாண விஷயத்துல காமிங்க.” என்று காட்டமாய் மொழிந்துவிட்டு விருட்டென கிளம்பி பேருந்து நிறுத்தம் நோக்கி நடை போட்டாள் கீர்த்தி.

செல்லும் அவளையே முறைப்புடன் நோக்கியவன் வண்டியை கிளப்பிக்கொண்டு அவள் குறுக்கே சென்று நிறுத்தினான்.

“விசுக்குன்னு கிளம்பி வாரீக? என்ற மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லைனாலும் நம்ம அன்பு நிசம்னு நம்புங்க அதுபோதும். இப்போ மூஞ்சியை காமிக்காம வண்டில ஏறுங்க கண்ணு. பஸ் ஸ்டாப்பு எட்டக்கால இருக்கு. எத்தினி தூரம் நடப்பீங்க? நான் பஸ் ஏத்திவுடுறேன்.” என்றான் உர்ரென்று.

“இந்த கரிசனத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” என்று நா சிடுசிடுத்தாலும் கால்கள் எப்போதோ அவன் வண்டியில் ஏறி இருந்தது.

இருபக்கம் கால் போட்டு அமர்ந்தவள் கைப்பையை இருவருக்கும் இடையில் வைக்க,

“அதை என்ட்ட குடுங்க…” என்று அதைப் பிடுங்கி வண்டி டேங்க்கில் வைத்துக்கொண்டான். 

“என்ன பண்றீங்க அருண்? கீழ விழுந்திட போகுது.” என்று கீர்த்தி பதற, அதை சட்டை செய்யாதவன், “அது வுழுந்தா வுழுந்துட்டு போவுது. எடுத்துக்கலாம். நீங்க என்னை வுடாம புடிச்சிக்கோங்க.” என்று வண்டியை கிளப்ப, 

முக்கிய சாலை விட்டு சற்று தள்ளி நெரிசல் இல்லாத இடத்திற்கு வந்ததும் கண்களை சுழலவிட்டு தாங்கள் தனித்து செல்கிறோமா என்று உறுதிப்படுத்தி, “இப்டியா?” என்று அவன் இடையை கட்டிக்கொண்டு அவன் தோள் சாய்ந்தாள் கீர்த்தி. 

நா தன்னால் விசில் பறக்க விட வண்டியை முறுக்கினான் அருண்.

“ஏதேதோ பேசி என் வாய் அடைக்குறேதே உங்களுக்கு வேலையா போச்சு அருண்.” வஞ்சி கொஞ்சினாள். இன்று எப்படியாவது திருமணத்திற்கு அடித்தளம் போட்டுவிட வேண்டும் என்ற முடிவுடன் வந்திறங்கியவள் முடிவேதும் எடுக்காமல் கிளம்பினாள் கோவையிலிருந்து.

ஆனால் கோவையில் எடுக்காமல் விட்டதை திருப்பூரில் பூர்த்தி செய்யும் விதமாய் தயக்கத்தை விடுத்து கையை பிசைந்து நின்றாள் கீர்த்தி.

விரல்களுக்கு இடையில் இடம்பெற்றிருந்த பொன்னிற நூலும் ஊசியும் முத்தை எடுத்துக்கொண்டு பொன்னிற உடுப்பில் புகுந்து எழ கவனம் ரவிக்கைக்கு ஆரி போடும் வேலையில் இருந்தாலும் கீர்த்தியின் வருகையை உணர்ந்தவர் விழி உயர்த்தாது, “ராத்திரிக்கு என்னால சமைக்க முடியாது இன்னைக்குள்ள இந்த ப்ளவுசை முடிச்சு குடுக்கணும். உன்னால முடிஞ்சா ஏதாவது செய் இல்லைனா ஸ்விக்கில ஆர்டர் பண்ணு கீர்த்தி.”

“ம்மா நான் உன்கிட்ட பேசணும்.” உள்ளே சஞ்சலம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாது கீர்த்தி முடிவாய் நிற்க கமலத்திற்கு நேரமில்லை.

“வேலை முடிச்சிட்டு வரேன் கீர்த்தி. நீ போய் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணு நேரமாகுது.” என்றார் பார்வையை ரவிக்கையிலிருந்து பிரிக்காமல்.

“ம்மா..” என்று மகள் நகராமல் நிற்க, விழி உயர்த்திய அவள் அன்னை கமலம் நெற்றி சுருக்கி, “அப்படி என்ன தலை போற விஷயம்? இப்போவே பேசியாகணும்னு நிக்கிற?”

“என் தலைக்குள்ள என்னன்னம்மோ ஓடுதுமா… உங்கிட்ட பேசாம அது ஓட்டத்தை நிறுத்தாது.” என்று கீர்த்தி குறிப்பு வைத்து பேச, ஆரி போடும் இடத்திலிருந்து அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு எழுந்து அந்த ஹாலின் மத்திக்குச் சென்றார்.

“இப்போ சொல்லு கீர்த்தி? ஏதாவது பிரச்சனையா?” என்று மகள் கை பிடித்து கேட்க, எச்சில் கூட்டி விழுங்கிய கீர்த்தனா எப்படி துவங்க என்று தயங்கி தேங்கினாள்.

ஏதோவொரு வேகத்தில் திருமணம் குறித்து பேச வந்துவிட்டவளுக்கு கமலத்தின் பாவனை தவிப்பை உண்டாக்கியது. மகளின் தவிப்பை உணர்ந்த கமலம் யோசனையாய் அவள் கரத்தில் அழுத்தம் கொடுத்தார். அதுதந்த தைரியத்தில்,

“எனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்குமா. நீயும் அவரை பார்த்து பேசினா உனக்கும் பிடிக்கும்.” என்றுவிட, பட்டென்று மகள் கையை உதறினார் கமலம். 

“உன்கிட்ட இதை நான் எதிர்பாக்கல கீர்த்தி. இதோட இதை விட்டுரு. உனக்கு நான் எனக்கு நீ. அவ்வளவுதான்!” மகள் யார் மீது விருப்பம் கொண்டுள்ளால் அது யார் எவரென்று எல்லாம் கேட்கவில்லை. விருப்பம் என்ற அந்தச் சொல் மகள் வாயிலிருந்து உதிர்த்த பின் சிந்தை தன் பிடியில் தீர்மானமாய் பேச,

“ம்மா எப்போதும் உனக்கு நான் இருப்பேன்மா, என்னோட சேர்ந்து அவரும் இருப்பாரு. நீ பேசிப்பாரு உனக்கும் அவர…” மகளிடமும் தீர்மானம்.

“அப்படி ஒருத்தன் உனக்கு தேவையில்லை கீர்த்தி. நான் மட்டும் போதும்.” மகளை பேசவிடாமல் குறுக்கிட்டார் கமலம். 

“ம்ச்… ம்மா எனக்கு நீயும் வேணும் அவரும் வேணும்.” கீர்த்தி தன் நிலையில் உறுதியாய் இருக்க, 

கண்கள் இடுங்க பல்லை கடித்த கமலம், “காதல் கேக்குதா உனக்கு?” 

“ஆமா கேக்குது. காதலோட ஒரு வாழ்க்கை கேக்குது.” என்று இன்னும் ஸ்திரமாய் நின்றாள் கீர்த்தனா. உறவுகளிடம் பெரிதாய் ஒற்றுதல் இன்றி வாழ்ந்து வரும் அவளுக்கு அருணின் கரிசனமும் அக்கறையும் காதலும் சக்கரை பாகாய் இனித்தது. அதை என்றும் விட மனமில்லை பாவைக்கு.

“காதல்னு ஒன்னு கிடையவே கிடையாதுன்னு சொல்லி சொல்லித்தானே வளர்த்தேன். அப்படி என்ன காதல் சுகம் கேக்குது உனக்கு? காலை உடைச்சி காலத்துக்கும் படுக்க வச்சிடுவேன் பார்த்துக்கோ.” என்று மகளை மிரட்டவே செய்தார் கமலம். 

இவ்வளவு தூரம் வந்தாயிற்று இனி என்ன என்பது போல், “உன்னோட காதல் ஏமாத்துனதால எல்லா காதலும் அப்படி கிடையாது.” என்ற மகளின் சொல் தடித்தது.

“கீர்த்தி…” கமலத்தின் விரல்தடம் கீர்த்தனாவின் மென் கன்னத்தில் அப்படியே அச்சாய் ஏறியிருந்தது. 

அடிவாங்கிய கன்னம் விண்ணென்று வலிக்க, அதை லேசாய் தடவி விட்ட கீர்த்தி வலியில் உச்சு கொட்ட, கமலத்தின் கோபம் கொஞ்சமும் குறையாது கனன்று கொண்டிருந்தது.

“இனி காதல்ங்குற வார்த்தை உன் கனவுல கூட வரக்கூடாது.” என்று எச்சரித்த கமலம், அலமாரியில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த கீர்த்தியின் அலைபேசியை எடுத்து, 

“இது இருந்தாதான ஏதாவது பண்ணுவ. இனி எப்படி நீ என்னை மீறி உன் காதல் பயிரை வளக்குறேனு பாக்குறேன்.” என்று கடிந்து அவளது அலைபேசியை தனதாக்கிக்கொண்டார்.

“போன் இல்லைனா என் காதல் செத்து போயிடுமா? அவரோட பேசலைனாலும் என் காதல் கூடிகிட்டே தான் போகும். ஒருநாள் நீயே என்னை… என் காதலை புரிஞ்சிகிட்டு அவரோட சேர்த்து வைப்ப.” என்ற கீர்த்தி கண்ணீருடன் உள்ளே செல்ல, 

மகள் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் தன் பிரதிபலிப்பையே உணர்ந்து கிலியானார் அந்த அன்னை. 

இருக்காதா பின்னே! அன்று கமலம்மாளிடம் இருந்த அதே வேகம், அதே மோகம், அதே வீம்பு, அதே துடிப்பு, அதே வைராக்கியம் இன்று மகளிடம்.  

Advertisement